Published:Updated:

BB Ultimate - 20: ஜூலியிடம் எல்லைமீறிப் பேசிய வனிதா; இறங்கி அடிக்கும் பாலா; தாமரை அட்ராசிட்டீஸ்!

BB Ultimate - 20

வனிதா பேசிக் கொண்டிருக்கும் போது தாமரையிடம் வந்த பாலா “வத்திக்குச்சி இருக்கா... அடுப்பு பற்ற வைக்கணும்” என்று மறைமுகமாக வனிதாவைக் கிண்டல் செய்ய “புஷ்பா-ன்னா பூ இல்லடா... ஃபயர்" என்கிற ரேஞ்சிற்கு பற்றிக் கொண்டார் வனிதா.

Published:Updated:

BB Ultimate - 20: ஜூலியிடம் எல்லைமீறிப் பேசிய வனிதா; இறங்கி அடிக்கும் பாலா; தாமரை அட்ராசிட்டீஸ்!

வனிதா பேசிக் கொண்டிருக்கும் போது தாமரையிடம் வந்த பாலா “வத்திக்குச்சி இருக்கா... அடுப்பு பற்ற வைக்கணும்” என்று மறைமுகமாக வனிதாவைக் கிண்டல் செய்ய “புஷ்பா-ன்னா பூ இல்லடா... ஃபயர்" என்கிற ரேஞ்சிற்கு பற்றிக் கொண்டார் வனிதா.

BB Ultimate - 20
வனிதா போன்ற ஆசாமிகளால் எப்படிப் பெரும்பாலான நேரங்களில் முழு எனர்ஜியுடன் தொடர்ந்து மண்டைச்சூட்டுடன் இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆள் மாறினாலும் விடாமல் சண்டை போட்டு மல்லுக்கட்டுகிறார். “உன்னையெல்லாம் உள்ளே விட்டது தப்பு” என்று ஜூலியிடம் வனிதா இன்று சொன்னதெல்லாம் அராஜகத்தின் உச்சம். உயர்வுமனப்பான்மையின் அதீதமான சிக்கல். ‘சர்ச்சையை உருவாக்குவதுதான் தன் அடையாளம்; தன் இருப்பும் கூட’ என்கிற துல்லியமான, வழக்கமான செயல்திட்டத்துடன் வனிதா வந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.
BB Ultimate - 20
BB Ultimate - 20
இதைப் போலவே பாலாவும் இந்த முறை தெளிவான அஜெண்டாவுடன்தான் வந்திருக்கிறார். கடந்த சீசனில் ஆரியுடன் டென்ஷன் ஆகி சண்டை போட்டதையெல்லாம் இப்போது கவனமாக தவிர்க்க நினைக்கிறார். எனவே வனிதாவின் அழிச்சாட்டியங்களையெல்லாம் மிகவும் அநாயசமாகக் கையாள்கிறார். இதனாலேயே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று பாலா மேலும் சில வாரங்களுக்கு தாக்குப் பிடிப்பார் என்று தோன்றுகிறது.

எதிர்த்தரப்பு ஆசாமி என்ன சொல்கிறான் என்பதை முழுவதும் உள்வாங்கிக் கொள்ளாமலேயே பேசிக் கொல்லும் தாமரையின் இன்னொரு உக்கிரமான முகத்தை இன்று பார்க்க முடிந்தது. பல்வேறு மனஅழுத்தங்களை நீண்ட காலமாக தாங்கிக் கொள்ளும் பெண்கள் எப்படி ஒரு திடீர் கணத்தில் எப்படி வெடித்துச் சிதறுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம் தாமரையின் செயல்பாடு. இந்த மனஉளைச்சலை பிக் பாஸ் வீடு இன்னமும் நெய் ஊற்றி வளர்க்கும்.

நாள் 19-ல் நடந்தது என்ன?

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ அணி, தேர்தல் பிரசாரத்தின் போது கல்லூரி முதல்வரை நோக்கி அவமரியாதையாக கோஷங்கள் எழுந்த விவகாரத்தையொட்டி காலையிலேயே ஷாரிக்கிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார் வனிதா. “நான் என் கேரக்ட்டர்ல இருந்தேன். பாலாஜியை யாரும் டார்க்கெட் பண்ணலை” என்று ஷாரிக் விளக்கம் அளித்தார். ஆனால் வனிதாவின் கேள்விகள் ஷாரிக்கிடம் இல்லை. பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலாவை நோக்கிய மறைமுக அம்புகள் அவை என்று தெளிவாகத் தெரிந்தது.

BB Ultimate - 20
BB Ultimate - 20

இந்த நிழல் யுத்தத்திற்கு பாலாவும் தயாராகவே இருந்தார். அவர் நிரூப்பை அழைத்து “டீச்சரோட நீ Fun-ஆ இருக்கறதா யாரோ கிளப்பி விட்டாங்கள்ல...” என்று பதிலுக்கு வனிதாவை பழிவாங்க முயன்றார். ஆனால் பாலா அணி செய்த கலாட்டாக்கள் காரணமாக நிரூப் உண்மையிலேயே புண்பட்டிருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. “நாம எதுக்கு பிரசாரம் பண்றோம்…” என்று பாலாவின் மிகையான கிண்டல்களை நிரூப் சுட்டிக் காட்ட முயல “இது என்ன நெஜம்மான காலேஜா... நல்லொழுக்க கல்லூரியா... நீ உண்மையான ஸ்டூடண்டா?” என்று எதிர்க்கேள்விகளை எழுப்பினார் பாலா.

“இது என்ன நெஜம்மான கல்லூரியா?” – பாலாவின் குதர்க்கம்

“இது பாவனையான நாடகம்தானே?" என்கிற பாலாவின் கேள்வி சரிதான். கல்லூரி நாடகத்தை மாரல் கிளாஸ் போல நடத்தினால் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சலிப்பாகும். எனவே சுவாரஸ்யத்திற்காக ஜனரஞ்சகமான சில விஷயங்களை இணைப்பதில் தவறில்லை. ஆனால் அவற்றில் சில கண்ணிய எல்லைகளை நிச்சயம் பின்பற்றியாக வேண்டும். சமூகத்தில் நிகழும் தவறான விஷயங்களை, பல லட்சம் பேர் பார்க்கும் நிகழ்ச்சியிலும் அப்படியே வழிமொழிந்தால் அது ஒருவகையான அங்கீகாரம் போல் ஆகி விடும். இந்த அரசியல்சரித்தன்மையைத்தான் கமலும் பல சமயங்களில் உபதேசிக்கிறார். மாணவர்களின் தேர்தல் பிரசாரத்தில் கல்லூரி முதல்வரை இழிவுப்படுத்தும் கோஷங்கள் சம்பந்தமில்லாதவை.

பாலாவின் கமென்ட்டால் புண்பட்ட நிரூப் தேர்தலை புறக்கணித்து விடலாமா என்று தன் நண்பர்களிடம் ஆலோசிக்க “வேண்டாம்” என்று சிநேகன் உள்ளிட்டவர்கள் சொல்கிறார்கள். “ஆக்சுவலி... பாலா கேரக்ட்டர் என்ன? சண்டைக்காரன் மட்டும்தானே... ரூல்ஸ் புக் எங்க இருக்கு?” என்று ஏறத்தாழ டாஸ்க் முடியும் நேரத்தில் கேட்டுக் கொண்டிருந்தார் வனிதா.

BB Ultimate - 20
BB Ultimate - 20

‘பெண்களை இழிவுப்படுத்தாதே’ – வனிதாவின் காட்டம்

வனிதாவிற்கும் பாலாவிற்கும் மீண்டும் ஒரு மோதல் வெடிக்க ஆரம்பித்தது. டாஸ்க்கின் போது வனிதாவை ‘அண்டா’ என்று பாலா கிண்டலடித்த விஷயம் வனிதாவின் மனதைப் புண்படுத்தியிருப்பது தெரிகிறது. உருவக்கேலி என்பது நிச்சயம் தவறான விஷயம். ஆனால் இதே வனிதா மற்றவர்களின் மனம் புண்படும்படியாக கடுமையாகப் பேசுகிறார் என்பதை சுயபரீசிலனையுடன் அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். தனக்கென்றால் ரத்தம், மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி என்கிற தத்துவத்தைப் பின்பற்றக்கூடாது.

“பெண்கள் எனது கண்கள்-ன்னு ஒரு பக்கம் சொல்ற... இன்னொரு பக்கம் பெண்களை இழிவுப்படுத்தும்படி பேசற. வேற யாரும் உனக்கு அண்டாவா தெரியலையா... அசிங்கமா கேட்டுருவேன்” என்றெல்லாம் வனிதா சாமியாட ஆரம்பிக்க “அது டாஸ்க். அவ்வளவுதான்” என்று அலட்டிக் கொள்ளாமல் பாலா பதில் சொல்ல “டாஸ்க் இல்ல... அது உனக்கு ஒரு மாஸ்க்” என்றார் வனிதா. அத்தனை கோபத்திலும் ரைமிங்காக கவுன்ட்டர் தரும் வனிதாவின் டைமிங்கை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

“அவங்களுக்குப் பிடிக்கலைன்னா… அப்படிச் சொல்லாதே..” என்று பாலாவிடம் தனியாக ஆலோசனை கூறினார் தாமரை. “அவங்களும்தான் என்னை வெத்துவேட்டுன்னு நெறைய முறை சொன்னாங்க. நான் டென்ஷன் ஆகலையே... டாஸ்க்ல எல்லோரையும்தான் கலாய்ச்சேன். யாருக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தர முடியாது. இங்க எல்லோரும் சமம்தான்” என்று பாலா சொன்னதும் நியாயமாகத்தான் தெரிந்தது. என்னதான் அடிமை போல நடத்தினாலும் வனிதாவிற்கு ஒன்று என்றால் உடனே வந்து ஆஜராகி விடும் பாலாஜி, இம்முறையும் அதே போல் ஆஜராகி வனிதாவிற்காக பாலாவிடம் பரிந்து பேச முன் வந்தார். “அவங்களுக்குப் பிடிக்கலைன்னா அப்பவே சொல்ல வேண்டியதுதானே. அவங்களும்தான் என்னைக் கலாய்ச்சாங்க... நான் டென்ஷன் ஆகலையே....” என்று அதே பாட்டைப் பாடிய பாலா “வம்புன்னா வம்பு... அன்புன்னா அன்பு” என்று தானும் ஒரு ரைமிங் பன்ச் வசனத்தை எடுத்துவிட்டார்.

BB Ultimate - 20
BB Ultimate - 20
“அண்டான்னு கூப்பிடதெல்லாம் நேத்து… இன்னிக்கு காலைல இருந்து நான் அண்டான்னு கூப்பிடவேயில்லை. அவங்கதான் இந்த அண்டா மேட்டரை நினைவுப்படுத்தினாங்க. யாரையாவது கேட்டுப்பாருங்க... இன்னிக்கு அண்டான்னு சொன்னேனான்னு” என்று பாலாவின் குறும்பு தொடர்ந்தது. (சொல்லலே... சொல்லலே...ன்னு சொல்லிட்டு அந்த வார்த்தையை எத்தனை முறை நைசா சொல்லிட்டப்பா!).

ஆரம்பித்தது பிக் பாஸ் உள்ளாட்சித் தேர்தல்

தேர்தல் ஆரம்பித்தது. உடம்பை உதறியபடி ஷாரிக் வர, தேர்தல் அதிகாரியான அபிநய்யே சிரித்துவிட்டார். (“இவன் மட்டும்தாம்ப்பா.., கேரக்ட்டர்ல அப்படியே இருக்கான்”). அடுத்ததாக வந்த சுருதி, நிரூப் அணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தார். அடுத்ததாக வனிதா வந்தார். இவர் யாருக்கு வாக்களித்திருப்பார் என்பதைச் சொல்லவே தேவையில்லை. “நீங்க ஊதவே வேண்டாம்” மொமன்ட். நிரூப்பிற்கு வாக்களித்து விட்டு சீட்டை பெட்டியில் போட்டு ஓங்கித்தட்டினார். நல்லவேளையாக பெட்டி உடையவில்லை.
BB Ultimate - 20
BB Ultimate - 20

பிக் பாஸ் வீடு மட்டுமல்ல, பெரும்பாலான பார்வையாளர்களே நிரூப் அணிதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். பாலாவின் சேட்டைகள் அப்படியாக இருந்தன. இதற்கு எதிர்புறம் ஒழுங்குப் பிள்ளையாக நிரூப் பாவனை செய்து கொண்டிருந்தார். ஆனால் முடிவு நேர்மாறாக வந்தது. மாணவர் தேர்தலில் ஆச்சரியமாக பாலா வெற்றி பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இந்த வெற்றி கிடைத்தது. வனிதாவைத் துணிச்சலாக எதிர்கொள்ளும் காரணத்திற்காகவே பாலாஜியே கூட பாலாவிற்கு ரகசியமாக வாக்களித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. தனது வெற்றியை நிரூப்புடன் பகிர்ந்து கொள்ளும் பெருந்தன்மையுடன் செயல்பட்ட பாலாவிடம் “நீயெல்லாம் ஜெயிப்பேன்னு நான் நெனக்கவேயில்ல” என்று தாமரை சிரித்துக் கொண்டே சொல்ல “நானும்தான்” என்றார் பாலா. “Well Played Niroop. Nice Competition” என்று நிரூப்பிடம் பாலா சொன்னது சிறப்பு.

“சரோஜா தேவின்னா யாரு?” – தாமரையின் அழிச்சாட்டியம்

கல்லூரி டாஸ்க்கில் சரியாக பங்கேற்காத மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சமயம். நாமினேட் செய்ய தாமரை எழுந்து வந்தார். “என்னையே கூட நான் தேர்ந்தெடுத்துக்கலாம். ஆனா அனுமதிக்க மாட்டேங்கறாங்க... சரோஜாதேவி நடிப்பு பத்தி எனக்கு அதிகம் தெரியாது. ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...’ பாட்டைப் பாடியே சமாளிச்சேன். ஏதாவது நகைச்சுவை கேரக்ட்டர்னா நல்லா பண்ணியிருப்பேன்” என்று தாமரை சொன்னது சொந்த செலவில் சூன்யம். சுய வாக்குமூலம். எனவே பிறகு வந்தவர்கள் பெரும்பாலோனோர் இதே காரணத்தை சொல்லிச் சொல்லியே தாமரையை நாமினேட் செய்தார்கள். “ஸ்போர்ட்ஸ் பெர்ஸன்-றதால சுருதிக்கு நிறைய ஸ்கோப் இல்ல” என்று அனிதா சுட்டிக்காட்டியது நியாயமான காரணம்தான். என்றாலும் சுருதி பல இடங்களில் பின்தங்கியே இருக்கிறார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று அவர் செயல்பட வேண்டும்.

BB Ultimate - 20
BB Ultimate - 20

“வார்டனா இருந்த அளவிற்கு பிரின்ஸிபலா பாலாஜி செயல்படவில்லை” என்கிற காரணம் அதிகமாகச் சொல்லப்பட்டது. “படிப்பை விட டீச்சர் மேலதான் உனக்கு கண்ணு அதிகமா இருந்தது” என்று நிரூப்பிற்கான காரணத்தை ஜாலியாக சொன்னார் பாலாஜி. “என் கேரக்ட்டர்ண்ணே அது” என்று நிரூப் சொன்னது நியாயமான விஷயம். மூன்று பேர்களை நாமினேட் செய்த வனிதா, கூடுதலாக பாலாஜி செய்த Prank-ஐ வன்மையாகக் கண்டித்துச் சொல்ல மறக்கவில்லை. "சரோஜா தேவி கேரக்ட்டர் எனக்கு கிடைச்சிருந்தா பிய்த்து உதறியிருப்பேன்” என்று இந்தச் சமயத்தில் வனிதா சொன்ன போது, சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறிது கற்பனை செய்த போதே மயக்கம் வந்தது. வனிதாக்காவை துணிச்சலாக நாமினேட் செய்தார் ஜூலி. (எதிர்பார்த்தது போலவே, இதற்கான ரியாக்ஷன் பின்னால் வந்தது).

‘Worst Performer’ கேட்டகிரி நாமினேஷனின் இறுதியில் 'சுருதி, நிரூப், தாமரை’ ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். “என்ன தண்டனை என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்” என்று கலகத்தை தூண்டிவிட்டார் பிக் பாஸ். “நிரூப் குழந்தை மாதிரி நடந்துக்கற டாஸ்க்கை முதல்ல நிறுத்துங்க. அது அவனுக்கான தண்டனை இல்ல... நமக்குத்தான் தண்டனை” என்று ஷாரிக் கதறிக் கொண்டே சொன்னதை ஆரவாரச் சிரிப்புடன் சபை வரவேற்றது. இப்படி ஆளாளுக்கு ஒரு தண்டனையை முன்மொழிந்தார்கள்.

“பிக் பாஸ் கையால்தான் தண்டனை வேண்டும்” – தாமரை அடம்

எனவே வீட்டின் தலைவர் வனிதா ஒரு முடிவிற்கு வந்தார். “மூவரும் வீட்டின் விளக்குகள் அணைக்கப்படும் வரை சிறையில் இருக்க வேண்டும். நாளை முழுவதும் நிரூப்பின் Caretaker-களாக தாமரை மற்றும் சுருதி இருக்க வேண்டும். மற்ற யாரையும் நிரூப் குழந்தையாக மாறி தொந்தரவு செய்யக்கூடாது” என்று வனிதா சொன்னது பரவலாக ஏற்கப்பட்டது. “ஓகே. முன்ன பதினோரு பொம்மை இருந்தது. இப்ப ரெண்டு பொம்மைதான். எனக்குப் பிரச்னையில்ல” என்றார் நிரூப்.

BB Ultimate - 20
BB Ultimate - 20

தொழிலாள சமூகத்தில் ஒரு பொதுவான குணாதிசயம் உண்டு. அது எத்தனை கடுமையான வேலையாக இருந்தாலும் சரி. வசையாக இருந்தாலும் சரி. முதலாளி சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சக தொழிலாளியோ, அதிகாரியோ சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது அடிப்படையான உளவியல். தாமரையும் இதே பிரச்னையால் அவதிப்பட்டார். “பிக் பாஸ் தண்டனை கொடுத்தா ஓகே. அது என்ன இவங்க தண்டனை தர்றது? இவங்க எல்லோரும் டாஸ்க்கை நல்லாப் பண்ணாங்களாமா... நாங்க மட்டும்தான் பண்ணலையாமா...” என்றெல்லாம் அனத்திய தாமரை, “யோவ் பிக் பாஸூ... எங்கய்யா இருக்க… தைரியமான ஆளா இருந்தா வெளியே வாய்யா...” என்கிற ரேஞ்சிற்கு கத்த ஆரம்பித்து விட்டார். சீசன் 5-ன் துவக்கத்தில் “கும்புடறேன் முதலாளி” என்று பிக் பாஸிடம் பணிவாக வணக்கம் வைத்த தாமரையா இது? அடேங்கப்பா! அமைதிப்படை அமாவாசையையும் மிஞ்சி விடும் வளர்ச்சி.

BB Ultimate - 20
BB Ultimate - 20

வனிதாவும் சிநேகனும் வந்து ஆறுதல் சொன்ன போது ஒரு மாதிரி அமைதியாகக் கேட்டுக் கொண்ட தாமரை, ஜூலி வந்து சொன்ன போது மட்டும் “வேணாம். போயிடு… நான் பொல்லா கோபத்துல இருக்கேன்” என்று துரத்திவிட்டார். “நான் கூட கைவிலங்கு மாட்டிக் கஷ்டப்பட்டிருக்கேன்.. உன் கஷ்டம் எனக்குத் தெரியும்” என்று பாவனையாக ஆறுதல் சொன்னார் வனிதா. “இந்த வீட்ல யார் மீதும் பாசம் வெச்சு மோசம் போகாத” என்று ரைமிங்கில் பாசத்தைக் கொட்டினார் சிநேகன். “கத்து... இன்னும் கத்து.... கமான்.. யூ கேன் டூ இட்... உனக்குப் பேச உரிமை இருக்கு” என்று தாமரையிடம் பதிலுக்கு கத்தி உற்சாகப்படுத்தினார் நிரூப். இதுவொரு நல்ல டெக்னிக். எனில் எதிராளி டக்கென்று அடங்கிவிடுவார்.

“நாமினேஷன் சமயத்துல நீயே போய் ஏன் வாக்குமூலம் கொடுத்தே?” என்று தாமரையிடம் பாலா கேட்ட கேள்வி முக்கியமானது. சொந்த செலவில் சூன்யமும் வைத்துக் கொண்டு பிறகு ‘குத்துதே.. குடையுதே’ என்று தாமரை அனத்துவதில் நியாயமில்லை. “நான் அதுக்கு அழல” என்று குட்டையைக் குழப்பிய தாமரை “எனக்கு என் மேலயே கோபம்... தண்டனைன்னா அதை பிக் பாஸ் கொடுத்திருக்கலாம். இவங்க யாரு கொடுக்கறதுக்கு? இவிய்ங்க எல்லாம் டாஸ்க்கை நல்லா பண்ணாங்களாமா?” என்று மீண்டும் பாயைப் பிறாண்ட ஆரம்பிக்க “இருக்கறதுலயே குறைச்சலான performance நீதான்னு சொல்றாங்க... இதையெல்லாம் ரொம்ப சீரியஸா எடுத்துக்காத” என்று பாலா சொன்னது சரியான ஆறுதல்.

BB Ultimate - 20
BB Ultimate - 20

ஜூலியை மிகையாக வசை பாடிய வனிதா

வீடெங்கும் கூப்பாடு போட்டு பிறகு ஓரத்தில் உட்கார்ந்திருந்த தாமரைக்கு, ஜூலி அணைத்து முத்தம் தர “என்னைக் கோபப்பட விடுங்க” என்று கத்தினார் தாமரை. இந்தச் சமயத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட வனிதா, ஜூலியை கார்னர் செய்யத் துவங்கினார். “நீ ஏன் போய் போய் தாமரையை எரிச்சல் படுத்தறே... அவ உணர்ச்சியைக் கொட்டட்டும்... ‘என்ன தண்டனை. கொடுக்கலாம்’ன்னு ஆலோசிக்கறப்ப ‘வெளில படுக்க வைக்கலாம்’ன்னு உற்சாகமா சொன்னவளே நீதான். இப்ப வந்து ஆறுதல் சொல்றே? என்ன டிராமா போடறியா...” என்று வனிதா சாமியாட “நான் ஒண்ணும் டிராமா போடலை. ஆறுதல்தான் சொல்லப் போனேன். அது தப்பா..?" என்று பதிலுக்கு ஜுலியும் கோபப்பட “என் பொருள்களையெல்லாம் வாங்கி மாட்டிப்ப... என்னையே நாமினேட் பண்ணுவ... உன்னையெல்லாம் உள்ளே விட்டதே தப்பு. உன் டிராமால்லாம் முடிஞ்சு போச்சு” என்று வனிதாவின் வசைகள் எல்லையைத் தாண்டிச் சென்றன. ஒரு கட்டம் வரைக்கும் மல்லுக்கட்டிய ஜூலி, பிறகு அழுகையுடன் வெளியே சென்று மற்றவர்களிடம் இதைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தார்.

BB Ultimate - 20
BB Ultimate - 20

ஜூலியைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தது. அவர் ஆறுதல் சொல்லச் சென்றதில் தவறில்லை. ஆனால், அதற்கு உடன்படாமல் “என்னைத் தொந்தரவு செய்யாதே” என்று தாமரை ஏற்கெனவே துரத்திவிட்ட பிறகும், மீண்டும் மீண்டும் சென்று கட்டியணைக்க முயன்றது தவறு. தேவைப்படாத இடத்தில் எல்லாம் அன்பை விரயம் செய்யக்கூடாது. எனில் இந்த நாடகத்தில் ஜூலியும் மைலேஜ் தேற்ற முயல்கிறார் என்றே பொருள். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது பழமொழி. இந்த நாசூக்கான விஷயம் ஜூலிக்குப் புரியவில்லை; அல்லது புரியாதது போல் நடிக்கிறார்.

“பிக் பாஸ் தண்டனை கொடுத்திருக்கலாம். இவங்க யாரு கொடுக்கறதுக்கு?” என்று மறுபடியும் அனத்திய தாமரையிடம் “இவங்களோ பிக் பாஸோ கொடுக்கறது தண்டனை இல்ல. மக்கள் கொடுப்பதுதான் உண்மையான தண்டனை. இது ஒரு கேம். அவ்வளவுதான். அதுக்கு மேல இதுக்கு மதிப்பு கொடுக்காதீங்க...” என்றெல்லாம் விதம் விதமாக பாலா ஆறுதல் சொன்ன விதம் சிறப்பானது. “எனக்கு இந்த வித்தியாசமெல்லாம் புரிய மாட்டேங்குதே... எங்க இருந்தாலும் அங்க நான் உண்மையாத்தான் இருப்பேன். அது வாழ்க்கையோ, இல்ல கேமோ…” என்று புலம்பிய தாமரையைப் பார்க்க அழுவதா, இல்லை சிரிப்பதா என்று நமக்குத்தான் குழப்பமாக இருந்தது. தாமரையிடம் பாலா நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்க வனிதாவிற்கு பொறுக்கவில்லை போல.

“அது ஆறுதலா இருந்தாலும் நான் மட்டும்தான் சொல்லுவேன்”

எனவே மறுபடியும் தாமரையிடம் வந்த வனிதா “நீ இவ்வளவு ஃபீல் பண்றதால சொல்றேன். அன்பு அதிகமா காட்டறவங்க கிட்டதான் உஷாரா இருக்கணும். பிக் பாஸ் வீட்டிற்குள்ள அன்புல்லாம் கிடையாது. வெளியே போனப்புறம் இருந்தா சந்தோஷம். இல்லைன்னாலும் விட்டுடணும். இதைப் போயெல்லாம் சீரியஸா எடுத்துக்க கூடாது” என்று ஆறுதல் சொன்னார். (ஆறுதல் எல்லாம் வனிதாதான் சொல்லணுமாம். ஜூலியோ பாலாவோ சொன்னால் அது நாடகமாம்.)

BB Ultimate - 20
BB Ultimate - 20

இந்தச் சமயத்தில் பாலா செய்த குறும்பு ரசிக்கத்தக்கதாக இருந்தது. வனிதா பேசிக் கொண்டிருக்கும் போது தாமரையிடம் வந்த பாலா “வத்திக்குச்சி இருக்கா... அடுப்பு பற்ற வைக்கணும்” என்று மறைமுகமாக வனிதாவைக் கிண்டல் செய்ய “புஷ்பா-ன்னா பூ இல்லடா... ஃபயர்" என்கிற ரேஞ்சிற்கு பற்றிக் கொண்டார் வனிதா. நெருப்பு அணைக்கும் கருவியை கொண்டு வந்த பாலா “என்ன... இங்க நெருப்பையே காணோம். நமத்துப் போன வத்திக்குச்சியா அது?” என்று வனிதாவின் நெருப்பில் பெட்ரோலை ஊற்ற அது குபீர் என்று பற்றி எரிந்தது.

“என் அம்மா பத்தி தப்பா பேசினான்ப்பா...”

“திடீர்ன்னு நீ ஏழைப்பங்காளனா மாறிட்டே... இந்த டிராமாவை நிறுத்து. பெண்களைப் பற்றித் தப்பா கிண்டல் பண்ற... உனக்கெல்லாம் பத்து கேஸ் போட்டாதான் புத்தி வரும்” என்று வனிதாவின் டென்ஷன் வானத்தில் பறந்தது. ‘டாக்டர்’ திரைப்படத்தில் "எங்க அம்மா பத்தி தப்பா பேசினான் மேன்” என்று ஓர் இளைஞன் வித்தியாசமான மாடுலேஷனில் சொல்வதைப் போல் “நீங்க எங்க அம்மா பத்தி யூடியூப்ல தப்பா பேசினதுக்கும் கேஸ் போடணுமா?” என்று பாலா எதிர்க்கேள்வி எழுப்ப “இது என்ன புதுக்கதை?” என்று நமக்குத்தான் ஜெர்க் ஆகியது. “அது நீ போன சீசன்ல நடந்ததைப் பற்றி சொன்னது. யாரோ ரெவ்யூ கேட்டாங்க... ‘வளர்ப்பு சரியில்லை’ன்னுதான் நான் சொன்னேன். அப்புறம் உன்கிட்ட மன்னிப்பு கூட கேட்டுட்டேன். இப்ப வந்து ட்விஸ்ட் பண்ணாத” என்று வனிதாவும் மல்லுக்கட்டினார்.

BB Ultimate - 20
BB Ultimate - 20

“நான் தாமரையக்கா கிட்ட காட்டறது உண்மையான பாசமா, இல்லையான்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்க வேற ஏதோ எதிர்பார்க்கறீங்க போல... நான் டென்ஷன்ல்லாம் ஆக மாட்டேன்… போன சீசன்ல செஞ்ச தப்பை மறுபடி செய்ய மாட்டேன்” என்று தெளிவாக இருந்தார் பாலா.

வனிதாவின் அராஜகம் பல சமயங்களில் எல்லை மீறிச் செல்கிறதுதான். இதனால் வீட்டில் நெகட்டிவிட்டி இருந்து கொண்டே இருக்கிறதுதான். ஆனால் வனிதா எவிக்ட் ஆகி விட்டால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்து விடும். பிறகு என்னதான் செய்வது? டெலிகேட் பொஷிஷன்.