Published:Updated:

BB Ultimate 27: கோவம் வரமாதிரி டாஸ்க் பண்ணாதீங்க; ஜூலியைத்தான் எல்லாரும் ஈஸியா அட்டாக் பண்ணிடறாங்க!

BB Ultimate 27

“இனிமே Worst performer வாங்க மாட்டேன்னு உறுதிமொழி எடுங்க” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக ஒரு குரல் கேட்டது. யாரென்று பார்த்தால் அது ஜூலி. (நேரம்தான் தாயி!).

Published:Updated:

BB Ultimate 27: கோவம் வரமாதிரி டாஸ்க் பண்ணாதீங்க; ஜூலியைத்தான் எல்லாரும் ஈஸியா அட்டாக் பண்ணிடறாங்க!

“இனிமே Worst performer வாங்க மாட்டேன்னு உறுதிமொழி எடுங்க” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக ஒரு குரல் கேட்டது. யாரென்று பார்த்தால் அது ஜூலி. (நேரம்தான் தாயி!).

BB Ultimate 27
‘அரக்கர் – தேவதை’ என்கிற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஒருவழியாக முடிந்து தொலைத்தது என்பதுதான் நேற்றைய எபிசோடின் ஹைலைட். வேறு ஒன்றுமே உருப்படியாக நிகழவில்லை.
இந்த டாஸ்க் இன்னமும் ஒரு நாள் தொடர்ந்திருந்தால் கூட, பார்வையாளர்களில் பெரும்பாலோனோர் கொலைவெறியுடன் ‘பீஸ்ட்’ மோடிற்கு மாறியிருப்பார்கள். அப்படியொரு அசுவாரஸ்யம். நிரூப் மட்டும் முதியவர் வேடத்தில் தனது கேரக்ட்டரை வித்தியாசமாக செய்ய முயன்றிருந்தார்.
BB Ultimate 27
BB Ultimate 27

நாள் 26-ல் நடந்தது என்ன?

“தினமும் குளிக்கிறியோ... இல்லையோ. நெத்தில மட்டும் அம்சமா பொட்டு வெச்சுக்கறே நாராயணா” என்கிற கவுண்டமணியின் காமெடி மாதிரி, டாஸ்க் சுமாராக இருந்தாலும் கூட தினமும் காலையில் அட்டகாசமான பாடலை ஒலிக்க விட்டு விடுகிறார் பிக் பாஸ். ‘நாங்கள் பச்சை பச்சையா கேள்விகள் கேட்டால் சரியா... தவறா?’ என்று தூக்கலான பெண்ணிய வாசனையுடன் ஒரு பாடல் இன்று ஒலித்தது. (எல்லாக் கலர்லயும் கேளுங்க தாயி!)

அரக்கர் டாஸ்க்கை பாசிட்டிவ்வாக மாற்றிய தாமரை

வழக்கமாக படுக்கை விரிப்புகளைக் கூட சரி செய்யாமல் கிளம்பிவிடும் கனவான்களின் வேலைகளையெல்லாம் “பாவம் தம்பிங்க...” என்று முனகிக் கொண்டே தாமரைதான் பொதுவாக செய்து முடிப்பார். ஆனால் இன்று அரக்கி கேரக்ட்டரில் இருந்த தாமரை, நிரூப்பிடம் பல வேலைகளை அதட்டி அதட்டி வாங்கிக் கொண்டிருந்த காட்சியைப் பார்க்க ‘இன்பமாய் இருக்குதய்யா’ என்று இருந்தது. இந்த வகையில் டாஸ்க்கை உபயோகமாக பயன்படுத்திக் கொண்டது தாமரையின் புத்திசாலித்தனம். வேலையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையில் இருந்து எஸ்கேப் ஆகி பாத்ரூமில் ஒளிந்து விளையாடினார் அபிராமி.

BB Ultimate 27
BB Ultimate 27

ஜூலியிடம் வேலை வாங்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த சிநேகன், திடீரென்று உண்மையாக ‘ஃபீஸ்ட்’ மோடிற்குச் சென்று ஆவேசமாகி ஜூலியை வெயிலில் அமர வைத்து தலையில் எண்ணைய் உள்ளிட்டவைகளை தடவி போர்வையால் மூடி வைத்தார். (ஜூலி என்ன தம் பிரியாணியா?!). பிக் பாஸிற்கு ஜூலியைப் பற்றியெல்லாம் கவலையில்லை. தனது ஜோலிதான் முக்கியம். “மைக்ல தண்ணி படாம பார்த்துக்கங்க” என்று தன்னுடைய காஸ்ட்லி சமாச்சாரங்களை பாதுகாத்துக் கொள்வதில் மட்டும் கவனமாக இருந்தார். (இதைத்தானே வனிதா அக்காவும் செஞ்சிட்டு இருந்தாங்க?!).

அபிராமியின் முகத்தில் முட்டையை ஊற்றிய பாலா, “அது வெயில்ல பட்டு ஆஃப் பாயில்லா மாறுகிற வரைக்கும் அப்படியே இருக்கணும்” என்று இம்சை தர, அதிலிருந்து விதம் விதமாக தப்பித்துக் கொண்டிருந்தார் அபிராமி. ஒரு வழியாக இந்த டாஸ்க் நிறைவு பற்றிய அறிவிப்பு வந்ததும் குத்தாட்டம் போட்டு கொண்டாடினார் ஜூலி. சீக்ரெட் டாஸ்க் பற்றி வெளியில் சொன்னதால் ‘உனக்கு அறிவிருக்கா?” என்று ஜூலியை வசைபாடிக் கொண்டிருந்தார் நிரூப். (ஜூலியை எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யலாம் என்பதை அந்த வீட்டில் பொது விதியாகவே ஆக்கிவிட்டார்கள் போல!).

BB Ultimate 27
BB Ultimate 27

மூன்று மோசமான அரக்கர்கள் - தேவதைகள்

"டாஸ்க்கில் மோசமாக பங்கேற்ற மூன்று நபர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்று அறிவிப்பு செய்த பிக் பாஸ் இந்த முறை செல்ஃப் நாமினேஷனுக்கு அனுமதியளித்து ஆச்சர்யப்படுத்தினார். “எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா” என்று கதறிய சிம்புவைப் போல “விளையாட்டுக்கு கூட என்னால் அரக்கியா நடிக்க முடியாது. எல்லோரும் பாவம்...” என்று அன்பின் திருவுருமாக மாறியிருந்த அனிதா, தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டார். 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்கிற பழமொழி மாதிரி, இந்த வீட்டில் இன்னொரு ஜூலியாக சுருதியை கையாள்கிறார்கள். எனவே வருவோர், போவோர் எல்லாம் சுருதியை நாமினேட் செய்தார்கள்.

BB Ultimate 27
BB Ultimate 27

“அனிதாவோட பிரேக்கிங் பாயின்ட்டை கண்டுபிடிக்கறதுக்காக நான் குருதிப்புனல் கமல் மாதிரி விசாரிச்சுட்டு இருந்தேன். அந்த ஆப்ரேஷனை சுருதி வந்து கெடுத்துட்டாங்க” என்று அபாண்டமாக புளுகினார் பாலா. ஒருவேளை அது பாலாவின் உத்தியாகவே இருக்கட்டும். இந்த டாஸ்க்கின் நடுவே பழைய பஞ்சாயத்துகளைக் கிளறிக் கொண்டிருந்த விஷயம், ‘மக்களுக்கு சுவாரஸ்யமாக இருந்ததா?’ என்கிற நோக்கில் பார்த்தால் பாலா அவுட். தன்னுடைய முறை வரும் போது பாலாவின் புகாரை சரியான முறையில் எதிர்கொண்டார் சுருதி.

பிக் பாஸ் ஆலோசனை மையம்

அனிதாவைப் போலவே வேறு சிலரும் தங்களையே நாமினேட் செய்து கொண்டு பாவமன்னிப்பு கோரினார்கள். தாடி பாலாஜிக்கு காமெடி வரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, நிரூப் தந்த ஐடியா போல் ‘குழந்தையாக’ நடிக்கக் கூட அவர் ஏதும் முயற்சி செய்யவில்லை இறுதியில் அனிதா, பாலா, பாலாஜி ஆகிய மூவரும் Worst Performer-களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
BB Ultimate 27
BB Ultimate 27

“இவர்களுக்கு என்ன தண்டனைன்னா... இவங்க டாஸ்க்ல என்னென்னலாம் தப்பு பண்ணாங்கன்னு மத்தவங்க சுட்டிக் காட்டி ஆலோசனை சொல்லணும். தண்டனை பெற்றவங்க இந்த ஆலோசனைகளைக் கேட்டுக்கிட்டு ‘இனி இப்படி நடக்க மாட்டோம்’ன்னு பொதுவில் வந்து உறுதிமொழி எடுத்துக்கணும்” என்று சாத்வீகமான, ஆனால் வலி மிகுந்த தண்டனையை பிக் பாஸ் அறிவிக்க “இதுக்குப் பதில் நீங்க எங்களை கழுதை மேல ஏத்தி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியிருக்கலாம்” என்று பரிதாபமாகக் கதறினார் அனிதா.

ஆலோசனை மையம் துவங்கியது. அனிதாவை அமர வைத்த நிரூப் “டாஸ்க்ல என்ன கொடுத்தாங்களோ அதை மட்டும் பண்ணுங்க. அன்னை தெரசா மாதிரில்லாம் ஃபர்பார்ம் பண்ண டிரை பண்ணாதீங்க” என்று சொல்ல, நிரூப் தனது நண்பர் என்பதால் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டார் அனிதா. “உங்களுக்கு குழந்தை கேரக்ட்டர் கொடுத்தா வித்தியாசமா இருக்கும். நல்லா பண்ணுவீங்கன்னு நெனச்சேன். ஆனா செய்யலையே?” என்று நிரூப் கேட்ட போது “ஆமாப்பா தம்பி... தப்புதான்” என்று தலையாட்டிக் கொண்டார் பாலாஜி. “டேய்... நீங்கள்லாம் வந்து எனக்கு புத்திமதி சொல்றபடி ஆயிடுச்சுல்ல” என்கிற மாதிரியே தெனாவெட்டாக அமர்ந்திருந்தார் பாலா. “அண்ணே... உனக்குத் தெரியாத விஷயமாண்ணே?” என்று அபிராமி உள்ளிட்டவர்கள் வந்து பாலாவிடம் ஆசி பெற்றுச் சென்றார்கள்.

மக்கள் தங்களைத் திருத்திக் கொண்டு உறுதிமொழி ஏற்க வேண்டிய தருணம். “உங்கள் அறிவுரைக்கு நன்றி. இனிமே புது பாலாஜியைப் பார்ப்பீங்க” என்று சபதம் ஏற்ற பாலாஜி, கழுத்தை சீவுவது போன்ற ‘புஷ்பா’ திரைப்பட ஹீரோவின் மேனரிஸத்தை காட்டி விட்டுச் சென்றார். (ஆரம்பம்லாம் நல்லாத்தான் இருக்கு!). “டாஸ்க் சரியா செய்யலைன்னு நிரூப் என்னை கழுவி ஊத்திட்டான். இனிமே டாஸ்க்கை டாஸ்க்கா மட்டும் பார்ப்பேன். வாங்கின காசுக்கு ஒழுங்கா வேலை செய்வேன்” என்று உறுதிமொழி எடுத்தார் அனிதா. “நான் போன சீசன்லயே நிறைய முறை Worst performer வாங்கியிருக்கேன். டாஸ்க் செய்யாம இல்லை. என் பாணில வித்தியாசமா செஞ்சதுக்காக” என்று பெருமிதப்பட்ட பாலா, "பாலாஜி முருகதாஸாகிய நான்” என்று கையை உயர்த்தி பாகுபலி ரேஞ்சிற்கு உறுதிமொழி எடுத்தார்.

BB Ultimate 27
BB Ultimate 27

ஒத்தையாகத் தராமல் கத்தையாக அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்

“இனிமே Worst performer வாங்க மாட்டேன்னு உறுதிமொழி எடுங்க” என்று முந்திரிக்கொட்டைத்தனமாக ஒரு குரல் கேட்டது. யாரென்று பார்த்தால் அது ஜூலி. (நேரம்தான் தாயி!). “அப்படில்லாம் சொல்ல முடியாது. வாங்கினாலும் வாங்குவேன்” என்று வித்தியாசமாக சொல்லி விட்டுச் சென்றார் பாலா. அடுத்த டாஸ்க்கிலாவது இவர்கள் ‘சுவாரஸ்யமாக’ ஏதாவது செய்வார்களா? ம்ஹூம்... நம்பிக்கையே இல்லை.

நியாயமாகப் பார்த்தால் இந்த டாஸ்க்கை இவர்கள் செய்த லட்சணத்திற்கு பிக் பாஸ் அரை டஜன் முட்டை மட்டுமே பரிசாகத் தந்திருக்க வேண்டும். ஆனால் ‘சிறப்பாகச் செய்தீர்கள்” என்று பாராட்டி விட்டு மொத்த மதிப்பெண்களையும் அள்ளித் தந்தார் பிக் பாஸ். சொதப்பி வைக்காமல் தந்திருந்த காசுக்குள் மக்கள் ஷாப்பிங்கைக் கச்சிதமாக முடித்த காட்சியோடு எபிசோட் நிறைவுற்றது.

BB Ultimate 27
BB Ultimate 27
அதற்குள் கட்டுரை முடிந்துவிட்டதா என்று நினைக்காதீர்கள். மக்கள் மீது கருணை கொண்டு பிக் பாஸ் எடிட்டிங் டீம் பலவற்றை வெட்டித் தள்ளியதில் மிச்சமிருந்தது இவ்வளவுதான். இனி பிரமோவை மட்டுமே பார்த்தால் கூட போதும் போலிருக்கிறது.