Published:Updated:

``நிறம்தான் உங்களுக்கு முக்கியமா?'' - `செம்பருத்தி' புகழ் மித்ரா ஷேரிங்க்ஸ்

``எனக்கு அந்த கமென்ட்ஸைப் பார்க்கிறப்போ கஷ்டமா இருக்கும். என் அம்மா, ஃப்ரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லி அழுதேன்."

பாரதா
பாரதா ( செம்பருத்தி )

ஜீ தமிழின் `செம்பருத்தி' சீரியல் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு தொடர். தற்போது, இந்த சீரியல் வெற்றிகரமாக 500 எபிசோடுகளைக் கடந்துவிட்டது. சீரியலில் பயங்கரமாக வில்லத்தனம் செய்யும் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பாரதாவைச் சந்தித்துப் பேசினோம்.

பாரதா
பாரதா
செம்பருத்தி

எப்போதுமே கோபம், அழுகை, தவிப்பு என சீரியலில் ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தும் பாரதா, நேரில் நேரெதிராக இருக்கிறார். கலகலப்பாக நம்மிடம் சீரியல் என்ட்ரி குறித்தும், சின்னத்திரை அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

``சின்னத்திரைக்கு வந்தது எப்படி?"

``என்னோட பூர்வீகம் ஹைதராபாத். ஃபேஷன் டெக்னாலஜி படிச்சிருக்கேன். நடிப்புமேல ரொம்ப ஆர்வம். மாடலிங் பண்ணிக்கிட்டிருந்தப்போ, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. ஆனா, அந்த வாய்ப்பு சுலபமா வரல. ரொம்பக் கஷ்டப்பட்டுட்டேன். நிறைய அவமானங்கள். எல்லாத்தையும் தாண்டி சில திரைப்படங்களில் நடிச்சேன். ஆனால், எதிர்பார்த்த அளவுக்குப் பேர் வாங்கிக் கொடுக்கல. வாய்ப்பும் இல்லை. பிறகு, விஜய் டிவி-யின் `ஜோடி' நிகழ்ச்சியில் ஆடினேன். அப்புறம்தான், `செம்பருத்தி' சீரியல் வாய்ப்பு வந்தது.

பாரதா நாயுடு
பாரதா நாயுடு
செம்பருத்தி

``எந்த மாதிரியான அவமானங்களைச் சந்திச்சீங்க?"

``என்னனு சொல்றதுங்க. நிறையா ஆடிஷன் போனேன். ஒரே டேக்ல கொடுத்த வசனத்தைப் பேசிடுவேன். தேர்வு பண்ணிடுவாங்கனு நம்புவேன். ஆனா, எந்த அழைப்பும் வராது. சில இடங்களில் நீங்க செலக்ட் ஆகிட்டீங்கனு சொல்லிட்டு, கடைசி நேரத்துல `ஸாரிங்க... எங்க தயாரிப்பாளர் வேணாம்னு சொல்லிட்டாரு'னு சொல்லிடுவாங்க. சிலர் நேரடியாவே `நீங்க கலர் கம்மியா இருக்கீங்க', `உயரமா இருக்கீங்க' அப்படி இப்படின்னு குறைசொல்லிக் கஷ்டப்படுத்துவாங்க. நான் ரொம்ப மனசு உடைஞ்சு அழுவேன். நிறம்தான் ஒருத்தரோட திறமையைத் தீர்மானிக்குமா, என்ன நியாயம் இது?! டஸ்கி கலர்ல இருக்கிறவங்க, கறுப்பா இருக்கிற பெண்கள்லாம் நடிப்புத் துறைக்குள்ளே நுழையவே முடியாதானு ரொம்ப ஆதங்கமா இருக்கும். கிராமத்துப் பெண்கள் கதாபாத்திரத்துக்குக்கூட தமன்னா, நயன்தாரா மாதியான நடிகைகளைத் தேர்வு பண்றாங்க. ஏன் இந்தப் பாகுபாடு. அழகு இதுதான்னு எப்படி ஒரு முடிவுக்கு வர முடியுது. இப்படி நிறைய கேள்விகள் எனக்குள்ளே இருக்கு. ஒருகட்டத்தில் இதுதான் ரியாலிட்டி, நம்மளால எதுவும் செய் முடியாதுனு கடந்து வந்துட்டேன். இப்போ, என் திறமைக்குக் கிடைச்ச பரிசாதான் `செம்பருத்தி' சீரியல் வாய்ப்பைப் பார்க்கிறேன். இந்த சீரியலுக்குப் பிறகு இப்போ எனக்கு நிறைய சினிமா வாய்ப்பு வருது. என்னை வேணாம்னு நிராகரிச்சவங்களே போன் பண்ணி எங்க படத்துல நடிக்கிறீங்களானு கேட்குறாங்க. சந்தோஷமா இருக்கு.

"முதல் இரண்டு வாரங்கள் ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் கமென்ட்ஸ். ஏன் தேவையில்லாம மித்ரா கேரக்டரைக் கொண்டு வந்தீங்கனு திட்டித் தீர்த்தாங்க."
பாரதா

``நெகட்டிவ் ரோலுக்கு எப்படி ஓகே சொன்னீங்க?"

``முதலில் ரொம்ப யோசிச்சேன். நான் இதுவரை நெகட்டிவ் ரோல் பண்ணதில்லை. சரி, இது நமக்கு ஒரு சவால். நம்மளை நிரூபிக்க ஒரு வாய்ப்புனு நினைச்சு ஒப்புக்கிட்டேன். முதல் இரண்டு வாரங்கள் ரசிகர்களிடமிருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் கமென்ட்ஸ். ஏன் தேவையில்லாம மித்ரா கேரக்டரைக் கொண்டு வந்தீங்கனு திட்டித் தீர்த்தாங்க. எனக்கு அந்தக் கமென்ட்ஸை எல்லாம் பார்க்கும்போது கஷ்டமா இருக்கும். அம்மா, ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அழுதேன். ஆனா, இப்போ எல்லாமே மாறிடுச்சு. பொது இடங்களில் மக்கள் என்னைப் பார்த்து ஓடி வந்து பேசுறாங்க. `நீ கவலைப்படாத கண்ணு; ஆதியை உன்கூட சேர்த்து வைக்கிறேன்'னு எல்லாம் சொல்றாங்க. `பார்வதியை மட்டும் கொஞ்சம் பார்த்துச் செய். ரொம்பக் கொடுமைப்படுத்திடாத'னு கோரிக்கை வைக்கிறாங்க."

``சீரியலில் உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?"

``எனக்கு ஆதி கேரக்டரில் நடிக்கும் கார்த்தியை ரொம்பப் பிடிக்கும். `ஆபீஸ்' சீரியலில் இருந்தே அவரை ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கல. இதுவரை இந்த விஷயம் அவருக்கே தெரியாது. உங்ககிட்டதான் முதன்முதலா சொல்றேன். சீரியல் நடிகைகள்ல, என்னைத்தான் எனக்குப் பிடிக்கும்."

`` `ஜோடி' நிகழ்ச்சியின்போது விஜய் டிவி-க்கும், உங்களுக்கும் ஏதோ பிரச்னை வந்ததா ஒரு பேச்சு இருக்கே?"

``அப்படியெல்லாம் எதுவும் இல்லீங்க. ஏன் அப்படியொரு வதந்தியைக் கிளப்புனாங்கனு தெரியல. சொல்லப்போனா, எனக்கு முதன்முதலா வாய்ப்பு கொடுத்ததே விஜய் டிவிதான்!"

பாரதா
பாரதா

``சினிமா வாய்ப்புகள் வருதா, உங்க ட்ரீம் ரோல் எது?"

``நான் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போல்லாம் என்னை நிராகரிச்சவங்க, இன்னைக்கு அவங்களா வந்து வாய்ப்பு கொடுக்குறாங்க. நான் இப்போ கொஞ்சம் பிஸி. இரவு பகல் பார்க்காம ஷூட்டிங் போறேன். ஷீட்டிங்ல தொடர்ந்து நின்னுக்கிட்டே இருந்து, கால் வீங்கிடுச்சி. கால் கட்டு போட்டுக்கிட்டுதான் நடிக்கிறேன். அந்தளவுக்கு பிஸியா போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை. `செம்பருத்தி'யில் என்னை நம்பி ஒரு முக்கியமான ரோல் கொடுத்திருக்காங்க. அதை நான் முதல்ல காப்பாத்தணும். என் ட்ரீம் ரோல் எப்போவுமே கிராமத்துப் பொண்ணுதான். கிராமத்துப் பொண்ணா நடிக்கச் சொன்னா, உடனே ஓகே சொல்லிடுவேன்."

"நான் வில்லி கேரக்டரில் நடிக்கிறதால, சொந்தக்காரங்க சிலபேர் என்னை வேணாம்னு சொல்லிட்டதா கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்துச்சு."
பாரதா

``கல்யாணம் எப்போ?"

``மாப்பிள்ளை பார்த்துக்கிட்டே இருக்காங்க. காதல்மேல ஆர்வம் இல்ல. அம்மா பார்க்கிற பையனைக் கல்யாணம் பண்ணிப்பேன். நான் வில்லி கேரக்டரில் நடிக்கிறதால, சொந்தக்காரங்க சிலபேர் என்னை வேணாம்னு சொல்லிட்டதா கேள்விப்பட்டேன். அதைக் கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. சீரியல் வேற; நிஜ வாழ்க்கை வேற. இந்தச் சின்ன விஷயத்தைக்கூட சிலரால புரிஞ்சிக்க முடியல பாருங்களேன்."

``ரீசன்ட் க்ரஷ் யாரு?"

``எனக்கு விஜய் தேவரகொண்டா ரொம்பப் பிடிக்கும். அவர்மேலதான் க்ரஷ். அவர்கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கணும்."