Published:Updated:

BB Ultimate 15: "என்னங்க கேம் இது... முடியல தலைவரே!" சொல்ல வேண்டியது சிநேகன் மட்டுமல்ல, நாமும்தான்!

BB Ultimate 15

“நிகழ்ச்சியின் அசுவாரஸ்யத்திற்குக் காரணமாக இருப்பதே ஒருவகையான விதிமீறல்தான். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மக்களை உதாசீனப்படுத்தாதீர்கள்." - கமல் காட்டமான அறிவுரை

Published:Updated:

BB Ultimate 15: "என்னங்க கேம் இது... முடியல தலைவரே!" சொல்ல வேண்டியது சிநேகன் மட்டுமல்ல, நாமும்தான்!

“நிகழ்ச்சியின் அசுவாரஸ்யத்திற்குக் காரணமாக இருப்பதே ஒருவகையான விதிமீறல்தான். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மக்களை உதாசீனப்படுத்தாதீர்கள்." - கமல் காட்டமான அறிவுரை

BB Ultimate 15

ஞாயிற்றுக்கிழமை எபிசோடை கமல் சுவாரசியப்படுத்துவாரா என்கிற கேள்வியோடு நேற்றைய கட்டுரையை முடித்திருந்தேன். படுத்தினார் என்பதே உண்மை. அதாவது ‘சுவாரசியப் படுத்தினார்’. வனிதா முதற்கொண்டு அனைவரையும் தனது பிரத்யேக பாணியில் கேள்விக் கணைகளை வீசி அவர் வறுத்தெடுத்தது அருமை. கிரேஸி மோகன் வசனங்களைப் போலவே கமலின் பேச்சின் இடையேயும் அருமையான அங்கதமும் சிலேடையும் இயல்பாக பெருகி வழிகின்றன. கவனிக்காமல் விட்டுப் போன அற்புதங்களை அடுத்த முறையில்தான் கவனிக்க முடிகிறது.

இரண்டாவது வார எலிமினேஷன் சுஜா. பிக் பாஸ் வீட்டில் வனிதாவை எதிர்த்துப் பேசுவதற்காக பலரும் பயந்த நிலையில் முதன் முதலில் ஆட்சேபக் குரலை அழுத்தமாக எடுத்து வைத்தவர் சுஜா. ஆனால் அதே நாளில் அவர் எலிமினேட் ஆனது துரதிர்ஷ்டம். சுஜாவை விடவும் சுமாரான போட்டியாளர்கள் இன்னமும் அங்கு நீடிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஷாரிக்.
BB Ultimate 15
BB Ultimate 15

நாள் 14-ல் நடந்தது என்ன?

“திருடன் போலீஸ் விளையாட்டுல்லாம் நாம சின்னப்பிள்ளையிலேயே ஆடின ஆட்டம். பெரியவங்களாகியும் இதை இவுங்க சரியா ஆடமாட்டேன்றாங்களே... பாலுக்கும் மோருக்கும் வித்தியாசம் தெரிஞ்சிருந்தும் ரெண்டையும் கலந்து லஸ்ஸியாக்கியாட்டாங்க. வாங்க என்னன்னு விசாரிப்போம்” என்கிற அங்கலாய்ப்போடு அகம் டிவிக்குள் நுழைந்தார் கமல்.

“இந்த வாரம் எப்படியிருந்தது?” என்கிற முதல் சம்பிரதாயக் கேள்வியோடு வார்ம்-அப் செய்ய ஆரம்பித்தார் கமல். ‘மசாலாப்படம் மாதிரி இருந்தது’, ‘நவரசங்களும் இருந்தன’, என்கிற மாதிரியான பதில்கள் அடுத்தடுத்து வர ‘கடுப்பா இருந்தது’ என்று ஜூலி சொன்னது உண்மை. பாவம், அந்தளவிற்கான சிரமங்கள் அவருக்கு இருந்தன. (நமக்கும் கூட). “மிதந்துட்டே இருந்தேன். ரூம் பழகிடுச்சு” என்று பரவசமாகச் சொன்ன வனிதாவிடம் “ஆனா ரூல்ஸ் இன்னமும் பழகலை போலயே” என்று முதல் குண்டூசியை பக்குவமாக இறக்கினார் கமல். “பெரும் போராட்டமா இருந்தது தலைவரே... இப்படியொரு போராட்டத்தை நம்ம அரசியல் வாழ்க்கைல கூட பார்த்திருக்க மாட்டோம்” என்பது மாதிரி நொந்து போய் சொன்னார் சிநேகன். (கவிஞர் என்னதான் மநீம–யில் இன்னமும் மிஞ்சி இருப்பவர் என்றாலும் அவர் பிக் பாஸ் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ‘தலைவரே... தலைவரே...’ என்று கமலை அழைப்பது ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. இப்போது அவரும் ஒரு போட்டியாளர் இல்லையோ?!).

“பார்வையாளர்களை நெனச்சா எனக்கே பரிதாபமா இருந்தது”

அடுத்ததாக திருடன் – போலீஸ் டாஸ்க் பற்றிய விசாரணைக்கு நகர்ந்த கமல், “ரூல்ஸ் புரியலையா, இல்லைன்னா அதெல்லாம் வேணாம்னு நெனச்சிட்டீங்களா?” என்று குரலில் சற்று உஷ்ணத்தைக் கூட்டினார். “திருடன்-ன்னா என்ன... போலீஸ்-ன்னா என்ன? சொல்லுங்க பிள்ளைகளே” என்று கமல் கேட்க “தெரியாத மாதிரி பொருளை எடுக்கறது” என்பதை விதம் விதமான வார்த்தைகளில் சொன்னார்கள். “எல்லாம் தெரிஞ்சும் டாஸ்க்கை ஏன் அப்படி சொதப்பினீங்க? பார்வையாளர்களை நெனச்சா எனக்கே பரிதாபமா இருந்தது” என்று கமல் சொன்னது உண்மை.

இந்த டாஸ்க்கை முதலில் சொதப்ப ஆரம்பித்தவர் பாலாதான். திருட்டை ‘வழிப்பறி’ பாணியில் அவர் அடாவடியாகச் செய்ய, அதையே மற்றவர்களும் பின்பற்ற ஆரம்பித்தார்கள். அடுத்த முறை திருடர்களாக ஆனவர்களும் “நீங்க மட்டும் பண்ணலையா?” என்று கேள்வி கேட்டு இதே அழிச்சாட்டியத்தை ரீப்பீட் செய்தார்கள். ஆக... சண்டை, வாக்குவாதம், குழப்பம் என்று டாஸ்க்கின் ஒட்டுமொத்த சுவாரஸ்யமும் போய்விட்டது. இதை இவர்களே சுவாரஸ்யமாக்கியிருக்க முடியும் என்பதற்கான உதாரணக்காட்சிகளும் இருந்தன. சிறையில் அடைக்கப்பட்ட பாலாஜி, தான் திருடிய போலீஸ் லத்தியை சிநேகனின் காலில் ஒளித்து வைத்ததும், சுஜா சோதனை செய்யும் போது ஏறத்தாழ கண்டுபிடிக்கும் எல்லை வரை சென்றதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

BB Ultimate 15
BB Ultimate 15

“கிரிக்கெட்டை கால்ல ஆடாதீங்க”

“ஒரு விஷயத்தை நல்லா செஞ்சிட்டு, புரிஞ்சுக்கிட்ட பிறகு அதில் மாற்றம் செய்யலாம். கிரிக்கெட்டை திடீர்னு கால்ல ஆடினா நல்லாவா இருக்கும்?” என்று ஆரம்பித்து கமல் பொழிப்புரை நிகழ்த்த, “எங்க மேலதான் தப்பு” என்று தலைவரிடம் சரண் அடைந்தார் சிநேகன். “எங்க அணில பெண்கள் அதிகமா இருந்தாங்க...” என்று வனிதா ஆரம்பிக்க “அணி பிரிச்சது யாரு?” என்று கமல் மடக்க “ஆம். அணித் தேர்வில் தப்பு பண்ணிட்டேன்” என்று வனிதா சரண் அடைந்தார். “எங்க டீம்ல இருந்த ஷாரிக்கே கறுப்பு ஆடா மாறிட்டான். எதிர் டீமும் ரொம்ப அழிச்சாட்டியம் பண்ணாங்க...” என்று விளக்கம் அளித்த வனிதாவிடம் “காஃபிக்காக போராடிய நீங்கள், இதற்காக போராட்டம் நடத்தியிருக்கலாமே?” என்று கமல் கேட்க... “போராடினேன் சார்” என்று மழுப்பினார் வனிதா.

“பிடிக்காத டாஸ்க்கை நான் செய்ய மாட்டேன்” என்று பிடிவாதம் பிடிக்கிறார் வனிதா. அவர் ஜாலியாக ஒதுங்கிவிடுவதால் அவரது அணியும் அவரோடு சேர்ந்து பாதிக்கப்படுகிறது என்பதை உணர மறுக்கிறார். ஓர் அமைப்பில் உள்ள தவறுகளை எதிர்த்து வெளியேறுவதை விடவும் அமைப்பிற்கு உள்ளேயே இருந்து கொண்டு அவற்றைத் திருத்த முயல்வது ஒருவகையான சிறந்த போராட்டம். டாஸ்க்கில் பங்கேற்றுக் கொண்டே அவற்றின் பிழைகளை களைய முயல்வதுதான் சிறந்த அணித்தலைமை. இங்கே ஒரு சிறிய பிளாஷ்பேக். வனிதா முன்னர் கலந்து கொண்ட சீசனில், ஏதோவொரு விஷயத்தைச் செய்ய சாக்ஷி மறுக்க, “அப்படில்லாம் சொல்ல முடியாது. அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டுத்தான் இங்க வந்திருக்கோம்” என்று சாக்ஷியிடம் கோபமாகச் சொன்னவர் இதே வனிதாதான்.

ஒளிபரப்பானது குறும்படம் அல்ல... குடும்பப் படம்!

“வனிதா நல்ல கேப்டனா இருந்தாரா?” என்று மற்றவர்களிடம் கேட்டார் கமல். “அப்பப்ப போய் படுத்துக்கிட்டாங்க... இந்த அபிநய் எந்தப் பொருளையும் திருட விடாம மூட்டைக் கட்டி உள்ளே வெச்சிக்கிட்டாரு” என்று தாமரை புகார் சொல்ல “பொருள்களை அப்படி வீட்டுக்குள்ள பத்திரமா வைக்கறதுதானே நம்ம வழக்கம்?” என்று நமட்டுச் சிரிப்போடு கமல் கேட்க சபை சிரித்தது.

“நீங்க விளையாடிய லட்சணத்தை ‘குறும்படத்துல’ பார்க்கலாம். அது குடும்பப்படமா மாறிடுச்சு. அந்த அளவிற்கு எல்லோருமே தப்பு பண்ணியிருக்கீங்க” என்று சொன்ன கமல் வீடியோவை ஒளிபரப்பினார். சிநேகன் விதிகளை வாசிக்க வாசிக்க, அதற்கு நேர் எதிராக போட்டியாளர்கள் செயல்பட்ட காட்சிகள் நன்றாகத் தொகுக்கப்பட்டிருந்தன. “எல்லாத் தப்பையும் நீங்க செஞ்சுட்டு ‘பிக் பாஸ்... பிக் பாஸ்..ன்னு அவரைப் போட்டு நச்சரிச்சீங்க” என்று கமல் தனது விசாரணையைத் துவங்க “ஏதாவது சுவாரஸ்யமா செஞ்சாதான் சார் கேம் டேக் ஆஃப் ஆகும்” என்றார் பாலா. “நான் யார் பக்கமும் சாயலை. மாத்திரை போட்டு கட்டில்ல சாய்ஞ்சிட்டேன். அப்பக் கூட போலீஸ்காரன்னு பார்க்காம வேட்டியை உருவிட்டாங்க” என்று பரிதாபமாகச் சொல்லி சபையை கலகலக்க வைத்தார் பாலாஜி.

BB Ultimate 15
BB Ultimate 15

“இருங்க… அடகுக்கடைக்காரரை சாட்சிக்குக் கூப்பிடறேன். ஒருக்கால் வந்தாலும் வருவாரு” என்று கமல் தீனாவைக் கூப்பிட “அய்யய்யோ... அவனையா கூப்பிடறீங்க… கலாய்ச்சே கொன்றுவானே?” என்று போட்டியாளர்கள் ஜாலியாகப் பதறினார்கள். “சார்... நான் உங்க பெரிய ஃபேன் சார்” என்று போனில் வந்த தீனா ஆரம்பிக்க “தெரியும். இப்படித்தான் ஆரம்பிப்பீங்க” என்று உஷாரானார் கமல். “இல்லை சார்… உண்மையாகவே ஃபேன். உங்க நடிப்பைப் பார்த்துத்தான் கொஞ்சம் கத்துக்கிட்டேன்” என்று கமலிடம் குறும்பு செய்யாமல் பம்மிய தீனா, இதர போட்டியாளர்களை வழக்கம் போல் நன்றாகக் கலாய்த்தார். போட்டியாளர்களே இதை ரசித்து சிரித்தார்கள். தன்னைப் பற்றிய கமென்ட்டை மென்று முழுங்கினார் வனிதா. ஆனால், சுருதி பற்றிய தீனாவின் கமென்ட் ரசிக்கத்தக்கதாக இல்லை.

“தாமரை அக்கா. நீங்க குரலாகவும் ஒலிக்கிறீர்கள்... உங்க குரலால வீட்டையும் ஒளிக்கிறீர்கள்” என்று தீனா அடித்த கமெண்ட்டில் நல்ல சிலேடை இருந்தது. “என்னா... இப்படிச் சொல்லிட்டான். அம்பூட்டு சத்தமாவா பேசறேன்?” என்று பிறகு பாலாவிடம் சிணுங்கினார் தாமரை.

“முடியல தலைவரே... ரிப்பீட்டு”

ஓர் இடைவேளைக்குப் பின்னர் திரும்பிய கமல், சிநேகனின் கேப்டன்சி பற்றிய விசாரணையை ஆரம்பிக்க “இவங்களை மேய்க்க முடியலை... தூங்கறாங்க, சாப்பிடறாங்க, சண்டை போடறாங்க. ரிப்பீட்டு... முடியல தலைவரே...” என்று நொந்து போய் சிநேகன் சொல்ல “சரி… நீங்க போய் வாக்குமூல அறைல உக்காருங்க. இவுங்க வாக்குமூலத்தை கேட்டுட்டு வரேன்” என்று அனுப்பி வைத்தார்.

தலைவர் பொறுப்பை சுஜாவிடம் கை மாற்றிவிட்டு சிநேகன் கலங்கி பேசிய போது கூடவே கலங்கிய அனைவரும் இப்போதோ “ஆளு ஒண்ணும் சரியில்லைங்க... தண்டமா ஒரு தலைவரு” என்கிற மாதிரியே பார்டரில் மார்க் போட்டார்கள். “என்னோட குரு. ஆசிர்வாதம் வேணும்” என்று முன்னர் கலங்கிய சுஜா கூட இப்போது 5 மார்க் மட்டுமே போட்டார். வனிதாவை சிநேகன் சரியாகக் கையாளவில்லை; பயப்பட்டார் என்பது சுஜாவின் குற்றச்சாட்டு. விதிவிலக்காக பாலாஜியும் தாமரையும் மட்டுமே விசுவாசத்துடன் அதிகபட்சமாக 9 மதிப்பெண்கள் தந்தார்கள்.

BB Ultimate 15
BB Ultimate 15

சிநேகனின் ரிப்போர்ட் கார்ட்

சிநேகனின் மீது சொல்லப்பட்ட புகார்களையும், அவரின் நிறை, குறைகளையும் சுருக்கிப் பார்க்கலாம். தலைவர் பதவி சுரேஷ் தந்துவிட்டுப் போனது; தானாக சம்பாதித்தில்லை என்கிற தாழ்வுணர்ச்சி சிநேகனுக்குள் இருந்திருக்கிறது. யாராவது இதை கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற தயக்கமும் அவருக்குள் இருந்திருக்கிறது. இது அநாவசியமானது. தான் சம்பாதித்ததை விடவும், அடுத்தவர் தந்துவிட்டுப் போன பொறுப்பைத்தான் இன்னமும் கவனமாக கையாள வேண்டும். “ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு. உன்கிட்ட ஃபினிஷிங் சரியில்லப்பா” என்கிற வசனம் போல, துறை சார்ந்து பிரித்து பதவி தந்ததெல்லாம் சரி. அதை அவர்கள் சரியாக நிர்வகிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சிநேகன் தவறிவிட்டார். இதை அவரே பின்னர் ஒப்புக் கொண்டார்.

போட்டியாளர்களிடம் பல குறைகள் தென்பட்டாலும் மார்க் வழங்கும் டாஸ்க்கில் அனைவருக்கும் தாராளமாக மதிப்பெண்களை அள்ளி வழங்கியது சிநேகனின் தவறு. முதல் வாரத்திலேயே ஷாரிக் இதைச் செய்து கமலால் அறிவுறுத்தப்பட்டார் என்பதை சிநேகன் நினைவில் வைத்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். “நல்லாப் பண்ணுவாங்க’ன்ற ஊக்கத்துல மார்க் நல்லாப் போட்டேன்” என்று சிநேகன் சொல்வது முறையல்ல. கறாராக மதிப்பெண்களை வழங்கினாலும் அதற்கான விளக்கத்தை தரும்போது கனிவாகவும் அழுத்தமாகவும் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். (வனிதா போன்ற அடாவடிக்காரர்களைத் தவிர).

‘மற்றவர்களின் மனம் காயப்படாமல் பேச வேண்டும்’ என்கிற அடிப்படையான பண்பு சிநேகனிடம் இருக்கிறது. ஹவுஸ்மேட்களின் தேவைகளை பிக் பாஸிடம் கேட்டுப் பெற்றுத் தந்திருக்கிறார். வனிதா போன்றவர்களிடம் மோதி தன் மரியாதையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிற உணர்வு, தயக்கமாகவும் அச்சமாகவும் அவருக்குள் உறைந்திருக்கிறது. “நான் யாருக்கும் பயப்படலை. மரியாதை வெச்சிருக்கேன்” என்று அவர் விளக்கம் அளிப்பது டெட்டால் போட்ட வார்த்தை. “வனிதாவிடம் சில விஷயங்களை நேரடியாக சொல்ல அச்சமாக இருந்ததால்தான், பாலாஜியை துணை முதல்வராக நியமித்தேன்” என்று முன்னர் சொன்னவரே சிநேகன்தான். சிநேகனின் நல்லியல்புகளை மற்றவர்கள் ‘Taken for granted’ –ஆக எடுத்துக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. ஜூலி, சுருதி போன்ற பலவீனமான போட்டியாளர்களிடம் மட்டும் சிநேகன் கோபத்தைக் காட்டியிருக்கலாம்.

BB Ultimate 15
BB Ultimate 15

“சிநேகனுக்கு பயம் கிடையாது”

வாக்குமூல அறையிலிருந்து திரும்பிய சிநேகன் “முடியல தலைவரே” என்று கமலிடம் முழு சரணாகதி அடைய “எனக்குத் தெரிஞ்ச சிநேகனுக்கு பயம் கிடையாது. மரியாதை உண்டு” என்று சிநேகனின் சார்பில் மீசையை முறுக்கினார் கமல். “துறை பிரிப்பதோடு அதை கண்காணிக்கணும். மக்களும் இணைந்து அதை கண்காணிக்கணும்” என்று அரசியல் வாசனையோடு உபதேசம் சொல்லி கலங்கி நின்ற சிநேகனை ஆற்றுப்படுத்தினார் கமல். இதற்குப் பிறகும் கூட சிநேகனின் முகம் இறுக்கமாகவே இருந்தது. “அடப்பாவிங்களா... என் முன்னாடி கண்ணு கலங்கி பாசம் காண்பிச்சிட்டு இங்க வந்து ஓட்டை மாத்தி குத்திட்டாங்களே?” என்பது சிநேகனின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். “புரட்சி செய்யுங்க... ஆனா அது அசட்டுத்தனமான புரட்சியாக இருக்கக்கூடாது” என்று கமல் மறைமுகமாக இடித்துரைத்தது வனிதாவைப் பற்றியதுதான் என்றாலும் கேமரா அந்தச் சமயத்தில் ஜூலியையும் இணைத்துக் காட்டியது சுவாரஸ்யமான குறும்பு. (ஜல்லிக்கட்டுப் போராட்டக் காட்சியெல்லாம் நினைவிற்கு வந்தன).

“நிகழ்ச்சியின் அசுவாரஸ்யத்திற்குக் காரணமாக இருப்பதே ஒருவகையான விதிமீறல்தான். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும் மக்களை உதாசீனப்படுத்தாதீர்கள். எனில் மக்களுடனான தொடர்பை நீங்கள் அறுத்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். இங்கு இருப்பவர்கள் எல்லாம் கலைஞர்கள். நீங்கள்தான் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க வேண்டும்” என்றெல்லாம் காட்டமாக அறிவுரை சொன்னார் கமல்.

வனிதா – சுஜா – ரணகள மோதல்

ஓர் இடைவேளையில் கமலின் தலை மறைந்ததும் வனிதாவிற்கும் சுஜாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. “அணியின் தோல்விக்கு வனிதா டாஸ்க்கை சரியாக விளையாடாததுதான் காரணம்” என்று கமலின் எதிரேயே கடுமையான தொனியில் புகார் சொன்னார் சுஜா. இது வனிதாவின் ஈகோவை உசுப்பி விட்டு விட்டது. “முன்ன பேசும் போது நல்லா பேசறது. கமல் சார் முன்னாடி கைத்தட்டல் வாங்கறதுக்காக வேற மாதிரி பேசறது. என்னதிது?” என்பதை தன்னுடைய முரட்டுத்தனமான பாணியில் வனிதா கேட்க, சுஜாவும் ஆவேசமாக இதை எதிர்கொண்டார். “சிநேகன் பயந்துட்டாரு” என்று சுஜா சொல்ல, “அவர் என் பிடிவாதத்தை ரசிச்சேன்ன்னு சொன்னவரு” என்று வனிதா கவுன்ட்டர் கொடுக்க ரணகளமாக இருந்தது. “உங்களுக்கு டாஸ்க் பிடிக்கலைன்னாலும் வந்து விளையாடியிருக்கணும்” என்று சரியான பாயின்ட்டை வனிதாவிடம் துணிச்சலுடன் சொன்னார் சுருதி.

BB Ultimate 15
BB Ultimate 15

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், “ஒரு விளையாட்டு ஆடப் போறோம். ரூல்ஸ் நல்லாச் சொல்றேன். கேட்டுக்கங்க... மறுபடி மறுபடி சொல்ல மாட்டேன். இங்க போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒரு பகுதியை நீங்கள் தனியாக எடுக்கலாம். அது சம்பந்தப்பட்ட போட்டியாளர் தன்னிடமிருந்து நீக்க வேண்டிய கெட்ட குணாதிசயமா இருக்கலாம்… அல்லது நீங்க எடுத்துக்க வேண்டிய நல்ல குணாதிசயமாவும் இருக்கலாம்” என்று ஆரம்பித்தார். “இதுக்கு மேல விளக்கிச் சொன்னா எனக்கே புரிஞ்சுடும்” என்று இறுதியில் கமல் அடித்த பன்ச் சூப்பர்.

BB Ultimate 15
BB Ultimate 15

“ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்பவும் ஆழமா யோசிச்சு குழப்பிக்காம இருந்தா நல்லாயிருக்கும்” என்று நிரூப்பை குறிப்பிட்டார் அபிராமி. “சிநேகனிடமிருந்து பொறுமையை எடுத்துக்க விரும்புகிறேன்” என்றார் ஷாரிக். இதையே பின்னர் வந்த பாலாவும் நிரூப்பும் குறிப்பிட்டார்கள். “பார்த்து அவரோட நிறைய பொறுமையை நீங்க அள்ளிடாதீங்க” என்று கிண்டலடித்தார் கமல். “பாலாவோட விளையாட்டு வெறியை எடுத்துக்க விரும்பறேன்” என்று பாலாஜி சொல்ல, “உடம்பு தாங்குமா... சைக்கிளை விட்டுட்டு ஹெலிகாப்டர்ல ஏற பார்க்கறீங்களே?” என்று நக்கலடித்தார் கமல். “எல்லாத்தையும் பாசிட்டிவ்வா பார்ப்பதை” தாமரையிடமிருந்து எடுத்துக் கொள்ள விரும்புவதாக சிநேகன் தெரிவிக்க “ஜூலியிடமிருந்து குழப்பத்தை வெளியே எடுக்க விரும்புகிறேன். மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்கா” என்பது போல் சொன்னார் வனிதா. “அவங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னா... அதுக்காக வீடே அவஸ்தைப்படுது” என்று வனிதாவைக் குறித்து நிரூப் சொன்னது அருமையான அப்ஷர்வேஷன். “அவங்க பேசறதை மட்டும்தான் கேக்கணும்னு நெனக்கறாங்க” என்று வனிதாவைப் பற்றி சுஜாவும் புகார் சொன்னார்.

“ஒழுங்கா விளையாடலைன்னா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க”

இந்த டாஸ்க் முடிந்த பிறகு, சுமாராக விளையாடும் போட்டியாளர்களை எச்சரித்தார் கமல் “செயல்ல காட்டுவீங்களா?” என்று பாலாஜி மற்றும் ஷாரிக்கிடம் நேரடியாக கேட்டார். “மக்கள் காப்பாத்திடறாங்கன்னு நெனக்காதீங்க. பாத்திரம் துலக்கும் போது பெரிய பாத்திரங்களை முதல்ல முடிச்சிட்டு சின்ன பாத்திரங்களை அப்புறம் துலக்கற மாதிரி அவங்க ஒரு பிளான் வெச்சிருக்கலாம்” என்று கமல் சொன்ன உதாரணம் அருமை.
BB Ultimate 15
BB Ultimate 15

“போன சீசன்ல உங்களிடம் இருந்த குறையை மாத்திக்கிட்டீங்க. ரைட்டு. அதுக்காக மத்த விஷயங்களை ஆஃப் பண்ணிட்டீங்களே... பார்த்து விளையாடுங்க” என்று நிரூப்பை எச்சரித்த கமல், அடுத்ததாக தாமரையை அழைக்க, என்ன ஏது என்று தெரியாமலேயே ஏதோ சொல்ல விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் தாமரை. “மூச். வாய் பேசக்கூடாது... நீங்க SAVED” என்பதை பாவனையான கோபத்துடன் சொன்ன கமல் “இப்படிப் பேசியே நல்ல விஷயங்களைக் கூட கெடுத்துக்கறீங்க” என்று சிரிக்க... தாமரைக்கு ஒரே வெட்கம். 'பூவரசம்பூ பூத்தாச்சு... பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ பாடல் ராதிகா மாதிரி வீடெங்கும் "லாலாலா…” என்று சுற்றி வந்து மகிழ்ந்தார் தாமரை. (விட்டா அடுத்த சீசன்லயும் வந்துடுவாங்க போல!).

“சிநேகன். கன்ஃபெஷன் ரூம்ல நீங்க கலங்கினதை பார்த்தேன். வெளிலயும் வந்து பேசினீங்க. பதிலுக்கு அவங்களும் கண்ணீர் விட்டாங்க. கவிஞருக்கு எல்லாச் சுவையும் தேவை. அதில் முக்கியமானது நகைச்சுவை. இறுக்கமா இருக்காதீங்க” என்று கமல் அறிவுறுத்த, சாக்லேட் காட்டப்பட்ட குழந்தை மாதிரி வலுக்கட்டாயமாக புன்னகைத்தார் சிநேகன்.

முதல் தகவல் அறிக்கைகள்

“ஓகே... சில FIR-லாம் வந்திருக்கு. உங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள், புகார்கள் இதில் இருக்கு. பெயர் இல்லாமல் இருக்கும். யார் அதை எழுதினதுன்னு சபைல சொல்லத் தேவையில்லை. ஆனா புகார் யாரைப் பற்றியதுன்னு நீங்க யூகிச்சு சொல்லணும்” என்று அடுத்த விளையாட்டை தூசி தட்டினார் கமல். ஆனால், இது தேவையில்லாத ஆணி. “நீங்க ஊதவே வேண்டாம்” என்கிற நாகேஷ் காமெடி மாதிரி, ஆரம்ப வாக்கியங்களைப் படித்த போதே யாரைப் பற்றியது, யார் எழுதியது என்பதையெல்லாம் நம்மால் தெளிவாக யூகிக்க முடிந்தது.

BB Ultimate 15
BB Ultimate 15

அனிதாவிடம் பாலா அத்தனை விளக்கம் சொல்லியும் அவரைப் பற்றி FIR புகாரில் எழுதி வைத்திருந்தார் அனிதா. “பெண் என்கிற விஷயம் என்றால் பாலா இளக்காரமாக பார்க்கிறார்” என்பது அதன் சாராம்சம். “நான் பெண்களை தாயா மதிக்கிறவன்” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் பாலா. இந்த விவாதத்தில் “கும்தலக்கடி கும்மாவா... பொண்ணுன்னா சும்மாவா?” என்று அனிதா சொன்னதை “மிக ஆழமான, அர்த்தமுள்ள கவிதை” என்று கிண்டல் செய்தார் கமல்.

“காணவில்லைன்னு உங்களைப் பத்தி சொன்னாங்க... ஆனா மக்களுக்கு ஏதோ கண்ல பட்டிருக்கு” என்று சொல்லி அபிநய் காப்பாற்றப்பட்ட செய்தியை கமல் சொல்ல, “இனிமேத்தான் அபிநய்யோட தரமான சம்பவங்களை பார்க்கப் போறாங்க” என்று அபிநய் சபதம் எடுத்தார். (க்ம்க்கும்.. போன சீசன்லயும் இப்படித்தான் சொல்லி எலிமினேட் ஆனீங்க பாஸ்!).

அயோத்திதாசர் சிந்தனைகள்
அயோத்திதாசர் சிந்தனைகள்
அடுத்தது ஒரு முக்கியமான பகுதி. ‘புத்தகப் பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்த கமல், இந்த வாரம் பரிந்துரைத்த நூல் ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் முக்கியமானவரான அயோத்தி தாசர் திராவிட அரசியலின் முன்னோடியுமாவார். ‘ஒரு பைசாத் தமிழன்’ என்கிற வார இதழின் ஆசிரியர்.

“பழைய ஜூலியைக் காணோம்... ஹார்ட் கொடுக்கற விளையாட்டுல நீங்கதான் பின்தங்கியிருந்தீங்க போல. முன்னாடி வாங்க. அதனாலதான் மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க” என்று ஜூலி காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார் கமல். “விமர்சனங்களைத் தாண்டி வந்தவள்தான் இந்த ஜூலி... இனிமே பாருங்க சார்...” என்று உறுதியளித்தார் ஜூலி.

சுஜா எலிமினேஷன்

ஆக... எவிக்ஷன் வரிசையில் எஞ்சியிருந்தவர்கள் சுஜா மற்றும் பாலாஜி. “சுஜாவைப் பார்க்க விரும்பறேன்னு வனிதா சொன்னாங்க. அதன்படிதான் நடந்துக்கிட்டேன்” என்று சுஜா சொல்ல, “டாஸ்க்லாம் என்னால சரியா பங்கேற்க முடியலை” என்று சரணாகதி அடைந்த பாலாஜியின் முகத்தில் ‘எவிக்ஷன் ஆகப் போகிற’ களை தெரிந்தது. ஆனால் சுஜாவின் பெயரை எவிக்ஷன் கார்டில் பார்த்ததும் சுஜாவிற்கு மட்டுமல்ல, பாலாஜிக்குமே அதிர்ச்சிதான். (இந்தச் சமயத்தில் லஸ்ஸி குடித்தது போல் வனிதாவிற்குச் சில்லென்று ஆகியிருக்கலாம். மலையோடு மோது; வனிதாக்காவோடு மோதாதே!).

BB Ultimate 15
BB Ultimate 15

“யாரும் கில்ட்டியா ஃபீல் பண்ண வேணாம். நான் கேப்டன் ஆகித்தான் வெளியே போறேன். அதுவே எனக்கு வெற்றிதான். நான் இங்கு நல்லாத்தான் விளையாடியிருக்கேன். எனவே எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம போறேன்” என்று சபை நடுவே உருக்கமாகப் பேசிய சுஜா, ஒவ்வொருத்தரையும் உறவு கொண்டாடி அரவணைத்துக் கொண்டார். ஷாரிக், வனிதா ஆகியோரையும் அணைத்துக் கொண்ட சுஜா, கலங்கி நின்ற பாலாஜியிடம் “You deserve this” என்று ஆறுதல் சொன்னார். “பிக் பாஸ்... இன்னமும் எனக்கு bye சொல்லலையே..?” என்று தயங்கி நின்ற சுஜாவிடம் “அங்க கமல் சார் காத்துட்டு இருப்பாரு. கிளம்பு.” என்று நாசூக்காக சுஜாவைக் கிளப்பினார் வனிதா.

நிரூப்பிற்குக் கிடைத்த வெடிகுண்டு

மேடைக்கு வந்த சுஜாவிடம் “இந்த சீசன்ல வாரங்கள் கம்மி. எனவே எல்லாமே துரித கதில நடக்கற மாதிரி இருக்குது. நீங்கள் சுவாரஸ்யமாகவும் தன்னம்பிக்கையாகவும்தான் விளையாடினீர்கள்” என்று ஆறுதல் சொன்ன கமல், பயண வீடியோவைக் காட்டினார். அந்த வீடியோவில் குழந்தையின் ஃபோட்டோவைக் கேட்டு தான் அழுத காட்சி வந்ததும் “அடப்பாவிங்களா... இதைக் கூடவா போட்டீங்க” என்கிற அதிர்ச்சி சுஜாவின் முகத்தில் தெரிந்தது.

BB Ultimate 15
BB Ultimate 15

பிக் பாஸ் கரன்ஸியை ஜூலிக்குப் பரிசளித்தார் சுஜா. ‘பாம் தனக்கு வந்து விடுமோ’ என்று பயந்து கூட்டத்தின் பின்னால் தாமரை ஒளிந்து கொண்டது நல்ல காமெடி. “ரிஸ்க்குன்னா. இவருக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி. டாஸ்க்கை விரும்பிச் செய்வாரு” என்று காரணம் சொல்லி பிக் பாஸ் வெடிகுண்டை நிரூப்பிற்கு அளித்தார் சுஜா. பிறகு சுஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ‘கண்ணே… கலைமானே...’ பாட்டை கமல் பாட, எபிசோட் நிறைந்தது.

ஏறத்தாழ இரண்டரை மணி நேர நிகழ்ச்சி. எனவே இறுதியில் கமல் பாடிய தாலாட்டுப்பாடலைக் கேட்ட போது அப்போதே உறக்கம் களை கட்டியது. அதற்காக கமலுக்கு நன்றி!