Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 12: `வாடா, சண்டைக்கு வாடா...’ அசிமின் ரக்கட் பாய் மோட்; சூடாக பதிலடி தந்த ஆயிஷா!

பிக் பாஸ்

அப்படியே வரிசையாக சென்று ஜனனி, ரச்சிதா, மகேஸ்வரி ஆகியோர்களையும் நோக்கி “உங்களுக்குத் தகுதியில்ல” என்கிற காரணத்தை ஆட்சேபம் தரும் உடல்மொழியில் அசிம் சொல்லிக் கொண்டே சென்றார்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 12: `வாடா, சண்டைக்கு வாடா...’ அசிமின் ரக்கட் பாய் மோட்; சூடாக பதிலடி தந்த ஆயிஷா!

அப்படியே வரிசையாக சென்று ஜனனி, ரச்சிதா, மகேஸ்வரி ஆகியோர்களையும் நோக்கி “உங்களுக்குத் தகுதியில்ல” என்கிற காரணத்தை ஆட்சேபம் தரும் உடல்மொழியில் அசிம் சொல்லிக் கொண்டே சென்றார்.

பிக் பாஸ்
ஒரு திரைப்படத்தின் அதிரடி கிளைமாக்ஸை ஆரம்பக் காட்சியிலேயே வைத்தால் எப்படியிருக்கும்? இந்த நாள் அப்படியாகத்தான் இருந்தது. ஆம், ரேங்கிங் டாஸ்க்கை இப்போதே ஆரம்பித்து வைத்து வீட்டை ரணகளமாக்க பிக் பாஸ் போட்ட திட்டம் கச்சிதமாக வேலை செய்தது. இந்த டாஸ்க்கில் அனல் பறந்தது. இந்த தீப்பொறி டிராமாவில் கொடூரமான வில்லனாக இருந்தவர் அசிம்.
அசிம்
அசிம்

‘வாடா. சண்டைக்கு வாடா..’ என்கிற மோடில் உக்கிரமாக இருந்தார் அசிம். இதுவரையான சீசனில் முன்பு இருந்த அத்தனை அடாவடிக்காரர்களையும் தான் மிஞ்சி விட வேண்டும் என்கிற துடிப்பு அவருக்குள் இருந்தது போல. எனவே பெரும்பாலோனோரை தூக்கியெறிந்து பேசினார். குறிப்பாக ஆயிஷாவையும் விக்ரமனையும் வெறியேற்றுவது போல சகட்டு மேனிக்கு அலட்சியமாக அசிம் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அசிமின் உடல்மொழியைப் பார்க்க அத்தனை அருவருப்பாக இருந்தது. ‘இதெல்லாம் சும்மா லுலுவாய்க்கு’.. என்பது போல டாஸ்க் முடிந்ததும் அசிம் மன்னிப்பு கேட்டது அதை விடவும் அருவருப்பு. அத்தனை செயற்கைத்தனம். ரணகளமான ‘ரக்கட் பாயாக’ தன்னை சித்தரித்துக் கொள்ள முயன்ற அசிமின் இந்த ஒட்டுமொத்த டிராமா மிகவும் எரிச்சலூட்டியது. பஞ்சாயத்தின் போது கமல் இதை அழுத்தமாக கண்டிக்க வேண்டும்.

விக்ரமன்
விக்ரமன்
இத்தனை கொதிநிலையான சூழலிலும் கண்ணியத்தைக் கைவிடாமல் இருந்த விக்ரமன் பாராட்டுக்குரியவர். எவிக்ஷன் ஆபத்து உள்ளவர்களில் பிரதானமாக இருந்த விக்ரமன், இதனால் கூட காப்பாற்றப்படக்கூடும். ‘சண்டையை ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தவன், ஆம்புலன்ஸ்ல போன கதையாக’, பிள்ளைப்பூச்சிகளான ஜனனியும் ராமும் இறுதியில் சிறைக்குச் சென்றதுதான் பரிதாபமான கிளைமாக்ஸ்.

நாள் 12-ல் நடந்தது என்ன?

‘டங்கா மாரி ஊதாரி’ என்கிற ரகளையான பாடலுடன் பொழுது விடிந்தது. டான்ஸ் மாரத்தானில் மிகவும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் வந்தது. ராபர்ட், சாந்தி என்று இரு டான்ஸ் மாஸ்டர்களுக்குள் போட்டி. தன்னால் இயன்ற வரையில் சாந்தி நன்கு ஆடினாலும், கீழே உருண்டு புரண்டு கோலம் எல்லாம் போட்டு ஆடிய ராபர்ட் வெற்றி பெற்றார்.

ராபர்ட் - சாந்தி
ராபர்ட் - சாந்தி

“ஓகே.. டான்ஸ் போட்டி முடிஞ்சது. ஒரு பாட்டு போடறேன். க்ரூப்பா டான்ஸ் ஆடலாமா?” என்று பிக் பாஸ் கேட்ட நேரம், அவருடைய ஜாதகத்தில் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். பாடல் ஆரம்பித்தவுடன் கதிரவன் உற்சாகமாகச் சாப்பாட்டு மேஜையில் ஏறி ஆட, தனலஷ்மியும் ஷெரினாவும் அவரைப் பின்பற்றினார்கள். விளைவு, கண்ணாடி மேஜை ‘படார்’ என்று உடைந்து விரிசல் ஏற்பட ‘ஐயோ.. நான் இல்லப்பா..’ என்ற படி அலறியடித்து இறங்கினார்கள். “அடப் பாவிகளா.. நூறு வருஷமா இருந்த மேஜைடா.. சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே!” என்று பிக் பாஸ் மைண்ட் வாய்ஸில் ஊமைக்குத்தாக அழுதிருக்கலாம்.

‘அசிமின் அநியாயமான அட்ராசிட்டி டிராமா’

‘கதை சொல்லும் நேரம்’ டாஸ்க்கின் மூலம் ஃப்ரீ ஸோனிற்குள் சென்ற எட்டு நபர்களைத் தவிர்த்து மீதமுள்ள பதிமூன்று நபர்களுக்குள் ரேங்கிங் டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். இதில் முதல் மூன்று இடத்தில் வருபவர்கள், அடுத்த வார தலைவர் போட்டிக்கு செல்லலாம். கடைசி இரண்டு இடத்தில் வருபவர்கள் சிறைக்குச் சென்றாக வேண்டும்.

ரணகளமான இந்த டாஸ்க் ஆரம்பித்தது. பந்தியில் இடம்பிடிப்பது போல ஆளாளுக்கு தங்களுக்கு பாதுகாப்பான எண்ணில் போய் நின்று கொண்டார்கள். முதல் இடத்தில் மகேஸ்வரியும் இரண்டாம் இடத்தில் சாந்தியும் மூன்றாம் இடத்தில் க்வின்சியும் கர்ச்சீப் போட்டு இடம் பிடித்தார்கள். (என்னது! க்வின்சி மூன்றாம் இடமா?!). ‘நான் ஏன் இந்த எண்ணில் நிற்கிறேன்?” என்கிற காரணத்தைச் சொன்னார்கள். சில காரணங்கள் நியாயமாக இருந்தன. பல காரணங்கள் ஒட்ட வைக்கப்பட்டதாக இருந்தன.

ஆயிஷா
ஆயிஷா

அசல், ஆயிஷா போன்றவர்கள் “நாங்க தலைவர் பதவிக்கெல்லாம் ஆசைப்படலை. மூன்று இடங்களைத் தாண்டிய இடம் கிடைத்து ஜெயிலுக்கு போகாமல் இருந்தாலே போதும்’ என்கிற மோடில் இருந்தார்கள். கடைசி இருந்த இடத்தில் இருந்த அசிம் “இங்க நிக்கற முக்காவாசி பேருக்கு எந்த தகுதியுமே இல்ல” என்று அதிரடியாக தன் வாதத்தை ஆரம்பித்தார். பிறகு விக்ரமன், ஆயிஷா, மகேஸ்வரி, ரச்சிதா போன்றவர்களை டார்கெட் செய்து ஏக வசனத்தில் தாக்கினார்.

“தூங்கறத தவிர நீ வேற என்ன பண்ணியிருக்கே?” என்று ஆயிஷாவை எகத்தாளமாக பேச ஆரம்பித்தார் அசிம். ஆயிஷாவும் பதிலுக்கு எகிற “கை நீட்டி பேசற வெலை வெச்சுக்காத” என்று ஆத்திரப்பட்ட அசிமின் உடல்மொழியில் ஆணாதிக்கத்தனம் அசிங்கமாக பொங்கி வழிந்தது. உரையாடலின் உக்கிரத்தில் ‘போடி.. வாடி’ என்று அசிம் பேசியதால் பரபரப்பு அதிகமானது. இதை ஆட்சேபித்த விக்ரமனையும் “போடா.. டேய்.. வேலையைப் பாருடா” என்று பேசி சூழலை இன்னமும் அசிங்கமாக்கினார் அசிம்.

‘அசிமிற்கு சூடாக பதிலடி தந்த ஆயிஷா’

தன்னை ஏகமனதாக பேசியதால் ‘செருப்பால அடிப்பேன்’ என்று பதிலுக்கு ஆயிஷாவும் சூடானதால் அசிமின் ஆத்திரம் உச்சிக்குச் சென்றது. ‘அப்படித்தான்டி பேசுவேன். ‘வாடி. போடின்றதுக்காக செருப்பை எடுப்பியா.. நீ யாரு.. நீயெல்லாம் ஒரு ஆளே இல்லை” என்று அவர் சாமியாட “நீங்க முதல்ல வாடி, போடின்னதாலதான் அவ செருப்பை எடுத்து அடிக்க வந்தா” என்று இந்த இடத்தில் சரியாக இடைமறித்தார் ஷிவின். ஆனால் ‘ரெண்டு பேர் மேலயும்தான் தப்பு” என்று சொன்னது சரியல்ல. ஷிவினிடம் வாதாடாமல் பம்மிச் சென்றார் அசிம். போலவே தனலஷ்மியிடமும் ‘இல்லம்மா தங்கச்சி.. நீ போ’ என்று ரணகளத்திலும் பாசம் காட்டினார்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

அப்படியே வரிசையாக சென்று ஜனனி, ரச்சிதா, மகேஸ்வரி ஆகியோர்களையும் நோக்கி “உங்களுக்குத் தகுதியில்ல” என்கிற காரணத்தை ஆட்சேபம் தரும் உடல்மொழியில் அசிம் சொல்லிக் கொண்டே சென்றார். “இது ஓட்டப்பந்தய போட்டி இல்ல. முதல்ல வந்து இடம் பிடிக்கறதுக்கு.. தகுதியின் அடிப்படையில் வரணும்” என்று அசிம் சொல்வது சரிதான். ஆனால் தன்னுடைய தகுதியை எடுத்துரைப்பதன் மூலம்தான் இடம் பிடிக்க வேண்டுமே ஒழிய, மற்றவர்களை அவமானப்படுத்திக் கீழே இறக்குவதின் மூலம் தன் தகுதியை நிரூபிக்க முயலக்கூடாது. இதனால் வரிசையில் அல்ல, பிக் பாஸ் வீட்டில் கூட அசிமிற்கு இடம் கிடைக்காமல் போகலாம்.

இடம் பிடிக்கும் சண்டை ஒருவாறாக ஓய்ந்து வாக்கெடுப்பு ஆரம்பித்தது. “எனக்கு ஆறாம் நம்பர் வேண்டும். விக்ரமன் ஜெயிலுக்குப் போயி அங்க நல்லா தூங்கட்டும்” என்று மீண்டும் எகத்தாளம் பேசினார் அசிம். ‘உங்க சண்டைல நான் கொடுத்த ஐநூறை மறந்துடாதீங்க’ என்கிற கதையாக “எனக்கு நாலாம் நம்பர் வேணும்ப்பா” என்று ரச்சிதாவின் இடத்தை ஜாலியாக டார்கெட் செய்தார் அசல். ஒருமாதிரியான குழப்பமான வாக்கெடுப்பு நடந்து முடிந்து, நான்காம் இடத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார் அசல்.

‘வா.. போ..ன்னு பேசாதீங்க’ – நீடிக்கும் மரியாதைக் குழப்பம்

இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே ஒரு பிரச்னை நீடிக்கிறது. துவக்கத்தில் நட்புடன் ஒருமையில் பேசிக் கொள்கிறவர்கள், திடீரென்று அதிலிருந்து விலகி “நீ வா. போ..ன்னு பேசாதீங்க” என்று மரியாதையை எதிர்பார்க்கிறார்கள். அசல் – க்வின்சி விவகாரத்தில் இது ஆரம்பித்தது. என்னதான் ஆரம்பத்தில் ஜாலியாக பேசிக் கொண்டாலும், ‘அப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று ஒருவர் சொல்லி விட்ட பிறகு ஒருமையில் பேசுவதை நிறுத்திக் கொள்வதுதான் நாகரிகம்.

விக்ரமன்
விக்ரமன்

விக்ரமனின் இடத்திற்கு போட்டி போட்ட அசிம், தொடர்ந்து அவரை ஏகவசனத்தில் பேச “மரியாதை கொடுத்துப் பேசுங்க” என்றார் விக்ரமன். “நீ ஆரம்பத்துல எப்படிப் பேசின.. போடா” என்று அசிம் சொன்னது அநாகரிகம். ஜோதியில் ஐக்கியமாவதற்காக ஆரம்பத்தில் விக்ரமன் அப்படிப் பேசியிருக்கலாம். ஆனால் ஒருவரின் நட்பு தவறி உடல்மொழி ஆட்சேபகரமாக தெரியும் போது தன் மரியாதையைக் கேட்டுப் பெறுவதில் தவறில்லை. (கமலும் இதை சொன்னது நினைவிருக்கலாம்!). மேற்கத்திய நாடுகளில் ஒரு வழக்கம் உள்ளதாகச் சொல்வார்கள். ஒருவரின் பெயரை நம் விருப்பப்படியெல்லாம் சுருக்கி அழைத்து விட முடியாது. ‘உங்களை இப்படி அழைக்கலாமா?’ என்று முன்பே அனுமதி கேட்க வேண்டும்.

ஆயிஷா
ஆயிஷா

பிறகு நடந்த வாக்கெடுப்பின் மூலம் விக்ரமன் தன் இடத்தைக் காப்பாற்றிக் கொண்டார். “நான் நிறைய வேலை செய்திருக்கேன். யாரையும் மரியாதைக் குறைவாக பேசவில்லை. கண்ணியமாக நடந்திருக்கிறேன்” என்று விளக்கம் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார் விக்ரமன். இது மட்டுமன்றி, அசிமின் அட்ராசிட்டி பலரை முகஞ்சுளிக்க வைத்து அவருக்கு எதிராக வாக்களிக்க வைத்திருக்கலாம். அசிமிற்கு கிடைத்த நோஸ் கட் இது.

சாந்தியின் இரண்டாம் இடத்திற்கு அமைதியாக வந்து மோதினார் ஏடிகே. “ஏன் ஒண்ணாம் இடத்திற்கு மோதலை?” என்று சாந்தி கேட்டது சரியான கேள்வி. ‘மகேஸ்வரியைப் பிடிக்கும்’ என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் ஏடிகே. சாந்தி கேட்ட கேள்வியை ஏடிகே ரசிக்கவில்லை என்பதால் வீம்பாக பதில் சொன்னார் என்பது பிறகு தெரிந்தது.

‘மீண்டும் நெருப்பைப் பற்ற வைத்த பிக் பாஸ்’

இந்த ரேங்கிங் டாஸ்க் ஒரு வடிவத்திற்கு வந்து சோ்ந்தது. முதல் இரண்டு இடத்தில் மகேஸ்வரியும் ஏடிகேவும் இருந்தார்கள். சிறைக்குச் செல்லும் ஆபத்தில் ஆயிஷாவும் ரச்சிதாவும் இருந்தார்கள். ‘ஹப்பாடா.. ஒருவழியா சண்டை ஓய்ஞ்சுது’ என்று நாம் நிம்மதியாகும் போது பிக் பாஸிற்கு அது பொறுக்கவில்லை. இதில் மேலும் சில புஸ்வாணங்களை கொளுத்திப் போட்டால் ஜாலியாக இருக்குமே என்று தீர்மானித்தார் போல. எனவே ‘ஃப்ரீஸோனிற்கு தேர்வானவர்களுக்கு ஒரு சலுகையை அறிவித்தார். மூன்று நபர்களின் ரேங்கிக்கை நீங்கள் மாற்றியமைக்க முடியும்” என்று மீண்டும் நெருப்பைப் பற்ற வைத்து, ஓரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை போர்க் களத்திற்குள் கொண்டு வந்தார்.

ஜனனி
ஜனனி

எட்டுப் போ் கொண்ட அந்த தோ்வுக்குழு கூடி ரகசியம் பேசி மைனா தலைமையில் தங்களின் முடிவை அறிவித்தார்கள். இதன்படி அசிமும் விக்ரமனும் கடைசி ரேங்க்கைப் பிடித்து சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. “ஏன். இந்த வன்மம்.. ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி. இது தர்மமா.. நியாயமா..?” என்றெல்லாம் தன் ஆட்சேபத்தை கடுமையாகப் பதிவு செய்தார் விக்ரமன். “ஆணுக்கு ஒரு நியாயம். பெண்ணுக்கு ஒரு நியாயமா”? என்று அசிமும் இன்னொரு பக்கம் கொதித்தார். தான் மரியாதையில்லாமல் பேசியதால்தான் ஆயிஷா கோபத்தில் அவ்வாறு எதிர்வினை செய்தார் என்கிற எளிய நியாயம் கூட அசிமிற்குப் புரியவில்லை. இரண்டையும் ஒரே தராசில் வைக்கிறார்.

விக்ரமன் மற்றும் அசிமின் பலத்த ஆட்சேபம் காரணமாக தேர்வுக்குழு குழப்பம் அடைந்தது. “ஆர்டரை மாத்தலாமா?” என்று பிக் பாஸிடம் அனுமதி கேட்டு மீண்டும் ‘இங்க்கி பிங்க்கி பாங்க்கி’ போட்டார்கள். இதனால் விக்ரமன் மற்றும் அசிம் தப்பித்து, பிள்ளைப்பூச்சிகளான ராமும் ஜனனியும் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டார்கள். ராமாவது தன் தரப்பிற்காக சற்று வாதம் செய்து பார்த்து வெறுப்புற்று பின்வாங்கினார். பாவம் ஜனனியால் வாய் பேசவே முடியவில்லை. மற்றவர்களை விடவும் இந்த இருவரின் பங்களிப்பு குறைவாக இருந்தது என்பது தேர்வுக்குழு வைத்த காரணம்.

வானிலை மாறி மாறி அடித்து ரேங்கிங் டாஸ்க்கின் முடிவு ஒருவாறாக வந்து சோ்ந்தது. முதல் மூன்று இடத்தில் மகேஸ்வரி, சாந்தி, ஏடிகே தேர்வாகி அடுத்த வார தலைவர் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். ராம் மற்றும் ஜனனிக்கு ஜெயில். சிறைக்கான சீருடையைப் போட்டுக் கொண்டு வெளியே வர முடியாமல் வெட்கப்பட்ட ஜனனி தந்த ரியாக்ஷன்கள் க்யூட் ஆக இருந்தன. பெரிய சைஸ் பறவைக் கூண்டு மாதிரி இருந்த சிறைக்குள் ஒரு படுக்கை மட்டுமே இருந்தது.. இடமும் சின்னதாக இருந்தது. ராமும் ஜனனியும் தங்களின் தலைவிதியை நொந்தபடி அமர்ந்திருந்தார்கள்.

ராம், ஜனனி
ராம், ஜனனி

பிறகு நடந்த ரப்பர் வளையம் எறியும் போட்டி மற்றும் சிறந்த சேல்ஸ்மேன் போட்டியில் ஜெயித்தவர்களுக்கு பரிசு கிடைத்தது. ஐபோன் வென்று அசத்தினார் அமுதவாணன். அனைவருக்குமே எல்இடி டிவி பரிசு கிடைத்ததால் ரேங்கிங் சூட்டை மறந்து சந்தோஷம் அடைந்தார்கள்.

ரணகளமாக நடந்து முடிந்த இந்த ரேங்கிங் டாஸ்க்கின் மூலம் கிடைத்த நீதி இதுதான். ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’. அசிமின் அட்ராசிட்டியை கமல் அழுத்தமாக கண்டிப்பார் என்று எதிர்பார்ப்போம். ரெட் கார்ட் தந்து அசிம் வெளியே அனுப்பப்பட்டால் கூட அது முழு நியாயமே. ஆனால் இத்தனை கன்டென்ட் தருபவரை பிக் பாஸ் இழக்க விரும்பாது. அதுதானே அவர்களின் மாஸ்டர் பிளான்?!