முந்தைய எபிசோடில் பொது அறிவுக் கேள்விகளின் மூலம் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பிக் பாஸ், போட்டியாளர்களுக்கு அம்மை ஊசி போடப்பட்ட தேதி என்ன, எல்கேஜி வகுப்பில் அவர்கள் திருடியது பென்சிலா, பலப்பமா போன்ற அரிய விஷயங்களை இன்றைக்கு வெளிப்படுத்தி நம் அறிவுக்கண்களைத் திறந்து வைக்க முயற்சி செய்தார்.
நாள் 38-ல் நடந்தது என்ன?
இடையில் சற்று ஓய்வு கொடுத்திருந்த சிம்பு பாடல்களை மறுபடியும் தூசு தட்டி எடுத்து ஒலிபரப்ப ஆரம்பித்துவிட்டார் பிக் பாஸ். ‘யூ அர் மை டார்லிங். யூ அர் மை டார்லிங்...’ என்கிற பாடலோடு பொழுது விடிந்தது. மற்றவர்கள் வெளியே நடனம் ஆட, ஜூலி மட்டும் படுக்கையில் இருந்து கொண்டே தலையாட்டும் வழக்கத்தை இன்றும் தொடர்ந்தார்.
அபிராமியை இம்சை செய்த பாலா
பிக் பாஸ் இப்போதேல்லாம் டாஸ்க் பற்றிய அறிவிப்பை முறையாக நமக்கு காட்டுவதில்லை. ‘நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்பது போல் விட்டுவிடுகிறார். மக்கள் உடற்பயிற்சி மாதிரி எதையோ செய்து கொண்டிருந்தார்கள். அனிதாவும் சிநேகனும் தவளைகள் மாதிரி தரையில் உருண்டு கொண்டிருந்தார்கள். அப்புறம்தான் தெரிந்தது, அது ‘கண்ணாடி டாஸ்க்’-காம். ஜோடிகள் ஒவ்வொருவரும் தங்களின் இணை செய்வதை அப்படியே பிம்பமாக பிரதிபலிக்க வேண்டுமாம்.
பாலாவிற்கும் அபிராமிக்கும் இடையேயான பிணக்கு இன்று மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. “டாஸ்க்கை ஒழுங்கா பண்ணு” என்று அபிராமி வலியுறுத்த “அப்ப நான் ஒழுங்கா பண்ணலையா?” என்று எரிச்சலைக் காட்டிய பாலா, தண்ணீரை அபிராமியின் முகத்தில் சில முறை ஊற்றினார். அதை அமைதியாக சகித்துக் கொண்ட அபிராமியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுவே நிரூப், அனிதா என்றால் அபிராமி ருத்ரதாண்டவம் ஆடியிருப்பார். ஆனால் செய்வது பாலா என்கிற வலிமையான போட்டியாளர் ஆயிற்றே?! “உனக்கு கஷ்டமா இருந்தா ஜோடியை மாத்திக்கோ” என்று பிறகு பாலா அலட்சியமாகச் சொன்னதால், முகம் மாறிய அபிராமி “கஷ்டம்ன்னு நான் சொன்னேனா? நீ கடுப்பேத்தறதுல இருந்து தப்பிக்கவே முடியாது” என்று பரிதாபமாகச் சொன்னார்.
‘பொழுதைக் கழிக்கற இடம் கிளாஸ்ரூமா?’
இந்த 'ஜோடி டாஸ்க்'கில் பிராப்பர்ட்டிகளுக்காக பிக் பாஸ் நிறைய செலவு செய்திருப்பார் போலிருக்கிறது. ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரே நிறத்தில், ஆடைகள் வழங்கப்பட்டிருந்தன. அடுத்த டாஸ்க் ஆரம்பித்தது. டோக்கன் சத்தம் கேட்டதும் ஒரு ஜோடியில் இருந்து முதலில் ஒருவர் ஆக்டிவிட்டி ஏரியாவிற்குச் செல்ல வேண்டும். அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை பிக் பாஸ் கேட்டு பதில்களைப் பெறுவார். பிறகு அவரை அனுப்பி விட்டு, அவரின் இணையை பிக் பாஸ் அழைப்பார். அவரிடம் முன்னவர் சொன்ன பதில்கள் தொடர்பான ஐந்து கேள்விகள் கேட்கப்படும். சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் ஒரு தங்க நாணயம் பரிசு. ஜோடிகள் பரஸ்பரம் தங்களின் இணையைப் பற்றிய சிறு விவரங்களைக் கூட அறிந்திருக்கிறார்களா என்பதை பரிசோதிக்கும் விளையாட்டு இது. (பல ஆண்களுக்கு தங்களின் திருமணத் தேதியே நினைவில் இருக்காது!)
முதலில் அழைக்கப்பட்டவர் அபிராமி. "படிக்கும் காலத்தில் உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்ன? ஆசிரியர் யார்? என்ன பொய் சொல்லி மாட்டினீங்க? பிடித்த விளையாட்டு? பார்த்த முதல் திரைப்படம்? செல்லப் பெயர் என்ன?" என்று சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டார் பிக் பாஸ். ஒவ்வொன்றிற்கும் பதில் சொன்ன அபிராமி “நீங்கள் பொழுதைக் கழிக்கும் இடம் எது?” என்கிற கேள்விக்கு “கிளாஸ் ரூம்” என்று சொன்ன போதே நமக்கு ஜெர்க் ஆகியது. (அம்மணி... கிளாஸ் ரூம் பொழுதைக் கழிக்கற இடமாப் போச்சா?!)
அபிராமியை வெளியே அனுப்பிய பிக் பாஸ், பாலாவை அழைத்தார். அபிராமி சொன்ன தகவல்கள், பாலாவிடம் கேள்விகளாக பரிசோதிக்கப்பட்டன. ஐந்து கேள்விகளில் மூன்று கேள்விக்குச் சரியாக பதில் சொன்ன பாலா “அபிராமி பொழுதைக் கழிக்கும் இடம் எது?” என்கிற கேள்விக்கு “அவங்க அபார்ட்மென்ட் கீழே” என்று சொன்னது தவறானதாக போய் விட்டது. பிறகு பாலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
“ஸ்கூல் முடிஞ்சதும் என்ன செய்வீங்க?” என்கிற கேள்விக்கு “ஆடு மேய்க்கப் போயிடுவேன்” என்று பாலா சொன்ன போது ஒருவேளை காமெடி செய்கிறாரோ என்று தோன்றியது. இல்லையாம். அவருடைய தாத்தா சில ஆடுகளை வைத்திருந்ததால் அதை மேய்க்கப் போவாராம். (சரியா படிக்காத பசங்களை “மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று ஆசிரியர்கள் திட்டுவார்கள். பரவாயில்லை, பாலா இதிலும் வித்தியாசமாக இருக்கிறார்).
பாலாவை வெளியே அனுப்பிய பிக் பாஸ், அபிராமியை உள்ளே அழைத்து கேள்விக்கணைகளைத் தொடுத்தார். இதில் அபிராமி பலவற்றிற்கும் சரியான பதில் சொன்னதாகத் தெரிந்தது. இறுதியில் இவர்களுக்கு நான்கு தங்க நாணயங்கள் மட்டுமே கிடைத்தன. “பொழுதைக் கழிக்கற இடம் கிளாஸ் ரூமா? நாள் பூரா ஸ்கூல்லயா இருப்பே? வீட்டுக்கு வந்து தம்பி கூட விளையாடுவேன்னுதானே சொன்னே..?” என்று பாலா எரிச்சல் அடைய “கிளாஸ் முடிஞ்சு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். அதைத்தான் சொன்னேன்” என்று அபிராமி விளக்கம் தந்தும் பாலா சமாதானம் ஆகவில்லை. திரும்பத் திரும்ப குண்டூசியால் குத்துவது மாதிரியே பேசி அபிராமியை இம்சித்துக் கொண்டிருந்தார். இதனால் அழுகையான முகபாவத்துடன் பாத்ரூம் ஏரியாவிற்கு விரைந்த அபிராமியின் பின்னாலேயே ஜூலியும் சென்று சமாதானப்படுத்தினார்.
“ஸ்கூல் வெளில ஒரு பாட்டி மாங்கா விப்பாங்க”
கேள்விகளை எதிர்கொள்ளும் டாஸ்க்கிற்கு அடுத்ததாக வந்தவர் சுருதி. வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டு பிக் பாஸையே எதிர்க்கேள்விகள் கேட்டார். “விரும்பிச் சாப்பிட்ட தின்பண்டம் எது?” என்கிற கேள்விக்கு “ஸ்கூல் வெளில ஒரு பாட்டி மாங்கா விப்பாங்க” என்று சுருதி இயல்பாக சொன்ன போது “என் இனமடா நீ” என்று தன்னிச்சையாக புன்னகை வந்தது. அடுத்ததாக நிரூப்பை அழைத்து, சுருதி சொன்ன பதில்களைச் சோதிக்க ஆரம்பித்தார் பிக் பாஸ். "சுருதிக்குப் பிடித்த தின்பண்டம், தயிர் சாதம்" என்று சொல்லி சொதப்பினார் நிரூப். “சுருதிக்குப் பிடித்த விளையாட்டு எது?” என்கிற கேள்விக்கு “பேஸ்கெட் பால்” என்று சரியாக விடை சொன்ன நிரூப், “ஆனா. அவளுக்கு பேஸ்கெட் பால் ஆடத்தெரியுமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” என்று சொல்லி சுருதியை பங்கம் செய்தார்.
சுருதியை அழைத்த பிக் பாஸ், நிரூப் பற்றிய கேள்விகளை அடுக்க ஆரம்பிக்க பலவற்றிற்குச் சொதப்பினார் சுருதி. ‘நிரூப்பின் முதல் காதல்’ பற்றிய கேள்விக்கு “பத்தாம் கிளாஸ்ல ஒரு பொண்ணை லவ் பண்ணதா சொன்னான். அதுக்கு முன்னாடி ஒரு பப்பி லவ்வும் இருந்திருக்கு. எதைக் கணக்குல எடுத்துக்கறது?” என்று வெள்ளந்தியாக சுருதி கேட்ட போது பிக் பாஸ் எப்படிச் சிரிக்காமல் இருந்தார் என்றே தெரியவில்லை. நமக்குத்தான் விழுந்து விழுந்து சிரிக்கத் தோன்றியது. இறுதியில் இந்த ஜோடிக்கு கிடைத்த தங்க நாணயம் எத்தனை தெரியுமா? அதிகமில்லை ஜென்டில்மேன். ஒன்றே ஒன்றுதான். ஆனால் பாலாவைப் போல நிரூப் டென்ஷன் ஆகி சுருதியை டார்ச்சர் செய்யவில்லை. "விடு பார்த்துக்கலாம்” என்று புன்னகையுடன் அழைத்துச் சென்றார்.
பொதுஅறிவில் அசத்தி, தமிழ் வாசிப்பில் சொதப்பிய பாலா
“கொஞ்சம் பார்த்து சொல்லு” என்கிற தலைப்பில் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். திரையில் இரண்டு சொற்கள் காட்டப்படும். ஒன்று 'Safe Word'. இன்னொன்று ‘Danger Word’. இரண்டுமே ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையதாக, குழப்பும் வகையில் இருக்கும். ஜோடிகளில் ஒருவர், திரை தெரியாதவாறு நிற்க வேண்டும். இன்னொருவர் திரையில் இருக்கும் ‘Safe Word’ தொடர்பான க்ளூக்களைச் சொல்லி, தனது இணை சரியான சொல்லை கண்டுபிடிக்கும் படி செய்ய வேண்டும். ஐந்து க்ளுக்கள் வரை சொல்லலாம். கடைசி க்ளூக்கு முன்னால் சரியான விடையைச் சொல்லிவிட வேண்டும். சரியான பதிலுக்கு ஒரு நாணயம் பரிசு. தவறான பதிலுக்கு ஒரு நாணயத்தை அபராதமாக தந்து விட வேண்டும்.
இந்த ஆட்டம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. சரியான விடையை ஆரம்ப க்ளுவிலேயே யூகித்து விட்டாலும் அது எங்கே தவறாகப் போய் விடுமோ என்கிற தயக்கத்தில் மக்கள் மென்று முழுங்கி தவித்து உறைந்து நின்ற போது, டிவி பெட்டியை உடைத்துக் கொண்டு நாமே போய் சொல்லி விடலாமா என்கிற அளவிற்குத் தவிப்பு ஏற்பட்டது. அப்படியொரு இம்சையை பதில் சொன்னவர்கள் பெரும்பாலும் தந்தார்கள்.
பொதுஅறிவுக் கேள்வியில் அசத்திய பாலா, இந்த டாஸ்க்கில் தமிழ்ச் சொல்லை சரியாக வாசிக்க முடியாமல் சொதப்பிவிட்டார். ‘பெல்லி’ என்று திரையில் தெரிந்த வார்த்தையை ‘பல்லி’ என்று தவறாக வாசித்து அதற்கேற்ற க்ளூக்களை பாலா சொல்ல, அதற்காக அபராதம் செலுத்த வேண்டியிருந்தது. “இதை மட்டும் என் கணக்குல சேர்த்தே. மவனே. கொன்டே போடுவேன்” என்று உற்சாகம் அடைந்தார் அபிராமி. தன் தவற்றை ஒப்புக் கொள்ளாமல் “உனக்கு தமிழ் படிக்கத் தெரியுமா?” என்று அபிராமியையே பாலா குற்றம் சொல்ல முனைந்ததெல்லாம் அராஜகம். “நீ மொதல்ல ஒழுங்கா படி. அது பல்லி இல்ல... பெல்லி” என்று திருத்தினார் சுரேஷ். இப்படியாக பாலா நேற்று பெற்ற பெருமை, இன்று காற்றில் பறந்தது.
மற்றவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கும் போது சுரேஷ் சொன்ன க்ளூக்களை வைத்து முதல் யூகத்திலேயே சரியான பதில்களைச் சொல்லி அசத்தினார் தாமரை. இறுதி முயற்சியில் ‘டைம் பீஸ்’ என்கிற வார்த்தையை மட்டும் தாமரையால் சொல்ல முடியவில்லை. ‘கடிகாரம்’ என்று சரியாகச் சொல்லி விட்டாலும் அது விடையுடன் பொருந்தாததால் மதிப்பெண் கிடைக்கவில்லை. இந்த விளையாட்டில் நிரூப் – சுருதி அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களைப் பெற்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.
இந்தப் பொதுஅறிவுக் கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். வைல்ட் கார்டில் வந்தவர் யார் தெரியுமா? லோஸ்லியா இல்லையாம். புன்னகை அரசி ‘ரம்யா பாண்டியன்’. இனியாவது ஆட்டம் களை கட்டுமா? அல்லது சொதப்பல் நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.