இந்தக் கட்டுரைத் தொடரில் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயம், இப்போதுதான் பிக் பாஸ் டீமின் காதில் விழுந்தது போல. ஆம், ‘தீனாவை உள்ளே அனுப்பினால் நிகழ்ச்சி களைகட்டக்கூடும்’ என்பதை பல முறை வலியுறுத்தி எழுதியிருந்தேன். அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி.
தீனாவுடன் இன்னொரு உற்சாகப்புயலும் உள்ளே நுழைந்திருக்கிறது. அது சாண்டி மாஸ்டர். “இனிமே Fun-தான். Fight-லாம் வேண்டாம்” என்று உள்ளே நுழையும் போதே சொன்னார் சாண்டி. அவர் சொன்னதைப் போலவே நேற்றைய எபிசோட் முழுவதும் ஜாலியாகவும் பாசிட்டிவ் எனர்ஜியோடும் இருந்தது. நமக்கும் பெரிய ஆறுதலாக இருந்தது.
நாள் 54-ல் நடந்தது என்ன?
“'உள்ளே வந்து ரெண்டு நாள் இருந்து பாருங்க’ன்னு பாலா சொன்னதும் நான் டக்குன்னு உள்ளே வந்துட்டேன். பாலா அப்படியே ஷாக் ஆயிட்டார்” என்று தீனா சொன்னதும் ‘அப்படியா?” என்கிற மோடில் கேட்டுக் கொண்டிருந்தார் ரம்யா. இவர்கள் இருவரும் சேர்ந்து சதீஷின் மெத்தனமான ஆட்டத்தைப் பற்றி கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் சதீஷின் அடிப்படையான குணாதிசயத்தையும் அவர்கள் கவனத்தில் கொண்டது சிறப்பு. அதைப் பற்றி அதிகம் கலாய்க்கவில்லை.

“மத்தவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு” – சதீஷ் செய்த காமெடி
தான் சரியாக விளையாடாததைப் பற்றி சதீஷ் இன்னமும் உணரவில்லை போல. மற்றவர்களைத்தான் ‘அடப்பாவமே’ என்கிற மாதிரி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அல்லது தன்னுடைய குறையை அப்படியாக மறைக்க நினைக்கிறார். தீனாவின் வருகை நிகழ்ந்த போது சதீஷ் உறைந்து நின்று விட்டார். சதீஷ் உள்ளே வந்த சமயத்தில் ‘தாடி’ பாலாஜியின் முகமும் இப்படித்தான் மாறியது. (காலம் எவ்வளவு வேகமா சுழலுது பார்த்தீங்களா?!) “நான் இங்க திணர்ற மாதிரியா தெரியுது? பாவம் இந்தக் குழந்தைங்க” என்று மற்றவர்களைப் பார்த்து பரிதாப்படும் கெத்தோடு சதீஷ் பேசிக் கொண்டிருக்க “உன்னைத்தான் அவங்க குழந்தையா பார்க்கறாங்க” என்கிற உண்மையை போட்டு உடைத்தார் தீனா. “நான் யாரையும் ஹர்ட் பண்ணாம பேசணும்னு நெனக்கறேன்” என்று சதீஷ் சொல்வது நல்ல பண்புதான். ஆனால் தன்னுடைய நகைச்சுவை ஆட்டத்தைக் கூட அவர் வெளிப்படுத்தவில்லையே?!
“மத்தவங்க ஹர்ட் ஆகறது ஒருபக்கம் இருக்கட்டும். உன்னை மத்தவங்க ஹர்ட் பண்றாங்க... அதைக் கவனிக்கிறியா இல்லையா... மத்த விஷயங்களையெல்லாம் நல்லா அனலைஸ் பண்ணு, வேண்டாங்கலை. ஆனா உன் ஆட்டத்தை ஆடு” என்று தீனா சொன்னது சரியான உபதேசம். சதீஷை ஒருபக்கம் கலாய்த்தாலும், இன்னொரு பக்கம் அவர் மீது தீனாவிற்கு கரிசனமும் இருக்கிறது. என்ன இருந்தாலும் KPY பார்ட்னர் இல்லையா?!

கார்டன் ஏரியாவில் போட்டியாளர்களின் கட்அவுட்கள் வைக்கப்பட்டு, யார் அப்போதைய சூழலில் சிறப்பாக டாஸ்க் செய்தது என்பதை குறிக்கும் வகையில் பாட்டரிகள் இருந்தன. அதில் ரம்யாவின் பாட்டரிதான் அதிக சார்ஜூடன் இருந்தது. “இப்பத்தான் உள்ளே வந்த... நீ அப்படி என்ன பண்ணிட்டேன்னு என்னை கேக்கறாங்க” என்று தீனாவிடம் சிணுங்கினார் ரம்யா.
கலந்து கட்டிய இரண்டு டாஸ்க்குகள்
விடிந்தது. பகலில் தூங்கினால்தான் நாய் குரைக்கும். ஆனால் காலையிலேயே நாய் குரைக்கும் சத்தம் வருகிறதே என்று மக்கள் ஆச்சரியமாக தூக்கக் கலக்கத்துடன் கண் விரித்துப் பார்த்தால், பாடலே அப்படித்தான் ஆரம்பிக்கிறது. ‘நாயே.... நாயே...' என்று ஆரம்பிக்கும் நல்ல கருத்துள்ள பாடல். இரண்டு விதமான டாஸ்க்குகளை கலந்து கட்டி இன்று ஆட வேண்டும் என்று அறிவித்தார் பிக் பாஸ்.
ஒன்று, டான்ஸ் மாரத்தான். போட்டியாளர்களுக்குச் சில குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் தரப்படும். அவர்கள் அந்த கெட்டப்பை அணிவதோடு, சம்பந்தப்பட்ட பாவனையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களுக்கான பாடல் ஒலிபரப்படும் போது எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து ஆட வேண்டும். இரண்டாவது, கடிகார டாஸ்க். தீனாவைத் தவிர வீட்டில் உள்ள மற்றவர்கள் இரண்டு பேர் கொண்ட அணியாக மாற வேண்டும். ஒவ்வொரு ஜோடியும் கடிகாரமாக மாறி ஒரு மணி நேரத்தை கணிக்க வேண்டும். இவை இரண்டுமே முந்தைய சீசன்களில் நாம் பார்த்து பழக்கப்பட்ட டாஸ்க்குகள்தான்.

ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான வேடங்களில் மாறி அமர்ந்திருந்த போது மெயின் கேட்டில் இசை கேட்டது. “இன்னொரு வைல்ட் கார்டா?” என்று மக்களின் வயிற்றில் புளி கரைத்திருக்க வேண்டும். ஆனால் இதை வெளியில் காட்டிக் கொள்ள முடியுமா? சாண்டி மாஸ்டர் ஸ்டைலாக உள்ளே நுழைந்த சமயத்தில் போட்டியாளர்களுக்கு எப்படியிருந்ததோ, பார்வையாளர்களுக்கு ஜில்லென்று இருந்திருக்கலாம். சீசன்3-ல் சாண்டி குழு அடித்த லூட்டி அப்படி!
தீனாவைத் தொடர்ந்து உள்ளே வந்தார் சாண்டி
‘செம போத... வாந்தி...’ என்று டாஸ்மாக் வாசனையுடன் ஜாலியாக நடனமாடிக் கொண்டே வந்த சாண்டியைப் பார்த்தவுடன் அனைவரும் உற்சாகம் அடைந்தனர். டான்ஸ் மாரத்தான் நடக்கும் சரியான நேரம் பார்த்துத்தான் இவரை பிக் பாஸ் உள்ளே அனுப்பியிருக்கிறார். (எல்லாமே பிளான்தான்!). சாண்டி உள்ளே வந்ததில் பிக் பாஸே குஷியாகியிருக்க வேண்டும். “குருநாதா” என்று பழைய பாசத்தில் சாண்டி அழைக்க “சிஷ்யா” என்று பிக் பாஸ் பதிலுக்கு சொன்ன போது அவர் குரலில் அப்படியொரு துள்ளல்! “இனிமே ஜாலிதான். சண்டை போடாம இருங்க” என்று முக்கியமான அறிவுரையை சொன்னபடி வீட்டுக்குள் சென்ற சாண்டியை, சில நிமிடங்களுக்குள் கலாய்க்கத் துவங்கி விட்டார் பிக் பாஸ். “சாண்டி மைக்கை ஒழுங்கா போடுங்க”.

கடிகாரமாக மாறும் டாஸ்க்கில் ரம்யா + சதீஷ், பாலா + நிரூப், தாமரை + ஜூலி, அபிராமி + சுருதி ஆகிய நான்கு அணிகள் உருவாகின. இந்த வரிசையில் பாலா + நிரூப் கூட்டணிதான் ஆச்சரியம். ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா” என்கிற ஃபீலிங் வந்தது. ஆனால் ஏதாவது சிறப்பான ஆக்ஷன் டாஸ்க்கிற்கு இவர்கள் ஜோடி சேர்ந்திருக்கலாம். கடிகாரப் பணி என்பது பொறுமையைக் கோரும் சவால். ஆனால் இதிலும் இந்தக் கூட்டணி கெத்து காட்டியது. மற்றவர்கள் பயபக்தியுடன் நின்று கொண்டு விநாடி, நிமிடங்களைக் கணக்கிட பாலாவோ ஒரு பீன் பேகை தூக்கிக் கொண்டு போய் கெத்தாக உட்கார்ந்து கொள்ள, “நான் மட்டும் சளைச்சவனா?” என்று நிரூப்பும் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு அசால்ட்டாக உட்கார்ந்தார்.
‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’

ஆனால் என்னதான் அசால்ட்டாக இருந்தாலும் பாலா – நிரூப் கூட்டணிதான் ஒரு மணி நேரத்தின் கணக்கை, ஒரு மணி நேரம், 3 நிமிடங்களுக்கு ஏறத்தாழ சரியாகக் கணித்தார்கள். இதற்காக இவர்களுக்கு மட்டும் மலிவு விலையில் பொருள்கள் வழங்கப்பட பீட்சா, சிக்கன் என்று வாரிக்குவித்தார்கள். “நாங்கதானே முதல்ல முடிச்சோம்... எங்க ரிசல்ட் வரலையே?” என்று ரம்யா பரிதவித்தார். சதீஷிற்கு இதைப் பற்றிக் கவலையில்லை. வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையில் பார்க்கும் மகான் அவர். என்றாலும் இந்த டாஸ்க்கை சிரத்தையுடன் செய்த சதீஷை பாராட்டியாக வேண்டும். அபிராமி + சுருதி கூட்டணி மிகுந்த ஃபோகஸூடன் விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்த போது இடையில் கிண்ணத்தில் சத்தம் எழுப்பி அவர்களை பாலா தொந்தரவு செய்தது ரசிக்கத்தக்க குறும்பு.
‘பருத்தி வீரன்’ நிரூப், ‘மன்மதன்’ பாலா, ரம்யா ‘குஷி ஜோதிகா’
நிரூப்பிற்கு ‘பருத்தி வீரன் கார்த்தி', பாலாவிற்கு சிம்புவின் ‘மன்மதன்’, தாமரைக்கு ‘கரகாட்ட’ குஷ்பு (ஆனால் கோவை சரளாவின் நினைவுதான் வந்தது), சுருதிக்கு ரோபோ, அபிராமிக்கு ஜீன்ஸ் ‘வைஷ்ணவி’ ஆகிய பாத்திரங்கள் தரப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. கறுப்புச் சேலை அணிந்திருந்த ரம்யாவிற்கு யாருடைய பாத்திரம் என்பதை அறிய முடியவில்லை. 'மேகம் கறுக்குது... மின்னல் அடிக்குது’ பாடல் ஒலித்த போது பரபரவென்று ரம்யா ஓடிச் சென்று ஆடிய போதுதான் அவர் குஷி ‘ஜோதிகா’ என்பதையே அறிய முடிந்தது. நடனம் ஆடிய போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் சாண்டி சொல்லித்தந்த காட்சி அருமை. சுமாராக ஆடி முடித்து இறங்கிய ரம்யா “நான் நல்லா ஆடலையா?” என்று சிணுங்க “நல்லாத்தான் இருந்துச்சு” என்று மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்திலிருந்து ஒலித்த 'வதனவதன...' பாடலுக்கு நன்றாகவே ஆடினார் தாமரை. மன்மதன் படத்திலிருந்து ‘தத்தை தத்தை’ என்கிற ரகளையான பாடலுக்கு பாலா நன்றாகவே ஆடினார். “காலை மடிச்சு ஆடு” என்று சாண்டி தந்த ஆலோசனையையும் எப்படியோ சமாளித்தார் பாலா. கூடவே வந்து இம்சை தந்த ஜூலியை ஒரு கட்டத்தில் காலால் ஜாலியாக எட்டி உதைத்து பாலா அப்புறப்படுத்திய காட்சி சிரிப்பை வரவழைத்தது என்றாலும், ஜூலி பாவம். ஆனால், அவர் அதை இயல்பாகவே எடுத்துக் கொண்டார். எந்த இடத்தில் மெயின் டான்ஸருடன் இணைய வேண்டும், எந்த இடத்தில் விலகி வந்து அவருக்கு இடம் தர வேண்டும் என்பதை கூட ஆடுபவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இது ஜூலிக்குத் தெரியவில்லை போல.

போட்டியாளர்கள் ஆடுவதற்கும் சாண்டி ஆடுவதற்கும் வித்தியாசங்கள் நிறைய இருந்தன. சாண்டியின் நடனம் ஸ்டைலாகவும் அதே சமயம் effortless ஆகவும் இருந்தது. பார்ப்பதற்கு எளிது போல் தோன்றினாலும் அப்படி இலகுவாக ஆடுவதற்கு நிறைய உழைப்பும் பயிற்சியும் தேவைப்படும். பார்ப்பவர்களுக்கு வலிக்கும்படி ஆடக்கூடாது. “எனக்கு நடனம் ஆட வராது” என்று சொன்ன நிரூப்பைக் கூட எளிய அசைவுகளைக் கற்றுத் தந்து "அவ்வளவுதாம்ப்பா டான்ஸ். நல்லாத்தானே ஆடறே” என்று சாண்டி ஊக்கப்படுத்தியதும் ஒரு டான்ஸ் மாஸ்டருக்கு இருக்க வேண்டிய அடிப்படையான பண்பு.
‘ரம்யா மட்டும் சொதப்பலையா?’ – சதீஷ் அழிச்சாட்டியம்
ரம்யா + சதீஷ் ஜோடியை தீனாவும் சாண்டியும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். ரம்யா ஏதோவொன்றில் சொதப்பிய விஷயத்தைக் கேட்ட சதீஷ் “அவங்க மட்டும் டாஸ்க் சரியா பண்ணல. ஆனா என்னை மட்டும்தான் கேக்கறாங்க” என்று கபாலென்று குற்றம் சாட்ட “நாங்களாவது டாஸ்க் செஞ்சு முடிசப்புறம்தான் அதுல என்ன பிரச்சினையாச்சுன்னு ஆராய்ச்சி பண்ணுவோம்… நீ டாஸ்க்கையே பண்ணலாமா, வேணாமான்னு இருக்க” என்று ரம்யா ஜாலியாக தந்த கவுன்ட்டர் சிறப்பு. இதுவரை தீனாவின் கலாய்ப்பு முகத்தை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம். பிக் பாஸ் வீட்டின் மூலம் அவரின் வேறு முகங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் வரலாம்.

நடனம் ஆடி சோர்ந்து போயிருந்த பாலாவை “ஏண்டா இப்படி சோம்பேறித்தனமா இருக்கற” என்று தாமரை கோபித்துக் கொள்ள “டாஸ்க்ல நடந்த விஷயங்களை அங்கயே விட்டுடணும்... அப்புறம் ஜாலியா இருக்கணும்” என்று சாண்டி சொன்னது உபதேசம் திருவாசகம்.
சாண்டி மற்றும் தீனா என்கிற இரண்டு உற்சாகப் புயல்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அடிக்க ஆரம்பித்திருப்பதால் இனி நிகழ்ச்சி களைகட்டும் என்று நம்புவோமாக!