Published:Updated:

Bigg Boss 6 Grand Finale: கோப்பையை வென்ற அசிம்; மனதை வென்ற விக்ரமன், ஷிவின்; முடிவுகள் சொல்வது என்ன?

Bigg Boss 6 Grand Finale

‘பிக் பாஸுக்கு அப்புறமா உங்கள் திட்டம் என்ன?’ என்று கமல் விசாரிக்க ‘சினிமா’ என்றார் அசிம். விக்ரமன் "அரசியல், மக்கள் பணி" என்று சொல்ல, "வெளில போனா வேலை கிடைக்குமான்னு தெரியல" என்று யதார்த்தமான பதிலைச் சொன்னார் ஷிவின்.

Bigg Boss 6 Grand Finale: கோப்பையை வென்ற அசிம்; மனதை வென்ற விக்ரமன், ஷிவின்; முடிவுகள் சொல்வது என்ன?

‘பிக் பாஸுக்கு அப்புறமா உங்கள் திட்டம் என்ன?’ என்று கமல் விசாரிக்க ‘சினிமா’ என்றார் அசிம். விக்ரமன் "அரசியல், மக்கள் பணி" என்று சொல்ல, "வெளில போனா வேலை கிடைக்குமான்னு தெரியல" என்று யதார்த்தமான பதிலைச் சொன்னார் ஷிவின்.

Published:Updated:
Bigg Boss 6 Grand Finale
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்குப் பிறகு, ஆறாம் சீசனின் வெற்றியாளர் யார் என்பதற்கான விடை தெரிந்தது. அசிம் டைட்டிலை வென்றார். விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்றார்கள். இது மக்களின் வாக்கு அல்லது அப்படியாகச் சொல்லப்பட்ட கணக்கு. வெற்றி பெற்ற அசிமுக்கு வாழ்த்துகள். சில விரும்பத்தகாத குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் அவருடைய மனவுறுதியும் தன்னம்பிக்கையும் அசராத துணிவும் நிச்சயம் பாராட்டத்தக்கது. இளையதலைமுறையினர் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது.

ஆறாம் சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் பயணித்ததற்கு அசிம் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். எனவே, அவர் பெற்ற வெற்றியில் ஒரு வகையான நியாயம் இருந்தது. ஆனால் விளையாட்டில் வெற்றி என்பதைத் தாண்டி, சமூகத்திற்கு தனிநபர் அளிக்கும் பங்களிப்புதான் உண்மையான வெற்றி. அந்த வகையில் ஷிவினும் விக்ரமனும் மகத்தான வெற்றியாளர்கள். உதிரிச்சமூகங்களை, மையச்சமூகம் பண்பு மாறாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நியாயம். சமூகநீதியும் கூட. அந்த ‘நார்மலைசேஷனை’ இந்த ஷோவின் வழியாக சிறப்பாக வலியுறுத்தி நிரூபித்துக் காட்டினார் ஷிவின். கொந்தளிப்பான சூழலிலும், அவமதிப்புகளுக்கு மத்தியிலும் ஒருவன் மனவுறுதியுடன் கண்ணியத்தைக் காக்க முடியும் என்பதை மெய்ப்பித்து அரிய விதிவிலக்காக நின்றார் விக்ரமன். இந்த ஷோவின் மூலம் அவர் வலியுறுத்திய சமூக நீதி சார்ந்த விஷயங்கள் முக்கியமானவை.

இந்த மூவருக்கும் பாராட்டுகள்.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

சிரிப்பு, மகிழ்ச்சி, கண்ணீர், நட்பு, பிரிவு என்று இந்த சீசனில் வெளிப்பட்ட பல்வேறு உணர்ச்சித் தருணங்கள் வீடியோவில் காட்டப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதிரடியான இசை பின்னணியில் ஒலிக்க, வண்ணமயமான அரங்கில் டிஜேக்களின் ஆரவாரமான அறிமுகத்துடன் இந்த சீசனின் போட்டியாளர்கள், ஜோடி ஜோடியாக ஆடிய படியே உள்ளே வந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் பேசிய வசனங்களையே இசையால் அலங்கரித்து ஒலிக்கவிட்ட பாணி சிறப்பாக இருந்தது. ராபர்ட் கை கட்டுடன் வந்திருந்தார். ஏடிகே தன் சிகையலங்காரத்தை மாற்றவில்லை. இரண்டாவது முறையாக வீட்டிற்குள் வராத ஜனனியும் இப்போதைய இறுதி நாள் கொண்டாட்டத்தில் தென்பட்டதில் மகிழ்ச்சி. (அம்மணிக்கு பட வாய்ப்புகள் குவியுதாமே?!).

‘யாக்கை திரி’ என்கிற பாடல் ரகளையாக ஒலிக்க, அனைவரும் நடனமாடி ஓய்ந்த பிறகு டிரம்ஸ், தவில், பறை என்று மூன்று தாள வாத்தியங்களும் ஒன்றாகக் கூடி இசைத்த விதம் அருமையாக இருந்தது. அந்தத் தாளத்தை கைகளால் தட்டி எதிரொலித்தபடியே கமல் அரங்கிற்குள் நுழைந்தார்.

‘பெயின்ட்டர் கோவாலு ஆடையணிந்திருந்த கமல்’

அவர் செட்டிற்குள் வரும் போது, சட்டை மற்றும் பேன்ட்டில் தவறுதலாகப் பட்டு விட்ட பெயின்ட் கறையை கவனிக்காமல் அப்படியே உள்ளே வந்து விட்டாரோ என்று முதலில் தோன்றியது. (ஸ்பான்ஸர் கம்பெனியின் பெயின்ட்டாக இருக்குமோ!). ஆனால் அது ஃபேஷன் ஆடையாம். “வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு கண்ணாடி போட்டா ‘அங்கிள்’ன்னு சொல்லி இளம் தலைமுறையினர் நம்மை ஓரமா வெச்சுடுவாங்க. நாம சொல்றது போய்ச் சேராது. அதுக்காகத்தான் இப்படியெல்லாம் டிரஸ் போட வேண்டியிருக்கு” என்று பின்னர் நடந்த எழுத்தாளர் சந்திப்பில் ஜாலியாக ‘தன்னிலை விளக்கம்’ அளித்தார் கமல்.

“இதுவொரு போட்டி. பந்தயம். நூறு மீட்டர் ஓடறது இல்ல. நூறு நாள் வாழ வேண்டிய ஆட்டம். பல்வேறு உணர்ச்சிகள் வீட்டினுள் ததும்பி வழிந்த நிலையில் ஒருவர் வெற்றியடையப் போகிறார். அது யாரென்று பார்ப்போம்... என் கிட்ட சொல்லிக்காமயே வெளில போயிட்ட சிலர் இருக்காங்க. அவங்களைக் கூப்பிடுவோம்” என்று மைனா, கதிரவன் மற்றும் அமுதவாணனிடம் பேசினார். “பெட்டியை எடுத்துட்டு இதயங்களை எப்படி வெல்ல முடியும்?” என்று கமல் மடக்கி கேட்ட போது கதிரவனால் சட்டென்று பதில் சொல்ல முடியாமல் தன் டிரேட்மார்க் புன்னகையால் சமாளித்தார். “ரெண்டாவது பெட்டி வரும் போது உங்க மனநிலை எப்படியிருந்தது?” என்று கேட்டது கமலின் குறும்பு. கதிரவனுக்குப் பணத்தின் மீது ஆசையில்லை. இந்த ஷோவின் மூலம் கிடைத்த வெளிச்சமே போதுமானதாக இருந்ததாகத் தோன்றுகிறது.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale
“வெளில இருந்து வந்தவங்க சொன்னதையெல்லாம் யோசிச்சேன்” என்று அமுதவாணன் இழுத்த போது “ஓ... இதெல்லாம் உங்க வேலையா?” என்று மற்றவர்களை நோக்கி கமல் கேட்டது ஜாலியான குறும்பு. “டாப் 4-ல வந்து காண்பின்னு கணவர் சவால்விட்டார். அதுல ஜெயிச்சதே மகிழ்ச்சி” என்று சிரித்தார் மைனா.

“எனக்குக் கிடைச்ச அற்புதமான வாத்தியார்கள் மூலம்தான் என் வளர்ச்சி நிகழ்ந்தது. எனக்குல்லாம் இது போன்ற மேடை கிடைச்சிருந்தா அந்த வளர்ச்சி கொஞ்சம் முன்னாடியே நிகழ்ந்திருக்கலாம். எனவே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கறது உங்க கைலதான் இருக்கு” என்று வழக்கமாகச் சொல்லும் உபதேசத்தை இந்த முறையும் மற்றவர்களுக்கு அறிவுறுத்தினார் கமல். பிறகு மணிகண்டன் மற்றும் க்வீன்சியின் நடனம். (நல்ல வேளையா ‘மல்லிப்பூ' பாடல் இல்ல!)

போட்டியாளர்களின் ‘பிக் பாஸ்’ அனுபவங்கள்

ஒரு பிரேக் முடிந்து வந்த கமல் “பிக் பாஸ் அனுபவம் உங்களுக்கு வெளில எப்படி இருந்தது?” என்று முன்னாள் போட்டியாளர்களைக் கேட்டார். “எதிர்பார்க்கலை" என்று ராபர்ட் ஆரம்பிக்க, "எது கையொடிஞ்சதா?" என்று ஜாலியாக இடைமறித்தார் கமல். “போன் யூஸ் பண்ணவே தோணலை” என்ற மைனாவிடம், “ஓ.., அடுத்த கட்டமா புத்தகம் படிக்க ஆரம்பிச்சுடுவிங்க போல” என்று கமல் கிண்டல் அடித்தாலும் அதில் உண்மை இருந்தது. வாரத்தில் ஒருநாளைக்காவது செல்போனை விட்டு விலகி இருப்பது வேறு வகையான அனுபவத்தைத் தரும். “வீட்டுக்குள்ள இருந்தபோது சண்டை வர்றது சரி. ஆனா கெஸ்ட்டா வந்தவங்கக்கூட சண்டை போட்டது இந்த சீசன்லதான் நடந்தது” என்ற கமல், மகேஸ்வரியைக் குறும்பாகப் பார்க்க “அந்த வீடு அப்படிப் பண்ணிடுது சார்” என்று சிரித்தார் மகேஸ்வரி. “ஏன் வெளில வந்தேன்னு ஏசுனாக... இப்ப என் மதிப்பு கூடியிருக்கு” என்றார் முத்து.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

“நெட்ல என்னைத் திட்டினவங்க கூட நேர்ல பார்க்கும் போது அன்பா பேசினாங்க. ‘நான் யார்’ன்னு இப்ப நிறைய பேருக்கு தெரியுது" என்ற அசலிடம், "திருக்குறளைக் கூட பஸ்ல படிச்சவங்கதான் நிறையப் பேரு. நானும் அப்படித்தான்” என்றார் கமல். “எங்க வீட்டுப் பொண்ணுன்ற மாதிரியே பேசினாங்க சார்” என்று தனலஷ்மி பெருமையுடன் சொல்ல, “நீங்க எப்படிப் பதிலுக்கு பேசினீங்க... பிக் பாஸ் வீடு மாதிரி பேசலையே?”” என்பது போல் கமல் கிண்டலடிக்க வெட்கம் தாங்காமல் சிரித்தார் தனம். “உங்களை ஹர்ட் பண்ணிட்டேன்னு வெளில நிறைய பேர் சொன்னாங்க... அது என் நோக்கம் இல்ல. அப்படிப் பண்ணியிருந்தா சாரி” என்று ஆயிஷா சொல்ல, “என்னை ஹர்ட் பண்றது ரொம்பக் கஷ்டம்” என்று கமல் சொன்னதும் சபையில் கைத்தட்டல் எழுந்தது. "நீங்க அப்படிச் செய்யலை. டோண்ட் வொர்ரி" என்றார் கமல்.

அகம் டிவி வழியாக உள்ளே சென்ற கமல், “வீடு அமைதியா இருக்கு. நீங்க மூணு பேர் மட்டும்தான் இருக்கீங்க. எப்படியிருக்கு இந்த அனுபவம்?!” என்று கேட்க, “வீட்டைக் காலி பண்ணிட்டு போகும் போது மூட்டை முடிச்சு எல்லாம் கட்டி வெச்சிட்டு பக்கத்துல உக்காந்திருக்க மனநிலை” என்று அந்தக் கணத்தை துல்லியமாக வர்ணித்தார் விக்ரமன். அதையே ஷிவினும் அசிமும் வழிமொழிந்தார்கள். “ஒண்ணு பண்ணலாமா... இந்த ஆட்டத்தை இன்னமும் ஒரு வாரம் நீட்டிக்கலாமா?” என்று கமல் கேட்க, "ஓகே சார்... நான் தயார்” என்று அசிம் உடனே ஒப்புக் கொள்ள, மற்ற இருவரும் “யப்பா சாமி... ஆளை விட்டா போதும்" என்று மறுத்தார்கள். “கிளம்புற மனநிலைக்கு வந்துவிட்டோம். மீண்டும் பின்னால் போக விரும்பலை" என்பது அவர்களின் நேர்மையைான விளக்கம். “அவனுக்கென்ன சார்... இன்னும் 106 நாள் கூட இருப்பான்” என்று அசிமைப் பற்றிக் கிண்டலடித்தார் ஷிவின்.

‘வெற்றியோ... தோல்வியோ... முதல்ல சண்டை செய்யணும் குமாரு’

"யாராவது ஒருவர்தான் வெற்றியாளர். இப்ப உங்க மனநிலை எப்படியிருக்கு? மைக்கை அவர் கிட்ட கொடுங்க” என்று கோபிநாத்தாக மாறி கமல் கேட்க, இதயம் துடிக்கும் ஓசையை வாயால் எழுப்பினார் அசிம். “ஜெயிக்கறமோ... தோக்கறமோ... சண்டை செய்யணும் குமாரு” என்பது அவரின் பதில். "இந்த வீட்டில் 106 நாள்கள் இருந்ததே பெரிய பரிசு. மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தலை வணங்கி ஏற்பேன்” என்று அரசியல்வாதி மாதிரியே பேசினார் விக்ரமன். "இரண்டு குறிக்கோள்கள்ல ஒண்ணு ஏற்கெனவே முடிஞ்சது. வெற்றியும் கிடைச்சா போனஸ்தான்” என்று அப்போதே மூன்றாம் இடத்துக்கு மனதளவில் தயாராகி விட்டார் ஷிவின்.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

"இந்த மூவரும் கடைசி நாள் இரவை எப்படிக் கழிச்சாங்கன்னு பார்க்கலாம்" என்று கமல் சொல்ல அது தொடர்பான காட்சிகள் வந்தன. ‘சூப்பர் சிங்கர்’ சக்தி, இசைக்குழுவுடன் வந்து இனிமையான பாடல்களைப் பாடி மகிழ்விக்க, அதன் பிறகு சுவையான உணவுகளும் காத்திருந்தன. (தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பதில் பிக் பாஸ் ஒரு மன்னர்). மூவரும் தொலைக்காட்சி முன் அமர்ந்து கமல் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருக்கையில் “யாருங்க அது, வீட்டுக்குள்ள வர்றது...’ என்று திரையில் இருந்த கமல் ஆட்சேபிக்க, அனைவரும் அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நிஜமான கமல். ‘இதுல எல்லோருக்கும் டபுள் ரோல்!’ என்கிற விஸ்வரூபம் வசனம் மாதிரி ஆகிவிட்டது.

‘திரையில பேசிட்டு இருந்தவரு, தரையில வந்து நிக்கறாரே’ என்று மூவரும் முதலில் அதிர்ச்சியடைந்து பிறகு நேரில் வந்த கமலைக் கண்டு பரவசப்பட்டார்கள். "உங்களுக்கு ஒரு பரிசு... ஸ்டோர் ரூம்ல இருக்கு” என்று அவர்களை அனுப்பினார் கமல். மூவருக்கும் தனித்தனியே எழுதி கமல் கையெழுத்திட்டிருந்த கடிதம், அழகான முறையில் பிரேம் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரைப் பற்றியும் மிகச்சுருக்கமாக, ஆனால் துல்லியமாக எழுதியிருந்தார் கமல். ‘சகா’ன்னு என்னை விளித்ததற்கு நன்றி’ என்று மகிழ்ச்சியடைந்தார் விக்ரமன். ‘அன்புத்தம்பி அசிம்’ என்பது இன்னொரு கடிதத்தின் ஆரம்பம். இந்தப் பரிசு காரணமாக மூவரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

‘வெளில வேலை கிடைக்குமான்னு தெரியல’ – யதார்த்தம் பேசிய ஷிவின்

‘பிக் பாஸுக்கு அப்புறமா உங்கள் திட்டம் என்ன?’ என்று கமல் விசாரிக்க ‘சினிமா’ என்றார் அசிம். விக்ரமனைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. "அரசியல், மக்கள் பணி" என்று அவர் சொல்ல, "வெளில போனா வேலை கிடைக்குமான்னு தெரியல" என்று யதார்த்தமான பதிலைச் சொன்ன ஷிவினுக்குப் பாராட்டு. (இப்படி உசுப்பேத்தி அனுப்பப்பட்ட பலர் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை). “கண்டிப்பா கிடைக்கும். ஏன் கிடைக்காம... உங்கள் தேடல் எப்படின்றதைப் பொறுத்து அது” என்று கமல் சொன்னது உண்மை. பிக் பாஸ் வீடு வெளிச்சத்தை மட்டும்தான் தரும். அதன் மூலம் தனக்கான பாதையை சம்பந்தப்பட்டவர்தான் கண்டுபிடிக்க வேண்டும். வெளிச்சம் அவருடன் கூடவே தொடர்ந்து வராது.
Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

“வெளில கார்டன் ஏரியாவிற்கு வாங்க... இந்த பேனல்ல நாம நாலுபேரும் கை வைக்கலாம். ஒரு மேஜிக் நடக்கும்” என்று கமல் சொன்னதும், அது அடுத்த எவிக்ஷனுக்கான அடையாளமோ இருக்குமோ என்பதால் மூவரின் முகத்திலும் மெல்லிய பதற்றம் வந்தது. ஆனால் வெளியே வந்தது ‘பிக் பாஸ் கோப்பை’. "இதனுடன் பேசிக் கொண்டிருங்கள். நான் கிளம்புகிறேன். மேடையில் சந்திப்போம்" என்று விடைபெற்றார் கமல். பிறகு ஒவ்வொருவரும் வெற்றிக் கோப்பையுடன் மனம் விட்டு பேசினார்கள்.

தனலஷ்மி மற்றும் முத்துவின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு பார்வையாளர்களிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தார் கமல். அதில் ஒரு முக்கியமான கேள்வி: “எந்த அடிப்படையில் உங்களின் வாக்குகளைச் செலுத்துகிறீர்கள்?”. ‘என்டர்டெயின்மென்ட், நேர்மையா விளையாடறது' என்று கலவையான பதில்கள் வந்தன. இந்த சீசனின் பிடித்த அம்சமாக ‘சாமானியர்களிடமிருந்து இருவரை போட்டிக்குத் தேர்ந்தெடுத்தது’ என்றார் ஒருவர். ‘புத்தகப் பரிந்துரையை’ பிடித்த விஷயமாகச் சிலர் குறிப்பிட்டார்கள். தனக்குப் பிடித்த போட்டியாளர்களையும் சிலர் சொன்னார்கள். ஒரு பாட்டி ‘அசிம்’ என்றது ஆச்சரியம்தான். (Rugged boy fan போலயே!)

‘கண்ணாடி... பின்னாடி என்ன தெரியுது... முன்னாடி சொல்லுங்க’ என்கிற வழக்கமான சடங்கை வீட்டினுள் ஆரம்பித்தார் பிக் பாஸ். அறை முழுவதும் இருள் சூழ்ந்திருக்க, ஃபோகஸ் லைட் போட்டியாளரின் மீது மட்டும் விழும். அப்படியொரு அந்தரங்கமான தருணத்தில் ‘கண்ணாடியில் இருக்கும் தன்னுடைய பிம்பத்தைப் பார்த்து’ மனம் விட்டு உரையாட வேண்டும். “உன் உடலை ரொம்ப வருத்தியிருக்கேன். சாரி” என்று கண்ணீருடன் சொன்னார் ஷிவின். "உன்னை ஒருமைல கூப்பிட்டா உனக்குப் பிடிக்காது” என்று ஆச்சரியப்படுத்தினார் விக்ரமன். (தன்னிடம் பேசும் போது எப்படி ஒருத்தர் பன்மைல பேச முடியும்?!). “சல்யூட் மாம்ஸூ. உன்னை ஜெயிக்க உன்னாலதான் முடியும். எனக்கு உள்ள இருக்கற கெட்டவனை இங்கயே விட்டுட்டுப் போறேன்” என்று வழக்கம் போல் பன்ச் டயலாக் பேசினார் அசிம். (மனுஷன் ஹீரோவாவே வாழறாருப்பா!).

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்த அமுதவாணன்

“கமல் சார். உங்ககிட்ட சில கேள்விகள் கேட்கலாமா?" என்று பிக் பாஸ் அனுமதி கேட்டவுடன் முன்னாள் போட்டியாளர்களிடமிருந்து சில கேள்விகள் வந்தன. கமலின் நற்பணிகளுக்காக ஒரு லட்சம் நன்கொடை அளித்தார் அமுதவாணன். “அது போதாது. உங்க நேரமும் வேணும்” என்று கமல் சொல்ல “அடடே... மய்யத்துல இழுத்துடுவாரோ" என்று அமுதுவிற்கு உள்ளுக்குள் ஜெர்க் ஆகியிருக்க வேண்டும். இப்படியே ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதில் சொன்னவர், பாசிசத்தை எதிர்த்த சார்லி சாப்ளின் பற்றி விக்ரமன் கேட்ட போது “நெறைய பேர் நெனக்கற மாதிரி ஹிட்லரை எதிர்த்து சாப்ளின் எடுத்த படம் இல்ல அது. ‘Collaboration’ன்னு ஒரு புக் இருக்கு. ஜெயிக்கற கட்சிக்கு மக்கள் ஓட்டுப் போடுவாங்கள்ல அந்த மாதிரி. ‘அது நிகழப் போகிறது’ என்று சாப்ளினிக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. இந்தியாவில் சில விஷயங்கள் நிகழும் என்று நான் யூகித்து எடுத்த படம்தான் ‘ஹே ராம்’. பின்னாடி அதெல்லாம் நடந்தது. எதிரியை நிர்மூலமாக்குவதல்ல வீரம். அவனுடன் கூடி வாழ்வது” என்று கமல் சொன்ன பதில் சிறப்பானது.

"ஓகே... போட்டியாளர்களுக்கு பட்டங்கள் தந்து கௌரவிக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம். பயப்படாதீங்க. நல்ல விருதுதான்” என்று அறிவித்த கமல் பிறகு வரிசையாக பதக்கம் அணிவித்தார். ‘பேராளி’ தனலஷ்மி, ‘நம்பிக்கை’ ஷிவின், ‘ஹெர்குலிஸ்’ மணிகண்டன், ‘கண்ணியம்’ விக்ரமன், ‘தன்முனைப்பு’ அசிம், ‘என்டர்டெயினர்’ அமுதவாணன், ‘உழைப்பாளி’ ஏடிகே, ‘சண்டமாருதம்’ மகேஸ்வரி ஆகிய விருதுகளை போட்டியாளர்கள் பெற்றுக் கொண்டார்கள். ‘கண்ணியம்’ என்கிற விருது வந்த போது ‘கதிரவன்... கதிரவன்...’ என்று ஷிவின் யூகித்துக் கத்தினார். இந்தச் சமயத்தில் விக்ரமனின் மைண்ட் வாய்ஸ் எப்படியிருந்திருக்குமோ?! ‘சண்டமாருதம்’ என்பதை ‘சண்டை’ என்பதாக மகேஸ்வரி புரிந்து கொள்ள ‘சூறாவளி’ என்று திருத்தினார் கமல்.

எழுத்தாளர்களும் வந்து பாராட்டிய ‘புத்தகப் பரிந்துரை’

அடுத்ததாக ‘புத்தகப் பரிந்துரை’ என்னும் தலைப்பிற்குள் வந்த கமல், "ஒரு வெகுசன நிகழ்ச்சிக்குள் புத்தகம் பத்தி பேசினா எடுபடுமா?’ன்னு சிலர் கேட்டாங்க. ஆனால் அதன் விளைவுகள் பத்தி நானே தொடர்ந்து சொல்றதை விடவும் இரண்டு எழுத்தாளர்கள் வந்து சொல்றது சரியா இருக்கும்” என்று சொன்னவுடன் எஸ்.ராமகிருஷ்ணனும் மகுடேஸ்வரனும் அரங்கிற்குள் நுழைந்தார்கள். இளையதலைமுறையிடம் தொலைந்து போய்க் கொண்டிருக்கும் ‘புத்தக வாசிப்பு’ என்னும் விஷயத்திற்கு கமலின் பரிந்துரை உயிர் தருவதாக இருவரும் பாராட்டினார்கள். “35 மில்லியன் பேரு இந்த ஷோவைப் பார்க்கறாங்க. அதுல பத்து சதவிகிதம் பேர் புத்தகம் வாங்கினா கூட எழுத்தாளர்கள் விமானம் வாங்கிடுவாங்க. மேற்கத்திய நாடுகள்ல அது நடக்குது” என்று கமல் சொன்னது உண்மை. “வீட்டுக்குள்ள இருந்துதான் ஒருவருக்குப் புத்தகம் அறிமுகமாகணும்” என்று எஸ்.ரா சொன்னது சரியான கருத்து. "உங்க மூலம்தான் எனக்கு பெரிய வெளிச்சம் கிடைச்சது” என்று மகிழ்ந்தார் மகுடேஸ்வரன்.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

"இந்த ஷோவை ஒருநாள் கூட விடாம, ஒரு தருணத்தை கூட தவற விடாம பார்த்த ஒருவர் இருக்கார். அவர் இப்போது உங்களிடம் பேசுவார். கேளுங்க" என்று கமல் விலக, கேமரா பேசுவது போன்ற பாணியில் முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் பயங்கரமாக பங்கம் செய்தார் ‘கலக்கப் போவது யாரு’ பாலா. "என்னைப் பத்தி ஏதாவது சொன்னே. சோத்துல விஷம் வெச்சிடுவேன்" என்று ஜாலியாக மிரட்டினார் அமுதவாணன். பாலாவின் நகைச்சுவையை பார்வையாளர்கள் ரசித்தாலும் ‘சபையில் என்னத்த சொல்லி மானத்த வாங்கப் போறானோ’ என்கிற சங்கடம் போட்டியாளர்கள் சிலரின் முகத்தில் தெரிந்தது. 'கிண்டல் செய்யப்பட்டவரும் இணைந்து சிரிப்பதுதான் நல்ல நகைச்சுவை’ என்பது கமல் அடிக்கடி சொல்லும் உபதேசம். அந்த நோக்கில் பார்த்தால் பாலாவின் நகைச்சுவை இன்னமும் மேம்பட்டதாக இருந்திருக்கலாம்.

‘சூப் சாங்’ ஒன்றைப் பாடி அசல் நடனமாடிய இசை நிகழ்ச்சிக்குப் பிறகு “வழக்கமா புத்தகப் பரிந்துரை செய்வேன். அதுக்குப் பதிலாக எண்பதுகளில் பயங்கரவாத செயலுக்கு எதிராக நான் எழுதிய ஒரு கவிதையை வாசித்துக் காட்ட விரும்புகிறேன். கலைஞர் பாராட்டிய கவிதை இது. இதுக்கு ஹாசிப்கான் (விகடன்) ஓவியம் வரைஞ்சிருக்காரு” என்று சொல்ல மேடையில் இருள் பரவ, திரையில் அனிமேஷன் பாணியில் அற்புதமான ஓவியங்கள் காட்சிகளாக விரிய மெல்லிய பின்னணி இசை, அதற்கு மேலும் சுவை சேர்க்க, கமலின் அற்புதமான கவிதை ஒலித்தது. “இதைக் கேட்டு முடிச்சதும்... உங்களுக்கு ஒரு விம்மல் வந்திருக்கும் இல்லையா. அந்த உணர்வு இருக்கற வரை மனிதம் வாழும்” என்று அந்தச் சூழலை கச்சிதமாக வர்ணித்தார் கமல்.

ஓய்ந்த பிக் பாஸ் குரல் – நெகிழ்ந்து நின்ற ஃபைனலிஸ்ட்ஸ்

மறுபடியும் அகம். இறுதிப் போட்டியாளர்களான மூவரையும் புஷ்பக விமானத்தில் நிற்க வைத்த பிக் பாஸ், ஒவ்வொருவரைப் பற்றியும் கச்சிதமாகச் சொன்ன பாராட்டுரை உண்மையிலேயே அற்புதம். மூவருமே அதை மனதார உணர்ந்து கண்ணீர் வடித்தார்கள். ‘இந்தக் குரல் இத்துடன் ஒலிக்கப் போவதில்லை’ என்று பிக் பாஸ் சொல்ல, வீட்டின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய, நமக்கே அப்படியொரு பிரிவுணர்ச்சி வந்து கண்கசிய வைத்தது. ஒரு குரல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு பிக் பாஸின் குரல் ஒரு நல்ல உதாரணம்.
Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

மூவரும் லிஃப்ட்டின் வழியாக அரங்கிற்குள் நுழைய ஆரவாரக் கூச்சல். அவர்களை வரவேற்று விசாரித்த கமல், பிறகு ஆடிய சிறிய ஆட்டம் சுவாரஸ்யமானது. “உங்க புள்ளையின் வெற்றி உங்களுக்கு முக்கியம். ஆனா அதைத் தாண்டி மத்த இரண்டு பேர்ல யார் வெற்றியடையணும்னு விரும்பறீங்க?” என்று கமல் கேட்க ‘விக்ரமன்’ என்று ஷிவினின் நண்பர்கள் சொன்னார்கள். அசிம் மற்றும் விக்ரமனின் குடும்பத்தினர் ஒரே குரலில் ‘ஷிவின்’ என்று சொன்னதும் அப்போதே ஷிவின் வெற்றி அடைந்ததைப் போன்ற உணர்வு. முதிரா வயதுள்ள இளம் தலைமுறையினருக்குத்தான் அசிமை நிறையப் பிடித்துள்ளது போல.

“ஓகே... மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போறவங்க யாருன்னு இப்ப பார்க்கலாம். அவங்க மேல மட்டும் லைட்டு அப்படியே நிற்கும்” என்று கமல் சொல்ல, சில ‘திக் திக்’ நிமிடங்களுக்குப் பிறகு அது ஷிவின் என்பது உறுதியானது. ஆக, மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறார் ஷிவின். “ஷிவின் ஜெயிச்சிருக்கணும்ன்னு நிறைய பேருக்குத் தோணியிருக்கும். ஆனா அந்த யோசனையோட விட்டுடக்கூடாது. அவங்க வாக்கு செலுத்தியிருக்கணும். அதுதான் நாட்டுக்கும் நல்லது” என்று கமல் சொன்ன பாயின்ட் மிக முக்கியமானது. ‘இவர் வெல்ல வேண்டும்’ என்று மனதார விரும்புகிறவர்கள், வாக்களிக்காமல் விட்டுவிட்டால் அது ஆட்டத்தின் முடிவைத் தலைகீழாக மாற்றி விடும். விக்ரமனுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது கூட, வாக்கு சதவிகிதத்தில் இருந்த சிறிய வேறுபாடுதான் என்கிறார்கள். அசல் நிலவரம் மேடையில் சொல்லப்படவில்லை.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale
ஆக, எஞ்சியிருப்பவர்கள் விக்ரமன் மற்றும் அசிம். கமல் யார் கையைத் தூக்குகிறாரோ, அவர் வெற்றியாளர் என்கிற சடங்கு நமக்குத் தெரியும். "வேற ஏதாவது பேசலாமா?” என்று ஜாலியாக வெறுப்பேற்றிய கமல், "இந்த டைம்ல பிரேக் விடலைன்னா பிக் பாஸ் கோச்சுப்பார்" என்று சொல்லி விலகியது, நல்ல குறும்பு. (விளம்பரம் முக்கியம் குமாரு!).

கோப்பையை வென்றார் அசிம் – இதயங்களை வென்றார் விக்ரமன்

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale

ஒரு பிரேக் முடிந்து வந்த கமல், “இருங்கப்பா... கையைத் தூக்கி வார்ம் – அப் பண்ணிக்கறேன்” என்று காமெடி செய்தார். பிறகு ஒரு சஸ்பென்ஸிற்குப் பிறகு இருவரின் கைகளையும் பிடித்து வேகமாக ஆட்ட, இருவருமே வாயால் மூச்சு விட்டு தங்களின் பதற்றத்தை வெளிப்படுத்தினார்கள். அரங்கத்திலும் ஒரே சஸ்பென்ஸ். ஒரு கட்டத்தில் அசிமின் கையை உயர்த்தியபடியே கமல் உறைந்து நிற்க, இந்த 106 நாள் ஆட்டத்தின் முடிவு தெரிந்தது. ‘அசிம் வெற்றியாளர்’. ஐம்பது லட்சம் பரிசுத் தொகையும், ஒரு புத்தம் புதிய SUV வாகனமும் அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டது.

“போராட்டத்திற்குப் பழகியவன் நான். மக்களுக்கான என் பயணம் தொடரும். மக்களின் இந்த முடிவை மனமார ஏற்றுக் கொள்கிறேன். அறம் வெல்லும்” என்று புன்னகை மாறாமல் நன்றி சொன்ன விக்ரமனிடம் “அறமே வெல்லும்” என்று சொல்லி கமல் அரவணைத்துக் கொண்டது ஒரு நல்ல காட்சி. “புகழ் அனைத்தும் இறைவனுக்கே. இறைவனுக்கும், தாய், தந்தையர்க்கும், எனக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி. முயற்சி எடுக்காம தயங்கவும் மாட்டேன்... வெற்றிக்குப் பின்னால மயங்கவும் மாட்டேன். சமநிலையா இருப்பேன்” என்று தனது மகிழ்ச்சியை ஆரவாரமாக வெளிப்படுத்திய அசிம், கேமராக்களுக்கு சரியாக போஸ் கொடுக்கும் விதத்தில் கோப்பையை உயர்த்தி, முத்தமிட்டு மகிழ்ந்தார்.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale
இருவரின் பெற்றோர்களும் மேடைக்கு வந்து வாழ்த்து சொன்னது சிறப்பு. “தன்னிலை மாறாமல், கொள்கையில் இருந்து விலகாமல், பல கோடி மக்கள் பார்க்கிறார்கள் என்கிற பொறுப்போடு விளையாடிய எங்க அண்ணன் இன்னமும் பெரிய உயரத்தை அளவுகோலா வெச்சிருக்காரு” என்று விக்ரமனின் தங்கை தமிழரசி சொன்னது முக்கியத்துவம் வாய்ந்த வாக்குமூலம். ஷிவினையும் மேடைக்கு அழைத்த கமல், அனைவரையும் வாழ்த்தி ‘உங்கள் நானுடன்’ விடைபெற்றார்.

கற்றதும் பெற்றதும்தான் முக்கியம் – வம்புகள் முக்கியமல்ல!

இனி பேசுவது ‘உங்கள் நான்’. எப்போதுமே சொல்வதுதான். இந்த ஆட்டம் தரும் பரபரப்பு, மகிழ்ச்சி, கோபம், எரிச்சல் எல்லாமே தற்காலிகம்தான். இந்தப் பெயர்கள் சிறிது நாளில் நமக்கு மறந்து விடும். சம்பவங்கள் மனதிலிருந்து மறைந்து விடும். எனவே இந்த ஆட்டத்தின் வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம், பெற்றுக் கொண்டோம் என்பதுதான் அதிமுக்கியம்.

போட்டியாளர்களிடம் இருந்த மேன்மையான குணங்கள் நம்மிடமும் இருந்தால் அதை இன்னமும் வளர்த்துக் கொள்ளலாம். அதைப் போலவே கீழமையான குணாதிசயங்கள் வெளிப்பட்டிருந்தால், அதைப் பற்றி விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், நம்மிடம் இருக்கும் கீழ்மைகளைத் திருத்திக் கொள்ளலாம். இந்த சுயபரிசீலனைதான், இந்த ஷோவின் மூலம் நமக்கு கிடைக்கப் போகும், நம்முடனே தொடரப் போகும் நிலையான விஷயம். அதை மட்டும் பிரதானமாகக் கவனத்தில் கொள்வோம். இது சார்ந்த வம்புகள், கிண்டல்கள், புறணிகள் எல்லாம் சில நாள்களில் மறைந்து போகும். பிக் பாஸ் என்பது அடிப்படையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான். ஆனால் இந்தக் கற்றலும் அது தொடர்பான மாற்றமும் நமக்குள் நிகழ்ந்திருந்தால், நம்முடைய நேரத்தைப் பயனுள்ளதாக செலவழித்திருக்கிறோம் என்று நம்மை நாமே தோளில் தட்டிக் கொள்ளலாம்.

Bigg Boss 6 Grand Finale
Bigg Boss 6 Grand Finale
இந்தத் தொடரை தினமும் வாசித்து ஆதரித்தும் விமர்சித்தும் எழுதிய நண்பர்கள், வாசகர்கள், சஹ்ருதயர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் பிரியமும். வாய்ப்பளித்த விகடன் தளத்திற்கும் ஒத்துழைத்த நண்பர்களுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் நிறையாது. இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நண்பர்களே. அதுவரை உங்களிடமிருந்து மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் விடைபெறுகிறேன். நன்றி!