முதல் வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க், ரத்தப் பிறாண்டலுடனும் நகக் கீறல்களுடனும் சிறப்பாக நடந்தேறியது. ஒருவரையொருவர் நாசூக்காக அதே சமயத்தில் ஆவலாகவும் ஆவேசமாகவும் பிறாண்டிக் கொண்டார்கள். அதேதான். பிக் பாஸ் அல்டிமேட் என்பது முன்அனுபவமுள்ள பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளும் ஷோ என்பதால் ‘என்ன கேள்வி கேட்டால் அது சர்ச்சையாகும், எதிராளியை எப்படிச் சரியாகச் சென்று தைக்கும்…’ என்பதையெல்லாம் நன்கு அறிந்திருந்தார்கள். இந்த நோக்கில் லக்ஸரி டாஸ்க்கில் நடந்த ‘PRESS MEET’-கள் அனைத்திலும் அனல் பறந்தது.
எபிசோட் 3, நாள் 2-ல் நடந்தது என்ன?
‘பூ பேசும்... பூ பேசும்...’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. வெளியே வந்து ஆடிய போட்டியாளர்கள் பெரும்பாலும் தற்செயலாக கறுப்பு நிறத்தில் அமைந்த உடையை அணிந்திருந்தது ஒரு சின்ன ஆச்சர்யம். பிக் பாஸ் இம்முறை டீ பவுடர் மட்டும்தான் அனுப்பியிருக்கிறார் போலிருக்கிறது. எனவே “காபி தருவீங்களா பிக் பாஸ்?” என்று தூக்கக் கலக்க முகத்துடன் வனிதா கேமராவைப் பார்த்து கெஞ்சி, கொஞ்சிக் கொண்டிருக்க, அங்கிருந்து எந்த ரெஸ்பான்ஸூம் வராததால் “சீ பே..." என்று எரிச்சலுடன் கிளம்பி விட்டார்.

தபால் பெட்டிக்கான மணி அடித்தது. காலை டாஸ்க். ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு ஜோசியம் பார்த்து சொல்ல வேண்டுமாம். சுரேஷ் இந்தச் சம்பவத்தை ஆரம்பித்து வைக்க வேண்டும். ஆனால், “பிக் பாஸிடமிருந்து காபித் தூள் வராமல் நான் டாஸ்க்கிற்கு வர மாட்டேன்” என்று போராட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டார் வனிதா. "டாஸ்க்கெல்லாம் ஒழுங்கா பண்ணாதானே லக்ஸரி பட்ஜெட்ல காபி பவுடர் கிடைக்கும்?” என்று இதர போட்டியாளர்கள் வந்து கனிவாகக் கேட்டாலும் வனிதா மசியவில்லை. “எனக்காச்சு... பிக் பாஸிற்காச்சு... நான் பார்த்து வளர்ந்த பய... என் கிட்டயே துள்றானா?” என்பது போல் வனிதா கெத்தாக பேச மற்றவர்கள் உள்ளூற எரிச்சல் அடைந்தார்கள். ஆனால், வனிதாவை எதிர்த்துப் பேசவும் பலருக்கு பயம்.
“எங்க சீசன்ல காபியெல்லாம் தரலை. வெறும் டீ மட்டும்தான்” என்று அனிதா குறுக்குச்சால் ஓட்ட முயல “உங்க சீசன் கதைல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் இருந்தப்ப கொடுத்தாங்க... கொடுத்தே ஆகணும்.. என்னடா சொல்ற பிக் பாஸ்?!” என்கிற ரேஞ்சிற்கு வனிதா எகிற, அனிதா பம்மி பின்னால் நடந்தார். எரியும் நெருப்பில் மூலிகை பெட்ரோலை ஊற்றுவது போல இந்தச் சமயத்தில் சுரேஷூம் தொடர்ந்து இடக்காக பேச, வனிதாவின் உஷ்ணம் இன்னமும் அதிகமாகியது. அதுதான் சுரேஷிற்கும் வேண்டும். எனவே பற்ற வைத்து விட்டு ஜாலியாக நடந்து சென்றார்.
அல்டிமேட்டின் முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்தார். A அணி, B அணி என்று வீடு இரண்டாகப் பிரிய வேண்டும். ஒன்று பத்திரிகையாளர் அணி. இன்னொன்று நட்சத்திர அணி. பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நட்சத்திர பிரபலங்கள் ‘Press Meet’-ல் பதில் சொல்ல வேண்டும். முதல் சுற்று முடிந்ததும், இரண்டு அணிகளும் அப்படியே இடம் மாற வேண்டும்.

“தீர்க்கப்படாத கணக்குகளை தீர்த்துக் கொள்ள வந்திருக்கிறார்கள்” என்று துவக்க நாள் நிகழ்ச்சயில் கமல் சொன்னதின் பொருள் இரண்டாவது நாளிலேயே புரிந்து விட்டது. கடந்த சீசன்களில் நடந்த சம்பவங்கள், சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள், பிக் பாஸில் இருந்து வெளியே சென்றவுடன் நடந்த விஷயங்கள் என்று ஒவ்வொரு பத்திரிகையாளரும் கேள்விகளால் குதறி எடுத்து விட்டார்கள். “போங்கடா... சின்னப்பசங்களா...” என்று வனிதா இதை இடதுகையால் கையாண்டதில் நமக்கு பெரிய ஆச்சர்யமில்லை. ஆனால், “எனக்குத் தெரியாது பாப்பா” என்ற டெம்ப்ளேட் வசனத்துடன் எப்போதும் பேச ஆரம்பிக்கும் தாமரை, இந்த ‘Press Meet’ சமாச்சாரத்தை சாமர்த்தியமாக கையாண்டதுதான் சிறப்பு. அந்த அளவிற்கு சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டி சமாளித்தார் தாமரைச் செல்வி.
நிரூப் இன்டர்வியூ – ‘யாருப்பா அந்த எக்ஸ்?’
இந்த வில்லங்கமான ‘பிரஸ் மீட்’ சடங்கில் முதலில் மாட்டியவர் நிரூப். “போன சீசன்ல ஸ்ட்ராட்டஜி ‘கிங்’கா இருந்தீங்க. இதுல உங்க கேம் பிளான் என்ன?” என்று முதல் கேள்வியை வீசினார் அனிதா. “அப்படியெல்லாம் எதுவும பிளான் பண்ணலை. நடக்கற விஷயத்திற்கு ரியாக்ட் பண்ணப் போறேன். இப்பத்திக்கு அவ்வளவுதான்” என்று ஆன்மிகமாக பதில் அளித்தார் நிரூப். “கேமரால வரணும்ன்றதுக்காக ஓவரா பண்ற மாதிரி தெரியுதே?” என்று அடுத்த கேள்வியை அபிராமி கேட்க, “அப்படில்லாம் இல்லை” என்று சுருக்கமாக மறுத்தார் நிரூப்.

“வெறுமனே ரியாக்ட்தான் பண்ணப் போறீங்கன்னா... வனிதா கிட்ட ஏன் சத்தமா பேசி சண்டை போட்டீங்க. சாஃப்ட்டா பேசியிருக்கலாமே?” என்று அபிராமி மடக்க முயல “எந்தெந்த இடத்துல என்ன ரியாக்ஷன் வேணுமோ, அப்படித்தான் பேசினேன்” என்று சாமர்த்தியமாக பதில் சொல்லி வெளியே வந்தார் நிரூப். “நடிகர் நிரூப் அவர்களே... நடிகர் பாலா உங்களுக்குப் போட்டின்னு வெளில பேசிக்கறாங்களே?” என்று சுரேஷ் பற்ற வைக்கும் கேள்வியை தூக்கிப் போட “அவனுக்குப் படமே இல்லை. அவன் எனக்குப் போட்டியா?” என்று நிரூப் அளித்த பதிலைப் பார்த்து “என் இனமடா நீ... சபாஷ்” என்று அகம் மகிழ்ந்தார் சுரேஷ். பாலாவிற்கும் நிரூப்பிற்கும் இந்த சீசனில் நல்லதொரு நட்பு ஏற்பட்டிருப்பதால் பாலாவும் இந்தப் பதிலை சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார். டென்ஷன் ஆகவில்லை.
“பிசினஸ்மேன், நடிகர், லவ்வபிள் பாய்ன்னு உங்களுக்கு நிறைய முகங்கள் இருக்கு. சீசன் முடியும் போது எதுவா வெளியே போக ஆசைப்படறீங்க?” என்கிற கேள்வியை சிநேகன் கேட்க “மனுஷனா போக ஆசைப்படறேன்” என்று பன்ச் டயலாக் பேசினார் நிரூப். “உண்மையைத்தான் பேசப் போறேன்னு சொல்லிட்டு இப்ப ரொம்ப டிப்ளமஸியா பேசறீங்களே?” என்று அனிதா அடுத்த கேள்வியை கேட்க, ‘இந்தப் பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கே?' என்கிற மாதிரி அனிதாவைப் பார்த்த நிரூப், “நீங்க எதிர்பார்க்கற பதிலை என் வாயில் இருந்து பிடுங்க டிரை பண்ணாதீங்க” என்று சற்று எரிச்சலானார்.
அடுத்தது ஒரு வில்லங்கமான கேள்வி அபிராமியிடமிருந்து புறப்பட்டது. ஒருவகையில் அதை ‘சேம் சைட் கோல்' என்று கூட சொல்லலாம். “இந்த சீசன்ல கலந்துக்கப் போற போட்டியாளர்கள் யாருன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியாது. ஆனா இங்க வந்தப்புறம் உங்க ‘எக்ஸ்’ இங்க வந்திருப்பதைப் பார்த்தப்புறம் எப்படி ஃபீல் பண்ணீங்க?” என்று அபிராமி கேட்டதும் “இது என்ன புதுக் கதையால்ல இருக்கு?” என்று ஜெர்க் ஆனார் சுரேஷ். “யார் அந்த எக்ஸ்?” என்கிற கேள்வி பதில் தெரியாதவர்களின் மனதில் ஓடியது. “அது நானா இருக்கும்னு சொல்லலை” என்று அபிராமி தானே வந்து டிஸ்கிளைமர் போட்டாலும் நிரூப் அலட்டிக் கொள்ளவேயில்லை.

“அந்த எக்ஸ் நீங்கதான். உங்களை உள்ளே பார்த்ததும் பல விஷயங்கள் மைண்ட்ல ஓடிச்சு. பேசலாம்ன்னு கூட தோணுச்சு. ஆனா ஏதோ ஒரு விஷயம் தடுத்துவிட்டது. போகப் போக என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று நிரூப் கூலாக பதில் சொல்ல “அப்ப அதான் இதா?” என்று சுஜாவும் இப்போது ஷாக் எக்ஸ்பிரஷன் கொடுத்தார்.
பாலா இன்டர்வியூ – ‘பத்த வெக்கற வேலை என்கிட்ட வேணாம்’
அடுத்த நட்சத்திரமாக நேர்காணல் தருவதற்கு நெற்றியில் விபூதியெல்லாம் வைத்துக் கொண்டு சாத்வீகமாக வந்தார் பாலா. (எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கறீங்களா?!). “நீங்க அராஜகமான ஆளா... அமைதியான ஆளா..? நீங்க இருந்த சீசன்ல ‘எல்லோரையும் அம்மில அரைச்சுடுவேன்னு’ சொன்னீங்களே?” என்று தாடி பாலாஜி பழைய கதையைக் கிளறி ஒரு கேள்வியை ஆரம்பித்து வைக்க “அப்படிச் சொல்லல... எல்லோரையும் அம்மி அரைக்க வைப்பேன்னுதான் சொன்னேன்” என்று மறுத்தார் பாலா. “ஆக்டர் பாலா அவர்களே! உங்களுக்கு ஆட்டியூட் ஜாஸ்தியா இருக்கற மாதிரி தெரியுதே? இது உங்களோட சினிமா வாய்ப்பை பாதிக்காதா?” என்று அபிராமி கேட்க “நான் நடிச்ச படத்தை டைரக்ட் செஞ்சவர் கிட்ட போய் கேட்டுப் பாருங்க. ‘பாலா மாதிரி ஒரு ஆக்டர் கிடைக்க போன ஜென்மத்துல புண்ணியம் பண்ணியிருக்கணும்னு சொல்லுவாரு. அப்படியொரு சமர்த்துப்பிள்ளை நான். அந்த வதந்தியையெல்லாம் நம்பாதீங்க” என்பது போல் பாலா சொல்ல, பிக் பாஸிற்கே சற்று தலை சுற்றியிருக்கும்.

“நேர்மையான ஆசாமின்ற மாதிரி உங்களை ரொம்பவும் காண்பிச்சுக்கறீங்களோ?” என்கிற கேள்வியை சிநேகன் கேட்டார். இதற்கு சுரேஷ் கூடவே ஒத்து ஊதினார். “நான் ஃபர்பெக்ட் இல்லாதவன்ற விஷயத்தை நானே அதிக முறை சொல்லியிருக்கேன். விக்டிம் கார்ட் வெச்சு ஆடற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது” என்று காட்டமாக பதில் அளித்தார் பாலா. “நீங்க டபுள் சைட் கோல் போடற மாதிரி தெரியுதே. ஒரு பக்கம் வனிதா கிட்டயும் சமாதானமா பேசறீங்க. இன்னொரு பக்கம் ஷாரிக் கிட்டயும் பேசறீங்க” என்றொரு கேள்வியை சுருதி கேட்க ‘அப்படிக் கேளு புள்ள' என்று சபை மகிழ்ச்சியானது. இதற்கு எதையோ சொல்லி சமாளித்தார் பாலா.
பாலாவின் நேர்காணல் முடிந்து பஸ்ஸர் அடித்ததும் கிச்சன் ஏரியாவில் சுரேஷிற்கும் பாலாவிற்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. “சிநேகன் கேட்ட கேள்வியை நீங்க இன்னமும் சூடாக்கி பத்த வைக்கப் பார்க்கறீங்களா... இந்த வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதீங்க” என்று பாலா எகிற “போடா... சின்னப் பையா உன்னை மாதிரி ஆயிரம் பேரை நான் பார்த்திருக்கேன்” என்பது போல் சுரேஷூம் பதிலுக்கு எகிறினார். சீசன் 5-ல் நிரூப்பும் பிரியங்காவும் தொடர்ந்து முட்டிக் கொண்டது போல் இந்த அல்டிமேட் சீசனில் சுரேஷூம் பாலாவும் நிறைய முட்டிக் கொள்வார்கள் என்று தெரிகிறது. இது இவர்கள் பேசி வைத்துக் கொண்ட உத்தியாகவும் இருக்கக்கூடும்.

“சரி... விடுங்கண்ணே...” என்று சுரேஷிடம் தாடி பாலாஜி பஞ்சாயத்து செய்ய வைக்க முயல “யாராவது விடு விடுண்ணு வந்தீங்கன்னா... ஒண்ணு விடுவேன். இந்த வாரமே நான் போனாலும் எனக்குல் கவலையில்லை” என்று சுரேஷ் டென்ஷன் ஆக, "இது உனக்குத் தேவையா?” என்கிற மாதிரி பம்மி அமைதியானார் பாலாஜி.
வனிதா இன்டர்வியூ – 'கேள்வி கேளுங்கடா சின்னப்பசங்களா!'
அடுத்து வந்தவர் அதிரடி வனிதா. “இதுவொரு சிறப்பு நேர்காணல்” என்று சம்பிரதாயமாக ஆரம்பித்த பாலாஜி “யாராவது கேள்வி கேளுங்கப்பா” என்று சட்டென்று பம்மியது சுவாரஸ்யம். “நெகட்டிவ் பப்ளிசிட்டி பத்தி என்ன நெனக்கறீங்க?” என்று சர்காஸ்டிக்கான கேள்வியை ஆரம்பித்து குண்டூசியால் குத்தினார் அனிதா. (அம்மணி ஆள் பார்க்க சைலண்ட்டா இருந்தாலும் செய்யறதெல்லாம் வயலெண்ட்டா இருக்கு). “பப்ளிசிட்டில நெகட்டிவ், பாசிட்டிவ்ன்னு எதுவும் கிடையாது. நெக்ஸ்ட்?” என்று அனிதாவை இடதுகையால் அலட்சியமாக ஓரங்கட்டி அடுத்த கியரைப் போட்டார் வனிதா.

“உங்க சோசியல் இமேஜ் பத்தி என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டு வனிதாவிடமிருந்து மொக்கை வாங்கினார் அபிநய். “அதைப் பத்தி மக்கள்கிட்ட கேளுங்க. என் சோசியல் இமேஜ் பத்தி நான் என்ன சொல்ல முடியும்?” என்று அபிநய்யையும் அசால்ட்டாக வனிதாக்கா ஹாண்டில் செய்ய சபை சிரித்தது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத அனிதா, அடுத்த கேள்வியை வீசினார். “உங்க அல்டிமேட் கோல் என்ன?” அல்டிமேட் என்பது இந்த சீசனின் தலைப்பு என்பதால் உள்குத்தாக அனிதா கேட்டிருப்பார் போல.
வனிதாவின் அட்ராசிட்டி பற்றி நாம் ஆயிரம் கிண்டல் செய்யலாம். அவற்றில் ஒரு பகுதி நியாயமும் கூட இருக்கலாம். ஆனால் அவருக்குள் இருக்கும் துணிச்சலையும் எதையும் அநாயசமாக எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இந்தக் கேள்விக்கு வனிதா பதில் அளித்தது உணர்வுபூர்வமானதாக இருந்தது. “நான் சினிமா பிரபலங்களுக்கு பிறந்த வாரிசு. எனவே சினிமா வாய்ப்பு, ஹீரோயின் சான்ஸ், திருமணம், குழந்தை, டைவர்ஸ்ன்னு வாழ்க்கையில் பல விஷயங்களைப் பார்த்துட்டேன். 40 வயது ஆயிடுச்சு. அம்மா, அப்பா ஆதரவு கிடையாது. அம்மா செத்தே போயிட்டாங்க. நிறைய யோசிச்சு இருக்கேன். தற்கொலைன்னு சொல்ல மாட்டேன். அப்படி நிறைய கஷ்டங்கள். நடுவுல சில வருடங்களை நான் இழந்துட்டேன். பிக் பாஸ் வாய்ப்பு சரியான நேரத்துல வந்தது. அதை சரியான தேர்வா பார்க்கறேன்.
இதுல எனக்கு கிடைச்ச வெற்றி நானா சம்பாதிச்ச வெற்றி. இதுல யாரோட பங்கும் கிடையாது. பிக் பாஸில் ஆண்கள் அதிகமா ஜெயிச்சிருக்காங்க. ஒரு பெண்ணும் டைட்டில் அடிச்சிருக்காங்க. இல்லைன்னு சொல்லல. ஆனா, அவங்க ரொம்ப சாஃப்ட் கேரக்ட்டர். அவங்களை எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, என்னை மாதிரி ஒரு துணிச்சலான பொண்ணு டைட்டில் வின் பண்ணா, அது பல பெண்களுக்கு முன்னுதாரணமா இருக்கும்னு நம்பறேன்” என்று வனிதாவே கண்கலங்கி பேச, அந்த நெகிழ்வை சபையும் பிரதிபலித்தது.

ஆனால், கலகவாதியான பாலா இந்தச் சமயத்தில் ஒரு பிரச்னையை எழுப்பினார் “அக்கா... சாரிக்கா…” என்று வனிதாவிடம் முன்ஜாமீன் வாங்கிய பாலா “அது என்ன... நானும் நிரூப்பும் வந்தபோது கேப்பே விடாம கேள்வி கேட்டீங்க... எங்களை நிதானமா பதில் சொல்ல கூட விடலை. ஆனா இப்ப மட்டும் வனிதாக்கா ரொம்ப லெங்க்த்தா பதில் சொல்றாங்க. நீங்களும் சைலண்ட்டா உக்காந்து கேட்டுட்டு இருக்கீங்க. குறுக்கே கேள்வி கேட்க பயமா இருக்கா?" என்று பத்திரிகையாளர்களின் துணிச்சலை சந்தேகத்திற்கு உட்படுத்தினார் பாலா. அவரின் டார்கெட் சுரேஷ் தாத்தா என்பது வெளிப்படை. சற்று நேரத்திற்கு முன்புதான் பாலாவிற்கும் சுரேஷிற்கும் முட்டல் ஏற்பட்டது.
வனிதா நமட்டுச் சிரிப்புடன் இதை வேடிக்கை பார்க்க “அவங்க சரியா பதில் சொல்றாங்க. அதனால நாங்க குறுக்கிடலை. மத்தபடி எங்களுக்கென்ன பயம். கேள்வி கேட்டுடுத்தானே இருக்கோம்?” என்று இதர பத்திரிகையாளர்கள் சமாளித்துப் பேச “இது பனங்காட்டு நரி. இந்தச் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது” என்று சுரேஷ் வசனம் பேசி பாலாவை அடக்க முயன்றார். இது குறித்த ‘கசகச’ உரையாடல் சிறிது நேரத்திற்கு நீடித்தது.
தன் முயற்சியில் இன்னமும் மனம் தளராத அனிதா அடுத்த கேள்வியை வீசினார். (பாருப்பா இந்தப் பிள்ளைய... என்னா தைரியம்?!) “பெண்களுக்கு முன்னுதாரணமா இருக்கணும்னு சொல்ற நீங்க... சில சமயம் டாஸ்க் செய்ய மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்க. எதுவா இருந்தாலும் பிக் பாஸ் கிட்ட பேசிக்கறேன்றீங்க... இதையெல்லாம் பார்த்து இளம் தலைமுறை இன்ஸ்பையர் ஆக மாட்டாங்களா?” என்று கேள்விக்குள் சைலண்ட்டாக ஒரு டைம்பாமை வைத்தார் அனிதா. “முன்னல்லாம் ஒரு மணி நேரம்தான் காட்டுவாங்க. அதுல நம்ம பக்க நியாயம் தெரியாது. இப்ப 24x7 மக்கள் பார்க்க முடியும். அந்தக் காரணத்திற்காகத்தான் நான் வந்தேன். இல்லைன்னா கோடி கோடியா கொடுத்திருந்தாலும் வந்திருக்க மாட்டேன்” என்று வனிதா கெத்தாக பதில் சொன்னார்.

அனிதாவைப் பார்த்து சுருதிக்கும் சற்று துணிச்சல் வந்திருக்க வேண்டும். “அக்ரிமெண்ட் எல்லாம் படிச்சுப் பார்த்து சைன் பண்ணிட்டுதானே வந்திருக்கீங்க. அப்புறம் டாஸ்க் பண்ண மாட்டேன்னு சொன்னா எப்படி?” என்று கேட்க, “இதையெல்லாம் என் லீகல் டீம் பார்த்துக்கும். எல்லா டாஸ்க்கையும் செய்யணும்னு எனக்குக் கட்டாயமில்லை” என்று தன் நாற்காலியில் இருந்து இறங்காமலேயே வனிதா அலட்டலாகப் பேச “ஒருவேளை இதுதான் உங்க கேம் பிளானோ?” என்று சிநேகன் கேட்டவுடன் “நீங்க கூடத்தான் உங்க மனைவியை விட்டுட்டு இங்க வந்திருக்கீங்க” என்று சம்பந்தமில்லாமல் சிநேகனிடம் எகிறினார் வனிதா. “தனிப்பட்ட விஷயங்களை இதில் இழுக்காதீங்க” என்று மற்றவர்கள் ஆட்சேபித்தவுடன் சற்று இறங்கி வந்த ராஜமாதா, ‘சாரி’ என்று சம்பிரதாயமாக மன்னிப்பு கோரினார். இத்துடன் வனிதாவின் நேர்காணல் முடிந்தது. (ஹப்பாடா!).
ஜூலி இன்டர்வியூ – ஜாலியான இன்டர்வியூ
“ஓவியா மாதிரி காப்பி பண்ண டிரை பண்றீங்களா?” என்று முதல் பந்தையே பெளன்சராகப் போட்டார் அபிராமி. “அப்படில்லாம் நகல் எடுக்க நான் முயற்சியே பண்ணலை. ஓவியான்னு ஒருத்தர்தான் இருக்க முடியும். நான் நானாத்தான் இருக்கிறேன்” என்று சமாளித்தார் ஜூலி. “முதல் சீசன் முடிஞ்சப்புறம் உங்க கிட்ட நடந்த மாற்றம் என்ன?” என்று பாலாஜி கேட்க “எப்படிப் பேசணும்னு கத்துக்கிட்டேன்” என்று ஜூலி பதில் சொல்லி முடிப்பதற்குள் “அப்படின்னா முதல் சீசன்ல நீங்க தப்புத்தப்பா பேசினீங்களா?” என்று இடக்காக மடக்க முயன்றார் சுரேஷ். “எதிர்ப்புகளை எப்படிக் கடந்து வந்தீங்க?” என்று சிநேகன் கேட்க “நமக்காகத்தான் நாம் வாழணும். நல்ல விமர்சனங்களை எடுத்துக் கொள்ளலாம். மத்தபடி என் குடும்பம்தான் எனக்கு முக்கியம். மத்தவங்களைப் பத்தி எனக்குக் கவலையில்லை” என்று பதில் அளித்த ஜூலியிடம், “அந்த அஞ்சு செகண்ட்ல என்னதான் நடந்துச்சு. இப்பவாச்சும் சொல்லுங்களேன்” என்று பற்ற வைக்க முயன்றார் சுரேஷ். “பழைய விஷயங்களை விடுங்களேன் ப்ளீஸ்” என்று ஜூலி அலுத்துக் கொள்ள “இல்ல. நீங்க பண்ண விஷயத்தால ஓவியா மேல ஒட்டுமொத்த வீடே எதிர்ப்பா மாறுச்சு. அதனாலதான் கேட்கறோம்” என்று விடாப்பிடியாக நின்றார் அபிராமி. “அது ஒரு தவறான புரிதல். விட்டுடுங்க” என்று ஏறத்தாழ கெஞ்சினார் ஜூலி.

சுருதி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜூலி, “ஜல்லிக்கட்டு போராட்டம் அப்ப மக்களோட ஆதரவு நிறைய கிடைச்சது, ஆனா ஆறே மாசத்துல அத்தனையும் தலைகீழா மாறிடுச்சு. பிக் பாஸ் முடிஞ்சு வெளியே வந்தப்ப அத்தனை எதிர்ப்பு. என்னை மட்டுமில்லாம என்னோட தாத்தா பாட்டி வரைக்கும் திட்ட ஆரம்பிச்சிட்டாங்க” என்று சீரியஸாக ஜூலி சொல்லிக் கொண்டு போக, “தாத்தாவைத் திட்டக்கூடாது. அது தப்பு” என்று கோபம் வருவது போல் காமெடி செய்தார் சுரேஷ். இன்னொரு சமயத்தில் “அப்படி காறித் துப்பியிருக்காங்க” என்று கசப்புணர்ச்சியுடன் ஜூலி சொல்ல “அப்ப என்ன செஞ்சீங்க?” என்று யாரோ கேட்டதற்கு “துடைச்சிட்டு போயிருப்பாங்க... இதெல்லாம் ஒரு கேள்வியா?” என்று எரிச்சல் வரும் காமெடியை செய்தார் சுரேஷ். ஒருவர் உணர்வுபூர்வமாக தன் சிரமத்தைப் பகிரும் போது அதிலும் தன் முந்திரிக்கொட்டை காமெடியை சுரேஷ் செய்வது ரசிக்கத்தக்கதாக இல்லை.
சுருதியின் கேள்விக்கு பதிலளிக்கும் போது “தொடர்ந்து ஜெயிக்கறவனை விடவும் விழுந்து அடிபட்டு எழுகிறவனைத்தான் உலகம் அதிகம் மதிக்கும். அவன்தான் வரலாற்றில் இடம்பிடிப்பான். ஒரு சிறிய அவதூறுக்காக தற்கொலை வரைக்கும் போனவங்கள்லாம் இருக்காங்க. ஆனா இவ்ளோ எதிர்ப்பைத் தாண்டி நான் இங்க வந்திருக்கேன். ஏன்னா என்னை நான் அவ்வளவு லவ் பண்றேன். உங்களுக்கும் அதையேதான் சொல்வேன். Love yourself.” என்று ஜூலி சொன்ன பதில் சிறப்பானது.

இந்த பிரஸ் மீட்டில் ஜூலி சங்கடமான கேள்விகளை அதிகம் எதிர்கொண்டதால் அவரைக் காப்பாற்ற தாடி பாலாஜி நினைத்தாரோ, என்னமோ “நீங்கள் மக்களுக்கு சத்தமில்லாம உதவியெல்லாம் பண்ணியிருக்கீங்க. அதை விளம்பரப்படுத்திக்கலை. அதையெல்லாம் இப்ப விவரமா சொல்லுங்க” என்று எடுத்துக் கொடுக்க “ஆமாம்... ஒன்றரை வயசு குழந்தை ஒண்ணு. கல்லீரல் அறுவை சிகிச்சைக்காக பணம் இல்லாம என்கிட்ட வந்தாங்க. நான் மக்கள் கிட்ட போனேன். “என்னைத் திட்டினாலும் பரவாயில்லை. பணம் கொடுங்கன்னு கேட்டேன். நம்ப மாட்டீங்க... 23 லட்சம் ரூவா கலெக்ட் ஆச்சு. அதை வெச்சு குழந்தையை காப்பாத்த முடிஞ்சது. அந்தப் பையன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘அம்மா’ன்னு கூப்பிடுவான்” என்று சொல்லும் போதே கலங்கினார் ஜூலி. “இது தவிர ஸ்கூல் ஃபீஸ் கட்ட பணமில்லாம கஷ்டப்படற சில பொண்ணுங்களை படிக்க வைக்கறேன். இதுக்கும் சிலர் உதவறாங்க” என்று தான் செய்யும் சமூக சேவைகளை ஜூலி பகிர, மக்கள் கைத்தட்டி பாராட்டினார்கள்.
“உங்க வாழ்க்கையில் ஏதாச்சும் அதிசயம் நடந்திருக்கா?” என்று அடுத்த கேள்வியை தாடி பாலாஜி மீண்டும் எடுத்துக் கொடுக்க “ஆமாம். எங்க அப்பா, அம்மாவிற்கு ஒரு வீடு கட்டித் தரணும்ன்றதுதான் என் வாழ்க்கையோட பெரிய லட்சியம். அதுக்காக முயற்சி செய்யும் போது ஒரு தடை வந்தது. விடியறதுக்குள்ள பத்து லட்சம் பணம் வேணும். என்ன செய்யறதுன்னு தெரியல. அப்ப ஒருத்தர் போன் பண்ணி எல்லாம் சரியாயிடும். நான் பிரார்த்தனை பண்றேன்னு சொன்னார். அது உடனே நடந்தது. அதுக்குப் பிறகு ஒரு பிரெண்டு போன் பண்ணி நான் அழறதைப் பார்த்து கேள்வியே கேட்காம மறுநாள் காலைல பத்து லட்சம் பணம் தந்தார். எனக்காக பிரார்த்தனை செய்த அந்த நபர், தாடி பாலாஜி அண்ணா” என்று கடைசியில் சஸ்பென்ஸை அவிழ்த்தார் ஜூலி. பாலாஜியின் கண்களும் கலங்கியிருந்தன. “ஓ... இதுக்காகத்தான் இந்தக் கேள்வியை வம்படியா கேட்டு பதில் வாங்கினீங்களா?” என்று அபிராமி கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

“சரிங்க... மக்களுக்கெல்லாம் நல்லது பண்ணியிருக்கீங்க... இங்க இருக்கற மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சீங்களா?” என்று ஜூலியை வனிதாவுடன் கோர்த்து விட முயன்றார் சுரேஷ். தனக்கு காபி பவுடர் கிடைக்காததால், டீ பவுடரை வனிதா திருப்பியனுப்பி விட்டாராம். “ஆமாம்... இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான். அவங்களுக்கு காபி கிடைக்கலைன்றதுக்காக, மத்தவங்களுக்கு கிடைக்க வேண்டிய டீயை அனுப்பியிருக்கக்கூடாது” என்று ஜூலி சொல்ல “'வன்மையாகக் கண்டிக்கறேன்’ன்னு அழுத்தி சொல்லுங்க” என்று இன்னமும் ஜாலியாக தூண்டிவிட்டார் பாலா. அடுத்து ஒரு மினி பஞ்சாயத்து நடந்தது. “உங்களைப் பார்த்தா நடிகை ஜனனி செய்யற மாதிரி இருக்கு” என்று ஜூலியை நோக்கி பாலாஜி ஆரம்பிக்க “ஏன் லோஸ்லியான்னு சொல்லக்கூடாதா?” என்று வனிதா குறுக்கே கட்டையைப் போட “என் தங்கச்சியை இதில இழுக்காதீங்க” என்று அபிராமி பாசம் காட்ட “வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்... இங்க வந்து அக்கா, தங்கச்சி சீன் போட்டுக்கிட்டு... ஒவியா பேரைச் சொல்லும் போது லோஸ்லியா பேரைச் சொல்லக்கூடாதா? நான் தப்பா ஒண்ணும் பேசலை” என்று அபிராமிக்கு நோஸ் கட் கொடுத்தார் வனிதா.
தாமரையின் கலக்கல் இன்டர்வியூ ‘அப்பாவியா... அடப்பாவியா?’
மக்கள் எத்தனை விதம் விதமாக நோண்டிக் கேட்டாலும் முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக் கொண்டு தாமரை இந்த பிரஸ் மீட்டை சமாளித்த விதம் சிறப்பு. “தெரியலை, தெரியலைன்னு சொல்லிக்கிட்டே எல்லாத்தையும் நல்லாப் பண்ணிடறீங்க” என்கிற விஷயத்தையே மக்கள் மாற்றி மாற்றிக் கேட்டார்கள். தாமரையை மடக்குகிறேன் பேர்வழி என்று ‘ஒப்பனைச் சாதனங்கள்’ பற்றி அனிதா கேட்டதெல்லாம் தேவையில்லாத ஆணி. இதைப் போலவே சுருதியும் எதையோ கேட்டு மாட்டி விட முயன்றார். இவருக்கும் தாமரைக்கும் இருக்கிற புகைச்சல் இந்தச் சமயத்தில் நன்றாகவே வெளிப்பட்டது. (அப்ப ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ் ஆகலையா?!).

“டாப் 5ல வருவீங்கன்னு எதிர்பார்த்தோம். ஏன் ஏமாத்தினீங்க?” என்று சுரேஷ் இடக்காகவும் உண்மையான அக்கறையுடனும் தாமரையிடம் கேட்க, “எனக்கு வாக்களிக்க வேண்டிய மக்கள் அப்ப பழனிக்கு பாதயாத்திரை போயிட்டாங்க” என்று சுரேஷின் பாணியையே வைத்து அவரை தாமரை மொக்கையாக்கிய விதம் அட்டகாசம். இந்த சமயோசிதத்தை மக்கள் ரசித்து சிரித்து வரவேற்றார்கள்.
அடுத்ததாக சுஜா இண்டர்வியூ. 'அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்டுடு’ காமெடியாக இது நடந்து முடிந்தது. "முதல் சீசன்ல மகளா வந்தேன். இப்ப தாயா வந்திருக்கேன்” என்று சென்டி வசனம் பேசி சமாளித்தார் சுஜா.
எபிசோட் முடியும் போது ஒரு சஸ்பென்ஸிற்கு விடை கிடைத்தது. வனிதா டீ பவுடரை திருப்பியனுப்பவில்லை. அங்கேயேதான் ஒளித்து வைத்திருந்தார். கோவம் இருக்கற இடத்துலதான் குணம் இருக்கும்னு சும்மாவா சொன்னாங்க?!
****
ஒரு மணி நேரம் தொகுக்கப்பட்ட எபிசோடை, சுருக்கமாக எழுத முயன்ற போதே இந்தக் கட்டுரை 2000 வார்த்தைகளுக்கு மேல் சென்றுவிட்டது. முழு நாள் நிகழ்வையும் எழுதினால், என் கதி என்னவாகும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். வாசிக்கப் போகும் உங்கள் கதி என்னவாகும் என்பதை யோசித்தால் எனக்கே கலவரமாக இருக்கிறது.