நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா பிடுங்கிய அனைத்துமே தேவையற்ற ஆணி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. “பழைய சுமைகளை இன்னமும் சுமக்காமல் இறுதிப் போட்டியை நோக்கி முன்னேறுங்கள்” என்று அர்ஜுன் சொல்லிய பிறகும் ‘தனக்கு எதிராக யார் வாக்களித்தது?’ என்று ஐஸ்வர்யா செய்த ஆராய்ச்சியும் அது தொடர்பான வாக்குவாதங்களும் நேர விரயம். மாறாக இந்தப் பொழுதை உடற்பயிற்சியிலும் மனம் மகிழ்வான உரையாடல்களிலும் செலவழித்திருக்கலாம். ஆனால் நம்மில் பெரும்பாலோனோர் இப்படித்தான். கடந்த கால விஷயங்களைப் பற்றி பேசிப் பேசியே நிகழ்காலத்தின் அருமையை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். ஆறிக்கொண்டிருக்கும் காயத்தை நோண்டுவதால் அது இன்னமும் மோசமாகும்.
சர்வைவர் 82-ம் நாளில் என்ன நடந்தது?
ரிவார்ட் சேலன்ஜ் வென்ற அணிக்கு விருந்தும் வீடியோ கால்களும் காத்திருந்தன. முதலில் சரணின் தந்தை வந்தார். “எப்படி இருக்கீங்கன்னுல்லாம் கேட்க மாட்டேன். அதான் டிவில தினமும் பார்க்கறனே?” என்று யதார்த்த காமெடி செய்தவர் பின்குறிப்பாக ‘வேடர்களுக்கு வாழ்த்துகள்’ என்று அவர் சொன்னதில் உள்குத்து இருந்ததைப் போன்ற பிரமை. “வேடர்கள்னு ஒரு விஷயம் இருக்கிற மாதிரி தெரியல” என்று முனகினார் நாராயணன். பிறகு திரையில் விக்ராந்த் தென்பட்டதும் அவருக்கு நன்றி சொன்னார், சரணின் தந்தை.. ‘சரண்தான் வின்னர்’ என்று தன் விருப்பத்தை சரணோட அப்பா சொன்ன போது “ஒரு தகப்பனா அவர் படற ஆசையைப் பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. என் பசங்களுக்கும் நான் இப்படித்தான் இருக்கணும்னு நெனக்கறேன்” என்று நெகிழ்ந்தார் விக்ராந்த்.
அடுத்த வீடியோ அழைப்பில் வனேசாவின் அம்மா வந்த போது ‘ஹாய் அத்தை..’ என்றார் இனிகோ. இது குறும்புதான் என்றாலும் டூ மச். இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது செய்கிற பரஸ்பர கிண்டல் வேறு. பெரியவர்களிடத்திலும் அதை நீட்டிக்கக்கூடாது. வனேசா இதை இயல்பாக எடுத்துக்கொண்டது சிறப்பு. ஆனால் மற்ற போட்டியாளர்கள் ‘அய்யய்யோ’ என்று ஜாலியான பதட்டத்துடன் கூடிச் சிரித்தார்கள். இவர்களின் சிரிப்பு இனிகோவை இன்னமும் உற்சாகப்படுத்தியிருக்கும் போல. “நீங்க எல்லோரும் என் ஃபேமிலிதான்” என்று வனேசாவின் அம்மா சம்பிரதாயமான வார்த்தைகளைச் சொன்னபோது ‘நான் இன்னும் கொஞ்சம் க்ளோஸ்’ என்பது மாதிரி சொல்லி குறும்பு செய்தார் இனிகோ, “உங்க பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க” என்று வனேசாவிற்கு சான்றிதழ் தந்தார் விஜி. உமாபதி வந்து நின்றதும் வனேசாவின் அம்மா 'பை’ என்றார்.

இதற்கு ஒட்டுமொத்த குழுவும் விழுந்து விழுந்து சிரித்தது. விக்ராந்த்தை ‘பிரதர்’ என்று அறிமுகப்படுத்தினார் வனேசா. அம்ஜத் வந்த போது ‘இவர்தான் எனக்கு ஓட்டு போடுவாரு” என்று குறும்பு செய்தார் வனேசா. அடுத்த வீடியோ கால் உமாபதியின் தந்தையும், திரைப்பட இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவிடமிருந்து வந்திருந்தது. இவர் தன் மகனைவிடவும் மற்றவர்களை அதிகம் வாழ்த்தி ஊக்கப்படுத்தியது குறித்து அனைவரும் நெகிழ்ந்தார்கள். “குழந்தையை விட்டுட்டு நீ வந்து விளையாடறதெல்லாம் பெரிய விஷயம்” என்று விஜியைப் பாராட்டினார் ராமையா. “வெள்ளந்தியான ஆளுய்யா நீயி” என்று இனிகோவை கொஞ்சியவர் “சரண் குட்டி.. நீ எல்லோருக்கும் செல்லக்குட்டியா மாறிட்ட” என்று அவர் சொன்னவுடன் சரணுக்கு உள்ளுக்குள் நிம்மதியாக இருந்திருக்கும். ``இளைய தளபதி பெயரை பயன்படுத்த மாட்டேன்னு நீ சொன்னது சிறப்பான அம்சம்யா” என்று விக்ராந்த்தைப் பாராட்டிய போது “தோல்வி பழகிடுச்சு. வெற்றிதான் புதுசு” என்று விக்ராந்த் பதில் அளிக்க “ஆமாய்யா.. எனக்கும் அப்படித்தான். என்னையும் நீ சேர்த்துக்கிட்ட பத்தியா. அதுதான் பெரிய விஷயம்” என்று ராமையா காமெடி செய்ய வாய் விட்டுச் சிரித்தார் விக்ராந்த். “அது எப்படிம்மா ஒத்தக்கைல புல்அப்ஸ் எடுத்தே?” என்று வியந்து சொல்ல வெட்கத்தில் சிரித்தார் ஐஸ்வர்யா.
“இந்த ஷோவிற்கு நீங்கள் வந்திருப்பது உங்களை உயர்த்திக் கொள்வதற்காக அல்ல. உடம்பை நல்லா வெச்சுக்கங்க. அப்படி வெச்சா மனசையும் நல்லா வெச்சுக்க முடியும். இந்த ஷோல ஒருத்தர்தான் வெற்றி பெற முடியும். ஆனா தோத்தவனை கட்டிப்பிடிச்சு கொண்டாடறதுதான் உண்மையான வெற்றி. வெற்றி என்பது அகங்காரத்தை தந்து விடக்கூடாது” என்றெல்லாம் பொது நீதியை தம்பி ராமையா சொன்னதைக் கேட்டு அனைவரும் ஊக்கமும் நெகிழ்வும் அடைந்தார்கள். “எனக்கு இப்பவே போய் இம்யூனிட்டி விளையாடணும்னு தோணுது” என்றார் வனேசா. (பார்றா!). தன் மகனை வீடியோவில் பார்த்து மகிழ்ச்சியில் உறைந்தார் விஜி. “என்ன பளபளன்னு இருக்கே. பொண்டாட்டி ஊர்ல இல்லாத சந்தோஷமா?” என்று தன் கணவரைக் கிண்டலடித்தார். “ தோற்றத்துல காட்டுவாசியாவே மாறிட்டிங்க” என்று அம்ஜத்தை வீடியோவில் பார்த்து சிரித்தார் விஜியின் கணவர். “இந்த இடத்துல எங்களுக்கு சாப்பாடு கம்மியா இருந்துச்சு. ஆனால உணர்வுகள் அதிகமா இருந்தது” என்று அந்தச் சூழ்நிலையை தன் சிறப்பான வார்த்தைகளில் சொன்னார் சரண்.
விஜி, உமாபதி, வனேசா, இனிகோ ஆகிய நால்வரும் ஷாப்பிங் கிளம்பினார்கள். ‘இரண்டு பொருட்களை எடுக்கலாம்’ என்று ஏற்கெனவே இவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. ``பொருட்களை சுடாதீங்க” என்று அர்ஜுன் தெரிவித்திருந்தாலும் இவர்கள் தங்களின் குறும்பை நிறுத்தவில்லை. கடைக்காரரை திசை திருப்பி அங்கிருந்த சிப்ஸ், சாக்லேட்டுக்களை எடுத்து மொக்கினார்கள். பாஷை புரியாத கடைக்காரரை அலேக்காக தூக்கி மகிழ்ந்தார் உமாபதி. ஷாப்பிங் என்கிற பெயரில் இவர்கள் அடிக்கடி வந்து பொருட்களை சுடுவதை இதுவரை சகித்துக் கொண்டிருந்த கடைக்காரர், இப்போது ஜாலியாக கம்பால் அடிக்கத் துவங்கி விட்டார். ஒரு பொருளை எடுத்த விஜியின் கையைப் பிடித்து கடைக்காரர் தடுக்க “அய்யோ.. கையைப் பிடிச்சிட்டான்” என்று விஜி செய்த ரகளையான குறும்பு ரசிக்கத்தக்கது.

“யாருடா. அவன் எங்க ஏரியா பொண்ணு மேல கைய வெச்சது?” என்று பாய்ந்து வந்த உமாபதி, கைக்கு கிடைத்த பொருளை எடுத்துக்கொண்டு ஓடினார். கால் வலியால் அவதிப்பட்ட இனிகோ தனியாக மாட்டிக் கொண்டு கடைக்காரரரிடம் அடி வாங்கினார். இவர்கள் ஷாப்பிங் சென்றிருந்த சமயத்தில் ஐஸ்வர்யாவிடம் தனியாக மாட்டிக் கொண்டார் வனேசா. பிறகு ஆரம்பித்தது அந்த நெடும் பஞ்சாயத்து. “எனக்கு ஓட்டு போட்டீங்களா?” என்று ஐஸ்வர்யா ஆரம்பிக்க “ரைட்டு. ஏழரை சைக்கிள்ல வருது” என்று அப்போதே வனேசாவிற்கு ஜெர்க் அடித்தது. “சரணிற்குத்தான் போடுவீங்கன்னு நெனச்சேன்” என்று பின்குறிப்பாக சொன்னார் ஐஸ்வர்யா. “வனேசாவிற்கு என்று தனிப்பட்ட கருத்து கிடையாது. அந்தக் க்ரூப் என்ன சொல்கிறதோ அதை அப்படியே பின்பற்றும் நபர்” என்பது ஐஸ்வர்யாவின் அபிப்ராயம். அதை இப்போது நிரூபிக்க விரும்புகிறாராம். “லேடி காஷ் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது ஃபவுல். ஃபுவல் நீங்க கத்தினது எனக்கு பிடிக்கலை. அதுல இருந்துதான் விலகல் துவங்கிச்சு. விக்ராந்த் மனிதாபிமான அடிப்படைல உதவப் போனாரு.
ஆனா அவரைப் பத்தியும் பஞ்சாயத்துல புகார் சொன்னீங்க.” என்று ஐஸ்வர்யா மீதுள்ள விமர்சனங்களை வனேசா வரிசையாக சொல்ல “அவங்க தண்ணில மூழ்கிட்டு இருக்காங்கன்ற விஷயம் எனக்குத் தெரியாது. என் ஹைபர் குணத்தால வந்த தவறுதான் அது” என்று தன் பிழையை ஒப்புக் கொண்டார் ஐஸ்வர்யா. “ஒரு பொண்ணா கூட வேணாம். ஒரு மனிதரா கருத்து சொல்ல எனக்கு உரிமையில்லையா?” என்று ஐஸ்வர்யா கேட்க “அய்யோ.. இதுக்கு நான் ஹாஸ்பிட்டலேயே ஜூஸ் குடிச்சிட்டு நிம்மதியா இருந்திருக்கலாம் போலயே” என்று ரகசியமாக தலையில் அடித்துக் கொண்டார் வனேசா.
“நான் தனியா நின்னு ஆடற பொண்ணு. அதுக்காக என்னை நிலைநிறுத்திக்க நான் போராடுவேன்” என்று தன் தரப்பை வீடியோ டைரியில் ஐஸ்வர்யா விளக்க “இதெல்லாம் தேவையில்லாத வாக்குவாதம், ஐசு ஏன் இதையெல்லாம் பேசிட்டு இருக்குன்னு தெரியல” என்று சற்று தூரத்தில் நின்றிருந்த அம்ஜத் சொல்ல அதை மெளனத்தால் பிரதிபலித்தார் சரண். “இந்த விஷயத்தை நீங்க விக்ராந்த் கிட்ட நேரா கேட்டு தெளிவுப்படுத்தியிருக்கலாமே?" என்று தர்க்கபூர்வமான கேள்வியை வனேசா கேட்டார். லட்சுமி விவகாரத்தில்கூட “நீங்க அப்பவே நேரா கேட்டிருக்கலாமே?” என்று இனிகோ கேட்டார். ஆக.. ஒரு பிரச்சினையை உடனே பேசித் தீர்த்துக்கொள்ளாமல் அதை மனதிற்குள் புதைத்து புகைந்து கொண்டே இருப்பதுதான் ஐஸ்வர்யாவின் பழக்கம் என்று தெரிகிறது. “விக்ராந்த் கிட்ட என்னால அப்ப பேச முடியலை. அது ஈஸியா இல்ல. அதனாலதான் பஞ்சாயத்துல பேசினேன்” என்று இந்த அநாவசிய உரையாடல் வளாந்து கொண்டே சென்றது. “நான் பட்டுன்னு கேட்டுடுவேன்.

ஓப்பனா பேசிடுவேன். ஆண்டவனுக்கு கூட பயப்பட மாட்டேன்” என்று ஐஸ்வர்யா தன் குணாதிசயத்தைப் பற்றி சொல்லிக் கொள்வதெல்லாம் சரிதான். ஆனால் பிரச்சினை நடந்து நெடுநாட்களாகிய பிறகு கேட்பது முறையான வழியல்ல. விக்ராந்த் டீம் திரும்பியவுடன் இந்த உரையாடலைப் பற்றி வனேசா அவரிடம் சொல்லியிருப்பார் போல. “வாங்க.. ஐஸ்வர்யா. என்னமோ பேசணும்னு சொன்னீங்களோமே” என்று அழைத்தார் விக்ராந்த். “எனக்கு ஓட்டு போட்டீங்களான்னு வனேசா கிட்ட விசாரிச்சிட்டு இருந்தேன்” என்று ஐஸ்வர்யா ஆரம்பிக்க “நானும் உங்களுக்குத்தான் போட்டேன்” என்று ஆரம்பத்திலேயே விக்ராந்த் அதிர்ச்சி அளித்தாலும் பிறகு அவரது உரையாடல் அணுகுமுறை சிறப்பானதாக இருந்தது.
“நீங்களும் என் கிட்ட டைரக்ட்டா பேசியிருக்கலாமே?” என்று ஐஸ்வர்யா விக்ராந்த்திடம் சொன்னது லாஜிக் இல்லாத கேள்வி. ஒரு ஆட்டத்தில் ‘ஃபவுல்’ என்று கத்தியது ஐஸ்வர்யா. ``மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வது தவறா?” என்று அப்போதே விக்ராந்த் பதிலுக்கு கத்தினார். எனில் தன் தரப்பு தவறை அறிந்து கொள்வதற்காகவாவது ஐஸ்வர்யா பிறகு சென்று பேசிப் பிரச்னையை தீர்த்துக் கொண்டிருக்கலாம். இதை அவர்தான் முன்வந்து செய்திருக்க வேண்டும். மாறாக விக்ராந்த் வந்து கேட்டிருக்கலாம் என்று சொல்வதில் லாஜிக் இல்லை.“திருப்பித் திருப்பி பழைய விஷயங்களைக் கிளற வேண்டாம்” என்று விக்ராந்த் இந்தச் சமயத்தில் சொன்னது சிறப்பான விஷயம். ‘சரணுக்குப் பதிலாக தன்னை ஏன் வெளியேற்றினார்கள் என்பதுதான் ஐஸ்வர்யாவின் கேள்வி. நந்தா செய்த குழப்பத்தினால் காடர்கள் தங்களின் வியூகத்தை மாற்ற வேண்டி வந்தது என்பதை விஜி ஏற்கெனவே பஞ்சாயத்தில் தெரிவித்து விட்டார். (அப்போது ஐஸ்வர்யா மூன்றாம் உலகத்தில் இருந்தார்).
‘விவாதத்தின்போது சரணுக்கு வாக்களிப்பதாக ஒப்புக் கொண்ட நந்தா, பிறகு வாக்களிக்கமாட்டேன் என்று அம்ஜத்திடம் சொல்லி அனுப்பியதால் வந்த குழப்பம் இது’ என்று இந்த விஷயத்தை விக்ராந்த் மறுபடியும் விளக்கினார். ``கேமராவுக்குப் பினனால் நந்தா வேறு மாதிரியாக பேசினார்” என்று விக்ராந்த் சொன்ன புகாரை அம்ஜத் இப்போது சபையில் தெளிவுப்படுத்தினார், ``சரணுக்கு வாக்களிக்க மாட்டேன்” என்பதை நந்தா கேமராவுக்கு முன்னாடிதான் தெரியப்படுத்தினார்” என்று அம்ஜத் சாட்சியம் சொன்னது நல்ல விஷயம். (சம்பந்தமான வீடியோவும் ஒளிபரப்பானது). எனில், இந்தத் தகவலை காடர்களிடம் சரியாகக் கொண்டு செல்லாத அம்ஜத்தின் மீதுதான் பிழையா? தகவல் தொடர்பு பிழையால் ஐஸ்வர்யா வெளியேற்றப்பட்ட விபத்து நடந்ததா? “நந்தா சொன்னா நாராயணனும் அம்ஜத்தும் வாக்களிப்பாங்கன்னு தெரியும்” என்று விக்ராந்த் சொன்னதையும் அம்ஜத் மறுத்தார். “நான் சுயமா முடிவு எடுக்கப் போறேன். நீங்களும் அதையே பண்ணுங்கன்னுதான் நந்தா சொன்னாரு” என்று இந்தச் சாட்சியத்தையும் தெளிவாக முன்வைத்தார் அம்ஜத். எனில் காடர்களின் பல முன்தீர்மானங்கள் தவறாகப் போய்விட்டன. அம்ஜத் தன்னுடைய தகவலைச் சரியாகக் கொண்டு போய் சேர்த்திருந்தால் இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம் காடர்கள் சொல்லும் விளக்கம் என்பதையும் கூடவே இணைத்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த உமாபதி “நீங்க ஓட்டு போட்டிருந்தா லேடிகாஷூக்குத்தான் போட்டிருப்பிங்க இல்லையா?” என்று கேட்க ஐஸ்வர்யா அதை ஒப்புக் கொண்டார். “அப்படின்னா. நந்தா. அம்ஜத்லாம் போட்டிருப்பாங்க. அது நம்பர் கேம் இல்லையா?” என்பது உமாபதியின் லாஜிக். ஒரு பலவீனமான போட்டியாளரை வெளியே அனுப்புவதற்கும் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு திறமையான போட்டியாளரை வெளியே அனுப்புவதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அது ராஜதந்திரமாக இருக்கலாம். ஆனால் அதில் தார்மீகம் கிடையாது. “ஓ.. என்னையும் லிஸ்ட்ல வெச்சிருந்தீங்களா. அப்ப நான் ஒட்டு போட்டப்ப மட்டும் திட்டினீங்க?” என்று இனிகோவும் இந்தப் பஞ்சாயத்தில் நுழைந்து வெப்பத்தை அதிகரித்தார்.
“இது ஒரு கேம். இதுல எப்படி வேணுமின்னாலும் நடக்கலாம். எங்க இடத்துல நீங்க இருந்திருந்தாலும் அதையேதான் செஞ்சிருப்பீங்க” என்று விக்ராந்த் நிதானமாகச் சொன்னது ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்தம். “ஸ்ட்ராங் பிளேயரை நாங்க அனுப்பியிருக்க மாட்டோம்” என்று ஐஸ்வர்யா சொல்ல “ரவியை விட நான் ஸ்ட்ராங் ப்ளேயரா?” என்றார் விஜி. “இனிகோ கூடத்தான் ஸ்ட்ராங் பிளேயர். அவரை நீங்க அனுப்ப முடிவு செய்யலை?” என்று விக்ராந்த் வைத்த வாதம் சிறப்பு. “இப்ப பாருங்க. இந்த கேம்ல நீங்க இருக்கீங்க. சரண் இருக்கான்.

ஆனால நந்தா இல்லை. இதுதான் கேம். எப்படி வேணா மாறும்” என்று விக்ராந்த் அளித்த விளக்கத்தில் ஐஸ்வர்யா சமாதானம் ஆகவில்லை. “நான் வெளிப்படையா பேசினேன். அது தப்பா. அதுக்காக என்னை வெளியேத்தினது எந்த விதத்தில் நியாயம்?” என்று மறுபடியும் ஆரம்ப நிலைக்கே வந்து சேர்ந்தார். முன்பே சொன்னதுபோல், பழைய குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்தால் நாற்றம் மட்டுமே மிச்சமாகும். இனி வரும் நாட்களின் விளையாட்டுக்களில் கவனம் செலுத்துவதுதான் ஆரோக்கியமான சிந்தனை. ஐஸ்வர்யா அதைச் செய்வாரா?
பார்த்துடுவோம்.