ஜெயமோகன் எழுதிய ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலில் ஒரு சூழல். மாற்றுத் திறனைாளிகளை பிச்சை எடுக்க வைத்து பணம் ஈட்டும் குற்றத் தொழிலின் பங்குதாரராக ஒருவர் இருப்பார். அது பற்றி அவருக்கு பெரிதாக குற்றவுணர்வு இருக்காது. அவர்களை விற்று, வாங்கி வணிகம் செய்வார். ‘உருப்படிகள்’ என்றுதான் அவர்களைக் குறிப்பிடுவார். இப்படிப்பட்ட ஒரு ஆசாமி, அவருக்கு தனிப்பட்ட அளவில் ஒரு ஆழமான பிரச்சினை வரும் போது ‘நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்?!’ என்று கடவுளிடம் முறையிட்டு அரற்றுவார்.
நம்மில் பெரும்பாலோனோர் இப்படித்தான் இருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ பலரின் உணர்வுகளை மிதித்து கடந்து போய்க் கொண்டே இருக்கிறோம். அது பற்றிய பிரக்ஞை கூட நமக்கு இருப்பதில்லை. ஆனால் உள்ளுக்குள் நம்மை ‘ரொம்ப நல்லவண்டா’ என்பது மாதிரியே நினைத்துக் கொள்கிறோம். நமக்கு ஒரு பிரச்சினை வரும் போது உடைந்து விடுகிறோம். மனச்சாட்சியின் வெளிச்சத்தை சற்று ஏற்றி வைத்துப் பார்த்தாலே நம்முள் கீழ்மையின் இருள் எத்தனை சதவீதம் உள்ளது என்பது தெரிந்து விடும்.

பிக் பாஸ் வீடும் சமூகத்தின் ஒரு துண்டுதான். இங்குள்ள மனிதர்களும் திட்டமிட்டோ அல்லது திட்டமிடாமலோ கோபத்தில் வார்த்தைகளை இறைத்து மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டு, அவை சுட்டிக் காட்டப்படும் போது ‘நான் என்னய்யா பண்ணேன்?!’ என்று சோர்ந்து அமர்ந்து விடுகிறார்கள். ‘என்னை விடுங்க.. போறேன்..’ என்று கதறுகிறார்கள். இவர்களாவது வெளியில் சென்றால் அவர்கள் தடுக்கி விழுந்த இடங்களை காமிராவில் பதிவான காட்சிகளின் மூலம் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் நமக்கு மனச்சாட்சியும் சுயபரிசீலனையும் மட்டுமே காமிராவாக செயல்பட முடியும்.
நாள் 42-ல் நடந்தது என்ன?
கோட், சூட், கூலிங்கிளாஸ் அணிந்து ‘உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர் ‘லுக்’கில் வந்து நின்றார் கமல். ‘இந்த நூற்றாண்டில் நமக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம் ‘சமநிலை தவறாமல் இருத்தல்’. இனம், சாதி, மதம், மொழி என்று அதைக் குலைக்க எத்தனையோ வடிவங்களில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. சமநிலை குலையாமல் இருந்தாலே அதை ‘சூப்பர் பவர்’ எனலாம். அடுத்தவரின் சமநிலையை தவற வைப்பது ஒரு உத்தி’ என்பது கமலின் முன்னுரை. அவர் சொல்வது யூனிவர்சல் விஷயம் என்றாலும் பிக் பாஸ் வீட்டைப் பொறுத்த வரை அசிம் பற்றி பிரதானமாக சொல்கிறார் என்று எளிதில் யூகிக்கலாம்.

யார் வாள்.... யார் அட்டைக்கத்தி? – ஒரு வில்லங்கமான டாஸ்க்
அகம் தொலைக்காட்சி வழியே வீட்டிற்குள் வந்த கமல் ‘ஒரு சின்ன போட்டி. பீடிகைலாம் கூடாது. Disclaimer போடக்கூடாது. பளிச்சுன்னு பதில் சொல்லணும். அண்ணன், அக்கா, தங்கச்சி பாசம்லாம் காட்டக்கூடாது’ என்று கறாராக சொல்லி விட்டு வாள் மற்றும் அட்டைக்கத்தியை ஸ்டோர் ரூமில் இருந்து வரவழைத்தார். ‘இவர் எனக்கு கடுமையான போட்டியாளர்’ என்று உணர வைப்பவருக்கு ‘வாள்’ தர வேண்டும். ‘இந்தாள் ஒரு ‘டம்மி பீஸ். எனக்கு போட்டியே இல்ல’ என்பவருக்கு ‘அட்டைக்கத்தி’.
இந்த டாஸ்க்கில் ‘ஷிவினிற்கு’ நிறைய வாள்கள் கிடைத்தது தகுதியான ஒன்றுதான். ஆரம்ப வாரத்தில் ஷிவின் நடந்து கொண்டதைப் பார்த்தால் விரைவில் வெளியேறி விடக்கூடிய போட்டியாளர்களில் ஒருவராகத்தான் அவர் தென்பட்டார். ஆனால் மிக விரைவில் தனது கற்றலை நிகழ்த்தி, மற்றவர்கள் வியந்து பிரமிக்கும் போட்டியாளராக வளர்ந்து விட்டார். டாஸ்க்கில் உற்சாகமாக பங்கேற்றாலும், அது முடிந்த பிறகு அதிலிருந்து உணர்ச்சிப்பூர்வமான விலகலை ஏற்படுத்திக் கொள்கிறார். சென்டியாகி அதைப் பற்றியே புலம்புவதில்லை. கூடுதலாக, மற்றவர்களின் புலம்பல்களுக்கு தீர்வு சொல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். கடைசிக் கட்டம் வரைக்கும் பயணிக்கும் கடுமையான போட்டியாளராக ஷிவின் இருப்பார் என்று தெரிகிறது.

அசிமிற்கு நிறைய ‘அட்டைக்கத்திகள்’ கிடைத்தன. இந்த டாஸ்க்கில் வழக்கம் போல் ‘சிரிச்சா மாதிரியே’ முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் அசிம். ‘பல பேருக்கு கேள்வியே புரியலை’ என்று டாஸ்க்கின் இறுதியில் அவர் சொன்னது உண்மைதான். ஏனெனில் அசிம் எத்தனை கடுமையானவராக இருக்கிறார் என்பதை விளக்கமாகச் சொல்லி விட்டு ‘ஆனால் அவர் அட்டைக்கத்தி’ என்று தருவது ஒரு முரண். ‘அவரை எனக்கு பிடிக்காது’ என்கிற காரணத்திற்காக மட்டுமே இது தரப்பட்டதை உணர முடிகிறது.
சிலர் சுட்டிக் காட்டியது போல் தன்னுடைய கோபத்தையும் மற்றவர்களை டிரிக்கர் செய்வதையும் அசிம் சற்று கட்டுப்படுத்திக் கொண்டால் சிறந்த போட்டியாளராக மாறுவார். மாறாக இப்படியே தொடர்ந்தால், இந்த விளையாட்டிற்கு ‘கன்டென்ட்’ தரும் நபராக மட்டுமே இருந்து அவப்பெயருடன் வெளியேறுவார்.
கமலின் நுட்பமான விசாரணை ஸ்டைல்
ஒரு பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் ‘கால் எப்படி இருக்கு?’ என்று கதிரவனை விசாரித்தார். இது அவருடைய விசாரணையின் ஒரு ஸ்டைல். தன்னுடைய மெயின் டார்கெட்டை ஆரம்பத்தில் நெருங்க மாட்டார். ஆனால் அதனைச் சுற்றியுள்ளவர்களை விசாரிப்பார். அவர்களை பாவனையாக கடிந்து கொள்ளவும் செய்வார். “என்னய்யா இந்தாளு.. முக்கியமான நபரை விட்டுட்டு என்னெ்னமோ செய்யறாரே’? என்று பார்வையாளன் புழுங்கிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய மெயின் இரையின் மீது ஆவேசமாக வேட்டையாடத் துவங்குவார். ‘சூப்பருப்பு.. இதத்தான் எதிர்பார்த்தேன்’ என்று பார்வையாளன் பரவசம் அடைவான்.
இப்போதும் அப்படியே நடந்தது. கதிரவனை விசாரித்து விட்டு அடுத்ததாக ஏடிகேவிற்கு நகர்ந்த கமல் “நீங்கதானே பூட்டினீங்க.. சாவி யார் கிட்ட இருந்தது.. சண்டை போட்ட ஆர்வத்தை சாவி தேடறதுல காட்டலையே?” என்றெல்லாம் பாவனையாக கோபம் காட்ட “நான் அஜாக்கிரதையாக இருந்து விட்டேன். உணர்ச்சி மிகுதியில் சண்டை போட்டேன். பகடைக்காயாக மாத்திட்டாங்க. மன்னிச்சுடுங்க’ என்று முழு சரணாகதி அடைந்து விட்டார் ஏடிகே.

“அசிம்தான்.. சாவியை ரொம்ப நேரம் வெச்சிருந்து.. தூக்கிப் போட்டார்னா.. அதைப் பாத்தவங்களாவது சொல்லக்கூடாதா?” என்று ஷவினையும் கேள்வி கேட்ட கமல் “ஏங்க.. உங்களுக்கே தெரியும்.. ஏன் சொல்லல?” என்று கதிரவனின் மீது பாய்ந்தார். “டாஸ்க்படி நான் ராஜவிசுவாசி சார். தளபதியோட ஆளு. இருந்தாலும் ரகசியமா சொன்னேன்” என்று கதிரவனும் சரணாகதி அடைய.. மிக நிதானமாக தனது மெயின் டார்கெட்டை நோக்கி நகர்ந்தார் கமல். (என்னா வில்லத்தனம்?!).
“அசிம்.. இதுதான் உங்க ஸ்ட்ராட்டஜின்னு சொல்லிட்டீங்கன்னா.. மத்தவங்களை வார்ன் பண்ணிடுவேன்’..ன்னு ஏற்கெனவே சொன்னேன்.. ஏடிகேதான் உங்க முதல் இரை. எங்க தொட்டா அந்த மெஷின் புல் ஸ்பீட்ல போகும்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு.. சாவி தொலைஞ்சு போன விஷயத்தை ரொம்ப தூரம் போக விட்டீங்க.. விளையாட்டா இருந்தாலும் அதுல ஒரு நேர்மை இருக்கணும். டாஸ்க் முடிஞ்சப்புறமாவது ஏடிகே தோள்ல கைபோட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். இதனால ஒரு நட்பு வளர்ந்திருக்கும். கோபத்தை அதன் எல்லை வரை போக விடறீங்க.. எங்க நிறுத்தணும்ன்னு உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது..விளையாட்டை அளவோட நிறுத்திக்கணும்.. இதனால உங்களுக்கு அடிபட்டுடுமோன்னு கவலையா இருக்கு” என்று பொதுவாகவும் அசிமிற்கு சோ்த்தும் கமல் சொன்ன உபதேசம் அருமையானது.
‘ராப் என்பது புரட்சிகரமான இசை வடிவம்’
“ஏடிகே ராப் பாடினதை சண்டைக்கு நடுவுல கிண்டலடிச்சீங்க.. ராப் என்னும் இசை வடிவத்திற்கு பின்னால் பெரிய புரட்சி வரலாறு இருக்கு. அழுத்தப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர்கள், தங்களின் குரல்வளையையே இசை ஆயுதமா பயன்படுத்திய அரசியல் அது. ஒடுக்குமுறையின் பிரகடனம்.. ‘சாக்கைக் கூத்து’ன்னு இங்க கூட இருந்திருக்கு. மன்னருக்கே புத்தி சொல்ற ஆர்ட் ஃபார்ம் அது.” என்று சொன்ன கமல் “ஏடிகே.. இப்ப பாடுங்க ராப்” என்று கேட்டுக் கொள்ள தமிழும் ஆங்கிலமும் கலந்த ஆவேசமான வரிகளில் ஒருவிதமான ரிதத்துடன் உணர்ச்சிகரமாக பாட ஆரம்பித்தார் ஏடிகே.
அவர் பாடி முடித்ததும் சக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தன்னிச்சையாக எழுந்து வந்து ஏடிகேவை அணைத்துக் கொண்டார்கள். அந்த வரிகளின் தாக்கம் அவர்களின் முகங்களில் தெரிந்தது. ‘இப்ப எப்படியிருக்கு.. ஏடிகே.. இதே விடுதலை உணர்வோட ஆட்டத்தை ஆடுங்க.. சோர்வடைஞ்சிடாதீங்க” என்று அவருக்கு ஆலோசனை சொன்னார் கமல். அசிமின் டிரிக்கர் காரணமாக மனம் உடைந்திருந்த ஏடிகேவிற்கு இது மிகப்பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்.

“போன வாரம் ஒதுங்கி நின்னேன்.. என்ன அசிம் இப்படி ஆயிட்டாருன்னு மத்தவங்க சொன்னாங்க.. சரின்னு இந்த வாரம் இற்ங்கி விளையாடினா இப்படிச் சொல்றாங்க” என்று அசிம் குழம்பி நிற்க “வெச்சா. குடுமி.. சிரைச்சா.. மொட்டைன்னு விளையாடாதீங்க” என்று கமல் சிரித்தார். ‘மற்றவர்கள் சொல்கிற படி விளையாடுகிறேன்’ என்று அசிம் தரும் ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள அபத்தத்தை அவரே உணர்கிறாரா என்று தெரியவில்லை. “விக்ரமன்.. நீங்களும் அந்த உப்பு மேட்டர்ல சண்டைல இறங்கிட்டீங்க.. விளையாட்டை விட்டுட்டீங்க” என்று அவருடைய பிழையையும் சுட்டிக் காட்டினார் கமல்.
அடுத்ததாக தனலஷ்மியை நோக்கி பாவனையான கோபத்துடன் கையை உயர்த்திய கமல் “என்ன நெனச்சிட்டு இருக்கீங்க.. நீங்க நெனக்கறபடில்லாம் இங்க நடக்கும்னா..?!” என்று மிரட்டி விட்டு, பின்குறிப்பாக “நீங்க SAVED” என்று நமட்டுச் சிரிப்புடன் சொல்லி விட்டு கமல் விலக, ஆச்சரியத்தில் வாயைப் பொத்திக் கொண்டார் தனலஷ்மி.
‘நான் யாரு.. எனக்கேதும் புரியலையே..’ – குழம்பும் அசிம்
தனிமையில் அமர்ந்த அசிம் “நான் என்ன பண்ணேன்.. என்ன தப்பாயிடுச்சு.. ஒண்ணுமே புரியலையே?’ என்று அனத்த ஆரம்பிக்க அமுதவாணன் வந்து ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் ஏடிகேவின் பாடலை மக்கள் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அடுத்த பக்கத்தில் “என்னையும் சேர்த்து சொல்லிட்டாரே.. ஏன்?’ என்று விக்ரமன் குழப்பத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தார். ‘அசிம் சண்டையை ஆரம்பித்து அடுத்தவர்களையும் அதில் ஆவேசமாக இழுக்கிறார்’ என்னும் போது அவரது உத்திக்கு இரையாகாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். இதை விக்ரமன் உணர வேண்டும்.
பிரேக் முடிந்து வந்த கமல் மீண்டும் ஸ்டோர் ரூமில் இருந்து சில பொருட்களை வரவழைத்தார். ‘எய்தவன் இருக்க அம்பை நோவதேன்.’ன்னு சொல்லுவாங்க.. இங்க வில்லு அம்பு இருக்கு.. யார் .. யார் –ன்னு சொல்லுங்க’ என்று புதிய டாஸ்க்கை தந்தார்.

அசிமை வில்லாகவும் கதிரவனை அம்பாகவும் குறிப்பிட்டு இதை ஆரம்பித்து வைத்தார் தனலஷ்மி. “இது பர்சனலா போகுது சார்..” என்று அசிம் ஆட்சேபிக்க “எல்லாமே கேம்தான். காட்சிகள் மாறலாம்” என்று அவரை அமர்த்தினார் கமல். அடுத்து வந்த ஷிவின், அமுதவாணன் வில், ஜனனி அம்பு’ என்று ஆரம்பித்து வைக்க, பின்னர் வந்த பலரும் இதே கூட்டணியைச் சுட்டிக் காட்டினார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் முகங்கள் சுருங்கிக் கொண்டே வந்தன. குறிப்பாக அமுதவாணனின் முகத்தில் சங்கடம் வழிந்தது.
‘கிண்டல் பாடல்’ விஷயத்தில் விக்ரமன் தன்னைச் சுட்டிக் காட்டி வில் தந்தது அமுதவாணனை அதிகம் வருத்தம் கொள்ளச் செய்தது. தன்னுடைய முறை வரும் போது இதற்கான விளக்கத்தை அளித்தார் அமுதவாணன். “பாடல் விஷயத்தில் நான் ஜனனியிடம் எதுவுமே சொல்லவில்லை. இது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இது விக்ரமனின் தவறான புரிதல்’ என்பது அமுதவாணனின் விளக்கம். ‘தனலஷ்மியும் ஆயிஷா’வும் பர்சனலா எடுத்துக்கறாங்க” என்பது அசிமின் புகார். ஆயிஷாவும் அசிமின் மீது எரிச்சலில் இருக்கிறார் என்பது தெரிகிறது.
இந்த டாஸ்க்கை இவ்வளவு நேரம் நிகழ்த்தி விட்டு ‘வில் அம்பு ஆகிய இரண்டையும் வைத்திருக்கிற ராபர்ட் காப்பாற்றப்பட்டார்’ என்று சம்பந்தமே இல்லாமல் சொல்லி மண்டையைக் குழம்ப வைத்து பிரேக்கில் சென்றார் கமல்.
‘என்ன வெளிய அனுப்பிடுங்க’ பட்டியலில் புதிதாக இணைந்த அமுதவாணன்
தன்னையும் ஜனனியையும் இணைத்து ‘கூட்டணி’ இருப்பதாக தொடர்ந்து சொல்லப்படும் புகார் குறித்து அமுதவாணனுக்கு அதிருப்தி இருக்கிறது. இன்று விக்ரமனின் மூலம் அது வெடிப்பு நிலைக்கு சென்று விட்டது. எனவே ‘வெளில அனுப்பிடுங்க பிக் பாஸ்’ என்னும் புராணத்தை அமுதவாணனும் இப்போது பாட ஆரம்பித்து விட்டார். ‘விக்ரமன் சொன்னது தப்பு.. வீடியோ போடுங்க பிக் பாஸ்.. இல்லைன்னா.. நான் போறேன்.. காசு பணம் முக்கியமில்ல. தன்மானம்தான் முக்கியம். எல்லோருக்கும்தான் நான் ஐடியா சொல்றேன்.. அதெல்லாம் வில் – அம்பு மேட்டர் ஆகி விடுமா?..” என்பது அமுதவாணனின் கோபமும் ஆதங்கமும்.

‘ஊர் வாயை மூட முடியாது’ என்பதுதான் இதற்கான பதில். ஒன்று, அந்த மாதிரியான கூட்டணி உண்மையில் இல்லை என்றால் அமுதவாணன் அமைதியாக தன் பாணியில் விளையாட்டைத் தொடரலாம். பார்வையாளர்கள் இதை முடிவு செய்து கொள்வார்கள். இல்லையென்றால், ஜனனியிடமிருந்து முழுவதுமாக விலகி தன்னை நிரூபிக்கலாம். ஆனால் அது செயற்கையாக ஆகி விடும்.
‘திலீப்குமார் என்கிற உன்னத நடிகர்’
‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்த கமல் “புத்தகத்திற்குப் பதிலாக இன்னொரு விஷயம் சொல்றேன். ‘Film Heritage Foundation’ என்கிற அமைப்பு, காணாமல் போய்க் கொண்டிருக்கிற பல பழைய உன்னதமான திரைப்படங்களை புதுப்பித்து வெளியிடுகிறார்கள். என்னுடைய நண்பர் ஷிவேந்திர துங்கர்பூர் இதை மிக உற்சாகமாக செய்கிறார். இந்த வரிசையில் நடிகர் திலீப்குமாரின் சில படங்களை புதுப்பித்து வெளியிடுகிறார்கள்...
... என்னுடைய வானின் நடிப்புச் சூரியன் சிவாஜி.. இதில் இன்னொரு வாத்தியார் திலீப்குமார். அப்போது நடந்த இந்திப் போராட்டம் காரணமாக இந்தித் திரைப்படங்கள் இங்கு வெளியாகவில்லை. ‘தமிழ் வாழ்க’ என்றுதான் இப்போது சொல்வேன். இந்த கேப் காரணமா திலீப் சாஹேப்போட படங்களை என்னால் காணமுடியவில்லை. பிறகுதான் அவரின் மேதமையை கண்டுகொண்டேன். பிராண்டோவுடன் போட்டி போடக்கூடிய அளவிற்கு சிறந்த நடிகர். இந்தியச் சினிமாவின் காட்ஃபாதர் என்று கூட சொல்லலாம். தேவர் மகன் இந்தி வடிவத்தில் நடிக்கச் சொல்லி கெஞ்சிக் கேட்டேன். முடியாதுன்னுட்டார்..

.. இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காரணமாக, தான் இங்கு வெறுக்கப்படுவோமோ என்று நினைத்து ‘யூசுப்கான்’ என்கிற தன் பெயரை ‘திலீப்குமார்’ன்னு மாத்திக்கிட்டார். ஆனா இப்ப நிலைமையில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன் எதிரொலிதான் ‘திலீப்குமார் என்பவர் தன் பெயரை ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ன்னு மாத்திக்கிட்டார்.. இந்த சகிப்புத்தன்மை இன்னமும் வளரணும்.. எஸ்.பாலச்சந்தரின் ‘இது நிஜமா’ ன்ற படத்தோட நெகட்டிவ் எரிக்கப்பட்டு விட்டது. ‘மறுபடியும் எடுக்கலாமா?’ ன்னு அனுமதி கேட்டா அவர் மறுத்துட்டார். அதைத்தான் பிறகு ‘கல்யாணராமனாக’ எடுத்தோம். பாலுமகேந்திராவின் சில படங்கள் காணாம போயிடுச்சு.. பெரிய அவார்டு வாங்கிய சில படங்கள் மட்டும்தான் பாதுகாக்கப்படுது. அவார்டு வாங்காத சில படங்களும் பாதுகாக்கப்பட வேண்டியவையே. இங்கயும் அந்த முயற்சி நடந்தா நல்லாயிருக்கும்’ என்று தன் உரையை முடித்தார் கமல்.
எவிக்ஷனுக்கான டைம். ஜனனி, அசிம், நிவா ஆகிய மூவரும் பட்டியலில் பாக்கி இருந்தார்கள். ‘யார் போவாங்கன்னு நெனக்கறீங்க?” என்று கமல் விசாரித்த போது அசிம் பெயரையே பலரும் சொன்னார்கள். ‘இத்தனை ஸ்ட்ராங் ஆன பிளேயரை பிக் பாஸ் டீம் வெளியேற்றுமா?’ என்கிற எளிய லாஜிக்கை யோசித்திருக்கலாம். சஸ்பென்ஸ் பெரிதாக வைக்காமல் ‘நிவா’வின் எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல். ஆக.. கடைசி வரிசையில்தான் அசிமின் பெயர் வந்திருக்கிறது. இது அவருக்கான எச்சரிக்கை மணி.
‘கான்வென்ட் தமிழில் விடைபெற்ற நிவாஷிணி’
மேடைக்கு வந்த நிவாஷிணியிடம் “மீடியால எதையாவது சாதிக்கணும்”ன்னு சொன்னதை உங்க இன்ட்ரோ வீடியோல பார்த்தேன். என்ன கத்துக்கிட்டீங்க?” என்று விசாரித்தார் கமல். “என்னால முடிஞ்சதை பண்ணேன். ஆனா உள்ள பிரஷர் குக்கர் மாதிரி இருந்தது சார்..” என்பதை தன்னுடைய ‘கான்வென்ட் தமிழ்’ மாடுலேஷனில் க்யூட்டாக சொன்னார் நிவா. ‘வெளில போய் பாருங்க. மாற்றம் தெரியும்’ என்று வழக்கமான புராணத்தைப் பாடினார் கமல். டிவி வழியாக வீட்டிற்குள் பார்த்த நிவா, அனைவருக்கும் வாழ்த்து சொல்லி “மத்தவங்களையும் விளையாட விடுங்க சார்” என்று அசிமிடம் ஜாலியாக சொல்லி விடைபெற்றார்.

‘அடுத்த வாரம் நானும் வந்துடுவேன்’ என்று ராம் சொன்னது அபத்தம். போட்டி முடிவதற்கு முன்பே வெளியேறும் மனநிலைக்கு ஒருவர் வந்துவிடுவது முறையானதல்ல. ஓர் உயர ரக காரில் நிவா ஏறும் காட்சி வந்தது. விளம்பர நோக்கம் போல. தெருமுனையில் இறக்கி விட்டு பிறகு அவரை ஷோ் ஆட்டோவில் ஏற்றி விடுவார்கள் போல.
ஆக. வீட்டின் எண்ணிக்கை இன்னமும் சுருங்குகிறது. மீண்டும் நாமினேஷன்.. இன்னொரு டாஸ்க்.. இன்னொரு கலவரம். இன்னொரு பஞ்சாயத்து. காத்திருப்போம்..