Election bannerElection banner
Published:Updated:

Bhima jewellery விளம்பரமும், சமூக மாற்றமும்... உண்மையான அன்பு என்பது அப்படியே ஏற்றுக் கொள்வதுதானே!

#bhimajewellery விளம்பரம்
#bhimajewellery விளம்பரம்

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கை, திருநம்பி என்று பெயரிட்டு அழைக்க வேண்டும் என சட்டம் இயற்றி 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவர்களின் உணர்வுகள் பற்றி சரியான புரிதல் இங்கே இல்லை.

சமீபத்தில் வெளி வந்திருக்கும் நகைக்கடை விளம்பரம் ஒன்று கண்டதும் மகிழ்ச்சியில் #Wow என சொல்ல வைத்தது. அதே சமயம் நெகழ்ச்சியில் கண்ணீரையும் வரவழைத்துவிட்டது.

14, 36, 60 வயதுடைய மூன்று தலைமுறை பெண்களிடமும் அந்த விளம்பரத்தைக் காட்டி அதைப்பற்றி பேச சொன்னபோது, மூவரும் சில நிமிடங்கள் பேசுவதற்கு தயங்கினார்கள். அவர்கள் மிக யோசித்து வார்த்தைகளை தேர்வு செய்து, “உடனிருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவது தூய்மையான அன்பு” என்று மட்டும் சொன்னார்கள். மேற்கொண்டு அந்த விளம்பரத்தை விளக்கமாகப் பேச அவர்களுக்கு மனத்தடை இருந்தது. அதற்குப் பிறகுதான் இந்த விளம்பரம் தற்சமயம் எத்துணை அவசியமானது என்று புரிந்தது. அது கடந்த வாரம் வெளிவந்த #BhimaJewellers நகைக்கடையின் விளம்பரம்.

பருவ வயதில் இருக்கும் ஒரு ஆண் தனக்குள் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருப்பதை உணர்கிறான். அதை புரிந்துகொண்டு அவனது குடும்பத்தினர் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இதுதான் விளம்பரம் சொல்லும் செய்தி. ஓரிரு வார்த்தைகள், வசனங்கள் ஏதுமில்லை. அன்பாலும் புன்னகையாலும் பேசிக்கொள்கிறார்கள். இதமான பின்னணி இசை மற்றும் அழகான காட்சி அமைப்பை கொண்டு 1.40 நிமிட காணொளி மூலம் சமூக மாற்றத்திற்கான ஒரு குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

#bhimajewellery விளம்பரம்
#bhimajewellery விளம்பரம்

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களை திருநங்கை, திருநம்பி என்று பெயரிட்டு அழைக்க வேண்டும் என சட்டம் இயற்றி 15 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அவர்களின் உணர்வுகள் பற்றி சரியான புரிதல் இங்கே இல்லை. ஒருவர் பிறப்பால் எந்த பாலினமாக இருந்தாலும் எதிர் பாலினமாக உள்ளுக்குள் உணர்ந்து மாறிக்கொள்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அவ்வாறு மாறிக் கொள்பவர்களை சமூகமும், குடும்பமும் முழுதாக ஏற்றுக் கொள்வது இல்லை.

ஒருவர் திருநர் ஆகும்போது அவரது குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு திருமணம் செய்யமுடியாது, சில மதங்கள் திருநர்களை ஏற்பதில்லை என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் அடிப்படையில் இந்த சமூக அமைப்பில் பெரும்பான்மை மக்களோடு பொருந்திப்போகும் வாழ்க்கைமுறை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒருவர் திருநங்கை அல்லது திருநம்பியாக மாறுவது காரண காரியத்திற்காக, பொய், நடிப்பு என்றெல்லாம் கூட சிலர் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

நம் சமூகத்தில் ஆணைக் குறிப்பிட்டு பெண்ணைப்போல (பொம்பள மாதிரி) எனும் உதாரணமே மிகவும் கீழாகப் பார்க்கும் எண்ணம் இருக்கிறது. அப்படியிருக்க ஆணாக பிறந்த ஒருவர் பெண்களைப்போல பேசவும், உடுத்தவும், நடந்து கொள்ளவும் ஆசைப்படும்போது அதனால் மிக மோசமான கேலிகளுக்கும், வசவுகளுக்கும் உள்ளாக வேண்டி இருக்கிறது. குடும்பம், நண்பர்கள் என யாராக இருந்தாலும் அவ்வாறு மாற ஆசைப்படுபவர்களை மனமுவந்து முழுவதுமாக ஏற்றுக்கொள்வது இல்லை.

தனிமனித சுதந்திரம் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது என்கிற புரிதலும் பலரிடையே இல்லை. மதம், சாதி, கலாசாரம், குடும்ப அமைப்பு என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் நிலைதான் இங்கு இருக்கிறது. அதிலும் திருநர்களின் வாழ்க்கை மிகவும் கொடுமை அவர்களை அவமானமாக நினைத்து வீட்டில் இருப்பவர்கள் வெளியேற்றி விடுகிறார்கள் அல்லது அவர்களாகவே வெளியேறும்படி நடந்து கொள்கிறார்கள். இன்று ஒரு சில குடும்பங்களில் திருநர்களை மீண்டும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் தொடங்கி இருக்கிறது. ஆனால் அதற்கு பல வருடங்கள் அவர்கள் காத்திருக்க வேண்டியதாகிறது. அந்த இடைப்பட்ட காலத்தில் சாதாரண வாழ்க்கை வாழவே திருநர்கள் உடலாலும் மனதாலும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது.

இப்படி இருக்கும் நம் சமூகத்தில் பெண்ணாக மாற விரும்பும் ஒரு இளைஞனுக்கு அவனது தந்தை கொலுசு வாங்கி கொடுக்கிறார், அக்கா உடன் அழைத்துப்போய் சேலை வாங்கித் தருகிறாள், அம்மா தலை வாரி விடுகிறார் என அந்த குடும்பமே அந்த திருநங்கைக்கு தரவாக துணை இருக்கிறது எனக்கூறும் ஒரு விளம்பரம் வருவது வரவேற்கத்தக்கது.

சிறுபான்மையினரை கண்டுகொள்ளாமல் பெரும்பான்மையினரை மட்டுமே நுகர்வோராக நினைத்து பொருட்களும், விளம்பரங்களும் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில், சிறுபான்மையினரை மனதில் கொண்டு சமூக அக்கறையுடன் சில விளம்பரங்கள் சமீபத்தில் வருவது நல்ல மாற்றம்.

#bhimajewellery விளம்பரம்
#bhimajewellery விளம்பரம்

அதேசமயம் சமூக அக்கறையின் பெயரில் மத நல்லிணக்க விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தாமல் பாலின சமன்பாட்டை மனதில்கொண்டு உருவாக்கியிருக்கும் இந்த விளம்பரம் சமூக மாற்றத்தில் இன்னொரு மைல்கல். பீமா ஜுவல்லர்ஸ் விளம்பரத்தை உருவாக்கிய குழுவிற்கு மிக்க அன்பு.

இந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு.

#SpecialMention : பொதுவாக திருநர்களை திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் காட்டும்போது ஒரு ஆணை திருநங்கையாக நடிக்க வைப்பது வழக்கம். இந்த விளம்பரத்தில் வியாபார நோக்கில் மட்டுமல்லாமல் எடுத்துக்கொண்ட கருவுக்கு நேர்மையாக மீரா சிங்ஹானியா #MeeraSinghania எனும் திருநங்கையை நடிக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு