Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 17: ` கமல் சார் வரட்டும்!' - தள்ளு முள்ளு; மல்லுக்கட்டு கலவர பூமியான வீடு!

பிக் பாஸ்

“உனக்கு அறிவிருக்குதா.. நீயும் ஒரு பொண்ணுதானே.. அவ மயங்கிக் கிடக்கறா.. ஒரு கேமிற்காக இப்படியா தள்ளுவாங்க” என்றெல்லாம் அசிம் எகிற, ஆச்சரியமாக தனலஷ்மி பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 17: ` கமல் சார் வரட்டும்!' - தள்ளு முள்ளு; மல்லுக்கட்டு கலவர பூமியான வீடு!

“உனக்கு அறிவிருக்குதா.. நீயும் ஒரு பொண்ணுதானே.. அவ மயங்கிக் கிடக்கறா.. ஒரு கேமிற்காக இப்படியா தள்ளுவாங்க” என்றெல்லாம் அசிம் எகிற, ஆச்சரியமாக தனலஷ்மி பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பிக் பாஸ்
இரண்டே வாரங்களில் வீடு இரண்டு பிரதான அணிகளாகப் பிரிந்திருப்பது துல்லியமாகத் தெரிகிறது. அசிமின் தலைமையில் ஒரு அணி. இன்னொரு அணியின் தலைவர் யாரென சரியாகத் தெரியவில்லை. அமுதவாணனாக இருக்கலாம். இந்தப் பிரிவினையை பொம்மை டாஸ்க் உக்கிரமாக அம்பலப்படுத்தி விட்டது.
ரச்சிதா, தனலஷ்மி
ரச்சிதா, தனலஷ்மி

ரணகளத்திற்கு இடையில் கூலாக செயல்படுபவர் கதிரவன் மட்டுமே. ஆனால் அவரும் கூட என்றாவது தன் இயல்பிலிருந்து விலகி வெடிக்கலாம். பிக் பாஸ் வீட்டின் டிசைன் அப்படி. மழலைத் தமிழில் பேசி, அந்த வீட்டின் செல்லக்குழந்தையாக கருதப்பட்ட ஜனனியே ‘என்னை மாதிரி கெட்டவளும் கிடையாது’ என்று பன்ச் டயலாக்கை பேச வைத்த வீடாயிற்றே அது?!

ஆயிஷாவின் பொம்மையைக் கொண்டு போய் ரச்சிதா வைத்து விட்ட நிலையில், தனலஷ்மியும் மகேஸ்வரியும் வைக்காமல் இழுபறியாக முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள். “நான் எப்படி வைப்பேன். என்னை எப்படியெல்லாம் கிண்டல் பண்ணாங்க தெரியுமா?” என்று சிணுங்கிக் கொண்டிருந்தார் தனலஷ்மி. “என் கைல இருந்து ஷிவினோட பொம்மையை மகேஸ்வரி பிளான் பண்ணி பிடுங்கிட்டா” என்று புலம்பிக் கொண்டிருந்தார் ரச்சிதா.

நள்ளிரவு நெருங்கியும் இது இழுத்துக் கொண்டே போகவே “ஏம்மா.. நான் தூங்கப் போக வேண்டாமா?” என்று பிக் பாஸ் தலையிட வேண்டியிருந்தது. ‘இருவருமே பொம்மையை வைக்காவிடில் இரண்டுமே தகுதியிழந்ததாக மாறி விடும்’ என்று எச்சரித்தார். “பரவாயில்ல.. போனா. போட்டும்..” என்று இருவருமே அழிச்சாட்டியம் செய்தார்கள்.

அசிம்
அசிம்

“அண்ணன் சொன்னா கேளும்மா... தங்கச்சி”

பாசமலரின் வாசனை இன்னமும் போகாமல் தனலஷ்மியிடம் அசிம் பஞ்சாயத்துக்கு வந்தார். “தங்கச்சி.. அண்ணன் ஒண்ணு சொன்னா கேப்பியாம்மா.. உன் பொம்மை எப்படியும் உள்ளே இருக்கு.. நீ சேஃப்தான். மகேஸ்வரியோட பொம்மை போகலைன்னா.. அவ நாமினேட் ஆவாளே.. யோசிச்சுப் பாரு” என்று சமாதானம் பேச “சம்பந்தப்பட்டவங்களே வந்து பேசலை.. நான் ஷிவினுக்காக ஆடலைதான். ஆனா இங்க டீமாத்தானே ஆடறீங்க?” என்று உண்மையை தனலஷ்மி உடைக்க “எனக்கு வந்து பேசறதுல பிரச்சினையில்ல” என்று மகேஸ்வரி பஞ்சாயத்தின் உள்ளே வந்தார். ஆனால் சுமூகமான முடிவு எட்டப்படாததால் இரண்டு பொம்மைகளுமே குப்பைத் தொட்டியில் போடப்பட்டன. “நான் பர்சனலாத்தான் பண்றேன்” என்று தனலஷ்மி சொன்னது மகேஸ்வரியின் ஈகோவை தூண்டி விட்டது.

பொம்மைகளை கலைத்துப் போடும் வேலையில் மணிகண்டன் ஈடுபட்டார். அதை விக்ரமன் சுட்டிக் காட்டி கண்டிக்க இருவருக்குள்ளும் வார்த்தைகள் வெடித்தன. வீட்டின் தலைவரான குயின்சி எதிலும் தலையிடாமல், உதட்டை அவ்வப்போது கடித்தபடி சும்மா இருந்தார். ‘ஒரு ரவுண்ட் முடிஞ்சதும் நான் பொம்மைகளை கலைச்சுப் போடுவேன்.. அதுக்கு அப்புறம் யாரும் பொம்மைங்க கிட்ட வரக்கூடாது’ என்று அழுத்தம் திருத்தமாக அவர் ஒரு ரூல் போட்டிருந்தால் இந்த சர்ச்சைகளை ஒருவேளை தவிர்த்திருக்கலாம். ஆனால் குயின்சிக்கு அத்தனை வாய் சாமர்த்தியம் இல்லை. விக்ரமனும் மணிகண்டனும் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததால் “தூங்கப் போங்கப்பா” என்று பிக் பாஸே சலித்துப் போய் டாஸ்க்கை நிறுத்தினார். நம் காதுகளும் தப்பித்தன. அத்தனை சத்தம்.

‘கண்ணுக்கு முன்னாடி துரோகம் பார்க்கறது இப்பத்தான்’

நாள் 17 விடிந்தது. ‘பிரைவேட் பார்ட்டி’ என்று ஏதோவொரு பாடல் கசகசவென்று ஒலித்தது. ஷெரினாவிடம் தீவிரமாக கடலை வறுத்துக் கொண்டிருந்த மணிகண்டன் “இங்க ஜாலியா இருக்கணும். 24 மணி நேரம்ன்றது 24 நிமிஷத்துல போயிடணும்” என்று உற்சாகமாகப் பேச அவரைக் கிண்டடிலத்தார் மகேஸ்வரி.

பொம்மை டாஸ்க் மீண்டும் ஆரம்பித்தது. “உள்ளே இடம் இல்லை” என்று நிவாவும் ஷெரினாவும் சொல்லி விக்ரமனை டபாய்க்கப் பார்த்தார்கள். ஆனால் அவர் நம்பாமல் உள்ளே சென்றால் இடம் இருந்தது. (அடப்பாவிகளா!).

பொம்மை டாஸ்க்
பொம்மை டாஸ்க்

தனலஷ்மியின் பொம்மையை கையில் வைத்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்தார் ஆயிஷா. தனலஷ்மி மீது எதிர் டீம் உக்கிரமாக இருந்தது. எனவே தனலஷ்மியை பழிவாங்க முடிவு செய்து விட்டார்கள். இறுதியில் தனலஷ்மியின் பொம்மை குப்பைக்குச் சென்றது. “என் வாழ்க்கைல எத்தனையோ துரோகத்தைப் பார்த்திருக்கேன்... ஆனா கண்ணு முன்னாடியே துரோகம் பார்க்கறது இப்பத்தான்” என்று தனிமையில் அனத்தினார் தனலஷ்மி. (சினிமா ஹீரோக்கள்தான் அநாவசியமாக ‘பன்ச்’ டயலாக் பேசுகிறார்கள் என்றால், ஒரு கேமிற்காக ஏன் இவர்கள் இத்தனை தத்துவ அனத்தல்களை உதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை).

அடுத்த சுற்றில் ஏடிகேவின் பொம்மையை வைக்க இடம் இல்லாமல் தோற்றுப் போனார் விக்ரமன். எனவே போட்டியில் இருந்து ஏடிகே வெளியேறினார். “இது நாமினேஷன்ல இருந்து தப்பிக்கறதுக்கான கேம். பொம்மையக் காப்பாத்தறது இல்ல.. ஸோ.. அவங்க அவங்க ஆட்டத்தை ஆடுங்க.. இப்ப பார்த்தீங்களா. உங்களுதே போச்சு” என்று ஏடிகேவிடம் மகேஸ்வரி புத்தி சொல்வது நியாயம்தான். ஆனால் மகேஸ்வரியும் டீமாகத்தானே ஆடுகிறார்?!

பொம்மை டாஸ்க்கில் மேலும் ரணகளத்தைக் கூட்டிய பிக் பாஸ்

பொம்மை டாஸ்க்கின் இடையே லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கையும் ஆரம்பித்து வெறியேற்றினார் பிக் பாஸ். டெலிபோன் மணி அடித்தவுடன் முதலில் எடுப்பவர், பிக் பாஸ் சொன்ன சவாலை செய்ய வேண்டும். செய்து முடித்தால் 200 பாயிண்ட்ஸ் கிடைக்கும். மணி அடித்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர் கைப்புள்ள பேசறேன்' என்று மணிகண்டன் சொன்னது நல்ல டைமிங். டாஸ் போட்டு அதில் அவர் வென்றதில் ‘தோல் உரிக்கப்பட்ட வெங்காயத்தை 90 விநாடிகளில் தின்று முடிக்க வேண்டும்’ என்று சவால் வந்தது. கண்ணீர் வழிய, வாய் எரிய மளமளவென்று தின்று முடித்து போட்டியில் பெற்றார் மணிகண்டன்.

பொம்மை டாஸ்க்
பொம்மை டாஸ்க்

பொம்மை ஆட்டத்தில் இன்னமும் ரணகளத்தைக் கூட்ட முடிவு செய்தார் பிக் பாஸ். அதன் படி இரண்டு பஸ்ஸர்கள் அடிக்கப்படும். முதல் பஸ்ஸர் அடித்தவுடன் பாதையில் சென்று தயாராக நிற்க வேண்டும். அடுத்த பஸ்ஸர் அடித்தவுடன் ஓடிச் சென்று அறைக்குள் வைக்க வேண்டும். அப்படி அவர்கள் ஓடும் போது மற்றவர்கள் தடுக்கலாம்; வழி மறிக்கலாம்; பொம்மைகளை பறிக்கலாம் என்று டெரரான விதிகளை புதிதாக அமுல்படுத்த, போட்டியிலிருந்து வெளியேறிவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. ‘இப்ப பாருங்கடா’ என்று தயாராகி நின்றார்கள்.

கிரிக்கெட் டீம் கேப்டன் போல தன் அணியைக் கூப்பிட்டு மந்திராலோசனை நடத்தினார் மகேஸ்வரி. இன்னொரு பக்கம் ஜனனி, தனலஷ்மி, ஷவின் ஆகிய மூவரும் “மரத்தை வெட்டி மெயின் ரோட்டை மறிச்சுடுவோம். யார் கிராஸ் ஆகி போறாங்கன்னு பார்த்துடலாம்” என்று அரசியல் தொண்டர்கள் போல உக்கிரமான மோடிற்கு மாறினார்கள்.

ஆட்டம் ஆரம்பித்தது. இந்த மூவர் அணி, பொம்மை அறைக்கு முன்பான பாதையை வலுவாக வழி மறித்து நிற்க, ஒரே தள்ளுமுள்ளு. வெங்கலக்கடையில் யானை புகுந்தது போல அசிம் மூர்க்கமாக முன்னேறி நகர, பின்னாடியே பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தார் ஷெரினா.

ஆயிஷா
ஆயிஷா

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. நடந்த தள்ளுமுள்ளுவில் நிவாவும், ஷெரினாவும் கீழே விழுந்தார்கள். ஆனால் ஷெரினா விழுந்த பொஷிஷன் ஏடாகூடமாக அமைந்ததால் பின்னந்தலையில் அடிபட்டது. வலியால் கதறிய அவரைத் தூக்கிச் சென்றார்கள். தனலஷ்மியை நோக்கி ஆவேசமாக கத்தி விட்டுச் சென்றார் அசிம். “பிக் பாஸ்.. காமிரால செக் பண்ணுங்க” என்று கதறினார் தனலஷ்மி. “நான் நெனச்சிருந்தா உங்க ரெண்டு பேரையும் தள்ளிட்டு போயிருக்க முடியும்” என்று தனலஷ்மி மற்றும் ஷிவினிடம் புகார் செய்து கொண்டிருந்தார் ராம். உண்மைதான். அவர் இருக்கும் உயரத்திற்கு அசிமை விடவும் மூர்க்கமாக செயல்பட முடியும். வழிமறித்தவர்களை எளிதாக அப்புறப்படுத்தியிருக்க முடியும். ஆனால் கண்ணியத்தோடு விளையாடிய ராமிற்குப் பாராட்டு.

‘போன வாரம் வில்லன்.. இந்த வாரம் ஹீரோ’ – அசிம் குறித்து விக்ரமன்

ஷெரினாவை மெடிக்கல் டீம் வசம் ஒப்படைத்து விட்டு வந்த அசிம், தனலஷ்மியை இடது வலதாக எகிறித் தள்ளினார். (லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார் என்பதை இப்படிச் சொல்லலாமா?!). “உனக்கு அறிவிருக்குதா.. நீயும் ஒரு பொண்ணுதானே.. அவ மயங்கிக் கிடக்கறா.. ஒரு கேமிற்காக இப்படியா தள்ளுவாங்க” என்றெல்லாம் அசிம் எகிற, ஆச்சரியமாக தனலஷ்மி பதிலுக்கு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ‘ஒருவேளை தான் தாக்கியதால் ஷெரினா விழுந்திருக்கலாம்’ என்கிற குற்றவுணர்வில் நின்றாரா அல்லது ‘இப்போது பதிலுக்குப் பதில் பேசினால் தவறாகி விடும்’ என்று அமைதியாக இருந்தாரா என்று தெரியவில்லை.

இதற்கிடையில் ஷிவினுக்கும் மகேஸ்வரிக்கும் இடையில் மோதல். “வாயை மூடுன்னு நீ சொல்லக்கூடாது” என்று உக்கிரமானார்கள். இது போதாதென்று, வீட்டின் உள்ளே இருந்து வந்த ஆயிஷா “யாரு கவலைப்பட்டீங்க. யாரு வந்து ஷெரினாவைப் பார்த்தீங்க..” என்று ஹைபிட்ச்சில் கத்த, சூழல் சற்று அமைதியாயிற்று. (உடம்பு சரியில்லாத பொண்ணாம்மா நீயி?!). டென்ஷன் அடங்காமல் அமர்ந்திருந்த ஆயிஷாவிடம் “ரொம்ப யோசிக்காத” என்று சமாதானம் கூறினார் நிவா.

மகேஸ்வரி
மகேஸ்வரி

டாஸ்க்கின் தள்ளுமுள்ளுவின் போது ‘ஷட்அப்’ என்று நிவாவிடம் சொன்னதற்காக ஜனனி வந்து மன்னிப்பு கேட்க, அதை அரைமனதுடன் ஏற்றுக் கொண்டார் நிவா. “நீயெல்லாம் ஒரு பொண்ணான்னு அசிம் கேட்கறாரு. பதிலுக்கு ‘நீயெல்லாம் ஒரு ஆம்பளையா’ன்னு என்னால கேட்க முடியாதா? வார்த்தையை விட்டுட்டா தப்பாயிடும்ன்னுதான் அமைதியா இருந்தேன். சான்ஸ் கிடைச்சவுடனே கொட்டித் தீர்த்துட்டாரு” என்று விக்ரமனிடம் தனலஷ்மி புலம்ப, அப்போது அசிம் குறித்து விக்ரமன் சொன்ன அப்ஷர்வேஷன் மிகவும் ஷார்ப்பாக இருந்தது. “கடந்த வாரம் வில்லன் வேடம் போட்டுப் பாத்தாரு. இந்த வாரம் ஹீரோ வேஷம் போல”..

‘ஷெரினா வழுக்கி விழுந்ததாவே கூட வெச்சுப்போம். வந்து பார்த்திருக்கணும்ல’ என்று ஆயிஷா அனத்த அவர்களின் அணி அதை ஆமோதித்துக் கொண்டிருந்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, உடல்நலம் குன்றியவரைச் சுற்றி ஒட்டுமொத்த நபர்களும் செல்ல முடியாது. இரண்டு, தாக்குதலுக்கு காரணமாகச் சொல்லப்பட்டவர்கள், குற்றவுணர்வு காரணமாக பிறகு சென்று பார்க்கலாம் என்று கூட கருதியிருப்பார்கள். எனவே ‘வந்து பார்க்கலை’ என்பதை பெரிய குற்றமாக சொல்ல முடியாது.

‘ஷெரினாவைத் தள்ளியது யார்?’

‘தனலஷ்மிதான் ஷெரினாவைத் தள்ளினா’ என்று அசிம் முடிவே செய்து விட்டார். “கமல் சார் வரட்டும். நான் ஃபுட்டேஜ் கேக்கறேன். நான் செஞ்சது தப்புன்னா எல்லோர் கிட்டயும் மன்னிப்பு கேட்கறேன். இல்லைன்னா. மத்தவங்க என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று புலம்பிக் கொண்டிருந்தார் தனலஷ்மி. (நமக்குக் காண்பிக்கப்பட்ட கோணத்தில் வீடியோவை மறுபடி மறுபடி பார்த்தால் தள்ளுமுள்ளு காரணமாகத்தான் ஷெரினா விழுந்தார் என்று தோன்றுகிறது. எவரும் அவரைத் திட்டமிட்டு இழுத்துத் தள்ளவில்லை. மேலும் தள்ளி விட்டதாக சொல்லப்பட்ட தனலஷ்மியும் அப்போது கீழே விழுந்தார். ஒருவேளை குறும்படம் காட்டப்பட்டால் இது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகும். ஆனால் ஜனனி மீது லைட்டாக சந்தேகம் இருக்கிறது. பார்ப்போம். அவசரப்பட்டு தீர்ப்பெழுத முடியாது).

நிவா
நிவா

“என்னை மாதிரி கெட்டவளும் இல்லை-ன்னு ஜனனி சொன்னதை மியூசிக்கோட பிரமோல போடுவாங்க..” என்று ராபர்ட் சரியாக யூகித்து ஜாலியாக சொன்னதை ‘அப்படியெல்லாமா செய்வாங்க?’ என்று வியந்த ஜனனி “ஒருத்தர் துரோகம் செஞ்சா நான் பழிவாங்குவேன். ஆனா பின்னுக்கு குத்த மாட்டேன். அவங்க செஞ்ச தப்பை உணர வைப்பேன்” என்று இன்னொரு பன்ச் பேசினார். (அப்படின்னா.. சந்தேகம் இன்னமும் வலுவாகுதே பேபி!)

ரணகளமாக இருந்த இந்த எபிசோடில் மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது ஏடிகேவின் நகைச்சுவைதான். அசிம், அமுதவாணன், ஜனனி ஆகியோர் எப்படி பேசி, நடப்பார்கள் என்று செய்து காட்டி அவர் கிண்டலடித்தது, ரகளையான நகைச்சுவை. இதுவரை வாயைத் திறக்காத கதிரவன் கூட உற்சாகமாக இதில் கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார். (ஆனால் என்ன இருந்தாலும் சீசன் மூன்றில் சாண்டி மாஸ்டர் டீம் அடித்த லூட்டிகளுக்கு எதுவும் இணையாகாது என்பதை ஏக்கத்தோடு நினைவுகூர முடிகிறது).

‘அப்ப செல்லக் குழந்தைதான் ஜூராசிக் பேபியா?’

மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷெரினாவை பரிவுடன் விசாரித்தார்கள். தயக்கத்துடன் ஜனனியும் வந்து விசாரிக்க “Keep up some humanity” என்று இறுக்கமான முகத்துடன் சொன்னார் ஷெரினா. (அப்ப.. பேபிதான் குற்றவாளியா?!). தனலஷ்மியும் பின்னால் வந்து ‘தலையில் பெயின் இருக்கா?” என்று தயக்கத்துடன் கேட்க “என்னது.. தலைல பேன் இருக்காவா?” என்று ரணகளத்திலும் விவஸ்தையின்றி ஜோக் அடித்தார் ராபர்ட். பதில் பேசாமல் ஷெரினா அமைதியாக இருந்ததில் இருந்து தனலஷ்மி மீதும் அவர் கோபத்தில் இருக்கிறார் என்று தெரிகிறது.

வீட்டில் உள்ள பெரும்பாலோனோர் தன்னையே கைகாட்டுவதால் குற்றவுணர்வில் ஆழ்ந்த தனலஷ்மி “பிக் பாஸ்.. ஃபுட்டேஜ்ஜூம் காட்ட மாட்றீங்க. எதுவும் சொல்லவும் மாட்றீங்க.. எதுனா சொல்லுங்க.. அதுவரை சாப்பிட மாட்டேன்” என்று தனிமையில் அழுது கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.

தனலஷ்மி
தனலஷ்மி

ஷெரினாவிற்கு அடிபட்டதால் பாதியில் நின்று போன டாஸ்க்கை மீண்டும் துவக்கினார் பிக் பாஸ். (உங்களுக்கு இரக்கமே இல்லையா ஐயா?!). இந்த டாஸ்க்கில் ஏற்கெனவே ரத்தக்காயம், ரணகாயம் நிகழ்ந்து விட்டதால் சம்பிரதாயத்திற்கு ஜாக்கிரதையாக ஆடினார்கள். ஷெரினாவை ராஜமரியாதையுடன் ‘வாங்கோ.. வாங்கோ..’ என்று ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ஆயிஷாவின் பொம்மையை ஜாக்கிரதையாக கொண்டு போய் சோ்த்து விட்டார் ஷெரினா.

‘நான் விளையாட விரும்பலை’ என்று ஆரம்பத்தில் சொன்ன ஆயிஷா, ரச்சிதாவின் பொம்மையை அமைதியாக வைத்துக் கொண்டு நின்று விட்டார். ஆக என்னதான் அவர்கள் மறுத்தாலும், ‘ரச்சிதா’வை பிளான் செய்து தூக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

பிக் பாஸ் வீட்டின் டீம் பாலிட்டிக்ஸ் மிகவும் அநாகரிகமானதாக மாறிக் கொண்டிருக்கிறது. இது ஆபாசமாக மாறுவதற்குள் கமல் தலையிடுவது நன்று.