‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது பிக் பாஸ் தத்துவம். இன்றும் அது நிகழ்ந்துவிட்டது. ஆம், ஜி.பி.முத்து இந்த சீசனில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவர் முழு வெள்ளந்தியல்ல. ஆனால் மேட்டிமைத்தனமும் அகங்காரமும் பொய்மையும் நிறைந்த மனிதர்களோடு ஒப்பிடும் போது ஒரு குழந்தையின் களங்கமற்ற சிரிப்பு போல அவரது வெள்ளந்தித்தனம் கணிசமான மக்களைக் கவர்ந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
பிக் பாஸ் போன்ற பெரிய வாய்ப்பை குடும்பப்பாசம் காரணமாக உதறி விட்டுச் சென்றிருக்கிறார் முத்து. ‘என் பிள்ளய காணாம இருக்க முடியலய்யா’ என்று அவர் கண்கலங்கச் சொல்லும் போது ‘இதுவும் நடிப்பா கோப்பால்?’ என்று ஈரத்தன்மையே இன்றி கேட்க முடியவில்லை. அதே சமயம் வேறு ஏதேனும் பின்னணிக் காரணங்கள் இருக்கலாமோ என்று மெல்லிய சந்தேகம் எழாமலும் இல்லை.

‘மன்னிக்கறவன் மனுஷன்னா... மன்னிப்பு கேட்கறவன் பெரிய மனுஷன்’ என்கிற வசனம் இன்று மீண்டும் மெய்ப்பட்டது. தன் தவற்றை உணர்ந்து அசிம் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டது நல்ல விஷயம். குறிப்பாக கேமரா முன்பு நின்று தன் பெற்றோர்களிடம் ‘சாரி’ சொன்னது நெகிழ வைத்தது. ஆனால் ஒருவர் அதே தவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டு மீண்டும் மீண்டும் ‘மன்னிப்பு’ கேட்பதைப் போன்ற அயோக்கியத்தனம் இருக்க முடியாது. எனில் அவர் ஆத்மார்த்தமாக தன் தவற்றை உணரவில்லை என்றே பொருள். அசிம் மன்னிப்பு கேட்ட விதத்தில் ஏதோவொரு நெருடல் உள்ளது. இனி வரும் நாள்களிலும் அவர் இன்னொரு முறை ‘வெடிப்பார்’ என்று தோன்றுகிறது. அது நடக்காமல் இருக்கட்டும்.
அசிமிற்கு ‘ரெட் கார்ட்’ எச்சரிக்கையை அழுத்தமாக உணர்த்தி விட்டு “பார்த்து நடந்துக்கங்க" என்பது போல் இந்த விவகாரத்தை கமல் அணுகிய விதம் சிறப்பு. மன்னிப்புதான் தவறு செய்தவனுக்கு மிகப்பெரிய தண்டனை.
நாள் 13-ல் நடந்தது என்ன?
நீல நிற காம்பினேஷன் ஆடையில் கலக்கலாக வந்தார் கமல். “வீட்டைப் பத்தி போன வாரம் ரொம்ப பெருமைப்பட்டேன். கலகலப்பா இருந்துச்சு... ஆனா, இந்த வாரம்? தப்பு நடந்தா தட்டிக் கேட்கணும். கேட்போம்" என்று சொல்லி விட்டு வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காண்பித்தார்.

ராமையும் ஜனனியையும் சிறையிலிருந்து ஒரே இரவில் ரிலீஸ் செய்து தன் பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடிக் கொண்டார் பிக் பாஸ். ராம் தலையில் தண்ணீர் ஊற்றி திருஷ்டி கழித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் அசல். மகனின் பிரிவுத் துக்கத்திலிருந்த முத்து நெளிந்து கொண்டே இருந்தார். “கமல் சார் வந்தவுடன் பேசி அனுப்பிடுவாங்க.” என்று ஆறுதல் சொன்ன அமுதவாணன் "கமலே உங்க ரசிகர்ண்ணே...” என்று ஜாலியாக கோத்து விட “ஏண்டா தம்பி இப்படியெல்லாம் செய்யறே?” என்று நொந்துபோனார் முத்து.
‘என்னை வெளில அனுப்புங்கய்யா... சாப்பிடாமல் அடம்பிடித்த முத்து’
கன்ஃபெஷன் அறைக்கு பிக் பாஸ் அழைக்க “அய்யோ. போறதுக்கே வெட்கமா இருக்கே?” என்று பம்மிப் பதுங்கிச் சென்றார் முத்து. “சாப்பிடறேன்னு மைக் மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க” என்று பிக் பாஸ் கேட்ட விதம் ரசிக்க வைத்தது. முத்து சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்திருக்கிறார் போல.

தேர்வில் காப்பியடித்து பாஸ் செய்திருந்தால் கூட இத்தனை மகிழ்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். பிக் பாஸ் காஃபி பவுடர் தந்ததை வீட்டில் உள்ளவர்கள் அப்படி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். இன்ப அதிர்ச்சியில் ஷிவின் அழுதே விட்டார். காஃபி வெறியர்களால் மட்டும்தான் இந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு பொருளுக்கு நம்மை அடிமையாக்கும் வணிக ரகசியம் இது. காஃபியை முதலில் இலவசமாகத் தந்து மக்களுக்குப் பழக்கி, பிறகு பெருவணிகமாக வளர்த்த வரலாறு இது. இந்த வளர்ச்சிதான் "லட்ச ரூபாய் தந்தாவது ஒரு குறிப்பிட்ட மாடல் மொபைல் போனை வாங்குவேன்” என்று வெறி கொள்ளுமளவிற்கு இன்று ராட்சசத்தனமாக வளர்ந்திருக்கிறது.
‘ரெட் கார்ட் – ஏகமனதாக அசிமை சுட்டிக் காட்டிய ஹவுஸ்மேட்ஸ்’
அகம் டிவி வழியாக உள்ளே வந்தார் கமல். "இந்த வாரம் எப்படியிருந்தது?” என்று ராசி பலன் போல அவர் கேட்க ‘பரபரப்பா இருந்தது. பயமா இருந்தது. ஸ்பீடா போச்சு. ஜாலியா இருந்தது. யார். யார்ன்னு புரிஞ்சுக்க முடிஞ்சது’ என்றெல்லாம் விதம் விதமான எதிர்வினைகள் வந்தன. “ஆக்ஷன் திரில்லர் மாதிரி இருந்தது” என்று அசிம் சொன்ன போது ‘அடேய்...’ என்று மனதிற்குள் கூவாமல் இருக்க முடியவில்லை. பலரும் அசிம் விவகாரத்தையொட்டி நெருடலாகக் குறிப்பிட ஆரம்பிக்க “இருங்க. விவரமா பேசுவோம்” என்றார் கமல்.

ஸ்டோர் ரூமில் இருந்து ஒரு பொருள் வந்தது. அது ‘ரெட் கார்ட்’. "இதைப் பத்தி யாருக்குத் தெரியாது?” என்று கமல் ஆரம்பிக்கும் போதே அந்தக் கேள்வி, முத்துவிற்கானது என்பது புரிந்துவிட்டது. "புட்பால் பார்த்திருக்கீங்களா?” என்று முத்துவிடம் விளக்க ஆரம்பித்தார் கமல். ஆனால் உள்ளுக்குள் ‘இந்த மனுஷன் என்னத்த சொல்லி மானத்தை வாங்கப் போறானோ?’ என்கிற பதற்றம் கமலுக்குள் ஓடியிருக்கலாம். ஆனால் எவ்வித ‘ஆதாம்’ அசம்பாவிதமும் இன்றி ‘ரெட் கார்ட்’ என்றால் என்னவென்று முத்துவிற்குப் புரிந்துவிட்டது.
‘ரெட் கார்டை’ பார்த்தவுடனே அசிமின் முகம் சிவந்துவிட்டது. “என்னய்யா இது... எல்லோரும் என்னையே குறுகுறுன்னு பார்க்கறாங்க” என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குள் ஓடியிருக்கலாம். நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே ‘ரெட் கார்ட்’ விவகாரத்தை ஆரம்பித்ததின் மூலம் ‘இதோ வந்துடுச்சுல்ல... சூப்பரப்பு’ என்று பல பார்வையாளர்கள் ஆசுவாசத்தை அடைந்திருப்பார்கள். அசிமின் அட்ராசிட்டி காரணமாக அத்தனை மனக்கொதிப்பில் அவர்கள் இருந்திருக்கக்கூடும்.

"யாருக்கு இந்த ரெட் கார்ட் தரலாம்?" என்ற கேள்வி வந்த போது, துளி கூட சந்தேகமே இல்லாமல் அசிமை நோக்கியே 90 சதவிகித பேர் கைகாட்டியது சிறப்பு. ஆனால் சம்பவம் நடந்து கொண்டிருந்த போதும் இதே ஆவேசத்தை அவர்கள் முன்னர் காட்டியிருக்கலாம். தனலஷ்மி, ஷவின் என்று சிலர் மட்டுமே அந்தச் சமயத்தில் அசிமின் அநாகரிகத்தை பலமாகச் சுட்டிக் காட்டினார்கள்.
‘ரெட் கார்ட்’ விஷயத்தில் எல்லோருமே அசிமை நோக்கிக் கைகாட்டிய போது விதிவிலக்காக தனலஷ்மியும் அசலும் மட்டும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கைகாட்டினார்கள். இதில் தனலக்ஷ்மியின் புகாரிலாவது சற்று நியாயம் இருக்கிறது. ‘வாடி. போடி’ என்று பேசிய அசிமை தனலக்ஷ்மி தடுக்கும் போது ‘நீ கௌம்பு, கௌம்பு... காத்து வரட்டும்’ என்று அசல் காட்டிய உடல்மொழி, அசிம் செய்த அநாகரிகத்திற்கு நிகரானது. இதைச் சபையில் சரியாகப் பதிவு செய்தார் தனலக்ஷ்மி. ஆனால் ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ என்பது போல அசலும் தனலக்ஷ்மியை நோக்கி ‘ரெட் கார்ட்’ காரணத்தைச் சொன்னது சிறுபிள்ளைத்தனம்.

தன்னுடைய முறை வரும் போது தானே ‘ரெட் கார்டை’ எடுத்துக் கொண்டார் அசிம். அவருக்கு வேறு சான்ஸூம் இல்லை. “எனக்கு முன்கோபம் நிறைய வரும். ஐம்பது சதவிகிதம் கன்ட்ரோல் பண்ணியிருக்கேன்” என்றெல்லாம் அவர் விளக்கம் தந்த போது ‘ஐம்பதுக்கே இப்படியா?’ என்று தோன்றியது. இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். சம்பவத்தின் போது, அசிம் ஆட்சேபகரமான வார்த்தைகளை இறைத்தது, முழுக்க முழுக்க உணர்ச்சிவசப்பட்டு அல்ல. ‘தான் என்ன செய்கிறோம்?’ என்பதை உணர்ந்து அதற்கான அஜெண்டாவுடன் முன்கூட்டியே திட்டமிட்டு அவர் வந்தது போலவே தோன்றியது. அந்தளவிற்கான நிதானத்தோடு மற்றவர்களைத் திட்டிக் கொண்டிருந்தார். “வேணும்ன்ட்டே செய்யறார்ன்னு தோணுது” என்று மகேஸ்வரியும் இதைச் சரியாகச் சுட்டிக் காட்டினார்.
“கேள்வி கேட்கறவன்தான் அரசியல்வாதி” – கமல்
“நான் சொல்ல நெனச்சத நீங்களே சுய விளக்கமா சொல்லிட்டீங்க. நானா இருந்தா பிங்க் கார்டு கொடுத்திருப்பேன். ‘வெள்ளைச் சட்டை போட்டுட்டா. கேள்வி கேட்கலாமா’ன்னு சொன்னீங்க. அரசியல்வாதிதான் கேள்வி கேட்டாக வேண்டும். நான் வெள்ளை வேட்டிக்கு வக்காலத்து வாங்கலை. நான் பேன்ட் போட்ட ஒரு அரசியல்வாதி.” என்றெல்லாம் ஒரு சரியான அரசியல்வாதியின் கடமையை அசிமிற்குச் சுட்டிக் காட்டிய கமல், கொதிப்பான சூழலிலும் கண்ணியத்தைக் கைவிடாமல் இருந்த விக்ரமனை மனமார பாராட்டியது சிறப்பு. ‘நன்றிண்ணே” என்று கமலின் பாராட்டைக் கும்பிட்டபடி ஏற்றுக் கொண்டார் விக்ரமன்.

ஆயிஷாவையும் பாராட்டினார் கமல். “இன்னொரு செருப்பு இருக்கு... பார்த்து நடந்துக்கங்க” என்று ஆயிஷாவின் பிழையையும் நையாண்டியாக கமல் சுட்டிக் காட்டிய விதம் ரசிக்க வைத்தது. ஆனால் ஒரு பிழையைச் செய்யத் தூண்டியவர் மீதுதான் முதன்மையான குற்றம் இருக்கிறது என்பதையும் கமல் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம். “ஒரு சபையின் கண்ணியத்தைக் காப்பாற்றுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் ஆடை நன்றாக இருப்பதைப் போலவே உங்களின் நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கமல் உபதேசம் செய்த விதம் சிறப்பு.
“கதையை முழுசா கேட்டீங்களா?”
‘ரெட் கார்ட்’ விவகாரம் நாம் எதிர்பார்த்தபடியே முடிந்தது. அசிம் போன்றவர்களை அத்தனை எளிதில் வெளியேற்ற முடியாது.
அடுத்ததாக ‘கதை சொல்லும் நேரம்’ டாஸ்க்கை கையில் எடுத்தார் கமல். “கதையெல்லாம் கேட்டேன்” என்று ஆர்வக்கோளாற்றில் சொல்லி விட்ட மணிகண்டனிடம் “முழுசா கேட்டீங்களா?” என்று கமல் இடைமறித்தது சுவாரஸ்யம். ‘எங்க கேட்டீங்க... அதுக்குள்ள ‘பர்... பர்ன்னு பஸ்ஸரை அமுக்கி கடையைச் சீக்கிரம் சாத்திட்டீங்க’ என்பதே கமல் குறும்புடன் உணர்த்த விரும்பிய உள்ளர்த்தம்.

"ஏன் பஸ்ஸர் அடித்தோம், யாருக்கு அடித்தோம்?’ என்பதற்கு ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார்கள். பிக் பாஸ் ஷோவில் எப்போதுமே ஒரு கோக்குமாக்கான விஷயம் நடக்கும். ‘குண்டை இவரே வைப்பாராம்... அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற முதல்வன் திரைப்பட வசனம் மாதிரி, போட்டியாளர்களுக்கு பிக் பாஸே ஏடாகூடமான விதிகளை வடிவமைத்து மாட்டி விடுவாராம். பிறகு கமல் வந்து “ஏன் அப்படிச் செய்தீங்க?” என்று விசாரணை நடத்துவாராம். ‘பஸ்ஸர் அடித்தால்தான் நீங்கள் பிழைக்க முடியும்’ என்கிற ரணகளமான சூழலை ஏற்படுத்தி விட்டு “ஏம்ப்பா. ஒருத்தன் உருக்கமா கதை சொல்லும் போதா அவனைத் தடுத்து நிறுத்துவே?” என்று பின்னர் விசாரணை செய்வது நகைமுரண்.
“அந்த அறுபது செகண்ட்லதான் சூட்சுமம் இருக்கு... தன்னோட கதையைச் சுவாரஸ்யமா சொன்னாதான்.. தப்பிக்க முடியும்” என்று ஷவின் சொன்னதை “இவங்கதான் இந்த கேமை சரியாப் புரிஞ்சுக்கிட்டாங்க” என்று பாராட்டினார் கமல். அமுதவாணன், ராபர்ட், மணிகண்டன் ஆகிய மூவர் மட்டுமே பஸ்ஸர் அடிக்கவில்லை. எனவே இவர்களுக்கு முன்னுரிமை தந்து “யார் கதையை நீங்க முழுசா கேட்க விரும்பறீங்க?” என்று சாய்ஸ் தந்தார் கமல். இதன்படி ‘சாந்தியின் கதை’யை அவர்கள் தேர்வு செய்ய, தன் வாழ்க்கையின் பின்னணியை உருக்கமாகச் சொன்னார் சாந்தி. “நீங்க டான்ஸ் மாஸ்டரா ஆகியிருக்கா விட்டாலும் நீங்கக் கடந்து வந்த பாதை மிகப் பெரியது” என்று அந்த உருக்கத்தைத் தானும் வழிமொழிந்தார் கமல்.

“மக்களும் சிலரோட கதையை முழுசா கேட்க விரும்பறாங்க. அதன்படி விக்ரமனும் ரச்சிதாவும் தங்களின் கதையை அப்புறமா சொல்லுங்க” என்று சொன்ன கமல் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்ட தகவலையும் கூடவே சொன்ன போது இருவரும் மகிழ்ந்தார்கள்.
‘ரெண்டு ஹீரோயின் கேட்டவராச்சே?!" - முத்துவைக் கிண்டலடித்த கமல்
அடுத்ததாக ‘டான்ஸ் மாரத்தான்’ பற்றிய விசாரணை. ‘எனக்கு டான்ஸ் வராது’ என்று சொன்ன முத்து, இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற விஷயத்தை “நீங்க ரெண்டு ஹீரோயின் கேட்டவராச்சே?” என்று கிண்டலடித்த கமல், ஆவேசமாக நடனம் ஆடி இன்ப அதிர்ச்சி தந்த விக்ரமனையும் பிரத்யேகமாக பாராட்டினார். “இப்ப ஒரு பாட்டு வரும். அதுக்கு டான்ஸ் ஆடினவங்க SAVED” என்று சொல்ல, அதன் மூலம் ஆயிஷாவும் க்வின்சியும் காப்பாற்றப்பட்ட தகவல் வந்ததால், இருவருமே தங்களின் மகிழ்ச்சியை நடனத்தின் மூலம் காட்டினார்கள்.
கிடைத்த பிரேக்கில், அனைவரிடமும் குறிப்பாக ஜனனி, ஆயிஷா, விக்ரமனிடம் மன்னிப்பு கேட்ட அசிமின் பண்பு பாராட்டத்தக்கது. ஆனால் அந்த மன்னிப்பில் ஏதோவொரு செயற்கையான பாவனை இருந்தது நெருடலாகத் தோன்றியது. அவருடைய வருத்தம் உண்மையானது என்பதைக் காலம் நிரூபித்தால் மகிழ்ச்சிதான். “இனிமே வேற மாதிரி கேம் ஆடுவான்” என்று அசிமைப் பற்றிக் கணித்தார் மகேஸ்வரி. “அவனாப் போயி தனியா உக்காந்திட்டு இருக்கான்” என்று வருத்தப்பட்டார் ஏடிகே.

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “மக்களை புரிஞ்சுக்க முடியற அதே சமயத்துல அவங்களை புரிஞ்சுக்கவும் முடியாது. ஒருவர் தன்னுடைய தவற்றை உணர்ந்தால் அவங்க ரெண்டாவது சான்ஸ் தருவாங்க. இது எல்லோருக்கும் பொருந்தும். இங்க குறிப்பா அசிமிற்குப் பொருந்தும். விமர்சனமே ஒரு கட்டத்தில் அன்பா மாறிடும்” என்று சொன்னதின் மூலம் அசிம் காப்பாற்றப்பட்ட தகவலை கமல் பொதுவில் சொல்ல, அசிம் நெகிழ்ந்து சற்று கண்கலங்கினார்.
‘என்னை விட்டுருங்கய்யா... நான் போறேன்!’
“முத்து... ஏன் ஒரு மாதிரி அலைபாய்ஞ்சிக்கிட்டே இருக்கீங்க..?" என்று விசாரித்த கமல் “நீங்க கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க. தனியா பேசலாம்” என்று அழைத்தார். “என் பிள்ளையைப் பிரிஞ்சு இருக்க முடியலைய்யா... மனசு தேடிட்டே இருக்கு... இங்க இருக்க முடியல, மூச்சு முட்டுது... நண்பர்களே, மக்களே... இந்த முடிவிற்காக என்னை மன்னிடுச்சுங்க” என்று முகமெல்லாம் கலங்கி, கண்ணீர் விட்டபடி முத்து கேட்ட போது நமக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. “என்னை விட்ருங்கய்யா... நான் போறேன்” என்று 'தேவர் மகன்' படத்தில் கமல், சிவாஜியிடம் சொல்லும் உருக்கமான வசனம் கூட நினைவிற்கு வந்தது.
இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம், இதற்குப் பிறகு கிடைக்கப் போகும் புகழின் அளவு போன்ற விஷயங்களையெல்லாம் அதிகம் உறுத்தாமல் முத்துவிற்கு எடுத்துச் சொன்ன கமல் “இதுக்கு மேலயும் நான் உங்களை வற்புறுத்த மாட்டேன். உங்க உணர்விற்கு மதிப்பு தரணும். மக்கள் உங்க மேல அத்தனை பிரியம் வெச்சிருக்காங்க... ஆனா உங்க முடிவுதான் முக்கியம். எனக்கு ஏமாற்றம்தான். சரி... நீங்க போகலாம்” என்று கமல் விடைதந்த விதம் அத்தனை பண்புடனும் நாகரிகத்துடனும் இருந்தது.

தங்களிடம் விடைபெற்றுக் கொள்ளாமல் முத்து வெளியேறிய சூழல் குறித்து பின்னர் அறிந்த சக ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார்கள். சட்டென்று கண்கலங்கினார் சாந்தி. அசிமும் மூலையில் சென்று துயரத்துடன் அமர்ந்து விட்டார். முத்துவின் பிரிவு அந்த வீட்டில் உடனடி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பார்வையாளர்களும் இதே தாக்கத்தை நிச்சயம் அடைந்திருப்பார்கள். காமெடி ஏரியாவிற்கு அமுதவாணன் இருப்பதுதான் இப்போதைய ஒரே ஆறுதல்.
ஓகே... முதல் வார எவிக்ஷன் யார் என்கிற ஆவலும் குறுகுறுப்பும் பலருக்கு ஏற்பட்டிருக்கும். சஸ்பென்ஸை உடைப்பது நியாயமல்லதான் என்றாலும் “உப்புமா என்றாலே பலருக்குப் பிடிப்பதில்லை" என்கிற க்ளுவோடு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். ஆம். அப்படியொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் பலமாக உலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அதுவரை ‘மனச்சாந்தியோடு’ காத்திருங்கள்.