Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 15: ‘அசிமிற்கு கட்அவுட்டு; எனக்கு கெட்அவுட்டா’ புலம்பிய ஹவுஸ்மேட்; தலைவரான குயின்சி

குவின்சி

‘எனக்கு கதிரவன்தான். அவர் மேல சின்னதா க்ரஷ் கூட இருக்கு’ என்று ஜாலியாகச் சொன்னார் மகேஸ்வரி.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 15: ‘அசிமிற்கு கட்அவுட்டு; எனக்கு கெட்அவுட்டா’ புலம்பிய ஹவுஸ்மேட்; தலைவரான குயின்சி

‘எனக்கு கதிரவன்தான். அவர் மேல சின்னதா க்ரஷ் கூட இருக்கு’ என்று ஜாலியாகச் சொன்னார் மகேஸ்வரி.

குவின்சி
பிக் பாஸ் வீட்டில் தீபாவளிக் கொண்டாட்டம். “அவரு சர்க்கரைப் பொங்கல் மாதிரி இனிப்பானவரு. இவரு வெண் பொங்கல் மாதிரி வெள்ளை மனம் கொண்டவரு” என்று ஒருவரையொருவர் சம்பிரதாயமாக பாராட்டிக் கொண்டார்கள். பிறகு கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்று சரமாரியாக வாக்குகளை ரகசியக் குத்தாக இறக்கினார்கள். பொதுவாக அல்வா தரும் பிக் பாஸ், இம்முறை லட்டை பரிசாக தந்து அனுப்பினார்.

நாள் 15-ல் நடந்தது என்ன?

எபிசோட் ஆரம்பிக்கும் போதே ஒரே அழுகைச் சத்தம். மகேஸ்வரிதான். இந்த நாள் முடியும் வரை மூக்கைச் சிந்திக் கொண்டே இருந்தார். “அசிம் எப்படியெல்லாம் ஓவரா பேசினான்?. ஆனா.. அவனுக்கு மக்கள் மன்னிப்பு தந்து முன்னணி வரிசைல காப்பாத்தி வெச்சிருக்காங்க. ரேங்கிங் டாஸ்க்ல முதல்ல ஜெயிச்சவ நான்... ஆனா... கடைசில காப்பாத்தப்பட்டேன்.. என்னங்க. நடக்குது இங்க?.. என்னைப் பத்தி எனக்குத் தெரியும்” என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தார் மகேஸ்வரி.

‘அசிமிற்கு கட்அவுட்டு.. எனக்கு கெட்அவுட்டா?’

மகேஸ்வரியின் ஆதங்கத்தில் நியாயமுள்ளது. அசிம் செய்த அட்ராசிட்டி வீட்டில் உள்ள அனைவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்ல, பெரும்பாலான பார்வையாளர்கள் கூட அசிமின் அடாவடித்தனம் பார்த்து முகம் சுளித்து அருவருத்திருப்பார்கள். கடந்த வாரத்தில் அவர் எவிக்ட் ஆகியிருந்தாலோ அல்லது ரெட் கார்ட் தந்து அனுப்பப்பட்டிருந்தாலோ கூட அது நியாயம்தான்.

ஆனால் பிக் பாஸ் என்பது நீதி நியாயத்தை விசாரித்து கறாராக தீர்ப்பு சொல்லும் பஞ்சாயத்து மரம் அல்ல. இது ‘ரியாலிட்டி ஷோ’. அவர்கள் முக்கியமாகத் தேடுவது ‘கன்டென்ட்’ ஒரு நாளை யார் பரபரப்பாக்கித் தருகிறார்களா, அந்தத் தருணங்களே முக்கியம். அதை வைத்துத்தான் பிரமோ உருவாக்கி, எபிஸோடை பரபரப்பாக்கி அதன் மீது ஆர்வம் ஏற்படுத்த வைக்க முடியும். மேலும் மக்கள் அளிக்கும் வாக்குகள்தான் முடிவுகளில் உண்மையாக பிரதிபலிக்கிறது என்றும் சொல்லி விட முடியாது. இதெல்லாம் மீடியா துறையில் உள்ள மகேஸ்வரிக்கு நன்கு தெரிந்திருக்கும்.

பிக் பாஸ் ஷோவின் ஃபார்மேட் தெரிந்தும் “என்னால இப்படி இருக்க முடியல” என்று அனத்துவது ஒருவகையான கவனஈர்ப்போ என்று கூட தோன்றி விடுகிறது.
மகேஸ்வரி
மகேஸ்வரி

“இங்க சைலண்ட்டா இருந்தாலும் பிரச்னைதான். அப்படியே ஓரமா உக்கார வெச்சிடுவாங்க. ஆறாவது வாரத்துல பாருங்க. யாரெல்லாம் சைலன்ட்டா இருக்காங்களோ.. அவங்க வெளியே போயிடுவாங்க” என்றலெ்லாம் தன் ஸ்ட்ராட்டஜி பற்றி ஏடிகேவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அசிம். அவரது திட்டம் சரிதான். ஆனால் ரேங்கிங் டாஸ்க்கில் உரக்க கத்தி ‘பிரமோ’வில் வந்தாக வேண்டும் என்கிற அவரது பிளான் ‘ஓவர் டோஸாக’ சென்று விட்டது என்பதையும் உணர வேண்டும்.

மகேஸ்வரி அழுது கொண்டே இருப்பதைப் பற்றி ஷிவினிடம் பேசிக் கொண்டிருந்தார் விக்ரமன் “இங்க யாரும் குழந்தைங்க கிடையாது. அடல்ட்ஸ். ஒருத்தருக்கு ஒரு எல்லை வரைக்கும் உதவலாம். ஆறுதல் சொல்லலாம். நமக்காக யாரும் நிக்க மாட்டாங்க. இது ஒரு கேம். வரவங்க முன்னேறி வரட்டும்” என்று மிகத் தெளிவாகப் பேசினார் ஷிவின். அம்மணி வரவர அசத்திக் கொண்டே போகிறார். “பாருப்பா.. இந்தப் புள்ளய” என்று வியந்து போனார் விக்ரமன். இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு உருவாகியிருக்கிறது.

எட்டுப்புள்ளி கோலம் போட்டு தலைவரான குயின்சி

‘அதாரு அதாரு’ என்கிற பாடலுடன் நாள் 15 விடிந்தது. தீபாவளி தொடர்பாக ஒரேயொரு வார்த்தை வந்தால்கூட அதை ‘தீபாவளிப் பாடலாக’ இணைத்து கொண்டாடுவது நம்முடைய கெட்ட வழக்கம். ஒட்டுமொத்த பாடலுமே தொடர்பில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை. ‘பட்டாசு சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்’ என்று இந்தப் பாடலில் ஒரு வரி வருகிறது. எனவே தீபாவளிப் பாடலாக பிக் பாஸ் போட்டிருக்கலாம்.

மகேஸ்வரி தொடர்ந்து கண்கலங்குவதின் அபத்தம் குறித்து மைனா சரியாக சுட்டிக் காட்டினார். “நீ அழுதது எனக்கு இஷ்டமில்லை. அசிமை மக்கள் மன்னிச்சிட்டாங்கன்னு நீயா எப்படி முடிவு பண்ணிக்கறே?” என்று அவர் சரியாக கேட்டாலும் மகேஸ்வரி சமாதானம் ஆகவில்லை.

குவின்சி
குவின்சி
வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள், தீபாவளி இனிப்புகள் போன்றவை ஸ்டோர் ரூமிற்குள் வந்தன. இந்தச் சமயத்தில் யாராவது குக்கர் விசில் மாதிரி ‘வீல்’ என்று பரவசத்தில் கத்துவது பிக் பாஸ் வீட்டில் ஒரு மாறாத வழக்கம். இந்த முறை ஆயிஷா அப்படியாக கத்தி இந்தச் சடங்கை நிறைவு செய்தார்.

இந்த வாரத்திற்கான தலைவர் போட்டி ஆரம்பித்தது. ‘யார் சிறப்பாக ரங்கோலி கோலம் போடுகிறார்களோ’ அவருக்குத்தான் வெற்றி. ஏடிகே, மகேஸ்வரி, குயின்சி ஆகிய மூவரும் களத்தில் இறங்கினார்கள். சீனியரான மகேஸ்வரி வெற்றி பெறுவார் என்று முதலில் தோன்றியது. அதன் மூலம் அவரின் அழுகைச் சத்தமாவது சற்று குறையும். ஆனால் ஆச்சரியமாக வெற்றி பெற்று அசத்தியவர் குயின்சி. புஸ்வாணம் வெடிப்பதையெல்லாம் கோலத்தில் வரைந்து வைத்திருந்தாலும் ஏடிகே வெற்றி பெறவில்லை. ‘ஐயோ.. நானா.. தலைவரு?’ என்று இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டார் குயின்சி. இது அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு. காமிராவில் அடிக்கடி படக்கூடிய சான்ஸ். மறக்காமல் சாந்திக்கு நன்றி கூறினார் குயின்சி.

பிளாஸ்டிக் பைப்களால் போடப்பட்டிருந்த சிம்மாசனத்தில் அமர்ந்துதான் புதிய தலைவி அணிகளைப் பிரிக்க வேண்டுமாம். (பின்ன. ஸ்பான்சரை காட்டியாகணும்ல!). ‘வாங்க தலைவி. பார்த்து வாங்க..’ என்று பிழைக்கத் தெரிந்த சிலர் குயின்சிக்கு குடை பிடித்துச் சென்றார்கள். ‘குறிப்பிட்ட அணியில் யார் முன்பு பணிசெய்யவில்லை’ என்பதை அளவுகோலாக வைத்து அணிகளைப் பிரித்தார் குயின்சி.
நிவா
நிவா

வழக்கம் போல் இதில் சிறிய குழப்பங்கள், அதிருப்திகள் ஏற்பட்டன. சின்னப் பெண்ணாக இருந்தாலும் திறமையாகவே சமாளித்தார் குயின்சி. ‘பாத்ரூம் அணி் என்ற போது ‘எனக்கு வேண்டாம்’ என்று சைகை செய்து தன் மறுப்பைத் தெரிவித்தார் தனலஷ்மி. “அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகையா.. தலைவர் சொன்னா கேட்க வேண்டாமா?” என்று சிலர் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ‘அப்ப நானும் மாறிக்கறேன்’ என்று முரண்டு பிடித்தார் மகேஸ்வரி. அசலும் நிவாவும் அணி மாறிக் கொண்டார்கள். தனலஷ்மியின் மறுப்பிற்கான காரணம் பிறகுதான் புரிந்தது. ‘அசல் இருக்கும் அதே டீமில் வேலை செய்ய அவருக்கு விருப்பமில்லை’.. ராபர்ட்டிற்கு தனலஷ்மியின் மறுப்பு பிடிக்கவில்லை. ‘அது எப்படி பாத்ரூம் வேணாம்னு சொல்லலாம்?’ என்று பிறகு புறணி பேசிக் கொண்டிருந்தார்.

ஆயிஷா
ஆயிஷா

ஆயிஷாவிடம் தனிப்பட்ட முறையில் சொன்ன சில விஷயங்களை அவள் பொதுவில் சொல்லி விட்டாளோ என்கிற வருத்தத்தில் இருந்தார் நிவா. மேலும் அசலும் தானும் பேசிக் கொள்வதை இங்கு எல்லோரும் புகாராக சொல்கிறார்களே என்கிற நெருடலும் அவருக்குள் இருக்கிறது. எனவே இதை தெளிவுப்படுத்திக் கொள்வதற்காக ஆயிஷாவிடம் அவர் நேரடியாக விசாரித்தது நன்று. “நிச்சயமா நான் எதுவும் சொல்லலைப்பா..” என்று சத்தியம் செய்யாத குறையாக சொன்னார் ஆயிஷா. இந்தச் சமயத்தில் நிவா கேட்ட ஒரு கேள்வி முக்கியமானது. “நீயும் தனலஷ்மியும் கூடத்தான் எப்பவும் ஒண்ணா சுத்தறீங்க. பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஆனா என்னையும் அசலையும் பத்தி மட்டும் ஏன் கேள்வி வருது.” என்று நிவா கேட்ட கேள்வி சரியானது.

‘வெள்ளை லட்டு, ஆரஞ்சு லட்டு – பிக் பாஸின் தீபாவளி விளையாட்டு

நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. ‘கன்ஃபெஷன் ரூமிற்கு வரவும். தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது’ என்று அனைவருக்கும் சீட்டு அனுப்பினார் பிக் பாஸ். அதாவது ஆண் போட்டியாளரை நாமினேட் செய்தால் வெள்ளை லட்டு கிடைக்குமாம். பெண் போட்டியாளரை நாமினேட் செய்தால் ஆரஞ்சு லட்டு கிடைக்குமாம். (வொயிட்.. சட்னி.. க்ரீன் சட்னி.. மாதிரி இதுவும் ஆயிடுச்சு!). ஆனால் இதில் ஒரு உள்குத்து இருந்தது. லட்டை வெளியே வந்துதான் சாப்பிட வேண்டுமாம். எனில் அவர் நாமினேட் செய்த பாலினம் குறித்து மற்றவர்கள் யூகிக்க முடியும். எனவே சிலர் லட்டை தலைமறைவாக சாப்பிட்டுக் கொண்டார்கள். சில சாமர்த்தியசாலிகள் வரும் வழியிலேயே முழுங்கி விட்டார்கள்.

தலைவர் குயின்சி மற்றும் நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் தேர்வானவர்களை மட்டும் நாமினேட் செய்ய முடியாது. இந்த நாமினேஷன் பிராசஸில் எதிர்பார்த்தபடியே அசிமின் மீது கணிசமான வாக்குகள் குத்தப்பட்டன. ரேங்கிங் டாஸ்க்கில் அவர் செய்த அட்ராசிட்டியை எவராலும் மறக்க முடியவில்லை. அது நியாயமான உணர்வே. அசிம் செய்த காரியம் ஓர் எதிர்மறையான முத்திரையாக அழுத்தமாக பதிந்து விட்டது. இதில் நமக்கான பாடமும் உள்ளது. ஒருவர் எத்தனை சிறப்பானவராக இருந்தாலும் கோபம் என்னும் சறுக்குப்பாதையில் விழுந்து விட்டால் பிறகு மீள்வது சிரமம்.

நாமினேசன் பிராசஸ்
நாமினேசன் பிராசஸ்

அசிமிற்கு அடுத்தபடியாக மகேஸ்வரியின் மீது அதிக வாக்குகள் விழுந்தன. “நான் வெளிய போறேன்.. நல்லாத்தானே விளையாண்டேன். அப்புறமும் ஏன்?” என்று அவர் தொடர்ந்து அனத்துவது மற்றவர்களுக்கு எரிச்சலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அசல் மீது மறக்காமல் குத்தினார் தனலஷ்மி. அசலும் பதிலுக்கு அதைச் செய்வார் என்று எதிர்பார்த்தால் இல்லை. ஆயிஷாவின் பெயரும் பலமுறை அடிபட்டது. ‘மட்டன் பிரியாணி கொடுங்க பிக் பாஸ்’ என்று கோரிக்கை வைத்தார் புதிய தலைவி குயின்சி.

இந்த வாரத்தின் நாமினேஷன் முடிவுகள்: அசிம் / மகேஸ்வரி / ஆயிஷா / அசல் / ரச்சிதா / ஜனனி மற்றும் ஏடிகே. ‘ஹப்பாடா.. நான் தப்பிச்சேன்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ராம். பாவம், வராண்டாவிலேயே வாழ்க்கையைக் கழித்தவர், இனி சற்று நேரமாவது சோபாவில் அமரலாம்.

தொடரும் மகேஸ்வரியின் ‘அழுகாச்சி’ புராணம்

“நீ என்னைத்தானே நாமினேட் செய்தே..? ஜெயிலுக்குப் போன கோவம் இருக்கும்..:” என்று சரியாக யூகித்து ராமிடம் கேட்டார் ஆயிஷா. ஆனால் மிகச் சாமர்த்தியமாக அதை மறுத்து பொய் சொன்னார் ராம். (பரவாயில்லையே.. பயபுள்ள பொழச்சுக்கும்!) வீட்டில் நடந்த சிறு பிரச்சினைகளை திறமையாக சமாளித்துக் கொண்டிருந்தார் குயின்சி. வாய்ப்பேச்சு வீரரான அசிமையே ஓர் உரையாடலில் அவர் சமாளித்தது ஒரு சாதனை எனலாம்.

‘டிரஸ்ஸிங் ரூம் கிட்ட வரலாமா?’ ன்னு கேட்டதுக்கு எரிச்சலா பதில் சொல்றாங்க’ என்று மகேஸ்வரி மீது குறை கூறினார் ஏடிகே. “இங்க நடக்கறதையெல்லாம் ரொம்ப பர்சனலா எடுத்துக்கிட்டா அவங்க இந்த ஷோவிற்கு வந்திருக்கவே கூடாது” என்று சரியான அப்சர்வேஷனை சொன்னார் ராம்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

தன்னுடைய அழுகாச்சி புராணத்தை மீண்டும் துவங்கி விட்டார் மகேஸ்வரி. ‘எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை. நான் அழறதாலேயே என்னை நாமினேட் பண்ணியிருப்பாங்க.. மக்களும் என்னை அழுமூஞ்சின்னு நெனப்பாங்க..” என்று தன் பலவீனங்களை தானே சரியாக யூகிக்கும் அறிவு மகேஸ்வரிக்கு இருந்தும் உணர்ச்சிப்படுதலில் இருந்து வெளியே வர முடியாத உளைச்சலில் இருக்கிறார்.

“நான் ஒண்ணு நெனச்சு வந்தேன்.. ஆனா இந்த வீடு என்னை என்னமோ பண்ணுது” என்று அசிம் சொன்னதும் சரியான குறிப்பு. என்னதான் மனதளவில் தயாராகி ஒரு போராட்டக்களத்தில் குதித்தாலும் அங்கு காற்று எந்தத் திசையில் நம்மை நகர்த்திச் செல்லும் என்று யூகிக்க முடியாது. மற்றவர்கள் சமாதானம் சொன்னாலும் மகேஸ்வரிக்கு கதிரவன் சொன்ன உபதேசம் சரியாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

‘யாருக்கு யாரைப் பிடிக்கும்?’ – விசுவாசமான ரசிகர் ராபர்ட்

தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி ஆரம்பித்தது. அமுதவாணனும் மைனாவும் தொகுப்பாளர்களாக இருந்தார்கள். மக்கள் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்தார்கள். “இந்த வீட்டில் உங்களை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்த நபர் யார்?” என்கிற வில்லங்கமான கேள்வியோடு ஆரம்பமானது. விசுவாசமான ரசிகர் போல ரச்சிதா பக்கமே திரும்பினார் ராபர்ட். ரச்சிதாவும் பதிலுக்கு அதையே சொன்னது ஆச்சரியம். (என்னய்யா.. நடக்குது இங்க?!) ராம் தனது மாமா பெண்ணான குயின்சியைச் சொன்னார்.

மைனா, அமுதவாணன்
மைனா, அமுதவாணன்

“இந்தக் கேள்வி சும்மா லுலுவாய்க்கு.. இப்பத்தான் டாஸ்க்கே ஆரம்பிக்குது’ என்று லொள்ளு செய்த மைனா “இந்த வீட்டை உற்சாகமாக வைத்திருக்கும் நபர் யார்? என்கிற கேள்விக்கு சந்தேகமே இல்லாமல் அமுதவாணனின் பெயர் அதிகமுறை வந்தது. ‘எனக்கு கதிரவன்தான். அவர் மேல சின்னதா க்ரஷ் கூட இருக்கு’ என்று ஜாலியாக சொன்னார் மகேஸ்வரி. (ரணகளத்திலும் கிளுகிளுப்பு!)

இப்படியாக ஜாலியான கேள்விகளோடும் பதில்களோடும் நகர்ந்த இந்த டாஸ்க்கின் இறுதியில் வாண வேடிக்கையோடு பாட்டும் நடனமும் என்று சூழல் உற்சாகமானது. திடீரென்று உடல்நலம் குன்றி ஆயிஷா வீட்டின் உள்ளே ஓட, பதட்டத்துடன் மக்கள் பின்னால் ஓடினார்கள்.

ஆயிஷாவிற்கு என்னதான் ஆயிற்று? நாளை பொறுத்திருந்து பார்ப்போம்.