Published:Updated:

BB Ultimate 64: "யூ ஆர் க்யூட்" பார்வையாளரிடம் வழிந்த பாலா; தப்பித்த அபிராமி; கண் கலங்கிய சிம்பு!

BB Ultimate 64

பல ஜாலியான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்த பிக் பாஸ் “யாரையாவது நேரடியா எவிக்ட் பண்ண எனக்கு பவர் தருவீங்களா?” என்று சிம்பு கேட்ட போது “எடுத்துக்கோங்க” என்று ‘காதலுக்கு மரியாதை’ ஷாலினியின் பாட்டி மாதிரி தாராளமாக அள்ளித் தந்தார்.

Published:Updated:

BB Ultimate 64: "யூ ஆர் க்யூட்" பார்வையாளரிடம் வழிந்த பாலா; தப்பித்த அபிராமி; கண் கலங்கிய சிம்பு!

பல ஜாலியான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்த பிக் பாஸ் “யாரையாவது நேரடியா எவிக்ட் பண்ண எனக்கு பவர் தருவீங்களா?” என்று சிம்பு கேட்ட போது “எடுத்துக்கோங்க” என்று ‘காதலுக்கு மரியாதை’ ஷாலினியின் பாட்டி மாதிரி தாராளமாக அள்ளித் தந்தார்.

BB Ultimate 64
நேற்றைய எபிசோடில் எலிமினேஷன் ஏதும் நிகழவில்லை. தங்களின் குடும்பத்தாரைப் பார்த்து போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு கலங்கியதால் அவர்களை ‘மேலும் எதற்கு அழ வைப்பானேன்?’ என்கிற நல்லெண்ணத்தில், பிக் பாஸிடம் பேசி எலிமினேஷன் முடிவை சிம்பு வாபஸ் வாங்க வைத்தது நல்ல விஷயம்தான். ஆனால் மெனக்கெட்டு வாக்களித்த பார்வையாளர்களைப் பற்றியும் சற்று யோசித்திருக்கலாம். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற வசதியான டேக்லைனை வைத்துக் கொண்டு இஷ்டத்திற்கு அடித்து விளையாடுவது முறையல்ல.
இந்த வாரம் காப்பாற்றப்பட்டவர்களின் வரிசை 1) நிரூப், 2) தாமரை, 3) ரம்யா, 4) பாலா. இது கடைசி வாரத்தில் எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும்.
BB Ultimate 64
BB Ultimate 64

நாள் 63-ல் நடந்தது என்ன?

ப்ரெளினில் கறுப்பு கோடு போட்ட எளிமையான ஆடையில் நேர்த்தியாக வந்து நின்றார் சிம்பு. “ஆட்டத்துல கவனம் செலுத்துங்கன்னு இவங்ககிட்ட சொன்னேன்... ரொம்ப பண்ணிட்டாங்க. கடைசி பால்ல ஒரு கிரிக்கெட் மேட்ச் முடிவு மாறுகிற மாதிரி இங்கயும் என்ன வேணா நடக்கலாம்” என்கிற முன்னுரையுடன் வீட்டிற்குள் சென்றார் சிம்பு. “உங்க பர்சனலை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வெச்சிட்டு விளையாடச் சொன்னது நெஜம்தான். அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்படியா அடிச்சிப்பீங்க... இனிமே பத்து ஆம்புலன்ஸை பக்கத்துல வெச்சுட்டுதான் பிஸிக்கல் டாஸ்க் கொடுக்கணும் போல இருக்கு” என்று ஜாலி மூடில் சிம்பு பேசியது சுவாரஸ்யம். ஆனாலும், புகைப்படம் ஒட்டும் டாஸ்க்கில் பார்வையாளர்களுக்கு பதற்றம் ஏற்படும் படி போட்டியாளர்கள் மோதியது குறித்து சற்று அறிவுறுத்தியிருக்கலாம். (என்னா அடி?!)

BB Ultimate 64
BB Ultimate 64

“என்னை இப்பல்லாம் தலைல தட்டி அனுப்பிடறாங்க” - பாலா

ரேங்க்கிங் டாஸ்க் பற்றி விசாரிக்கும் போது “சத்தமா பேச சொன்னா காதுல ரத்தம் வர்ற மாதிரி பேசினீங்க... அது என்ன பேச்சுப் போட்டின்னு நெனச்சிட்டீங்களா” என்று சிம்பு குறும்பாக விசாரிக்க அதற்குச் சம்பிரதாயமாக பதில் சொன்ன நிரூப்பைப் பார்த்து “ஆன்லைன்ல படத்திற்கு விமர்சனம் பண்றவங்க மாதிரியே பேசறியே நிரூப்பு” என்று சிம்பு சொன்னது அல்டிமேட் கிண்டல். “முன்னல்லாம் நான் பேசினா கவனிப்பாங்க. ஆனா இப்பல்லாம் 'வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா’ன்னு தலைல தட்டி அனுப்பிடச்சிடறாங்க” என்று சிரித்துக் கொண்டே பாலா சொன்னது சிறப்பு. (தம்பிக்கு காமெடி கொஞ்சம் வருது!) வாக்குவாத டாஸ்க்கில் பாலா மூச்சுத்திணற பேசி முடித்தாலும் அடுத்த நிமிடமே அவரை வாக்களித்து வெளியேற்றியதைத்தான் இப்படி அவர் ஜாலியாக சொன்னார்.

“சிம்பு சார் அப்படிச் சொல்லிட்டாரேன்னு நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்காம கோச்சுக்கிட்டீங்களே பாலா... ஆனா ரேங்கிங்க் டாஸ்க்ல 'சிம்புவே எனக்கு முதல் இடம் கொடுத்துட்டார்’ன்னு அப்ப மட்டும் ப்ளஸ் பாயிண்டை எடுத்துக்கிட்டீங்களே?” என்று பாலாவை சிரிப்புடன் சரியாக மடக்கினார் சிம்பு. “இந்த வாரம் நான் யாரையும் சாராம விளையாடினேன்” என்று அபிராமி பெருமிதமாகச் சொல்லி முடித்ததும் “முதல் வாரம் செய்ய வேண்டியதை கடைசி வாரம் செஞ்சிருக்கீங்களேம்மா” என்று சிம்புவின் நகைச்சுவை பவுண்டரிகள் பறந்து கொண்டே இருந்தன.

BB Ultimate 64
BB Ultimate 64

சீசன் 5 முடிந்த கையோடு அல்டிமேட்டிற்கு வந்துவிட்ட தாமரையும் நிரூப்பும் கணக்குப்படி பார்த்தால் ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து வசிக்கிறார்கள். இதைப் பற்றி கிண்டலுடன் விசாரித்த சிம்பு, “ரெண்டு நாள் மட்டுமே இங்க இருந்த அப்பாராவும் சுப்பாராவும் இப்ப ஹாஸ்பிட்டல இருக்காங்க” என்றது அருமையான குறும்பு. “மூணு வருஷம் கூட இந்த வீட்டில இருப்பேங்கய்யா. சொர்க்கம் மாதிரி இருக்கு” என்றார் தாமரை. வெளியுலக வாழ்க்கையின் இயந்திரத்தனத்தில் அவர் அத்தனை சலித்துப் போயிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

BB Ultimate 64
BB Ultimate 64

சிம்புடன் இணைந்து பிக் பாஸ் செய்த ஜாலி கலாட்டா

“ஓகே... உங்ககிட்ட பேசிட்டேன்... இப்ப பிக் பாஸ் கிட்ட பேசப் போறேன்” என்று சிம்பு ஆரம்பித்தவுடன் சபை உற்சாகமானது. கடந்த சீசன்களில், குறிப்பாக மூன்றாவது சீசனில் போட்டியாளர்களுக்கு நிகராக பிக் பாஸின் குறும்பும் வெளிப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த சீசன்களில் அவற்றைக் காணோம். சிம்புவுடன் நிகழ்ந்த இந்தச் சுருக்கமான உரையாடலில் கூட பல சிக்ஸர்களை அநாயசமாக அடித்தார் பிக் பாஸ். (“இசை பாடச் சொன்னா வசை பாடறாங்க”) ஆனால் அவர் அதிகமாகவும் குறும்பை வெளிப்படுத்தக்கூடாது. அந்தக் குரலின் மீதுள்ள சீரியஸ்னஸ் போய்விடும். இந்த எல்லையை பிக் பாஸ் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார். பல ஜாலியான கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்த பிக் பாஸ் “யாரையாவது நேரடியா எவிக்ட் பண்ண எனக்கு பவர் தருவீங்களா?” என்று சிம்பு கேட்ட போது “எடுத்துக்கோங்க” என்று ‘காதலுக்கு மரியாதை’ ஷாலினியின் பாட்டி மாதிரி தாராளமாக அள்ளித் தந்தார்.

அடுத்ததாக ஒரு சிறிய நாடகத்தை ஆரம்பித்தார் சிம்பு. ஆனால் அது நாடகம்தான் என்பதை ஆரம்பத்திலேயே உணர முடிந்தது. மேடைக்கு வந்த சுருதியிடம் “ஏன் டக்குன்னு பெட்டியை எடுத்திட்டீங்க. ஃபைனல் போக விருப்பமில்லையா?” என்று சிம்பு கேட்க ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையை பிரிச்சுக்கோ’ என்கிற தத்துவத்தின் படி பதில் சொன்ன சுருதி “எட்டு வாரம்தான் என் கணக்கா இருந்தது. அதுவரைக்கும் இருந்ததே வெற்றிதான். எங்க அம்மாவை மேடைக்கு கொண்டு வந்து பெருமைப்படுத்திட்டேன். அது போதும்” என்று நெகிழ்ந்தார். மகளின் முடிவை சலனமில்லாத முகத்துடன் அம்மாவும் வழிமொழிந்தார். பிறகு வீட்டிற்குள் நுழைந்தார் சிம்பு. சுருதியைப் பார்த்தவுடன் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி.

BB Ultimate 64
BB Ultimate 64

“சுருதி சீக்ரெட் ரூம்லதான் இருந்தாங்க... இந்தப் பெட்டியை அவ்வளவு ஈஸியா எடுத்துட்டு போயிட முடியாது. இது இறுதிப் போட்டியாளர் கிட்ட இருந்து எடுத்துட்டுப் போற பங்கு... ஓகே... சுருதி இப்ப மறுபடியும் உள்ளே வருவாங்க... நீங்க போட்டி போட்டுத்தான் பெட்டியை எடுத்துட்டுப் போகணும். போட்டி போடறது யாருன்னு முடிவு பண்ணுங்க... பரிசுத் தொகை 25 லட்சம்” என்கிற ஜெர்க்குடன் பிரேக் விட்டுச் சென்றார் சிம்பு. இது Prank என்று அப்பட்டமாகவே நமக்குத் தெரிந்தது. ஏனெனில் அதிகாரபூர்வமாக பணத்தைத் தந்து வெளியே அனுப்பிவிட்டு இப்படித் திடீரென்று பிளேட்டைத் திருப்பிப் போட முடியாது. ஆனால் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற அடிப்படை தத்துவம் போட்டியாளர்களைச் சற்று குழப்பியிருக்கலாம். எனவே உள்ளுக்குள் பலத்த சந்தேகம் இருந்தாலும் விதம் விதமாக பேசி சிரித்தார்கள். இறுதியில் சுருதியுடன் மோதிய ஜூலியையே பலியாடாக இப்போதும் இறக்கினார்கள். முதலில் சிணுங்கினாலும் 'அய்யோ 25 லட்சமா?' என்கிற நப்பாசையுடன்தான் விளையாட முடிவு செய்தார் ஜூலி. பிறகு மேடைக்கு வந்த சிம்பு “நீங்க மட்டும்தான் Prank பண்ணுவீங்களா?" என்று ஜாலியாக கேட்டார். இப்படியாக சிம்புவின் மூலம் ஜுலியைப் பழிவாங்கிவிட்டார் பிக் பாஸ். (ஜூலி மீது மட்டும் ஏன் இத்தனை காண்டு பாஸ்?!).

“பணத்துக்காக நாம் அலையக்கூடாது. உண்மைதான். ஆனால் அது நம்மைத் தேடி வரும் போது அந்த வாய்ப்பிற்கான கதவையும் மூடக்கூடாது. நம் வாழ்க்கைக்கு பணமும் தேவை. ‘யாராவது தப்பா நெனப்பாங்களோன்னு தயங்கக்கூடாது” என்று சிம்பு சொன்னது சரியான விஷயம். “சிம்புன்னா அன்பும், இருக்கும். வம்பும் இருக்கும்" என்று பன்ச் பேசிய சிம்பு “உங்க கிட்ட அன்பு காட்டியவங்களுக்கு வெள்ளை ரோஜாவும் வம்பு செய்தவர்களுக்கு கறுப்பு ரோஜாவும் தர வேண்டும்” என்று அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார். பிக் பாஸ் வீட்டில் தற்போது அமைந்துள்ள கூட்டணி இந்த டாஸ்க்கில் வலுவாக வெளிப்பட்டது.
BB Ultimate 64
BB Ultimate 64

“உண்மையான ரம்யாவை வெளில கொண்டு வாங்க”

“பாலா, நிருப்... ரெண்டு பேருக்கும் வெள்ளை ரோஜா தரேன்” என்று தாமரை மையமாக நின்று மழுப்பிய போது ‘ஒருத்தருக்குத்தான் தரணும்” என்று சிம்பு சொல்ல "அப்ப பாலாவிற்குத் தரேன்” என்று தாமரை சொன்னதும் குழந்தை மாதிரி நிரூப் அழுத காட்சி சுவாரஸ்யம். நிரூப்பை விடவும் பாலாவின் மீதுதான் தாமரைக்கு அதிக பாசம் என்பது அதிகாரபூர்வமாக உறுதியானது.

“ரம்யா... மத்தவங்களைப் பத்தியெல்லாம் நிறைய ஆராய்ச்சி பண்றீங்க. உங்க உத்திதான் என்ன?” என்று நேரடியாக ரம்யாவிடம் கேள்வி வைத்தார் சிம்பு. பாலாவின் எதிரி ரம்யா என்பதால் அவரை சபையில் மாட்டிவிட முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. “உங்க இயல்பான முகம் தெரியவேயில்லை... ஸ்டிரிக்ட் ஆஃபிசரா இருக்கீங்க” என்பது சிம்புவின் புகார்.

BB Ultimate 64
BB Ultimate 64

ஆனால் தன்னிடம் சிரித்துப் பேசுபவர்களிடம் நன்றாகவே எதிர்வினை செய்கிறார் ரம்யா. சாண்டியும் தீனாவும் பங்கமாக கலாய்த்தாலும் புன்னகை மாறாமல் ஏற்றுக் கொண்டார். டாஸ்க்கில் சின்சியாரிட்டி காட்டுகிறார். லாஜிக்கோடு பேசுகிறார். தாமரை, பாலா போன்றவர்கள் சண்டைக்கு வரும் போது மட்டும்தான் தகுந்த பதிலடி தருகிறார். மற்றபடி ‘தான் ஒரு காமெடி பீஸ்’ என்பதை ரம்யாவே ஒப்புக் கொள்ளும் போது ‘ஸ்டிரிக்ட் ஆஃபிசர்’ என்கிற முடிவிற்கு சிம்பு எப்படி வந்தார் என்று தெரியவில்லை. “என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?” என்று இதற்கும் சிரித்துக் கொண்டே மறுத்தார் ரம்யா. இந்த உரையாடலின் இறுதியில் நிரூப் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார் சிம்பு.

“நெகட்டிவ் இமேஜை பாசிட்டிவ்வா மாத்திட்டேன்” - ஜூலி

அப்போது கொடுக்காத வெள்ளை ரோஜாவை பிரேக்கில் கொடுத்து நிரூப்பை சமாதானப்படுத்த முயன்றார் தாமரை. இன்னொரு பக்கம் ‘அபிராமியே தன்னைப் புரிந்து கொள்ளவில்லை’ என்று கண்கலங்கிக் கொண்டிருந்தார் ஜூலி. பிரேக் விட்டுத் திரும்பிய சிம்பு “நீங்கள் மக்களிடம் பேசி வாக்குச் சேகரிக்க வேண்டிய நேரம் இது. பஸ்ஸர் அடிக்கும் வரைதான் பேசணும்” என்று ஆரம்பித்து வைத்தார். முதலில் வந்த ஜூலி, கடந்த சீசனில் தான் பெற்ற கெட்ட பெயரையும் நெகட்டிவ் இமேஜையும் எப்படி கடந்து வந்து முன்னுதாரணமான பெண்ணாக நின்றிருக்கிறேன் என்பதைச் சொல்லி வாக்கு சேகரித்தது சிறப்பு. எதிர்பார்த்தபடியே "நாடகக் கலை மக்களுக்கு பெருமை தேடித் தரணும்” என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தினார் தாமரை. அப்படி என்னதான் செய்வார் என்று தெரியவில்லை. ஆனால் பரிசுத் தொகை மீது தாமரை துளி கூட ஆசைப்படாமல் இருந்தது பெரிய விஷயம்.

BB Ultimate 64
BB Ultimate 64

“போன சீசன்ல வெற்றிக்குப் பக்கத்துல நின்னேன்” என்று பாலா ஆரம்பித்ததை புரிந்து கொள்ள முடிந்தது. “அப்ப செஞ்ச தப்புகளை இப்போ கண்ட்ரோல் செஞ்சிருக்கேன். டாஸ்க்ல நூறு சதவிகித உழைப்பைத் தந்திருக்கேன். மக்களுக்காகத்தான் இவ்வளவும். மத்தவங்களை விடவும் எனக்கு அதிக தகுதியிருக்குன்னு நம்பறேன்” என்று முடித்தார். “எனக்கு வாக்கு கேட்டு பழக்கமில்ல” என்று ஆரம்பித்த நிரூப், “சினிமால சாதிக்கணும்னு நெனச்சேன். யாஷ் மூலமா பிக் பாஸ் வாய்ப்பு கிடைச்சது. போன சீசன் மாதிரி இல்லாம, இந்த முறை என் குடும்பத்தோட பழகற மாதிரி இருக்க முடிவு பண்ணேன். மக்களைச் சிரிக்க வெக்க முயன்றிருக்கிறேன். என் குடும்பத்திற்காக நான் எதையும் செஞ்சதில்லை. இந்தப் பணம் எனக்குத் தேவை” என்று சென்டியாக முடித்தார் நிரூப்.

BB Ultimate 64
BB Ultimate 64

“எனக்கும் சினிமா இண்டஸ்ட்ரிதான் கனவு. போன சீசன் வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கலை. நான் இங்க நானாத்தான் இருக்கேன். மக்களோட அன்பு எனக்குத் தேவை” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார் அபிராமி. அடுத்த வந்த ரம்யாவிற்கும் சினிமா ஆசைதான். “ஒரு ஹீரோயின் இங்க அஞ்சுல இருந்து ஆறு வருஷம் வரைக்கும்தான் ஃபீல்ட்ல இருக்க முடியும். ஆனா அதுக்கான போராட்டமே எனக்கு அஞ்சு வருஷம் ஆயிடுச்சு. மக்களைக் கவர்வது அத்தனை ஈஸியான விஷயம் இல்ல. மக்களை ரீச் பண்ணணும்னுதான் பிக் பாஸ் வந்தேன். எந்த வேலையா இருந்தாலும் அதுல சின்சியரா இருப்பேன்” என்று தனது டிரேட் மார்க் புன்னகையுடன் முடித்துக் கொண்டார் ரம்யா.

“பாலாவிற்கு ஓவர் கான்பிடன்ஸா?” – பார்வையாளர் கேட்ட கேள்வி

“ஓகே... நீங்க மக்கள் கிட்ட பேசிட்டீங்க... இப்ப அவங்க உங்க கிட்ட பேச ஆசைப்படறாங்க” என்ற சிம்பு, பார்வையாளர்களை கேள்வி கேட்கச் சொன்னார். முதலில் வந்தவர் நிரூப்பிடம் கேட்ட கேள்வி முக்கியமானது. “ஏன் உங்களை மத்தவங்க கடினமான போட்டியாளரா பார்க்க மாட்றாங்க. லூஸ்ல விட்டுட்டீங்களே?” என்ற கேள்வி வந்தது. கடந்த சீசனில் பிரியங்காவுடன் கடுமையாக மோதி ஒரு இறுக்கமான இமேஜை எப்போதும் அணிந்திருந்தார் நிரூப். ஆனால் இந்த சீசனிலோ விளையாட்டுப் பிள்ளையாக மாறியிருக்கிறார். பாலாவின் பாணியில் இருந்து விலகியிருப்போம் என்கிற காரணமாக இருக்கலாம்.

BB Ultimate 64
BB Ultimate 64

“உங்க கிட்ட இருக்கிறது கான்பிடன்ஸா... ஓவர் கான்பிடன்ஸா?” என்கிற கேள்வி வந்தவுடன் ஜெர்க் ஆகிவிட்டார் பாலா. “என்னோட நூறு சதவிகிதம் தந்திருக்கேன். மொதல்ல நான் என் மேல நம்பிக்கை வெக்கணும்... இல்லையா? ஆனா அது ஓவர் கான்பிடன்ஸ் இல்லை” என்று பதிலளித்தார். “கொஞ்ச பேர் கிட்டதான் பழகறீங்க... அது உங்க உத்தியா?” என்று அடுத்த கேள்வியும் பாலாவிற்கே வந்தது. “ஜோக் சொன்னா கூட முறைக்கறாங்க... நானும் மனுஷன்தான்னு நம்ப மாட்றாங்க” என்று ஜாலியாக அலுத்துக் கொண்ட பாலா, கேள்வி கேட்ட பெண்ணிடம் “you are cute” என்று ஒரு பிட்டைப் போட சபையில் சிரிப்பொலி எழுந்தது. “என் முன்னாடியேவா?” என்று சிம்புவும் சேர்ந்து சிரித்தார்.

“நாலே வாரத்துல கோட்டையைப் பிடிச்சிடலாம்னு நெனக்கறீங்களா?” என்கிற கேள்வி ரம்யாவிற்கு வந்தது. 'யாரு கடைசில வர்றாங்கன்றது முக்கியமில்ல. யாரு முதல்ல வர்றாங்கன்றதுதான் முக்கியம்' என்று சிம்பு ஸ்டைலிலேயே ரம்யா பதில் சொல்லியிருக்கலாம். “கடைசி நாள்ல கூட முடிவு மாறலாம்” என்று புன்னகைத்தார் ரம்யா. “நீங்க கண்மூடித்தனமான பாசத்துல இருக்கீங்களே?” என்று ஒரு சரியான கேள்வி தாமரைக்கு வந்தது. தாமரை தன்னிடமுள்ள மனோரமாவையும் சரண்யாவையும் சற்று கட்டுப்படுத்தி வைக்கலாம். இதற்குப் பதிலாக எதையோ சொல்லி சமாளித்த தாமரைக்கு ‘நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்” என்கிற நல்ல செய்தியைச் சொன்னார் சிம்பு. அம்மணிக்கு ஒரே மகிழ்ச்சி.

பிக் பாஸ் விளையாட்டையும் கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தையும் விளக்கி ஓர் இளைஞர் நீண்ட நேரம் பேசிவிட்டு “இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்க சார்” என்று கோரிக்கை வைத்தார். (உள்ளே பிக் பாஸ் ஏகப்பட்ட மகிழ்ச்சியில் இருந்திருக்கலாம்!) “ஏன் Emotionally Weak-ஆ இருக்கீங்க?” என்கிற அவசியமான கேள்வி அபிராமிக்கு வந்தது. “நான் எமோஷனல்தான். ஆனா அது வீக்கான விஷயம் இல்ல. நான் ஓப்பனாத்தான் இருக்கேன்” என்று சமாளித்தார் அபிராமி.

BB Ultimate 64
BB Ultimate 64

கேள்வி நேரம் முடிந்ததும், “இப்பல்லாம் டிரெண்டிங் பிளேயர்-ன்னு ஒரு விஷயம் கொடுக்கறதே இல்லையே... கவனிச்சீங்களா?” என்று கேட்டார் சிம்பு. துவக்க நாளில் கமல் சில மளிகைப் பொருள்களைக் கொடுத்தது ஏன் என்கிற ரகசியம் கூட இன்னமும் எனக்கு விளங்கவில்லை. “நாங்க டிரெண்ட் ஆகறமோ, இல்லையோ. நீங்க வெளிய டிரெண்ட் ஆகியிருப்பீங்க” என்று ஐஸ் பாரை சிம்புவிற்கு வைத்தார் ரம்யா. “ஓகே... உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. பிரேக் முடிச்சிட்டு வந்து சொல்றேன்” என்று அகன்றார் சிம்பு. “பிரியாணியா சார்... டிரஸ்ஸா சார்?” என்று ஆளாளுக்குக் கேட்டார்களோ ஒழிய, யாரும் குடும்பத்தைப் பற்றி நினைக்கவில்லை. ஆனால் வீடியோவைப் பார்த்ததும் அப்படி அழுதார்களே, பார்க்கணும்...

“உங்களுக்கெல்லாம் ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு”

“படத்துல நடிக்கற வாய்ப்பா?” என்று ஓவராக ஆசைப்பட்டார் நிரூப். “அது நீங்க இங்க பண்றதைப் பார்த்து தன்னால வரணும்” என்று சிம்பு சொன்னது சரி. (கடந்த சீசனில் தர்ஷனுக்கு கமல் தந்த வாய்ப்பின் கதியே இன்னமும் என்னாச்சு என்று தெரியவில்லை!). ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வீடியோவில் வந்ததுதான் சிம்பு சொன்ன ‘சர்ப்ரைஸ்’.
BB Ultimate 64
BB Ultimate 64

முதலில் தாமரையின் வீடியோ வந்தது. கணவரை விடவும் தன் மகனைப் பார்த்துதான் பொங்கி வழிந்தார் தாமரை. ‘என் பையன் ஒரு வார்த்தை கூட பேசலையே” என்று பிறகு வருந்தினார். (இம்பூட்டு பாசத்தை வெச்சிக்கிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள்ளயே இருக்கணுமாம்!). “நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு புள்ள குட்டிங்களோட நல்லா இருக்கணும்ப்பா” என்று வீடியோ பார்த்த மகிழ்ச்சியில் சிம்புவை வாழ்த்தினார் தாமரை. கூட்டத்தில் விசில் பறந்தது. ‘எல்லாம் அவன் செயல்’ என்று மேலே கையைக் காட்டினார் சிம்பு.

தன் தாய் மற்றும் தம்பி சொன்ன வாழ்த்துகளைக் கேட்டு ‘ஸ்டிரிக்ட் ஆஃபிசர்’ ரம்யா வாய்விட்டு கதறி அழ “இந்த ரம்யாவைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்” என்றார் சிம்பு. “என் குடும்பத்தை நான்தான் பார்த்துக்கணும். நான் ஒரு பக்கம் ஸ்ட்ராங்க். இன்னொரு பக்கம் சென்ட்டிமென்ட் நிறைஞ்ச பொண்ணு” என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு ரம்யா சிரிக்க, அவர் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்னார் சிம்பு. தன் தம்பியை வீடியோவில் பார்த்ததும் வாய் விட்டு கதறினார் ஜூலி. “கம் பேக்ன்னா இப்படித்தான் இருக்கணும்-ன்னு அவன் சொன்னது ரொம்ப மகிழ்ச்சி. அவன்தான் எனக்கு பையன்” என்றெல்லாம் ஜூலி நெகிழ்ந்ததைப் பார்க்க நமக்குள்ளும் அதே உணர்ச்சி பரவியது. “கடந்த சீசன்ல கிடைச்ச கெட்ட பெயரை பெருமளவு போக்கிட்டேன். தொலைச்ச இடத்துல கண்டுபிடிச்சிட்டேன்” என்று பொருத்தமாகப் பேசினார் ஜூலி.

BB Ultimate 64
BB Ultimate 64

அடுத்ததாக பாலாவின் நெருங்கிய உறவினர் பெண்மணியும் அவரது மகளும் வந்திருந்தார்கள். “முடிஞ்சா என் மகன்கிட்ட மோதி ஜெயிங்க பார்க்கலாம்” என்று அந்தப் பெண்மணி கூறியது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பாலாவோ, "ஏற்கெனவே ஓவர் கான்பிடன்ஸான்னு கேட்கறாங்க” என்று பயந்து “அவங்க சொன்னதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று எஸ்கேப் ஆனார். (சிங்கம் களம் இறங்கிடுச்சு!) இதனால் வாழ்த்தியவர்களுக்கு சங்கடம் ஏற்படலாம். என்றாலும் ஓர் அவசியமான நேரத்தில் அவர்கள் தனக்கு செய்த உதவியை கண்ணீருடன் பாலா நினைவுகூர்ந்தது அவர்களுக்கு சமாதானமாகப் போயிருக்கலாம். “எங்க அண்ணன் வருவாருன்னு நெனச்சேன்” என்று நெகிழ்ந்த பாலா, அந்த சகோதர உறவு தனக்கு எத்தனை முக்கியமானது என்பதை பாசத்துடன் தெரிவித்தார்.

BB Ultimate 64
BB Ultimate 64
மிகச் சரியாக இந்த நேரத்தில் பாலா காப்பாற்றப்பட்ட செய்தியை அறிவித்தார் சிம்பு. நிரூப், தாமரை, ரம்யா ஆகிய மூவருக்குப் பிறகு பாலா காப்பாற்றப்பட்டிருப்பது அவருக்கான எச்சரிக்கை மணி. கடைசி வாரத்தில் முன்னேற வேண்டும்.

‘குழந்தைகளின் வளர்ச்சி இயல்பாக உருவாக வேண்டியது அவசியம்’

கடைசியாக வந்தது அபிராமியின் வீடியோ. நீண்ட காலமாக பிரிந்திருந்த தன் தந்தையை வீடியோவில் பார்த்ததும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துவிட்டார் அபிராமி. பிறகு அழுகையை கட்டுப்படுத்தவே முடியாமல் கதறிய அபிராமியை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘Take your Time’ என்று சிம்புவும் ஆதரவாக நின்றார். வீடியோ ஒளிபரப்பின் போது “உங்க சோகம் என்னையும் தாக்கிடுச்சு” என்று பல சமயங்களில் தானும் கண்கலங்கினார் சிம்பு. “என்னை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தைக்கு நன்றி” என்று கையெடுத்து கும்பிட்ட சிம்புவின் பணிவு பாராட்டத்தக்கதுதான்.
BB Ultimate 64
BB Ultimate 64

ஆனால் சிம்புவை முன்வைத்து ஒரு பொதுவான சமூக விஷயத்தைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. குழந்தையில் இருந்தே சினிமாவில் நட்சத்திரமாக வளர்த்தெடுக்கப்பட்டவர் சிம்பு. ஆனால் ‘தான் என்னவாக ஆக வேண்டும்' என்று சிம்புவிற்கு ஏதாவது தனிப்பட்ட விருப்பமோ, கனவோ இளமையில் இருந்ததா? அப்படிப்பட்ட திசையில் யோசிக்க அவர் அனுமதிக்கப்பட்டாரா? பெற்றோர்கள் தங்கள் கனவுகளையும் திட்டங்களையும் பிறக்கும் குழந்தைகளின் மீது சுமத்தி, இளம் வயதில் இருந்தே அதற்காக பிசைந்து பொம்மைகளாக உருவாக்குவது சரியான விஷயம்தானா? சிம்புவைத் தாண்டி இதைப் பற்றி அனைத்து பெற்றோரும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கலாம். அது பூ மலர்வது மாதிரி இயல்பாக மலர்வதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அதுதான் சரியான வளர்ப்புமுறை.

BB Ultimate 64 சிம்பு
BB Ultimate 64 சிம்பு
“ஓகே. எலிமினேஷன் நேரத்திற்கு வந்துட்டோம்” என்று சிறிய ஜெர்க் தந்த சிம்பு. “எல்லோருமே ரொம்ப எமோஷனலா இருக்கோம். அதனால நான் பிக் பாஸ் கிட்ட பேசி இந்த வாரம் எலிமினேஷன் வேண்டாம்ன்னு கேட்டுக்கிட்டேன்” என்றதும் ஹே... என்று சபை மகிழ்ச்சியில் ஆரவரித்தது. “அடுத்த வாரம் ஃபைனல். கவனமா ஆடுங்க” என்று விடைபெற்றார் சிம்பு. எமோஷன்ஸ் காரணமாக அபிராமி தப்பித்தாரா அல்லது பிக் பாஸ் தனது ஸ்கிரிப்ட்டை திடீரென மாற்றிக் கொண்டாரா என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.