Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 3: `வௌங்கலைதான்... ஆனா புரிஞ்சுச்சு' ஜனனி; மாமியாரான சாந்தி, நாத்தனாரான மகேஸ்வரி!

பிக் பாஸ் 6, நாள் 3

பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியை வாயார பாராட்டினார் முத்து. “என் அம்மா அப்பாவுக்கு பொறவு என்னை இடுப்புல தூக்கிட்டுப் போய் சுச்சா போக வைச்சது இவுங்கதான்” என்று ரெட் கார்ப்பெட் உபசாரத்தை வியந்து போற்றினார்.

Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 3: `வௌங்கலைதான்... ஆனா புரிஞ்சுச்சு' ஜனனி; மாமியாரான சாந்தி, நாத்தனாரான மகேஸ்வரி!

பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியை வாயார பாராட்டினார் முத்து. “என் அம்மா அப்பாவுக்கு பொறவு என்னை இடுப்புல தூக்கிட்டுப் போய் சுச்சா போக வைச்சது இவுங்கதான்” என்று ரெட் கார்ப்பெட் உபசாரத்தை வியந்து போற்றினார்.

பிக் பாஸ் 6, நாள் 3

சில தரமான சம்பவங்கள் இன்று நடைபெற்றன. என்னவென்று ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அதற்கு முன் ஒரு விஷயம். விநோதமான கற்பனைதான். எல்லோருமே ஆண் போட்டியாளர்களாக இருப்பது போல் ஒரு பிக் பாஸ் ஷோவை ஆரம்பிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மூன்றே நாள்களில் இழுத்து மூட வேண்டியதுதான். சண்டையே வராது. அப்படியே வந்தாலும் “சரி மச்சான்... வா டீ சாப்பிடலாம்” என்று தோள் மீது கை போட்டுச் சென்று விடுவார்கள். கன்டென்ட் கிடைக்காது.

ஆனால் இரு பாலர்களை வைத்து, ஏன் சாம்பிளுக்கு ஒரு ஜோடியை வைத்து ஷோ ஆரம்பித்தால்கூட போதும். நூறு நாள்கள் என்ன… ஒரு வருடத்திற்குக் கூட தாங்கும். சும்மாவா சொன்னார்கள் ஆண்களின் பூர்விகம் செவ்வாய், பெண்களின் பூர்விகம் சுக்கிரன் என்று?! இரு துருவங்கள் ஆயிற்றே!

பிக் பாஸ் 6, நாள் 3 - ரச்சிதா
பிக் பாஸ் 6, நாள் 3 - ரச்சிதா

நாள் 3-ல் நடந்தது என்ன?

‘அதிக டெஸிபலில் யார் கத்துவது’ என்ற போட்டி தொடர்ந்தது. இரண்டாவது வாய்ப்புக்காக ஒரு அணி மல்லுக்கட்ட, மற்றவர்கள் சத்தம் போட்டு இதை எதிர்த்தார்கள். குறிப்பாக ஜி.பி.முத்து எகிறி எகிறி வாக்குவாதம் செய்ததைப் பார்க்க வியப்பாக இருந்தது. ‘ஒத்தையில இருக்க பயமாயிருக்கு’ என்று நடுங்கிய ஆசாமியா இவர்?!

பெண்களின் வரிசையில் வந்த ரச்சிதாவிற்கு சீரியலில் வசனம் பேசியதால் வந்த பழக்கமோ, என்னமோ, ‘வீச்’ என்று கத்தி அதிக அளவை எளிதில் ‘ரீச்’ செய்தார். பாவம் அந்த மைக்குக்கே ஒரு கணம் ஹார்ட் அட்டாக் வந்திருக்கும். கத்தி விட்டு அமர்ந்த ரச்சிதா, ஏதோ கின்னஸ் சாதனை செய்தது போல மற்றவர்களிடம் ஹைபை தந்து கொண்டிருந்தார். ஆக பெண்கள் வரிசையில் ரச்சிதாவும் ஆண்கள் வரிசையில் ஜி.பி.முத்துவும் வெற்றி பெற்று தலா ஒரு ஸ்டார் பெற்றார்கள்.

இடம் மாறிய ‘வாழைப்பழ’ தண்டனை

ரெவ்யூ டைம். ஒவ்வொரு கிளப்பும் எப்படிச் செயல்பட்டது என்கிற பொது விசாரணை நடைபெறும். ஜனனியும் சாந்தியும் க்ளீனிங் கிளப் மீது சில புகார்களைச் சொன்னார்கள். இறுதியில் இந்த கிளப்பிற்கு 3 ஸ்டார் கிடைத்தது.

பிக் பாஸ் 6, நாள் 3
பிக் பாஸ் 6, நாள் 3

அடுத்ததாக கிச்சன் கிளப் மீது வேக வேகமாகப் புகார் சொன்ன ஜனனியை, ‘அடேங்கப்பா... ஆரம்ப நாள்ல இந்தப் பொண்ணு பூனை மாதிரி இருந்தது. இப்ப என்ன போடு போடுது’ என்பது போல் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ADK. கிச்சன் கிளப்பிற்கும் 3 ஸ்டார்கள். புகார்களுக்குப் பதில் சொன்ன போது மகேஸ்வரியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. கிளப் ஓனரான ஷிவின் ‘தேமே’ என்று சும்மா இருந்தார்.

பாத்திரம் கழுவும் கிளப்பின் சேவைக்கு ஏகோபித்த பாராட்டு கிடைத்தது. சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கும் போதே அதிலிருக்கும் கரண்டியை உருவி கழுவி வைத்து விடுமளவிற்கு ஸ்பீடாகச் செயல்பட்டார்களாம். இவர்களுக்கு 4 ஸ்டார்கள்.

பாத்ரூம் சுத்தம் செய்யும் அணியை வாயார பாராட்டினார் முத்து. “என் அம்மா அப்பாவுக்கு பொறவு என்னை இடுப்புல தூக்கிட்டுப் போய் சுச்சா போக வைச்சது இவுங்கதான்” என்று ரெட் கார்ப்பெட் உபசாரத்தை வியந்து போற்றினார். இந்த கிளப்பிற்கும் 4 ஸ்டார்கள்.

அடுத்ததாக ஸ்வாப்பிங் டைம். வாழைப்பழ பெட் தண்டனை பெற்றிருக்கும் நால்வரும் அவரவர்களின் கிளப் ஓனர்களிடம் சென்று “நான் எப்படில்லாம் வேலை பார்த்தேன். ஆனா அவன் சரியாவே வேலை செய்யலை” என்று சொல்லி இன்னொருவரை கோத்து விட வேண்டும். கிளப் ஓனர் கன்வின்ஸ் ஆகிவிட்டால் இவர் தப்பித்து விடுவார். சுட்டிக் காட்டப்பட்டவர் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாமினேஷனிலும் இடம்பெற்றாக வேண்டும்.

பிக் பாஸ் 6, நாள் 3 - விக்ரமன், ஷிவின்
பிக் பாஸ் 6, நாள் 3 - விக்ரமன், ஷிவின்

ADK மீது விக்ரமன் சொன்ன புகாரை கிச்சன் கிளப் ஓனர் ஷிவின் ஏற்கவில்லை. ஆனால், ராம் மீது நிவா சொன்ன புகாரை ஏற்றுக் கொண்ட அமுதவாணன், நிவாவை ரிலீஸ் செய்து ராமைத் தூக்கி வாழைப்பழ பெட்டில் போட்டார். இதைப் போலவே க்வின்சியின் கோரிக்கையைக் கருணையோடு கேட்ட கதிரவன், க்வின்சியை ரிலீஸ் செய்து விட்டு அஸிமை தண்டனை ஏரியாவில் மாற்றினார். தானே கிளப் ஓனராக இருந்தும் ஆயிஷாவின் மீது குற்றம் சொல்லி தன்னை ரிலீஸ் செய்து கொண்டு ஆயிஷாவை மாட்டிவிட்டார் ஜனனி.

‘புரிஞ்சுச்சா..? வௌங்கலைதான்... ஆனா புரிஞ்சுச்சு...’

இந்தச் சமயத்தில்தான் ஆரம்பித்தது ஒரு ரணகள காமெடி. ஜனனியின் புகாரை மறுத்து பொதுவில் விளக்கம் சொன்ன ஆயிஷாவிடம் “நீங்க எங்ககிட்ட விளக்கம் சொல்ல வேணாம். உங்க ஓனரை கன்வின்ஸ் பண்ணுங்க... அது போதும்” என்று மகேஸ்வரி இடைமறிக்க “அய்யோ... என்னை விட்டுடுங்க... வாழைப்பழம் என்ன... நான் எலுமிச்சம் பழத்துல கூட படுத்துக்கறேன்” என்று எளிதில் டென்ஷன் ஆனார் ஆயிஷா.

பிக் பாஸ் 6, நாள் 3
பிக் பாஸ் 6, நாள் 3

இந்தப் பஞ்சாயத்து முடிந்ததும் பாத்ரூம் ஏரியாவில் ஆயிஷாவிற்கும் ஜனனிக்கும் ஓர் உரையாடல் நடந்தது. இவர்களுக்கு நடுவராக தனலஷ்மி செயல்பட்டார். இந்த நாளின் சிறந்த காமெடி காட்சி இதுவே. “நான் சொல்றது உனக்குப் புரியுதா... புரிஞ்சுதுன்னா, புரிஞ்சதுன்னு சொல்லு. புரியலைனை்னா... புரியலைன்னு சொல்லு” என்று ஆயிஷா ஆரம்பிக்க “எனக்கு விளங்கேயில்லை... விளங்கிச்சின்னா சொல்லுவேன். ஆனா நீ சொன்னது எனக்கு விளங்கிச்சு” என்று ஜனனி சொல்ல “இவளுக்கு நான் சொல்றது புரியவேயில்லை” என்று ஆயிஷா பதிலுக்கு வெடித்தார்.

ஏதோ சீன அதிபருக்கும் அமெரிக்க அதிபருக்கும் உலக சமாதானம் குறித்த பேச்சு நடப்பது போல் இதை மொழிபெயர்க்க உள்ளே புகுந்தார் தனலஷ்மி. “ஆக்சுவலி அவ என்ன சொல்றான்னா... அவளுக்குப் புரியலையாம்... புரியாம எப்படித் தலையாட்டுவா?” என்று தனலஷ்மி சொல்ல, “எனக்கு விளங்கலைதான்.. ஆனா விளங்குச்சு” என்று ஜனனி மறுபடியும் ஆரம்பிக்க ‘அய்யோ...’ வென்று அலறி பாயைப் பிறாண்ட ஆரம்பித்தார் ஆயிஷா. (இதைப் படித்து முடித்த பின் உங்களுக்கு ஏதாவது விளங்குச்சா? அதாவது புரிஞ்சுச்சா?) ஷோ இப்படியே போனால் ‘வௌங்கிடும்’.

புகைய ஆரம்பித்த கிச்சன் ஏரியா

மூன்றாம் நாள் விடிந்தது. ‘ஜித்து ஜில்லாடி’ பாடலை அலறவிட்டார் பிக் பாஸ். தூக்கக் கலக்கத்திலிருந்த ஜனனி “இப்பத்தான் முன்ஜாமீன்ல ரிலீஸ் ஆயிருக்கோம்” என்கிற பதற்றத்துடன் ஓடி வந்து நடனத்தில் இணைந்து கொண்டார்.
பிக் பாஸ் 6, நாள் 3
பிக் பாஸ் 6, நாள் 3

ஜி.பி.முத்துவை அதிக அளவில் காமெடி ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்பவர் அமுதவாணன்தான். முத்துவை வைத்து அமுதவாணன் ஸ்கோர் செய்ய நினைக்கும் முயற்சிகள் பல சமயங்களில் ரசிக்க வைத்தாலும் சில முறை ஓவர் டோஸாகி விடுகிறது. “ஹீரோவா நடிக்கறீங்களாமே... கேள்விப்பட்டேன்” என்று அமுதவாணன் கிண்டலாக ஆரம்பிக்க “ஆமாம். பேச்சு வார்த்தை நடக்குது” என்று மையமாகச் சொன்னார் முத்து. சோப்பு டப்பாவும் பவுடர் டப்பாவும் இல்லாமல் எங்குமே செல்ல மாட்டாராம் முத்து.

கிச்சன் ஏரியாவில் மறுபடியும் புகைய ஆரம்பித்தது. “நேத்து என்னை மட்டும் கிச்சன் யூனிபார்ம் போட்டுட்டு வரச் சொன்னீங்க. இப்ப நீங்க போடாம இருக்கீங்களே” என்று ஷிவின் ஆரம்பிக்க ‘அது போன மாசம்... இது இந்த மாசம்...’ என்கிற காமெடி போல “நேத்து உனக்கு வேலையில்லை. இப்ப எனக்கு வேலை இருக்குதுல்ல” என்று கூலாகச் சொல்லி விட்டு உப்புமாவைக் கிளற ஆரம்பித்தார் சாந்தி மாஸ்டர். (இவரையும் உப்புமாவையும் எளிதில் பிரிக்க முடியாது போல!). கிளப் ஓனர் என்கிற பதவியைச் சரியாகக் கையாளத் தெரியாமல் ஷிவின் தவிப்பது நன்கு தெரிகிறது.

சில நிமிடங்களுக்குப் பிறகு சாந்தியும் மகேஸ்வரியும் ஓரமாக அமர்ந்து ஷிவினைப் பற்றி புறணி பேச ஆரம்பித்தார்கள். “அவளுக்குச் சமையல் பத்தி ஒண்ணுமே தெரியல... நாமதான் எல்லோமே செய்ய வேண்டியிருக்கு” என்று சாந்தி மாமியார் ஆரம்பிக்க “ஆமாங்க்கா. இன்வால்மெண்ட்டே இல்லை” என்று ஒத்து ஊதினார் நாத்தனார் மகேஸ்வரி. (நல்ல குடும்பக் கூட்டணி!). கிச்சன் கிளப் ஓனராக ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டது சாந்திக்குப் பிடிக்கவில்லை. எனவே இந்த வாரம் பூராவும் புகைந்து கொண்டே இருப்பார் போல.

பிக் பாஸ் 6, நாள் 3
பிக் பாஸ் 6, நாள் 3

அசலான கோளாறும் அஸிமின் சுவாரஸ்ய கடலையும்

கிச்சன் ஏரியாவில் இப்படி என்றால் பெட்ரூம் ஏரியாவில் இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டிருந்தது. அது காமெடி காட்சியா அல்லது சீரியஸ் காட்சியா என்றே புரியவில்லை. க்வின்சியிடம் பேசும் போது ஒருமையில் பேசி விட்டார் அசல். “'கோளாறா பேசாதீங்க. வாங்க போங்க’ன்னு பேசுங்க” என்று க்வின்சி காண்டாக ஆரம்பிக்க, ஓர் இளைஞனுக்குரிய வேகத்தில் துடிப்பான உடல்மொழியில் ஜாலியாக ரிப்ளை தர ஆரம்பித்துவிட்டார் அசல். இருவருக்கு இடையேயும் சர்காஸ்டிக்காக ஆரம்பித்த கிண்டல் மெல்லச் சூடாக ஆரம்பித்தது. அசலைத் தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்திய அஸிம் “நீ மேல கதையைச் சொல்லும்மா...” என்று கடலையைத் தொடர ஆரம்பித்தார். (க்வின்சி வேறு கடந்த சீசன் ஷிவானியின் ஜாடையில் இருக்கிறார். என்ன ஆகப் போகிறதோ?!)

அசலுக்குப் பெண்களிடம் அதிகம் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. தமிழ் சினிமா ஹீரோ மாதிரி “இந்தப் பொண்ணுங்க இருக்காங்களே... நம்பவே நம்பாதீங்க” என்கிற மோடில் இருக்கிறார். மறுபடியும் க்வின்சியிடம் திரும்பி வந்த அசல் “சும்மா லுலுவாய்க்குத்தான். கோச்சுக்காத” என்று சமாதானம் ஆனார். ஆனால் க்வின்சியோ “இவனைப் பார்த்தா என் தம்பி ஞாபகம்தான் வருது” என்று சொல்லி ஒரேயடியாக ஜோலியை முடித்துவிட்டார். (வட போச்சே?!).

மாற்றுப் பாலினத்தவர்களைப் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் நிறைய வளர வேண்டும் என்று தெரிகிறது. ஷிவினைப் பற்றி ஜனனி, தனலஷ்மி மற்றும் ஆயிஷா ஆகிய மூவரும் பேசிய உரையாடலே இதற்குச் சாட்சி. “அவங்களுக்கு எப்படி முடி வளரும்?” என்று அபத்தமானதொரு கேள்வியைக் கேட்டார் ஜனனி. ஷிவின் ஒரு Transwoman என்பதே இவர்களுக்குத் தெரியாது என்பது மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள். இதில் சற்றாவது சென்சிபிளாக பேசியது ஆயிஷாதான்.

பிக் பாஸ் 6, நாள் 3
பிக் பாஸ் 6, நாள் 3

‘அப்ப... சாம்பார் வைக்கலாமா... நேத்துதாண்டா சாம்பார் வெச்சோம்!’

கிச்சனில் மீண்டும் இன்னொரு பஞ்சாயத்து. இரவு உணவிற்காகத் தயாரிக்க வேண்டிய சாம்பாரை மதியமே தயாராக்கிக் கொண்டிருந்தது கிச்சன் டீம். “இப்ப செய்றதுக்குப் பதில் நைட்டு செய்யலாமே... ப்ரெஷ்ஷா இருக்கும்” என்று யாரோ ஆரம்பிக்க “சூடு பண்ணிக்கிட்டா போச்சு” என்று பதில் தந்தார் சாந்தி. இந்த விவகாரத்தில் தனலஷ்மிக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் முட்டிக் கொண்டது. “லூஸூ மாதிரி கேள்வி கேட்கறாங்க” என்று மகேஸ்வரி ஆரம்பிக்க “நீங்கதான் லூஸூ” என்று தனலஷ்மி பதிலடி தரச் சாம்பாருக்குப் பதில் இவர்கள் இருவரும் கொதிக்க ஆரம்பித்தார்கள்.

“சாம்பார்ல முருங்கே போடணும். அப்பத்தான் டேஸ்ட்டா இருக்கும்” என்று முத்து ஆரம்பிக்க “சாம்பார்ல முருங்கை போடறது இருக்கட்டும். நீ முதல்ல ஜட்டி போடு” என்று முத்துவை அமுதவாணன் கலாய்க்க ‘செத்த பயலே. நாறப் பயலே’ என்கிற தன் திருமந்திரத்தை ஸ்பஷ்டமாக ஓத ஆரம்பித்தார் முத்து.

ஆண்களுக்கான ஒரு போட்டி நடந்தது. ஒரு சாய் பலகையின் முனையில் உள்ள மூன்று குழிகளில் பந்துகளை நகர்த்தி நிறுத்த வேண்டும். இதில் வெற்றி பெற்ற மணிகண்டன் உற்சாகத்தில் கத்தியதில் அந்த ஏரியாவே பயந்திருக்கும். இந்த உற்சாகத்தை ‘டெஸிபல் டெஸ்ட்டில்’ மணிகண்டன் காட்டியிருந்தால் தங்க மெடலே வாங்கியிருப்பார்.

பிக் பாஸ் 6, நாள் 3
பிக் பாஸ் 6, நாள் 3
‘மகிழ்ச்சி, வாக்குவாதம், கிண்டல் என்று வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க ஷிவின் மட்டும் தனி உலகத்தில் இருக்கிறாரே’ என்கிற கவலையான வாய்ஸ் ஓவருடன் இந்த எபிஸோடு நிறைவு பெற்றது. (அப்படியென்றால் டைரக்டர் மிஷ்கின் மாதிரி மிட்நைட்டிலும் கூலிங்கிளாஸ் போட்டுச் சுற்றுகிற ஷிவின்தான் முதல் வாரப் பலியாடா?!).