`பாக்கியலட்சுமி' தொடரிலிருந்து விலகப் போவதாக நடிகர் சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் அவருக்கு விருது வழங்கப்படாததே அவரது விலகலுக்கான காரணம் என சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்...

"பத்து நாளைக்கு முன்னாடி உணர்ச்சிவசப்பட்டு சில பர்சனல் காரணங்களால் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நான் நடிக்க மாட்டேன், தொடரை விட்டு விலகப் போறேன்னு ஒரு மெசேஜ் போஸ்ட் பண்ணியிருந்தேன். இப்ப அந்த பர்சனல் காரணங்கள் எல்லாமே சரியாகிடுச்சு. நான் கேட்ட சில கேள்விகளுக்குப் பதில் கிடைச்சிடுச்சு. இப்ப முழு மனசோட தொடர்ந்து நடிக்கப் போறேன். ஆமா, சதீஷ் ஆகிய நான் தொடர்ந்து கோபி கதாபாத்திரத்தில் நடிக்கப் போறேன்!" எனக் கூறியிருக்கிறார்.
அவர் வெளியேறப் போவதாக அறிவித்ததும் சமூகவலைதள பக்கங்களில் அவருக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்திற்கு நிச்சயம் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்கிற கருத்தும் பகிரப்பட்டு வந்த நிலையில் அவர் மீண்டும் நடிக்கப் போகிறேன் என அறிவித்திருப்பது நிச்சயம் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

சதீஷ் தொடர்ந்து சமூகவலைதள பக்கங்களின் வழியாக அவருடைய ரசிகர்களிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், "'பாக்கியலட்சுமி' தொடரில் வருகிற எபிசோடுகளில் காமெடி கொஞ்சமாகத்தான் இருக்கும். விறுவிறுப்பான சீரியஸான காட்சிகள் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன!" என்கிற தகவலையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.