அன்புடை தமிழ் நெஞ்சங்களே... நலம்தானே?
‘ஹப்பாடா! இனிமேல் ஐந்தாவது சீஸன் வரும் வரை இவரிடமிருந்து தப்பித்து ஜாலியாக இருக்கலாம்...’ என்று எண்ணிக் கொண்டிருந்த நீங்கள், இந்தக் கட்டுரையைப் பார்த்து அதிர்ச்சியடையலாம். ஆம்... நான் திரும்பி வந்து விட்டேன். விதி வலியது.
‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியைப் பற்றியும் நீங்கள் நிச்சயம் ஒரு கட்டுரை எழுதியே ஆக வேண்டும் என்று கோடிக்கணக்கான (?!) அன்பு நெஞ்சங்கள் சமூகவலைதளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தன. ‘சரி... ரசத்தை ஊத்து... அதுல பூனை கிடைக்குதான்னு பார்ப்போம்’ என்று தவிர்க்க இயலாமல் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். விளைவு இந்தக் கட்டுரையும், உங்களைச் சந்திப்பதற்கான இன்னொரு சந்தர்ப்பமும்.
‘பிக்பாஸ் கொண்டாட்டம் பற்றி கட்டுரை எழுத என்னவிருக்கிறது' என்று எனக்கிருந்த எண்ணத்தை மெய்யாக்கியது இந்த நிகழ்ச்சி. தலைப்பில் இருப்பது போல, ஆட்டம், பாட்டம். நகைச்சுவை என்று பெரும்பாலும் கொண்டாட்டம் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் வழக்கம்போல் இருந்தது.
பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி இந்த நுட்பமான விளையாட்டில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து அவர்கள் எதிர்கொண்ட மனச்சிக்கல்கள், அழுத்தங்கள், விளையாட்டிற்குப் பின்னான மனநிலை, அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள், இதற்குப் பின்பு அவர்கள் செய்யப் போகும் முயற்சிகள் உள்ளிட்டவைகளை வைத்து இந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கத்தை உருப்படியாக மாற்றியிருக்கலாம்.
ஏனெனில் விளையாட்டின் போது போட்டியாளர்களின் மனங்களுக்குள் ஆயிரம் அழுத்தங்கள் இருக்கக்கூடும். போட்டி முடிந்த பிறகு அந்த ஆசுவாசத்தில் அவர்கள் பல அனுபவங்களை திறந்த மனதுடன் அலசுவதற்கு இந்த நிகழ்ச்சியை ஒரு நல்ல வாய்ப்பாக மாற்றியிருக்கலாம்.

ஆனால் இதைப் பொழுதுபோக்காக மட்டுமே ஆக்கித் தீருவது என்று அவர்கள் முடிவு செய்த விட்ட பிறகு என்ன சொல்ல... வேறு வழியில்லை. நாமும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி விட வேண்டியதுதான்.
வாங்க, நிகழ்ச்சிக்குள் போவோம்... மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க... பெல் பட்டனை அழுத்திடுங்க... ச்சே... மன்னிக்கவும் யூட்யூப் வீடியோக்களை பார்ப்பதின் துர்விளைவு.
பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.
குலசாமி வேண்டுதலுக்கு ஆடுகளை அழைத்து வருவது போல போட்டியாளர்களை மாலையிட்டு மரியாதை செய்து வரிசையாக அழைத்து வந்தார்கள். ஆரி, பாலா, ரியோ போன்ற சில (ஆண்) போட்டியாளர்கள் மட்டும் ஸ்டைலாக பைக்கிலேயே மேடைக்கு வந்தார்கள். (விஜய் டிவில மட்டும் பார்க்கிங் ஏரியா மேடைக்கு பக்கத்திலேயே இருக்கும் போல).
மருத்துவக் காரணங்களால் தன் பொதுச்சேவையில் இருந்து சிறிது காலம் ஒதுங்கியிருந்த டிடி, ஓர் இடைவேளைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது மறுவரவை நிகழ்த்தியிருக்கிறார். நல்வரவு லேடி!
அங்கிங்கெங்கனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஆணாதிக்கம் என்பது தொலைக்காட்சி ஊடகங்களிலும் உண்டு. அவை சார்ந்த தடைகளைத் தாண்டி தங்களின் தனித்தன்மையாலும் திறமையாலும் பிரகாசிக்கும் பெண்கள் மிக அபூர்வமானவர்கள். பாராட்டப்பட வேண்டியவர்கள். அதில் டிடியும் ஒருவர். சில நொடிகளிலேயே ஒரு இடத்தை லைவ் ஆகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்கி விடக்கூடிய திறன் படைத்தவர். சமயோசித நகைச்சுவை உள்ளிட்ட பல திறமைகளைக் கொண்டவர். ஆனால் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்றாலே ஹைடெஸிபலில் கத்த வேண்டும் என்கிற அபத்தமான மரபிற்கு இவரும் விதிவிலக்கில்லை. இன்னொரு உதாரணம் அர்ச்சனா.

டிடியின் டைமிங் நகைச்சுவை இந்த நிகழ்ச்சியின் பல இடங்களில் அநாசயமாக வெளிப்பட்டது. “பி.பிக்கு முன்பும் பி.பிக்கு பின்பும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது?” என்று ஒவ்வொருவரையும் ஜாலியாக விசாரிப்பதின் மூலம் நிகழ்ச்சியை மாபாகாவுடன் இணைந்து ஆரம்பித்தார் டிடி.
‘பிபி அதிகமாயிடுச்சு’ என்று பதில் டைமிங்கில் திருப்பி அடித்தார் பாலாஜி. (இனிப்பான இளம் பெண்கள் நிறைய பேர் வந்தால் அப்படித்தான் பிபி எகிறும்). ‘தமிழ் சமூகத்திற்கு நான் தாத்தா’வாகி விட்டேன்’ என்று பெருமையடித்துக் கொண்டார் சுரேஷ். (உ,வே. சாமிநாத ஐயருக்கு பிறகு இவரைத்தான் ‘தாத்தா’வாக்கி அழகு பார்க்கிறது போல தமிழ் சமூகம்). சோமிற்கு இன்ஸ்டாகிராமில் தொடர்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் பெருகியிருக்கிறதாம். (அதில் ரம்யா இருக்கிறாரா?!).
வருவோர், போவோர் எல்லாம் நிஷாவை வழக்கம் போல் கன்னாபின்னாவென்று கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். ரியோ, சோமு ஆகியோர் நிஷாவை உரிமையுடன் கலாய்த்தது சமயங்களில் எல்லை மீறிப் போயிற்று. ‘இந்தச் சமூகம்தான் தாழ்வுமனப்பான்மையை எனக்குள் உருவாக்கிற்று” என்று நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சொன்னது உண்மைதான். ஆனால் அதையும் தாண்டி அவருக்குள்ளும் இருக்கிற தாழ்வு மனப்பான்மைதான், தன்னைத்தானே பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டு, மற்றவர்களின் எல்லைமீறிய கிண்டல்களையும் அனுமதிக்கிறதோ என்னமோ!
இப்படி கிண்டலுக்கு ஆளாகி, தன்னையும் கீழிறக்கி கிண்டல் செய்து கொள்ளும் போக்கிலிருந்து நிஷா உடனே வெளியே வருவது நல்லது. இது குறித்து டிடியும் ஓரிடத்தில் மெலிதாக அறிவுறுத்தினார்.
ஒப்பனை குறித்து தன் மேல் வீசப்பட்ட கிண்டலை வாங்கி அப்படியே ஷிவானி மற்றும் ரம்யா மீது சிக்ஸராக வீசினார் நிஷா. ‘ஹலோவ்... நான் அலார்ம் வெச்சு விடிகாலைல மேக்கப் போடறதில்லை’ என்று ஷிவானி ஜாலியாக சிணுங்க... ‘குளிச்சுட்டு சுத்த பத்தமா இருக்கறது வேற... ஓவர் மேக்கப் வேற’ என்று தெளிவாக வியாக்கியானம் சொன்னார் ரம்யா.
எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கின் போது சுரேஷிடம் விவாதம் புரிந்தது ‘வேற லெவல் ஸ்ட்டராட்டஜி' என்று ரம்யா சொன்ன வசனம் வைரலாகியிருக்கிறது போல. நேயர் விருப்பமாக யாரோ அதைக் கேட்க, அதே மாடுலேஷனில் சொல்லி மகிழ்ந்தார் ரம்யா. (ஆனால் எனக்குப் பிடித்தது ‘'இவருதான் மிஸ்டர் இந்தியா...வான்டா...’' என்கிற வசனம்தான்).
''சின்னத்திரையின் வழியாகவும் உலகப்புகழ் பெற முடியும் என்பதை பிக்பாஸ் நிரூபிக்கிறது’' என்று நிகழ்ச்சியின் தீவிர விசுவாசியாக அள்ளி விட்டார் சனம். (அப்போ... ஜாக்கிசானுக்கு சனத்தை தெரிந்திருக்குமா?!). '‘சோஷியல் மீடியாவில் என் மீது இருந்த நெகட்டிவ் ஷேடை, பாசிட்டிவ்வாக மாற்றியது பிக்பாஸ்தான்’' என்று கூடவே நெகிழ்ந்தார் சனம். நல்ல விஷயம். மகிழ்ச்சி.

‘'டைட்டில் வின்னர் ஆரி கிட்ட கேட்போம்’' என்று சொல்லப்பட்டவுடன் சபையில் விசில் பறந்தது. (ஆரி... ப்ரோ ஆதரவாளர்கள் அங்கேயும் வந்துட்டாங்க போல!) “என் வாழ்க்கையில் நான் எடுத்த ஒரேயொரு சரியான முடிவு என்பது பிக்பாஸில் கலந்து கொண்டதுதான். இது வாழ்க்கைக்கு ஒரு பாடம்’' என்று உணர்ச்சிகரமாக சொன்னார் ஆரி.
“சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்ட வந்த மாதிரி இருக்கு” என்று ஆரம்பித்த ரியோ “இப்பல்லாம் பக்கத்து வீட்டுல இருக்கறவங்க என்னை இடுப்பில் ஏற்றிக் கொண்டு மம்மு ஊட்டுகிறார்கள்'’ என்கிற ரேஞ்சிற்கு தனக்கு கிடைக்கும் வரவேற்பபை சொல்லி மகிழ்ந்தார். அக்கம் பக்கத்தார் அத்தனை பாசமழையைப் பொழிகிறார்களாம். தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்களிடமிருந்து கூட ஆதரவு வந்தததாம். (டேய் மகேஷூ… அட்றா... அட்றா).
கேபி ‘முரட்டு சிங்கிள்’ நிகழ்ச்சிக்கு ஜட்ஜ் ஆகியிருக்கிறாராம். மகிழ்ச்சி. ‘'சூப்பர் சிங்கர்ல என்னைத்தான் கூப்பிட்டாஹ’' என்று ஆரம்பித்த நிஷா, அதைத் தொடர்ந்து ‘தூதுவளை அரைச்சு’ என்கிற பாடலை செந்தில் ராஜலட்சுமியின் குரலில் பாட முயல... மற்றவர்கள் கலாய்த்து அடக்கி அவரை அமர வைத்தார்கள். கமலே பாராட்டி விட்டதாலோ என்னமோ ‘கண்மணி... அன்போடு காதலன்’ பாடலை கண்ணை மூடிக்கொண்டு பாடி மகிழ்ந்தார் ஷிவானி. (நமக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டதா என்றெல்லாம் கேட்கக்கூடாது).
இதைத் தொடர்ந்து நாக்கை மடித்துக் கொண்டு தன் பிரத்யேக பாணியில் பாலாஜி நடனம் என்கிற பெயரில் ஒன்றை ஆடி முடித்தார். அவர் முடித்ததும் பத்து பதினைந்து இளம் பெண்கள் வரிசையாக உள்ளே வந்தனர். கல்லூரி வாசலில் இருக்கிற பஸ் ஸ்டாண்ட் மாதிரி சூழல் சட்டென்று மாறியது. அத்தனை பேரும் பாலாஜிக்கு (மட்டும்) கொலைவெறி ரசிகைகளாம். ஆனால் அவர்கள் உள்ளே நுழையும் போது அவர்களைப் பார்த்து சுரேஷூம் கையசைத்து மகிழ்ந்தார். (என்னவொரு தன்னம்பிக்கை?!).

பிக்பாஸ் நடந்து கொண்டிருக்கும் போதே ‘பப்லு ஆர்மி’ என்கிற பெயரில் கொலைவெறி ஆதரவு கொண்ட பெண்களின் ரசிகர் கூட்டம் பாலாஜிக்கு பெருகியிருந்தது. எனில் அவர்களில் சிலர் மேடைக்கு வந்து தீவிரமான அன்பை வெளிப்படுத்தியதில் ஆச்சரியமில்லை. இதற்கு பாலாஜியின் வெளிப்படைத்தன்மைதான் முக்கிய காரணமாக இருக்கும். தவிர இன்னொரு உளவியல் சமாச்சாரமும் இருக்கிறது.
ஓர் ஆண் அழும் போது பெண்ணுள் இருக்கும் தாய்மையுணர்ச்சி தன்னிச்சையாக வெளிப்படுகிறது. அது அன்பாகவும் கனிவாகவும் காதலாகவும் கூட மாறலாம். இதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்கள்.
வந்திருந்த இளம் பெண்களில் ஒருவர் பாலாஜியை ‘குழந்தை’ என்று பாசத்துடன் விளிக்க ‘நான் சொன்னபோது என்னவெல்லாம் கோபப்பட்டே... இப்போ பேசுடா பார்க்கலாம்” என்று அர்ச்சனா சைகை காட்டியது சுவாரஸ்யமான காட்சி. டிடியும் இதைக் குறிப்பிட்டு பாலாஜியின் குமட்டிலேயே ஜாலியாக குத்தினார்.
'‘பாலா நீ வருவியா... என்னோட ஆளா...'’ என்றெல்லாம் கவிதை (?!) பாடி புல்லரிக்க வைத்தார் ஒரு ரசிகை. “இந்த நிகழ்ச்சியைப் பார்த்த இளம் பார்வையாளர்கள் அதிகமா கோபப்படக்கூடாது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொண்டிருப்பார்கள்'’ என்று ஒரு கேள்விக்கு பதில் சொன்னார் பாலாஜி.
‘'இனிமே உங்க நேரம் நல்லாயிருக்கும்’' என்கிற சூசக குறிப்புடன் ஒரு பரிசை அளிக்கப் போவதாக ஒரு ரசிகை சொல்ல '‘வாட்ச்தானே?” என்று கேட்டு சட்டென்று சஸ்பென்ஸை உடைத்தார் பாலாஜி. “அப்படில்லாம் சட்டுன்னு கேட்டுடக்கூடாதுடா… 'என்னது கிஃப்ட்டா?’ன்னு ஆச்சரியப்படற மாதிரி நடிக்கணும்'’ என்று 'வாலி' அஜித்போல பெண்களிடம் உரையாடும் சூட்சுமத்தை பாலாஜிக்கு டிடி சொல்லிக் கொடுத்தது சிறப்பான விஷயம். அப்போது கூட அந்த ரசிகை பாலாஜியை விட்டுக் கொடுக்கவில்லை. ‘பிரில்லியன்ட் பாலாஜி’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். (இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கற வரைக்கும்...)
'‘இந்த மாதிரியானதொரு குடும்பத்தை சம்பாதிக்கத்தான் பிக்பாஸ் உள்ளே போனேன்'’ என்று நெகிழ்ந்த பாலாஜி, தனக்கு அளிக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்த காட்சியில் ஆரியுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘'அப்ப... என்ன பேசினேன்னு ஞாபகமில்லை'’ என்று சொல்ல ‘'ஸாரி கேட்டிருப்பே’' என்று ரியோ டைமிங்கில் அடித்தது சுவாரசியமான கமென்ட். ‘'ஆரி பிரதர்... ஸாரி பிரதர்’ என்று அதை ரைமிங்காக மாற்றி அசத்தினார் அனிதா. ‘பப்லு ஆர்மி’ ரசிகைகளுடன் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்தார் பாலாஜி.

‘'ஒரு கதை சொல்லட்டுமா.. சார்?” என்கிற பகுதியை பந்தை தூக்கிப் போட்டு உற்சாகமாக ஆரம்பித்தார் டிடி. யாரிடம் பந்து விழுகிறதோ அவர்கள் கதையை தொடர வேண்டும். ஆனால் இது மகா சொதப்பலாகப் போனது. ஆளாளுக்கு கதையை ரப்பர் பேண்ட் மாதிரி இஷ்டத்துக்கு இழுக்க, நிஷாவின் முறை வரும்போது அது ‘டப்’பென்று அறுந்து போனது. ‘நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்’ என்று நொந்து போய் இந்தப் பகுதியை அப்படியே முடித்து வைத்தார் டிடி. ‘இறந்திடவா... நீ பிறந்தாய்’ என்கிற பாடலை இறுதியில் போட்டு இந்தப் பகுதி அநியாயமாக செத்துப் போனதை குறிப்பால் உணர்த்தியது நல்ல காமெடி.
‘சூப்பர் சிங் ஜூனியர் புகழ்..’ அதையும் விட ‘மாஸ்டர்’ திரைப்பட புகழ் ‘பூவையார்’ உள்ளே வந்தார். போட்டியாளர்களை வைத்து இவர் உருவாக்கிய ‘இன்ஸ்டன்ட்’ கானா பாடல் சுவாரஸ்யம். ஆனால் வரிகள் இன்னமும் நன்றாகப் புரிந்திருந்தால் ரகளையாக அமைந்திருக்கும். '‘சாண்டி மாஸ்டரை எதிர்பார்த்தேன்... வரலை'’ என்று இவர் அவ்வப்போது பாவனையாக கண்கலங்கிய போதே தெரிந்து போயிற்று, பின்னால் சாண்டி வருகிறார் என்று.
சில கணங்களில் ஒரு சூழலை உயிர்ப்பாக மாற்றி விடும் உற்சாகமான உரையாடலை நிகழ்த்துபவர் என்று டிடியைப் பற்றி முன்பு சொல்லியிருந்தேன்... அல்லவா? அதைப் போலவே சாண்டியையும் சொல்லலாம். அவர் உள்ளே நுழைந்த கணம் முதல் வெளியேறியது வரை ஓர் உற்சாகப் புயல் அரங்கிற்குள் கன்னாபின்னாவென்று சுழன்று அடித்தது எனலாம். தான் ஆடியது மட்டுமல்லாமல் கூட இருந்த அனைவரையும் ஆட வைத்தது சாண்டியின் உற்சாகமான உடல்மொழி. இவர் ஆடிய பாடலான ‘எப்போதும் உல்லாலா’ பாடல் எனக்குப் பிடித்தமானதொன்று. மனம் சோர்வாக இருக்கும் தருணங்களில் கேட்டால் இன்ஸ்டன்ஸ்ட் உற்சாகம் அளிக்கக்கூடிய இசையும் வரிகளும் அமைந்த நல்ல பாடல்.
சாண்டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வேல் ட்யூட் ‘Moon Walk’ அசைவை மேடைக்கு வந்து செய்து காண்பித்தார். எனக்கென்னமோ அது மூணு பேர் சேர்ந்து வாக் போனது போலத்தான் தெரிந்தது.
‘அலைபாயுதே’ படத்திலிருந்து ‘என்றென்றும் புன்னகை’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தினார் சோம். ‘குறை என்று சொல்லப்பட்ட’ ஒரு விஷயத்திலிருந்து அவர் தன்னம்பிக்கையுடன் மீண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
‘மகளிர் மட்டும்’ என்கிற பிரிவில் பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள் மேடையேறினார்கள். ஷிவானி நடனம் ஆடினார். மாகாபா ஆனந்தை Soft hurt செய்ய வேண்டும் என்கிற டாஸ்க் ரம்யாவிற்கு தரப்பட்டது. அவர் விதம் விதமாக முயன்று பார்த்து விட்டு ‘'எனக்கு நடிக்கத் தெரியாதுங்க'’ என்கிற சிம்பு மாதிரி ‘'எனக்கு soft hurt-லாம் வராது... நம்புங்கப்பா'’ என்று சிணுங்க ‘ஏம்மா... பிக்பாஸ்ல செய்ய வேண்டியதையெல்லாம் சிறப்பா செஞ்சுட்டு, இங்க வந்து இப்படிச் சொல்றியா...” என்று கலாய்த்தார் ஆனந்த்.

ஐந்து முகபாவங்களில் ஒரு வசனத்தைச் சொல்ல வேண்டும் என்கிற டாஸ்க்கில் அனைத்தையும் ஒரே மாதிரியான சிரிப்புடன் சொல்லி பங்கப்பட்டு மேடை இறங்கினார் நிஷா. லிரிக்ஸ்.காம் ஓனர் அனிதாவாம். எப்படிப்பட்ட பாடலாக இருந்தாலும் அதன் இசையை மட்டும் வைத்து கண்டுபிடித்து வரிகளை மனப்பாடமாக பாடி விடுவாராம். ஆனால் இதற்காக ‘வாடி... பொட்டப்புள்ள வெளியே’ போன்ற காவியப்பாடல்களைக் கூட அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டு பாடியது ஆச்சர்யமாக இருந்தது. அனிதா டி.ஆரின் வெறித்தனமான ரசிகை போல.
‘'இந்த சீஸனில் பெண் போட்டியாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆண்களுக்கு இடையில் நாங்கள் எவ்வித சஞ்சலமும் இல்லாமல் உலா வந்தோம். அத்தனை நட்புணர்வும் நாகரிகமும் எங்களிடம் இருந்தது. இதற்காக ஆண்களுக்குப் பாராட்டு'’ என்று அர்ச்சனா பேசியது சிறப்பு.
பாவம் ஏ.ஆர். ரஹ்மான்... ’சிங்கப் பெண்ணே’ பாடலை ஏன் உருவாக்கினோம் என்று நொந்தே போயிருப்பார். அந்த அளவிற்கு அந்தப் பாடலை அடிக்கடி ஒலிக்க விட்டு கதற அடித்தார்கள். ரம்யாவும் ஷிவானியும் நான்கு மணி நேரத்திற்கு கயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தது கடுமையான உழைப்பைக் கொண்ட விஷயம்தான். மறுக்கவில்லை. அதற்காக நொடிக்கொருமுறை ‘சிங்கப்பெண்ணே’ பாடலைப் போட்டு அவர்களுக்கு டெடிகேட் செய்தால் எப்படி?
எங்கள் ஏரியாவில் ஆண்களுக்கு நிகராக ஷேர் ஆட்டோ பெண்கள் சிலர் இருக்கிறார்கள். இப்படி அன்றாட வாழ்வில் பல்வேறு சிரமங்களைக் கொண்ட பணிகளைச் செய்யும் பெண்கள்தான் உண்மையில் சிங்கப் பெண்கள்.
‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ நிகழ்ச்சியில் நான் பெரிதும் எதிர்பார்த்தது ‘கலக்கப் போவது யார்’ டீமின் காமெடி நிகழ்ச்சிதான். கடந்த சீஸன்களில் போட்டியாளர்களின் உடல்மொழியையும் சம்பவங்களையும் வைத்து கதறக் கதற கலாய்த்து காமெடி செய்தார்கள். அத்தனை கலாட்டாவாக இருந்த விஷயம் இது. ஆனால் இந்த சீஸனில் அந்தப் பகுதி இல்லாதது ஏமாற்றமே. ஆனால் சற்றாவது ஆறுதல் அளிக்கும் வரையில் பாலாவும் ராமரும் வந்தது மகிழ்ச்சி.
சட்டென்ற டைமிங்கில் வார்த்தைகளை ரைமிங்காக கோர்த்து பேசுவது பாலாவிடமுள்ள வியக்கத்தக்க சமாச்சாரம். அவர் எப்படி வார்த்தைகளை அப்படி விநோதமாக கோர்த்து நகைச்சுவையாக உருவாக்குகிறார் என்று தெரியவில்லை. இந்த பாணி சிரிக்க வைக்கும் என்றாலும் சமயங்களில் எல்லை மீறி, உருவக்கேலியாகவும், தனிநபர் தாக்குதலாகவும் அமைந்து விடுவது தவிர்க்கப்பட வேண்டும். இதைத்தாண்டி பாலா ஒரு நல்ல நகைச்சுவைக் கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை.
சிலருடைய நகைச்சுவைப் பாணியை நகலெடுப்பது என்பது சிரமமான விஷயம். ஏன் முடியாது என்று கூட சொல்லி விடலாம். உதாரணத்திற்கு நடிகர் மெளலியின் நகைச்சுவையை நினைவுகூருங்கள். அதை நகலெடுப்பது முடியவே முடியாத காரியம். அதை அவரால் மட்டுமே செய்ய முடியும்.
இப்படி தனித்தன்மையுடன் கூடிய நகைச்சுவைக் கலைஞனாக ராமரை சொல்ல முடியும். இவர் நம்மை சிரிக்க வைப்பதற்காக அதிகம் மெனக்கெடுவதில்லை. மற்றவர்கள் சொல்வதற்கு அபாரமாகவும் ஆர்ப்பாட்டம் இல்லாமலும் ‘கவுன்ட்டா்’ சொல்லியே அசத்தி விடுவார்.
‘டைரக்டர் தேங்காமூடி’ என்கிற பெயரில் பாலாவும் அவருக்கு இணையாக ராமரும் அடித்த காமெடி கூத்துகள் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தன. ஆனால் தமிழ் சூழலின் நகைச்சுவை மேம்படுவதற்கு இன்னமும் நிறைய தூரம் நாம் கடந்து செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது.
இந்த காமெடி நிகழ்ச்சிக்குப் பின் வெள்ளுடை அணிந்த குட்டி தேவதை போல் ஒரு சிறுமி மேடையில் தோன்றினாள். இவள் தூங்கி தூங்கி எழுந்து கடிதம் எழுதியதைப் பார்த்த போது ஜித்தன் ரமேஷின் மகளோ என்று முதலில் தோன்றி விட்டது. இல்லை... அர்ச்சனாவின் மகளாம். பிறகு இருவரும் சேர்ந்து நடனமாடியது அற்புதமான காட்சி.
‘அன்பு தோற்று விட்டது’ என்று ஓரிடத்தில் அர்ச்சனா கேவிக் கொண்டே சொன்னார். உண்மையான அன்பு எப்போதும் தோற்பதில்லை. பாரபட்சத்துடன் கூடிய அன்பை அவர் பிக்பாஸில் வெளிப்படுத்தியதால்தான் சில விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த உண்மையை அவர் புரிந்து கொண்டால் நல்லது. .

பிரபலங்களைப் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறாகவும் தனிநபர் தாக்குதலோடும் எழுதுபவர்களைப் பற்றிய ஸாராவின் விமர்சனம் சரியானது. வருங்காலத்தில் இன்னொரு ‘அர்ச்சனா’ தயார் என்கிற அளவிற்கு துடிப்பானவராக இருக்கிறார் ஸாரா. இவருக்கு டிடிதான் ரோல் மாடலாம். அவரைப் போலவே சிறந்து விளங்கட்டும்.
அடுத்ததாக ரியோவின் நடனம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட வசனங்களை பாடலில் இணைத்த பாணி என்பது சாண்டி மாஸ்டர் ஸ்டைலை நினைவுப்படுத்தியது. சாண்டியே இந்த நடன நிகழ்ச்சியை ஆடியிருந்தால் இன்னமும் ரகளையாக இருந்திருக்கும்.
அடுத்து வந்தார்கள் ரியோவின் நண்பர் குழு. ‘பழனிச்சாமி.’ என்று ஆரம்பித்து இவர்கள் ரியோவை மட்டுமல்லாது விஜய் டிவியையும் கூடவே இணைத்து பயங்கரமாக கிண்டலடித்தார்கள். தங்களின் மீதான கிண்டல்களைக் கூட சகிப்புத்தன்மையுடன் அனுமதிப்பது இந்த சேனலின் சிறப்புகளில் ஒன்று. சுயபகடி என்பது ஒரு முக்கியமான பண்பு. ரியோவும் அவரது மனைவியும் சந்தித்த உணர்ச்சிகரமான காட்சியை தலைகீழாக கவிழ்த்துப் போட்டு காமெடியாக்கியது இந்த நகைச்சுவை அணி.
ரியோவின் பெற்றோர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தது சிறப்பு. ஒரு நடுத்தர வர்க்கத்தின் பின்னணியிலிருந்து கிளம்பி இத்தனை தூரம் முன்னேறியிருக்கும் ரியோவின் வாழ்க்கை வளரும் இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம். ரியோவின் பெற்றோர்கள் மேடையில் பெருமிதமாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ந்திருப்பார்கள்.
அடுத்து ஆரம்பித்தது அந்த சீரியஸ் காமெடி. ரம்யாவின் ரசிகர்மன்ற பேரவை ஒன்று ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்தது. அதற்கு முன்னால் ரம்யாவின் மெகாசைஸ் கட்அவுட்டிற்கு பூஜை, பால் அபிஷேகம் செய்யும் காட்சிகளின் தரிசனமும் நமக்கு காணக் கிடைத்தது. அம்மணியின் லெவல் இப்போது எங்கேயோ போயிருக்கிறது. “மேடம்... இதுக்கெல்லாம் எவ்ள செலவு ஆச்சு?” என்று அவரிடம் தனியாக விசாரிக்க வேண்டும். அவரின் பாணியிலேயே சொன்னால் ‘'இது வேற லெவல் ஸ்ட்ராட்டஜி. வேற லெவல் ஸ்ட்ராட்டஜி...''
இந்த நகைச்சுவையைத் தாண்டி ரம்யாவின் சகிப்புத்தன்மைக்கும் நிரந்தர புன்னகைக்கும் கிடைத்த பரிசாகவே ரசிகர்களின் இந்த எதிர்வினையை எடுத்துக் கொள்ள வேண்டும். அசந்தர்ப்பமான நேரத்திலும் புன்னகையைத் தவற விட்டு விடக்கூடாது என்பதை ஒரு பாடமாகவே நடத்திச் சென்றிருக்கிறார் ரம்யா. இவராலேயே Dairy மில்க் சாக்லேட் பிராண்டிற்கு எக்ஸ்ட்ரா மைலேஜ் கிடைக்கும் போலிருக்கிறது. சோம் காலி கவர் தந்து அல்வா தந்த போது அவரின் ரசிகர்கள் அப்படி ஏமாற்றாமல் பிரிக்காத சாக்லேட்டை பரிசாகத் தந்து மகிழ்ந்தார்கள். ஆனால் இதற்குள் இருக்கும் உள்குத்துதான் என்னவென்று தெரியவில்லை.
ஃப்ரீஸ் டாஸ்க்கின் போதே அனிதா மற்றும் அவரின் கணவரின் சந்திப்பு எப்படியிருக்கும் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அதை ஓரளவிற்கு இந்த மேடையில் காண முடிந்தது.
அனிதா உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் நால்வரை அழைத்து அவர்களின் கண்களைக் கட்டுவது போல் பாவனை செய்து அனிதாவின் கண்களை மட்டும் கட்டி விட்டார்கள். எதிரேயிருக்கும் பொருளை அவர் கண்டுபிடிக்க வேண்டுமாம். வந்த பொருள் அனிதாவின் கணவர் பிரபாகரன். தன் கணவரை எதிர்பாராத தருணத்தில் பார்த்ததும் தன் பிரத்யேக சிரிப்பை மெளனமாகச் சிந்தினார் அனிதா. மைக் இல்லாமலேயே அவரின் விநோதமான சிரிப்புச் சத்தம் நம் காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
ரியோவைப் போலவே ஒரு நடுத்தர வர்க்க பின்னணியில் இருந்து சாதித்தவர் என்பதால் அனிதாவும் ஒரு முன்னுதாரண அடையாளம்தான். அதிலும் ஒரு பெண் சமூகத்தடைகளைத் தாண்டி வருவது கூடுதல் மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயம். ‘'கன்னுக்குட்டி என்பதை நான் ரொமான்ஸாக எல்லாம் அழைக்க மாட்டேன்'’ என்று சொல்லி அந்த வார்த்தையின் ரொமான்ஸ் சதவிகிதத்தைக் கணிசமாக குறைத்தார் பிரபாகரன்.

‘புளியங்கா...’ என்று ஆரம்பித்து ஒரு நெடிய பாடலைப் பாடினார் வேல்ஸ் ட்யூட். அவர் பாடி முடித்ததற்குள் ஒரு புளிய மரமே வளர்ந்து முடிந்திருக்கும். அடுத்து மேடையில் அழைக்கப்பட்டவர் ஆரி. எனில் நிகழ்ச்சி கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது. (ஆவ்வ்... ஞாயிறு மதியங்களில் உறங்காமல் இருப்பது பெரும்பாவங்களில் ஒன்று.)
‘'என் வாழ்க்கையில் எடுத்த சரியான முடிவு பிக்பாஸ்ஸிற்கு சென்ற முடிவு. இது விஜய் டிவியின் வெற்றி. உழைக்கும் மக்களின் வெற்றி'’ என்று டி.ஆர் பாணியல் அடுக்கிய ஆரி ‘'கஷ்டப்பட்டு உழைக்காமல் இஷ்டப்பட்டு உழை’' என்கிற பன்ச் வசனத்தையும் பேசினார். தன்னுடைய வெற்றியை சக போட்டியாளர்களுக்கும் பகிர்ந்தளித்து, அவர்களுக்கும் சேர்த்து கிரெடிட் தரும் ஆரியின் நற்பண்பு பாராட்டத்தக்கது.
'‘ஒரு விமர்சனம் என்பது ஒருவரை தூக்கி உயர்த்த வேண்டும். கற்றுத் தந்து, திருத்த முயலும் விமர்சனங்கள் சரியானவை. ஆனால் ஒருவரைப் பற்றி தரக்குறைவாக எழுதி கீழிறக்கும் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை’' என்பது போல ஆரி பேசிய உணர்ச்சிகரமான உரை நன்று.
பாலாஜிக்கு இளம் பெண்கள், ரம்யாவிற்கு ரசிகர் பேரவை என்று வந்தார்கள். ஆனால் ஆரிக்கு விவசாயிகள் வந்தார்கள். பாரம்பரிய நெல் ரகங்களை, செடிகளைப் பரிசாக அளித்த அவர்கள், ‘ஆரி என்கிற நடிகரை விடவும் ஒரு விவசாயியாக அவர் வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி’ என்று மனமார பாராட்டினார்கள். ‘'படைச்சவன் மட்டும் கடவுள் இல்ல... விதைச்சவனும் கடவுள்தான்'’ என்று இன்னொரு பன்ச் வசனத்தை எடுத்து விட்டார் ஆரி. ('பூமி' படத்திற்கு உபயோகப்படுத்தியிருக்கலாம்).
“உங்களுக்கு தோல்வி வரும்போது துவண்டு அமர்ந்து விடாமல் உடனே ஏதாவதொரு பாசிட்டிவான விஷயத்தைப் பண்ணுங்க'’ என்று தன் அனுபவத்தையே முன்னுதாரணமாகக் கொண்டு ஆரி செய்த உபதேசம் மிகச் சிறப்பான அறிவுரை. ‘மாறுவோம்... மாற்றுவோம்’ என்கிற தலைப்பில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் நாட்டு விதைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் இயக்கமாக ஆரி செயல்பட முனைந்திருப்பது நல்ல விஷயம்.

அறிமுகம் இல்லாத நடிகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருக்கும் நல்ல தகவலை மேடையில் பகிர்ந்து கொண்ட ஆரி, ‘வீட்டிற்கு ஒரு மரம் நடுங்கள்’ என்கிற அத்தியாவசியமான செய்தியுடன் தன் உரையை முடித்துக் கொண்டதோடு நிகழ்ச்சியும் முடிந்தது.
ஏற்கெனவே சொன்னதுதான். பிக்பாஸ் என்கிற விளையாட்டின் எல்லைக்குள் ஆரி மீது சில விமர்சனங்களை வைக்க முடிந்தாலும், இறுதிப் போட்டியில் அவர் வென்றது முக்கியமான அம்சம். ‘ஒரு நேர்மையாளனுக்கு வீழ்ச்சி ஏற்படக்கூடாது’ என்று நம் சமூகம் தங்களின் மனதின் அடியாழத்தில் இன்னமும் நினைப்பதுதான் ஆரியின் வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்த நேர்மறையான எண்ணவோட்டம் அழியாமல் இருப்பதால்தான் சமூகத்தின் அறவுணர்ச்சியும் சாகாமல் இருக்கிறது. அந்த வகையில் ஆரியின் வெற்றி ஒரு நேர்மறையான அடையாளம். ஒரு சமிக்ஞை. இந்த மனோபாவம் நீடித்து நிலைக்கட்டும்.
இந்தக் கட்டுரைத் தொடருக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கும் வரவேற்பிற்கும் மீண்டும் நன்றி. இன்னொரு சந்தர்ப்பத்தில் இணைவோம் நண்பர்களே..