‘சிறப்பாக பங்கேற்காதவர்கள்’ பிரிவில் வனிதாவிற்கும் ஜூலிக்கும் ஜோடியாக தண்டனை கிடைத்ததுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். ஜூலி தனக்கு கிடைத்த அல்டிமேட் சீசன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது ரிப்போர்ட் கார்டின் வழியாக தெரிகிறது. இந்த வார எலிமினேஷன் வரிசையில் சுஜாவும் அபிநய்யும் அபாய எல்லையில் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. என்ன நடக்கிறதென பார்ப்போம்.
எபிசோட் 13, நாள் 12-ல் நடந்தது என்ன?
போட்டியாளர்கள் லக்ஸரி பட்ஜெட் ஷாப்பிங் செய்ய ஒரு புதிய வழியைக் காட்டினார் பிக் பாஸ். பொருள்களின் பெயர்கள் அடங்கிய தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும். பந்துகளை எறிவதன் மூலம் எதன் மீது பட்டு பேப்பர் கிழிகிறதோ அந்தப் பொருள் கிடைக்கும். “இந்த வாரம் என்ன செஞ்சு கிழிச்சீங்களோ... அதற்குத்தான் பரிசு. இப்பவாவது எதைக் கிழிக்கறீங்கன்னு பார்க்கறோம்” என்பதுதான் பிக் பாஸ் கிண்டலாகச் சொல்ல விரும்பிய செய்தி போல.

“டேய் கபாலி... அங்க போ. டேய் ரத்னம் நீ இங்க வா...” என்று அடியாட்களை ஏவும் மெயின் வில்லன் போல “டேய் நிரூப்பு... சிக்கன் மேல பந்தை அடி. பாலா... நீ மட்டன் மேல பந்து அடி” என்று ஒருவர் அலட்டலாக உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தார். (யார் என்பது சொல்லாமலேயே தெரிந்திருக்கும்). ஆனால் அவர்கள் அடித்ததெல்லாம் காஃபி மேல் விழுந்தது. ஆனால் வேண்டாவெறுப்பாக வரவழைக்கப்பட்ட அபிநய்தான் சிக்கன், மட்டனை வென்று தந்தார். ஜூலியின் மூலம் மைதா கிடைத்தது. தூக்கத்திலிருந்து எழுந்து வந்த அபிராமி இஷ்டமே இல்லாமல் வீசி பந்தை வீணாக்கினார்.
தாமரைக்குத் தொடரும் தண்டனை
நாள் 12 விடிந்தது. இன்றைக்கும் நாட்டுப்புறப்பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். அனிதா இறங்கி, குத்தி, உருண்டு, புரண்டு ஆடி மூச்சு வாங்க கீழே சரிந்ததில் வீடே கலகலத்துப் போயிருக்கும். அப்படியொரு குத்தாட்டம். தாமரையை அழைத்த பிக் பாஸ், “இனி நீங்கள் ஜூலியின் வாயாக இருந்தது போதும்” என்று அறிவித்தவுடன் ‘ஹப்பாடா’ என்று தாமரை சந்தோஷப்பட்டு முடிப்பதற்குள் "இனி அபிராமியின் குரலாக இருக்க வேண்டும்" என்று சொல்லி தாமரையின் வயிற்றெரிச்சலை நன்றாகக் கொட்டிக் கொண்டார். “ஐ லவ் யூ பிக் பாஸ்” என்று உற்சாகமான அபிராமி வீடெங்கும் சுற்றி தாமரையை பின்னாலேயே அலைய வைத்தார்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளர்களில் இருவரைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு துவங்கியது. இதில் சுஜாவிற்கு நிறைய சான்றிதழ்கள் கிடைத்தன. போலீஸாக இருந்தாலும் திருடராக இருந்தாலும் தனது டியூட்டியில் சின்சியராக இருந்தாராம். இதற்கு நிகராக சுருதியின் பெயரும் நிறைய முறை சொல்லப்பட்டது. சுருதியின் பெயரை முதலில் சொன்ன தாமரை பிறகு அதை ரப்பர் வைத்து அழித்துவிட்டு ‘தங்கத் தம்பி’ ஷாரிக்கைக் குறிப்பிட்டார். நிரூப்பின் பெயரை சொல்லி ஆச்சரியப்படுத்தினார் அபிராமி. (பார்றா!). ‘பொருள்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்தால் எதிரணி திருடுவதற்கு ஒன்றும் கிடைக்காது’ என்கிற சூப்பர் ஐடியாவை சொன்னவர் அபிநய்தான் என்று அவரின் பெயரை முன்மொழிந்தார் ஜூலி. இதையே சிநேகனும் வழிமொழிந்தார். “திருடுவது எப்படி?” என்று மற்றவர்களுக்கு வழிகாட்டி திருடர்களின் முன்னோடியாக இருந்த பாலாவை வெகுவாகப் புகழ்ந்தார் அபிநய். இறுதியில் நிரூப் மற்றும் சுருதி ஆகிய இருவரும் ‘Best Performer’களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அடுத்தபடியாக, ‘வீட்டுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட’ ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் சடங்கு. இதிலும் சுஜாவின் பெயர் அதிகமுறை சொல்லப்பட்டது. “ஜூலியின் குரலாகவும் இருந்து கொண்டு வீட்டுப் பணிகளையும் சிறப்பாகச் செய்தவர் தாமரை” என்று அனிதா சொல்ல, அதையே எழுந்து வராமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே வழிமொழிந்தார் வனிதா. சிறப்பான கேப்டனாக செயல்பட்ட சிநேகனின் பெயரும் பலமாக அடிபட்டது. இறுதியில் சுஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆக... அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் தலைவர் தேர்தலுக்காக நிரூப், சுருதி, சுஜா ஆகிய மூவரும் தகுதி பெற்றார்கள்.
வனிதாவின் பெயரைத் துணிச்சலாக சொன்ன பாலா
அடுத்தது வில்லங்கமான தேர்வு. ‘டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்காத இருவரை’ தேர்ந்தெடுக்க வேண்டும். “தனது குரலாக தாமரை நியமிக்கப்பட்ட டாஸ்க்கை வைத்து ஜூலி நிறைய விஷயங்களை சுவாரசியப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதை தவறவிட்டு விட்டார்” என்று அனிதா சொல்ல, அதையே அமர்ந்தபடி வழிமொழிந்தார் வனிதா. ‘டாஸ்க்குகளில் பங்கேற்க மாட்டேன்’ என்று பல முறை அழிச்சாட்டியம் செய்த வனிதாவை துணிச்சலாக முதன் முதலில் நாமினேட் செய்தவர் பாலா. பின்னர் மற்றவர்களும் இதைப் பின்பற்றினார்கள்.
“அப்பப்ப தூங்கப் போயிட்டாங்க... அவங்களை சமாளிக்கத்தான் பாலாஜியை துணை முதல்வரா போட்டேன். ஆனா அவரும் போய் சொல்லத் தயங்கினாரு” என்கிற காரணத்தை வனிதா மீது மிகவும் பவ்யத்துடன் சொன்னார் சிநேகன். ஒரு அணியின் தலைவியாக இருந்து கொண்டு வனிதாவே அவ்வப்போது காணாமல் போய்விட்டதால் தங்களால் விளையாட்டில் சரியாகச் செயல்பட முடியவில்லை என்கிற புகாரை பலரும் முன்வைத்தார்கள். இறுதியில் வனிதாவும் ஜூலியும் இதற்குத் தேர்வானார்கள்.

ஆனால், சிறைத்தண்டனைக்குப் பதிலாக வித்தியாசமான தண்டனையைத் தந்தார் பிக் பாஸ். அடுத்த அறிவிப்பு வரும் வரை வனிதாவையும் ஜூலியையும் கைவிலங்கு இட்டு ஒன்றாக இருக்கும் படி செய்ய வேண்டுமாம். “இதுக்கு என்னை ஜெயிலுக்கே அனுப்பியிருக்கலாம்” என்று அனத்தினார் வனிதா. டாஸ்க்கில் சரியாக பங்கேற்கவில்லை என்று மக்கள் சொன்ன புகாருக்கு “எனக்குத் தோணினா மட்டும்தான் டாஸ்க் விளையாடுவேன். அவ்வளவுதான்... ஆட்டத்தைக் கலைங்க” என்று பிறகு சபையில் விளக்கம் கொடுத்தார் வனிதா. இது சபைக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸிற்கும் தரப்பட்ட எச்சரிக்கை. வனிதாக்காவா... கொக்கா..?!
ஜூலியின் வக்கீலாக மாறிய பாலா
நிறைய புகார்களைப் பெற்று தண்டனை அடைந்ததால் ஜூலி அழுது கொண்டிருக்க, அவருக்காக வனிதாவிடம் பரிந்து பேச வந்தார் பாலா. “ஜூலியின் வாயாக இருக்க வேண்டும் என்கிற டாஸ்க் தாமரைக்குத்தானே தரப்பட்டது? அப்புறம் ஏன் ஜூலி சிறப்பாகச் செயல்படவில்லை என்று சொல்கிறார்கள்? தாமரைக்குத் தரப்பட்ட டாஸ்க்கிற்கு ஜூலி எப்படிப் பொறுப்பாவார்?” என்று தன்னைத் தானே ஜூலியின் வக்கீலாக நியமித்துக் கொண்டு பாலா வாதாட “இங்க எல்லார் கண்ணீரையும் துடைச்சுட்டு உக்காந்திருக்க முடியாது. அவங்க சொன்னது ஒரு ஆலோசனை. அவ்வளவுதான். நீ போய் உன் வேலையைப் பாருடா” என்று கெத்தாகச் சொல்லி பாலாவைத் துரத்திவிட்டார் வனிதா.

என்றாலும் பிறகு அபிநய்யிடம் இதைப் பற்றி அனத்திக் கொண்டிருந்தார் பாலா. ஜூலி மீது பாலாவிற்கு ஏன் இந்த திடீர் பாசம் என்று தெரியவில்லை. 'இதர டாஸ்க்களில் எல்லாம் ஜூலி சின்சியராகத்தானே செயல்பட்டார்?' என்பது பாலாவின் ஆதங்கம். பாலாவின் கேள்வி ஒருவகையில் நியாயமானதுதான். ஆனால், அது தாமரைக்கு தரப்பட்ட டாஸ்க்காக இருந்தாலும் கூட, ஜூலியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விளையாட்டை அவரும் இணைந்து சுவாரசியமாக்கியிருக்கலாம். அதை விட்டு விட்டு தனிமையில் போய் அமர்வது, சின்ன புகாருக்கு கூட கண்கலங்குவது போன்ற விஷயங்கள் மற்றவரை எரிச்சல்படுத்தவே செய்யும். ஜூலி மீது அடுக்கப்படும் புகார்கள், ஒரு பக்கம் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் அதற்கான வாய்ப்பை ஜூலியும்தான் தருகிறார். கடந்த சீசனில் நமக்குத் தெரிந்த ஜூலி, இப்போதும் அதேபோல்தான் இருக்கிறார். பெரிதாக மாற்றம் எதுவுமில்லை.
தனக்கு எதிராக சொல்லப்பட்ட புகார்களுக்கு சபையிலேயே ஜூலி விளக்கம் சொல்லியிருக்கலாம். அல்லது யார் சொன்னார்களோ, அவர்களிடம் நேராகச் சென்று விளக்கம் அளித்திருக்கலாம். அவ்வளவுதான் விஷயம். இதற்காக மூசுமூசுவென்று அழுவதில் என்ன உபயோகம் இருக்கிறது?!
“என்ன... கையைப் பிடிச்சு இழுத்தியா?” – தாமரையின் அழிச்சாட்டியம்
மக்கள் ஓய்வாக அமர்ந்திருக்க, தாமரைக்கும் ஜூலிக்கும் இடையே ரணகளமாக ஓர் உரையாடல் நடைபெற்றது. ‘விடாக்கண்டன், கொடாக்கண்டன்’ கதையாக இருவரும் பரஸ்பரம் நகத்தால் பிறாண்டிக் கொண்டார்கள். அதிலும் தாமரை இருக்கிறாரே... யாரையாவது அவருக்குப் பிடிக்கவில்லை என்றால், ‘என்ன... கையைப் பிடிச்சு இழுத்தியா” என்கிற வடிவேலு போல சுற்றிச் சுற்றி கேள்விகளைக் கேட்டு தலையைச் சுற்ற வைத்து விடுவார். ஜூலிக்கு நிகழ்ந்ததும் அதுவே. ‘ஸ்ட்ராட்டஜி', ‘கோத்து விடுதல்’ போன்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டு தாமரை ஆடிய வார்த்தைச் சிலம்பாட்டத்தில் நமக்கே மயக்கம் வந்தது. இதற்கு ஈடு கொடுத்து சமாளித்த ஜூலி, இறுதியில் களைத்துவிட்டார். ஒரு கட்டத்தில் “லூசு... நீ போ” என்று தாமரை வசைய ஆரம்பிக்க “அப்படில்லாம் சொன்னா அவ்வளவுதான்” என்று ஜூலி கோபப்பட, சுற்றி இருந்தவர்கள் இதை ஒரு காமெடி ஷோவாக கண்டு ரசித்தார்கள்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்கிற கேள்விக்கு முன்னால் இசை ஒலிக்க, "யாராவது வைல்ட் கார்ட் வர்றாங்களோ?” என்று ஆவலுடன் கேட்டார் நிரூப். தொலைக்காட்சிப் பெட்டியில் உணவுகளின் புகைப்படங்களைக் காட்டி மக்களிடம் காசு பிடுங்கும் திருவிழாவை ஆரம்பித்தார் பிக் பாஸ். பெரும்பாலான பொருள்களுக்கு மக்கள் மயங்கவில்லை என்றாலும் 3000 செலவு செய்து காஃபி பவுடரையும் 1000 செலவு செய்து லார்ஜ் பிட்ஸாவையும் வாங்கினார்கள்.
அல்டிமேட் பிக் பாஸ் ‘வனிதாக்கா’
பிக் பாஸ் அறிவித்த தண்டனையின்படி வனிதாவையும் ஜூலியும் கைவிலங்கு போட்டு ஒன்றாக இணைத்தார்கள். “ஆத்தா... உன் பிள்ளையை எப்படியாவது காப்பாத்திடு” என்பது ஜூலியின் மைண்ட் வாய்ஸாக இருக்கும். இருக்கிற ஆட்களையெல்லாம் விட்டு விட்டு “யாராவது சுஜாவைக் கூப்பிடுங்களேன்” என்று வனிதா உத்தரவிட “சுஜ்ஜூம்மா” என்று ஆசையாகக் கூப்பிட்டார் தாமரை. சுஜா வந்ததும் “நீ போய் என்னோட thug life பொருள்களையெல்லாம் எடுத்துட்டு வாயேன்” என்று உத்தரவிட்டு விட்டு, காஃபித்தூள் வந்ததும் “சுஜா... எனக்கு காஃபி போட்டு கொடேன்” என்று அவரையே தொடர்ந்து வேலை வாங்கினார் வனிதா.

அது பிக் பாஸ் வீடாகவே இருந்தாலும் கூட உண்மையான பிக் பாஸாக கெத்தாக உலவுபவர் வனிதாக்காதான். அவருடன் கைவிலங்கு போடப்பட்ட ஜூலியைப் போல, நாமும் இந்த அல்டிமேட் சீசனை கட்டிக் கொண்டு எத்தனை நாளைக்கு அழுவது என்பது தெரியவில்லை. அந்த அளவிற்கு சுவாரசியமின்மையாக போய்க் கொண்டிருக்கிறது. ஒன்றரை மணி நேர எபிசோடிற்கே இந்தக் கதி!