Published:Updated:

``பாத்ரூம்ல லவ் சொல்லியிருந்தா நல்லாவா இருந்திருக்கும்!'' -  பிக் பாஸ் பியர்லி

பியர்லி
பியர்லி

மலையாள பிக் பாஸ் முதல் சீஸனில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பியர்லி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாகத் தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியின் செட்டில் இருந்த பியர்லியிடம் ஒரு சிட் சாட்!

பியர்லி... கேள்விப்பட்ட பெயரா இருக்கே?

``இருக்காதா பின்ன... `பிக் பாஸ்' வீட்டுல நூறு நாள்கள் இருந்து, காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட முதல் ஜோடியாச்சே நாங்க. `பிக் பாஸ்' மலையாளம் முதல் சீஸன், மக்களை என்னோடு ரொம்பவே நெருக்கமாக்கிடுச்சு. சொல்லப்போனா இந்தக் கல்யாணம், கேரளாவைத் தாண்டி எங்களைக் கொண்டு போயிருக்கு. இதுக்கு அப்புறம்தான் எனக்குத் தமிழ்ல ஆங்கரிங் பண்றதுக்கான வாய்ப்பும், இந்தில அபிஷேக் பச்சன் சாரோடு ஒரு படத்துல நடிக்கிற வாய்ப்பும் வந்திருக்கு. இப்போ நான் ரொம்ப பிஸி."

பியர்லி
பியர்லி

உங்களைப் பத்தி சொல்லுங்க?

``சொந்த ஊர் கொச்சின். மீடியா, சைக்காலஜி படிச்சிருக்கேன். சினிமா நண்பர்கள் மூலமா தமிழ் கத்துக்கிட்டு தமிழையும் தமிழ்நாட்டை நம்பியும் இங்க வந்துருக்கேன். ஆனா, மலையாளத்தில் ஆங்கரிங், சீரியல், சினிமான்னு நிறைய டிராவல் பண்ணியிருக்கேன். தமிழ்நாட்டு மக்கள் என்னை ஏத்துக்குவாங்கனு நம்புறேன்."

`பிக் பாஸ் நிகழ்ச்சியே ஸ்க்ரிப்ட் எழுதிதான் பண்றாங்க'னு தமிழ்நாட்டுல ஒரு பேச்சு இருக்கு. இது உண்மையா?

``இப்போதான் தமிழ் டி.வி ஏரியாவுக்குள்ள வர்றேன், அதுக்குள்ள நான் ஏதாவது பேசி அது சர்ச்சையாகணும்னு ஆசைப்படுறீங்க. அதானே? நான் சிக்க மாட்டேன். தவிர, என்னுடைய பர்சனல் எக்ஸ்பீரியன்ஸ்ல ஒரு கருத்து வேணும்னா சொல்றேன். சில நேரங்கள்ல சினிமா, ஸ்க்ரிப்ட்டைவிட நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பயங்கர என்டர்டெயின்மென்ட்டா இருக்கும். அவ்வளவுதான் இப்போ என்னால சொல்ல முடியும்."

பியர்லி கணவருடன்
பியர்லி கணவருடன்

`மூணு மாசத்துல என்ன லவ்'னுலாம் வெளியில சொல்றாங்களே...

``மூணு மாசம் எதுக்குங்க, லவ்வுக்கு ஒரு செகண்டு போதாது. பஸ் ஸ்டாப்ல ஒரு முறை பார்த்த பொண்ணுகூடவே வாழ்நாள் முழுக்க வாழ நினைச்ச பசங்க கதையெல்லாம் நீங்க கேட்டது இல்லையா. லவ்வுக்கு அவ்வளவு பவர் இருக்கு. பிக் பாஸ் உள்ள வந்த ஒரு மாசம் கழிச்சுதான் நாங்க லவ் பண்ணத் தொடங்கினோம். அதுக்கப்புறம் 10 நாள் கழிச்சு புரொபோஸ் பண்ணிகிட்டோம். `40-வது நாள்... காலை 6.30 மணிக்கு'னு பிக் பாஸ் சொல்லி நீங்க கேட்டிருப்பீங்களே. அந்த மார்னிங்தான் எங்க லைஃப்ல மறக்க முடியாத தருணம். புரொபோஸ் பண்ணிகிட்டதை ஒளிபரப்ப வேண்டாம்னு பிக் பாஸ்கிட்ட எவ்வளவோ கேட்டுக்கிட்டோம். ஆனா, அதையே புரொமோவா வெளியிட்டு, வெளியுலகத்துக்குத் தெரிவிச்சிட்டார் பிக் பாஸ். இந்தச் சில காரணங்களாலதான் பிக் பாஸை ஸ்க்ரிப்ட்னு மக்கள் சொல்றாங்க. ஆனா, பாத்ரூமைத் தவிர வேற எங்க எது பேசினாலும் கேமராவிலேயும், மைக்லேயும் பதிவாகிடும். பாத்ரூம்ல வெச்சு லவ்வைச் சொல்லியிருந்தா எப்படி இருந்துருக்கும்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க. நல்லாவா இருந்திருக்கும்?!"

டி.வி ஆங்கரிங் வாய்ப்பு எப்படி வந்தது. இந்தப் பக்கம் உங்க ஃபேவரைட் ஆங்கர் யார்?

``இந்த ஷோவுக்காக நிறைய பேர் என்னைப் பரிந்துரை பண்ணியிருக்காங்க. ஒரு நாள் சேனல்ல இருந்து எனக்கு அழைப்பு வந்தது. சென்னை வந்ததும் இந்த ஷோ சம்பந்தப்பட்ட டீமைச் சந்திச்சுப் பேசினேன். உடனே எல்லாம் ஓகே ஆகிடுச்சு. தமிழ்ல என்னுடைய ஃபேவரைட் ஆங்கர் பெப்சி உமா மேம். `ஹலோ, யார் பேசுறீங்க'னு அங்களுடைய அந்தக் குரலை சின்ன வயசுல நிறைய முறை நான் இமிடேட் செய்து பார்த்திருக்கேன்."

Vikatan
அடுத்த கட்டுரைக்கு