காஃபித்தூள் கலவரமும் பிரஸ் மீட் இம்சைகளும் ஓய்ந்து வீட்டில் சற்று அமைதிக் காற்று நிலவியதற்குக் காரணம், வாரஇறுதி என்பதால் இருக்கலாம். வனிதா, சுரேஷ், அபிநய், ஜூலி, அனிதா, நிரூப், சிநேகன் மற்றும் சுருதி ஆகியோர் நாமினேட் ஆகியிருக்கும் நிலையில், முதல் வாரத்தில் யார் வெளியேறுவார்? இன்றே தெரிந்து விடும் என்கிறார்கள். அது ‘அபிநய்’ என்று ஒரு பட்சி தகவல் சொல்கிறது. மற்றொரு புறம் அது சுரேஷ் சக்ரவர்த்தி என்றும் தகவல் கசிந்திருக்கிறது. பார்ப்போம்.
எபிசோட் 6, நாள் 5-ல் நடந்தது என்ன?
கேப்டன் ஷாரிக்கை வாக்குமூல அறைக்குக் கூப்பிட்ட பிக் பாஸ், வீட்டின் தலைவர் என்கிற தகுதியில் மற்ற போட்டியாளர்களுக்கு மதிப்பெண் அளிக்கச் சொன்னார். குருவி தலையில் பனங்காய் விவகாரம்தான். ஆனால் ஷாரிக் இதை திறமையாகச் சமாளித்தார். இவரின் மதிப்பீட்டை வனிதாவே பாராட்டும் அளவிற்கு ஒவ்வொரு போட்டியாளரின் ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயிண்ட்டுகளை சிறப்பாக அலசி மதிப்பெண் அளித்தார். இந்த வரிசையில் நிரூப், சுரேஷ், பாலா, பாலாஜி மற்றும் தாமரை ஆகியோர் எட்டு மதிப்பெண்களைப் பெற்று உயர்ந்த நிலையில் இருந்தார்கள்.

ஏழு மதிப்பெண்களைப் பெற்ற வனிதா, "நான் பிடிவாதக்காரிதான்; கோபக்காரிதான். ஆனால் அது பொறந்துதுல இருந்து வரலை. இடையில் நானா வளர்த்துக்கிட்டது. அதுதான் என் ப்ளஸ் பாயிண்ட். யாருக்காகவும் அதை நான் மாத்திக்க மாட்டேன்" என்று ‘என் வழி, தனி வழி’ என்பதை பதிவு செய்தார். ஷாரிக்கின் துல்லியமான மற்றும் சமநிலையான அலசலை ஏறத்தாழ அனைத்து போட்டியாளர்களுமே கைத்தட்டி ஏற்றுக் கொண்டார்கள்.
“பழைய பன்னீர்செல்வமா வாங்க நிரூப்”
நாள் 5 விடிந்தது. விஜய் டிவி ராமரால் புனர்ஜென்மம் பெற்ற பாடலான “ஆத்தாடி என்ன உடம்பு” ரீமிக்ஸை அலற விட்டு மக்களை எழுப்பினார் பிக் பாஸ். தனக்கு ‘தயிர்’ தந்ததற்காக பிக் பாஸிற்கு நன்றி சொன்ன வனிதா, “அப்படியே காஃபித்தூளும் தந்துடுங்களேன் பிக் பாஸ். நேத்து என் மானத்தை வாங்கிட்டாங்க... ப்ளீஸ்” என்று கெஞ்சினார். பிறகு “சரி, தரலைன்னாலும் ஓகே” என்று அவரே சமாதானம் ஆனார். அதாவது வனிதா கெஞ்சினாலும் பிக் பாஸிடம் மட்டும்தான் கெஞ்சுவார். சக போட்டியாளர்களிடம் இதே கோரிக்கையை அவர் வைத்திருந்தால் வீட்டில் அத்தனை கலாட்டா நடந்திருக்காது. “நான் உனக்கு காஃபி போட்டுத் தரேன்” என்று சுரேஷ் பாசம் காட்ட, “நீங்க ஆணியே புடுங்க வேணாம்” என்று அதை கெத்தாக மறுத்துவிட்டார் வனிதா.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்ற இருவரைத் தேர்ந்தெடுக்க பிக் பாஸ் உத்தரவிட்டார். வீட்டின் தலைவர் ஷாரிக், ஏற்கெனவே சிறப்புத் தகுதி பெற்ற அனிதா மற்றும் அபிராமி ஆகிய மூவர் தவிர மற்றவர்களில் இருந்து மட்டும் இந்தத் தேர்வு நடைபெற வேண்டும். சுரேஷ், பாலா, சிநேகன், பாலா போன்ற பெயர்கள் நிறைய தடவை அடிபட்டன. தன் முறை வரும் போது “இந்த வீட்டில் நிறைய வேலைகளைச் செய்தவர் தாமரைதான். ஏன் யாருமே அவருடைய பேரைச் சொல்லவில்லை” என்று மெல்லிய கோபத்துடன் கேட்டு தாமரை மற்றும் நிரூப்பின் பெயரை முன்மொழிந்தார் பாலா.
“இந்தத் தேர்வில் பாலின சமத்துவம் வேண்டும், இளைஞர்களுக்கு முன்னுரிமை” என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதி போல பேசிய சுரேஷ் தாத்தா, நிரூப் மற்றும் தாமரையின் பெயர்களை முன்மொழிந்தார். “போன சீசன்ல உங்களைப் பார்த்தேன். பழைய பன்னீர்செல்வமா வாங்க” என்று நிரூப்பிற்கு அட்வைஸூம் தந்தார். இறுதியில் சுரேஷ் மற்றும் பாலா ஆகிய இருவரும் சிறந்த பங்கேற்பாளர்களாக தேர்வானார்கள். “என் மகனோட பிரிவு எனக்கு ரொம்ப கஷ்டத்தை ஏற்படுத்துது. தயவு செஞ்சு அவனோட போட்டோ ஒண்ணை வாங்கி உள்ளே அனுப்பி விடுங்க பிக் பாஸ்... ப்ளீஸ்” என்று உடைமாற்றும் அறையில் ரகசியமாக அழுது கொண்டிருந்தார் சுஜா. கேட்கவே பரிதாபமாக இருந்தது. கைகழுவ வந்த பாலா, இந்த அழுகைச் சத்தத்தைக் கேட்டு விட்டு என்ன ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சைலண்ட்டாக வெளியேறினார்.
“நான் காஃபி வாங்கித் தரேன்” – சுஜாவின் பாசம்
சிறப்புத் தகுதியாளர்களுக்கு பிக் பாஸ் கரன்ஸி அளிக்கப்பட்டிருந்தது. “அதை வெச்சுக்கப் போறீங்களா... இல்லைன்னா... செலவு செய்யப் போறீங்களா?” என்று அறிவித்த பிக் பாஸ், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்கிற தலைப்பில் ஆஃபர் திட்டங்கள் மாதிரி தொலைக்காட்சியில் சில உணவுப்பொருள்களின் கவர்ச்சிகரமான புகைப்படங்களைக் காண்பித்து ஆசை காட்டினார். தம் பிரியாணி, பிட்ஸா என்று எச்சில் ஊற வைக்கும் வண்ணமயமான போட்டோக்களைப் பார்த்தாலும் மக்கள் மனம் மாறவில்லை. “வேணவே வேண்டாம்” என்று மறுத்து விட்டார்கள்.

ஏனெனில் இந்த கரன்ஸி ஆட்டத்தின் போக்கிற்கு உதவும் என்பது அவர்களுக்குத் தெரியும். சிலர் மட்டும் “பிக் பாஸ்... பிரியாணில லெக்பீஸ் இருக்குமா?” என்று கேட்டு வைத்துக் கொண்டார்கள். அது மட்டும் காரணமில்லை, ஒவ்வொன்றின் விலையும் பகல் கொள்ளையாக இருந்தது. ‘கொடுத்தவனே எடுத்துக் கொண்டான்டி' என்கிற கதையாக, கரன்ஸியைப் பரிசளித்த பிக் பாஸே அதை மீண்டும் பிடுங்குவதற்காக திட்டம் போட்டிருந்தார்.
இந்தச் சமயத்தில் சபையின் நடுவில் வந்து நின்ற சுஜா, “நான் நட்பிற்கு மிகுந்த மரியாதை தருபவள். நண்பர்களுக்கு நான் டிரீட் அளிக்க விரும்புகிறேன். எனவே 3000 கரன்ஸி செலவு செய்து ஒரு காஃபித்தூள் பாட்டிலை வாங்கி பொதுவில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் போட்டுக் குடியுங்கள். என்சாய்” என்று அறிவிக்க வனிதா உட்பட அனைவரும் இதை மறுத்தார்கள். “வீண் செலவு செய்யாதே... ஆட்டத்தில் இது உனக்குப் பயன்படும். வைத்துக் கொள். காஃபி அடுத்த வாரம் வந்து விடும்” என்று ஒரே குரலில் மறுக்க, “நான் ஆசையா வாங்கித் தரேன்னு சொல்றேன். இப்படிப் பண்றீங்களே?” என்று ஆதங்கப்பட்ட சுஜா, பிறகு மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார். (இதற்குத் தொடர்பில்லாமல் ஒரு விஷயம். சிலர் மற்றவர்களின் தேவை என்ன என்பதையே அறியாமல் சம்பிரதாயத்திற்கோ அல்லது தன்னுடைய விருப்பத்திற்கோ எதையோ பரிசாக வாங்கி அளித்து விடுவார்கள். பரிசு என்பதை வாங்குபவர், தருபவர் என இருவருக்குமே மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக திட்டமிடுவதுதான் சரியான அணுகுமுறை).
‘கணக்கிற்கு ஒரு சகுந்தலா தேவி, பிக் பாஸிற்கு ஒரு அனிதா’
“நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!” என்பது அடுத்த டாஸ்க். அடுத்த வாரத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விளையாட்டு. இதில் பங்கேற்க அனிதா, அபிராமி, பாலா, சுரேஷ் ஆகியோர் தகுதி பெற்றிருந்தார்கள். கார்டன் ஏரியாவில் இவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸ்கள் இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும், “நீ தலைவர் போட்டிக்கு சரிப்பட்டு வரமாட்டே” என்று நினைக்கும் இருவரின் புகைப்பட டைல்களை சுத்தியலால் அடித்து உடைக்க வேண்டும். இவர்களுக்கு மட்டுமல்லாது “நீ ஓகேப்பா” என்று கருதும் இதர இருவருக்கான காரணங்களையும் சொல்ல வேண்டும். புகைப்படங்கள் உடைக்கப்படாமல், பேச்சுத்திறமையால் தங்களை வேட்பாளர்கள் காப்பாற்றிக் கொள்ள முயலலாம்.

முதலில் வந்தவர் நிரூப். இவருக்கு சுரேஷிடம் நல்ல நட்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. என்றாலும் சுரேஷின் தலையை உடைக்க முடிவு செய்தார். சுரேஷ் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்று நிரூப் கருதியிருக்கலாம். ஆனால் அதற்காக நிரூப் சொன்ன காரணம்தான் ரகளையானது. “இளைஞர்களுக்கு முன்னுரிமை தரணும்னு நீங்கதான் சொன்னீங்க” என்று சுரேஷ் சொன்னதையே அவருக்கு எதிரான ஆயுதமாகத் திருப்பிய நிரூப், சுரேஷ் மற்றும் அனிதாவை நிராகரித்து பாலா மற்றும் அபிராமியை தலைவர் பதவிக்கு ஆதரித்தார்.
அடுத்து எழுந்து வந்த வனிதா, சுரேஷை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. “இவரை கொளுத்திப் போடற ஆசாமின்னு மட்டும் முத்திரை குத்தாதீங்க. இவர் ஒண்ணும் ஜோக்கர் பீஸ் இல்லை. இவர் தலைவரா வந்தா நல்லாயிருக்கும்” என்று சொன்ன வனிதா, அடுத்து தந்த ஆதரவுதான் ஆச்சரியம்.
“ஆடியன்ஸிற்கே ஆச்சர்யமா இருக்கலாம். அனிதாவைத் தேர்ந்தெடுக்கறேன். ரொம்ப பிரில்லியண்ட்டான பொண்ணு. கணக்கிற்கு ஒரு சகுந்தலா தேவி போல பிக் பாஸிற்கு ஒரு அனிதா” என்று வனிதா புகழாரத்தைக் கேட்டு அனிதாவிற்கு குளிர்சுரமே வந்திருக்கும். (ஒருவேளை உள்குத்தா இருக்குமோ?!). பாலா மற்றும் அபிராமியின் புகைப்படங்களை உடைத்த வனிதா அதற்கான காரணங்களைச் சொன்னார்.
‘நான் வளர்கிறேனே மம்மி’ – தாமரையின் அசுர வளர்ச்சி
அடுத்து வந்த ஷாரிக், “கன்வின்ஸ் பண்ணுங்கன்னு சொன்னா, அவரோட பெருமையைப் பேசறாரு. ரிஜக்ட்டட்” என்று சுரேஷின் தலையை உடைத்தார். இவர் இரண்டாவதாக நிராகரித்தது அபிராமி. கோபம் கண்ட்ரோல்ல வரணுமாம்.
‘நான் வளர்கிறேனே மம்மி’ என்று தாமரையின் வளர்ச்சி, நாளுக்கு நாள் பெருகுகிறது. சர்காஸத்தை அநாயசமாகக் கையாள்கிறார். அனிதாவிடம் வந்த அவர் “நீ ஏற்கெனவே கேப்டன் மாதிரிதான் வேலைகளை பொறுப்பா பார்த்துக்கறே. பிறகு உனக்கு எதுக்கு கேப்டன் பதவி?” என்று கேட்டு அனிதாவின் தலையை உடைத்தார்.

பிறகு அபிராமியின் அருகில் வந்து “வீட்டின் தலைவராகிடறீங்க. சரி... கத்தரிக்காய் குழம்பு எப்படிச் செய்யணும்... சொல்லுங்க பார்க்கலாம்” என்று அபிராமியின் சமையல் திறமையை பரிசோதிக்க “சபாஷ்... என் இனமடா நீ” என்று அகம் மகிழ்ந்தார் சுரேஷ். “நீங்க சொல்லிக் கொடுத்தா... அந்த மாதிரி செஞ்சுடுவேன்” என்று அபிராமி சமாளித்தாலும் தாமரை மசியவில்லை. தாமரையின் குறும்பைக் கண்டு ஒட்டுமொத்த வீடே சிரித்தது. “எனக்கு குழம்பு வெக்கத் தெரியும்க்கா” என்று பொய் சொல்லி சிரித்தார் பாலா.
மற்றவர்கள் வரும் போது நிராகரிப்பிற்கான காரணங்களாக எதையோ சொல்லி சமாளித்தார்கள். “நீங்க வல்லவரு. நல்லவரு... எப்படியும் இந்த வீட்லதான் இருப்பீங்க. மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கு” என்று மழுப்பலான காரணங்களைச் சொல்லி தலைகளை உடைத்தார்கள். தாங்கள் விரும்பியவர்களுக்கு ஆதரவு தந்தார்கள். “கோபத்தைக் குறைச்சுக்கங்க. தலைவரானா அந்த பிரஷரை உன்னால தாங்க முடியாது. இன்னமும் போகட்டும். பார்க்கலாம்” என்று அபிராமியின் நிராகரிப்பிற்கான காரணத்தைச் சொன்னார் பாலாஜி. ஒட்டுமொத்தத்தில் அபிராமியின் ஏரியாவில்தான் அதிக சேதாரம் நிகழ்ந்தது. “வெற்றி இருக்கற பக்கத்துல சாய்ஞ்சிடறீங்க” என்று சிநேகன் கூறிய காரணத்தை முகச்சுளிப்புடன் ஏற்றுக் கொண்டார் சுரேஷ்.
இறுதியில் சுரேஷிற்கு 6 புள்ளிகளும் அனிதா மற்றும் பாலாவிற்கு தலா 5 புள்ளிகளும் வந்திருந்தன. அனிதாவும் பாலாவும் சமமான புள்ளியில் இருந்ததால் அதை தீர்மானிக்கும் பொறுப்பு அபிராமிக்கு வழங்கப்பட்டது. அவர் சுரேஷ் மற்றும் அனிதாவின் தலைகளை உடைத்தார். ஆக அனிதாவின் புள்ளிகள் குறைந்து அவர் வெளியேற்றப்பட்டார். சுரேஷூம் பாலாவும் தலைவர் போட்டிக்கான அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறியதோடு எபிசோட் நிறைந்தது.

இந்த சீசனில் நிரூப்பின் மாற்றம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. கடந்த சீசனில் பிரியங்காவுடன் சண்டைக்கோழியாக பயணித்த நிரூப், அல்டிமேட் சீசனில் அனைவருடன் இணக்கமாகச் செல்லும் போட்டியாளராக மாறியிருக்கிறார். சுரேஷ் மற்றும் பாலாவின் நட்பைப் பெற்றிருக்கிறார். போலவே பாலாவின் முதல் வார பயணமும் நன்றாக அமைந்திருக்கிறது.
இந்த ரணகளத்தில் கிளுகிளுப்பாக என்னுடைய சந்தேகம் என்னவெனில் அல்டிமேட் சீசனையொட்டி ஏன் யாருக்குமே ‘ஆர்மி’ உருவாகவில்லை? எல்லோருமே பழைய முகங்கள் என்பதாலா?