ஹவுஸ்மேட்ஸ்கள் இன்று 80’s Kids-களாக மாறினார்கள். சுப்பிரமணியபுரம் திரைப்படம் மாதிரி அந்தக் காலக்கட்டத்தின் ஆடைகள், விக்குகள், அரங்கப் பொருள்கள் அனைத்தும் தரப்பட்டன. ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கேரக்ட்டர் ஸ்கெட்ச் கூட தரப்பட்டு விட்டது. ஆனாலும் கூட போட்டியாளர்கள் சொதப்பினார்கள். காரணம் அடிப்படையான ஸ்கிரிப்ட் என்று ஒன்று இல்லை. எனவே தான்தோன்றித்தனமாக எதையோ பேசிக் கொண்டு திரிந்தார்கள்.
திறமையான நடிகர்களாகவே இருந்தாலும் கூட திரைக்கதை என்கிற விஷயம்தான் என்றுமே ராஜா என்கிற விஷயம் மீண்டும் ஒருமுறை உறுதியானது. ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் சினிமா டைரக்டராக நடிக்கும் நாகேஷ் “கதை... கதை... அது ஒண்ணும் மட்டும் கிடைச்சா போதும். ஷூட்டிங்கை தொடங்கிடுவேன்” என்று படம் பூராவும் அனத்திக் கொண்டேயிருப்பார். அதைப் போன்றே “கதை... கதை. அதுதான் வேணும்... பிக் பாஸ்... உங்க கிட்ட இருக்கா” என்று ஹவுஸ்மேட்ஸ்கள் அடித்துக் கொண்டதைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

நாள் 17-ல் நடந்தது என்ன?
வேலன்டைன்ஸ் டே என்பது காதலர்களுக்கு மட்டுமானதல்ல. ‘அன்பு இருக்கிற எவருக்கு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்’ என்கிற முன்னுரையுடன் போட்டியாளர்களின் குடும்ப உறவினர்கள் வீடியோவில் வந்து வாழ்த்து சொல்ல ‘அழுகாச்சி’ வைபவம் சிறப்பாக நடந்து முடிந்தது. பாலா போன்ற கல்லுளிமங்கர்கள் இதை இயல்பாகக் கடக்க, “அம்மாவை விடவும் உன்னைத்தான் பிடிக்கும். அப்படி என்னை பார்த்துக்கறே” என்று ஜூலியின் தம்பி வீடியோவில் வந்து சொன்னதற்கு சிவாஜியே மிரண்டு போகும் அளவிற்கு அழுது தீர்த்தார் ஜூலி. நிரூப்பிற்கு ஐக்கி பெர்ரி வந்து வாழ்த்தியது ஆச்சரியம்.

“உனக்கான நிலைப்பாட்டை எடு. இனிமே உன் பாதை சிங்கப்பாதையா இருக்கணும்” என்று நண்பர் சொன்னதை கண் கலங்கிய முகத்துடன் கேட்டுக் கொண்டார் சுருதி. ஷாரிக்கைப் படப்பிடிப்பின் இடையே வந்து வாழ்த்தினார் ‘கட்டதுரை’. (ரியாஸ் கான்). “Whatever happens, don’t let them take your heart" என்று மகள் வந்து சொன்னதற்கு பூரித்துப் போனார் வனிதா. “நம்மாளை இன்னமும் காணோமே” என்று தாமரை உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருக்க, மல்லிகைப்பூவும் கையுமாக வந்து புன்னகைத்தார் பார்த்தசாரதி. தாமரைக்கு மல்லிகைப்பூ. நல்ல காம்பினேஷன்... அம்மணிக்கு ஒரே சிரிப்பு. சந்தோஷத்தில் பாலாவைக் கடித்து வைத்தார் தாமரை. (ஏன் இந்த கொலைவெறி?!). அபிநய்யின் மனைவியும் மகளும் ஒரே குரலில் வாழ்த்தினார்கள்.
80’s Kidsகளின் ருத்ர தாண்டவம்
நாள் 17 விடிந்தது. ‘எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்டைக் கேட்கும்’ என்கிற பாடலை அலறவிட்டார் பிக் பாஸ். இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ‘இதயம் முரளி கலைக்கல்லூரியாக’ வீடு மாறுமாம். எண்பதுகளின் பேருந்து நிலையம், சலூன் கடை, கைபம்பு என்கிற செட்-அப்களுடன் கார்டன் ஏரியா களை கட்டியிருந்தது. போட்டியாளர்களுக்கு அந்தக் காலத்து பாணியில் ஆடைகள், விக்குகள் தரப்பட்டிருந்தன. சும்மா சொல்லக்கூடாது... ஒவ்வொருவருமே இந்த ஒப்பனை மாற்றத்தில் அம்சமாகவே இருந்தார்கள்.

தாடி பாலாஜி கல்லூரியின் முதல்வராம். ஹாஸ்டல் வார்டன் என்று டூயல் ரோலும் அவருக்கு உண்டு. ஞாபக மறதி கொண்டவராம். சிவப்பு ஹார்ட்கள் நிறைந்திருந்த சட்டையில் வந்த பாலாஜி சிறிது நேரம் காமெடி செய்துவிட்டு பிறகு காணாமல் போனார். சீனின் உள்ளே வருவதற்கு மறந்துவிட்டார் போல. அனிதா முதன்மை தமிழ் ஆசிரியராம். அபிநய் வெளிநாட்டு டிகிரிகள் வாங்கிய ஆங்கில பேராசிரியர். பெண்கள் கூட்டம் இவரைச் சுற்றி எப்போதும் அலைமோதுமாம். (ஜெமினி கணேசனோட வாசனையை பூசிட்டாங்க போல).
“வனிதா முதல் ஆண்டு மாணவியாம்... இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்குது மக்களே?”
அடுத்ததாக முதல் ஆண்டு மாணவர்களின் காரெக்ட்டர்கள். வனிதாவும் முதலாண்டு மாணவிகளில் ஒருவர். (ஆம்... நம்புவதற்கு சிரமம்தான். வேறு வழியில்லை). ஆனால் இவருக்குத் தரப்பட்டிருந்த குணாதிசயம்தான் சுவாரஸ்யமானது. இவர் கிராமத்துப் பெண். மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர். பேசுவதற்கே மிகவும் தயங்குவாராம். (இதையும் நம்பித்தான் ஆக வேண்டும்). இந்த அறிவிப்பு சபையில் வாசிக்கப்பட்ட போது வனிதா உட்பட பிக் பாஸ் வீடே விழுந்து புரண்டு சிரித்தது. ஆனால் பிக் பாஸின் சூட்சுமத்தை பாராட்டியே ஆக வேண்டும். இப்படியொரு கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை தந்து வனிதாவின் வாயை அடைத்து விட்டார். நடனத்தில் ஆர்வம் உள்ள ஷாரிக்கிற்கு படிப்பில் ஆர்வம் குறைவு. ஜூலியை இதர மாணவர்கள் காதல் தூதுவராக பயன்படுத்துவார்களாம். அபிராமி அபிநய சரஸ்வதி. விநாடிக்கு பத்து எக்ஸ்பிரஷன்களை தருவாராம். சுருதிக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். அத்லெட்.

அடுத்ததாக மூன்றாம் ஆண்டு மாணவர்கள். (இரண்டாம் ஆண்டு அந்தக் கல்லூரியில் இல்லை போல!). ‘கவிதைப் புயல்’ சிநேகன், பிரிந்து போன தனது காதலியை நினைத்து கவிதைகள் எழுதுபவர். கல்லூரிக் கட்டடத்தை விடவும் இவருக்கு வயது அதிகம். மற்றவர்களின் காதலுக்கு உதவுபவர். பாலா முன்கோபக்காரர். சண்டை போடுவதென்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. சலூன் கடை வைத்திருக்கிறார். தாமரைக்கு நடிகை சரோஜா தேவியை மிகவும் பிடிக்குமாம். எனவே அவரைப் போன்றே நடந்துக் கொள்வாராம். (“அவங்க நடிச்சதை நான் அதிகம் பார்த்ததில்லையே” என்று சொல்லி தான் ஒரு யூத் என்பதை பதிவு செய்ய முயன்றார் தாமரை). நாட்டாமையின் மகன் நிரூப். தன்னை ஒரு காதல் மன்னனாக நினைத்து வாழ்பவர். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயல்பவராம்.
பஸ்ஸர் ஒலிக்க டாஸ்க் ஆரம்பித்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்களையும் ஆசிரியர்களையும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் அறிமுகப்படுத்த வேண்டும். “டேய் மச்சான்... பிரின்ஸிபல் உன்னோட கிளாஸ்மேட் போல” என்று சிநேகனிடம் கிண்டலை ஆரம்பித்தார் பாலா. “நான் ஒரு அழகான தமிழ் ஆசிரியை” என்று அனிதா வந்து அறிமுகம் செய்து கொள்ள “அதை நாங்க சொல்லணும்” என்று மாணவர்கள் வன்மையாகக் கண்டனம் தெரிவிக்க “ஓகே... தமிழ் ஆசிரியை” என்று மாற்றிக் கொண்டார் அனிதா.
மூன்றாம் ஆண்டு மாணவர்களிலேயே மிகவும் சீனியரான சிநேகன் எழுந்து வந்து “என்னைப் பார்த்து காப்பியடிச்சு எழுதியவன்தான் இப்பத்திய கல்லூரி முதல்வர். என் காதலியைப் போலவே இந்தக் கல்லூரியையும் என்னால பிரிய முடியலை. அதனால இங்கயே இருந்துட்டேன். என்னிக்காவது என் காதலி நிச்சயம் திரும்பி வருவா... அந்த நம்பிக்கையோடதான் காத்துக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னவர் “அவ பார்க்கறதுக்கு அப்படியே தமிழ் ஆசிரியை அனிதா மாதிரியே இருப்பா” என்று கூடுதல் பிட்டையும் போட்டார். நிரூப்பின் விநோதமான விக்கைக் கிண்டலடித்த பாலா “சலூனுக்கு வா... முடி வெட்டி விடறேன்” என்று சொல்ல “அவனுக்கு வர்ற நேரமில்ல. நீயே வெட்டி வெச்சிடு” என்று நிரூப்பின் விக்கைக் கழற்றி பாலாஜி தூக்கியெறிந்தது நல்ல காமெடி.

அலைபாயும் அனிதாவின் மனசு
முதல் ஆண்டு மாணவி அபிராமி எழுந்து வந்து “என் பெயர் ஷோபனா... ஷோப்ஸ்ன்னு கூப்பிடலாம்” என்று கண்ணைச் சிமிட்டி எக்ஸ்பிரஷன் தர ஆரம்பிக்க “எதுக்கு டீச்சரையெல்லாம் கூப்பிட்டிருக்கீங்க?” என்று சிநேகன் கலாய்க்க முயன்றார். “நீங்களே ஸ்டூடண்ட்டா இருக்கும் போது நான் இருக்கக்கூடாதா?” என்று பதிலுக்கு பங்கம் செய்தார் அபிராமி. “பயப்படாதடா... எழுந்து வா” என்று பிரின்ஸிபல் ஊக்கப்படுத்த, வாய் பேச முடியாத குழந்தை மாதிரி தயங்கித் தயங்கி வந்தார் வனிதா. “என் பேரு ராதிகா... அப்பா வாத்தியார். ரிட்டையர்ட் ஆயிட்டார். இந்தக் கல்லூரில என்னை படிக்க வைக்கறதுதான் அவரோட கனவு” என்று மென்று முழுங்கி சொல்லி முடித்தார் வனிதா. (இந்த பாடாவதி கல்லூரிக்கு வந்ததால் படிக்கறதையும் கனவா நெனச்சு மறந்துட வேண்டியதுதான்!).
அந்தக் காலத்து ஆனந்த்பாபு மாதிரி உடம்பை உதறிக் கொண்டே வந்த ஷாரிக் “ஹூ... ஹூ” என்று ஆடி விட்டுச் சென்றார். “அடுத்ததாக காலேஜை காலி பண்ணப் போற ஜூலி வர்றாங்க” என்று முதல்வர் அறிவிக்க “சீனியர்ஸ் எல்லாம் பார்க்க க்யூட்டா இருக்கீங்க” என்று ஐஸ் வைத்தார் ஜூலி.
“நிரூப் என்னைப் பார்த்து கண்ணடிக்கறான். என் மனசும் அலைபாயுது. இதை நீங்க தட்டிக் கேட்டே ஆகணும்” என்று பிரின்ஸிபலிடம் அனிதா புகார் செய்ய, “முடியாதேம்மா... என்னோட மேட்டர் அவன் கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கு” என்று பாலாஜி பரிதாபமாக சொல்ல, அதற்குப் பிறகான உரையாடல்கள் சற்று சென்சார் எல்லைக்கு வெளியில் சென்றது. “நிரூப், ஷாரிக்... ரெண்டு பேருமே என் லவ் பண்றாங்களாம்.. எனக்கு குழப்பமா இருக்கு” என்று பாலாவிடம் அனிதா சொல்ல “கிளாஸுக்குள்ள ஒண்ணு. வெளியே ஒண்ணு வெச்சுக்கங்க” என்று கலாசார அதிர்ச்சி ‘ஐடியா’ தந்தார் பாலா. (ஓடிடிதான்... அதுக்காக இப்படியா?!)

காமெடியாகிப் போன ஆக்ஷன் பிளாக்
“என்னை ஒரு பையன். அண்டா... குண்டான்னு கூப்பிட்டு கலாட்டா பண்ணிட்டே இருக்கான். நீதாண்ணா வந்து கேட்கணும்” என்று ஷாரிக்கை நச்சரித்தார் வனிதா. “நீ வண்டில ஏறும்மா தங்கச்சி... அண்ணன் பார்த்துக்கறேன்” என்று அரை சைக்கிளில் வனிதாவை ஏற்றிக் கொண்டு அதை ஓட்ட முடியாமல் தத்தக்கா பித்தக்கா என்று நகர்த்திச் சென்றார் ஷாரிக். “இவன்தாண்ணா... என்னை கலாட்டா பண்றான்” என்று வனிதா சுட்டிக் காட்டியது பாலாவை. “மூஞ்சி மேலேயே ஒரு குத்து விடு" என்று சுருதி ஐடியா சொல்ல “நீங்க வந்திருக்கீங்க. ஓகே... அதுக்கு எதுக்கு ஆயாம்மாவை கூட கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று சுருதியை பங்கம் செய்ய பாலா முயல “நீ பப்ளிக் டாய்லெட்ல டோக்கன் போட்டுட்டு இருந்தவன்தானே” என்று சுருதியும் பதிலுக்குப் பேச இடமே ‘கலீஜ்’ ஆனது. (இப்படியான கிண்டல்களைத் தவிர்க்கலாமே பிக் பாஸ்?! இதெல்லாம் காமெடியா?)
“ஏண்டா... என் தங்கச்சியை கிண்டல் பண்ணே?” என்று உடம்பை உதறியபடியே ஷாரிக் கேட்க “இவனுக்கு காக்கா வலிப்பு போல. யாராவது சாவி கொடுங்க” என்று பாலா கிண்டல் அடித்தார். இவர்கள் அகன்ற பிறகு “எப்படி வனிதாவை தைரியமா ‘அண்டா’ன்னு கூப்பிட்டீங்க?” என்று பாலாவிடம் வந்து ரகசியமாக கேட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்தார் அபிராமி. “ரொம்ப நாளா மனசுல இருந்தது. இன்னிக்குத்தான் கூப்பிட வாய்ப்பு கிடைச்சது” என்று சிரித்தார் பாலா. நாடகத்தை விடுத்து, தனிப்பட்ட முறையில் எல்லைமீறிய உருவக்கேலிகள் குறித்து கமல் பஞ்சாயத்து நாளில் விசாரிப்பாரா?

வனிதா – பாலா – மோதல் மீண்டும் ஆரம்பம்
எந்தவொரு இலக்கும் இல்லாமல் டாஸ்க் இப்படியாகச் சென்று கொண்டிருந்ததால் வனிதாவின் தலையீடு காரணமாக இது நிறுத்தப்பட்டது. “நான் போய் பிக் பாஸ் கிட்ட பேசினேன். பிரேக் இல்லாத வண்டி மாதிரி டாஸ்க் போயிட்டு இருக்கு. ஏதாவது ஒரு கதையா கொண்டு போனா நல்லாயிருக்கும்-ன்னு கேட்டேன். அதுக்கு அவரு “மக்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்படி இதை மாத்த வேண்டியது உங்க பொறுப்பு. நீங்களே கதையை உருவாக்குங்க. கேரக்ட்டர்களை மாத்திக்கணும்னா கூட மாத்திக்கங்கன்னு சொல்லிட்டாரு” என்று வனிதா நீளமாக விளக்கம் அளித்தார். இதில் ஒரு வாக்கியம் தன்னைப் பற்றிய விமர்சனமாக இருந்ததாக நினைத்த பாலா “நான் சரியாப் பண்ணலேன்னு உங்களுக்குத் தெரியுமா? முதல்ல இப்படி டிஸ்கரேஜ் பண்றதை நிறுத்துங்க” என்று கோபத்துடன் வெடிக்க இருவருக்கும் ரணகள மோதல் ஆரம்பித்தது.
“நாமெல்லாம் Artist. நாமதான் இதை டெலவப் பண்ணணும். அதைத்தான் பிக் பாஸூம் சொல்றாரு” என்று வனிதா மன்றாட, “நான் என்னெல்லாம் ஸ்டோரி உருவாக்கினேன்னு உங்களுக்குத் தெரியுமா... தெரியாம வந்து இங்க பேசக்கூடாது” என்று பாலா மல்லுக்கட்ட “நான் என்கரேஜ்தான் பண்றேன். நாம என்ன ஸ்கூல் பிள்ளைகளா... நீ பண்ணது வெளில தெரியலை” என்று பதிலுக்கு கத்திய வனிதா “டாஸ்க்கை ஒழுங்கா பண்றதை விட்டுட்டு சும்மா அண்டா, குண்டான்னு காமெடி பண்ணிக்கிட்டு” என்று ஒரு வாக்கியத்தை இடையில் சொன்னார்.

“நான் என் நடிப்பை பார்த்துக்கறேன். நீங்க உங்களோடதை பாருங்க” என்றபடி கோபத்துடன் பாலா விலகிச் செல்ல மற்றவர்கள் சமாதானப்படுத்த முயன்றார்கள். “நாம ஒரு விஷயம் பண்றோம். அதுக்கு எதிர்ல இருக்கறவர் சரியா ரியாக்ட் பண்ணாதானே ஷோ நல்லா வரும்?” என்று வனிதா கேட்டதில் பாயிண்ட் இருந்தது. இவர்கள் சமாதானம் ஆகி மறுபடியும் டாஸ்க் தொடர்ந்தது.
தாமரை எழுதிய மொட்டைக் கடுதாசி
சிநேகனிடம் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தாமரையிடம் “உங்களுக்கு ஆல்ரெடி கல்யாணம் ஆயிடுச்சு... இந்த லவ் உங்களுக்குத் தேவைதானா?” என்று கிண்டலடித்தார் பாலா. இன்னொரு பக்கம் நிரூப்பும் அனிதாவும் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தார்கள். “இனிமே என் மனசை கட்டுக்கோப்பா வெச்சுக்கப்போறேன்” என்று வெட்கத்துடன் சொன்னார் அனிதா. “என்ன அனிதா... விழுந்திட்டியா?’ என்று அந்தப் பக்கம் வந்த ஆங்கிலப் பேராசிரியர் அபிநய், காதில் புகை வர கேட்டு விட்டுப் போனார்.

அனிதாவுடன் நிரூப் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து கோபமான தாமரை, சிநேகனின் உதவியோடு ஒரு மொட்டைக் கடுதாசி எழுதினார். “பண்ணையார் மகன் என்றால் என்ன? பெரிய ……………? மன்மதக் குஞ்சுன்னு நெனப்பா... ஒழுங்கா அடங்கிரு.. இல்லைன்னா... இழுத்து வெச்சு அறுத்துடுவேன்.. நாக்கை…” என்று தாமரை உபயோகித்திருந்த வரிகளின் மூலம் அவரின் நாடக உலக அனுபவம் தெரிந்தது. கூத்தின் இடையே வரும் கோமாளிகள், இப்படிப் பாலியல் வாசனையுடன் கூடிய வசனங்களைப் பேசுவது ஒரு வழக்கம். இதை ரசித்துக் கேட்டு சிரிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும்.
இந்தக் கடிதத்தில் உள்ள “மொகரையைப் பாரு’ என்கிற வார்த்தையை வைத்து இது தாமரைதான் எழுதியது என்பதை நிரூப் எளிதாகக் கண்டுபிடித்து விட்டார். “யோவ்... லெட்டர் எழுதித் தரச் சொன்னா. நான் சொன்னதையெல்லாம் அப்படியே எழுதிருவியா?" என்று சிநேகனை சிரிப்புடன் கடிந்து கொண்டார் தாமரை. “உங்க முரட்டுத்தனம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று எண்பதுகளின் நாயகியைப் போலவே பாலாவிடம் வெட்கப்பட்டு ரொமான்ஸ் செய்ய முயன்றார் ஜூலி. “கடைக்கு வந்தே... கத்தியை விட்டு கண்ணை நோண்டிடுவேன்” என்று ஜூலியைத் துரத்தி விட்டார் பாலா.
டாஸ்க் அதுவாக சற்று ஓய்ந்ததும் “இவங்க சீரியஸாவே செய்ய மாட்டேங்கறாங்களே?” என்று வனிதா ஒருபக்கம் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்க வனிதாவைப் பற்றி அபிநய்யிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாலா. “யாராலயும் 24x7 ஷோ பார்க்க முடியாது. ஒரு மணி நேர எபிசோடுதான் மக்கள் பார்ப்பாங்கன்னு வனிதாதான் அடிக்கடி சொல்றாங்க... அப்படின்னா ஒரு மணி நேரம் மட்டும் பார்க்கறவங்களுக்கு என்ன தோணும்? 'பாலா... நீ சரியா பண்ணலேன்னு...' வனிதா சொல்றதை வெச்சு அவங்க என்ன நினைப்பாங்க... அதனாலதான் நான் ஓப்பனா கேட்டுட்டேன்” என்று தன் கோபத்திற்கான நியாயத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தார் பாலா.

ஆக... தமிழ் சினிமாக்களில்தான் கல்லூரி என்றாலே அது ‘காதல் காட்சிகள் மட்டுமே’ என்று காட்டுகிறார்கள் பார்த்தால், பிக் பாஸிலும் அதே கதைதான். டாஸ்க்குக்காகப் போடப்படும் நாடகம்தான், கதாபாத்திரங்களாகத்தான் போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்கிறார்கள். ஆனால் எல்லை மீறும் சில விஷயங்களை பிக் பாஸ் டீம் கவனிக்குமா?