`தெலுங்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் லாவண்யா. படையப்பா, தெனாலி, வில்லன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்து கொண்டிருந்தவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அருவி' தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு பிரசன்னா என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் லாவண்யா பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். திருமணத்துக்கு வாழ்த்துகள் சொல்லி, லாவண்யாவிடம் பேசினோம்.
``தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருந்தேன். கோவிட் சமயத்தில் ரெண்டு வருஷம் பிரேக் எடுத்தேன். அப்புறமாத்தான் `அருவி' சீரியல் நடிக்கிற வாய்ப்பு அமைஞ்சது. இப்ப அந்த சீரியலும் நல்லா போயிட்டு இருக்கு.
நான் கல்யாணம் வேண்டாம்னு பிளான் பண்ணி எல்லாம் தள்ளிப் போடல. கரியரில் கவனம் செலுத்தினதால தானா தள்ளிப் போயிடுச்சு. என் ஃபேமிலி எனக்கு மிகப்பெரிய பலம். ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு பொதுவா பெண்கள் எதிர்கொள்கிற கேள்விகளை எல்லாம் நான் எதிர்கொண்டதில்ல என்றவரிடம் 44 வயதில் திருமணம்னு வருகிற செய்திகளை எப்படி பார்க்குறீங்கன்னு கேட்டதும் புன்னகைக்கிறார்.
"எனக்கு இப்ப 43 வயசு தாங்க ஆகுது! வயசை தப்பா போட்டிருக்காங்க. வயதுங்கிறது வெறும் நம்பர் தானே? அந்த செய்தி என்னைக் காயப்படுத்தலாம் இல்லை. என்னுடைய கணவர் பிரசன்னாவும் என்னுடைய கரியருக்கு சப்போர்ட் ஆக இருக்கிறார். படங்களில் நல்ல கதாபாத்திரம் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன்!" என்றார்.