Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 59: `அவரை அப்படி பார்க்க வேணாம்ன்னு சொல்லுங்க’- ரச்சிதா; மீண்டும் ஆரம்பித்த தனலஷ்மி

பிக் பாஸ் 6 நாள் 59

அடுத்ததாக பஸ்ஸரை தொட்ட ஜனனி, மைனாவை சவாலுக்கு அழைத்தார். ஒவ்வொரு முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து பெருமூச்சு விட்டார் தனலஷ்மி

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 59: `அவரை அப்படி பார்க்க வேணாம்ன்னு சொல்லுங்க’- ரச்சிதா; மீண்டும் ஆரம்பித்த தனலஷ்மி

அடுத்ததாக பஸ்ஸரை தொட்ட ஜனனி, மைனாவை சவாலுக்கு அழைத்தார். ஒவ்வொரு முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து பெருமூச்சு விட்டார் தனலஷ்மி

பிக் பாஸ் 6 நாள் 59
‘டிவிங்கிள்.. டிவிங்கிள்.. பெரிய ஸ்டார்..’ டாஸ்க்கின் இரண்டாவது நாள் கலை நிகழ்ச்சிகள் சுவாரசியமாக இருந்தன. குறிப்பாக ‘பூனை சேகர்’ பாத்திரத்தில் கடைசி வரை எனர்ஜியோடு செயல்பட்டார் மைனா. விக்ரமனும் ஏடிகேவும், விவாகரத்துக்கு முந்தைய தம்பதிகள் மாதிரி ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டே இருந்தார்கள்.

ஆனால் சன்மானம் மற்றும் வாய்ப்பு வழங்குவதில் அப்பட்டமான பாரபட்சம் தென்பட்டது. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பணத்தை வாரி இறைத்தார்கள். சிலருக்கு வாய்ப்பு வரவில்லை. இது தொடர்பான ஏமாற்றம் தனலஷ்மியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

நாள் 59-ல் நடந்தது என்ன?

“முதல்லயே பணத்தை அதிகமா இறைச்சுட்டோம். கதிரவனுக்கு எல்லாம் ஆயிரம் கொடுத்துட்டேன். இப்ப நிதியிருப்பு குறைவா இருக்கு. கம்மியா கொடுத்திருக்கணும்” என்று காலையில் ராமிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஏடிகே. “அண்ணன் மத்தவங்களுக்கு எல்லாம் அள்ளிக் கொடுப்பாரு. நமக்குன்னா கம்மியாதான் தருவாரு” என்று குத்தலான பதில் தந்தார் ராம். அவர் ‘அண்ணன்’ என்று நையாண்டியாக குறிப்பிட்டது அசிமை.

பிக் பாஸ் 6 நாள் 59: அசிம்
பிக் பாஸ் 6 நாள் 59: அசிம்

“நீ அந்த கதிரவனைத்தான் நம்புவேல்ல. என்னை நம்ப மாட்டே... அப்படித்தானே?!” என்று கரகர குரலில் காலையிலேயே ஷிவினை வம்பிழுத்துக் கொண்டிருந்தார் வேதா என்கிற அமுதவாணன். நறுமணத் திரவத்தை தன் மீது கீதா தேவி பீய்ச்சிக் கொள்ள, ‘என்ன செத்த எலி நாத்தம் வீசுது?’ என்று ஜாடையாக கிண்டல் செய்தார் தனலஷ்மி. கன்னியனான விக்ரமன், கீதா தேவியையே ‘குறுகுறு’வென்று பார்த்துக் கொண்டு ‘எங்களை என்டர்டெயின் செய் கீதா’ என்று ரொமான்ஸாக கோரிக்கை வைத்தார். அதென்னமோ, கீதாதேவியிடம் வரும்போது விக்ரமனிடமிருந்து ‘ரெமோ’ மட்டுமே வெளிப்படுகிறார். அன்னியனோ, அம்பியோ வெளியே வருவதில்லை.

‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ – வெட்கப்பட்ட கீதா தேவி

‘கன்னியனை அப்படி பார்க்க வேணாம்ன்னு சொல்லுங்க’ என்று கீதா தேவி பாவனையாக வெட்கப்பட, `ஓ.. மாஸ்டர் ஞாபகம் வந்துடுச்சா?’ என்று கிண்டலடித்த அமுதவாணன், ‘பார்த்த ஞாபகம் இல்லையோ?’ பாடலைப் பாட, எழுபதுகளின் நாயகிகளே நாணும் அளவிற்கு எக்ஸ்பிரஷன் தந்தார் ரச்சிதா. பின்குறிப்பாக காதல் பெருமூச்சு வேறு.

விக்ரமனின் சுணக்கமான பங்களிப்பை ஏடிகே ஜாடையாக கிண்டலடிக்க “அடுத்தவங்களை குறை சொல்லிட்டே இருக்காதீங்க” என்று கன்னியன் சூடாக, அவரிடம் சற்று நேரம் மல்லுக்கட்டிய ஏடிகே ‘இங்க இருக்கறதே அவமானமா இருக்கு’ என்று சொன்னாலும் அங்கேயேதான் அமர்ந்திருந்தார். கண்ணாமூச்சி ஆட்டத்தில் பரபரவென செயல்பட்டு 200 பாயின்ட்டுகள் சம்பாதித்தார் அமுதவாணன்.

பிக் பாஸ் 6 நாள் 59: விக்ரமன், ரக்சிதா
பிக் பாஸ் 6 நாள் 59: விக்ரமன், ரக்சிதா

அடித்துப் பிடித்து பஸ்ஸரைத் தொட்டார் ஜனனி. யாருக்கு அவர் சான்ஸ் தருவார்?! யெஸ்... அதேதான். அவர் அமுதவாணனை நடனம் ஆட அழைத்தார். ‘நடுக்கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா?’ பாடல் ஒலிக்க, நடனமாடி வேதா சம்பாதித்த சன்மானம் ரூ.8100.

அடுத்ததாக பஸ்ஸரைத் தொட்ட ராம், விக்ரமனை சவாலுக்கு அழைத்தார். “உங்களை சேர்ல கட்டி வெச்சிருக்கு. அதுக்கு கீழே பாம். விக்ரமன்தான் பாம் எடுக்கறவரு. நீங்க அவரை எடுக்க வைக்கணும்” என்று கற்பனையான சூழ்நிலையை விளக்கினார் பிக் பாஸ். அன்னியன் உரத்த குரலில் கத்தி காமெடி செய்ய தகுவரனும் இயன்ற அளவிற்கு பர்ஃபாமன்ஸ் செய்ய முயன்றார். இறுதியில் தன்னையே அழித்துக்கொண்டு கீழே குதித்தார் கன்னியன். விக்ரமனின் ஆக்ரோஷமான நடிப்பிற்காக ரூ.5000 கிடைத்தது. ஆனால் ராமின் நடிப்பை ஒப்புக்காக பாராட்டி விட்டுச் சென்றார்கள். பிறாண்டல் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், விக்ரமனின் நடிப்பைப் பாராட்டி ஏடிகே சன்மானம் தந்தது நல்ல விஷயம்.

பரஸ்பரம் பிறாண்டிக் கொண்ட ஏடிகேவும் விக்ரமனும்

மணிகண்ட்டா வில்லங்கமான வார்த்தைகளைப் போட்டு ‘தெலுகிலோ’ பாட, அதற்கு நடனமாடிய படியே வந்த ஏடிகேவின் உடல்மொழி சிரிப்பை வரவழைத்தது. மந்திரம் போட்டு வாயிலிருந்து லிங்கத்தை வரவழைத்து அமுதவாணனின் உடல் பிரச்னையை நித்யானந்தா... மன்னிக்கவும் போகானந்தா தீர்த்து வைக்க விக்ரமனும் ஏடிகேவும் மறுபடியும் வார்த்தைகளால் பிறாண்டிக்கொண்டார்கள். நடுவில் மாட்டிக்கொண்ட அமுதவாணன் காமெடியின் மூலம் இவர்களை சமாதானம் செய்ய முயன்று, பிறகு இயலாமல் அங்கிருந்து விலகிவிட்டார்.

‘என்னை டார்கெட் பண்ணாதீங்க’ என்று விக்ரமன் சற்று உஷ்ணமாக, ‘நான் ஏன் உங்களை டார்கெட் பண்ணப் போறேன். அட்வைஸ்தான் பண்ணேன்’ என்று நொந்துபோய் சொன்னார் ஏடிகே. டாஸ்க் துவங்கிய சமயத்தில் ஏடிகேவிடம் விக்ரமன் செய்த குறும்பு சற்று ஓவராகப் போய்விட்டது. அதிலிருந்து இவர்கள் எலியும் பூனையுமாக பரஸ்பரம் துரத்தி துரத்தி கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 நாள் 59: விக்ரமன், ஏடிகே
பிக் பாஸ் 6 நாள் 59: விக்ரமன், ஏடிகே

‘மேட் மதன்’ என்கிற பெயரில் ‘மன்மதன் சிம்பு’ பாத்திரத்தை ஏற்று பல்லைக் கடித்துக் கொண்டே பேசி சமாளித்தார் ஆயிஷா. ‘நான் சிம்பு பாத்திரம் பண்றேன்’ என்று அவராகச் சொன்னால்தான் மற்றவர்களுக்குத் தெரியும். பஸ்ஸரை தொட்ட ஆயிஷா, நடனமாட ரச்சிதாவைத் தேர்ந்தெடுக்க, ‘முன்தினம் பார்த்தேனே’ என்கிற அட்டகாசமான பாடலுக்கு வெட்கத்துடன் ஆடினார் கீதா தேவி. அவருக்கு முத்த மழை பொழிந்த பெண்கள் அணி, சன்மானத்தை அள்ளி வழங்கியது. கீதா தேவியையே ரொமான்ஸூடன் பார்த்துக் கொண்டிருந்த ‘வக்கீல் கணேசனும்’ அடுத்ததாக மேடையேற என்ன நிகழுமோ என்கிற மெல்லிய பீதி ஏற்பட்டது. நல்லவேளையாக, சன்மானம் மட்டுமே தந்து இறங்கிச் சென்றார் அசிம்.

வில்லங்கமான டாஸ்க்கால் சங்கடப்பட்ட ஷிவின்

அடுத்ததாக பஸ்ஸரை தொட்ட அமுதவாணன், ஷவினைத் தேர்ந்தெடுத்தது நல்ல விஷயம். ஷிவினுக்கான வாய்ப்பு அதுவரை வரவேயில்லை. இருவருக்குமான சூழல் விளக்கப்பட்டது. மனஉளைச்சலால் ஷிவின் தற்கொலை செய்து கொள்ளப் போக, அமுதவாணன் அவரைத் தடுத்து காப்பாற்ற வேண்டும். “ஏய்.. மாடர்ன் மோகினி. என்ன உன் பிரச்சினை.. ஏன் உன் வயிறு பெரிசா இருக்கு.. பாப்பா இருக்கா.. ஏம்ப்பா. கதிரவன்.. இது உன் வேலையா?’ என்று டாஸ்க்கை வில்லங்கமான திசையில் நகர்த்தினார் அமுதவாணன்.

பிக் பாஸ் 6 நாள் 59; அமுதவாணன், ஷிவின்
பிக் பாஸ் 6 நாள் 59; அமுதவாணன், ஷிவின்

‘அய்யய்யோ நானில்லை. அது கன்னியனா இருக்கலாம்’ என்று கதிரவன் பதறி அடுத்தவரை கை காட்ட, இந்த வழக்கு போகானந்தா வழியாக பயணித்து வக்கீல் கணேசனிடம் வந்து நின்றது. ‘என்னது கணேசன். நீங்களா?’ என்று விழி விரித்து ஆச்சரியப்பட்டார் கீதா தேவி. “உண்மையைச் சொல்லி விடவா.. இதற்கு காரணம் கீதா தேவிதான்’ என்று ஷிவின் டிவிஸ்ட் தர, ஜெர்க் ஆனார் கீதா. “என்னது.. கீதாவா.. என்னடா இது மெடிக்கல் மிராக்கிளா இருக்கு.. இது எப்படி சாத்தியம்?’ என்று எம்.ஆர்.ராதா மாடுலேஷனில் ரகளை செய்தார் அமுதவாணன். “அவர் சுவையாக சமைத்த சாப்பாட்டை அதிகம் உண்டதால் வந்த விளைவு” என்று மாடர்ன் மோகினி பிளேட்டை திருப்பிய விதம் சுவாரசியம்.

ஒரு கட்டத்தில் இந்தக் காமெடியின் அபத்தம் ஷிவினுக்கே உறைக்க, ‘போதும் பிக் பாஸ்’ என்று சொல்லி ஆயிஷாவிடம் சென்று ரகசியம் பேசினார். டாஸ்க் நகர்ந்த விதம் யாருக்காவது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது அவரின் வருத்தம். அமுதவாணனின் அட்டகாசமான நடிப்பிற்கு 3200 சன்மானம் கிடைத்தது.

லம்ப்பாக பணத்தை அள்ளிய மணிகண்ட்டா

கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு அடித்துப் பிடித்து சென்றாலும் 60 விநாடிகளுக்குள் ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப் போனார் அசிம். அடுத்ததாக பஸ்ஸரைத் தொட்ட ஆயிஷா, நடனமாடுவதற்காக மணியைத் தேர்வு செய்ய ‘டமாலு டுமீலு’ என்கிற ரகளையான பாடலுக்கு ஆடினார் மணி. அவர் மீது பண மழையைப் பொழிந்தார் தனலஷ்மி. ‘கையிலே பணமே இல்லை’ என்று அதுவரை பஞ்சப்பாட்டு பாடியவர்கள் கூட திடீரென உற்சாகம் பெருகி பணத்தை வாரி இறைத்தார்கள். இதனால் மணிகண்டன் சம்பாதித்தது ரூ.15000. இதுவரை சம்பாதிக்கப்பட்டதில் இதுதான் உயர்ந்த தொகை. மணிகண்டனின் நடனம் நன்றுதான். ஆனால் இத்தனை தொகையை மக்கள் வாரி வழங்கியதில், பிக் பாஸ் வீட்டு அரசியல் அம்பலமானது.

பிக் பாஸ் 6 நாள் 59; மணிகண்ட்டா
பிக் பாஸ் 6 நாள் 59; மணிகண்ட்டா

அடுத்ததாக பஸ்ஸரை தொட்ட ஜனனி, மைனாவை சவாலுக்கு அழைத்தார். ஒவ்வொரு முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து பெருமூச்சு விட்டார் தனலஷ்மி. ‘பூனை சேகர்’ ரொம்ப நாட்களாக அராத்து வானதியை லவ் பண்ணுகிறாராம். ஆனால் வானதிக்கோ, பூனையின் பிரெண்டு மீதுதான் காதல். எனவே இந்த லவ் பிரபோஸைலை அவர் மறுக்க வேண்டும். இதுதான் சூழல். வடிவேலுவின் உடல்மொழியை இயன்றவரையில் அட்டகாசமாக வெளிக்கொணர்ந்தார் மைனா. “ஏரில போற லாரி மாதிரி இருக்கே” என்று மைனாவை கிண்டல் செய்தார் ஜனனி. (அமுதவாணன் எழுதித் தந்த ஸ்கிரிப்ட்டோ?!) இதற்கு மக்கள் விழுந்து விழுந்து சிரிக்க “இதுல அப்படியொண்ணும் நகைச்சுவை இல்லையே’ என்று மைனா எரிச்சலாக சொல்லிய போது ‘கலக்கப் போவது யாரு’ அரங்கத்தின் வாசனை வந்தது. கடைசியில் மைனா சம்பாதித்த பணம் ரூ 6100.

தன்னுடைய பேகை தூக்கி தலையில் சோகமாக வைத்துக் கொண்ட மோசமணி என்கிற தனலஷ்மி, மிக நீண்ட அனத்தலை நிகழ்த்தினார். “அவங்க ஒண்ணு கூடிட்டு என்னை கட்டம் கட்டிட்டாங்க. எனக்கு வாய்ப்பு வர மாட்டேங்குது. மக்கள் தர்ற சன்மானம்தான் எனக்கு முக்கியம். இந்தப் பணம் முக்கியமில்ல. பிடிக்காதவங்கன்னா ஐம்பது நூறுதான் தராங்க. மத்தவங்களுக்கு அள்ளி விடறாங்க. பர்ஃபாமன்ஸ் பார்த்துதான் பணம் தரணும். உங்க அமுதவாணனும் இந்த க்ரூப்புல ஒரு ஆளுதான்” என்று ஜனனியிடம் தனலஷ்மி புகார் சொல்ல `அப்படில்லாம் சொல்லாத’ என்று அமுதுவிற்கு சிணுங்கலுடன் சப்போர்ட் செய்தார் ஜனனி.

பிக் பாஸ் 6 நாள் 59; ரக்ஷிதா
பிக் பாஸ் 6 நாள் 59; ரக்ஷிதா

அடுத்ததாக பஸ்ஸரைத் தொட்டவர் ரச்சிதா. ‘என்னைத் தேர்ந்தெடேன்’ என்று தனலஷ்மி பார்வையாலேயே கெஞ்சினாலும் விக்ரமனைத் தேர்ந்தெடுத்தார் ரச்சிதா. அன்னியன் கேரக்ட்டர் என்பதால் பாடல்கள் மாறி மாறி ஒலிக்க, ஆவேசமாக ஆடி முடித்தார் விக்ரமன். அவருக்கு கிடைத்த சன்மானம் ரூ.5050.

தனலஷ்மியும் ஜனனியும் பஸ்ஸர் அருகிலேயே தேவுடு காத்து நின்றார்கள். ஒலித்ததும் சட்டென்று தனலஷ்மி கை வைத்து விட்டார். தனலஷ்மியின் அனத்தல் ஓவராக இருந்ததால், அவரை ஜாலியாக பழிவாங்கலாம் என்று பிக் பாஸ் முடிவு செய்து விட்டாரோ, என்னமோ. தனியறைக்குள் அழைத்தெல்லாம் சூழலைச் சொல்லவில்லை. அப்படியே பொதுவில் சொன்னார். ‘ரொம்ப ஆர்வமா இருக்கற மோசமணியையும் அப்பப்ப சோர்ந்து விடுகிற தகுவரனையும் சேர்த்து கைவிலங்கு போடணும்’ என்பதுதான் கான்செப்ட். இவர்களின் உண்மையான குணாதிசயத்தை கேரக்டர் ஸ்கெட்ச் வழியாக மறைமுகமாக குத்திக் காட்டினார் பிக் பாஸ்.

தனலஷ்மிக்கு நுட்பமான தண்டனை தந்த பிக் பாஸ்

‘ஒரே ஒரு டான்ஸ் ஆடிடறேன் பிக் பாஸ்’ என்று தனலஷ்மி காமிராவிடம் கெஞ்சினாலும் எடுபடவில்லை. மணிகண்டன் கைவிலங்கு மாட்டும் போது ‘இது என் திறமையை அடக்கற விலங்கு மாதிரி இருக்கே’ என்று பன்ச் டயலாக் பேசினார் தனலஷ்மி. ‘நான் பாத்ரூம் போகணும்’ என்று பெரியவர் அடம்பிடிக்க `பெரிசு சும்மா இரு’ என்று தனலஷ்மி சொல்ல, இருவருக்கும் ஜாலியான இழுபறி நடந்தது. ஒரு முதியவரிடம் மரியாதையாக நடந்து கொள்ளாமல் அலப்பறை செய்த தனலஷ்மிக்கு உடனே தண்டனை கிடைத்தது. அவர் காலைத் தூக்கியதில் விலங்கு போடப்பட்டிருந்த திசையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டார். ‘ஆர்வக்கோளாறு 501’ என்று கிண்டலடித்தார் மணி.

பிக் பாஸ் 6 நாள் 59; ஜனனி, தனலக்‌ஷ்மி
பிக் பாஸ் 6 நாள் 59; ஜனனி, தனலக்‌ஷ்மி

அடுத்ததாக பஸ்ஸரைத் தேர்ந்தெடுத்தவர் ஷிவின். அதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்த ஏடிகேவிற்கு அவர் சான்ஸ் தந்தது சிறப்பு. ‘காசு. பணம். துட்டு. மணி. மணி..’ என்று சூழலுக்குப் பொருத்தமான பாடல் ஒலிக்க, நடனமாடி முடித்த போகானாந்தாவிற்கு லம்ப்பாக கிடைத்த சன்மானம் ரூ.8150.

‘நான் எல்லோருக்கு வாய்ப்பு தந்தேன். எனக்கு யாரும் தரலை’ என்று இரவு வரை கேப் விடாமல் அனத்திக் கொண்டிருந்த தனலஷ்மியிடம் “நீ எல்லாமே பண்ணிட்டே. இன்னமும் என்ன வேணும்.. ஏடிகேவிற்கு யாரும் சான்ஸ் தரலை... அதான்” என்று ஆறுதல் சொன்னார் ஷிவின்.

ராமிற்கும் தனலஷ்மிற்கும் இடையே கைவிலங்கு இழுபறி நாடகம் தொடர, பஸ்ஸர் அடிக்கப்பட்டது. ‘ஹப்பாடா.. ரிலீஸ் பண்ணிட்டாங்க’ என்று இருவரும் பெருமூச்சு விட்டிருக்கலாம். ஆனால் அதில் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ் ‘இது கைவிலங்கு கழட்டறதுக்கான பஸ்ஸர் இல்ல’ என்று அறிவித்ததும்தான் அது கண்ணாமூச்சிக்கான அழைப்பு என்று தெரிந்தது. மணியிடம் கெஞ்சிக் கூத்தாடி இரண்டாவது வாய்ப்பைப் பெற்றாலும் இந்த முறையும் போதுமான ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாமல் தோற்றுப் போனார் அசிம்.

பிக் பாஸ் 6 நாள் 59
பிக் பாஸ் 6 நாள் 59

இந்த கலைநிகழ்ச்சி டாஸ்க் ஓரளவிற்கு நன்றாக இருந்தது என்றாலும் இவர்களில் பெரும்பாலோனோர் நடிப்புத்துறையில் உள்ளவர்கள் என்கிற நோக்கில் பார்க்கும் போது சுவாரசியம் குறைவாகத்தான் இருந்தது. எனர்ஜி குறையாமல் காமெடி செய்தவர் மைனா மட்டுமே. வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும் அசத்தியவர் அமுதவாணன். இதர நேரங்களில் அவர் காணப்படவில்லை. தகுவரன் ரோலுக்கு நன்றாக செட் ஆகியிருந்தார் ராம். ஆனால் அவரிடம் முனைப்பு என்பது சுத்தமாக இல்லை. இன்னொரு பக்கம் ‘எனக்கு சான்ஸ் கிடைக்கலை’ என்கிற தனலஷ்மியின் அனத்தல். மற்றொரு பக்கம், தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு மட்டும் அதிக சன்மானம். பதில் மொய் என்னும் அரசியல். இவையெல்லாம் களையப்பட்டால்தான் இந்த டாஸ்க் அதிசுவாரசியமாக மாறும்.