Published:Updated:

"என்னை வெளியேத்திடுங்க பிக்பாஸ்!"- விஸ்வரூபம் எடுத்த சனம் vs சுரேஷ் சண்டை... பிக்பாஸ் – நாள் 17

பிக்பாஸ் – நாள் 17

தன்னுடைய அவமானமும் அந்தரங்க உணர்ச்சிகளும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையுடன் கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டு வெளியே வந்தார் சுரேஷ். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 17

Published:Updated:

"என்னை வெளியேத்திடுங்க பிக்பாஸ்!"- விஸ்வரூபம் எடுத்த சனம் vs சுரேஷ் சண்டை... பிக்பாஸ் – நாள் 17

தன்னுடைய அவமானமும் அந்தரங்க உணர்ச்சிகளும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையுடன் கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டு வெளியே வந்தார் சுரேஷ். பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 17

பிக்பாஸ் – நாள் 17
‘வினை விதைத்தவன் வினையறுப்பான்’, ‘விளையாட்டு வினையாகும்’ என்பது போன்ற பொன்மொழிக்களுக்கான உதாரணச் சம்பவம் இன்று நடைபெற்றது. சுரேஷ் விஷயத்தில் இவை உண்மையானது.

ஒரு திரைப்பட நகைச்சுவைக் காட்சியில், ‘வாடா... வாடா... என் ஏரியாவிற்கு வாடா’ என்று பில்டப் தரும் வடிவேலு, தன்னைத் தொடர்ந்து வரும் சுந்தர்.சியிடம் ஒரு கட்டத்தில் ‘கோ’வென்று அழுது ‘என்னை விட்ருப்பா’ என்று கதறுவதைப் போல் சுரேஷின் கதை ஆகி விட்டது. இன்னொரு பக்கம் அவரைப் பார்க்க பரிதாபமாகவும் இருந்தது.

‘ஒரு நாள் கலகலப்பு... மறுநாள் சலசலப்பு’ என்கிற ஃபார்முலாவை பிக்பாஸ் விடாமல் பின்பற்றுவது போல் தோன்றுகிறது. நேற்று கூத்தும் கும்மாளமுமாக இருந்த பிக்பாஸ் வீடு, இன்று சண்டையும் சச்சரவுமாக மாறி விட்டது.

என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17
நேற்று ரியோ உற்சாக பானம் கேட்டதாலோ என்னமோ ‘ஓப்பன் த டாஸ்க்குமாக்குமா’ என்கிற பாடலைப் போட்டு மக்களுக்கு ஆறுதல் அளித்தார் பிக்பாஸ். (எப்படி கனெக்ட் பண்ணேன் பார்த்தீங்களா?!)

‘நாடா இல்ல காடா’ டாஸ்க்கை இன்று அப்படியே மாற்றிப் போட்டார் பிக்பாஸ். நேற்று அரக்கர்களாக இருந்தவர்கள் இன்று ராஜ குடும்பத்தினராக இருப்பார்கள். இதனால் நிஷா, வேல்முருகன், ரம்யா ஆகியோர் எதிர் அணியிடம் சமாளித்தார்களா, சரிந்தார்களா என்பதை நம்மால் காண முடியவில்லை. குறிப்பாக இந்த டாஸ்க்கை நிஷா எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதைக் காண ஆவலாக இருந்தேன். போச்சு...

‘தொடத்தான் கூடாது... அவங்க ஐம்புலன்ஸ்ல ஒண்ணை மட்டும் விட்டுட்டு மத்ததை அட்டாக் பண்ணோம்னா... அவங்களை நேரா ஆம்புலன்ஸ்ல அனுப்பிடலாம்’ – யாரடா... இது இப்படி ரணக்கொடூர ஐடியாவைத் தருகிறார்கள் என்று பார்த்தால்... அட நம்ம ரம்யா. சிரித்துக் கொண்டே கொலைபாதக யோசனைகளை அள்ளி விட்டுக் கொண்டேயிருந்தார்.

ராஜமாதா சிவகாமி போன்ற அதிரடி தோரணையுடன் அரச குடும்பத்திலிருந்து முதலில் வெளியே வந்தவர் அர்ச்சனா. எதிரணியினர் எத்தனை அலப்பறைகளைத் தந்தாலும் சகித்துக் கொண்டு ‘கிரிப்பாக’ நின்று சாதித்தார்.

அவ்வப்போது கேமராவில் எட்டிப் பார்த்து, "அய்யகோ... நான் இதை எப்படி சகித்துக் கொள்வேன்?!” என்று உருக்கமாகப் பேசுவது போல் பேசி கொடுமையான டிராமா செய்தார் சுரேஷ். "ஃபவுல் கேம் ஆடி எதிரணியினர் வெற்றி பெறப் பார்க்கிறார்கள்” என்று ஆங்கிலமும் தமிழுமாக கலந்து அடித்தார் ‘தமிழ்’ அருவி இளவரசியான ‘அனிதா’.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

‘எதிரணியினர் பல சூழ்ச்சிகளைச் செய்தார்கள். அதையும் மீறி வெற்றி பெற்றேன்’ என்று சேலையை விசிறிப் போட்டு கெத்தாக உள்ளே சென்றார் அர்ச்சனா. “அவங்களை எமோஷனலா டச் பண்ணணும்ப்பா... யார் யாருக்கு நடுவுல ஆவாதோ அவங்க இதைச் செஞ்சா வொர்க் அவுட் ஆகும்" என்கிற டெரரான ஐடியாவைத் தந்து கொண்டிருந்தார் சனம். நேற்று சுரேஷ் செய்த அதே வேலை இது.

சிறு வயதில் சாத்துக்குடித் தோலை கண்ணில் பிழிந்து விளையாடும் விளையாட்டை ரியோ இன்னமும் மறக்கவில்லை போல. அந்த ஐடியாவைத் தூக்கிக் கொண்டு வந்தார். நெயில்பாலீஷ், பெர்ஃப்யூம் ஸ்பிரே… என்று என்னென்னவோ விசித்திர ஆயுதங்களைத் தூக்கி வந்தார்கள். இவற்றை எதிரணியினரின் மூக்கின் அருகில் வைத்தால் அவர்கள் தும்மி அசைந்து விடுவார்களாம். இம்சை அரசனுக்கே கூட தோன்றாத டெரரான ஐடியாக்கள் இவை. ‘மூக்கில் குச்சி விட்டு நோண்டிய’ கோவிட் டெஸ்ட்டை கடந்து வந்திருப்பதால் அதை இன்னமும் மறக்காமல் எதிர் தரப்பின் மீது முயன்று பார்க்கிறார்கள் போல.

இவற்றைத் தவிர பிக்பாஸூம் பல விநோதமான பழைய ஆயுதங்களை அவர்களுக்குத் தந்து ‘வெப்பன் சப்ளையராக’ இருந்தார்.

ஒரு கேரக்டரில் இறங்கினால் ஆரி அந்த கேரட்டராகவே மாறி விடுவார் போல. புடைப்பான மூக்குடனும் சீரியஸான முகத்துடனும் வெளியே வந்தார். அடுத்த டார்கெட் அவர்தான்.

விதம் விதமாக அவரை வெறுப்பேற்றிய எதிரணி, கல்லுளி மங்கர் போல ஆரி அசையாமல் நின்றதைக் கண்டு கொலைவெறி ஏறி பிரம்மாஸ்திரமான ஆரஞ்சு தோலை எடுத்து கண் பக்கம் அடிக்க “என்னடாங்கடா இது விளையாட்டு இது... இதுக்கு நீங்க பிக்பாஸ் தெலுங்குல போய் விளையாடலாம்... ஆரஞ்சு தோல்ல சிட்ரிக் ஆசிட் இருக்கு. அது கண்ல பட்டா ‘கொமாட்டோனியா’-ன்னு ஒரு பிரச்னை வரும்" என்று அந்தக் கோபத்திலும் ‘அட்வைஸ்’ செய்ய ஆரம்பித்தார் ஆரி.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

“என் மேல ரெண்டு முறை மோதினே நீ... இதெல்லாம் ஒரு உத்தியா?” என்று பாலாஜியிடமும் அவர் எகிற, "அதை வெச்சு நான் க்ளைம் பண்ணேனா?” என்று பாலாவும் பதிலுக்கு குதித்தார்.

ஆரஞ்சு தோலை கண்ணில் அடித்தது மிக மோசமான உத்தி. ஆரியின் கோபத்தில் நியாயமுண்டு. ஆனால் ‘கோக்குமாக்கு’ பிக்பாஸ், ‘அரக்க அணியினர் வென்றார்கள்’ என்று அறிவித்து ஆரியின் கண்களில் பலாப்பழத் தோலைப் பிழிந்தார்.

அரக்க அணி, ஆரியை இழுத்துச் செல்ல, ஆன்லைன் கிளாஸ் காலக்கட்டம் முடிந்து பள்ளிக்குச் செல்ல இழுத்துச் செல்லப்படும் எல்கேஜி பையன் மாதிரி வேண்டாவெறுப்பாக சென்றார் ஆரி. அரக்கர் அணியில் சேர்ந்து விட்டாலும், ‘டேய் நான்லாம் பொறந்துல இருந்தே நல்லவன்டா’ என்கிற மோடியிலேயே இருந்தார் ஆரி. "அடுத்தது ஸ்பிரே அடிச்சு பார்க்கலாமா?” என்று இன்னொரு கொடூர ஐடியாவைத் தந்தார் ரம்யா. (இந்தக் குழந்தை முகத்திற்குள்ளே பல கோட்டான்கள் ஒளிந்து கொண்டுள்ளன போல!).

ராஜ குடும்பத்திலிருந்து அடுத்து வெளியே வந்தவர் ‘ஜித்தன்’ ரமேஷ். ஏற்கெனவே இவர் நடித்த படங்களிலேயே அதிக எக்ஸ்பிரஷன்களைப் பார்க்க முடியாது. பிக்பாஸ் வீட்டிலும் அப்படியேதான் இருக்கிறார். எனவே இவர் எந்த சலனமும் இன்றி எதிரணியினரின் தாக்குதல்களை சகித்துக் கொண்டு நின்றதில் ஆச்சர்யமில்லை.

அரக்கர் அணி, நெய்ல்பாலீஷ் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை ரமேஷின் மூக்கின் அருகே கொண்டு சென்று ‘மூன்று விசில் அடித்து விட்டதா’ என்று குக்கர் முன் காத்திருப்பதைப் போல காத்துக் கொண்டிருக்க, அந்தக் கலாட்டாக்களுக்கு நடுவில் எதிர் அணியினரின் ஆயுதங்களை ரகசியமாக பறிமுதல் செய்தார்கள் சுரேஷூம் அனிதாவும். எடுத்தது போதாது என்று ‘கடவுளே. இந்தப் பொருட்களை காணாமல் போகச் செய்’ என்று கூப்பாடு போட்டு கூத்தில் கோமாளி போல ஓவர் டிராமா செய்தார் சுரேஷ்.
பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

சனம் உள்ளே இருந்த நெயில்பாலீஷ் ஆயுதங்களை மீண்டும் எடுக்கப் போக “வீட்டுக்குள்ள வரக்கூடாது’-ன்னு ரூல்ஸ் இருக்கு" என்று ராஜ அணி ஆட்சேபிக்க ‘ஆனா இதை எடுக்கக்கூடாது’ன்னு ரூல்ஸ் இல்லையே என்று சுப்ரீம் கோர்ட் வக்கீல் மாதிரி சாமர்த்தியமாக பேசி விதியை உடைத்தார் சனம்.

இந்தச் சமயத்தில்தான் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. இந்த நாலாவது சீஸனில் நாம் இதுவரை பார்த்திராத அதிசயம். ஆம். அது ஷிவானியின் குரல். பாலாவை துரத்திப் பிடித்து விளையாடிய ஷிவானி ‘வாய் திறந்து பேசி நாம் கேட்ட நாள் இது’. இளவரசி உடையில் அம்சமாக இருந்தாலும் ஷிவானியின் குரல் கொஞ்சம் டொங்கலாகத்தான் இருந்தது. (பொண்ணு அதிகம் வாய் திறக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணமோ?!)

இதற்கிடையில் ‘வளர்ந்த குழந்தையான’ பாலாஜி, அரண்மணைக்குள் அதிகாரப்பூர்வமின்றி நுழைந்து, இருப்பதிலேயே மிகப்பயங்கர ஆயுதமான மிளகாய்பொடியைக் கைப்பற்ற முயல, அவரது கூட்டாளியாக சோமும் பின்னாடியே ஓடி வர, அந்தக் களேபரத்தில் ஒட்டுமொத்த மிளகாய்பொடியும் அரண்மணைச் சுவற்றில் பட்டுக் கொட்டி வீண் ஆனது. ஏற்கெனவே ரேஷன் முறையில் பொருட்களைப் பெறும் பிக்பாஸ் வீடு இனி மிளகாய்பொடி இல்லாமல்தான் சமைக்க வேண்டியிருக்கும்.

களேபரத்திற்கு காரணமான பாலாஜி எந்தக் கவலையும் இல்லாமல் குப்புறப்படுத்து குழந்தை போல் சிரித்துக் கொண்டிருக்க, அதற்கு தாமும் காரணமாக இருந்தோமே என்கிற குற்றவுணர்வுடன் மிளகாய்ப்பொடியை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார் சோம்.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

அசந்தர்ப்பமான நேரத்தில் சண்டைக்கு இழுப்பதில் வல்லவரான அனிதா, இந்தச் சமயத்தில் சோமிடம் ஏதோ கேட்க, ஏற்கெனவே சங்கடத்தில் துடைப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்த சோம், பதிலுக்கு கோபமாக “நீ பேசறதை நான் எப்பவும் கேட்கணும்னு அவசியமில்ல" என்று சொல்லி விட ‘அவசியமில்ல’ என்கிற வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு அரைமணி நேரத்திற்கு பிலுபிலுவென்று பொங்கித் தள்ளினார் பட்டிமன்ற பேச்சாளர் அனிதா. வழக்கம் போல் அர்ச்சனாதான் மற்றவர்களை அதட்டி நிலைமையை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. மிளகாய்பொடி விளையாட்டில் கலந்து கொண்ட வேல்முருகனை அந்த ஏரியாவிலேயே காணோம். (இந்நேரம் தூத்துக்குடிக்கோ... திருநெல்வேலிக்கோ போயிருப்பார்).

அரக்கர் அணிக்கு ‘கன்வெர்ட்’ ஆகி விட்டாலும் நியாயஸ்தனாக இருக்கிறார் ஆரி. "மிளகாய் பொடில்லாம் உங்க உத்திதானே.. இதெல்லாம் ஒரு விளையாட்டா?” என்று தன் அணியிடமே கோபப்பட்டுக் கொண்டிருந்தார்.

ராஜ குடும்பத்திலிருந்து அடுத்து வந்தவர் ஆஜித். அப்போதுதான் இன்றைய நாளின் பூகம்ப கலவரத்திற்கான நேரமும் நெருங்கி வந்தது. ஆஜித்தை எதிரணி விதம் விதமாக கொடுமைப்படுத்திக் கொண்டிருக்க ஆஜித்திற்கு சார்பாக ராஜகுடும்பம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தது.

‘நாத்தம் பிடிச்சவங்களே. த்தூ..’ என்பது போல் சுரேஷ் ஓவர் ஆக்ட் செய்ய, அந்த கமெண்ட்டிற்கு காண்டான சனம் ‘மானங் கெட்ட மன்னரே’ என்று கவுன்ட்டர் கொடுத்தார். “அவங்க கண்ணாடிக்குப் பின்னாடி நின்று ஆஜித்திற்கு சப்போர்ட் பண்றாங்க... அதை மறைங்க” என்று வியூகத்தை மாற்றினார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17
பெண் அரக்கிகள் தங்கள் உடையினால் ராஜகுடும்பத்தை மறைக்க முயன்றார்கள். அந்தச் சமயத்தில் தன்னிடமிருந்த தண்டத்தால் அரக்கிகளின் தலையில் அடித்தார் சுரேஷ். அது திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ சனத்தின் தலையாக இருந்தது. அதுதான் சுரேஷிற்கான ஏழரை மணி சங்கு.

பிறகு வெடிக்க ஆரம்பித்தது பூகம்பம். "எப்படி என் தலைல அடிச்சான் தெரியுமா அந்தாளு.... டொம்னு... கண்ல பட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்... டேய் வெளியே வாடா... பைத்தியம்" என்றெல்லாம் சுரேஷை நோக்கி ஏக வசனத்தில் எகிற ஆரம்பித்தார் சனம்.

“நான் வேணும்ன்ட்டு செய்யலை பிக்பாஸ். விளையாட்டாதான் அடிச்சேன்... அது அவங்க தலைன்னு எனக்கு தெரியலை. மறைச்சுட்டு இருந்தது ரம்யா. நிஷா கிட்ட கூட இப்படித்தான் விளையாடினேன். நான் தெரிஞ்சு பண்ணலை" என்று தொடர்ந்து கேமராவின் முன்பு அனத்திக் கொண்டேயிருந்தார் சுரேஷ்.

இதன் பின்னணியைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்...

சனத்திற்கும் சுரேஷிற்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். துணி அலசல் பிரச்னையில் இது அதிகமானது. சுரேஷிற்கு உதவச் சென்ற சனத்திடம் இருந்து விலகிச் சென்றார் சுரேஷ். பிறகு சனம் புறணி பேசியதை அறிந்து ‘வகுந்துடுவேன்... என் கிட்டலாம் வெச்சுக்காத’ என்று மிகையாக வார்த்தைகளை விட்டார் சுரேஷ்.

அரக்கர் டாஸ்க்கின் போது சனம் வந்த சமயத்தில் மட்டுமல்லாது இதர போட்டியாளர்கள் வந்த போதும் அவர்களை வெறுப்பேற்றும் சாக்கில் சனத்தை ஜாடை மாடையாக திட்டிக் கொண்டேயிருந்தார் சுரேஷ். பல சமயங்களில் அவரது கமென்ட் ஓவராக இருந்தது. ‘பக்கத்துல பாம்பை படுக்க வெச்சிருக்கே’ என்பது ஓர் உதாரணம்.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

‘யோவ் நிறுத்துய்யா... போதும்’ என்று அர்ச்சனாவே எரிச்சல் அடைந்து கண்டிக்கும் அளவிற்கு சுரேஷின் கொனஷ்டைகள் அப்போது தொடர்ந்தன. அனிதாவும் இது தொடர்பாக தன் கண்டனத்தை சுரேஷிடம் தெரிவித்து ‘கிறுக்கி’ பட்டம் வாங்கிக் கொண்டார்.

இது நேற்றைய கதை. இன்று சுரேஷிற்கும் சனத்திற்கும் இடையே ‘டாஸ்க்கை’ முன்னிட்டு நேரடியான, மறைமுகமான வசைகள் பரிமாறப்பட்டன. இதை துவக்கி வைத்தவர் சுரேஷ்தான். மிகையான வார்த்தைகளை இறைத்து சனத்தை தொடர்ந்து வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். வயதில் பெரியவர் என்பதால் சனத்தினால் வார்த்தைகளை அதிகம் விட முடியாது. எனவே பொறுத்துக் கொண்டிருந்த சனத்திற்கு பழிவாங்குவதற்கான வாய்ப்பை சுரேஷே தட்டில் வைத்து கொடுத்து விட்டார்.

சுரேஷ் தன் தலையில் அடித்ததை வைத்துக் கொண்டு இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை கோபத்தையும் அழுத்தத்தையும் கடுமையான வார்த்தைகளாக வெளிப்படுத்தி ரணகளமாக செயல்பட்டார் சனம்.

மற்றவர்கள் பிழை செய்யும் போது அவற்றை கண்டிப்பான குரலில் அதட்டி ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்னையை நிலைநாட்டுவதில் ஒரு கண்டிப்பான ‘டீச்சர்’ ரோலை எடுப்பதில் அர்ச்சனா வல்லவராக இருக்கிறார். நல்ல விஷயம். இப்போதும் அதே கண்டிப்போடு மன்னிப்பு கேட்க சுரேஷை அழைத்தார். ஒரு பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் போது இன்னொரு பெண் துணிச்சலாக தட்டிக் கேட்க முன்வருவதும் சிறப்புதான்.

ஆனால், அர்ச்சனாவின் கண்டிப்பு இந்தச் சமயத்தில் மிகையாகிப் போனது. மன்னிப்பு கேட்கும் மனநிலையில் சுரேஷ் ஏற்கெனவே இருக்கத்தான் செய்கிறார். தான் செய்ததை நியாப்படுத்தி அவர் விதண்டாவாதம் செய்யவில்லை. அவரை ஹோம்ஒர்க் செய்யாத மாணவனை அழைப்பது போல, 'இங்க வாங்க... எல்லோர் முன்னாடியும் வந்து மன்னிப்பு கேளுங்க... சனத்து கிட்ட கேளுங்க. ரம்யா கிட்ட கேளுங்க... இந்த சேர் கிட்ட கேளுங்க. தண்ணி பாட்டில் கிட்ட கேளுங்க’ என்று அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது மிகையான எதிர்வினை.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17
தெரிந்தோ அல்லது தெரியாமலோ தவறு செய்த சுரேஷ், கையும் களவுமாக பிடிபட்ட திருடனைப் போல எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டது ஒருவகையில் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் ‘வேணும்யா இந்த ஆளுக்கு’ என்றும் தோன்றியது. ஏனெனில் அவர் முன்னர் செய்த அழிச்சாட்டியங்கள் அப்படி.

இந்தச் சம்பவத்தின் மூலம் ஆண்களுக்கொரு படிப்பினை இருக்கிறது. அதிகம் அறிமுகமில்லாத, அல்லது ஏற்கெனவே சச்சரவு இருக்கிற பெண்களிடம் விளையாட்டுக்காக கூட எதையும் செய்து விடக்கூடாது. அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை மிக வலிமையாக பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்கள் வைக்கும் பஞ்சாயத்திற்குத்தான் வலிமை அதிகம். உலகமும் அதைத்தான் பெரும்பாலும் நம்பும்.

‘பேய் ஓட்டுறதுக்குத்தான் துடைப்பம் இன்னபிற பொருட்களை வைத்து அவர்களை அடித்தேன்’ என்று என்னதான் சுரேஷ் லாஜிக் பேசினாலும் அவர் செய்தது நிச்சயம் பிழை. அதிலும் அவருடைய வயதிற்கு முறையில்லாத விளையாட்டுக்களில் இறங்கி விடுகிறார்.

இதே போல் சுரேஷிடம் அடிவாங்கிய நிஷாவும் ரம்யாவும் "பரவாயில்ல சார்... டாஸ்க்கிற்குத்தானே செஞ்சீங்க” என்று பெருந்தன்மையாக மன்னித்து விட்டது சிறப்பு.

இந்தச் சம்பவத்திலும் ஒரு ட்விஸ்ட் நடந்தது. சனத்திற்கும் பாலாவிற்கும் இடையேயும் கூட சண்டைதான். ஆனால் சனத்தின் தலையில் அடிபட்டதற்காக பாலா சந்தோஷப்படவில்லை. "ஏன் தாத்தா... உங்களுக்கு மூளை மழுங்கிப் போச்சா?” என்று சுரேஷிடம் கோபப்பட்டார்.

முன்கோபம் அதிகமிருந்தாலும் பாலாவிடம் உள்ள ஒரு நற்பண்பு என்னவெனில், ஒருவர் நண்பராக இருந்தாலும் கூட அவர் பிழை செய்யும் நேரத்தில் வெளிப்படையாக சுட்டிக் காட்டி விடுகிறார். ‘தாத்தா இப்படி பிரச்னைல போய் மாட்டிக்கிட்டாரே’ என்கிற உள்ளார்ந்த பாசமும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

இதில் ஆஜித்தின் நிலைமைதான் அதிக சங்கடமானது. சுற்றிலும் ரணகளமான இந்தப் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்க ஆடாமல் அசையாமல் நிற்க வேண்டிய நிலைமை அவருக்கு. சமாளித்து நின்று கொண்டிருந்தார். என்றாலும் அவர் தோற்றதாக அறிவித்தார் ‘கோக்குமாக்கு’ பிக்பாஸ்.

கலவரம் நடந்தாலும் ‘டாஸ்க்’ நிற்கவில்லை. ராஜகுடும்பத்தில் அடுத்து வந்தவர் கேப்ரியல்லா. எதிரணி மூக்கில் மிளகாய்ப்பொடியை திணித்தாலும் அசையாமல் நிற்கக்கூடிய உறுதியுடன் இருந்த இவர் வெற்றி பெற்றதில் ஆச்சர்யமில்லை.

‘'என்னை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க பிக்பாஸ். பேசணும்'’ என்று கேமராவின் முன்பு அனத்திக் கொண்டேயிருந்த சுரேஷை ஒருவழியாக கூப்பிட்டார் பிக்பாஸ். (பாவம் பிக்பாஸிற்கும் கண்கலங்கியிருக்கணும்). ''அவ்ளோதான் மூட்டை கட்டியாச்சு. நான் போறேன்’' என்று சோமிடம் சோகமாக சொல்லி விட்டு வாக்குமூல அறைக்குள் நகர்ந்தார் சுரேஷ்.

“என்னை வெளியேத்திடுங்க பிக்பாஸ்... நான் தவறு செஞ்சிட்டேன். என் வயசுக்கு முதிர்ச்சியில்லாம நடந்துக்கிட்டேன்" என்று கண்ணீர் மல்க சொன்ன சுரேஷை "நீங்க வேணும்ன்ட்டே அடிக்கலை இல்லையா... மண்ணே... மரமே-ன்னு எல்லோர் கிட்டயும் மன்னிப்பும் கேட்டுட்டீங்க... அப்புறம் என்ன, ‘உங்கள்’ விளையாட்டை சரியாக ஆடுங்க. மக்கள் பார்த்துட்டு இருக்காங்க” என்று சுரேஷிற்கு ஆதரவாக கண்ணைத் துடைத்து விட்டார் பிக்பாஸ். (யோவ்... நீ போயிட்டா. கன்டென்ட்டுக்கு நான் என்ன பண்ணுவேன்... மத்ததுக எல்லாம் எல்கேஜி பசங்களா இருக்குதுங்க..’ என்பது பிக்பாஸின் மைண்ட் வாய்ஸ் கதறலாக இருக்கக்கூடும்).

“கண்ணைத் துடை... மூஞ்சை சிரிச்ச மாதிரி வெச்சுக்கோ” என்கிற பிக்பாஸின் ஆறுதலைக் கேட்டு சமாதானம் அடைந்த சுரேஷ், பிறகு திடுக்கிட்டு எதையோ சுற்றிலும் தேடியது எதுவென்று தெரியவில்லை. (தனது கௌரவமா?!) பிறகு மறுபடியும் எதையோ நினைத்துக் கொண்டு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதார் சுரேஷ்.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17

தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ திரைப்படத்தில் ஏரியா பிரிக்கும் நோக்கத்தோடு வரும் போலி ரவுடியான விவேக், பாத்ரூம் கண்ணாடி முன்பு ‘கோ’வென்று கதறும் காட்சி நினைவிற்கு வர சுரேஷை நினைத்து சிரிக்கத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் பரிதாபமாக இருந்தது.

அவர் எல்லோரிடமும் இத்தனை தூரம் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகு இப்படி குற்றவுணர்ச்சியுடன் குழந்தை போல் விசும்பத் தேவையில்லை. கடந்த சீஸனில் சேரன் மீது மீரா மிதுன் ஒரு தகாத குற்றச்சாட்டை வைத்தார். இந்த விவகாரம் அது போன்றது என்றாலும் கூட சுரேஷ் இந்தளவிற்கு சோகப்படுவதில் ஓர் அர்த்தமுள்ளது.

சுரேஷின் குழந்தைத்தனமான இந்த எதிர்வினையின் மூலம் ஒன்று தெளிவாகிறது. ‘வெளியே கடுமையானவராகவும் சாமர்த்தியசாலியாகவும் நடந்துகொள்ளும் ஓர் ஆசாமியின் இன்னொரு பக்கத்தில் பலவீனமானதொரு பக்கமும் இருக்கிறது’ என்கிற உண்மை மறுபடியும் நிரூபணமாகிறது. ‘எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கு’ என்பார் குருதிப்புனல் கமல்.

தன்னுடைய அவமானமும் அந்தரங்க உணர்ச்சிகளும் வெளியே தெரிந்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையுடன் கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டு வெளியே வந்தார் சுரேஷ்.

பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் – நாள் 17
பிக்பாஸ் நினைத்திருந்தால் சுரேஷ் அழுது கலங்கிய காட்சிகளை எடிட்டிங்கில் தூக்கியிருக்கலாம். ஆனால் முன்னரே சொன்னபடி பிக்பாஸிற்கு இணையாக சாமர்த்தியம் காட்டக்கூடியவராக பாவனை செய்து கொண்டிருந்த சுரேஷை சமயம் பார்த்து பழிவாங்கினார் பிக்பாஸ். இதன் மூலம் உண்மையான ‘பிக்பாஸ்’ தான் மட்டுமே என்கிற உண்மையை உலகிற்கு உணர்த்தி விட்டார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுரேஷின் அலப்பறைகள் தொடருமா, அல்லது வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பாரா என்பதை இனிவரும் நாட்கள்தான் சொல்ல வேண்டும்.