Published:Updated:

BB Ultimate - 24: வர்றார் சிம்பு... சாத்தான் vs தேவதை டாஸ்க்; வனிதாவுக்கு இது எப்போதுதான் புரியும்?

BB Ultimate - 24

தன் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சியில் தான் இப்படி அடாவடியாக நடந்து கொள்வதை சற்றாவது கட்டுப்படுத்திக் கொண்டு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்போம் என்று ஏன் வனிதாவிற்குத் தோன்றவில்லை?

Published:Updated:

BB Ultimate - 24: வர்றார் சிம்பு... சாத்தான் vs தேவதை டாஸ்க்; வனிதாவுக்கு இது எப்போதுதான் புரியும்?

தன் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சியில் தான் இப்படி அடாவடியாக நடந்து கொள்வதை சற்றாவது கட்டுப்படுத்திக் கொண்டு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்போம் என்று ஏன் வனிதாவிற்குத் தோன்றவில்லை?

BB Ultimate - 24
பிக் பாஸ் அல்டிமேட் சீசன் ஆரம்பத்திலிருந்தே ஒரு மார்க்கமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. போகப் போக ‘பிக்அப்’ ஆகி விடும் என்று பார்த்தால் ‘உள்ளதும் போச்சுடா’ என்பது போல் கமல் விலகி விட்டார். அடுத்தபடியாக தேவதை – சாத்தான் டாஸ்க்கில் நிரூப்புடன் எழுந்த கடும் விவாதம் காரணமாக வனிதா நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறியிருப்பதாக இப்போது தகவல் வந்திருக்கிறது.

“என்னை கார்னர் பண்றாங்க. வீட்டுக்குப் போகணும்” என்று வனிதா ஏற்கெனவே புலம்பிக் கொண்டிருந்தார். ஆனால் கமல் வெளியேறியதும் அதற்குப் பதிலாக ரம்யா கிருஷ்ணன் வரக்கூடும் என்று கருதியதும்தான் வனிதாவின் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

BB Ultimate - 24
BB Ultimate - 24

வனிதா வெளியேறியதற்காக சந்தோஷப்படுவதா அல்லது சங்கடப்படுவதா என்று தெரியவில்லை. தன்னைச் சுற்றிலும் எப்போதும் நெகட்டிவிட்டியை பரப்பும் ஓர் ஆளாக வனிதா இருக்கிறார். இந்த எனர்ஜியை அவர் சற்றாவது பாசிட்டிவ்வாக பயன்படுத்தினால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. மற்றவர்களைக் காலில் போட்டு அலட்சியமாக மிதிப்பது, அதுவே தனது சுண்டு விரலில் யாராவது மோதி விட்டால் அழுது ஊரைக் கூட்டுவது என்று மற்றவர்களை கடுப்பாக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார் வனிதா. அவர் வெளியேறியது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் நிகழ்ச்சியின் பரபரப்பும் கூடவே வெளியேறி விடக்கூடும்.

கமலுக்குப் பதிலாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன. கமலின் இடத்தை பூர்த்தி செய்வது கடினம் என்றாலும் சிம்பு தன்னுடைய பாணியில் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவாரா என்று பார்க்க வேண்டும்.

எபிசோட் 24-ல் நடந்தது என்ன?

“நான் யாரு...” என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. டாஸ்க்கிற்கு மணியாகிறது என்பதால் ஜூலியை பாத்ரூம் ஏரியாவில் குரல் தந்து தேடிக் கொண்டிருந்தார் தலைவர் தாமரை. ஆனால் இதை ஆட்சேபித்த வனிதா, “மனுஷன் நிம்மதியா இருக்கற இடம் அதுதான். அங்கயும் தொந்தரவு பண்ணாத. வந்துருவாங்க” என்று தன் எரிச்சலைக் காண்பித்தார். ஒரு தலைவராக தாமரை தன் பணியைச் செய்கிறார். ஏனெனில் இதற்கான பதிலை அவர் பிக் பாஸிடம் சொல்லியாக வேண்டும். இதில் வனிதா தலையிட எவ்வித முகாந்திரமும் இல்லை. இதுவே வனிதா தலைவராக இருந்து, தாமரை இப்படி எரிச்சலுடன் ஆட்சேபித்திருந்தால் என்னவாகியிருக்கும்?

வனிதாவிற்கு மகளின் உபதேசம்

இந்தச் சம்பவத்தை பிறகு பாலாஜியிடம் பகிர்ந்த வனிதா “கேப்டன்னா ஏதோ மிலிட்டரி ஆஃபிசர்ன்னு நெனச்சிக்கிட்டதுங்க போல... பாத்ரூம்ல போய் ஜூலியை கதவைத் தட்டி கூப்பிடறா தாமரை” என்று சலித்துக் கொண்ட வனிதா, அடுத்து சொன்ன வாக்கியம் அராஜகமானது. “இதுங்கள்லாம் கேப்டன்சியை எப்ப பார்த்து இருக்கப் போவுதுங்க?!” வனிதாவிற்கு ஜூலி மீது பாசம் எல்லாம் இல்லை. தாமரையை ஏதாவது கேள்வி கேட்டு தனது ஈகோவை திருப்தி செய்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

BB Ultimate - 24
BB Ultimate - 24

போன் பூத்தில் மணி அடித்தது. ஓடிச் சென்று ஆவலாக எடுத்தார் சுருதி. “வனிதாவிற்கு ஒரு செய்தி வந்திருக்கு. அவங்களைக் கூப்பிடுங்க” என்று பிக் பாஸ் சொல்லவே ஏமாற்றத்துடன் திரும்பிய சுருதி, வனிதாவை அழைத்தார். சூடான பாலைக் குடித்து வாயைப் புண்ணாக்கிக் கொண்ட பூனை, பிறகு பாலைப் பார்க்கும் போதெல்லாம் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஓடுமாம். அது போல பாலாஜியின் PRANK-ஆல் எரிச்சல் அடைந்திருந்த வனிதா, இதுவும் விளையாட்டுக்கு என்று நினைத்துக் கொண்டு “என் கிட்ட விளையாடாதீங்க. நான் வர மாட்டேன்” என்று அழும்பு செய்தார்.

“அக்கா... வாங்கக்கா ப்ளீஸ்... உண்மையாத்தான் சொல்றோம்” என்று ஒட்டுமொத்த வீடே வந்து அக்காவிடம் கெஞ்சியதும், “இந்த பிக் பாஸ்ஸிற்கு ரொம்ப தைரியம் வந்துடுச்சா. எனக்கு தகவல் சொல்லணும்னா. நேரா வந்து சொல்றது... அது என்ன போன்ல கூப்பிடறது... இப்ப நான் எழுந்து போகணுமா?” என்றெல்லாம் அலட்டிய வனிதா, முகத்திலிருந்த ஒப்பனை வஸ்துவுடன் அப்படியே நடந்து சென்றார். ‘ஒருவேளை கமலுக்குப் பதிலாக வனிதாவை வைத்து ஷோவை நடத்துவார்களோ... இருந்தாலும் இருக்கும்’ என்கிற ஆவலில் அனிதா உள்ளிட்டவர்கள், போன் பூத் கண்ணாடி வழியாக காதை வைத்து ஒட்டு கேட்கத் தயாராக இருந்தார்கள்.

ஆனால் செய்தி வந்தது, வனிதாவின் மகளிடமிருந்து. “நான் வீட்டுக்குப் போகணும்” என்று வனிதா கதறியதைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக மகள் செய்தி அனுப்பியிருக்கிறார். மகளின் பேச்சில் இருந்த முதிர்ச்சி கூட வனிதாவிடம் இல்லை. “நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளு. No Pain, No Gain. உங்களால முடிஞ்ச அளவிற்கு நல்லா விளையாடுங்க… சோர்ந்து போகாதீங்க” என்றெல்லாம் கான்வென்ட் ஆங்கிலத்தில் வந்திருந்த மகளின் குரலைக் கேட்டதும் மூக்கு விரிந்து கண்கலங்க உணர்ச்சிவசப்பட்டார் வனிதா. ஒரு தாயாக வனிதா இப்படி பரவசப்படுவதைப் பார்க்க நெகிழ்வாகத்தான் இருக்கிறது. ஆனால் தன் குழந்தைகளும் பார்க்கும் நிகழ்ச்சியில் தான் இப்படி அடாவடியாக நடந்து கொள்வதை சற்றாவது கட்டுப்படுத்திக் கொண்டு பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருப்போம் என்று ஏன் வனிதாவிற்குத் தோன்றவில்லை?

BB Ultimate - 24
BB Ultimate - 24

நல்ல மனிதர்களும் ஏமாற்றிய மனிதர்களும்

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்கிற தலைப்பில் ஒரு டாஸ்க் ஆரம்பித்தது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்த ஒரு நல்ல மனிதரைப் பற்றியும் மோசமான மனிதரைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும். (Angel vs Devil). வீடு கட்ட பணத்திற்காக அவஸ்தைப்படும் போது தானாக முன்வந்து உதவிய ஒரு நல்ல மனிதரைப் பற்றியும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிய முன்னாள் உறவு பற்றியும் பகிர்ந்து கொண்டார் தாமரை. இதைப் போலவே தனக்கு வாய்த்த முன்னாள் துணைவர் தந்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்த வனிதா, “எனக்கு கிடைத்த தேவதை என்னுடைய மகள்” என்று பெருமிதத்தில் ஆழ்ந்தார்.

“பிக் பாஸ் போகாத. திரும்பவும் பேரைக் கெடுத்துக்காதன்னு நெறைய பேரு எச்சரிச்சாங்க... ஆனா ஒரு ஃபிரெண்டு மட்டும் 'நீ தைரியமா போய்ட்டு வா... நீ நீயா இரு... என்ன இப்ப?'ன்னு தைரியம் சொல்லி அனுப்பிச்சாரு" என்று தன் நண்பரைப் பற்றி பகிர்ந்த ஜூலி, “எனக்கு நிறைய பேர் கெடுதல் பண்ணியிருக்காங்க... ஒரு பெரிய கம்பெனில சினிமா வாய்ப்பு கிடைச்சது. ‘ஜூலி நடிச்சா. நான் நடிக்க மாட்டேன்’ன்னு ஒருத்தர் சொல்லிட்டதால எனக்கு அந்த வாய்ப்பு போயிடுச்சு. அடுத்தவங்க வாய்ப்பை தட்டிப் பறிக்கறவன், அடுத்தவன் சோத்துல மண்ணைப் போடறவன்... இதெல்லாம் செய்யக்கூடாது. நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நெனச்சதில்லை. அந்த வகையில் நானே ஒரு ஏஞ்சல்தான்” என்று பெருமிதத்துடன் சொல்லி அமர்ந்தார் ஜூலி.

“எங்க அம்மாதான் எனக்கு தேவதை. ஆனா அவங்க இப்ப உளப்பிரச்சினைல இருக்காங்க...” என்று ஆரம்பித்த நிரூப், “என்னோட இன்னொரு தேவதை யாஷிகா... இப்ப நாங்க பிரிஞ்சுட்டோம். பேசி எடுத்த முடிவுதான். இருந்தாலும் அவ ஒரு நல்ல ஃபிரெண்ட்” என்று ‘மறக்க மனம் கூடுதில்லையே’ மோடில் நிரூப் உருக, கேமரா அபிராமியையே தொடர்ந்து காட்டியது. (நிரூப் பொசசிவ்னஸை கிளப்ப முயல்கிறாரோ?!). தன்னை மாடல் உலகத்திற்கு வழிகாட்டி அனுப்பி வைத்த ஒரு தோழிக்கு மனமார நன்றி சொன்ன பாலா, “என்னை பொண்ணுங்களுக்கு எதிரானவன்ற மாதிரியே பேசிப் பேசி எஸ்டாபிளிஷ் பண்றாங்க... இதெல்லாம் நல்லதுக்கு இல்லை” என்று சற்று கோபமாக பேச கேமரா வனிதாவையும் அனிதாவையும் காட்டி, போட்டுக் கொடுத்தது.

“சீசன் ஒண்ணு வர்றதுக்கு முன்னாடி ஒரு லேடி மேனேஜரை நம்பி எல்லாப் பொறுப்பையும் கொடுத்துட்டு வந்தேன். அவங்க எல்லாத்தையும் ஏமாத்திட்டாங்க. நிறைய இழந்துட்டேன். நான் கஷ்டப்பட்டு பாடல் எழுதி வாங்கின அரசு விருதுல தங்கம் இருந்ததால அதைக் கூட எடுத்துக்கிட்டாங்க. அதை மட்டுமாவது திருப்பிக் கொடுத்தா நல்லா இருக்கும். ஏன்னா அது என் படைப்பின் அங்கீகாரம்” என்று கலங்கிய சிநேகன், தன் தாயையும் காதல் மனைவியையும் தேவதைகளாகப் பார்க்கிறாராம்.

BB Ultimate - 24
BB Ultimate - 24

“இதெல்லாம் ஒரு சாப்பாடா?” – வனிதா vs தாமரை மோதல்

தாமரைக்கும் வனிதாவிற்கும் அடுத்த மோதல் ஆரம்பித்தது. முகத்தைச் சுளிப்புடன் வைத்துக் கொண்டு "சாப்பாடு மெனு. ரொம்ப சொதப்பலா இருக்கு” என்று வனிதா புகார் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் நீண்டது. “தேவையில்லாத வார்த்தைகளை விடாதீங்க. அதென்ன 'பொத்திக்கிட்டு இரு'ன்னு சொல்றீங்க. இதெல்லாம் சரியில்லக்கா” என்று தாமரையும் சண்டையை வார்ம்-அப் செய்ய, “அப்ப... என்ன பாஷைலதான் உன்கிட்ட பேசறது” என்று தன் குரலை இன்னமும் உயர்த்தினார் வனிதா.

‘கீரையும் அவித்த முட்டையும் சரியில்லாத காம்பினேஷன்’ என்பது வனிதாவின் அபிப்ராயம். பிறகு சிநேகனிடம் தனியாக அளித்த விளக்கத்தில் “கீரை, ரசம், உருளை தொக்கு, முட்டை, ஊறுகாய்ன்னு இவ்ளோ அயிட்டம் இருக்கு. அவங்க கொஞ்சம் அனுசரிச்சு சாப்பிட்டிருக்காமில்ல” என்று தாமரை சொன்ன போது நியாயமாத்தான் இருந்தது. “அவங்க வெரைட்டியா சாப்பிட்டு பழக்கப்பட்டவங்களா இருக்கும். விடு. தலைவர் பொஷிஷன்ல இருக்கறவங்க பொறுத்துதான் போகணும். இது பயம் இல்ல. மரியாதை” என்றெல்லாம் பேசி வனிதாவிற்குத்தான் மறைமுக சப்போர்ட் செய்தார் சிநேகன்.

சமையல் அணி செய்யத் திட்டமிருந்தது வேறு. ஆனால் ஒருங்கிணைப்புக் குளறுபடியால், கீரை வீணாகி விடக்கூடாதே என்று யாரோ உள்ளே புகுந்ததில் காம்பினேஷேன் மாறிவிட்டது போல. “அடுத்த முறை பார்த்துக்கங்கப்பா” என்று வனிதா தன்மையாகச் சொல்லியிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால், “சமையலைப் பத்தில்லாம் என்கிட்ட நீ பேசாத… அதுல என்கூட நீ போட்டி போட முடியாது. எனக்கு கூட கிராமத்து சொந்தக்காரங்க இருக்காங்க. நூறு வெரைட்டில விதம் விதமா சமைப்பாங்க” என்றெல்லாம் வாக்குவாதம் செய்த வனிதா “இதென்ன பழைய ரசமா?” என்று முகத்தைச் சுளித்தபடி சாப்பாட்டைக் கொண்டு போய் குப்பையில் கொட்டினார்.

BB Ultimate - 24
BB Ultimate - 24

'இஷ்டப்பட்டால்தான் டாஸ்க் செய்வேன், அதிலும் என் இஷ்டத்திற்குத்தான் ஆடுவேன், விருப்பமில்லையென்றால் டாஸ்க் செய்ய மாட்டேன், காஃபித்தூளுக்காக போராடுவேன், விருப்பம் போல் தூங்குவேன், பிக் பாஸையே இடது கையால்தான் ஹாண்டில் செய்வேன்... என் கெரகம். இதுங்க கூடல்லாம் மாரடிக்க வேண்டியிருக்கு...' என்று ஏகப்பட்ட அழிச்சாட்டிய விதிகளைப் போடும் வனிதா, ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்றே தெரியவில்லை. அடுத்த முறை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இந்த ஷோவை நடத்தினால் மட்டுமே வனிதாவை அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மனிதனின் கூடிவாழும் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையே. அப்படியான ஒரு விளையாட்டில் கூட தன் செளகரியங்கள், சொகுசுகள் சிறிது கூட குறையக்கூடாது என்று வனிதா எப்படி எதிர்பார்க்கிறார்?

“ஏம்ப்பா இந்தச் சாப்பாடு அத்தனை மோசமாவா இருக்கு?” என்று தாமரை பரிதாபத்துடன் பாலாவைக் கேட்க “நல்லாத்தான் இருக்கு. அதனாலதான் ரெண்டாவது முறை போட்டு சாப்பிடறேன்” என்று சொன்ன பாலா, வனிதா கத்திக் கொண்டிருக்கும் போதே தட்டை நக்கிச் நக்கி சாப்பிட்டது மட்டுமல்லாமல், மீண்டும் எழுந்து சென்று உணவைப் போட்டுக் கொண்டது நல்ல குறும்பு. வனிதா கத்தும் போது அவருக்கு ஆதரவாக நின்ற பாலாஜியும் சிநேகனும் "பொறுமையா பதில் சொல்லு” என்று தாமரைக்குத்தான் புத்திமதி சொன்னார்களே தவிர “நீங்களும் கொஞ்சம் அட்ஜட்ஸ்ட் பண்ணிக்கோங்களேன்” என்று வனிதாவிடம் மறந்தும் சொல்லவில்லை.

சாத்தான் vs தேவதை – லக்ஸரி டாஸ்க்கை பற்ற வைக்கும் பிக் பாஸ்

அடுத்ததாக ‘Demon vs Angel’ என்கிற தலைப்பில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பாலா தலைமையிலான அணி ‘தேவதைகள்’ அணியாக இருக்கும். நிரூப் தலைமையிலான அணி ‘சாத்தான்களாக’ இருக்கும். தேவதை மற்றும் சாத்தான்களின் குணாதிசயங்களைப் பற்றிய வரையறைப் பட்டியலை வாசித்தார் அனிதா. அதில் சாத்தான்களின் கேரக்டர் பற்றி அனிதா வாசிக்கும் போது அந்த வீட்டில் உள்ள ஒருவருக்கு அதில் பல குணாதிசயங்கள் மிக கச்சிதமாகப் பொருந்துவதை நம்மால் உணர முடிந்தது. “தேவதைகள் சத்தமாகப் பேச மாட்டார்கள்” என்று அனிதா விதியை வாசித்த போது தாமரையைப் பார்த்து ஒட்டுமொத்த வீடே சிரித்தது. இன்னொரு சமயத்தில் வனிதா கூட ஏதோ முனகினார். ஆனால் அவருக்கே பல விஷயங்கள் பொருந்தும் என்பதை உணர்ந்தாரா என்று தெரியவில்லை.

BB Ultimate - 24
BB Ultimate - 24

இரண்டு அணியிலும் ஒரு முதியவரும் ஒரு குழந்தையும் இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. “வயசானவங்க கேரக்ட்டரை பாலாஜிக்கு தந்துடலாம்” என்று சொல்லப்பட்ட போது பாலாஜியும் ஒப்புக் கொண்டார். ஆனால் இதை மறுத்து நிரூப் சொன்ன ஐடியா நன்றாக இருந்தது. “இல்லண்ணே. நீங்க இருக்கற வயசுலயே செஞ்சா அதில் என்ன சுவாரஸ்யம்? உங்களுக்கு காமெடி வரும். குழந்தையா பண்ணுங்க. வித்தியாசமா இருக்கும். டாஸ்க் நல்லா வரும்” என்று சொன்ன நிரூப், குழந்தை வேடத்திற்கு அடம்பிடித்த அபிராமியிடம், “நீ ஏற்கெனவே அப்படித்தான் பண்ணிட்டு இருக்கே” என்று மறுத்து சொன்னது சூப்பர். பிறகு வயதான வேடத்தை தான் ஏற்றுக் கொண்டார் நிரூப்.

பாலா அணியிலும் பாத்திரத் தேர்வுகள் ரணகளமாக நடந்தன. “குழந்தை வேடத்தை வனிதா செய்யட்டும்” என்று பாலா சொல்ல அதற்கு ஆர்வமாகத் தலையாட்டினார் வனிதா. ஆனால், "எனக்கு பேபி வேணும்” என்று அடம் பிடித்தார் சுருதி. “அடுத்த ரவுண்ட்ல மாத்திக்கலாம்” என்று சமாதானம் சொன்னவர்கள், “பிக் பாஸ்... அப்படி மாத்திக்கலாம்... இல்லையா...” என்று இந்த எளிய விஷயத்திற்காக பிக் பாஸிடம் சந்தேகம் வேறு கேட்டார்கள். (அட! சீனியர்களா!).

“நான் வீட்டுக்குப் போகணும்” என்று அடம்பிடிக்கும் வனிதாவை உற்சாகப்படுத்துவதற்காகவோ என்னவோ, அவரை தனியாக அழைத்த பிக் பாஸ் “உங்களுக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க். தேவதைகள் தங்களின் குணாதிசயங்களை சரியாகப் பின்பற்றுகிறார்களா, எங்காவது மீறுகிறார்களா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரு குறிப்பேட்டில் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு தீர்ப்பு அளிக்கும் நாளில் அவற்றைச் சொல்லலாம்” என்று ரகசிய டாஸ்க் தர 'சூப்பர்வைசர் வேலை’ என்பதால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார் வனிதா.

BB Ultimate - 24
BB Ultimate - 24

“போன லக்ஸரி டாஸ்க்தான் சொதப்பிடுச்சு. இந்த டாஸ்க்கை சுவாரஸ்யமா பண்ணுவோம்” என்று நிரூப் ஆர்வமாக, “அதுக்காக நீ பண்ற கலாட்டாவையெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது. கிரியேட்டிவ்வா பண்ணணும்” என்று வனிதா குறுக்கே கட்டையைப் போட “சரி. அப்படி என்ன பண்ணலாம்? நீங்களே சொல்லுங்க... பார்க்கலாம்” என்று வார்ம்-அப்பை ஆரம்பித்தார் நிரூப்.

ஆக... ரணகளமான தேவதை – சாத்தான் ஆட்டம் ஆரம்பம். இதில் தேவதை அணியைச் சேர்ந்த வனிதா, கோபமுற்று நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறும் அளவிற்கு என்னதான் கலாட்டா நடந்தது? காத்திருந்து பார்ப்போம்.