Published:Updated:

BB Ultimate - 9: டார்கெட் ஜூலி... அடி கொஞ்சம் ஓவரோ?! வனிதாவுக்குத் தரப்பட்ட சிறப்புச் சலுகைகள்!

BB Ultimate - 9

ஜூலி ஒரு கட்டத்தில் வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டார். இதில் கூடுதல் கொடுமை என்னவென்றால், அவரால் வாய் விட்டும் அழ முடியாது. தாமரையின் மூலமாகத்தான் அழ வேண்டும். (பிக் பாஸூ... அழறதுக்குக் கூடவா உரிமையில்ல?!).

Published:Updated:

BB Ultimate - 9: டார்கெட் ஜூலி... அடி கொஞ்சம் ஓவரோ?! வனிதாவுக்குத் தரப்பட்ட சிறப்புச் சலுகைகள்!

ஜூலி ஒரு கட்டத்தில் வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டார். இதில் கூடுதல் கொடுமை என்னவென்றால், அவரால் வாய் விட்டும் அழ முடியாது. தாமரையின் மூலமாகத்தான் அழ வேண்டும். (பிக் பாஸூ... அழறதுக்குக் கூடவா உரிமையில்ல?!).

BB Ultimate - 9
இந்த நாளின் கட்டுரைக்கு ‘பாவம் ஜூலி’ என்று இரண்டே வார்த்தையில் தலைப்பிட்டு விடலாம். மாட்டிக் கொண்ட ஒரு பிக்பாக்கெட் கேஸை, போகிற வருகிற போலீஸ்காரர்கள் எல்லாம் அடிப்பதைப் போன்று தொடர்ந்து நாள் முழுவதும் ஜூலிக்கு அடி விழுந்து கொண்டேயிருந்தது. ‘பல தடைகளைத் தாண்டித்தான் இங்க வந்து நின்னிருக்கேன்’ என்று ஆரம்பத்தில் கெத்தாக சொன்ன ஜூலி, இன்னமும் மாறவில்லை. பொசுக்கென்று உடனே அழுது விடுகிறார்; நாள் பூராவும் மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறார். இது மற்றவர்களை எரிச்சல்படுத்துகிறது.
ஜூலியின் அழுகாச்சிக்குக் காரணம் என்ன? அப்படி என்னதான் வீட்டில் நடந்தது? இணைப்பில் இருங்கள். தொடர்ந்து விவாதிப்போம்.
BB Ultimate - 9
BB Ultimate - 9

எபிசோட் 9, நாள் 8-ல் நடந்தது என்ன?

லிஃப்ட் படத்திலிருந்து ‘என்னா... மயிலு’ என்கிற ரகளைான பாடல் ஒலித்தது. அனிதா உள்ளிட்ட பெண்கள், கார்டன் ஏரியாவில் இறங்கி குத்தி ரகளையாக ஆடினார்கள். ‘அணைக்கிற கைதான் அடிக்கும்’ என்கிற பழமொழிக்கேற்ப கரன்ஸியை தாமரைக்கு பரிசளித்த சுரேஷ் தாத்தா, கூடவே வெடிகுண்டையும் தந்து விட்டுச் சென்றார். அந்த பாமிற்கான அர்த்தம் என்னவென்பது இன்றுதான் தெரிந்தது.

‘அடுத்த அறிவிப்பு வரும் வரை ஜூலியின் மவுத் பீஸாக தாமரை இருக்க வேண்டுமாம். அதாவது ஜூலி என்ன பேச நினைக்கிறாரோ, அதை தாமரையிடம் சொல்லி, அதை தாமரைதான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டுமாம்’. “இது ஜூலிக்குத் தண்டனை இல்லை. எனக்குத்தான் தண்டனை” என்று அனத்திய தாமரை, “தாத்தா… போறப்ப வெச்சிட்டியே ஆப்பு” என்று புலம்பினார். “குளிக்கும் போது கூடவா ஜூலி கூட இருக்கணும்?” என்று பிக் பாஸிடம் தாமரை இடக்காக கேட்க “வாய் என்ன தனியாவா இருக்கும்?” என்று பதில் வந்தது. (வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே?!).

சிநேகனின் மைனாரிட்டி அரசும் பதவிப்பிரமாணமும்

புதிய தலைவர் சிநேகன் பதவியேற்றுக் கொண்ட போது மக்கள் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டார்கள். நிரூப் குலவை சத்தமெல்லாம் போட்டு பயமுறுத்தினார். “இது நானா ஜெயிச்சதா இருந்தா கூட அத்தனை பயம் இருக்காது. சுரேஷ் தந்துவிட்டுப் போன பொறுப்பு. எனவே நான் அதிகம் கவனமாக இருந்தாகணும். எந்தப் பிரச்னையா இருந்தாலும் சண்டை போடாம ஒண்ணா உக்காந்து பேசி முடிவெடுப்போம். ஒண்ணா அமர்ந்து சாப்பிடுவோம்” என்று உபதேசங்களாக அள்ளி வீச “யப்பா கவிஞரே... நீங்க ஒண்ணு மண்ணா இருந்தா என் பொழப்புல மண்ணுதான்” என்று பிக் பாஸ் உள்ளே ரகசியமாக அனத்தியிருக்கக்கூடும்.

BB Ultimate - 9
BB Ultimate - 9
முதல்வராக பதவியேற்றுக் கொண்ட சிநேகன், துறை வாரியாக அமைச்சர்களை நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வர் பாலாஜியாம். நீதித்துறை (வனிதா), காவல் (நிரூப், பாலா), விளம்பரம் (ஜூலி, அனிதா), கலை மற்றும் பண்பாடு (அபிராமி, தாமரை), விளையாட்டு (ஷாரிக்), உணவு (சுருதி), சுகாதாரம் (சுஜா). ஒரு வாரம் நீடிக்கப் போகிற இந்த ‘மைனாரிட்டி அரசிற்கு’ இத்தனை பில்டப்கள்.

ஜூலிக்கு இதயத்தில் இடம் தராத போட்டியாளர்கள்

‘உம் சொல்றியா... ஊகூம் சொல்றியா’ என்பது அடுத்த டாஸ்க். ஒவ்வொரு போட்டியாளரும் தன் மனதிற்குப் பிடித்தமான ‘நண்பரை’ தேர்ந்தெடுத்து ஹார்ட் சிம்பலை புகைப்படத்தில் வைக்க வேண்டுமாம். பாசிட்டிவ் என்று இருந்தால், நெகட்டிவ்வும் கூடவே இருந்துதானே ஆக வேண்டும்? அப்போதுதானே பிக் பாஸ் பிழைப்பு ஓடும்?! எனவே, இனிமேல் நண்பராகப் போகிற நபரை - அதாவது டெட்டால் போடாத வார்த்தையில் சொன்னால் - பிடிக்காத நபரையும் தேர்ந்தெடுத்து சொல்ல வேண்டும்.

இந்த டாஸ்க்கில் ஜூலிக்கு நிறைய நெகட்டிவ் முத்திரைகள் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தன. அதாவது அவர் இயல்பான ஜூலியாக இல்லையாம். இந்தச் சீசனுக்காக ஒரு பிரத்யேகமான முகமூடியை அணிந்து கொண்டிருந்திருக்கிறாராம். எப்போதும் தனிமையில் பாட்டுப்பாடிக் கொண்டிருக்கிறாராம். இப்படி பல புகார்கள். ‘விருமாண்டி’ திரைப்படத்தில் சுடலைமட சாமியை ‘வெளியே வா... வெளியே வா...' என்று உக்கிரமாக அழைப்பது போல் ஒரு பாட்டு வரும். அது போல் “ஜூலி... வெளியே வா... வெளியே வா…’ என்று மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருந்தார்கள்.

BB Ultimate - 9
BB Ultimate - 9
தன்னுடைய பெயர் தொடர்ந்து சொல்லப்பட்டதால் மெல்ல மெல்ல இறுகிய ஜூலி ஒரு கட்டத்தில் வாய்விட்டு அழ ஆரம்பித்து விட்டார். இதில் கூடுதல் கொடுமை என்னவென்றால், அவரால் வாய் விட்டும் அழ முடியாது. தாமரையின் மூலமாகத்தான் அழ வேண்டும். (பிக் பாஸூ... வெச்சியே ஒரு ட்விஸ்ட்… அழறதுக்குக் கூடவா உரிமையில்ல?!).

“வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பாலாஜிதான் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டவர். என்னுடைய உண்மையான நண்பன்” என்று தாடி பாலாஜியைப் பற்றி வனிதா புகழ்ந்து சொல்ல, அதைக் கேட்டு தாடி பாலாஜி கண்கலங்கியது. (பாலாஜியை நண்பன் என்று சொல்லி விட்டு பல நேரங்களில் அடிமை போலவே வனிதா நடத்துவது ஒரு முரண்!). ஜூலி தன்னுடைய தேர்வை நிகழ்த்துவதற்காக சென்றபோது “புகைப்படம் எங்கே இருக்கிறது?’ என்று அவர் தேட, தாமரை அவருக்கு உதவினார். “வாய்தான் பேச முடியாது... கண்ணு கூடவா தெரியாது?” என்று பாலாஜி அப்போது அடித்த டைமிங் கமென்ட் அட்டகாசம். “போன சீசன்ல வருண்தான் எனக்கு உண்மையான நண்பனா இருந்தான். இப்ப அவன் இருந்தா அவனுக்குத்தான் கொடுத்திருப்பேன். அதற்குப் பதிலா ஷாரிக் நண்பனா தெரியறான்” என்றார் தாமரை.

‘நண்பர் அல்லாத’ தேர்வில் ஜூலியின் பெயர் பலமுறை அடிபட்டதால், அவர் அடிபட்ட முகத்துடன் கலங்கி அமர்ந்திருக்க, டாஸ்க் முடிந்தும் கூட ஜூலி மீது கூடுதல் தாக்குதலை நிகழ்த்தினார் வனிதா. “நீ உனக்கு பிடிச்ச நபரா என்னைத் தேர்ந்தெடுக்கலை. அபிராமியைத்தானே தேர்ந்தெடுத்தே? அப்படின்னா... நான் கொடுத்த மேக்கப் பொருள்களையெல்லாம் திருப்பிக் கொடு. நான் அதை பாலாஜிக்குத் தர்றேன். அவன்தான் எனக்கு உண்மையான நண்பன்” என்று வனிதா செய்த காரியம் சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல, அநியாயமும் கூட. “அது தமாஷூக்கு செஞ்சது” என்று பின்னர் வனிதா விளக்கம் சொன்னாலும் கூட இது தகாத காரியம். பழைய ஜூலியை வெளியே கொண்டு வருவதற்காக வனிதா செய்த அதிர்ச்சி வைத்தியமாம் இது.

BB Ultimate - 9
BB Ultimate - 9

‘டிரெண்டிங் பிளேயருக்கான சிறப்புச் சலுகைகள்’

கடந்த சீசனில் ‘நாணயம் வைத்திருப்பவருக்கு சிறப்புச் சலுகை’ என்பதைப் போல அல்டிமேட் சீசனிலும் அப்படியொரு சலுகை தரப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ‘Trending Player’ என்று ஒருவர் பிக் பாஸால் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு நாமினேஷன் ஆபத்து கிடையாது. ‘Restricted Area’ எனப்படும் பிரத்யேக பகுதியும் சிறப்பான படுக்கையும் அவருக்காகத் தரப்படும். அந்த வகையில் இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘டிரெண்டிங் பிளேயர்' – வனிதா. (சும்மாவே ஆடுவாங்க... இப்ப சலங்கை வேறயா?!).

‘Thuglife’ என்று அச்சிடப்பட்ட தலைப்பாகை, பெல்ட், சைக்கிள் சங்கிலி ஆபரணங்கள் போன்றவை அவருக்கு வழங்கப்பட, கெத்தாக போஸ் கொடுத்தார் வனிதா. இதர போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவது போல் கூக்குரலிட்டாலும் “கடவுளே... இனிமே என்னவெல்லாம் பார்க்கப் போறமோ?” என்று உள்ளுக்குள் பீதியடைந்திருப்பார்கள்.

BB Ultimate - 9
BB Ultimate - 9

ஜூலி இன்னமும் தொடர்ந்து ‘மூசுமூசுவென்று’ அழுது கொண்டிருக்க “என் கண்ணில்ல... சிரி பாக்கலாம்” என்று சிலர் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். “அவ எதுக்கு இந்த டிராமா பண்ணணும்? பிரச்னையை உங்க கிட்ட நேரா பேசி தீர்த்துக்கலாமில்ல?” என்று வனிதாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி. “இப்பக் கூட அவ கிட்ட பேசிட்டுத்தானே வந்தேன். நல்லாத்தானே பேசினா?” என்றார் வனிதா.

“உள்ளே வரலாமா மேடம்?” என்று பிரத்யேக ஏரியாவில் வனிதாவின் அனுமதி பெற்றுக் கொண்டு நுழைந்த ஜூலிக்கு ஆலோசனை சொன்னார் வனிதா. “உன் மேல எனக்கு எந்தக் கோபமும் கிடையாது. எனக்குத் தெரிந்த ஜூலி நீ இல்ல. இங்க வந்துதுல இருந்து நிறைய மாற்றம் தெரியுது. நீ நீயா இரு. உண்மையா இருந்தாதான் மக்களுக்குப் புரியும். நீ உண்மையா இல்லை. வெளியே வா” என்றெல்லாம் வனிதா உபதேசம் செய்ய “முதல் வாரம்தான் அப்படி இருந்தேன். கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன். இப்ப நார்மல். உங்களுக்கு ஹார்ட் கொடுக்கலைன்னு கோச்சுக்கிட்டிங்களே... அதுதான் என் அழுகைக்கு காரணம்” என்று ஜூலி விளக்கம் அளிக்க “அது சும்மா தமாஷூக்கு சொன்னது. நீ மாற வேண்டியதுதான் எனக்கு முக்கியம்” என்றார் வனிதா. முதல் சீசனில் மக்களிடம் தனக்கு ஏற்பட்ட அவப்பெயர் காரணமாக, இந்த சீசனில் ஜூலி அடக்கி வாசிக்கிறாரோ, என்னமோ!

BB Ultimate - 9
BB Ultimate - 9

Open Nomination அதிரடியிலும் அடிவாங்கிய ஜூலி

இரண்டாவது வாரத்திலேயே ‘Open Nomination’ அதிரடியை இறக்கினார் பிக் பாஸ். ஒவ்வொருவரும் இரு நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். அவர்களின் முகத்தில் கறுப்பு பேனாவால் பெருக்கல்குறி போட வேண்டும். இந்த டாஸ்க்கிலும் ஜூலிக்கு ஏகப்பட்ட சேதாரம் ஏற்பட்டது. “ஜூலி உண்மையா இல்ல. அவங்க வெளியே வரணும்” என்கிற காரணத்தைச் சொல்லி சொல்லியே அடித்தார்கள். “பீஸூ பீஸா கிழிக்கும் போதும் யேசு போல முகத்தைப் பாரு” என்கிற ‘பாட்சா’ முகபாவத்துடன் அனைத்தையும் புன்னகையுடன் தாங்கிக் கொண்டார் ஜூலி.

“நான் எவ்வளவோ சொல்லியும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணிட்டார்" என்கிற காரணத்தை பாலாஜிக்குச் சொன்னார் சுஜா. “எதைச் சொன்னாலும் பர்சனலா எடுத்துக்கறாங்க” என்று தாமரை மீது குறை கூறினார் சுருதி. “பாலா போன சீசன்ல நல்லா விளையாடினாரு. எனக்கு பழைய பாலாவை பார்க்கணும்” என்கிற காரணத்தைச் சொல்லி சுருதி, பாலாவை நாமினேட் செய்ய “பழைய பாலாவைப் பார்க்கணும்னா வெளியே போய் எபிசோட்ல பாரு” என்று பாலாஜி அடித்த கமென்ட்டிற்கு வீடே உருண்டு புரண்டு சிரித்தது.

BB Ultimate - 9
BB Ultimate - 9

“நான் பழகிப் பார்த்த சுஜா இவங்க இல்ல. ரொம்ப சாஃப்ட்டா இருக்கிற மாதிரி தெரியுது. கேமிற்காக அப்படி பண்றாங்களோன்னு தோணுது” என்று சுஜாவை நாமினேட் செய்த ஷாரிக் சொல்ல, “கல்யாணம் ஆகட்டும் தம்பி. அப்புறம் பாரு கதையை. நீயும் மாறிடுவ” என்று சுஜா கமெண்ட் அடித்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். அதை வைத்தே சுஜாவை அடித்தார்கள். “கல்யாணத்திற்கும் ஒருவரின் குணாதிசயம் மாறுவதற்கும் சம்பந்தம் இல்லை” என்று சுஜாவை நாமினேட் செய்தார் அனிதா. “இது பெண்களைப் பலவீனப்படுத்தற கமென்ட் மாதிரி இருக்குது” என்று சொல்லி சுஜாவை நாமினேட் செய்தார் வனிதா. ஜூலியை நாமினேட் செய்த வனிதா சொன்ன காரணம் “சேஃப் கேம் ஆடுகிறார்” என்பது.

BB Ultimate - 9
BB Ultimate - 9
ஆக... இரண்டாவது வாரத்தில், எவிக்ஷன் பட்டியலில் இடம்பிடித்தவர்கள், சுஜா, ஜூலி, அபிநய், பாலாஜி, பாலா மற்றும் தாமரை.

இந்த டாஸ்க் முடிந்ததும், ஷாரிக்கைத் தனியாக ஓரங்கட்டிய சுஜா “என் ரியல் கேரக்ட்டரை நீ எங்கே பார்த்தே? நாம அதிகமா பழகினதே இல்லை. அப்புறம் நான் மாறிட்டேன்னு எப்படி சொல்ற?” என்றெல்லாம் போட்டுக் குடைந்து எடுக்க “எனக்கு அப்படித் தோணுச்சுக்கா... என் பார்வை அது. நீங்க வித்தியாசமாக perform பண்ற மாதிரி இருக்கு. உங்களோட பழக்கம் இருக்கு–ன்னு சொன்ன வரியை மட்டும் வாபஸ் வாங்கிக்கறேன்” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ஷாரிக்.

BB Ultimate - 9
BB Ultimate - 9

சாப்பிட்ட உணவின் கலோரிகளை எரிப்பதற்காக ‘கோல்மால்’ என்கிற தலைப்பில் வித்தியாசமான கால்பந்து போட்டியை நடத்தினார் பிக் பாஸ். முகத்தில் புனல் வடிவத்தில் உள்ள முகமூடியை மாட்டிக் கொண்டு ஃபுட்பால் ஆட வேண்டுமாம். ‘கச்சா...முச்சா’வென்று நடந்த இந்தப் போட்டியில் ஷாரிக் தலைமையிலான அணி வெற்றி பெற்றதாக நடுவர் வனிதா அறிவித்தார்.

‘நீ வெளியே வா. நீ வெளியே வரணும்...’ன்னு சொல்லி சொல்லி... ஜூலியை வீட்டை விட்டே வெளியே வர வெச்சிடுவாங்க போல!