Published:Updated:

சர்வைவர் - 65: மூன்றாம் உலகத்தில் நந்தா; அன்பைப் பொழிந்த ஐஸ்வர்யா! டாஸ்க்கில் நடந்த ட்விஸ்ட்!

சர்வைவர்

நந்தாவைத் தனது Mentor ஆகவே ஐஸ்வர்யா பார்க்கிறார். எனவே இறுதிச்சுற்று கிளைமாக்ஸ் காட்சியை இது நினைவுப்படுத்தியது. ‘Soul Survivor’ ஆக காடர்களில் ஒருவர் இறுதியில் வென்றாலும்கூட, மக்களின் மனங்களை வென்றவர்கள் வேடர்கள் அணியாகத்தான் இருக்கும்.

Published:Updated:

சர்வைவர் - 65: மூன்றாம் உலகத்தில் நந்தா; அன்பைப் பொழிந்த ஐஸ்வர்யா! டாஸ்க்கில் நடந்த ட்விஸ்ட்!

நந்தாவைத் தனது Mentor ஆகவே ஐஸ்வர்யா பார்க்கிறார். எனவே இறுதிச்சுற்று கிளைமாக்ஸ் காட்சியை இது நினைவுப்படுத்தியது. ‘Soul Survivor’ ஆக காடர்களில் ஒருவர் இறுதியில் வென்றாலும்கூட, மக்களின் மனங்களை வென்றவர்கள் வேடர்கள் அணியாகத்தான் இருக்கும்.

சர்வைவர்

காடர்கள் மெயின் அணியில் இருந்து கொண்டு அரசியல் கணக்குகளைப் போட்டுக் கொண்டிருப்பதால், அங்கு அடிப்படை வசதிகள் இருந்தாலும்கூட அனல் காற்று மட்டுமே வீசுகிறது. ஆனால் வறட்சியான மூன்றாம் உலகத்தை தங்களின் அன்பால் வண்ணமயமாக வேடர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அன்பு மட்டுமல்ல, மூன்றாம் உலகம் என்பது அவர்களுக்கு ஞானம் தரும் போதிமரமாகவும் மாறுகிறது.

நந்தா வெளியேற்றப்பட்டு மூன்றாம் உலகத்தில் நுழைந்தபோது, தாயைக் கண்ட குழந்தை போல நந்தாவின் இடுப்பில் தாவிக் கொண்டு ஏறிய ஐஸ்வர்யா அவருக்கு முத்தமழை பொழிந்த காட்சியை சர்வைவரின் மிக ‘க்யூட்’ ஆன காட்சிகளில் ஒன்றாக சொல்லலாம். நந்தாவை தனது Mentor ஆகவே ஐஸ்வர்யா பார்க்கிறார். எனவே இறுதிச்சுற்று கிளைமாக்ஸ் காட்சியை இது நினைவுப்படுத்தியது. ‘Soul Survivor’ ஆக காடர்களில் ஒருவர் இறுதியில் வென்றாலும்கூட, மக்களின் மனங்களை வென்றவர்கள் வேடர்கள் அணியாகத்தான் இருக்கும்.

சர்வைவர் 65-ம் நாளில் என்ன நடந்தது?

எலிமினேட் ஆன நந்தாவிடம் தனி விசாரணையைத் தொடங்கினார் அர்ஜுன். “நீங்க ஒரு ஸ்ட்ராங் ப்ளேயர். ஆரம்பத்துல இருந்து பல டாஸ்க்குகளில் ஜெயிச்சுட்டு வந்தீங்க. இது எதிர்பாராத முடிவு. என்ன ஆச்சு?” என்று ஆரம்பித்தார். “இந்த வெளியேற்றத்தைப் போன வாரமே எதிர்பார்த்தேன். அப்ப இம்யூனிட்டி வாள் இருந்ததால தப்பிச்சேன். ஆனா எனக்கு வருத்தமில்ல. உடல்ரீதியான வலிகள் இருந்தாலும் மனரீதியாக நான் ஓகே. என்னோட மனசாட்சிப்படிதான் இங்க விளையாடியிருக்கேன். யாரைப் பற்றியும் புறம் பேசவில்லை. எனவே நான் இங்க இருந்து பெருமையாத்தான் போறேன்” என்றார் நந்தா.

சர்வைவர்  - அர்ஜுன்
சர்வைவர் - அர்ஜுன்

“எதுக்காக உங்களை டார்கெட் பண்ணாங்க?” என்கிற அர்ஜுனின் கேள்விக்கு ‘தெரியலை' என்று நந்தா மழுப்பியிருக்க வேண்டாம். இதுவே ஐஸ்வர்யாவாக இருந்திருந்தால் உடைத்துப் பேசியிருப்பார். “நீங்க ஸ்டிராங் ப்ளேயர் ங்கிறது காரணமா.. நம்பர் கேம் இருக்கா…” என்றெல்லாம் கேட்டு நந்தாவின் வாயைக் கிளறினார் அர்ஜுன். “இருக்கலாம். நானா இருந்தாலும் அப்படித்தான் யோசிப்பேன்” என்று நியூட்ரலாக பதில் சொன்னார் நந்தா.

``கொம்பர்களாக மாறின பிறகு தனிமையை உணர்ந்தீர்களா?” என்கிற கேள்விக்கு “ஆமாம். ஆனா யாரும் என்னை ஒதுக்கல. நான் ஒதுங்கியிருந்தேன். அது என் தேர்வு. அங்க என்னால் ஜெல் ஆக முடியலை” என்று யாரையும் காயப்படுத்த விரும்பாமல் ஜாக்கிரதையாகவே பேசினார் நந்தா. ஏனெனில் அவர் மறுபடியும் மெயின் அணிக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்பதால் இருக்கலாம்.

“அங்க முடிவையெல்லாம் சேர்ந்துதான் எடுக்கறாங்களா?” என்று அடுத்த முக்கியமான தூண்டிலை வீசினார் அர்ஜுன். “ஆமாம். எல்லாம்தான் பேசுவாங்க. ஆனால் ஒரு குரல் மட்டுமே இறுதியில் ஒலிக்கும்” என்று நந்தா பூடகமாகச் சொல்ல “அது யார்” என்று கேட்கப்பட்டதற்கு ``தெரியலை சார்” என்று மீண்டும் மழுப்பி விட்டார். “ஆனால் அணியாக இணைந்து அங்கு முடிவு எடுக்கப்படுவது கிடையாது” என்று நந்தா சொன்ன க்ளூ மிக முக்கியமானது.

மூன்றாம் உலகம். துரோகத்தால் தோற்கடிக்கப்பட்ட வீரனைப்போல் தலைகுனிந்து நந்தா உள்ளே வந்து கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை எழுப்பினார். நந்தாவின் குரலைக் கேட்டதும் ஐஸ்வர்யாவிற்கு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேர வந்திருக்க வேண்டும். தடுமாறி எழுந்து கீழே விழப் போய் பிறகு சமாளித்து நந்தாவை கட்டியணத்து முத்தமழை பொழிந்ததை புன்சிரிப்புடன் நந்தா ஏற்றுக் கொண்டார். மூன்றாம் உலகத்தில் நுழைந்தவுடனே நந்தாவின் முகம் மலர்ச்சியாக மாறிவிட்டது. அவர் மனம் விட்டு சிரிக்கும் அபூர்வமான காட்சிகள் தென்பட்டன.

சரண்
சரண்

பிறகு சரணை எழுப்பியதில் “வாங்க. உட்காருங்க.. அங்க என்னல்லாம் நடந்ததுன்னு சொல்லுங்க.. நிறைய பேசணும்” என்று ஐஸ்வர்யாவும் சரணும் பழைய கதைகளைக் கேட்க ஆர்வமாகிவிட்டனர். “என்னை அனுப்பிடுவாங்கன்னு போன வாரமே தெரியும். அவங்க தலைல வெச்சு கொண்டாடிய LP-ஐ முதல்ல தூக்கினாங்க. அடுத்தது அம்ஜத். அதுக்கப்பறம் நான்தானே?” என்று சிரித்த நந்தாவிடம் “என்னை டார்க்கெட்டா வெச்சிருந்தாங்களா?” என்று ஆர்வமாகக் கேட்டார் ஐஸ்வர்யா. “என்னைத்தான் டார்க்கெட்டா வெச்சிருந்தாங்க. ஆனா சில பேர் வந்து உன்னை வோட் பண்ண மாட்டோம்னு சொன்னாங்க” என்று சரண் குறுக்கிட்டார். “அவங்க நல்ல பேரு வாங்கறதுக்கா இருக்கும்” என்றார் நந்தா.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

கடுமையான மழை பெய்வதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தால் மூவரும் கூடாரத்திற்குள் நின்று கொண்டனர். நந்தா எலிமினேட் ஆன போது நாராயணனின் எக்ஸ்பிரஷன் எப்படியிருந்தது என்பதை செய்து காட்டி சிரித்தார் நந்தா. இதைப் போலவே ‘என்னிடம் ரகசிய இம்யூனிட்டி ஐடல் இருக்கிறது’ என்று இனிகோ டிரைபல் பஞ்சாயத்தில் எடுத்துக் காட்டியதும் நாராயணனின் முகம் அதிர்ச்சியில் மாறியதை சரண் செய்து காட்ட, கூடாரமே சிரிப்பொலியில் மூழ்கியது.

ஓலை வந்தது. “மூன்றாம் உலக சேலன்ஞ்சில் ஐஸ்வர்யாவும் நந்தாவும் போட்டியிட வேண்டும்’ என்கிற அறிவிப்பைப் பார்த்ததும்.. “இப்பத்தான் வந்தேன். அதுக்குள்ளே ஆரம்பிச்சிட்டாங்களா?” என்று சிரித்தார் நந்தா. “நந்தா கூட மோதறது எனக்கு ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு” என்று அப்போதே ஆர்வமானார் ஐஸ்வர்யா.

தன்னுடைய பையில் இருந்து பத்து பதினைந்து ஓலைகளை எடுத்துப் போட்டார் நந்தா. பழைய நினைவுகளைச் சேர்ப்பதென்பது அவருக்கு மிகவும் பிடித்த பழக்கமாம். எலிமினேஷனின் போது ஐஸ்வர்யா, சரண் எழுதிய கடிதங்கள் அதில் இருந்தன. “என் லெட்டர்ல நான் எல்லோரையும் விசாரிச்சேன். மூணு பேரை மட்டும் குறிப்பிடலை. அவங்க பெயரைச் சொல்லக்கூட விரும்பலை” என்றார் ஐஸ்வர்யா. (யார் அந்த மூன்று பேர்?!).

“என் அப்பாவோட வாட்ச்சை இருபது வருடத்திற்கு மேல வெச்சிருக்கேன்” என்று நினைவலைகளில் மூழ்க ஆரம்பித்த நந்தாவைப் பார்த்து “அவரு இப்படி பேசி.. சிரிச்சு.. இப்பத்தான் பார்க்கறேன்” என்று வியந்தார் ஐஸ்வர்யா. “எனக்கு வந்த லவ் லெட்டர்லாம் கூட வெச்சிருக்கேன்” என்று சொல்லிச் சிரித்தார் நந்தா.

தனக்கு ஒரு காதல் கடிதம் வந்த கதையை சிரிப்புடன் ஆரம்பித்தார் ஐஸ்வர்யா. `எதிர்பாராத கிளைமாக்ஸ்’ உடன் அந்தக் கதை முடிந்திருந்தது. “வீட்டு வாசல்ல ஒரு லவ் லெட்டர் கிடந்தது. எனக்குத்தான்னு எடுத்துப் படிச்சேன். ‘உன் மூக்கு ரொம்ப அழகு’ன்னு அதில் எழுதியிருந்ததைப் பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு. அது எனக்கில்லைன்னு. அப்புறம் பார்த்தா அது என் அம்மாவிற்கு வந்த லெட்டர்” என்று அந்த கிளைமாக்ஸை ஐஸ்வர்யா உடைக்க நந்தாவிற்கும் சரணிற்கும் சிரிப்பு தாங்கவில்லை. கதை அத்துடன் முடியவில்லை. “எங்க அம்மா அந்த லெட்டரை அப்பா கிட்ட கொண்டு போய் காண்பிச்சாங்க.. அவரு கோபப்படலை. பதிலுக்கு “பரவாயில்லையே. உனக்கு இன்னமும் மார்க்கெட் இருக்கு’ன்னு ஆச்சரியப்பட்டாரு" என்று ஐஸ்வர்யா சொல்லி முடித்ததும் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று. “உங்க அப்பாவை எனக்கு பார்த்தாகணும். கால்ல விழுந்துடுவேன்” என்று சிரித்தார் நந்தா.

ஐஸ்வர்யாவிற்கும் ஒரு காதல் கதை இருக்கிறதாம். நான்கு வருடம் நீடித்த தீவிரமான கதையாம் அது. “இன்னொரு பையன் டெய்லி பைக்ல என் பின்னாடியே வருவான். எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்” என்று மகிழ்ந்தார் ஐஸ்வர்யா. “எங்க அம்மா கூட கேப்பாங்க. 24 வயது பொண்ணாடி… நீ.. லவ் பண்ணு..ன்னு சொல்வாங்க” என்றார் ஐஸ்வர்யா.

மூன்றாம் உலக சேலன்ஞ். “வாங்க சர்வைவர்ஸ்” என்று வரவேற்றார் அர்ஜுன். ‘மூன்றாம் உலகம் எப்படியிருக்கு?’ என்று நந்தாவிடம் அவர் விசாரிக்க “ரொம்ப அமைதியா இருக்கு சார். இதுவரைக்கும் நிறைய mood swing இருக்கும். இப்ப அதெல்லாம் இல்லை. நேத்து நைட்டு தூங்காம, முதல் நாள்ல இருந்து என்னெல்லாம் நடந்ததுன்னு ரீவைண்ட் பண்ணிப் பார்த்தேன்.” என்று ஜென் நிலையில் நந்தா பேச “இந்த கேம் இவ்வளவு சொல்லிக் கொடுக்கும்னு யோசிச்சிங்களா?” என்றார் அர்ஜுன்.

நந்தா
நந்தா

பிறகு தன் அனுபவத்தையும் அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். “ஒரு வாரம், ஒரு மாதம், மூன்று மாதங்கள் முன்னால் நடந்ததையெல்லாம் இப்போது யோசித்துப் பார்த்தால் எத்தனை தேவையில்லாத விஷயங்களுக்கு நாம கோபப்பட்டிருப்போம். கத்தி டென்ஷன் ஆகியிருப்போம்னு புரியும். எல்லாமே வேஸ்ட்டுதானே?” என்று அர்ஜுனின் நண்பரொருவர் அடிக்கடி சொல்வாராம்.

“ஓகே.. நந்தாவும் ஐஸ்வர்யாவும் போட்டியிடப் போறாங்க” என்று அர்ஜுன் சொன்னதும் “அப்பாடா” என்று ரிலாக்ஸாக வேடிக்கை பார்க்க அமர்ந்து கொண்டார் சரண். விளையாட்டின் கான்செப்ட் பற்றி விளக்க ஆரம்பித்தார் அர்ஜுன்.

“கயிற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் கொக்கியைக் கொண்டு தூரத்தில் இருக்கும் மூன்று சிறிய மூட்டைகளை போட்டியாளர்கள் இழுக்க வேண்டும். அதில் ஒன்றில் பந்து இருக்கும். ஊசலாடும் புதிர்ப்பலகையில் பொம்மலாட்டம் போல இரண்டு பக்கமும் கயிறுகள் இருக்கும். அதைக் கொண்டு பலகையை நகர்த்த முடியும். பந்தை மேஜையின் ஆரம்பப் புள்ளியில் போட்டு மையப்புள்ளிக்குள் கொண்டு வந்து நிறுத்தினால் வெற்றி” என்றார் அர்ஜுன்.

நந்தா
நந்தா

போட்டி ஆரம்பித்தது. கொக்கி கொண்டு மூட்டைகளை இழுத்துப்போடுவது அத்தனை பெரிய விஷயமா? என்று நமக்குள் முதலில் தோன்றியது. ஆனால் நந்தாவும் ஐஸ்வர்யாவும் அதற்காக மெனக்கிடும் போதுதான் அதன் கஷ்டம் தெரிந்தது. மீனுக்கு தூண்டில் வீசுவதுபோல் கயிற்றைத் தூக்கி வீசும்போது கொக்கி, மூட்டையில் மாட்டாமல் நழுவி நழுவிச் சென்றது. இருவரும் சிரமப்பட்டதில் முதல் வெற்றி ஐஸ்வர்யாவிற்கு கிடைத்தது. அவர் மூன்று மூட்டைகளையும் துழாவி ஒரு மூட்டையில் இருந்த பந்தை எடுத்துக் கொண்டு புதிர் மேஜைக்கு விரைந்தார். ஏறத்தாழ இதே சமயத்தில் நந்தாவும் வந்து இணைந்து கொண்டார்.

நாம் சிறுவயதில் பிளாஸ்டிக் டப்பாவில் உள்ளே இருக்கும் மணிகளை வைத்து இந்த ஆட்டத்தை சுழற்றி சுழற்றி ஆடியிருப்போம். அதே விஷயம் இங்கு பெரிய அளவில் இருந்தது. மேலே தொங்கும் கயிற்றைக் கொண்டு பலகையின் அசைவைக் கட்டுப்படுத்த முடியும். “நான் நெனச்ச மாதிரி இல்ல. நான் எந்தப் பக்கம் இழுக்கறனோ. அதுக்கு எதிர்ப்பக்கம் பலகை அசையுது. அதுக்கேத்த மாதிரி நான் மாற வேண்டியிருந்தது” என்றார் நந்தா. இந்தப் பலகையில் உள்ள பெரிய ஆபத்து என்னவெனில் பந்தை ஒரு முறை உள்ளே போட்டு சிக்கலான வளைவுகளில் சுற்றி வந்து மையத்தை எளிதாக அடைந்துவிட முடியாது. பரமபத பாம்பு போல வழியில் துளைகள் இருக்கும். அதில் விழுந்து விடாமல் பந்தைக் கொண்டு வருவது பிரம்மப் பிரயத்தனம்.

“இது பொறுமையாகவும் நிதானமாகவும் ஆட வேண்டிய ஆட்டம்” என்று அர்ஜுன் முன்பே சொல்லியும் ஐஸ்வர்யாவால் நிதானத்தைக் கடைப்பிடிக்கவே முடியவில்லை. புதிர் மேஜையை ‘டொடக்.. டொடக்’ என்று இஷ்டத்திற்கு ஆட்டிக் கொண்டிருந்தார். எனவே பந்து துளை வழியாக கீழே விழுந்து கொண்டே இருந்தது. இது ஐஸ்வர்யாவின் குணாதிசயம். ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு மாறாக மிகப் பொறுமையாகவும் நிதானமாகவும் பந்தை மையத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார் நந்தா. அவர் வழக்கமாக பின்பற்றும் கவனக்குவிப்பு இதிலும் தென்பட்டது.

போட்டி ஆரம்பித்து 15 நிமிடங்கள் ஆகின. மேஜையை வேகமாக கையாள்வதற்கு ஐஸ்வர்யா ஒரு லாஜிக் சொன்னார். மெதுவாக கையாண்டால் துளை வழியாக பந்து விழுந்து கொண்டே இருக்கிறதாம். ஆனால் அவர் வேகமாக செயல்பட்டாலும் ஒரு கட்டத்தில் பந்து மையத்தை நெருங்கி வந்தது ஆச்சரியமான விஷயம். ஆனால் அவர் அவசரப்பட்டதில் துளை வழியாக விழுந்து விட்டது. இன்னொரு பக்கம் நந்தா மிகக் கவனமாக மையத்தின் அருகே கொண்டு வந்தார். “ஆட்டம் முடிந்து விட்டது” என்று நாம் நினைத்த போது துரதிர்ஷ்டம் நந்தாவை நெருங்கியது. பந்து கீழே விழுந்தது. நந்தாவின் முகம் கல் போல இறுகியது.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

முதல் முயற்சி தோற்றதால் ஐஸ்வர்யாவின் வேகம் இன்னமும் கூடி ‘டொடக் டொடக்’ சத்தம் அதிகமாகியது. “ஐஸ்வர்யா. மெதுவா விளையாடு’ என்று சரண் தூரமாக நின்று எச்சரித்தும் ஐஸ்வர்யாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “அவங்க வேற உத்தில விளையாடறாங்க” என்று சரணிடம் விளக்கினார் அர்ஜுன். என்றாலும் “ஐஸ்வர்யா.. பாத்து. மேஜை உடைஞ்சுடப் போகுது’ என்று சீரியஸாக கிண்டலடித்தார் அர்ஜுன்.

ஐஸ்வர்யா இப்படி தொடர்ந்து வேகமாக செயல்பட்டதில் ஒரு மேஜிக் நிகழ்ந்தது. ஆம். கயிற்றின் அசைவும் அவருடைய கைகளும் ஒரு கட்டத்தில் ஒத்திசைவுடன் செயல்பட ஆரம்பித்து விட்டன. ‘எப்படியும் நந்தாதான் ஜெயிக்கப் போகிறார். துடிதுடிப்பாக செயல்படும் ஐஸ்வர்யா தோல்விதான்” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது ஆட்டத்தின் போக்கு மாறியது. ஐஸ்வர்யா எப்படியோ பந்தை மையத்திற்கு நகர்த்திக் கொண்டு வந்து விட்டார். பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவர் கவனமாக முயன்றதில்.. யெஸ்.. வெற்றி அவருக்கு கிடைத்து விட்டது.

கடந்த வார போட்டியிலும் இதேதான் நிகழ்ந்தது. சரணிற்கும் ஐஸ்வர்யாவிற்கும் நடந்த போட்டியில் நிதானத்தைக் கடைப்பிடித்த சரண்தான் வெற்றி பெறுவார் என்று முதலில் உறுதியாக கணிக்கத் தோன்றியது. ஆனால் காற்று திடீரென்று மாறி அடித்ததால் ஐஸ்வர்யா வென்றார். இம்முறையும் அதுவே நிகழ்ந்திருக்கிறது. ஏதோவொரு அதிர்ஷ்டம் ஐஸ்வர்யாவை பின்தொடர்கிறது போல.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

“இரண்டாவது முறையா வெற்றி அடைஞ்சிருக்கீங்க.. வாழ்த்துகள்” என்று ஐஸ்வர்யாவிடம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் அர்ஜுன் “ப்பா. என்னா ஸ்பீடா போர்டை ஆட்டறாங்க… இவங்க பண்றதைப் பார்த்தா ஆரம்பக் கட்டத்துல இருந்தே பந்து துள்ளி வந்து சென்டர்ல விழற மாதிரி பண்ணிடுவாங்களோன்னு தோணிச்சு” என்று கிண்டலடித்தார் அர்ஜுன். “இது எப்பவுமே எனக்கு வழக்கமா நடக்கறதுதான் சார்.. நெறய தப்பு பண்ணித்தான் கத்துப்பேன்” என்றார் ஐஸ்வர்யா.

நந்தாவுடன் விளையாடியதை வித்தியாசமாக அனுபவமாக எடுத்துக் கொண்டாலும் விட்டுத் தராமல் ஆடிய ஐஸ்வர்யாவின் நேர்மையையும் உறுதியையும் பாராட்ட வேண்டும். ஐஸ்வர்யாவின் கைத்தடம் வண்ணம் கொண்டு பலகையில் பதிக்கப்பட்டது. ‘போர்டு முழுக்க என் கையாத்தான் இருக்கணும்னு ஆசைப்படறேன்’ என்றார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா மெயின் அணிக்குத் திரும்பும் அத்தனை நல்ல சகுனங்களும் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. இனி என்ன நடக்கும்?

பார்த்துடுவோம்.