‘பேசிப் பேசியே உயிரை வாங்கும் பறவையினம் எது?’ (இல்லங்க... உங்க வீட்ல இருக்கற யாரோட பேரையாவது சொல்லி தனிப்பட்ட பகையை எல்லாம் தீர்த்துக்கக் கூடாது.)
விடை: அவை பிக் பாஸ் வீட்டில்தான் பெரும்பாலும் வாழ்கின்றன. நேற்று நடந்தது முழுவதும் பேச்சு, பேச்சு... பேச்சுதான். One of the boring episodes. முடியல.
நாள் 47-ல் நடந்தது என்ன?
'மொழி' படத்தின் ஜோதிகா மாதிரி சைகை மொழியிலேயே விரல்களை ஆட்டி ஆட்டி பாலாஜியிடம் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. ஏற்கெனவே நிறைய விஷயங்கள் நமக்குப் புரியல. இதுல ரகசியம் வேறயா?! வெளங்கிடும். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அந்தப் பக்கமாக ஒதுங்கி வந்தார் அனிதா. தன் தலைவி அபிராமியின் புகைப்படத்தைக் கொண்ட முட்டையை பாலா அணிதான் ஒளித்து வைத்திருக்கிறது என்பதை அனிதா மோப்பம் பிடித்துவிட்டார் போலிருக்கிறது.
‘பாலா மீது ஒரு புதிய வழக்கு’
ஒளித்து வைக்கப்பட்டிருந்த முட்டையை அனிதா சட்டென்று எடுக்க முயல கழுகு போலவே பாய்ந்து வந்து தடுத்தார் பாலா. இந்தத் தள்ளுமுள்ளுவில் பாலாவின் கை அனிதாவின் கழுத்தில் சற்று வேகமாக பட்டு விட்டது போல. செல்போனை நீண்ட நேரம் கழுத்தில் சாய்த்து வைத்து பேசியவனின் நிலைமை போலவே ஆனது அனிதாவின் நிலைமை. அனிதா கழுத்தைப் பிடித்துக் கொண்டு அப்படியே துடித்து அமர, ‘அய்யய்யோ... ஏற்கெனவே இருக்கிற கேஸ் எல்லாம் போதாதுன்னு புதுசா ஒண்ணா?’ என்று பதறிய பாலா, “அடிபட்டுடுச்சா.. இப்ப எப்படி இருக்கு?” என்று அனிதாவை டிசைன் டிசைனாக விசாரித்துக் கொண்டே இருந்தார். (இருக்கு... பாலாக்குள்ள பயம் இருக்கு!).
தங்கள் அணித்தலைவரின் முட்டை எங்கு ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டாலே அவர்களிடம் அந்த முட்டையை ஒப்படைத்து விட வேண்டுமாம். இதுதான் விதியாம். இதை அனிதாவும் அபிராமியும் சுட்டிக் காட்டி முட்டையின் உரிமையைக் கோர, “அவங்க கண்டுபிடிக்கலை. கெஸ்தான் பண்ணாங்க” என்று சுருதி மல்லுக்கட்ட, சுருதிக்கும் அபிராமிக்கும் இடையே மீண்டும் ஒரு மினி சண்டை நடந்தது. அதுவரை கழுத்து வலி விளம்பரத்தில் வரும் மாடல் போலவே முகத்தைச் சுளித்தபடி உலவிய அனிதா, ரூல்ஸ் புக்கை வாசிக்கும் போது மட்டும் கழுத்து நேராகி இயல்பாகி விட்டார். (இட்ஸ் கான்... போயிந்தி... அத்தனையும் நடிப்பா கோப்பால்?!).
‘ரம்யாவைப் பாராட்டினால் தாமரைக்கு வலிக்கும்’
ஒருவழியாக கோழி டாஸ்க் முடிந்து தொலைத்தது போல. வழக்கம் போல் பிக் பாஸ் இதையும் நமக்கு முறையாக அறிவிக்கவில்லை. நடுவர் சுரேஷிற்கு பச்சை அணியின் மனிதாபிமானமும் சுயநலமின்மையும் மிகவும் பிடித்துவிட்டதாம். அதிலும் குறிப்பாக ரம்யாவின் தியாகவுணர்ச்சியைக் கண்டு அவருக்குக் கண்ணீரே வந்து விட்டதாம். இதை கேமராவிடம் சொல்லி அந்த அணியைப் பிரத்யேகமாகப் பாராட்டினார் சுரேஷ். ரம்யாவை யாராவது பாராட்டினால், யாருக்கு உடனே வலிக்கும்? யெஸ்... வழக்கம் போலவே தாமரையின் மண்டையில் ‘சுர்’ ஏற... “அப்ப நாங்க என்ன மனிதாபிமானம் இல்லாமயா வாழ்ந்தோம்?” என்று நடுவரிடம் சண்டைக்குப் போனார்.
“அந்த ரகசியத்தைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. எனக்கு வேற வழி தெரியல… சொல்றேன்” என்று கண்ணாடியைக் கழற்றிய சுரேஷ் “ரம்யா தந்த வெள்ளை முட்டையால்தான் நீங்க சாப்பிட்டீங்க. அது உங்களுக்கே தெரியாது” என்று உருக்கத்துடன் சொல்லியபடி இடத்தை விட்டு வேகமாக நகர, “ஹலோ... நாங்க நெறய முறை பாலா கிட்டத்தான் வாங்கிச் சாப்பிட்டிருக்கோம்” என்று மறுத்தார் தாமரை.
பச்சை அணியின் சார்பாக சுரேஷ் தந்த தீர்ப்பு பற்றி வீடெங்கும் புகைச்சலாக இருந்தது. சக கேப்டனான பாலாவிடம் இது பற்றி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார் அபிராமி. “ஒரு கேப்டனா நீ இது பற்றி ஆட்சேபம் செஞ்சிருக்கணும்” என்பது அபிராமியின் புகார். (நீங்களும்தானே மேடம் கேப்டன்?!). “நான் அப்ப ஒரு ஹவுஸ்மேட்டா டாஸ்க்ல இருந்தேன்” என்று சாமர்த்தியமாக விளக்கம் தந்தார் பாலா. ஒரு விதியை இவரே போடுவாராம். இவரே அப்புறம் வளைப்பாராம்.
‘பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்’
அடுத்ததாக ஒரு புதிய டாஸ்க்கை உதறியெடுத்தார் பிக் பாஸ். பேசினார்கள்; பேசினார்கள்; அப்படிப் பேசினார்கள். ஒரு பறவையின் புகைப்படமும் அதைப் பற்றிய குறிப்புகளும் அளிக்கப்படும். இதை வைத்து அந்தப் பறவை யாருக்குப் பொருந்தும் என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் சொல்ல வேண்டும்.
முதலில் வந்த பறவை, வான்கோழி. இது அறிவுக்கூர்மை உடையதாம். சண்டையும் போடுமாம். சத்தமும் போடுமாம். முதலில் வந்த ஜூலி “வேற யாரு?! நம்ம தாமரை அக்காவிற்குத்தான் இது சாலப் பொருத்தம்” என்று ஆரம்பித்து வைக்க, பிக் பாஸ் வழக்கத்தின் படி பின்னர் வந்தவர்களும் இதையே பின்பற்றினார்கள். தன்னுடைய முறை வந்த போது மற்றவற்றை ஒப்புக் கொண்ட தாமரை “ஏன் மயிலைச் சேர்த்திருக்காங்க?” என்று சந்தேகம் எழுப்பினார். ‘கானமயில் ஆட கண்டிருந்த வான்கோழி...’ என்கிற பாடலைச் சரியாக நினைவுகூர்ந்த சுரேஷ், “ஆனால் தாமரை காப்பியடிக்கல... ரொம்ப விரைவிலேயே இந்தச் சூழலுக்கு அடாப்ட் ஆகிட்டாங்க” என்று பாசிட்டிவ்வாக மாற்றினார். ஆனால் இதை தாமரை ஏற்றுக் கொள்ளவில்லை. “அதெல்லாம் நான் யாரையும் பார்த்தெல்லாம் நடிக்க மாட்டேன். என்னுடையது ஒரிஜினல்” என்று கெத்தாக சொல்ல, இறுதியில் பெரும்பான்மையான வாக்குகளின் படி ‘வான்கோழி’ பட்டம் தாமரைக்கு அளிக்கப்பட்டது.
அடுத்ததாக வந்த பறவை வாத்து. ‘எல்லாச் சூழலையும் ஏற்று வாழும்; இலக்கு இல்லாமல் யாரையாவது பின்தொடர்ந்து செல்லும்’ என்பது இது பற்றிய குறிப்பு. முதலில் வந்த சுரேஷ், இதை அபிராமிக்கு சமர்ப்பணம் செய்தார். ‘இலக்கு இல்லாமல் செல்லும்ன்னு சொல்ல மாட்டேன்’ என்று ஜாக்கிரதையான பின்குறிப்பை இணைத்துக் கொண்டார். அனிதா தேர்ந்தெடுத்தது சரியான சாய்ஸ். சதீஷைத் தேர்ந்தெடுத்த அவர் “ரம்யா ரசிகர் பேரவையின் தவிர்க்க முடியாத நிரந்தர தலைவராக சதீஷ் மாறிவிட்டார். ரம்யா செய்யறதையேதான் செய்யறார்” என்று விளக்கம் சொல்லி ‘வாத்து’ படத்தை சதீஷிற்கு அளித்தார். அபிராமியும் அனிதாவின் வாக்குமூலத்தை வழிமொழிந்தார். ஆனால் சதீஷோ இதை நிரூப்பிற்கு வழங்கினார். ‘ரம்யா ஆதரவாளர்’ என்கிற புகாரை சுருதியும் முன்வைத்தார். ஆனால் சதீஷிடம் உள்ள நல்ல பழக்கம் என்னவென்றால், அது எத்தனை கடுமையான ஆலோசனையாக இருந்தாலும் கூட புன்னகையுடன் தலையாட்டி கேட்டுக் கொள்கிறார். மறுப்போ, விளக்கமோ சொல்வதில்லை. (என்ன வேணா நடக்கட்டும்... நான் சந்தோஷமா இருப்பேன்!).
‘அந்தக் குழந்தையே நான்தான்’ – நிரூப் பிடிவாதம்
ஒரு பிரேக் விட்டதும் நிரூப்பும் ரம்யாவும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். “உன்கிட்ட சீரியஸ்னஸ் இல்ல. துப்பறது, ஃபோம் அடிக்கறது... இதெல்லாம் நிச்சயமா fun இல்ல. உங்களுக்கு வேணா ஜாலியா இருக்கலாம். பார்க்கறவங்களுக்கு அருவருப்பா இருக்கு. எது சுவாரஸ்யமா இருக்கும்னு டீம் கிட்ட முதல்ல டிஸ்கஸ் பண்ணணும். நீங்களா நினைச்சுக்கிட்டு பண்றது சுவாரஸ்யம் இல்ல” என்று ரம்யா சரமாரியாக புகார் தெரிவிக்க “நான் இன்னமும் குழந்தை மாதிரிதான். நைட்டு நிம்மதியா தூங்கறது எனக்கு முக்கியம்” என்று “அந்தக் குழந்தையே நான்தான்” என்பது மாதிரி பதில் சொன்னார் நிரூப். (இவருக்கு குழந்தை டாஸ்க் கொடுத்தது தப்பா போச்சு!).
“நீ பாசமா இருக்கறது ஓகே... அதை அடிக்கடி சொல்லணும்னு அவசியமில்லை. பாசம்-ன்றது ஃபீல் பண்ற விஷயம். அடிக்கடி சொல்ற விஷயமில்லை” என்று டாஸ்க்கின் போது தாமரை பற்றி பாலா சொல்லிவிட்டார் போலிருக்கிறது. இதனால் தாமரை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார். “நான் எத்தனை முறை இதைச் சொல்லியிருக்கேன். பாசமா இருக்கற மாதிரி உன்னை ஏமாத்தினனா?” என்று தாமரை அனத்த ஆரம்பிக்க அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் பாலாவிற்கு போதும் போதும் என்றாகி விட்டது.
பாலாவை ஏன் அபிராமி சகித்துக் கொள்கிறார்?
‘பறவை டாஸ்க்கில்’ அடுத்து பறந்து வந்து அமர்ந்தது ‘காகம்’. ‘இது பகிர்ந்து உண்ணும். சுற்றி இருப்பவர்களை பாதுகாக்கும். தந்திரத்தோடு செயல்படும்’ என்று குறிப்பு எழுதியிருந்தார் பிக் பாஸ். முதலில் வந்த சதீஷ், இந்தப் பட்டத்தை தாமரைக்கு அளிக்க பின்னால் வந்தவர்களும் அதையே பாடினார்கள். நிரூப் மட்டும் பாலாவிற்கு அளித்தார். ‘தந்திரம் என்பதை strategy என்று சாமர்த்தியமாக மொழிபெயர்த்து விட்டார் நிரூப். “நான் Wider Note-ல இதைப் பார்க்கறேன்” என்று ஆரம்பித்தார் அனிதா. (நீங்க எல்லாத்தையும் அப்படித்தானே மேடம் பார்க்கறீங்க?!). “இந்த வீட்டில் எல்லோரும்தான் தந்திரம் செய்யறாங்க. அதையெல்லாம் இல்லைன்னு சொல்ல முடியாது” என்று தனக்கு வழங்கப்பட்ட ‘காகம்’ புகைப்படத்தைப் பெற்றுக் கொண்டார் தாமரை.
அடுத்து வந்தது ‘கிளி’. ‘சுற்றியிருப்பவர்களிடம் வளைந்து கொடுக்கும்; சொல்லிக் கொடுத்த வார்த்தைகளை திருப்பிச் சொல்லும்’ என்னும் பங்கமான குறிப்பு இதனுடன் இருந்தது. இதில் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜூலி. அடுத்து வந்தது ‘கோழி’. (மறுபடியும் கோழியா?!). ‘சுலபமாக கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்; நமக்காக வந்து உதவி செய்யும்’ என்பது இதற்கான குறிப்பு. இதில் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ‘அபிராமி’. ‘பாலாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து பல தியாகங்களைச் செய்கிறார் அபி’ என்று ரம்யா வியாக்கியானம் சொல்ல ‘அப்படிச் சொல்லு!” என்று உற்சாகம் அடைந்தார் நிரூப். பாலா செய்யும் அவமதிப்புகளைச் சகித்துக் கொண்டிருக்கும் கட்டாயத்தை அபிராமி ஏன் பின்பற்றுகிறார் என்று தெரியவில்லை. வலிமையான போட்டியாளரை அண்டியிருக்கும் பாதுகாப்பு உணர்ச்சியாக இருக்கலாம்.
அடுத்ததாக கழுகார் பறந்து வந்தார். ‘மிகவும் தைரியமான, எதைப் பற்றியும் கவலைப்படாத பறவை; தன் இனத்தைத் தவிர மற்றவற்றையெல்லாம் இரையாக்கிக் கொள்ளும்’ என்கிற வில்லங்கமான குறிப்பு இருந்தது. இது வேறு யாருக்குப் பொருந்தும்? யெஸ்... பாலாவிற்குத்தான். “மத்த விஷயங்கள் ஓகே. ஆனா பாலாவை தைரியசாலின்னு சொல்ல மாட்டேன். சில விஷயங்களில் அவனுக்கு பயம் இருக்கு” என்று உள்குத்தாக இல்லாமல் நேரடியாகக் குத்தினார் அனிதா. இவருக்கும் ரம்யாவிற்கும் இடையே ஒரு நீண்ட வாக்குவாதம் நிகழ்ந்தது. இறுதியில் பாலா ‘கழுகாக’ தேர்வானார். ஆனால், அவர் இந்தப் பட்டத்தை அளித்தது சுரேஷிற்குத்தான்.
பொங்கல் சாப்பிட்ட எபெக்ட்டில் இருந்த ஜூலி
அடுத்து வந்தது பென்குயின். “இது பறவை வகை என்பது இதற்கே தெரியாது; பறந்து செல்ல வேண்டிய இடங்களில் கூட நீந்தித்தான் போகும்” என்கிற குறிப்பு வாசிக்கப்படும் போதே நமக்குத் தெரிந்து விட்டது. அது சதீஷிற்குத்தான் பொருந்தும் என்று. “நான் யாரு... இங்க எதுக்கு வந்தேன்... என்ன செய்யணும்...” என்கிற மோடியிலேயே அவர் பெரும்பாலான நேரங்களில் சற்றி வருகிறார். எனவே அவருக்கே இது பெரும்பான்மையான தேர்வின் மூலம் வழங்கப்பட்டது. மற்றவர்கள் தந்தது போதாதாதென்று, தனக்கே இதை வழங்கிக் கொண்ட சதீஷ் “இந்த வீட்டை விட்டு எப்படா போவோம்ன்னு இருக்கு!” என்று ஒப்புதல் வாக்குமூலமும் தந்தார். உண்மையாகவே பிக் பாஸ் வீட்டின் சூழல் சதீஷிற்கு ஒவ்வாமையைத் தந்திருக்கிறது போல.
கடைசியாக வந்த பறவை ‘புறா’. (ஹப்பாடா!). ‘அமைதியை விரும்பும் பறவை. கூட்டமாக இருப்பதுதான் பாதுகாப்பு; தனித்து இருந்தால் வேட்டையாடப்படும்’ என்கிற குறிப்பை வாசித்தவுடனேயே ஒருமனதாக தேர்வு செய்து ஜூலிக்கு வழங்கினார்கள்.
இந்த டாஸ்க் முழுக்க இரண்டு பிளேட் பொங்கல் சாப்பிட்ட எபெக்ட்டிலேயே கண்களைச் செருகியபடி அபிராமியின் மீது சாய்ந்து கொண்டு இருந்தார் ஜூலி; அரை போதையில்தான் பேசிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுமல்ல, இந்த எபிசோடை பார்த்த நமக்குமே அப்படித்தான் இருந்தது.