Election bannerElection banner
Published:Updated:

பிக்பாஸ் சீசன் 4 மிஸ் ஆகிடுச்சு... சீசன் 5-ல் அஸீம் வீட்டுக்குள்ளே போகிறாரா?!

அஸீம்
அஸீம்

சன் டிவியில் ஹிட்டான ’ஆனந்தம்’ தொடரை இயக்கிய நித்தியானந்தம் இயக்க, ‘பகல் நிலவு’ அஸீம் ஹீரோவாக நடிக்க போலீஸ் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரி ஒன்று வெப்சீரிஸாக வெளியாக இருக்கிறது.

சீரியல் நடிகர்கள் சினிமாவை நோக்கிப் போவது வழக்கமானதே. அப்படிப் போனவர்களில் ஜெயித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் சினிமாவில் ஜொலிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். அதற்குள் செல்ல வேண்டாம். இப்போது சினிமாவின் வடிவம் மாறியிருக்கிற சூழலில், சீரியல் ஏரியாவிலிருந்து வெப் சீரிஸ் பக்கம் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான ’ஆனந்தம்’ தொடரை இயக்கிய நித்தியானந்தம் இயக்க, ‘பகல் நிலவு’ ’கடைக்குட்டி சிங்கம்’ சீரியல்களில் நடித்த அஸீம் ஹீரோவாக நடிக்க போலீஸ் இன்வெஸ்டிகேஷன் ஸ்டோரி ஒன்று வெப்சீரிஸாக விரைவில் வெளியாக இருக்கிறது.

இது குறித்து அஸீமிடம் பேசினேன்.

இயக்குநருடன் அஸீம்
இயக்குநருடன் அஸீம்

‘’நான் நடிக்கத் தொடங்கின நாள் தொட்டு போலீஸ் யூனிஃபார்ம் மீது ஒரு கண் இருந்தது. கமல் சாருடைய ‘காக்கிச் சட்டை’, சூர்யாவின் ‘காக்க காக்க’ முதலான போலீஸ் கதையுள்ள படங்களையெல்லாம் திரும்பத் திரும்பப் பார்ப்பேன். அதனால இப்ப எனக்கே அப்படியொரு கதை கிடைச்சதும் உடனே ஷூட் கிளம்பிட்டேன்’’ என்றவரிடம், ''பிக் பாஸ் 4ல் கலந்துக்கப் போறதாப் பேசப்பட்டு, கடைசி வரை நீங்க ஷோவுக்குள் வரவே இல்லையே, என்ன நடந்தது?'' என்றேன்.

‘’பிக் பாஸ் 4 முடிஞ்சு ரொம்ப நாளாகிட்டதால அதை விட்டுடலாமே சார். நான் கிளம்ப ஆயத்தமானப்ப என்னுடைய அம்மாவுக்கு கால்ல சின்ன அடி. தடைகளும் நல்லதுக்கேனு எடுத்துக்கிட்டு கடந்து வந்துட்டேன். அதனால முடிஞ்சு போனதைப் பத்தி பேச வேண்டாமே.''

ஆதியா
ஆதியா

''ஹீரோவாக நடிக்கும் வெப் சீரிஸ் பற்றி சொல்லுங்க?''

'' நித்தியானந்தம் இயக்குகிறார். கதை, திரைக்கதை, ’திகில் நாவல் மன்னன்’ ராஜேஷ்குமார். ஒரு கொலை வழக்கை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக நான் நடிக்கிறேன். சென்னை சுற்று வட்டாரத்துல ஷூட்டிங் போயிட்டிருக்கு. பெயரை சீக்கிரமே அதிகாரப்பூர்வமா அறிவிப்பாங்க. மே அல்லது ஜூன் மாசம் ரிலீஸ் இருக்கும்.''

''சீரியல்களில் அஸீம்-ஷிவானி இடையே ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. உங்களை வச்சு நிறைய கிசுகிசுக்கள் கிளம்பின. இந்த போலீஸ் ஸ்டோரியில் ஜோடி இருக்காங்களா?''

அஸீம்
அஸீம்

''சின்சியரான போலீஸ்காரன் வாழ்க்கையிலயும் ரொமான்ஸ், லவ்வெல்லாம் இருக்காதா என்ன? அளவா அழகா இருக்கும். மலையாளப் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச ஆதியாங்கிறவங்க எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. சீரியலோ, சினிமாவோ, வெப் சீரிஸோ, ஹீரோ-ஹீரோயின் இடையில் கெமிஸ்ட்ரி இருந்தாதான் அது சக்சஸ் ஆகும்.

அது கிடக்கட்டும். இந்த வெப் சீரிஸ் ஏரியாவுலயாச்சும் கிசுகிசுக்கள்ல சிக்காம இருக்கணும்னு நினைக்கிறேன். அஸீம்-ஷிவானி மாதிரி அஸீம்-ஆதியானு இன்னொரு ரவுண்ட் வரணுமா, விட்டுடுங்களேன் பாஸ்’’ என்கிறார்.

இதற்கிடையில் ’பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்கிறவர்களின் பட்டியல்’ என சமூக வலைதளங்களில் இப்போது வெளியாகியிருக்கிற ஒரு லிஸ்ட்டிலும் அஸீமின் பெயர் உள்ளது. இது குறித்துக் கேட்டால், ''மறுபடியும் முதல்ல இருந்தா'’ எனச் சிரிக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு