பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திடீர் திருப்பமாக நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறியுள்ளார் சிபி.

முன்னதாக கடந்த இரு தினங்களுக்கு முன் தனது வெப் சீரிஸ் ஒன்றின் புரமோஷன் தொடர்பாக பிக் பாஸ் வீட்டுக்குத் திடீர் விசிட் அடித்த நடிகர் சரத்குமார் ரூபாய் மூன்று லட்சம் அடங்கிய பெட்டி ஒன்றை வைத்து, விரும்பியவர்கள் எடுத்துக் கொண்டு வெளியேறலாம் எனச் சொன்னது நினைவிருக்கலாம்.
கடைசி நேரத்தில் இது போன்ற ஒரு வாய்ப்பு வழங்கப்படுவது பிக் பாஸில் வழக்கம்தான் என்றாலும் தொகை மூன்று லட்சம் என்பது மிகவும் குறைவானது என நினைத்தார்களோ என்னவோ, போட்டியாளர் எவருமே பணப்பெட்டி அருகே செல்லவே இல்லை.

இதனிடையே நேற்று (5/1/22) ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் இரவு 7.20 மணியின்போது பணம் 9 லட்சமாக உயர்த்தப்பட்டது. பணப்பெட்டி குறித்த விவாதம் போட்டியாளர்களிடம் நடந்தபோது, பாவனி 25 லட்சம் இருந்தால் எடுக்க யோசிக்கலாம் என்று பேசியிருக்கிறார். பிரியங்கா 15 லட்சம் வந்தால்கூட எடுக்கலாம் என்று பேசியிருக்கிறார். தாமரையோ ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் போக விருப்பமில்லை என்று சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து 9 லட்சமாக இருந்த அந்தப் பணம், கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு கடைசியில் 12 லட்சமாக வந்து நின்றபொழுது, அப்பணத்தை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முன்வந்தார் சிபி. அவர் வெளியேறிய எபிசோடு இன்று (6/1/22) ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

பாவனி, பிரியங்கா, ராஜூ, தாமரை, அமீர் என ஐந்து பேர் ஏற்கெனவே நிகழ்ச்சியில் வலுவாக இருக்கின்றனர். இவர்களில் அமீர் நேரடியாக பைனலுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சியிருப்பது நிரூப் மற்றும் சிபி இருவரும்தான்.
வரும் வாரத்தில் எப்படியும் ஒருவர் வெளியேறி ஆக வேண்டும். தானோ அல்லது நிரூப்போதான் எவிக்ட் ஆவோம் என நினைத்து சிபி இந்த முடிவை எடுத்தாரோ என்னவோ?
எப்படியோ பதினெட்டுப் பேருடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 5 ல் இப்போது ஆறு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வெல்வார்கள்? உங்களது கணிப்பை கமென்ட் பாக்ஸில் சொல்லுங்களேன்.