சினிமா
Published:Updated:

“எல்லாப் புகழும் மீம் கிரியேட்டர்ஸுக்கே!”

ரோஷினி ஹரிப்ரியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரோஷினி ஹரிப்ரியன்

பொதுவா தமிழ் சீரியல்களுக்கு கேரளா, பெங்களூருல இருந்துதானே ஹீரோயின் கிடைப்பாங்க, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை.

``சில படங்களில் ஒரே பாட்டுல எல்லாமே தலைகீழா மாறும் பாருங்க, அப்படியொரு மாற்றம் என் வாழ்க்கையிலும் நடந்திடுச்சு. இது நிஜமா அல்லது கனவாங்கிற குழப்பம் இன்னுமே இருக்கு. எல்லாப் புகழும் மீம் கிரியேட்டர்களுக்கே...’’ உற்சாகமாக ஆரம்பித்தார் ரோஷினி ஹரிப்ரியன். தமிழ் சீரியல் ஏரியாவின் புது வரவு. `பாரதி கண்ணம்மா’ தொடரின் ஹீரோயின். சீரியல் ரசிகர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கண்ணம்மா.

``அறிமுகமான முதல் சீரியல்லயே அதுவும் வாரக்கணக்குல... இல்லல்ல, எபிசோடு கணக்குல நடக்க வெச்சே பேரும் புகழும் கிடைக்க வெச்சுட்டாங்க. அந்தக் கதைக்குப் போறதுக்கு முன்னாடி நிஜ வாழ்க்கையில் நான் நடந்து வந்ததைச் சொல்லிடட்டுமா?

பொதுவா தமிழ் சீரியல்களுக்கு கேரளா, பெங்களூருல இருந்துதானே ஹீரோயின் கிடைப்பாங்க, நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னை. மதுரவாயல் பொண்ணு நான். அப்பா இன்ஜினீயர். அம்மா ஹவுஸ் வைப், ஒரு அக்கா, நான்னு அளவான குடும்பம் எங்களுடையது.

ரோஷினி ஹரிப்ரியன்
ரோஷினி ஹரிப்ரியன்

எம்.பி.ஏ முடிச்சுட்டு இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் செக்டார்ல வேலைக்குப் போயிட்டி ருந்தேன். ஆனா ஏனோ தெரியல, சம்பளம் நிறைய கிடைச்சபோதும், அந்த வேலையில மனசு முழுசா ஈடுபடலை. சம்பாதிக்க மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிற டைப் இல்லை. அதான் உடனே அந்த வேலையை விட்டுட்டேன். வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா? பிசினஸ் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கோமேன்னு வீட்டுல இருந்தபடியே கைவினைப் பொருள்கள் செஞ்சு தெரிஞ்சவங்ககிட்ட வித்துட்டிருந்தேன். அப்ப நான் தயாரிக்கிற பொருள்களைப் பார்வைக்கு வைக்கிறதுக்காக நானே போட்டோ எடுப்பேன்.

ஒருநாள் ‘நீகூட அழகாதானே இருக்க’ன்னு மனசுக்குள் எங்கோ எக்கோ. கேமராவைக் கொஞ்சம் என் பக்கம் திருப்பினேன். இன்னைக்குக் கிடைச்சிருக்கிற லைம்லைட்டுக்கு சுவிட்ச் அங்க போட்டதுதான்.

என்னுடைய போட்டோக்கள் பார்த்து மாடலிங் வாய்ப்புகள் வந்திச்சு. அதுல கொஞ்ச நாள் போயிட்டிருந்தப்பதான், ‘மாநிறமான ஒரு பொண்ணு லீடு ரோல்ல பண்ணுற கதை இருக்கு. நீங்க சரியா இருப்பீங்க’ன்னு ‘பாரதி கண்ணம்மா’ டைரக்டர் பிரவீன் பென்னட் சார் கூப்பிட, அப்படித்தான் இந்த சீரியலுக்குள் வந்தேன். நடிப்புன்னு பார்த்தா இதுதான் முதல் வாய்ப்பு’’ என்றவர், தனக்குப் பேரும் புகழும் வாங்கித்தந்த ‘மீம்ஸ்’ மேட்டருக்கு வருகிறார்..

‘`பாரதி கண்ணம்மா கதை வழக்கமான `நல்ல மருமகள்’ கதைதான். அந்த நல்ல மருமகளும் நானே. மாமியார் வீட்டுல எனக்கு முழு சப்போர்ட். ஆனா புருஷன் ஒரு இடத்துல என்னைச் சந்தேகப்படுவார். அப்பதானே ட்விஸ்ட் இருக்கும்! எவ்வளவுதான் அப்பாவியா இருந்தாலும், புருஷன்கிட்ட இருந்து கேக்கக்கூடாத வார்த்தைகளைக் கேட்டா வெடிச்சிட மாட்டாளா? அப்படி வெடிச்சு வீட்டை விட்டு வெளியேறுகிற காட்சி வரும். அந்த ட்ரான்ஸ்பர்மேஷனை சீரியல் ரசிகர்கள் பொதுவா ரசிப்பாங்கதானே?

வீட்டை விட்டு வெளியேறியாச்சு. சரி நேரா அம்மா வீட்டுக்கோ அல்லது பிரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிடணும்தானே? ஆனா அப்படி நடக்கலை. அடுத்த ரெண்டு நாள் வேற ட்ராக்ல பிசியாகிட்ட யூனிட், என்னை அப்படியே ரோட்டு வழியே நடக்க விட்டுட்டாங்க மூணாவது நாள் எங்காச்சும் அடைக்கலம் தந்துடலாம்னு டைரக்டர்கூட நினைச்சிருப்பார் போல. ஆனா சரியா அன்னைக்குத்தான் ஒரு மீம் கிரியேட்டர் கண்ணுல நான் பட்டிருக்கேன்.

‘இந்தப் புள்ளய இன்னும் எவ்வளவு தூரம்யா நடக்க விடுவீங்க’ன்னு வடிவேலுவையும் துணைக்குக் கூப்பிட்டு ஒரு மீம் போட்டார் அந்தப் புண்ணியவான்.அந்த மீம் அப்படியே ஷேர் ஆக, அப்படியே தமிழ்நாடு மேப், இந்தியா மேப், உலக மேப் எல்லாத்தையும் வச்சு நாடு கடந்து, கடல் கடந்து நடந்துட்டே இருக்கிற மாதிரி தினமும் மீம் போடத் தொடங்கிட்டாங்க.

எல்லாத்துக்கும் உச்சமா ஒருத்தர், ’ஆம்ஸ்ட்ராங், ஆல்டரினுக்கு அடுத்து மூணாவதா மூனுக்குப் போன ஆள் நம்ம கண்ணம்மாடா’ன்னு, என்னை நிலவுல நடக்க விட்டு, என் கண்ணுல தண்ணி வரவச்சிட்டார். ‘ரசிகர்கள் கொண்டாடு றாங்களே’ன்னு சீரியல்லயும் அடுத்த பத்து நாளைக்கு ‘நடங்க’ன்னே விட்டுட்டாங்க.

இப்ப பார்க்கிற ரசிகர்கள் செல்ஃபி எடுக்கறப்பக்கூட ‘நடந்தாப்ல ஒரு செல்ஃபி ப்ளீஸ்’னு கேட்கறாங்க. ‘எல்லாப் புகழும் மீம் கிரியேட்டர்களுக்கே’ன்னு நான் சொன்னதுக்கு இப்ப அர்த்தம் புரிஞ்சிடுச்சா’ எனச் சிரிக்கிறார்.

’அப்படியே டி.ஆர்.பி-யில நம்பர் ஒன் வந்த சந்தோஷத்தையும் பகிர்ந்துக்கலாமே’ என்றேன்.

‘அதை விடுவேனா? மீம்ஸ் தெறிக்கத் தொடங்கினப்பவே இப்படி ஏதாச்சும் ஒரு அதிசயம் நடக்கும்னு என் உள்மனசு சொல்லுச்சு. நான் நினைச்சபடியே அந்த நாளும் வந்தது. சேனல் வரலாற்றுலயே ரேட்டிங்ல நம்பர் ஒன் வந்தது இப்பத் தானாம். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருந்தது தெரியுமா? அதுவும் கேமரா முன்னாடி நிக்கவே தெரியாம சீரியலுக்கு வந்த எனக்கு முதல் சீரியல்லயே இப்படி யொரு அங்கீகாரம், அன்னைக்கு நான் சந்தோஷத்துல தூங்கவே இல்லை. `மாசாமாசம் சம்பளம் வாங்கிட்டிருந்த வேலையை விட்டுட்டியே’ன்னு வருத்தப் பட்ட வீட்டுல, அக்கம்பக்கத்துல முகம் தெரியாதவங்க சமூக ஊடகங்கள் மூலமான்னு வாழ்த்து மழை பொழிஞ்சுட்டாங்க.”

நல்லா நடங்க, ஸாரி, நல்லா இருங்க!