Published:Updated:

BB Ultimate 34: வில்லங்க கமென்டால் பற்றவைத்த சுரேஷ்; புலம்பித் தள்ளிய அனிதா... நோட் பண்ணுங்க சிம்பு!

BB Ultimate 34

விதவைத் திருமணம் குறித்துப் பேசி ‘பெரியாரின் பேத்தி’ என்று கமலின் வாயாலேயே கடந்த சீசனில் பட்டம் வாங்கியவர் அனிதா. இந்தப் பிரச்னை அப்போதே அனிதாவிற்கும் சுரேஷிற்கும் இடையே பெரிதாக வெடித்தது. எனில் இந்த சீசனிலும் சுரேஷ் அதைத் தொடுகிறார் என்றால் வில்லங்கம் பிடித்த ஆசாமிதான்.

Published:Updated:

BB Ultimate 34: வில்லங்க கமென்டால் பற்றவைத்த சுரேஷ்; புலம்பித் தள்ளிய அனிதா... நோட் பண்ணுங்க சிம்பு!

விதவைத் திருமணம் குறித்துப் பேசி ‘பெரியாரின் பேத்தி’ என்று கமலின் வாயாலேயே கடந்த சீசனில் பட்டம் வாங்கியவர் அனிதா. இந்தப் பிரச்னை அப்போதே அனிதாவிற்கும் சுரேஷிற்கும் இடையே பெரிதாக வெடித்தது. எனில் இந்த சீசனிலும் சுரேஷ் அதைத் தொடுகிறார் என்றால் வில்லங்கம் பிடித்த ஆசாமிதான்.

BB Ultimate 34
நிரூப் – சுருதி திருமணத்தோடு லக்ஸரி பட்ஜெட் முடிந்ததில் நமக்கு பெரிய நிம்மதி. நல்ல வேளை, கல்யாணச் சாப்பாடு போடும் நேரத்திலும் “அப்பளம் வேணுமா... காசு கொடு” என்று யாரும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் டாஸ்க் முடிந்த பிறகு ஒவ்வொருவர் மனதிலும் உள்ள புகைச்சல்கள், பரமபத பாம்பு போல பெரிதாக வெளியே ஓடி வர ஆரம்பித்தன.

நாள் 33-ல் நடந்தது என்ன?

சிம்பு தன் கை விரல்களைக் காட்டும் விதத்தில் பல அர்த்தங்கள் இருக்கிறதாம். இந்தச் செய்தியை சமூகத்திற்கு விளக்கும் அற்புதமான பாடலோடு பொழுது விடிந்தது. காலையிலேயே ‘காலை கலாட்டா’ என்கிற பெயரில் கலாட்டாவை ஆரம்பித்தார் பிக் பாஸ். நாட்டுப்புற இசைக்கு அனிதா நடனம் சொல்லித் தர வேண்டுமாம். இந்த அறிவிப்பை வாசித்த சுரேஷ், “அனிதா கேட்டா... ஒரே போடா போடுவாங்க” என்பது போல் ஒரு கமெண்ட்டை சொல்லி விட்டு நகர, நாட்டுப்புற இசைக்குப் பதிலாகக் கண்களை உருட்டி கதகளி ஆரம்பித்துவிட்டார் அனிதா.

BB Ultimate 34
BB Ultimate 34

வெளியே வந்த ‘ஒரிஜினல்’ அனிதா

“எல்லோருக்குமே ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கும்” என்று குருதிப்புனல் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்த எல்லையை அனிதா இப்போது எட்டிவிட்டார். கடந்த சீசனில் எமோஷனலாக செய்த தவறுகளை இந்த சீசனில் செய்ய மாட்டேன்’ என்பதை அடிக்கடி சொல்லி வந்தார் அனிதா. ஆனால் ஒரு மாதம் எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்டி விட்டாலும் இப்போது அசல் அனிதா வெளிப்படத் துவங்கியிருக்கிறார். அவரால் இந்த அழுத்தத்தை தாங்க முடியவில்லை. சுரேஷ் வெளியில் போய்விட்டு வந்திருப்பதால், அதற்கேற்ப தன் கருத்துக்களைச் சொல்கிறார் என்பது அனிதாவின் முதல் சந்தேகம், தன்னுடைய இமேஜ் வெளியில் தவறாக போய் விடுமோ என்பது இரண்டாவது சந்தேகம். இது போன்று பல விஷயங்கள் அனிதாவின் மனதைக் குடைந்து எடுப்பதால் எதிராளியிடம் நீண்ட விளக்கத்தைச் சொல்லி ரிஜிஸ்டர் செய்து விட்டு பின்குறிப்பாக அழச் சென்று விடுகிறார்.

பிக் பாஸ் விளையாட்டு இப்படித்தான் என்பது அனிதாவிற்குத் தெரியும். எனில் அவர் அதற்கான துணிச்சலோடு ‘அல்டிமேட் சீசனுக்கு’ வந்திருக்க வேண்டும். இல்லையெனில் இந்த வாய்ப்பை மறுத்திருக்க வேண்டும். “ஏன் என்னோட குடும்பம் வெளியில் கஷ்டப்படணும்?” என்று மிகையான கற்பனைகளுடன் அவர் அவதிப்படுவது, அவருக்குள்ள மனச்சிக்கலைக் காட்டுகிறது.

தெரியாமல் புதைகுழியில் விழுந்துவிட்ட ஒருவன், ஆடாமல் அசையாமல் இருந்தால் அந்த வழியாக வரும் எவராவது ஒருவரால் காப்பாற்றப்படக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது. ஆனால் பதற்றத்தில் வெளியே வர முயன்றால் புதைகுழி இன்னமும் ஆழமாக அவரை உள்ளே இழுத்துக் கொள்ளும். அனிதாவின் நிலையும் இதுதான். விளக்கம் என்கிற பெயரில் அவர் நிகழ்த்தும் அநாவசியமான பொழிப்புரைகள், பெரும்பாலான சமயங்களில் அவருக்கே எதிராக ‘சேம் சைட் கோல்’களாகத்தான் மாறுகின்றன. எல்லாவற்றையும் லாஜிக்கோடு யோசிக்கும் அனிதாவால் இதை யோசிக்க முடியாதது ஆச்சரியம்.

BB Ultimate 34
BB Ultimate 34

பிக் பாஸ் ஆட்டத்தைச் சிறப்பாக ஆடும் நிரூப்

அனிதாவைப் போல் ஒவ்வொருவரும் தங்களுக்கான மனச் சிக்கல்களுடன் அவஸ்தைப்படும் போது இந்த ஆட்டத்தை மிகத் தெளிவாக உணர்ந்திருப்பவர் நிரூப் மட்டும்தான். இது ‘உணர்ச்சிகளுடன் ஆடப்படும் ஆட்டம்’ என்பதைத் தெளிவாக உணர்ந்திருப்பதால்தான் பல நேரங்களில் மிக கூலாக இருக்கிறார். தன் மீதான வசைகளை, அவதூறுகளைக் கூட அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ‘இந்த ஆட்டத்தின் போக்கு அவ்வாறுதான் மனிதர்களை இயங்க வைக்கும், இவை தற்காலிக உணர்வு’ என்பதை அவருடைய ஆழ்மனது தெளிவாக அறிந்திருக்கிறது. நிரூப்பின் இந்தப் பாணியை, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கூட பின்பற்றினால், பல விஷயங்களில் நாம் மனரீதியாக அவஸ்தைப்படத் தேவையிருக்காது.

BB Ultimate 34
BB Ultimate 34

“என்னை எப்படில்லாம் அடிச்சாங்க தெரியுமா?" – சிநேகன் கதறல்

ஓகே... அனிதா vs சுரேஷ் சண்டைக்குத் திரும்புவோம். சுரேஷ் சொன்ன கமென்டைக் கேட்டு கொந்தளிப்பான அனிதா “எல்லாத்துலயும் உள்ளர்த்தம் வெச்சு பேசறாரு” என்று கோபம் காட்ட “எல்லாத்துலயும் தப்பு கண்டுபிடிச்சா எப்படி? நான் சாதாரணமாத்தான் சொன்னேன். இனிமே உன் கூட பேசினா செருப்பைக் கழட்டி அடி” என்று ஓவர்ஆக்ட் செய்தார் சுரேஷ். பிறகு தன் கிழவிப் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு "இப்படியொரு பொண்ணை எங்கயும் பார்த்ததில்ல” என்று விதம் விதமாக அனத்தி பழிவாங்கினார். “சுரேஷ் தாத்தா சொல்றதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணாதீங்க” என்கிற சரியான ஆலோசனையை நிரூப்பும் சுருதியும் அனிதாவிற்கு வழங்கினார்கள்.

“நேத்து நைட்டு என்னைப் பத்தி எவ்வளவு கழுவி ஊத்தினாங்க தெரியுமா... பழைய சிநேகனா இருந்திருந்தா அவ்வளவுதான்...” என்று அனிதாவிற்கு ஆறுதல் சொல்லும் நோக்கில் தன் புலம்பலையும் இணைத்துக் கொண்டார் சிநேகன். சண்டைக்கு இறங்கினால், தன் மரியாதைதான் கெடும் என்று சிநேகன் நினைப்பது சரிதான். ஆனால் எதிர்வினையாற்ற வேண்டிய சமயங்களில் கூட அமைதியாக இருந்து விடுவது அவருக்குத்தான் ஆபத்தாக முடியும். அனிதா மாதிரி நீளமான பொழிப்புரையும் தரத் தேவையில்லை. சிநேகன் மாதிரி அமைதியாகவும் இருக்கத் தேவையில்லை.

“ஒரு மாசம் பொறுத்துக்கிட்டேன். எதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு நெனச்சேனோ அதெல்லாம் இப்ப பண்றேன். இதனால என் குடும்பம் பாதிக்கணுமா?" என்றெல்லாம் மிகையாகக் கற்பனை செய்து கொண்டு புலம்பிய அனிதாவிடம் “இப்ப நீ என்ன தப்பு பண்ணிட்டே... எமோஷன் ஆவறது மனித இயல்புதான்” என்று நிரூப் சொன்ன சமாதானம் அருமை. அனிதா ஒருபக்கம் அழுது கொண்டிருப்பது போதாமல், இன்னொரு பக்கம் தன் மகனை நினைத்து தாமரை அழுது கொண்டிருந்தார். ‘பிக் பாஸ் வீட்டை விட்டு போ மாட்டேன்’ என்று இந்த சீசனிலும் சொல்லும் தாமரைக்கு இப்போதுதான் குடும்ப நினைவு வந்திருக்கிறது போல.

BB Ultimate 34
BB Ultimate 34

திருமணப் பந்தியில் ஒரு புரட்சிக் கலாட்டா

ஒருவழியாக இரண்டு குடும்பமும் ராசியாகி நிரூப்பிற்கும் சுருதிக்கும் திருமணம் நடந்துவிட்டது போல. இது தொடர்பான காட்சிகளை பிரமோவில் காட்டிவிட்டு மெயின் எபிசோடில் கல்யாணச் சாப்பாடு காட்சிகளைத்தான் காட்டினார் பிக் பாஸ். ஏனெனில் சாப்பாடு சமயத்தில் ஒரு பிரச்னை நடந்தது. அதுதானே பிக் பாஸிற்கு முக்கியம்?! உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அனிதா தனக்குப் பரிமாறாமல் போனதை இடித்துரைக்கும் விதமாக “வெள்ளைப் புடவை கட்டியிருக்கறவங்களை இப்படி ஒரமா உக்கார வெக்கறது வழக்கம்தான்” என்று வில்லங்கமான கமென்ட்டை சுரேஷ் சொல்லி விட்டார். சுரேஷின் பற்ற வைக்கும் காரியங்கள் சில சமயங்களில் ஜாலியாக இருந்தாலும் பல சமயங்களில் ஊசிக்குப் பதிலாக கடப்பாறையில் குத்துவது போன்ற வன்மத்துடன் இருக்கிறது.

விதவைத் திருமணம் குறித்துப் பேசி ‘பெரியாரின் பேத்தி’ என்று கமலின் வாயாலேயே கடந்த சீசனில் பட்டம் வாங்கியவர் அனிதா. இந்தப் பிரச்னை அப்போதே அனிதாவிற்கும் சுரேஷிற்கும் இடையே பெரிதாக வெடித்தது. எனில் இந்த சீசனிலும் சுரேஷ் அதைத் தொடுகிறார் என்றால் வில்லங்கம் பிடித்த ஆசாமிதான். (சிம்பு இதை எப்படிக் கையாள்வார் என்ற ஆர்வம் இப்போதே மேலிடுகிறது.)
BB Ultimate 34
BB Ultimate 34

“நான் அப்படி நினைப்பேனா... நான் அப்படி இல்லைன்னு ஊருக்கே தெரியும். இப்படில்லாம் கேவலமா கேம் ஆடக்கூடாது" என்பதை மனக்கொந்தளிப்புடன் திரும்பத் திரும்ப சொன்ன அனிதா, பிறகு தனியாகச் சென்று அழத் துவங்கி விட்டார். தாமரை, சுருதி உள்ளிட்டவர்கள் “நாங்க அப்படி நினைக்கலை” என்று சமாதானம் சொன்னார்கள். ஆனால் சிநேகனும் பாலாஜியும் சுரேஷூடன் இணைந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நீங்கள் செய்தது தவறு’ என்று அவர்கள் சுரேஷை கண்டிக்கவில்லை. ஆக, அவரவர்களின் சொந்த அஜெண்டாவுடன்தான் ஒவ்வொருவரும் இயங்குகிறார்களே தவிர, பொது நியாயத்தை சுட்டிக் காட்டும் விஷயம் அரிதாகத்தான் நடக்கிறது. நம் சமூகமும் பிக் பாஸ் வீட்டைப் போலத்தானே?!

“ஹப்பாடா... கல்யாணப் பந்தில ஒரு மேட்டர் தேறுச்சு” என்று திருப்தியடைந்த பிக் பாஸ், “இத்துடன் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் முடிகிறது” என்று அறிவித்து நம் வயிற்றில் பால் வார்த்தார். அனிதா கார்டன் ஏரியாவில் சென்று கதறிக் கொண்டிருந்தாலும் வீட்டின் உள்ளே எதற்கும் அசராமல் மட்டன் சாப்பாட்டை வெயிட்டாக பிடித்துக் கொண்டிருந்தார் நிரூப். (என் இனமடா நீ!).

BB Ultimate 34
BB Ultimate 34

“எனக்கு எதிரா என்னமோ நடக்குது... வெளில என்னைத் தப்பா காட்டறாங்க போல. நான் வீட்டுக்குப் போகணும்” என்று அநாவசியமான கற்பனையோடு அனிதா ஒருபக்கம் கதற “எதுவாக இருந்தாலும் மூஞ்சிக்கு நேரா சொல்லிடணும்... அதுதான் நம் பாலிசி” என்று தன் அபத்தத்திற்குத்தானே நியாயம் கற்பித்துக் கொண்டிருந்தார் சுரேஷ்.

“நாம யாரு வம்புக்கும் தும்புக்கும் போறதில்ல” – பிக் பாஸ்

உண்ட மயக்கத்தில் மக்கள் மந்தமாக படுத்து உருண்டு கொண்டிருக்க, ‘இது வேலைக்கு ஆகாது’ என்று நினைத்த பிக் பாஸ், அடுத்த நெருப்பைப் பற்ற வைத்தார். அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டி. கார்டன் ஏரியாவில் உள்ள ஒரு செட்டப் மரத்தில் போட்டியாளர்களின் புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருக்கும். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒரு பெடஸ்டலில் கத்தரிக்கோல்கள் வைக்கப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடிக்கும் போது யார் அந்தக் கத்தரிக்கோலை முதலில் எடுக்கிறாரோ, அவர் சென்று ‘யார் தலைவராக வேண்டாம்’ என்று நினைக்கிறாரோ, அவரின் புகைப்படத்தை கத்தரித்து அப்புறப்படுத்தலாம். இந்த விளையாட்டில் இறுதியில் எவருடைய இரண்டு புகைப்படங்கள் மிஞ்சுகிறதோ, அவர்கள் அடுத்த கட்டப் போட்டிக்குத் தகுதியாவார்கள்.

BB Ultimate 34
BB Ultimate 34
இந்த விளையாட்டில் தலைமைத்துவம் உள்ளவர்களைத் தேடுவதற்குப் பதிலாக, தனிப்பட்ட பகைகள்தான் அதிகம் வெளிப்பட்டன. “நீ நல்ல கேப்டனா கூட இரு. ஆனா எனக்கு உன்னைப் பிடிக்காது. அதனால நீ கேப்டன் ஆகக்கூடாது” என்கிற அற்புதமான பாலிசியை பெரும்பாலும் பின்பற்றினார்கள்.

“எனக்கு நிரூப் மீது பொறாமையா?” – பாலா ஆட்சேபம்

முதல் வாய்ப்பை ஓடிச் சென்று பெற்றவர்கள் பாலா மற்றும் சுருதி. “ஏற்கெனவே கேப்டனா இருந்தவங்களை மீண்டும் தேர்வு செய்ய மாட்டோம்ன்னுல்லாம் காரணம் சொல்லக்கூடாது” என்று தாமரை அபத்தமாக ஆட்சேபம் செய்ய, பாலா அதற்கு எப்படி ரியாக்ட் செய்வார் என்பது நிரூப்பிற்கு அப்போதே தெரிந்துவிட்டது. “நீ பேசாம இரு... அவங்க என்ன காரணம் வேணா சொல்லலாம்” என்று தாமரையை அடக்கி வைத்தார். நிரூப்பின் யூகம் மிகச்சரியாக ஆனது. “நான் எது வேணா சொல்லுவேன்” என்று டெரரான முகத்துடன் சொன்னார் பாலா.

எதிர்பார்த்தபடியே அனிதாவின் புகைப்படத்தைக் கத்தரித்த பாலா, “எனக்கு நிரூப் மேல பொறாமைன்னு அனிதா தப்பா FIR போட்டாங்க. இப்படிப் பொய் புகார் தர்றவங்க தலைவர் ஆகக்கூடாது” என்று காரணம் சொன்னார். நிரூப் தன்னுடைய வலிமையான போட்டியாளர் என்பதால் பாலாவிற்கு உள்ளூற நிச்சயம் பொறாமை இருக்கக்கூடும். அதை அனிதா சுட்டிக் காட்டியதில் பாலாவின் ஈகோ காயப்பட்டு இதை வெளியில் ஒப்புக் கொள்ளாமல் மறுக்கிறது. இப்படித்தான் இதை யூகிக்க வேண்டியிருக்கிறது. தன் பெயர் இழுக்கப்பட்டதால் இதற்கு நீண்ட விளக்கம் அளித்து ஓய்ந்தார் அனிதா.

அடுத்ததாக வந்த சுருதி, “நான் அபிராமியைச் சொல்றேன். அவங்க தலைவராகணும்னு முன்ன நெனச்சேன். ஆனா அவங்க கடந்த சீசன் போட்டியாளர் ஒருத்தர் மாதிரி (லோஸ்லியா) பொய்யா நடிக்கறாங்க. எப்பவாவதுதான் ஒரிஜினல் அபிராமி வெளியே வர்றாங்க. நல்லா வித்தியாசம் தெரியுது. ஏதாவது ஒரு பிரச்னைன்னா நேரடியா போய் பேசாம ஜாடையா பேசறாங்க” என்கிற காரணத்தை அடுக்கினார் சுருதி. இதற்கு சர்காஸ்டிக்காக புன்னகைத்தார் அபிராமி. பின்னர் அனிதாவும் சுருதியும் தனியாகப் பேசிய போது “அபிராமி செய்யறது நல்லா பச்சையா தெரியுது. அவங்க மட்டும் ஜூலியை ‘ஓவியா மாதிரி நடிக்கறே’ன்னு சொல்லலையா?” என்று அனிதா கேட்க “இந்த விஷயம் கேமராவில் பதிவாகணும்னுதான் சொன்னேன்” என்று பொங்கினார் சுருதி.

BB Ultimate 34
BB Ultimate 34

பழிக்குப் பழி, புளிக்குப் புளி – அபிராமி பாலிசி

அடுத்த முறை பஸ்ஸர் அடிக்கும் போது அபிராமியும் அனிதாவும் ஓடிச் சென்று கத்தரியை எடுத்தார்கள். ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ என்கிற சிறுபிள்ளைத்தனமாக சுருதியை பதிலுக்கு நாமினேட் செய்து பழிவாங்கினார் அபிராமி. “என்கிட்ட சிரிச்சி பேசிட்டு பொதுவுல இப்படிப் பேசினது சரியில்ல” என்பதே அவர் சொன்ன காரணம். (இதுக்கும் கேப்டன்சிக்கும் என்ன சம்பந்தம்?!). அடுத்து வந்த அனிதா, பாலாவைப் பழிவாங்குவார் என்று கருதத் தோன்றியது. ஆனால் அவர் சுரேஷை டார்கெட் செய்தார். “ஷோ பார்த்துட்டு வந்து அதுக்கேத்த மாதிரி ஆடறாரு. ஜாடையா பாட்டுப்பாடி இம்சை பண்றாரு. மென்ட்டல் டார்ச்சரா இருக்கு. நான் எப்படி நிம்மதியா விளையாட முடியும்?” என்கிற விஷயத்தையே வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி அனத்தினார் அனிதா. (சக போட்டியாளரை provoke செய்வதும் இந்த ஆட்டத்தின் ஒரு பகுதிதான் என்கிற நிதர்சனம் அனிதாவிற்குப் புரியாமல் இருக்குமா, என்ன?!)

மூன்றாவது முறை பஸ்ஸர் அடித்தபோது பாலா ஓடி வந்து கத்தரியை எடுத்தார். பின்னாலேயே ஓடி வந்த அனிதாவால் எடுக்க முடியாமல் போனது. ஆனால் கார்டன் ஏரியாவில் இருந்த கத்தரிக்கோலை யாருமே எடுக்கவில்லை. “நீங்க சாப்பிடுங்க. இல்ல... நீங்க சாப்பிடுங்க” என்கிற விருந்தோம்பல் மாதிரி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அதற்குள் வீட்டின் உள்ளே இருந்து பாய்ந்து வந்த அனிதா, வெளியே இருந்த ஆயுதத்தைக் கைப்பற்றி விட்டார். (சமர்த்து!).

முதலில் வந்த பாலா, சிநேகனை கத்தரித்து கீழே போட்டார். “குடும்ப டாஸ்க்ல பாத்ரூம் ரேட் ஓவராச் சொன்னாங்க. சிநேகன் கிட்ட கேட்ட போது 'அது என் மனைவியும் மகனும் முடிவு பண்றது’ன்னு சொல்லிட்டாரு. அவர்தான் குடும்பத்தலைவர். அந்த அநியாயத்தை தட்டிக் கேட்டிருக்கலாம். இப்படிப்பட்டவர் எப்படி வீட்டோட தலைவர் ஆக முடியும்?” என்கிற காரணத்தை முன் வைத்தார் பாலா.

BB Ultimate 34
BB Ultimate 34

"பனை மரத்துல வவ்வாலா… ஜூலிக்கே சவாலா?”

அடுத்து வந்த அனிதா, இம்முறை ஜூலியை டார்கெட் செய்தார். “வுமன் கார்டை வெச்சு நான் விளையாடறதா ஜூலி சொன்னாங்க. எந்த மேடையாக இருந்தாலும் நான் பெண்களுக்காகப் பேசிட்டுத்தான் இறங்குவேன். இதை எந்தப் பெண்ணாலும் தடுக்க முடியாது. ஜூலியோட ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நான் கிண்டல் செஞ்சா, அது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் இது. அபிராமிக்கும் எனக்கும் ஆகாது. அபிராமியோட பிரெண்டு ஜூலின்றதால, ஜூலியும் என்னைச் சேர்ந்து எதிர்க்கறாங்க. என்ன லாஜிக் இது? நான் ஜூலி கிட்ட நல்லாத்தானே பேசறேன்?” என்று வழக்கம் போல் நீளமான உரையை முழக்கமிட்டு ஆவேசத்துடன் இறங்கினார் அனிதா.

“நிரூப் மேல எனக்குப் பொறாமையா?” என்கிற கேள்வியை மறுபடி பாலா, ஆரம்பிக்க அனிதா மறுபடி உணர்ச்சிகரமான பதில்களை அடுக்க ஆரம்பிக்க... (முடியல!). இந்த இருவரையும் நிரூப் சமாதானம் செய்து வைத்த விதம் அருமை.

டாஸ்க் முடிந்து சந்தடியெல்லாம் அடங்கிய பிறகு சுருதியை அழைத்த சிநேகன் “ஏம்மா... பாலா என்னை அப்படிப் போட்டு அடிச்சானே... உனக்கு பாத்ரூம்லாம் ப்ரீயா விட்டேன்ல. எனக்காக ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா?” என்று ஆதங்கப்பட்டார். அதாவது தன் மீது புகார் சொல்லப்படும் போது அந்தச் சமயத்தில் சிநேகன் நேரடியாக பதில் சொல்ல மாட்டாராம். அவருக்காக இன்னொருவர் வந்து ஆதரவாக பேச வேண்டுமாம். எந்த ஊர் நியாயம் இது?! (சுருதி கழிவறையை இலவசமாக உபயோகித்தது, சீக்ரெட் டாஸ்க் உத்தி என்கிற விஷயம் சிநேகனுக்கு குறும்படத்தின் மூலமாகத்தான் இனி தெரியவரும்!).

BB Ultimate 34
BB Ultimate 34

“நான் எங்க பேசணுமோ, அங்க பேசிப்பேன்” என்று கெத்து காட்டிய சிநேகன் “பாலாக்கு பொண்ணுங்க மேல உண்மையிலேயே மரியாதையா என்ன?” என்று பின்குறிப்பாக முனக, “அப்படிச் சொல்லுங்கண்ணே... இந்த FIR மேட்டரை வெச்சு சீசன் ஆரம்பத்துல இருந்து என்னை டார்ச்சர் பண்றான்” என்று சிநேகனுடன் இணைந்து கொண்டார் அனிதா.

பாலாவிற்கு நிரூப் மீது பொறாமையா, அனிதாவிற்கு சிநேகன் மீது பொறாமையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய பொறாமையெல்லாம் பிக் பாஸ் எடிட்டிங் டீம் மீதுதான். ஒரு மணி நேர எபிசோடைப் பார்ப்பதற்கே எனக்கு நாக்கு தள்ளுகிறது. 24x7-ல் இத்தனை மொக்கையான காட்சிகளையெல்லாம் எப்படிப் பார்த்து, சகித்துக் கொண்டு பணிபுரிகிறார்கள்? இவர்களின் எனர்ஜியைப் பார்க்க எனக்குப் பொறாமையாக இருக்கிறது.