Published:Updated:

BB Ultimate - 4: அழுமூஞ்சி அனிதா இப்போ இல்ல; பாவனி விவகாரம் குறித்து அபிநய்யிடம் பறந்த கேள்விகள்!

BB Ultimate - 4

பாவனி விவகாரம் குறித்து அபிநய் தன் தரப்பை தெளிவுப்படுத்தியிருக்கலாம். ‘எதற்கு பழைய விஷயத்தைக் கிளறி இன்னமும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரோ, என்னமோ! அல்லது குற்றமுள்ள நெஞ்சோ?

Published:Updated:

BB Ultimate - 4: அழுமூஞ்சி அனிதா இப்போ இல்ல; பாவனி விவகாரம் குறித்து அபிநய்யிடம் பறந்த கேள்விகள்!

பாவனி விவகாரம் குறித்து அபிநய் தன் தரப்பை தெளிவுப்படுத்தியிருக்கலாம். ‘எதற்கு பழைய விஷயத்தைக் கிளறி இன்னமும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரோ, என்னமோ! அல்லது குற்றமுள்ள நெஞ்சோ?

BB Ultimate - 4
லக்ஸரி பட்ஜெட் இரண்டாவது நாளில் நடந்த ‘பிரஸ் மீட்களிலும்’ அனல் பறந்தது. மற்ற நேரங்களில் புன்னகையுடன் பேசிக் கொண்டாலும் டாஸ்க் நேரத்தில் ஒருவரையொருவர் குதறிக் கொள்ளும் விஷயத்தை சிறப்பாகச் செய்தார்கள். பிரஸ் மீட் என்றாலே சர்ச்சைக்குரிய கேள்விகள் மட்டும்தான் இருக்க வேண்டும்; அப்போதுதான் நிகழ்ச்சி பரபரப்பாகும் என்கிற நவீன ஊடக கலாசாரத்தை பிக் பாஸ் போட்டியாளர்களும் தன்னிச்சையாகப் பின்பற்றுகிறார்களோ என்று தோன்றுகிறது. இந்த அல்டிமேட் சீசனில் வழக்கத்தை விடவும் ‘நெகட்டிவிட்டி’ அதிகமாக இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது. அந்த அளவிற்கு இதில் நிகழும் வாக்குவாதங்களும் பரஸ்பர பிறாண்டல்களும் உக்கிரமாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் பொய்யான பாசாங்குகளைச் செய்யாமல் முகத்திற்கு நேராக கேள்விகளைக் கேட்கிறார்களே என்று சிறிய ஆறுதலும் இருக்கிறது.
BB Ultimate - 4
BB Ultimate - 4

எபிசோட் 4, நாள் 3-ல் நடந்தது என்ன?

பிரஸ் மீட் என்னும் ரணகளமான சடங்கில் அடுத்து மாட்டியவர் ஷாரிக். பாவம், முதல் வாரமே தலைவர் என்னும் பலிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டார். இவர் பத்திரிகையாளர்களைக் கையாண்ட விதம் முதிர்ச்சியின்மையாக இருந்தது.

"பிரபலங்களின் வாரிசு என்பதால் இந்த வாய்ப்பு உங்களுக்கு எளிதாக கிடைத்து விட்டதா?” என்று நேரடியான தாக்குதலை அனிதா வசீனார். பதிலுக்கு “நீங்க எந்த மீடியா? உங்க ஐடி கார்டு எங்க?” என்று கேட்டு ஷாரிக் பழிவாங்க ‘ஹிஹி... கொண்டு வரலை’ என்று அசடு வழிந்தார் அனிதா. இதற்குப் பதில் சொல்லும் போது “என் பெற்றோர்களின் பிரபல அடையாளத்தைப் பயன்படுத்திக் கொள்வது எனக்குப் பிடிக்காது. அதனாலதான் நான் வீட்டை விட்டு வெளியே வந்து தனியா முயற்சிகள் செய்யறேன். தனியா வளர விரும்புகிறேன்” என்று ‘இது தானா வளர்ந்த காட்டுமரம்’ என்கிற உக்கிரமான வசனத்தை மென்மையான தொனியில் சொல்ல முயன்றார் ஷாரிக். (கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!)

'முதல்வன்' திரைப்படத்தை நினைவுப்படுத்திய ஷாரிக்

“போன சீசன்ல சீக்கிரம் எலிமினேட் ஆனிங்க. வருத்தமா இருந்ததா?” என்று பாலாஜி கேட்க “ஆமாம்... அப்ப சின்னப்பையனா இருந்தேன். முதிர்ச்சியில்லை. கேமை மறந்துட்டேன்” என்று ஷாரிக் இயல்பாகச் சொல்ல “இப்பவாவது கேம் ஞாபகமிருக்கா?” என்று அபிராமி இடக்காகக் கேட்டார். முதல்வன் திரைப்பட அர்ஜூன் பாணியில் ‘வாழைப்பழத்தை’ சாப்பிட்டு தண்ணீர் குடித்து ஷாரிக் டைம் எடுத்துக் கொள்ள “நான் கேள்வி கேட்கறேன். நீங்க பாட்டுக்கு பழம் சாப்பிட்டு இருக்கீங்க?” என்று பத்திரிகையாளர்கள் இதை அவமதிப்பாக எடுத்துக் கொண்டார்கள். “’குழந்தைத்தனமானவன்னு அவர்தான் ஏற்கெனவே சொல்லிட்டாரே?” என்று ஷாரிக்கின் செயலுக்கு சுரேஷ் முட்டுக் கொடுக்க “ஹலோ... நீங்க என்ன அவரோட பிஆர்ஓவா..?” என்று அபிராமி எரிச்சலானார்.

BB Ultimate - 4
BB Ultimate - 4

“இந்த ரெண்டு நாள்ல கேப்டனா என்ன பண்ணீங்க?” என்று அபிராமி தன் கேள்வியை முழுமையாக்க “ஆரம்பம்ன்றதால உங்களை ப்ரீயா விட்டுட்டேன்… இந்த மீட் முடிஞ்சதும் வெளியே ஒரு மீட்டிங் இருக்கு. அதுல என்னன்னு சொல்லுவேன்” என்று சமாளித்தார் ஷாரிக். “அப்ப உங்களுக்குக் கிடைச்ச இரண்டு நாள் வாய்ப்பை வீணடித்து விட்டீர்கள் என்று சொல்லலாமா?” என்று சிநேகன் காட்டமாகக் கேட்க “நான் ரூல்ஸ் பத்தி சொல்லிட்டுதான் இருந்தேன். யாரும் கேட்கலை” என்று பரிதாபமாகச் சொன்னார் ஷாரிக். “இந்தப் பதவி ஈஸியா கிடைச்சுட்டதால இதன் அருமை உங்களுக்குத் தெரியலையோ?” என்று தனது கேள்விகளில் சிநேகன் உஷ்ணத்தைக் கூட்ட, "இருக்கலாம்” என்று முகம் வெளுத்தார் ஷாரிக்.

“அப்படின்னா திறமையான இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு போயிடுச்சுன்னு சொல்லலாமா?” என்று சுருதி கேட்க, ‘ஒரு நாள் முதல்வர்’ பாணியில் “அப்ப என் பதவியை உங்களுக்குத் தந்துடறேன். ஏத்துக்கறீங்களா? கேமரா ஓடிட்டு இருக்கு... பதில் சொல்லு தம்பி…” என்று ரகுவரனாக மாறினார் ஷாரிக். இது அசட்டுத்தனமான பதில். “அதுக்கு பிக் பாஸ் எப்படி ஒத்துக்குவாரு. நாமினேஷனை மாத்த முடியாதே?” என்று சிநேகன் ஆட்சேபிக்க, “அதெல்லாம் ரூல்ஸ் புக்குல இருக்கு” என்று வனிதாவும் சுரேஷூம் ஷாரிக்கின் அபத்தமான பதிலுக்கு முட்டுக் கொடுத்தார்கள்.

இடம் மாறிய ‘பிரஸ் மீட்' ஆட்டம்

இத்துடன் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் முதல் சுற்று முடிந்தது. இனி பத்திரிகையாளர் அணி, நட்சத்திர அணியாக மாறும். நட்சத்திரங்கள் பத்திரிகையாளர்களாக இடம் மாறுவார்கள். பிரஸ் மீட்டின் இரண்டாம் சுற்று ஆரம்பித்தது. உள்ளே பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருக்க, சுரேஷ் தனது டிராமாவுடன் உள்ளே நுழைந்தார். அதாவது அபிராமி ஹீரோயினாக நடிக்க, ஒரு படப்பிடிப்பு அங்கு நடைபெறுவது போன்ற செட்அப். எதிர்அணியை வெறுப்பேற்றுவதற்காக இந்த ஏற்பாடு. “யாரு இவங்கள்லாம்?” என்று வாயால் காற்றை ஊதிக் கொண்டே அலட்டலாக கேட்டார் ‘நடிகை’ அபிராமி. “ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இருக்கும்” என்று பத்திரிகை நபர்களை நக்கலடித்த சுரேஷ், வனிதாவைப் பார்த்து “மேடம்... அவ்வையார் வேடத்திற்கு உங்களை மாதிரி ஒருத்தரைத்தான் தேடிட்டு இருக்கேன். வர்றீங்களா?” என்று கிண்டலடித்தார். அந்த வீட்டில் வனிதாவை பங்கம் செய்யும் தைரியமுள்ள ஒரே ஆள் சுரேஷ்தான். ‘தாத்தா’ என்கிற கேடயம் அவருக்கு நன்றாகப் பயன்படுகிறது.

BB Ultimate - 4
BB Ultimate - 4

நேர்காணல் தருவதற்கு முதல் பலியாடாக வந்தவர் ‘தாடி’ பாலாஜி. பத்திரிகையாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது சிலர் சொன்ன பெயர்கள் காமெடியாக இருந்தது. “சார்... நான் KUV... அதாவது ‘கெடுவீங்க உங்க வாயால’ சேனல்ல இருந்து வரேன்” என்று நிரூப் சொல்ல “ஜலபுலஜங்” என்று தன் மீடியாவின் பெயரை சிரிக்காமல் சொன்னார் ஷாரிக். பாலாஜியின் கேள்விகள் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சுரேஷ் எதையோ இடைமறித்துச் சொல்லிக் கொண்டிருக்க அதனால் வனிதா டென்ஷன் ஆனார். “யாரு இந்த ஆளு... இவருக்கு இங்க என்ன வேலை?” என்று விசாரிக்க அவர் நடிகை அபிராமியின் ‘டச்அப் பாயாம்’. கிண்டலான தொனியில் சுரேஷ் தொடர்ந்து பேச, வனிதா மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களும் கோபம் அடைந்தார்கள். இதனால் இரு அணிக்கும் இடையே ‘கசகச’வென்று உக்கிரமான வாக்குவாதம் நடைபெற்றது.

இது சற்று தணிந்து ‘பிரஸ் மீட்’ ஆரம்பிக்க முதல் பந்தையே முழு வேகத்தில் வீசி ஆட்டத்தைக் கலைத்தார் பாலா. “பாலாஜி அவர்களே... போன சீசன்ல உங்க மனைவியோட வந்தீங்க. இந்த சீசன்லயும் இத்தனை பேரைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. உங்களால தனியா வர முடியாதா?” என்று வில்லங்கமான தொனியில் கேட்க, சபை நன்றாகப் பற்றிக் கொண்டது. “அப்படின்னா… கூட வந்தவங்கள்ல மனைவின்னு யாரைச் சொல்றீங்க?” என்று நட்சத்திர அணி கோபம் அடைந்தார்கள். பாலாவின் டார்கெட் சுரேஷ் என்பது வெளிப்படை. இடையில் அபிராமியும் கோபம் அடைந்தார். வாக்குவாதம் உச்சத்திற்குச் சென்றதால் நட்சத்திர அணி ஆவேசத்துடன் ‘வெளிநடப்பு’ செய்ய முயன்றது. ஆனால், கல்லுளி மங்கரான பிக் பாஸ் கதவை அடைத்து வைத்திருந்தார். வேறு வழியில்லாமல் திரும்பி வந்து பாவனையாக சமாதானம் ஆனார்கள்.

BB Ultimate - 4
BB Ultimate - 4
“நான் எந்தத் தப்பான நோக்கத்துலயும் கேட்கலை. என்னை மாட்டிவிட டிரை பண்ணாதீங்க” என்று பாலா சமாளித்து தன் கேள்வியை இந்த முறை சரியான தொனியில் மாற்றினார். சுரேஷிற்கும் வனிதாவிற்கும் இடையிலான வாக்குவாதம் இம்முறை உச்சத்தை அடைய “அடக்கம் வேணும்... யாரைப் பார்த்து?” என்று எகிறினார் சுரேஷ். "இதென்னடா வம்பா போச்சு” என்று மேடையில் இறங்கிவிட்டார் பாலாஜி. பிறகு நிலைமை சற்று ஓய்ந்தவுடன் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

“காமெடிதான் முக்கியம். கப்பு முக்கியமில்ல” – தாடி பாலாஜி

வனிதா கேட்ட கேள்விக்கு “எனக்கு டைட்டில் அடிக்கறது முக்கியமில்ல. என்டர்டெயின்மென்ட்தான் முக்கியம். மக்களை ஜாலியா வெச்சுக்க முயற்சி செய்வேன். இந்த விளையாட்டிலும் கடைசி வரை இருக்க முயல்வேன்” என்று பாலாஜி சொல்ல “உங்களுக்கு ஜெயிக்க விருப்பமில்லைன்னா, உங்க வாய்ப்பை மத்தவங்களுக்குத் தந்திருக்கலாமே?” என்று பாலாவும் நிரூப்பும் அவரை மடக்க முயன்றார்கள். “அது என்னை கூப்பிட்டவங்களைத்தான் கேட்கணும். இது எனக்கு வந்த பெரிய வாய்ப்பு. அவங்க என்னைக் கூப்பிட்டதையே நான் வெற்றியாதான் பார்க்கறேன்” என்றார். (கடந்த முறை தாமரை செய்த அதே தவற்றை இப்போது பாலாஜியும் செய்கிறார்).

BB Ultimate - 4
BB Ultimate - 4

“போன சீசன்ல உங்க மனைவி கூட இருந்தாங்க. கோபத்தைக் கன்ட்ரோல் பண்ணிட்டிங்க. இந்த முறை கோபம் கன்ட்ரோல்ல இருக்குமா?” என்று ஷாரிக் கேட்க “அத வேற ஞாபகப்படுத்திட்டிங்க தம்பி” என்கிற பாணியில் கண்ணைத் துடைத்துக் கொண்ட பாலாஜி “அந்த சீசன் தந்த அனுபவத்தில் நான் கோபத்தை முழுசா விட்டுட்டேன். இப்ப எனக்கு கோபமே வராது. வேணுமின்னா என்னை இடுப்புல கிள்ளுங்களேன். கம்முன்னு இருப்பேன்” என்கிற அளவிற்கு சமர்த்துப் பிள்ளையாக தன்னைக் காட்டிக் கொண்டார் பாலாஜி. “அப்ப நீங்க மாஸ்க் போட்டிருக்கீங்கன்னு சொல்லலாமா?” என்று நிரூப் கேட்க “கொரோனா டைம்ல மாஸ்க் போட்டுத்தானே ஆகணும்” என்று காமெடி செய்தார். “இப்ப இருக்கற போட்டியாளர்களில் யாரை உங்களுக்குப் பிடிக்கும்?” என்று சுஜா கேட்டதற்கு சுற்றி வளைத்து பதில் சொன்ன பாலாஜி, கடைசியில் ‘பாலா’வைப் பிடிக்கும்” என்று சொன்னது ஆச்சரியம்.

“செலவு செய்யாம காமெடி செய்ய முடியாது” என்று முன்னர் கமல் சொன்ன வாக்கியத்தை சரியாக ஞாபகம் வைத்திருந்த தாமரை “உங்க நகைச்சுவையால் இந்த வீட்டில் யாரையாவது நீங்க புண்படுத்தினால் என்ன செய்வது?” என்று கேட்க, இதன் பொருள் பாலாஜிக்குப் புரியவில்லை. ஆனால் தாமரை தன் கேள்வியை சரியாகப் புரிந்து கொண்டு விளக்கம் சொன்னது சிறப்பு. “எனது நகைச்சுவையின் மூலம் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதுதான் என் நோக்கம். தப்பித்தவறி அப்படி நடந்து விட்டால் மன்னிப்பு கேட்பேன்” என்றார் பாலாஜி.

“நீங்க டைட்டில் வின் பண்ணா, அதில் கிடைக்கும் பணத்தை எனக்குப் பிரிச்சுக் கொடுப்பீங்களா?” என்று ஜூலி காமெடி செய்ய ‘அடிப்பாவி’ என்று சபை சிரித்தது. “நீங்க சேவையெல்லாம் செய்யறீங்க. அதனால தருவேன்” என்று பாலாஜி சொல்ல “அப்ப எனக்கு? நானும் சேவையெல்லாம் செய்வேன்” என்று கூடவே வந்து நின்று மல்லுக்கட்டினார் தாமரை. “எனக்கும் பிள்ளை குட்டிங்கள்லாம் இருக்கு. என்னால முடிஞ்சத செய்வேன். ஆளை விடுங்ம்மா” என்று எஸ்கேப் ஆனார் பாலாஜி. (‘வந்து மூணு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள பரிசுப் பணத்தை பாகம் போட ஆரம்பிச்சிட்டாங்க’ என்பது அவரின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்).

BB Ultimate - 4
BB Ultimate - 4
பிரஸ் மீட் முடிந்ததும் வெளியே வந்த மக்களிடம் ‘கேப்டனாக’ மாறி சற்று கறார் காட்டினார் ஷாரிக் “இனிமே கிச்சன் ஏரியாவில் சம்பந்தப்பட்ட டீமின் மூணு பேர் மட்டும்தான் இருக்கணும். காலைப் பாட்டுக்கு சிலர் டான்ஸ் ஆட மாட்றீங்க. இனிமே ஆடணும். ஆங்கிலம் கலக்காமல் பேசணும். ஒண்ணு... ரெண்டு வார்த்தை கலந்தா பரவாயில்லை. ஆனால் தமிழ்ல பேசுங்க. மீறுகிறவர்களுக்கு சின்னச் சின்ன டாஸ்க் ஜாலியா கொடுப்பேன். செஞ்சுடுங்க” என்றார். வனிதாவிற்கும் சுரேஷிற்கும் உள்ளே நடந்த மோதல், வெளியே இன்னமும் உக்கிரமாகத் தொடர்ந்தது. ‘அடப்போங்கப்பா’ என்று மற்றவர்கள் நொந்து போனார்கள்.

“நான் அழுமூஞ்சி அனிதா இல்ல. அதிரடி அனிதா”

பிரஸ் மீட்டில் அடுத்ததாக வந்து அமர்ந்தார் அனிதா. “என்னை வெச்சு செய்யப் போகும் பத்திரிகையாளர்களுக்கு வணக்கம்” என்று ஆரம்பத்திலேயே தன் தலையைக் கொடுக்க ஆரம்பித்தார். கடந்த சீசனில் அழுது வடிந்த அனிதா, இந்த சீசனில் ஒவ்வொரு விஷயத்தையும் முன்கூட்டியே கணக்குப் போட்டு செய்வதாகவும் துல்லியமாகத் திட்டமிடுவதாகவும் எல்லாவற்றையும் யூகித்து செயல்படுவதாகவும் கேள்விகள் வந்தன. “நான் போன சீசன்ல ஆரம்பத்துல மட்டும்தான் அழுதேன். நான் எமோஷனல் டைப். அப்புறம் சுதாரிச்சுக்கிட்டேன். இந்த முறை பேலன்ஸா விளையாடுவேன்” என்று விளக்கம் அளித்தார்.

BB Ultimate - 4
BB Ultimate - 4

“வனிதா இருக்கற எதிர்டீமிற்குத்தான் போவேன்னு கேட்டு வாங்கி போனீங்க... அப்ப வனிதாவைக் கேள்வி கேட்டு சர்ச்சையாகி பிரமோல வரணும்ன்றதுதான் உங்க பிளானா?” என்று பாலா கேட்க “வனிதாவையும் கேள்வி கேட்கணும்ன்றதுதான் என் விருப்பம்” என்று மழுப்பி “ஆமாம்… சில விஷயங்களில் நான் திட்டமிட்டுத்தான் செய்யறேன்” என்று கடைசியில் ஒப்புக் கொண்டார். ஆக அல்டிமேட் சீசனின் சண்டைக்கோழிகளில் ஒன்றாக அனிதாவும் இருப்பார் போலிருக்கிறது. (நான் இப்ப அழுமூஞ்சி அனிதா இல்லைடா... மத்தவங்களை அழ வைக்கப் போற அனிதா!).

“பதில் சொல்லுங்க அபிநய். பாவனையா இருக்காதீங்க”

அடுத்ததாக வந்து மாட்டியவர் அபிநய். எதிர்பார்த்தபடியே பாவனி சர்ச்சை தொடர்பாகவே கேள்விகள் நிறைய எழுப்பப்பட்டன. ஆனால் எரிச்சலுடன் இதை சமாளித்தார் அபிநய். “பிக் பாஸிற்கு முன்னாடியே உங்களை எனக்கு நல்லாத் தெரியும். நேர்மையானவரு. அன்பானவரு. ஆனா போன சீசன்ல உங்க நேர்மை கொஞ்சம் காணாமப் போயிடுச்சோன்னு தோணுது” என்று கேள்வியை ஆரம்பித்து வைத்தார் சுஜா. “அப்படில்லாம் காணாமப் போகலை. அந்த சீசன்ல சிலரைக் காப்பாத்த வேண்டியிருந்ததால நான் சில விஷயங்களைப் பேசலை” என்று அபிநய் சமாளிக்க “யாரைக் காப்பாத்த விரும்பினீங்க... ஏன் பேசலை?” என்று சரியாக மடக்கினார் நிரூப். “நான் இப்ப அதைப் பத்தி பேச விரும்பலை” என்று எஸ்கேப் ஆக முயன்றார் அபிநய். “இந்த சீசன் வரும் போது உங்க பொண்டாட்டி என்ன சொல்லி அனுப்பினாங்க” என்கிற நையாண்டி தாக்குதலை தாமரை நடத்த “அதைப்பத்தியெல்லாம் பேச விருப்பமில்லை” என்று எரிச்சலுடன் பதில் வந்தது.

BB Ultimate - 4
BB Ultimate - 4

“தயவுசெய்து இதையெல்லாம் தெளிவுப்படுத்திடுங்க அபிநய். போன சீசனை நானும் ஒரு பார்வையாளனா பார்த்தேன். எனக்கு சில குழப்பங்கள் இருந்தன. அதே குழப்பம்தான் மத்தவங்களுக்கும் நிச்சயம் இருக்கும். இது உங்களுக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பு. நீங்க இன்னமும் குழப்பமாவே பேசினா மக்கள் எப்படி இந்தச் சமயம் உங்களுக்கு வாக்களிப்பாங்க?” என்று பாலா கேட்க, “இந்த சீசன்ல நான் எப்படி விளையாடறேன்னு பார்த்து வாக்களிப்பாங்க. இது 24x7 ஒளிபரப்பாகும். அப்ப அவங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்” என்று அபிநய் சொல்ல “இன்னமும் புரியாத புதிரா இருக்கீங்க” என்று பாலா தன் கேள்வியை முடித்துக் கொண்டார்.

அபிநய் தன் தரப்பை தெளிவுப்படுத்தியிருக்கலாம். ‘எதற்கு பழைய விஷயத்தைக் கிளறி இன்னமும் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டும்’ என்று நினைத்தாரோ, என்னமோ! அல்லது குற்றமுள்ள நெஞ்சோ?

தாமரை vs சுருதி – தீராத ‘காயின்’ பிரச்னை

அடுத்து வந்து மாட்டியவர் சுருதி. “போன சீசன்ல 35 நாள்கள்தான் இருந்தீங்க” என்று நிரூப் ஆரம்பிக்க, “ஆமாம். அதற்காக வருத்தப்பட்டேன். எவிக்ஷனை எதிர்பார்க்கலை” என்று அப்போதே கலங்க ஆரம்பித்தார் சுருதி. “நானும்தான் அந்த சீசன்ல இருந்தேன். உங்களை மட்டும் ஏன் சீக்கிரம் அனுப்பிச்சிட்டாங்க?” என்று நிரூப் கேட்க, தாமரையின் ‘பழனி யாத்திரை’ காமெடியை காப்பிடியத்து “தீபாவளி சமயம்ன்றதால மக்கள் மறந்திருப்பாங்க” என்று சுமாராக சமாளித்தார் சுருதி.

“நீங்க வெளியே போன பிறகு உங்க சக போட்டியாளர்களைப் பற்றித் தவறா இன்டர்வியூ தந்திருக்கீங்களே?” என்று முகத்தை டெரராக வைத்துக் கொண்டு கேட்டார் பாலா. “பிக் பாஸ் விருது பற்றி கேள்வி கேட்டாங்க. பாசிட்டிவ்வாவும் நிறைய பேசினேன். மனசுக்குப் பட்ட உண்மையையும் சொன்னேன். பெர்சனலா எதுவும் கிடையாது. உங்களை மாதிரி ஒரு மீடியா ஆளுதான் கேள்விகளை அப்படிக் கேட்டு என் வாயைப் பிடுங்கினாரு. நீங்க அவங்களைப் போய் கேளுங்க” என்று சரியாக பதில் கொடுத்தார் சுருதி.

BB Ultimate - 4
BB Ultimate - 4

சுருதியிடம் நேரடியாக மோதத் துவங்கினார் தாமரை. “யாரு காயினையும் எடுப்பேன்னு முதல்லயே சொல்லிட்டேன்’ன்னு இன்டர்வியூல சொன்னீங்க.. ஆனா நீங்க அந்த மாதிரி வீட்டுக்கு உள்ளே சொல்லல. “என் காயினையும் இசையோட காயினையும் எடுக்க மாட்டேன்னு சொல்லியிருந்தீங்க” என்று தாமரை கேட்க “அது முதல் வாரம். அதுக்கப்புறம் காயினோட சக்தி தெரிஞ்சப்பறம் ;யார் காயினையும் எடுப்பேன். தாமரை அக்கா உங்க காயினையும் எடுப்பேன்'னு சொல்லிட்டுத்தான் இருந்தேன். அது வீடியோல இருக்கு. போய்ப் பாருங்க” என்று பதில் அளித்தார் சுருதி. இந்தச் சமயத்தில் அபிநய் மேலே எங்கேயோ விழித்துப் பார்க்க, சுருதியை விட்டு விட்டு அபிநய் மீது பாயத் துவங்கி விட்டார் தாமரை.

“ஏன் அப்படி முழிச்சிப் பார்த்தீங்க?” என்று அபிநய்யிடம் தாமரை மல்லுக்கட்ட “இதென்னடா வம்பா போச்சு... நான் பாட்டுக்கு எங்கேயோ பார்த்தேன். நீங்களும் சுருதியும்தானே பேசிட்டு இருந்தீங்க... நான் எங்க நடுவுல வந்தேன்” என்று அபிநய்யும் ஆவேசமானார்.

"நல்லா பதில் சொன்னீங்க சுருதி” என்பது மாதிரி தனது உடல்மொழியால் அபிநய் சுருதிக்கு தகவல் சொல்லியிருக்கலாம். அதைப் பார்த்து விட்டு தாமரை காண்டாகியிருக்கக்கூடும் என்று தெரிகிறது. இருந்தாலும் தாமரை இந்த விஷயத்தில் முதிர்ச்சியில்லாமல் நடந்து கொண்டார். சீசன் 5-ல் "யார் காயினையும் எடுப்பேன்” என்று சுருதி பொதுவில் அறிவிப்பு செய்தது உண்மை. சுருதியை எதிர்கொள்ள முடியாத கோபத்தை அபிநய்யின் மீது தாமரை காட்டிவிட்டாரோ என்று தோன்றுகிறது. (எங்கேயோ போற மாரியாத்தா... என் மேல வந்து ஏறாத்தா–ன்ற கதையா…).

BB Ultimate - 4
BB Ultimate - 4

“சுருதி நீங்க நேர்மையான ஆசாமியா?” என்று நேரடித் தாக்குதலுடன் அடுத்த கேள்வியைத் துவங்கினார் ஜூலி. அவர் மேலும் கேள்வியைத் தொடரும் போது பாலா தடுத்துவிட்டார். சுருதி பத்திரிகையாளராக இருந்த போது பாலாவை விவகாரமாகக் கேட்டதற்காக இப்போது ஜூலி பழிவாங்க முயன்றார் போலிருக்கிறது. ஆனால் "இல்லை. இந்த விஷயம் வேண்டாம்” என்று பாலா முன்னமே சொல்லியிருக்கிறார். ஆனால், அதையும் மீறி பிரஸ் மீட்டில் ஜூலி முந்திரிக்கொட்டையாக செயல்பட்டு விட்டார்.

இதற்காக பிறகு ஜூலியை கடுமையாக கோபித்துக் கொண்டார் பாலா. “இது என் தொடர்பான விஷயம். விருப்பமிருந்தா நானே கேட்பேன். வேண்டாம்னு சொல்லியும் நீங்க ஏன் கேட்டீங்க. நீங்க என்ன என் மவுத் பீஸா?” என்றெல்லாம் பாலா டெரராக கேள்விகள் கேட்க, பம்மி நடந்தார் ஜூலி.

"எக்ஸ் ஸ்கொயர் = பி ஸ்கொயர்"

அடுத்ததாக வந்தவர் அபிராமி. கேள்விக்கணைகளைத் துவங்கியவர் நிரூப். ‘எக்ஸ்’ என்கிற நிலையை நிரூப் ஏதோ ஐஎஸ்ஓ சான்றிதழ் போல் நினைக்கிறார் போலிருக்கிறது. அபிராமி தயங்கினாலும் நிரூப் அதை தொடர்ந்து பெருமிதமாக சொல்லிக் கொள்கிறார். (எக்ஸ்கொயர் ஈக்வல் டூ பீ ஸ்கொயர்) “நீங்கதான் என் எக்ஸ். எனக்குத் தெரிந்த பழைய அபிராமி ரொம்ப தைரியமான பொண்ணு. இப்ப நிறைய வித்தியாசம் தெரியுது. மாற்றத்திற்கான காரணம் என்ன?” என்று நிரூப் கேட்க “ஒருத்தர் அழறதால அவங்க ஸ்ட்ராங் இல்லைன்னு கிடையாது. நம் உடல் மாறுவதைப் போலவே மனமும் மாறும். இடையில் கோவிட் காரணமாக நிறைய மரணங்களைப் பார்த்துட்டேன். இப்ப நான் தெளிவான அபிராமி” என்று பதில் சொன்னார்.

BB Ultimate - 4
BB Ultimate - 4

“நீங்க இருந்த சீசன்ல ஒரு எமோஷனல் சப்போர்ட்டை தேடிப் போன மாதிரி இருந்ததே?” என்று முகேன் விவகாரத்தை மறைமுகமாகக் கிளறி அடுத்த கேள்வியைக் கேட்டார் ஷாரிக். “எனக்கு அம்மா மட்டும்தான். அப்பா கிடையாது. எனவே manhood love-ஐ தேடறேன்னு தோணுது. Comfort Zone-ஐ எப்போதும் தேடுவேன். யாரையாவது சார்ந்து இருக்க நினைப்பேன். அந்த சீசன்ல ஏற்பட்ட லவ் நிஜம்ன்னு நம்பினேன். அதனால்தான் விளையாட்டில் தோற்றேன்.” என்று உளவியல் ரீதியாக விளக்கம் அளித்தார் அபிராமி. “நான் உங்ககிட்ட பேச வந்தேன். ஆனா நீங்க என்னை அவாய்ட் பண்ற மாதிரி இருக்குதே?” என்று நிரூப் மறுபடியும் கேட்க “எனக்கு அப்புறமா உங்க வாழ்க்கைல ஒரு பெண் இருந்தாங்க. நாம பேசி அதனால உங்களுக்கு ஏதும் பிரச்னை வந்திரக்கூடாதுன்னு நெனச்சேன். இந்த சீசன்ல வர்றதுக்கு முன்னாடி கூட ‘அபிராமி... யாரையாவது லவ் பண்ணுவாங்கன்னு சீப்பா பேசினாங்க’ அதனாலயே நான் தெளிவா ஒரு தூரத்தை மெயின்டெயின் பண்றேன். என்னால யாரும் மனம் காயப்படக்கூடாதுன்னு நெனக்கிறேன்” என்று அபிராமி தந்த விளக்கம், யாஷிகா தொடர்பானது என்பது தெளிவாகத் தெரிந்தது. (ஆனால், அதுவும்தான் பிரேக்அப் ஆயிடுச்சாமே?!)

“அதெல்லாம் ஒரு பிரச்னையும் வராது. இனிமேலாவது நான் உங்ககிட்ட பேசலாம் இல்லையா, ஏன்னா இந்த வீட்ல டாஸ்க் தொடர்பா ஏதாவது நாம பேசித்தான் ஆகணும். அதுக்காகத்தான் தெளிவுப்படுத்திக்கறேன்” என்று கேட்டு வைத்துக் கொண்டார் நிரூப்.

“இந்த சீசன்ல கலந்துக்கற போட்டியாளர்கள் பற்றி உங்க அபிப்ராயம் சொல்லுங்க” என்று ஷாரிக் கேட்டதற்கு “எனக்கு நல்லா தெரிஞ்ச சில பேர் பத்தி மட்டும் சொல்றேன். தாமரை ரொம்ப சிம்பிளா இருக்காங்க. ஆனா அவங்க உண்மையிலேயே வெள்ளந்தியான்னு சந்தேகமா இருக்கு. ஷாரிக்... ஒரு கூலான பையன். தாத்தா ஸ்வரம் பாடும் போது ஜாலியா இருக்கும். வயசு வித்தியாசமில்லாம தமாஷா பேசுவாரு. அதே சமயத்துல தன் வயசுக்கு மரியாதை தரணும்னு எதிர்பார்ப்பாரு” என்று அபிராமி சொல்லிக் கொண்டு போக “யாருக்கு வயசாச்சுன்ற?” என்று ஜாலியாக இடைமறித்தார் சுரேஷ். “தாத்தா கூட எனக்கு ஒருமாதிரியான Love-Hate Relationship இருக்கு. சுருதியை முதலில் பார்க்கும் போது ‘மாடல்... பயங்கரமா ஆட்டியூட் காட்டுவாங்க'ன்னு நெனச்சேன். பேசிப் பார்த்தப்புறம் வேவ் ஒரே மாதிரி இருந்து ஜெல் ஆயிட்டோம்” என்றதோடு அன்றைய நாளின் பிரெஸ் மீட் முடிந்தது.

BB Ultimate - 4
BB Ultimate - 4
இந்த நேர்காணல்களினால் உலகத்திற்கு பல முக்கியமான கருத்துக்கள் வெளியாகியிருக்கும் என்று நம்புகிறேன். இணையத்தில் இருக்கும் பல யூடியூப் வீடியோக்களைப் போலவே இந்த பிரஸ் மீட்டும் வெறும் வம்பு தும்புகளால் பெரும்பாலும் நிறைந்திருந்தது. இதிலிருந்து போட்டியாளர்களின் மனோபாவங்களை சற்று அறிய முடியும் என்பது மட்டுமே ஒரே பிளஸ் பாயிண்ட்.