Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 100: `என் பையன் பாத்துட்டு இருக்கான்'- கலங்கிய மகேஸ்வரி; முட்டையால் வெடித்த சண்டை!

பிக் பாஸ்

விக்ரமன் மட்டும் ‘பீப் பிரியாணி’ என்று கேட்டது ஒரு நல்ல அரசியல் சமிக்ஞை. எளிய சமூகத்தின் உணவு என்பது இங்கு வெறுப்பரசியல் ஊட்டப்பட்டதாக மாறி விட்ட நிலையில், இது போன்ற அரசியல் அசைவுகள் நிகழ்வது அவசியமானது.

பிக் பாஸ் 6 நாள் 100: `என் பையன் பாத்துட்டு இருக்கான்'- கலங்கிய மகேஸ்வரி; முட்டையால் வெடித்த சண்டை!

விக்ரமன் மட்டும் ‘பீப் பிரியாணி’ என்று கேட்டது ஒரு நல்ல அரசியல் சமிக்ஞை. எளிய சமூகத்தின் உணவு என்பது இங்கு வெறுப்பரசியல் ஊட்டப்பட்டதாக மாறி விட்ட நிலையில், இது போன்ற அரசியல் அசைவுகள் நிகழ்வது அவசியமானது.

Published:Updated:
பிக் பாஸ்
இது பிக் பாஸின் நூறாவது நாள். வெற்றிகரமாக சகித்துக் கொண்ட உங்களுக்கும் எனக்கும் வாழ்த்துகள். பணமூட்டை அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே அதை எடுத்துக் கொண்டு கதிர் வெளியேறி விட்டார். தொகை உயர்வதற்காக அவர் காத்திருக்கவில்லை என்னும் போது பணம் என்பது அவரது நோக்கம் இல்லை என்று தெரிகிறது. எனில் ஏன்? ‘இது ஏற்கெனவே செய்யப்பட்ட முடிவு’ என்கிறார். இதற்கான விளக்கத்தை கமல் எபிசோடில் தருவாரா என்று பார்ப்போம். தன்னுடைய அடையாளம் பிரபலமானதே போதும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
ரச்சிதா - ஷிவின்
ரச்சிதா - ஷிவின்

கதிரவன் போன்றவர்கள் பிக் பாஸ் ஆட்டத்திற்கு வேண்டுமானால் பொருத்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரிடம் இருந்த நற்பண்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியவை. பொறுமை, நிதானம், சகிப்புத்தன்மை, நட்புணர்ச்சி போன்றவை. அங்கு யாருடைய விரோதத்தையும் சம்பாதிக்காத ஒரே நபர் கதிரவன் மட்டுமே. எல்லோரிடமும் பழகுவதற்கு இனிமையானவராக இருந்தார். ‘சண்டை நடந்து கொண்டிருக்கும் சூட்டில் என் குரல் கேட்காது. சம்பந்தப்பட்டவரை பிறகு தனியாக அமர வைத்து பேசுவேன்’ என்பதும் நல்ல குணமே. ஆனால் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு. கதிரவனின் அளவு கடந்த நிதானம், அவருக்கு பின்னடைவைத் தந்து விட்டதாகத் தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

பிரியங்காவும் மா.கா.பா.ஆனந்தும் ஜாலியாக ஆரம்பித்து வைத்து ‘முட்டைக்கலகம்’ நள்ளிரவைத் தாண்டியும் வெடித்தது. சொந்த உழைப்பில் வந்த ஊதியம் என்றாலும் அதை விருந்தினர்களோடு பகிர்ந்து கொள்ளலாமே’ என்கிற நல்ல நோக்கத்தில் பொருட்களை பிரியங்கா பொதுவில் வைத்துவிட்டுச் சென்றார். ஷோ முடிய இன்னமும் கொஞ்ச நாட்கள்தான் இருக்கிறது என்பது கூடுதல் காரணம். நியாயமான விஷயம்தான்.

மைனா, ஜி.பி.முத்து
மைனா, ஜி.பி.முத்து

இந்த விவகாரத்தில் அமுதவாணனின் இமேஜ் அதிகமாக டேமேஜ் ஆனதால் அவர் விளக்கம் அளித்துக் கொண்டே இருக்க வேண்டியதாகப் போனது. இதுதொடர்பாக அவருக்கும் விக்ரமனுக்கும் உரசல் ஏற்பட, “மணி கிட்ட கூட நான் முட்டை கேட்டேன். இல்லைன்னு சொல்லிட்டாரு” என்று விக்ரமன் சொல்ல, அருகிலிருந்த மகேஸ்வரி ஆமோதிப்பது போல் தலையாட்டிவிட்டார்...

அவ்வளவுதான்... மணிகண்டன் சாமியாடத் துவங்கி விட்டார். அவருக்கு விக்ரமனின் மீது கோபமா அல்லது மகேஸ்வரியின் மீது கோபமா அல்லது இரண்டு பேரின் மீதுமா என்று தெரியவில்லை. “நீங்க இதுல வராதீங்க. உங்களுக்கு விஷயம் தெரியுமா...” என்று ஆரம்பித்து மணிகண்டன் ஆவேசப்பட, “வாங்க உக்காந்து பேசலாம். எகிறிட்டு வராதீங்க” என்று மகேஸ்வரி சொன்னதை மணிகண்டன் ஏற்கவில்லை. தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டே இருக்க “இது கடைசி வாரம். இப்ப கூட ஏன் சண்டை?’ என்று விக்ரமன் நல்ல எண்ணத்துடன் சொன்னதை இருவரும் கேட்கவில்லை.

பொடிமாஸாக வெடித்த முட்டைப் பிரச்சினை

தான் அருகில் இருந்து பார்த்த ஒரு விஷயத்திற்கு சாட்சிதானே சொன்னோம்? ஏன் மணி இப்படிப் பொங்குகிறார்?’ என்பது மகேஸ்வரியின் ஆதங்கம். வார்த்தையின் சூடு தாங்காமல் ‘மென்ட்டல் மாதிரி பேசாதீங்க’ என்று மகேஸ்வரி ஒரு கணத்தில் சொல்லி விட, அருகிலிருந்த அசிம் இப்போது நண்பனுக்கு ஆதரவாக களத்தில் குதித்தார். ஏதாவது ஒரு பிரச்சினையில் விக்ரமன் தலையிட்டால் “நீங்க ஏன் எப்பப்பாரு தேவையில்லாம வந்துடறீங்க.. ஷிவின் உங்க பிரெண்டா?" என்றெல்லாம் தொடர்ந்து குற்றம் சாட்டும் அசிம், இப்போது மணி தன் நண்பன் என்பதால் பிரச்சினையில் வாலண்டியராக குதித்தார்.

அசிம், விக்ரமன்
அசிம், விக்ரமன்

“ஏன் மென்டல்ன்னு சொன்னீங்க?” என்று அசிம் கேட்டது நியாயமான கேள்விதான். மகேஸ்வரி விட்டு விட்ட வார்த்தைதான். “நீங்க இதுக்கு முன்னாடி எத்தனையோ தகாத வார்த்தைகளை சொல்லியிருக்கீங்க.. அதுக்கு இப்ப பதில் சொல்லுங்க” என்று மகேஸ்வரி மடக்க, ‘தப்பு.. தப்பு.. அதெல்லாம் நீ கேட்கக்கூடாது..’ என்கிற கில்லி பிரகாஷ்ராஜ் மோடிற்கு மாறினார் அசிம். (இதுவே கமல் எபிசோட் என்றால் வசூல்ராஜா பிரகாஷ்ராஜ் மோடிற்கு மாறி சிரித்தாற் போல் அமர்ந்திருப்பார்!).

தன்னை முன்னிட்டு எழுந்த இந்த சூடான சண்டையை நிறுத்தலாம் என்கிற உத்தேசத்தில் “அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொல்லி கேட்கறேன்” என்ற விக்ரமன் சொல்ல, இதற்காகவே காத்துக் கொண்டிருந்த அசிம், இப்போது விக்ரமன் மீதும் பாய்ந்தார். “அதென்ன ஷிவின், மகேஸ்வரிக்கு மட்டும் சப்போர்ட்டிற்கு வந்துடறீங்க.. பொண்ணுங்கன்னா மட்டும் சப்போர்ட்டிற்கு வந்துடுவீங்களா விக்ரமன்?” என்றெல்லாம் தன் டெம்ப்ளேட் வார்த்தைகளை ரீப்பீட் மோடில் கத்திக் கொண்டே இருந்தார் அசிம். இதுதான் அவர் விவாதிக்கும் வழக்கமான ஸ்டைல். பாயிண்ட்டே இருக்காது. “வாபஸ் வாங்கத்தானே சொன்னாரு?’ என்று க்வீன்சி சமாதானமாகச் சொன்னாலும் அசிமின் காதில் ஏறவில்லை.

அசிம்
அசிம்

அசிமும் ஜூனியர் அசிமான மணிகண்டனும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் இணைந்து வார்த்தைகளால் வெடிக்க, மகேஸ்வரியும் சளைக்காமல் அதற்கு ஈடு கொடுக்க “அவங்க லெவலுக்கு நாம இறங்க வேண்டாம். விடுங்க’ என்று மகேஸ்வரியிடம் விக்ரமன் சொன்னதுதான் தாமதம், ‘யாரைச் சொல்றீங்க?’ என்று அதற்கும் பாய்ந்தார் மணி. ‘வெளியில் சென்றால் விக்ரமனுடன் நட்பைத் தொடர்வேன்’ என்று முன்னர் அவர் சொன்னதெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான் போலிருக்கிறது.

‘என் பையன் பார்த்துட்டு இருக்கான்’ – கண்கலங்கிய மகேஸ்வரி

அசிம், மணி ஆகிய இருவரும் ஒரு பக்கம். மகேஸ்வரி இன்னொரு பக்கம். வார்த்தைப் போர் தொடர்ந்து கொண்டே இருக்க, ‘மகி.. சும்மா இரேன்’ என்று சண்டையை முடித்து வைக்கும் நோக்கில் சாந்தியக்கா வர “உங்களை இப்படி கேட்டா சும்மா விடுவீங்களா.. சும்மா உக்கார்றதுக்கு நான் ஆள் இல்ல. இது தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. வீட்ல நடந்த ஒரு பிரச்சினை. அதுக்கு சாட்சி சொன்னது ஒரு தப்பா.. உக்காந்து பேசலாம்ன்னு மணியைக் கூப்பிட்டா அதுக்கும் வரலை.. யாருக்கு காண்டு?’ என்றெல்லாம் சாந்தியிடம் புலம்பினார் மகேஸ்வரி.

மகேஸ்வரி
மகேஸ்வரி

பிறகு விக்ரமனும் ஷவினும் மகேஸ்வரியை தனிமையில் சமாதானப்படுத்த முயன்றார்கள். “நான் வீட்ல இருக்கும் போது நடந்த சண்டைகளை என் பையன் டிவில பார்த்திருக்கான்...இன்னிக்கு வரைக்கும் எனக்கு அந்த வலி இருக்கு. எனக்கும் மானம் மரியாதை இருக்கு’ என்றெல்லாம் பேசி கண்கலங்கினார் மகேஸ்வரி. ஆனால் அசிமிற்கும் மணிக்கும் இது போன்ற பிரச்சினைகள் எதுவும் கிடையாது. ஏனெனில் அவர்கள் ஆண்கள். கோபம் என்பது ஆண்மையின் அடையாளம். மகன் பார்த்தால் என்ன? அவனும் இதே மாதிரி ஆண்மையுடன் வளர்வதுதானே பெருமை?! ஒரு சண்டையில் பெண்கள் அடங்கிப் போவதுதான் நியாயம். அதுதான் ஒழுக்கம். இது போன்ற ஆண்மைய சிந்தனைகளில் இருந்து எப்போது விடுபடுவோம்?!

சற்று நிதானமாகப் யோசித்துப் பார்த்தால் மணிகண்டனின் கோபத்திற்கு முட்டையைத் தாண்டி பொம்மையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மைனாவின் ‘சென்டிமென்ட்’ பொம்மையை எடுத்து வைத்துக் கொண்டு சற்று நேரம் ஜாலியாக வெறுப்பேற்றினார் மகேஸ்வரி. இது தொடர்பான விவாதமும் முன்பு நடந்தது. மைனா மணிகண்டனின் நண்பர். எனவே மணிகண்டனுக்கு இது தொடர்பான கோபமும் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருந்திருக்கலாம்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

நள்ளிரவு. ‘முட்டை இருந்தாத்தானே பிரச்சினை. எல்லாத்தையும் காலி பண்றோம்” என்கிற ஆவேசத்தில் அமுதவாணன் தலைமையில், கிச்சன் ஏரியாவில் ஆம்லேட் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போதும் விக்ரமன் ஏதோ அறிவுரை ‘போய்யா. யோவ்..’ என்று அவரை ஜாலியாக பின்னால் தள்ளி விட்டார்கள். ஆக.. எத்தனை சீசன் கடந்தாலும் இந்த முட்டைப் பிரச்சினை மட்டும் ‘விடாது கருப்பு’ மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

“சாப்பிடுங்க. நல்லா சாப்பிடுங்க" – விருந்தோம்பலின் உச்சத்தில் பிக் பாஸ்

நாள் 100 விடிந்தது. பிக் பாஸிற்கு குறும்புதான். ‘காக்கா முட்டை.. காக்கா முட்டை’ என்கிற பாடலைப் போட்டு மகிழ்ந்தார். (என்னா வில்லத்தனம்?!) “ஒரு படத்துல மத்தவங்க அழுவறதைக் கேட்டு எஸ்ஜே சூர்யாவுக்கு ஆனந்தமா இருக்கும். பிக் பாஸ் அந்த டைப் போல” என்று ராபர்ட் கிண்டலடித்தார். அபூர்வமாகத்தான் மாஸ்டர் வாயைத் திறக்கிறார். திறந்தால் திருவாசகம்தான்.

“எனக்கெல்லாம் சண்டை போட வராது. ஆனா ‘நீங்க சண்டை போட வேணாம். கருத்தைச் சொன்னா போதும்ன்னு கமல் சார் சொல்லியிருக்கார்” என்று இன்னொரு மூலையில் கண்கலங்க சொல்லிக் கொண்டிருந்தார் மைனா. நேற்றைய சண்டையில் மணிகண்டன், பொம்மை பிரச்சினையையும் இழுத்து வைத்து பேசிக் கொண்டிருக்க ‘அதை நான் பார்த்துக்கறேன்’ என்பதை அங்கு வந்து தயக்கத்துடன் சொன்னார் மைனா. அதிகமாகச் சொன்னால் மணிக்கு கோபம் கூடி விடும் என்பது ஒரு காரணமாக இருக்கும். “முடிஞ்சு போன சண்டையை விக்ரமன் கிளப்புவார்’ என்று இன்னொரு பக்கம் ‘இண்டர்வியூ’ தந்து கொண்டிருந்தார் முத்து. அமைதியாகப் பேசும் விக்ரமனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அராஜகமாகப் பேசும் அசிமிற்கு ஆதரவு கூடுகிறது. மக்களின் இந்த சிக்கலான உளவியலைப் புரிந்து கொள்வது சிரமம். முதலில் தவறான நபரைத் தேர்ந்தெடுத்து விட்டு பிறகு வருந்துவார்கள். ஆனால் மீண்டும் அதையேதான் செய்வார்கள்.

விக்ரமன்
விக்ரமன்

‘டாஸ்க் லெட்டரை’ சாந்தி வாசிக்கத் தயாராக, குளித்துக் கொண்டிருந்த முத்துவை பாதியில் வெளியே இழுத்து துண்டைப் போர்த்தி தரதரவென்று வம்படியாக கொண்டு வந்து சபையின் முன்னால் நிறுத்தினார்கள். பாவம், அவருக்கும் டாஸ்க்கிற்கும் சம்பந்தமேயில்லை. போட்டியாளர்களுக்கு மட்டும் ஒரு சிறப்புச் சலுகை. அவர்களுக்கு விருப்பமான உணவை பிக் பாஸின் காதில் ரகசியமாகச் சொன்னால் கொடுத்தனுப்புவாராம். (என்ன இருந்தாலும் பிக் பாஸ் பெரிய மனுஷன்தான். என்னதான் கதறக் கதற அடிச்சாலும் சோறு மட்டும் கரெக்ட்டா போட்டுடறாரு!).

மற்றவர்கள் சிக்கன், மட்டன், பீட்ஸா என்று கேட்க விக்ரமன் மட்டும் ‘பீப் பிரியாணி’ என்று கேட்டது ஒரு நல்ல அரசியல் சமிக்ஞை. எளிய சமூகத்தின் உணவு என்பது இங்கு வெறுப்பரசியல் ஊட்டப்பட்டதாக மாறி விட்ட நிலையில், இது போன்ற அரசியல் அசைவுகள் நிகழ்வது அவசியமானது. தமிழ் சினிமா எத்தனையோ ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் ‘மாட்டுக்கறி’ என்னும் சொல், பா.இரஞ்சித்தின் சினிமாவில் வந்தது. உணவுப்பழக்கத்திலும் அரசியல்.

‘பணப்பெட்டி டாஸ்க் – அதிரடியாக முடிவெடுத்த கதிரவன்

முட்டைப் பிரச்சினை தொடர்பாக அமுதவாணன், க்வீன்சி ஆகிய இரண்டு பக்கமும் பேசி காமெடி செய்து கொண்டிருந்தார் அசல். ‘அசிமுக்கும் விக்ரமனுக்கும் வாக்குவாதம் வர்ற காட்சிகளை வெளில பார்க்கும் போது எனக்கு நிறைய பாயிண்ட் தோணும்” என்று முன்னர் சொன்ன அசல், நேற்றைய சண்டையின் போது அடக்கி வாசித்தது சிறப்பு.

‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்கிற பாடல் ஒலிக்க ரச்சிதாவும் ஆயிஷாவும் உள்ளே வந்தார்கள். சட்டென்று கண்கலங்கிய ஷிவின் ஓடோடிச் சென்று ரச்சிதாவை அணைத்து நீண்ட நேரம் நெகிழ்ந்து கொண்டிருந்தார். உள்ளேயிருந்த ராபர்ட்டை யாரோ அவசரப்படுத்தி வெளியே அழைத்து வந்தார்கள். அவர் சங்கடமான புன்னகையுடன் ரச்சிதாவை விசாரித்தார். ஒரு பக்கம் அவரைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது. பிறகு ஒரு சாக்லேட்டை அன்புடன் ரச்சிதாவிற்கு பரிசளித்த ராபர்ட்டை மக்கள் கிண்டல் செய்தார்கள்.

தனலட்சுமி
தனலட்சுமி

“மக்களே கார்டன் ஏரியாவிற்கு வாங்க” என்று அழைத்தார் பிக் பாஸ். யெஸ்.. ஆவலுடன் எதிர்பார்த்த ‘பெட்டி டாஸ்க்’ அறிவிப்பு வந்து விட்டது. ஆனால் வெள்ளை நிற கண்ணாடிப் பெட்டியில் அல்லாமல், ஏதோ கொள்ளையடித்த பணம் போல ஒரு மூட்டையில் கட்டி, தூக்கில் தொங்க விட்டிருந்தார்கள். “ஏலம் மூணு லட்சத்துல இருந்து ஆரம்பிக்குது. எடுக்கிறவங்க எடுத்துக்கோங்க” என்று அறிவிப்பு செய்தார் பிக் பாஸ். இந்த அறிவிப்பு வந்தவுடனே மைனாவின் முகத்தில் ஒரு ஜெர்க் வந்தது. ‘தொகை உயரட்டும்..’ என்று நினைத்திருந்தாரோ என்னமோ.

அசிம். ஷிவின், விக்ரமன் ஆகிய மூவரும் நிச்சயம் எடுக்க மாட்டார்கள். அமுதவாணன் ஒருவேளை ஃபைனலிஸ்ட்டாக ஆகவில்லையென்றால் யோசித்திருப்பார். ‘இருபது லட்சம் போனாலும் எடுக்க மாட்டேன். மேடையைத் தொடுவதுதான் என் லட்சியம்” என்று அவரும் சொல்லி விட்டார். (அவர் அப்படி எமோஷனலாக சொல்லிக் கொண்டிருக்கும் போது தனலஷ்மி அசந்தர்ப்பமாக சிரித்திருக்க வேண்டாம். அதை அமுது விசாரிக்க, அதற்கும் தனத்திற்கு கோபம் வந்து விட்டது. கடவுளே..!).

அறிவிப்பு முடிந்த அடுத்த கணமே மூட்டையை நெருங்கி கயிற்றை வெட்ட ஆரம்பித்தார் கதிர். அவர் விளையாட்டுக்குத்தான் செய்கிறார் போல என்று நினைத்தாலும் மற்றவர்கள் ஓடி வந்து தடுத்தார்கள். ‘சரிப்பா. எடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டே. தொகை உயர்ற வரைக்கும் காத்திரு’ என்பது அவர்கள் சொன்னது நல்ல யோசனை. ஆனால் கதிரவனுக்கு அதிகத் தொகையைப் பெறுவது நோக்கமில்லை.

“இட்ஸ் ஓகே.. நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்” என்று புன்னகையுடன் தனக்கு வந்த ஆலோசனைகளை மறுத்தார். ‘ஓகே.. இது அவனோட முடிவு. We have to respect his decision’ என்று முதிர்ச்சியாகப் பேசினார் அசிம். என்றாலும் கதிரவனின் முடிவில் மற்றவர்களுக்கு வருத்தம்தான். குறைந்தபட்சம் போட்டியாளர்களிடமாவது முன்பே தெரிவித்திருக்கலாம். கதிரவனின் முடிவால் அப்செட் ஆகி இருந்தார் ஷிவின். விடைபெறும் போது கூட இறுக்கமாக இருந்தார். கைகொடுக்கவில்லை. மைனாவிற்கும் அப்செட் மாதிரித்தான் தெரிந்தது. (வட போச்சே?!).

ராபர்ட்
ராபர்ட்

“அதான் முடிவு பண்ணியாச்சுல்ல. சட்டுப்புட்டுன்னு இடத்தைக் காலி பண்ணுங்க” என்கிற மாதிரியே கதிரவனை ஹாண்டில் செய்தார் பிக் பாஸ். காமிரா முன்பு வந்து மக்களுக்கு நன்றி சொல்லி விட்டு “எல்லோரும் இருக்கும்போது நான் வெளியே போறேன்.. அதுதான் எனக்கு மகிழ்ச்சி” என்று புன்னகையுடன் விடைபெற்றார் கதிரவன்.

போட்டியாளர்கள் வேண்டிக் கொண்ட உணவுகள் வந்தன. “மத்தவங்களை விட்டுட்டு எப்படி சாப்பிடறது?’ என்று சங்கடப்பட்ட ஷிவினிடம் “அவங்களுக்கும் வரும்.. நீ சாப்பிடு’ என்று மற்றவர்கள் ரவுண்டு கட்ட ஆரம்பித்தார்கள். பிக் பாஸ் கொடுமைக்காரர்தான். ஆனால் மகா கொடுமைக்காரர் அல்ல. மற்றவர்களுக்கும் சிறப்பு உணவை தந்து அருளினார்.

ஆக.. ஆடுகளைக் குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் தடவி தயார் செய்தாகி விட்டது. இனி வேறென்ன? பிரியாணிதான்.