Published:Updated:

``ஆயிஷா தங்கமான பொண்ணு.. விஷ்ணு பெஸ்ட் ஃப்ரெண்ட்!’’ - நெகிழும் `சத்யா’ சீரியல் இந்திரன்

இந்திரன்
இந்திரன்

"சீரியலில் என்னை அடிக்கிற மாதிரி வர்ற காட்சிகளில் நடிக்க விஷ்ணு ரொம்ப தயங்குவார். ஆனால், இப்போ நண்பர்களான பிறகு உண்மையாவே அடிக்க ஆரம்பித்துவிட்டார்."

சமீபத்திய சீரியல்களில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சத்யா' சீரியல் சற்றே வித்தியாசமானது. டாம் பாய் கேரக்டர் ஆயிஷா, அப்பாவித்தனமான விஷ்ணு, கலகலப்பான நண்பர்கள் பட்டாளம் என மிகவும் ஜாலியாக நகர்கிறது கதைக்களம்.

'சத்யா' சீரியல் இந்திரன்
'சத்யா' சீரியல் இந்திரன்

விஷ்ணுவின் நண்பராக சசி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்திரன் ரியல் லைஃபிலும் விஷ்ணு மற்றும் ஆயீஷாவின் நெருங்கிய நண்பர். 'சத்யா' தொடர் வாய்ப்பு பற்றியும் ஆயிஷா, விஷ்ணு உடனான நட்பு பற்றியும் இந்திரன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

" 'சத்யா' சீரியல் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. ஆனால், இந்த வாய்ப்பு அவ்வளவு சுலபமா கிடைச்சது இல்லை. சின்ன வயசுல இருந்தே நடிப்பு மீது தீராத ஆசை. இயல்பாகவே எனக்கு காமெடி நல்லா வரும். ஸ்கூல் படிக்கும்போது பேச்சுப் போட்டி, டிராமான்னு கலந்துகிட்டு பரிசுகள் வாங்கிக் குவிச்சிருக்கேன். நாங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி. அப்பா கார்பென்டர் வேலை பார்க்கிறார். நடிப்பு ஆசை பற்றியெல்லாம் பேசினாலே அப்பா திட்டுவாரு. ராமநாதபுரத்தில் ஒரு சின்ன கிராமம்தான் என் சொந்த ஊரு. சின்ன வயசிலேயே சென்னை வந்து செட்டில் ஆகிட்டோம். என்னோட ஹியூமர் சென்ஸுக்கு என் அம்மாதான் காரணம். அம்மா ரொம்ப ஜாலி டைப். ரொம்ப காமெடி பண்ணுவாங்க. அவங்க என் திறமையை நம்புனாங்க. நான் நல்லா வருவேன்னு ஊக்கம் கொடுத்தாங்க.

'சத்யா' சீரியல் இந்திரன்
'சத்யா' சீரியல் இந்திரன்

என் அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு நல்ல கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்தார். ஆனால், நான் ஒரு வருடத்தில் காலேஜ் படிப்பை நிறுத்திட்டேன். பிறகு, முழு வீச்சில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தேன். தினமும் நிறைய சினிமா கம்பெனி ஏறி இறங்கினேன். என் போட்டோ, தகவல்கள் எல்லாம் கொடுத்துட்டு வருவேன். அதன் பலனாக, எனக்குச் சின்னச் சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. நிறைய படங்களில் சின்னச் சின்ன ரோலில் நடிச்சிருக்கேன். ஆனா, எந்தப் படமும் சொல்லும் அளவுக்குப் பேர் வாங்கி கொடுக்கல.

நிறைய இயக்குநர்கள் எனக்குச் சம்பளம்கூட கொடுக்காம ஏமாத்திட்டாங்க. என் வீட்ல வேற ரொம்ப எதிர்ப்பு. என் அப்பா என்கூட பேசுறதையே நிறுத்திட்டார். என் அம்மா மட்டும்தான் எனக்கு ஆதரவு. சினிமா கம்பெனியில் இருக்கிறவங்க, 'நீ ரொம்ப குள்ளமா இருக்க. அப்படி இப்படி'ன்னு ரொம்பக் கேவலப்படுத்தி திருப்பி அனுப்புவாங்க. நிறைய அவமானங்கள், போராட்டங்களுக்குப் பிறகு, ஜீ தமிழ் 'ஜூனியர் சீனியர்' காமெடி ஷோவில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அதில் எனக்கு நல்ல பேரும் கிடைச்சது. அந்த ஷோவின் ப்ரோமோவிலேயே என்னை நடிக்க வெச்சாங்க. அந்தப் ப்ரோமோ டிவி-யில் ஒளிபரப்பானதும், என் அப்பா என்னை பத்தி அம்மாட்ட சொல்லி சந்தோஷப்பட்டாராம். பிறகு, கலர்ஸ் தமிழின் 'வேலுநாச்சி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு.

வேலுநாச்சியில் இந்திரன்
வேலுநாச்சியில் இந்திரன்

அந்த சீரியலில் எனக்கு முக்கியக் கதாபாத்திரம். ஓரளவுக்கு நல்ல பேர் கிடைச்சுது. 'செம்பருத்தி' சீரியலில் சின்ன ரோல் பண்ணேன். அதன் பிறகு, எப்போவும்போல வாய்ப்புகள் வரல. மறுபடியும் மனசுல விரக்தி. பணக் கஷ்டம், தங்கை திருமணம் அப்படின்னு கொஞ்சம் நெருக்கடியா இருந்துச்சு. பிறகு, 'சத்யா' சீரியல் வாய்ப்பு தேடி வந்துச்சு. என்னை நம்பி ஒரு முக்கியமான ரோல் கொடுத்தாங்க. 'சத்யா' சீரியல் என் வாழ்க்கையே மாற்றிடுச்சு. இப்போ ஓரளவுக்குக் கஷ்டம் தீர்ந்திருக்கு'' என்றவர்,

'' 'சத்யா' சீரியலில் எனக்குக் 'குள்ள பூதம்'னு பேர் வெச்சிட்டாங்க. இப்போ வெளியே கடைக்குப் போனாகூட நிறையா பேர் 'நல்லா நடிக்கிறீங்க', 'ஹை.. குள்ள பூதம்'னு வந்து பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க நல்லா நடிக்கிறீங்கன்னு மக்கள் சொல்லும்போது, பறக்கிற மாதிரி இருக்கு. என் தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த ஊருக்குப் போனா, அத்தனை பேரும் என்னை வந்து சூழ்ந்து விசாரிக்கிறாங்க, போட்டோ எடுக்குறாங்க.

இந்த அடையாளத்துக்காகத்தான் நான் இவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கிட்டேன். 'நீயெல்லாம் ஒரு ஆளா'னு திட்டுனவங்க முன்னாடி சாதிச்சுட்டேன். இன்னும் சாதிப்பேன். குள்ளமா இருக்கேன்னு கிண்டல் பண்ணவங்கெல்லாம் இன்னைக்கு என்கூட செல்ஃபி எடுக்கணும்னு சொல்றாங்க.

நான் இதுவரை யாருக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்தது இல்ல. என் வாழ்க்கையிலேயே முதல்முறையா ஒரு காஸ்ட்லி கிஃப்ட் வாங்கி, ஆயிஷா பிறந்தநாளுக்குக் கொடுத்தேன்.
இந்திரன்

ஆயிஷா தங்கமான பொண்ணு. அவங்க அம்மா ரொம்பப் பாசமா நடந்துப்பாங்க. எனக்கு டிரெஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தாங்க. நெகிழ்ச்சியாகிட்டேன். நான் இதுவரை யாருக்கும் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்தது இல்ல. என் லைஃப்லயே முதல் முறையா ஒரு காஸ்ட்லி கிஃப்ட் வாங்கி ஆயிஷா பிறந்தநாளுக்குக் கொடுத்தேன்.

இந்திரன் வாங்கிக்கொடுத்த டெட்டிபியர்
இந்திரன் வாங்கிக்கொடுத்த டெட்டிபியர்

பெரிய டெட்டிபியர் பொம்மை வாங்கிக் கொடுத்தேன். ஆயிஷா ரொம்ப நெகிழ்ந்துட்டாங்க. ஆயிஷாவுக்கு டெட்டிபியர் ரொம்பப் பிடிக்கும்'' என நெகிழ்பவர்,

''சீரியலில் மட்டும் இல்ல, நிஜத்திலும் விஷ்ணுவும், நானும் நல்ல நண்பர்கள். சீரியலில் என்னை அடிக்கிற மாதிரி வர்ற காட்சிகளில் நடிக்க விஷ்ணு ரொம்பத் தயங்குவார். ஆனால், இப்போ நண்பர்களான பிறகு இப்போ உண்மையாவே அடிக்க ஆரம்பித்துவிட்டார். என் சுக, துக்கங்களை அவர்கிட்ட பகிர்ந்துப்பேன்.

ஆயிஷா வளர்ச்சி பிடிக்காதவங்க அவங்களைப் பற்றி கிசிகிசு கிளப்பிவிடுறாங்க. ஆனால், உண்மையில் அவங்க ரொம்ப நல்ல டைப். ஆயிஷா, விஷ்ணு இரண்டு பேர்கிட்டேயும் ஆட்டிடியூட் கொஞ்சம்கூட கிடையாது. சகஜமா பழகுவாங்க. அவங்க பெர்ஷனல் பத்திப் பேசவோ, விமர்சிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது." என்று முடித்தார், இந்திரன்.

அடுத்த கட்டுரைக்கு