Published:Updated:

BB Ultimate - 42: ஜூலி மற்றும் அனிதாவிடம் எகிறிய பிக் பாஸ்... வனிதா இருந்தபோது அடக்கி வாசித்தது ஏன்?

BB Ultimate - 42

சிநேகன் முரண்டு பிடிக்க, அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் “அனிதாவிற்கு எல்லாமே விளையாட்டா இருக்கா? எனக்கு இன்னொரு முகம் இருக்கு... அதை நீங்க எல்லாம் தெரிஞ்சுக்க வேணாம்” என்று கெத்து காட்டினார்.

Published:Updated:

BB Ultimate - 42: ஜூலி மற்றும் அனிதாவிடம் எகிறிய பிக் பாஸ்... வனிதா இருந்தபோது அடக்கி வாசித்தது ஏன்?

சிநேகன் முரண்டு பிடிக்க, அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் “அனிதாவிற்கு எல்லாமே விளையாட்டா இருக்கா? எனக்கு இன்னொரு முகம் இருக்கு... அதை நீங்க எல்லாம் தெரிஞ்சுக்க வேணாம்” என்று கெத்து காட்டினார்.

BB Ultimate - 42
வர வர பிக் பாஸிற்கு வயதும் பிளட் பிரஷரும் ஏறிக் கொண்டே போகிறது போல. இப்போதெல்லாம் நிறைய டென்ஷன் ஆகி விடுகிறார். ‘டேக் ரெஸ்பெக்ட் அண்ட் கிவ் ரெஸ்பெக்ட்’ என்று ஜூலி மற்றும் அனிதாவிடம் எரிந்து விழுந்தார். இந்த ஒழுங்கெல்லாம் சரி. ஆனால் வனிதாக்கா இருந்த போதும் இதே தன்மான உணர்ச்சி இருந்திருக்கலாமே பிக் பாஸ்?!

நாள் 41-ல் நடந்தது என்ன?

பிக் பாஸின் எடிட்டிங் டீம் இப்போதெல்லாம் பார்வையாளர்களை சட்டை செய்வதேயில்லை. எந்த முறையான அறிவிப்பும் அறிமுகமும் இல்லாமல் டாஸ்க்கை இடையில் இருந்து காட்டத் துவங்கி விடுகிறார்கள். “நீயாக பார்த்து புரிஞ்சுக்கோ” என்பதுதான் இதன் செய்தி போலிருக்கிறது. தடாலடியாக ஆரம்பித்த எபிசோடின் மூலம் புரிந்து கொண்டது என்னவென்றால், போட்டியாளர்கள் சீட்டுக்கட்டு விளையாடினார்கள். சீட்டை குலுக்கி வரிசையாகப் போடும் போது இரண்டு நட்சத்திரங்கள் யாருக்கு வருகிறதோ, அவருக்கு வெற்றி. இந்த வகையில் ஜூலி, பாலா, சுரேஷ் ஆகியோருக்கு நாணயங்கள் கிடைத்தன. மற்றவர்களை ஒப்பிடும் போது தாமரை + சுரேஷ் ஜோடிதான் ஒட்டுமொத்தமாக அதிக நாணயங்களை சம்பாதித்திருக்கிறார்கள். அவர்கள் அடுக்கி வைத்திருந்த உயரம் மற்றவர்களை விட அதிகமாக இருந்தது. பாலா + அபிராமி ஜோடி அந்த உயரத்தை ஏறத்தாழ நெருங்கிக் கொண்டிருந்தது.

BB Ultimate - 42
BB Ultimate - 42

முரண்டு பிடித்த ஜூலி – கறார் காட்டிய பிக் பாஸ்

அடுத்த டாஸ்க்கும் இப்படியே தடாலடியாக ஆரம்பித்தது. இதற்கும் நடுவர் ரம்யாதான். (பாவம், நடுவர் வேலை பார்க்கறதுக்குன்னே ஒரு ஆளை உள்ளே அனுப்பிச்சிருக்காங்க போல!). சில கேள்விகள் பலகையில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில்கள் இருக்கும். அவற்றில் சில வில்லங்கமான பதில்களும் இருக்கும். ஒரு போட்டியாளர், அதிலிருந்து மூன்று பதில்களைத் தேர்ந்தேடுத்து வரிசைப்படுத்தி அடுக்க வேண்டும். இவருடைய பதில்களும் ஜோடியின் பதில்களும் ஒத்துப் போனால் அதற்கேற்ப பரிசு கிடைக்கும்.

ஜூலியின் முறை வரும் போது ஒரு பஞ்சாயத்து நடந்தது. ‘பிக் பாஸ் வீட்டில் நிலையாக இருப்பதற்கு ‘அன்பாக நடிப்பது’, ‘ஒரு சிலருடன் மட்டும் பழகுவது’ ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் தனக்கு உடன்பாடில்லாதவை என்று சொல்லி இந்தக் கேள்வியைத் தவிர்க்க முயன்றார் ஜூலி. அதைத் தேர்ந்தெடுத்தால் அந்தக் கருத்துடன் தனக்கு உடன்பாடு என்று தவறான பொருள் வந்து விடும் என்பது ஜூலியின் அபிப்ராயம். “பிக் பாஸ் ஆட்டத்திற்குன்னு வந்தப்புறம் மானம், ரோஷமெல்லாம் பார்க்க முடியுமா?” என்பது மாதிரி நடுவர் ரம்யா சொன்னாலும் ஜூலி ஏற்கவில்லை. “சரி... டைம் வேஸ்ட் பண்ண வேணாம். இவங்களைக் கடைசில கூப்பிடலாம்” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு சாத்வீக வழியைப் பின்பற்றினார் பிக் பாஸ்.

வீட்டின் உள்ளே சென்ற ஜூலி சும்மா இருந்திருக்கலாம். “பிக் பாஸையே டென்ஷன் ஆக்கிட்டேன்” என்று அவர் பெருமையடிக்க ஆரம்பிக்க, பிக் பாஸ் காண்டாகி விட்டார். போட்டியைப் பற்றி எவரிடமும் பேசக்கூடாது என்பது விதி. வாக்குமூல அறைக்கு ஜூலியை அழைத்த பிக் பாஸ் “உங்களுக்கு எவ்வளவு மரியாதை நான் கொடுக்கறேன்... அதிலிருந்து பாதியைக் கூட எனக்கு தரக்கூடாதா?” என்று மிரட்டலான குரலில் கெஞ்சுவது போல் கேட்க “சாரி..." என்று ஜூலி ஆரம்பித்து மேலே தொடர்வதற்கு கூட பிக் பாஸ் அனுமதிக்கவில்லை.

BB Ultimate - 42
BB Ultimate - 42

“கெட் அவுட்” என்பதற்குப் பதிலாக “நீங்க போகலாம் ஜூலி” என்று மூக்கை உடைத்து அனுப்பினார். வெளியே வந்த ஜூலி, சோபாவில் போய் பொத்தென்று விழுந்து வானத்தைப் பார்த்து கண்கலங்கத் துவங்கினார். (நானும் பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். பெண்களுக்கு ஏதாவது சோகம் என்றால் ஏன் படுக்கையில் போய் பொத்தென்று விழுந்து கலங்குகிறார்கள்?).

‘இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க விருப்பமில்லை’ என்று ஜூலி மறுப்பதில் நியாயமுள்ளது. வேண்டுமெனில் அதற்கு பிக் பாஸ் அபராதம் விதித்துக் கொள்ளலாம். ஆனால் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதில் நியாயமில்லை.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். வனிதா இருக்கும் போது ‘டாஸ்க் செய்ய முடியாது போய்யா...’ என்பது உள்ளிட்ட பல அழிச்சாட்டியங்களை அவர் செய்திருக்கிறார். அப்போது பிக் பாஸ் ஏதேனும் இப்படிக் கண்டித்தாரா? ம்ஹூம்... ஒரு துண்டு வீடியோவும் இல்லை.

ஜூலிக்குப் போட்டியாக சுரேஷ் ஆரம்பித்த கலாட்டா

தேனிலவுக்காலம் முடிந்த தம்பதியினர் போல பாலாவும் அபிராமியும் ஒருவரையொருவர் பிறாண்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் பாலாவின் அழிச்சாட்டியம் அதிகம். ஒரு பாயிண்ட் போனால் கூட கேள்விகளால் அபிராமியை பிடுங்கி எடுத்துவிடுகிறார். கேள்வி - பதில் டாஸ்க்கில் “ஓர் உறவிற்கு அடிப்படையானது எது?” என்கிற தேர்வில் பாலா ‘நம்பிக்கை’ என்பதை முதல் சாய்ஸாகத் தேர்ந்தெடுக்க அபிராமியோ ‘அன்பு’ என்பதைத் தேர்ந்தெடுத்திருந்தார். “அவன் மூளைக்குள்ள அவன் மட்டும்தான் யோசிக்க முடியும்” என்று பதில்களைத் தேர்ந்தேடுக்கும் போதே அச்சத்துடன் முனகினார் அபிராமி. அப்படியே ஆயிற்று. உறவிற்கு எது முக்கியம் என்கிற விவாதம் காரணமாக இவர்களின் ஏறத்தாழ உறவு முடிந்து போனது. அப்படியொரு கசப்பான உரையாடல்.

BB Ultimate - 42
BB Ultimate - 42
வீட்டிற்குள் ஒரு புதிய வைலட் கார்ட் என்ட்ரி. ஆம், ஒரு குரங்கார் அனுமதியில்லாமல் கார்டன் ஏரியாவில் நுழைய அதற்கு ஆப்பிள் தந்து உபசரித்தார் அனிதா.

‘ஜூலி எல்லாம் பிரமோவில் வருமளவிற்கு கலாட்டா செய்யும் போது நாம் மட்டும் சும்மா இருப்பதா?' என்று சுரேஷிற்குள் தோன்றியிருக்க வேண்டும். எனவே அவரும் ஒரு வீம்பு நாடகத்தை ஆரம்பித்தார். சுரேஷ் காலையில் குளிப்பதற்காகத் திட்டமிடும் போது “தாத்தா, இப்ப டாஸ்க் ஆரம்பிச்சிடும். அப்புறமா போங்க” என்று கேப்டன் நிரூப் தடுத்திருக்கிறார் போலிருக்கிறது. இதைப் போலவே சுரேஷிற்குத் தருவதாகச் சொல்லப்பட்ட டீயும் தரப்படவில்லை.

BB Ultimate - 42
BB Ultimate - 42

"கேப்டன் சொன்னத மதிச்சு நான் நடந்தேன். பதிலுக்கு அவர் என்னை மதிக்கலை. இன்னமும் ஏன் என்னை குளிக்க அனுப்பலை? இதுக்காக பிக் பாஸ் கிட்ட அவர் பேசலை. எனக்கு டீ தரலை...” என்று கொதிக்க ஆரம்பித்தார் சுரேஷ். நிரூப் தன்மையாக விளக்கம் சொல்லியும் சுருதி மற்றும் ரம்யா சமாதானப்படுத்தியும் அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்த சுரேஷ் “ஆமாம். இது நூறு சதவிகிதம் வீம்புதான்” என்று ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார். சுரேஷின் கோபம் உண்மை என்றால், வயதானவர்களுக்கேயுரிய சிடுசிடுப்புத்தன்மை அவரிடம் அவ்வப்போது எட்டிப்பார்த்து விடுகிறது.

‘என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்’ – அனிதாவை எச்சரித்த பிக் பாஸ்

இன்னொரு பக்கம் வேறொரு மாதிரியான அலப்பறையைச் செய்து கொண்டிருந்தார் அனிதா. “வீட்டின் கதவுகள் திரையிடப்படவிருக்கின்றன. அனைவரும் வீட்டிற்குள் செல்லுங்கள்” என்று பிக் பாஸ் இரண்டு முறை அறிவிப்பு தந்தும், கார்டன் ஏரியாவிலேயே அடமாக படுத்துக் கிடந்தார். “அனிதா… வீட்டுக்குள்ள போங்க” என்று பிக் பாஸ் சொன்னதும் சந்தோஷமாகி நமக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் சிரித்தார் அனிதா. இவரிடமுள்ள ‘சந்திரமுகி’ அவ்வப்போது வெளியில் வருவது நமக்குத்தான் கலவரத்தை ஏற்படுத்தி விடுகிறது.

BB Ultimate - 42
BB Ultimate - 42
அனிதா அப்படி வெறித்தனமாக சிரித்ததின் காரணம் முதலில் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது. “என் பெயரைச் சொல்லி அறிவிப்பு செஞ்சாதான் வீட்டுக்குள்ள போவேன். இது ரெக்கார்டட் வாய்ஸ்ன்னு நெனக்கறேன்” என்று ஆராய்ச்சி செய்து பிக் பாஸிடம் பிடிவாதம் பிடித்திருக்கிறார் அனிதா. ஓவியா ஆரம்பித்தாலும் ஆரம்பித்து வைத்தார். ‘பிக் பாஸ் எங்காளு… அவரு எனக்குத்தான் சொந்தம்’ என்று பெண்கள் வரிசையாக போட்டிக்கு வந்து விடுகிறார்கள். முதன்முறை அனிதாவின் குறும்பை சகித்த பிக் பாஸால், இரண்டாம் அறிவிப்பிற்குப் பின்பும் பொறுக்க முடியவில்லை.

“இரண்டு முறை அறிவிப்பு தந்தும் நீங்கள் வீட்டிற்குள் செல்லாததால் மற்ற ஒவ்வொரு ஜோடிக்கும் இரண்டு நாணயங்களை அபராதமாகச் செலுத்த வேண்டும்” என்று கறாரான குரலில் பிக் பாஸ் அறிவிக்க அப்போது கூட அனிதாவிற்கு பிரச்னையின் தீவிரம் புரியவில்லை. “இதெல்லாம் போங்கு... மாத்தேன் போ... நான் தப்பு பண்ணலை. பண்ணியிருந்தாலும் நான் குழந்தைதானே?!” என்று கொஞ்சல் தொனியை விடாமல் அவர் அடம்பிடித்த போது நமக்கே எரிச்சலாகத்தான் வந்தது. “இதெல்லாம் அநியாயம். எட்டு காயின்லாம் தர முடியாது. நீங்க ரெண்டாம் தடவைல்லாம் அறிவிப்பு செய்யலை” என்று வீட்டிற்கு வந்த பெரியப்பாவிடம் விளையாடுவது மாதிரி அனிதா விளையாட, டென்ஷன் ஆன பிக் பாஸ், “அப்புறமா குறும்படம் போட்டுக் காண்பிக்கறேன். இப்ப ஃபைனை கட்டுங்க” என்று கறார் காட்டினார். “கோர்ட்ல போய் கட்டினா 500... இங்க கட்டினா 100” என்கிற டிராஃபிக் கான்ஸ்டபிள் போல் பிரம்மாஸ்திரத்தை பிக் பாஸ் எடுத்ததும் ஜெர்க் ஆனார் அனிதா.

அனிதாவின் அழிச்சாட்டியம்

அனிதா தந்த டார்ச்சர் காரணமாக சிநேகனும் கூடவே டென்ஷன் ஆனார். “பிக் பாஸ் நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சது.. இதை எப்படி தர்றது... நான் இந்த விளையாட்டுக்கு வரலை” என்று ரொம்ப நேரமாக பேட்டிங் சான்ஸ் கிடைக்காத பையன் மாதிரி சிநேகன் முரண்டு பிடிக்க, அவரை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ் “அனிதாவிற்கு எல்லாமே விளையாட்டா இருக்கா? எனக்கு இன்னொரு முகம் இருக்கு... அதை நீங்க எல்லாம் தெரிஞ்சுக்க வேணாம்” என்று கெத்து காட்டினார். "தன் பெயரைச் சொல்லி தனியா அறிவிப்பு செய்யணும்” என்பது அனிதாவின் பிடிவாதமாம்.

BB Ultimate - 42
BB Ultimate - 42

அனிதாவின் சார்பில் மாப்பு கேட்ட சிநேகன், “அபராதத்தைக் குறைச்சுக்கங்க ஐயா” என்று முறையிட “சரி... பாதி அபராதம் கட்டினா போதும்” என்று அவரை அனுப்பினார் பிக் பாஸ். “உங்க குரலை நாங்க அவ்ளோ லவ் பண்றோம் பிக் பாஸ்” என்று சிநேகன் ஐஸ் வைத்ததற்கு கிடைத்த பரிசு இது. “நீங்கலாம் நல்லாவே இருக்க மாட்டீங்க… நாசமாப் போயிடுவீங்க...” என்று சாபம் கொடுப்பது மாதிரியே அபராதத்தைச் செலுத்தினார் அனிதா.

சிநேகன் vs தாமரை – உக்கிரமாக நடந்த சண்டை

அது கபடியாட்டமா, மல்யுத்தமா என்றே தெரியாத விளையாட்டாக அடுத்து ஒரு டாஸ்க் ஆரமபித்தது. பிறகுதான் புரிந்தது. எதிரணியினரின் முதுகில் ஒட்டியிருக்கும் நாணயத்தை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். சிநேகன் - அனிதா ஜோடியும் தாமரை – சுரேஷ் ஜோடியும் முதலில் களத்தில் இறங்கினார்கள். ஆரம்பத்தில் இருந்தே தள்ளுமுள்ளாக இந்த ஆட்டம் சென்று கொண்டிருந்தது.
BB Ultimate - 42
BB Ultimate - 42

தன்னிடமிருந்து நாணயத்தை எடுக்க வந்த அனிதாவை சற்று ஆவேசமாக தள்ளிவிட்டார் சுரேஷ். “அய்யோ வலிக்குது... டிரஸ் கிழிஞ்சது” என்று வழக்கம் போல் அனிதா சிணுங்க ஆரம்பிக்க உடனே மன்னிப்பு கேட்டார் சுரேஷ். ‘சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு’ என்பது போல உடல் ரீதியான டாஸ்க்கில் இவ்வகையான சண்டைகள் சகஜம்தான். ஆனால் சுரேஷையும் நம்ப முடியாது. சைலண்ட்டாக வயலன்ட் ஆவதில் தாத்தா வல்லவர். சுரேஷின் அலப்பறை சற்று அதிகமானதால் டென்ஷன் ஆன சிநேகன், பதிலுக்கு ஆவேசமாக மோதியதில் தலையில் அடிபட்டு தாமரை கீழே விழுந்தார். ஆனால் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்ட தாமரை, சுதாரித்துக் கொண்டு மறுபடியும் ஆட்டத்திற்குள் வந்தார்.

மீண்டும் நிகழ்ந்த ஒரு தள்ளுமுள்ளு காரணமாக அனிதா ஆட்சேபம் தெரிவிக்க “நான் எதுவும் பண்ணலைம்மா. எப்படி நடந்துச்சுன்னா..?” என்று நடுவர் ரம்யாவிடம் சுரேஷ் டெமோ காண்பிக்க முயல “நீங்க ஒண்ணும் செஞ்சு காண்பிக்க வேணாம்” என்று பதறி இரண்டடி பின்னால் நகர்ந்தார் ரம்யா. அடுத்த முறையான மோதலில் ‘பொதேர்’ என்று சுரேஷ் கீழே விழுந்தார். ‘எனக்கு அடிபடலை’ என்று அவர் சொன்னாலும் மற்றவர்கள் பதறினார்கள். (வயதானவர்களை நடுவர்களாக போட்டிருக்கலாம்!)

BB Ultimate - 42
BB Ultimate - 42

சுரேஷின் உடல்நலம் கருதி ஆட்டத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட ‘ஒத்தைக்கு ஒத்தை’ என்று போட்டி முடிவாகியது. "ஐயோ வலிக்குது” என்று சிணுங்கிக் கொண்டேயிருந்த அனிதாவும் ‘இதுதான் சாக்கு” என்று ஆட்டத்திலிருந்து அகன்று விட தாமரையும் சிநேகனும் மோத ஆரம்பித்தார்கள். வட்டத்திற்கு வெளியே சென்றுவிட்டாலும் விடாமல் சிநேகன் தள்ளியதால் தாமரை டென்ஷன் ஆகிவிட்டார். தாமரைக்குள் இருந்த ‘அங்காள அம்மன்’ உக்கிரமாக வெளியே வர, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. ‘போய்யா... வாய்யா’ என்கிற ரேஞ்சிற்கு கவிஞரை இறங்கி அடித்தார் தாமரை.

கோபித்துக் கொண்டு ஆட்டத்திலிருந்து விலகிய சிநேகன், நடந்த விஷயத்தைப் பற்றி மற்றவர்களிடம் சென்று அனத்த “எதுவா இருந்தாலும் நேரா பேசு... நேர்மையா பேசு” என்று தாமரை மீண்டும் சாமியாட ஆரம்பிக்க, இருவருக்கும் உரசல் மறுபடி ஆரம்பித்தது. இந்தச் சந்தடி அடங்கியதும் மறுபடியும் களத்திற்கு வந்தார் அனிதா. தாமரையும் அனிதாவும் சற்று நேரம் ஜாலியாக கபடி ஆடியதும் அனிதாவின் முதுகில் இருந்த நாணயத்தை தாமரை தொட்டு விட அதுவே வெற்றி என்பதாக விதி திருத்தப்பட்டது. (பின்ன... எவ்ளோ நேரம்தான் இதை இழுக்கறது?!). வெற்றி பெற்ற பெருமிதத்துடன் தாமரை பரிசுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பினார்.

BB Ultimate - 42
BB Ultimate - 42
இந்த வார எலிமினேஷில் கவிஞரின் பெயர் பலமாக அடிபடுகிறது. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.