Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 16 : `என் கேர்ள் ப்ரெண்டுதான நீ!' குயின்சிக்கு ‘லவ் டார்ச்சர்’ தருகிறாரா அசிம்?

பிக் பாஸ்

ஷெரினாவின் அட்ராசிட்டி கண்டு “என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது. என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது.. ஒரு தடவை முடிவு பண்ணிட்டா’ என்கிற மாதிரி ஜனனி பன்ச் லைன் பேசியது மகா ஆச்சரியம்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 16 : `என் கேர்ள் ப்ரெண்டுதான நீ!' குயின்சிக்கு ‘லவ் டார்ச்சர்’ தருகிறாரா அசிம்?

ஷெரினாவின் அட்ராசிட்டி கண்டு “என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது. என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது.. ஒரு தடவை முடிவு பண்ணிட்டா’ என்கிற மாதிரி ஜனனி பன்ச் லைன் பேசியது மகா ஆச்சரியம்.

பிக் பாஸ்
‘கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட; அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன, தாம் விளையாட’ என்பது கண்ணதாசனின் ஒரு திரையிசைப் பாடல். நாமும் சில பொம்மைகளை வைத்து விளையாடுகிறோம். நம்மையும் சிலர் பொம்மைகளாக வைத்து விளையாடுகிறார்கள்.
அசல், நிவா
அசல், நிவா

பிக் பாஸ் நிகழ்ச்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஹவுஸ்மேட்ஸ்களை பொம்மைகளாக வைத்து பிக் பாஸ் விளையாடுகிறார் என்பது நமக்குத் தெரியும். இன்று பொம்மை டாஸ்க்கை ஆரம்பித்து ஹவுஸ்மேட்ஸ்களை விளையாட வைத்து அவர்களுக்குள் ரணகளமான சண்டையை வரவழைத்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தார் பிக் பாஸ்.

நாள் 16-ல் நடந்தது என்ன?

அசலும் நிவாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அசல் சொன்னது ஒருவகையில் சரியாகவே இருந்தது. “இவங்களா பாம் வைப்பாங்களாம்.. இவங்களாவே எடுப்பாங்களாம்.. ‘யார் கூட க்ளோஸா இருக்க விரும்ப நினைக்கறீங்கன்னு டாஸ்க் வெச்சது இவங்கதான். நம்ம அப்படித்தான் பிரெண்ட்ஸ் ஆனோம். இப்ப என்னடான்னா ‘நாம எப்பவும் பேசிக்கிட்டே இருக்கோம்’.. டிராக் மாறிப் போச்சுன்றாங்க... இனிமே சவுண்டா இறங்கி விளையாடணும்' என்று சபதம் ஏற்றுக் கொண்டார் அசல்.

‘பாம் வைப்பாங்களாம்.. எடுப்பாங்களாம்’ என்கிற அதே உதாரணத்தைச் சொல்லி இதே விஷயத்தைத்தான் நானும் சமீபத்திய கட்டுரையில் எழுதினேன். பிக் பாஸே சில பாதைகளை அமைத்து அந்தப் பக்கம் போக வைப்பாராம். பிறகு கமல் வந்து “ஏம்ப்பா.. அந்தப் பக்கம் போனீங்க..” என்று விசாரணை நடத்துவாராம்.. எனவே அசல் அனத்துவதில் ஒருபக்க நியாயம் இருந்தாலும் ‘க்ளோஸ் ஆகச் சொன்னது ஓகே.. ஆனா 24x7 க்ளோஸாவே சுத்திட்டு இருந்தா எப்படிப்பா ராசா..?’.. என்பதே மற்றவர்களின் கேள்வி.

அசிம்
அசிம்

‘குயின்சிக்கு ‘லவ் டார்ச்சர்’ தருகிறாரா அசிம்?’

அசிம், குயின்சியிடம் ஒருமாதிரியான லவ் டார்ச்சர் தந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. `குயின்சி.. பேபி. குயின்சி பேபி..’ என்று அசிம் அழைப்பதை, குயின்சி விரும்பவில்லை. இதை விடவும் ஒரு கொடூர சம்பவம் நடந்தது. ‘ஒரு பாட்டு பாடுறி....’ என்கிற தேவர்மகன் சிவாஜி போஸில் படுத்துக்கொண்டு, “நான் உன் பாய் பிரெண்டுதானே.. நீ என் கேர்ள் பிரெண்டுதானே.. எனக்கு பால்கோவா ஊட்டி விடுவேன்னு நெனச்சேன்” என்று அசிம் அமர்த்தலாகச் சொல்ல ‘போடா டிபுக்கு’ என்பது போல சாவகாசமாக பால்கோவாவை வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் க்யின்சி. “அவளுக்குப் பிடிக்கலையாம். பண்ண மாட்டாளாம்..” என்று பிறகு வந்த நிவா விளக்கம் சொல்ல “அவ என்ன சொல்றான்னு உனக்குப் புரிஞ்சுதா குயின்சி?” என்று அபத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார் அசிம். (தம்பி.. அது உனக்குத்தான் மொதல்ல புரியணும்!).

‘வாத்தி கம்மிங்’ பாடலோடு நாள் 16 விடிந்தது. மைனாவை திடீரென அழைத்தார் பிக் பாஸ் உதறிய உடம்போடு ‘சொல்லுங்க நைனா” என்றார் மைனா. “இல்ல.. அலர்ட்டா.. இருக்கீங்களான்னு பார்த்தேன்” என்று பிக் பாஸ் செய்த நையாண்டி, ஜாலியான பழிவாங்கல் சமாசாரம். காமிராவிற்கு நெருக்கமாக தன் முகத்தைக் கொண்டு வந்து காட்டி பார்வையாளர்களைப் பயமுறுத்திய மைனாவிற்கு காமெடியான நோஸ் கட்.

பொம்மை டாஸ்க்
பொம்மை டாஸ்க்

‘பாத்திரம் கழுவும் அணி.. வாங்க.. தட்டுங்கள்லாம் சரியாவே கழுவலை’ என்று ஷெரினா புகார் தர, “நாங்க ஒளுங்காத்தான் கழுவினோம். நீங்க சாப்பாட்டு மேல மூடி வெச்சிருந்திருப்பீங்க..” என்று சால்ஜாப்பு சொல்லி எஸ்கேப் ஆன அசல், பிறகு ஏடிகேவிடம் இதைப் பற்றி அனத்திக் கொண்டிருந்தார்.

வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த விக்ரமன் “அங்கங்க.. டீ குடிச்ச கிளாஸ் இருக்குது.. வெஷல் வாஷிங் டீம் எங்க?” என்று நாட்டாமைத்தனத்துடன் கேட்டது அந்த அணிக்குப் பிடிக்கவி்ல்லை. ‘டீ குடிச்ச கிளாஸை அவங்க அவங்கதான் கொண்டு வந்து சிங்க்ல போடணும். நாங்களா தேடி எடுத்துட்டு வந்து கழுவ முடியாது” என்று அவர்கள் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது. அதுதான் பிக் பாஸ் வீட்டு வழக்கம். ஆனால் சின்னச் சின்ன வேலைகளுக்கு கூட இவர்கள் பெரிய பெரிய பஞ்சாயத்துக்களை கூட்டுவதுதான் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.

ரணகளமாக ஆரம்பித்த பொம்மை விளையாட்டு

‘நீயும் பொம்மை.. நானும் பொம்மை’ என்னும் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘இருக்கு.. இன்னிக்கு சம்பவம் இருக்கு’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அப்போதே அலர்ட் ஆகியது. 19 ஹவுஸ்மேட்ஸ்களின் பெயர்கள் கொண்ட பொம்மைகள் இருக்கும். ஆனால் பொம்மை வீட்டில் 18 பொம்மைகள் வைப்பதற்கான இடம் மட்டுமே இருக்கும். பஸ்ஸர் அடித்ததும் தொட்டிலில் போடப்பட்டிருக்கும் நிறைய பொம்மைகளில் இருந்து ‘பெயர் இருக்கும் பொம்மையை’ எடுத்து, அதற்கான பாதைகளில் ஓடி முந்திச் சென்று பொம்மை வீட்டில் வைக்க வேண்டும்.

தன்னுடைய பெயர் போட்டிருக்கும் பொம்மையை ஒருவர் எடுக்கக்கூடாது. கடைசியில் யாருடைய பெயர் கொண்ட பொம்மை, வீட்டிற்குள் வைக்கப்படவி்ல்லையோ, அவர் போட்டியில் இருந்து வெளியேறுவார். இப்படியாக ஒவ்வொருவராக கழிந்து இறுதியில் மிஞ்சும் மூவர், அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிப்பார்.

விக்ரமன்
விக்ரமன்

ரச்சிதாவும் ஷிவினும் கூடிப் பேசி தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். இப்படி ஆங்காங்கே குழப்பமாக சில கூட்டணிகள் கச்சா முச்சா என்று உருவாகின. முதல் ரவுண்டு ஆரம்பித்தது. இந்த ரணகள விளையாட்டில் ஒன்றை ஆச்சரியத்துடன் கவனித்தேன். அது எப்படியோ கதிரவன் மட்டும் பல சுற்றுகளில் கூலாக முதலில் ஓடிவந்து பொம்மையை வைத்து விடுகிறார். அவருக்கு அதிர்ஷ்டம் உதவுகிறதா, அல்லது ‘பதறாத காரியம் சிதறாது’ என்பதற்கான உதாரணமா?’

மணிகண்டனின் கோபமும் கேம் ஸ்பிரிட்டும்

முதல் ரவுண்டில் யாரோ பெயரில்லாத பொம்மையைக் கொண்டு போய் வைத்ததால் மணிகண்டனின் பொம்மை கடைசியில் தங்கி விட்டது. இது தொடர்பாக நிறைய சலசலப்பு ஏற்பட்டது. “என் பேர் தெரிஞ்சும் எடுக்கலையா.. தூக்கிப் போட்டுட்டீங்களா.. இதான் பிரெண்ட்ஷிப்பா.. இருங்கடா.. இனிமே நானும் கேம் விளையாடறேன்” என்று உஷ்ணமானார் மணிகண்டன். “ஹே.. அப்படில்லாம் இல்லைப்பா..” என்று சிலர் விளக்கம் சொன்னாலும் அவர் சமாதானம் ஆகவில்லை. “நீ பண்ணது தப்பு” என்று ஜனனி மீதும் எரிந்து விழுந்தார்.

பெயரில்லாத பொம்மையைக் கொண்டு வந்தவர் ராம். எனவே ராமிற்கும் மணிகண்டனிற்கும் இடையில் மட்டும் போட்டி வைத்தார் பிக் பாஸ். இதில் மணிகண்டன் முந்திச் சென்று பொம்மையைப் போட்டு வெற்றி பெற்றார். இதில் ஒரு விசேஷமான அம்சம் என்னவென்றால், மணிகண்டன் கையில் இருந்தது ஷெரினா பெயர் போட்ட பொம்மை. ராமின் கையில் இருந்தது மணிகண்டன் பெயர் போட்ட பொம்மை. மணிகண்டன் நினைத்திருந்தால் வேண்டுமென்றே மெதுவாக ஓடி தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் நோ்மையாக விளையாடியது பாராட்டத்தக்கது. மணிகண்டனின் பெயர் கொண்ட பொம்மை வைக்கப்படாததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

மணிகண்டன்
மணிகண்டன்
இரண்டாவது சுற்றில் குயின்சியின் பொம்மை தங்கி விட்டதால் அவர் வெளியேற வேண்டியிருந்தது. ஆச்சரியகரமாக அசிமும் மகேஸ்வரியும் பேசி கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். (அப்ப அழுகாச்சில்லாம் சும்மாவா?!). மூன்றாவது சுற்று முடிந்ததும் ஒரே கலாட்டா. ‘பொம்மையை பாஸ் செய்யக்கூடாது’ என்று கூச்சலும் குழப்பமுமாக விவாதம் நடந்தது. இறுதியில் மைனாவின் பொம்மை தங்கி விட்டதால் அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ராஜதந்திரம் செய்த ஷெரினா; டென்ஷன் ஆன ஜனனி

நான்காவது சுற்றிலும் கதிரவன் முதல் ஆளாக வந்து ஆச்சரியப்படுத்தினார். இந்தச் சுற்றில் ஒரு திருப்பம் நிகழந்தது. “ஆட்டம் போரடிக்குது.. சுவாரசியப்படுத்தணும்" என்று சொல்லி ஜனனியின் பெயர் போட்ட பொம்மையை அமைதியாக கையில் வைத்துக் கொண்டார் ஷெரினா. கடந்த சுற்றில் தனலஷ்மி+ஜனனி கூட்டணி செய்த ராவடி அவரை எரிச்சல் அடைய வைத்திருக்கலாம்.

ஷெரினாவின் அட்ராசிட்டி கண்டு “என்னை மாதிரி அப்பாவியும் கிடையாது. என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது.. ஒரு தடவை முடிவு பண்ணிட்டா’ என்கிற மாதிரி ஜனனி பன்ச் லைன் பேசியது மகா ஆச்சரியம். ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ பாடலை ஒரு முயல் பாடி ஆவேசமாக கிளம்பியது போல இருந்தது. ஷெரினாவின் ராஜதந்திரம் காரணமாக ஜனனியின் பொம்மை தங்கி விட்டதால், ஜனனி போட்டியில் இருந்து வெளியேறினார். “ஜனனி நாமினேஷன்ல போனாலும் கண்டிப்பா திரும்பி வந்துருவா” என்று சர்காஸ்டிக்காக சொன்னார் ஷெரினா. ‘இவளுக்கு ஒரு பாயசத்தைப் போட்ற வேண்டியதுதான்’ என்கிற டெரரான முகபாவத்தில் இருந்தார் ஜனனி.

ஷெரின்
ஷெரின்

அடுத்த சுற்று ஆரம்பிப்பதற்குள் ஒரே கூச்சல் குழப்பம். பொம்மைகள் போடப்பட்டிருந்த தொட்டியைச் சுற்றி ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதைக் கலைத்து வைப்பது போல் ‘தங்களுக்குச் சௌகரியமான பொம்மையை’ எடுத்து வசதியாக முன்னால் வைத்துக் கொள்கிறார்களா என்று சிலருக்குச் சந்தேகம். இதனால் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. அசிமும் அமுதவாணனும் வார்த்தைகளால் மோதிக் கொண்டார்கள். அமுதவாணனிடம் கோபம் தென்பட்டதை இன்று காண முடிந்தது. “நீ வெளில போ.. உன்னை விட நான் நல்லாப் பேசுவேன்” என்று அசிம் ஆவேசமாக சொல்ல, “இங்க ஒண்ணும் பேச்சுப் போட்டி நடக்கலை” என்று அந்தச் சமயத்திலும் அமுதவாணன் செய்த காமெடி சுவாரஸ்யம்.

இந்த தள்ளுமுள்ளுவில் பாசமலர்களாக இருந்த அசிமிற்கும் தனலஷ்மிக்கும் இடையில் முட்டிக் கொண்டது. என்னமோ தெரியவில்லை, இந்த பொம்மை டாஸ்க் முழுவதும் ஆயிஷாவை பூ போல வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தார் அசிம். ஆயிஷாவிற்கு உடல்நலம் குன்றியிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயிஷா ஓடிய போது தனலஷ்மி தடுத்ததால் அசிமிற்கு உள்ளூற கோபம் வந்திருக்கலாம். அந்தக் கோபம் இந்தச் சமயத்தில் வெளிப்பட்டது.

“பொம்மையை தலை மேல படற மாதிரி போடாத” என்று அசிம் ஆரம்பிக்க “நீங்க மட்டும் டிரஸ்ஸை பிடிச்சு இழுக்கலாமா?” என்று தனலஷ்மி பதிலுக்கு எகிற கலாட்டா ஆரம்பம். கோபமான தருணங்களில் ‘வா.. போ..’ என்று பேசினால் தனலஷ்மிக்குப் பிடிப்பதில்லை. அதை அவர் சுட்டிக் காட்ட ‘வாடி.. போடி’ன்னு நான் சொல்லலை” என்று அசிம் எடுத்துக் கொள்ள.. இன்னமும் குழப்பம்.

கொலைவெறியுடன் தொடரும் பொம்மை விளையாட்டு

காரசாரமான மோதல்களுக்குப் பிறகு ஐந்தாவது சுற்று ஆரம்பித்தது. ஷெரினா துவக்கி வைத்த ராஜதந்திர விளையாட்டை இந்த முறை மூன்று போ் தொடர்ந்தார்கள். தனலஷ்மி, மகேஸ்வரி, ரச்சிதா ஆகிய மூவரும் பொம்மையை அறைக்குள் வைக்காமல் கையிலேயே வைத்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்துக் கொண்டிருந்தது ஆயிஷா, மகேஸ்வரி மற்றும் ஷிவினின் பொம்மைகள்.

நீண்ட நேரம் இந்த இழுபறி நீடிக்கவே ‘நாட்டாமையாக’ உள்ளே நுழைந்தார் விக்ரமன். “அவங்க என் பொம்மையை வெக்கட்டும். நானும் பதிலுக்கு வெக்கறேன்” என்று கறாராக பேசினார் மகேஸ்வரி. ‘சபாஷ்.. சரியான போட்டி’ என்பது போல் மற்றவர்கள் கைத்தட்டினார்கள். ஒரு கட்டத்தில் ஆயிஷாவின் பொம்மையைக் கொண்டு போய் உள்ளே வைத்து பஞ்சாயத்தின் சூட்டைக் குறைத்தார் ரச்சிதா.

பிக் பாஸ்
பிக் பாஸ்

இப்போது மகேஸ்வரியின் கையில் ஷிவின் பொம்மை இருக்கிறது. தனலஷ்மியின் கையில் மகேஸ்வரியின் பொம்மை இருக்கிறது. ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடல் மாதிரி இருவருமே இழுத்துக் கொண்டிருந்த சஸ்பென்ஸோடு எபிசோடு நிறைந்தது. யாருடைய பொம்மை உள்ளே போகும் என்பது நாளைக்குத் தெரியும்.

ஆனால் ஒன்று. வீடு இரண்டிற்கும் மேற்பட்ட அணிகளாக பிரிந்திருப்பதை நன்கு உணர முடிகிறது. இதுதான் மனிதனின் இயல்பு. பத்து நபர்களை ஓர் அறைக்குள் அடைத்து வைத்தால் அவர்கள் இரண்டே நாட்களில் இருபது டீம்களை உருவாக்கி பரஸ்பர விரோதத்துடன் அடித்துக் கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.