சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

பாக்கியலட்சுமி ஃபேமிலி தீபாவளி!

பாக்கியலட்சுமி சீரியல் டீம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாக்கியலட்சுமி சீரியல் டீம்

`கேரக்டராகவே வாழுறோம்'னு சொல்லுவாங்களே, அதை அன்னைக்குத்தான் நேர்ல பார்த்தேன்... என்னா அடி!

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

சொன்னால் நம்பமாட்டீர்கள்... இந்த தீபாவளி மாதம் முழுக்க ஒவ்வொரு வீட்டிலும் பாக்யாவைப் பற்றித்தான் பேச்சு.

தீபாவளி ஸ்நாக்ஸைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, பாக்யாவைப் பார்க்கக் கிளம்பிவிட்டேன்... சஸ்பென்ஸை உடைத்து விடுகிறேன். நீங்கள் விஜய் டி.வி பார்ப்பவர் என்றால் உங்களுக்கு பாக்யாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை!

`யார்றா இந்த பாக்யா, எனக்கே பாக்கணும் போல இருக்கே' என்கிறீர்களா? வெயிட் ப்ளீஸ்!

``ஹாய் வித்யா... ஹேப்பி தீபாவளி!'' என்று மத்தாப்புச் சிரிப்போடு என்னைக் கட்டிப் பிடித்து வரவேற்றார் பாக்யா.

``ஏற்கெனவே கோபியை வெளியே துரத்திட்டு சுயமரியாதை அது இதுன்னு பாக்யா தேவையில்லாத வேலை பார்த்துட்டு இருக்கா. அதுல நீங்க வேற பேப்பரையும், பேனாவையும் தூக்கிட்டு வந்துட்டீங்களா?'' என்று ஈஸ்வரியம்மா கோபத்துடன் என்ட்ரி கொடுத்தார். பாக்யாவுக்கு மட்டுமில்லைங்க, நமக்கும் மாமியார் மாதிரி...

பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் இந்தக் களேபரம். இனி ஓவர் டு பாக்யா!

சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சீரியல் மோடில் பேச ஆரம்பித்தவரிடம், ``ஏன் புருவத்தை உயர்த்துறீங்க... கேஷுவலா கேக் சாப்பிட்டுட்டே பாக்யாவாக இருக்கும் சுசித்ரா பற்றிப் பேசலாமா?'' என்றேன்.

``நிஜத்துல உங்க கேரக்டருக்கும், ஒரு ரிப்போர்ட்டரா உங்க கேரக்டருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்தானே... அப்படித்தான் எனக்கும்! என் நிஜ கேரக்டர் என்னன்னு என்கூட பழகினவங்க கிட்டதான் நீங்க கேட்கணும். அதுக்கு எப்படி நான் பதில் சொல்ல முடியும்'' என பாக்யாவாகவே சட்டென உருமாறினார்.

பாக்கியலட்சுமி ஃபேமிலி தீபாவளி!

`கேரக்டராகவே வாழுறோம்'னு சொல்லுவாங்களே, அதை அன்னைக்குத்தான் நேர்ல பார்த்தேன்... என்னா அடி!

``ஜோக்ஸ் அபார்ட். சீரியஸாகப் பேசலாமா'' எனக் கோரிக்கை வைத்தேன். சரியெனத் தலையசைத்தவாறு தமிழை ஆங்கிலம் கலந்து ராஷ்மிகா மாதிரி பேசத் தொடங்கினார்.

``என் சொந்த ஊர் பெங்களூரு. ஷூட்டிங்கிற்காக அங்கிருந்து வந்துட்டுப் போறேன். இதுக்கு முன்னாடி ரெண்டு தமிழ்ப் படங்களில் நடிச்சிருக்கேன். எப்படியோ `பாக்கியலட்சுமி' சீரியலில் என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. இப்படியான ஒரு கேரக்டர் கொடுத்ததுக்கு இந்த சீரியல் குடும்பத்துக்கும், ஸ்டார் விஜய் சேனலுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்'' என்றவரிடம், ``சீரியலில் ஸ்ட்ரிக்ட்டான அம்மாவா இருக்கீங்க. நிஜத்தில் நீங்க எப்படி'’ என்றேன்.

``நான் என் பொண்ணுகிட்ட `எப்பவும் நீ நீயாக இரு'ன்னு சொல்லுவேன். அவகிட்ட எதையுமே நான் இதுவரை திணிச்சதில்லை. சீரியலில் என் பொண்ணா நடிக்கிற இனியாவை சொந்தப் பொண்ணு மாதிரிதான் ட்ரீட் பண்ணுவேன். அவகிட்ட பேசும்போது அவ நிஜமாவே என் பொண்ணுங்கற நினைப்புதான் எனக்கு இருக்கும்'' என அம்மா சென்டிமென்ட் காட்சிக்கு நகர்த்திச் சென்றவரை ``உங்களுடைய தீபாவளிக் கொண்டாட்டம் எப்படி இருக்கும்’' என ரூட்டை மாத்தினேன். `ஆகமொத்தம் என்னைப் பேசவே விடமாட்டீங்க, அப்படித்தானே' என அவர் நினைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை!

``நம்ம வீட்டுல ரெண்டு நாள் தீபாவளி செலிபரேட் பண்ணுவோம். ஃபர்ஸ்ட், நரகாசுரனை சம்ஹாரம் பண்றது. நெக்ஸ்ட், பலி சக்கரவர்த்தி. ரெண்டையும் கிராண்டா கொண்டாடுவோம். அன்னைக்கு வீடு முழுக்கவும் விளக்கேத்தி வச்சு, லைட்ஸ் எல்லாம் பளிச்சென எரியும்'' என அவர் முடிக்கவும் டீ கப்புடன் செல்வி அக்கா என்ட்ரி கொடுத்தார்.

பாக்கியலட்சுமி ஃபேமிலி தீபாவளி!

``இந்த அக்கா இப்படித்தான் சொந்தக் கதை பேச ஆரம்பிச்சா அதுல மூழ்கிப்போயிரும். அக்காவ்வ்வ்வ், நானும் கொஞ்ச நேரம் பேசிக்கிறேன்'' என அவருக்கே உரித்தான கம்பீரக் குரலில் பேசத் தொடங்கினார். இவருடைய உண்மையான பெயர் மீனாவாக இருந்தாலும் பாக்கியலட்சுமி செல்வியாத்தானே நமக்கு இவரைத் தெரியும்... சரி, வாங்க! டீயைக் குடிச்சிக்கிட்டே அக்கா கதையைக் கேட்போம்.

``நான் ஊர்ல எல்.ஐ.சி ஏஜென்ட்டா இருந்தேன். அப்பவே எங்க ஊர்ல முதன்முதலா பைக் ஓட்டின பொண்ணு நான்தான்னா பாத்துக்கோங்களேன் (அக்காவுக்குள்ள இம்புட்டுத் திறமையா!). அந்தச் சமயம் பாரதிராஜா சார் `தெக்கத்திப் பொண்ணு'ன்னு ஒரு சீரியலை எங்க ஊருல எடுத்தாரு. அப்ப உள்ளூர் ஆளுங்கள நடிக்க வைக்கறதுக்குத் தேடிட்டு இருந்திருக்கார்னு கேள்விப்பட்டு ஒருத்தங்க மூலமா ஆடிஷனுக்குப் போனேன். பாரதிராஜா சார் முன்னாடி அவர் சொன்ன டயலாக்கைச் சொல்லிக் காட்டவும் உடனே ஓகே பண்ணிட்டாங்க. அப்படித்தான் மீடியாவுக்குள் என்ட்ரியானேன்'' என சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்தவரை மறித்து, ``ஹே, ஒரு நிமிஷம். நான் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்'' என்றவாறு சுசித்ரா தொடர்ந்தார்.

``ஒரு படத்திலாவது விஜய் சாருக்கு அம்மாவாக நடிச்சிடணும்... அது போதுங்க எனக்கு!'' என்று சுசித்ரா பரவசமாகச் சொல்ல, மீனாவும் அதே ட்ராக்கில் போனார். ``அக்கா, இப்பத்தான் எனக்கும் ஞாபகம் வருது. நான் ஒரு படத்துலயாச்சும் தனுஷ் சாருக்கு அம்மாவாக நடிச்சிடணும்'' என்றார். (டைரக்டர்ஸ்ஸ்ஸ், ப்ளீஸ் நோட் திஸ் பாயின்ட்!)

``சரிக்கா, ஐ கண்டின்யூ... யூ கோ'' என சுசித்ராவை அனுப்பிவிட்டு மீனா தொடர்ந்தார்.

''நிஜத்துல நானும் பாக்யா அக்கா மாதிரிதான். என்ன ஒண்ணு, எனக்கு கணவர் இல்லை. அதுதான் வித்தியாசம்! மத்தபடி, என் ரெண்டு பசங்களையும் வளர்த்து ஆளாக்க ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன். இந்த கோபி மாதிரியான கேரக்டர்ஸ் சில வீடுகளில் இருக்கத்தானே செய்யுறாங்க. சில பொண்ணுங்க அத சகிச்சுட்டு வாழுறாங்க. சிலர் உதறிட்டு வர்றாங்க!

பாக்கியலட்சுமி ஃபேமிலி தீபாவளி!

என் பசங்களுக்குக் கல்யாணம் ஆகி நாங்க குடும்பத்தோடு சென்னையிலேயே செட்டில் ஆகிட்டோம். என் ரெண்டு மருமகள்களுமே எனக்கு மகள்கள் மாதிரிதான். ஷூட்டிங் இல்லாதப்ப என்னைக் கூட்டிட்டு எங்கேயாச்சும் போகாம அவங்களால இருக்கவே முடியாதுன்னா பாத்துக்கோங்களேன்! எங்க வீட்ல எந்தப் பண்டிகைன்னாலும் நாங்க ஊர்லதான் கொண்டாடுவோம். அதனால இந்த தீபாவளியையும் ஊருல எங்க சொந்தபந்தத்தோட கொண்டாட பிளான் பண்ணியிருக்கேன்'' என்று சீரியஸாகப் பேச ஆரம்பித்தவரிடம், ``அக்கா, உங்க முகத்துக்கு சீரியஸ் செட் ஆகல. வழக்கம்போல நாம காமெடி டிராக்கிலேயே போயிடுவோம்''னு சொல்லவும், சிரிக்கிறார்.

``அக்காவ்வ்வ், இந்தப் பொண்ணு என்னை சீரியஸாவே நினைக்குதுக்கா. ஏம்பா, நான் இப்ப கலகலன்னு சிரிச்சிட்டுதானே உன்கிட்ட பேசுறேன். எனக்கு சீரியஸெல்லாம் செட்டாகாது'' என்று சொல்லிவிட்டு, ``உன்கிட்ட ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா?''ன்னு ஹஸ்கி வாய்ஸில் கேட்டார். புருவம் உயர்த்தி `என்னவா இருக்கும்' என்கிற குழப்பத்தோடே ``ம்'' கொட்டினேன்.

``ஆரம்பத்தில் இந்த சீரியலில் என் கேரக்டருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கல. போகப் போக என் பர்ஃபாமன்ஸ் பார்த்துட்டு, நான் நல்லா பண்றேன், இப்படியான ஒரு கேரக்டர் டிராவல் பண்ணினா நல்லா இருக்கும்னு அப்புறமாகத்தான் என் கேரக்டரை டெவலப் பண்ணியிருக்காங்க'' என்ற ரகசியத்தைப் போட்டுடைத்தார்.

அந்நேரம், நாம் திரையில் பார்க்கும் அதே சிடுமூஞ்சியுடன் பாக்கியலட்சுமி வீட்டிற்குள் என்ட்ரியானார், கோபி.

பாக்கியலட்சுமி ஃபேமிலி தீபாவளி!

``ஏய் பாக்யா, உனக்கு வேற வேலையே இல்லையா! ஒண்ணு, சொந்தக் காலில் நிற்கப் போறேன்னு சீன் போடுற. இல்லைன்னா மீடியாவைக் கூப்பிட்டு வந்து பேட்டி கொடுக்குற'' என வழக்கமான டயலாக்கை அவிழ்த்து விட்டார்.

``ஐயோ சார், நான் கோபியா நடிக்கிற சதீஷைப் பேட்டி எடுக்க வந்திருக்கேன்''னு சொல்லவும், அந்நியனாகவே மாறின கோபியைப் பார்த்தேன் (என்னா நடிப்புடா சாமி!). அவ்வளவு எதார்த்தமாய் சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்றார்.

``விகடன் வாசகர்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துகள். எனக்குத்தான் அடுத்த ஷாட். நான் டயலாக் பேப்பரைப் பார்க்க வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஸாரி... நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம்'' என்று பரபரத்தவர், ``பாக்யா, நீ பேட்டி கொடு'' என்று பெருந்தன்மையோடு சொன்னார்.

``கோபியைப் பற்றி பாக்யாவுக்கு நல்லாவே தெரியுங்க. கோபிக்குத்தான் பாக்யாவைத் தெரியாது. நீங்க ராதிகா வீட்டுக்கு வந்திருந்தா நாங்க ஜோடியா பேட்டி கொடுத்திருப்போம். சரி விடுங்க! இன்னொரு நாள் பார்ப்போம்'' என்ற கோபிக்கு பை பை சொல்லி வழியனுப்பிவிட்டு, வீட்டுக்கு மூத்தவர் ராமமூர்த்தி ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்த ரூம் கதவைத் தட்டினோம்.

``ஏய் கோபி, உன்னைத்தான் வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேனே'' எனக் கோபமானார். வழக்கம் போல நம்மை அறிமுகப்படுத்த, சாந்தமானார்.

பாக்கியலட்சுமி ஃபேமிலி தீபாவளி!

``S.T.P ரோசரியாக பல படங்களில் என்னைப் பார்த்துப் பாராட்டியிருக்கீங்க. ஆனா, வாத்தியார் ராமமூர்த்தியா என்னைப் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நடிப்புங்கிறது ஒரு கலை. அதை ரசிச்சுப் பண்றவனுக்கு அது என்னைக்குமே வேலையாவோ, சுமையாவோ தெரியாது. பாக்கியலட்சுமி சீரியலில் நான் அந்தக் கதாபாத்திரமாகவே வாழுறதுதான் இந்த வெற்றிக்குக் காரணம். எங்க வீட்ல தீபாவளிப் பண்டிகையைப் பெருசா கொண்டாட மாட்டோம் என்றாலும், இந்த முறை பாக்கியலட்சுமி குடும்ப உறவுகளுடன் தீபாவளி கொண்டாட பிளான் பண்ணியிருக்கேன்'' என்றார். வரிசையாக எழில், செழியன், இனியா, ஜெனி எல்லோரும் வர... பிறகென்ன, ஒரு ஃபேமிலி போட்டோ எடுத்துவிட்டு தீபாவளி வாழ்த்துகள் கூறி விட்டு நடையைக் கட்டினேன்.