``சீரியல்களில் நடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்கிறபோது, அவ்வளவாக மரியாதை கிடைப்பதில்லை" எனச் சின்னத்திரை நட்சத்திரங்கள் குமுறக் கேட்டிருப்போம். `அழகு’ சஹானா கொஞ்சம் வித்தியாசமாகப் பேசுகிறார். சினிமாவிலிருந்து சின்னத்திரை திரும்பிய அனுபவமே அப்படிப் பேச வைக்கிறது. "என்ன அந்த அனுபவம்?" எனக் கேட்டேன்.
``அரை டஜன் படங்கள்ல ஹீரோயினா நடிச்சிருக்கேன். படங்களோட பெயர்களைச் சொன்னா, `அப்படியொரு படம் ரிலீஸாச்சா’னு கேட்பீங்க. சினிமா பற்றிய என்னோட பிம்பம் உடைபடக் காரணம் இதுதான். ஆரம்பத்துல வாய்ப்பு தேடி அலைஞ்சப்போ ரொம்பவே அவமானப்பட்டிருக்கேன். `நல்லா நடிப்பேன்’, `டான்ஸ் தெரியும்’ இப்படி என்ன சொன்னாலும், அதுக்கெல்லாம் யாரும் காது கொடுக்கல. ஏன், நடிப்புக்காகப் படிப்பையெல்லாம்கூட பாதியில் விட்டுட்டு, சினிமாவைத் தேடி வந்தவளால, இன்னைக்கும் சினிமாவுல தொடர்ந்து நிற்க முடியுதா?!" என்றவர், ஃபிளாஷ்பேக் போகிறார்.
``டி.ராஜேந்தர் சார் டைரக்ஷன்ல ஒரு படத்துல செகண்ட் ஹீரோயினா முதன் முதலா சினிமா வாய்ப்பு வந்தது. `ஒருதலை காதல்’னு பெயர் வெச்சு ஷூட்டிங்கூட தொடங்கினாங்க. கனவுகளோட ஷூட்டிங் போயிட்டிருந்த சூழல்ல, என்ன ஆச்சோ தெரியல, திடீர்னு அந்தப் படம் நின்னுடுச்சு. பிறகு என்னோட சினிமா பயணம் தன் போக்குல போகத் தொடங்குச்சு. ஹீரோயினா அரை டஜன் படங்கள்ல நடிச்சேன்னு சொன்னேனே... அந்தப் படங்களெல்லாம் இந்த டைம்ல ரிலீஸானதுதான். `புதுசா படம் பண்றோம்; புதுமுகம்னா பட்ஜெட் கம்மியா இருக்கும்’னு வந்து கேட்கிறப்போ, அது நியாயமா பட்டதால, நானும் கமிட் ஆனேன். ஏதாவது ஒரு படம், எப்படியாச்சும் க்ளிக் ஆகிடாதான்னு மனசு தவிக்கும்.
ஆனா, இண்டஸ்ட்ரியிலேயே சிலர் புது ஆள்களைப் போறபோக்குல, `உப்புமா கம்பெனிகள்’னோ, `உப்புமா நடிகைகள்’னோ கொச்சையா பேசிட்டுப் போயிடுவாங்க. இந்த மாதிரியான பேச்சுகளையெல்லாம் கேட்ட பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்தேன். `கேலி, கிண்டல் பேசறவங்களைக் கண்டுக்காம இருக்கணும், வர்ற வாய்ப்புகளை தவறவிடக் கூடாது. அதேநேரம், மரியாதை இருக்கிற இடங்கள்ல மட்டும் கமிட் ஆகணும்’கிறதுதான் அந்த முடிவு. இப்படியொரு முடிவு எடுத்த பிறகு என் கரியர்ல நல்ல திருப்பம்னே சொல்லலாம். `தாரை தப்பட்டை’, `சலீம்’னு முக்கிய நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள்ல வாய்ப்பு வந்தது." என்றவர், சீரியலுக்கு வந்தது குறித்துக் கேட்டதும், சிலாகிக்கிறார்.
``சினிமாவுல இருந்து சீரியலுக்கு வர்றவங்க அதை `செகண்ட் இன்னிங்ஸ்’னு சொல்வாங்க. சினிமாவுல சாதிச்சுட்டு வர்றவங்க மட்டுமே இப்படிச் சொல்லணும். முதல் இன்னிங்ஸ்ல ஆடினேனான்னே தெரியாத நான், எப்படி அப்படிச் சொல்ல முடியும்?! ஆனா, நான் எதிர்பாராத ஆச்சர்யம் இங்கேதான் நிகழ்ந்தது.
அறிமுக சீரியலே முன்னணி சேனல்; அனுபவமிக்க தயாரிப்பாளர்கள்... யாருக்குக் கிடைக்கும்?! ரேவதி மேடம் மகளா கமிட் ஆன `அழகு’ சீரியல் என் வாழ்க்கையில் ரொம்பவே ஸ்பெஷல். சினிமாவை நேசிச்சு ஓடிய எனக்கு, சின்னத்திரை பெரிய அங்கீகாரம் தந்திடுச்சு. `அழகு’ கிடைச்ச நேரம், ரெண்டாவதா `பகல் நிலவு’ங்கிற பெரிய புராஜெக்ட்லேயும் நடிக்க முடிஞ்சது. இப்பெல்லாம் வெளியில போறப்போ `காவ்யா’னு மக்கள் எங்கிட்ட வந்து பேசறாங்க. அந்த நிமிடம் சந்தோஷத்துல கண்ணீரே வந்திடும். `உப்புமா கம்பெனியில நடிச்சவ’ன்னு சொன்னவங்க இப்போ சங்கடப்பட்டு எங்கிட்ட பேசறாங்க. வாழ்க்கையில எனக்கு இது போதும். சினிமாவைத் தேடி ஓடிட்டிருந்த நாள்கள்ல சீரியல்ங்கிற பேச்சையே பொருட்படுத்தாம இருந்தேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போதான் புரியுது." என நெகிழ்கிறார், சஹானா.