‘சோனா முத்தா.. போச்சா.. காதுக்குள்ள குருவி ரிங்குன்னு சுத்துமே’ என்கிற வடிவேலு காமெடி போல, இந்த எபிசோடைப் பார்த்த பல பார்வையாளர்களின் காதுகள் ‘நொய்ங்’ என்றாகியிருக்கும். அத்தனை சத்தம். இந்த ஷோவின் மூலம் பிக் பாஸ் லாபம் அடைகிறாரோ, இல்லையோ, பல ஈஎன்டி மருத்துவர்கள் கோடீஸ்வரர்களாக ஆகி விடுவார்கள் போலிருக்கிறது. ‘சத்தம் இல்லாமல் தீபாவளி கொண்டாடுங்கள்’ என்று நமக்கு உபதேசம் செய்து விட்டுச் சென்றார் கமல். ஆனால் வீட்டிற்குள் தீபாவளி முடிந்தும் சத்தம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
ஆரம்ப நாளில் சுவாரசியமான டாஸ்க் இருந்ததை அப்போது நாம் பாராட்டி மகிழ்ந்தோம். அப்படிப்பட்ட சுவாரஸ்யம்தான் தேவை. மாறாக கூச்சலும் சண்டையும் வசையும் கொண்ட பகுதிகளையே தொடர்ந்து காட்டி நெகட்டிவிட்டியை தினமும் கடத்திக் கொண்டிருந்தால் கணிசமான பார்வையாளர்களை இந்த சீசன் இழக்க நேரிடலாம்.
நாள் 18-ல் நடந்தது என்ன?
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கிற்கான போன் மணி அடிக்க ஜனனியை முந்திக் கொண்டு எடுத்து விட்டார் மைனா. பிசைந்த மாவை வாயால் கவ்வி காலி கிண்ணத்தில் நிரப்ப வேண்டும். டாஸ் போட்டதில் பெரிய சைஸ் கிண்ணம் கிடைத்தது மைனாவின் துரதிர்ஷ்டம். வாய் வலிக்க முயன்றும், 90 விநாடிகளுக்குள் அவரால் முடிக்க முடியவில்லை. ‘நல்ல முயற்சி’ என்று வாழ்த்தி மைனாவை வெறுப்பேற்றி வழியனுப்பினார் பிக் பாஸ்.

‘சிங்கம் போல பன்ச் டயலாக் பேசும் முயல்குட்டி ஜனனி’
தனலட்சுமியைத் திட்டியது குறித்து அசிமிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் தலைவி குயின்சி. “கோபத்துல வார்த்தைகள் வரத்தான் செய்யும்” என்று அழிச்சாட்டியம் செய்த அசிம், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். தன் சொல் பேச்சை குயின்சி கேட்க வேண்டும் என்பது அசிமின் எதிர்பார்ப்பு. “அப்படி உங்க பேச்சைக் கேட்டு ரெண்டு, மூணு முறை தப்பான முடிவு எடுத்துட்டேன். இனியும் என்னை இன்ப்ளூளையன்ஸ் பண்ணாதீங்க.. ஓகே..” என்று குயின்சி கறாராக சொல்ல, அசிம் காண்டானார்.
“வீட்ல க்ரூப்பிஸம் அதிகமாயிடுச்சு.. நீ தனியா நின்னு வெளையாடு. உன்னோடது தனி சாம்ராஜ்யமா இருக்கணும்” என்று ஜனனிக்கு அமுதவாணன் ஜாலியாக அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். ‘நான் பத்து பேரை அடிச்சு டான் ஆனவன் இல்ல. நான் அடிச்ச பத்து பேருமே டான்தான்’ என்பது போல் ஜனனி வசனம் பேச ‘பன்னிக்குட்டில்லாம் பன்ச் டயலாக் பேசுதே’ என்ற கமென்ட் அமுதவாணனுக்குள் மைண்ட் வாய்ஸ் ஓடியிருக்கலாம்.
அராஜகமாகத் தொடரும் அசிமின் அட்ராசிட்டி
‘லவ் பண்லாமா, வேண்டாமா’ என்கிற தத்துவக் குழப்பத்தை உள்ளடக்கிய பாடலோடு நாள் 18 விடிந்தது. பொம்மை டாஸ்க்கை மறுபடியும் ஆரம்பித்தார் பிக் பாஸ். மூவர் அணியான ஜனனி, ஷிவின், தனலஷ்மி ஆகியோர் மெயின் பாதையை அடைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் உள்ளே அனுப்பினார்கள். பௌன்சர் போல ஆயிஷாவை பாதுகாப்பாக உள்ளே கொண்டு போய் சேர்த்தார் அசிம். விக்ரமனைத் தடுக்க முயன்றார் மணிகண்டன். இதுவரைக்கும் ஒரு மாதிரியாகத்தான் போனது.
ஆனால் அசல் வரும் போது மட்டும் ஒரே தள்ளுமுள்ளு. அதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அசல் வைத்திருந்தது அசிமின் பொம்மை. அவரை உள்ளே வரவே விடாமல் தனலஷ்மி மிகவும் போராடினார். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்யன் போல, விழுந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்த அசலுக்கு உதவ முன்வந்தார் மணிகண்டன். மிக வலுவுடன் அசலை நகர்த்திச் சென்று பொம்மையையும் பறித்துத் தந்து உதவினார். “மணிகண்டன் பொம்மையை பாஸ் செய்தார். எனவே இது செல்லாது” என்கிற காரணத்தைச் சொல்லி, அறைக்குள் வைக்கப்பட்ட பொம்மையை இரண்டு முறை வெளியே தூக்கிப் போட்டார் தனலஷ்மி.

இப்படி தூக்கிப் போட்டது தனலஷ்மி செய்த தவறு என்றால் இந்தச் சமயத்தில் அசிம் செய்தது வழக்கம் போல அடாவடித்தனமாகவும் ஆபாசமாகவும் இருந்தது. தனலஷ்மியை நேருக்கு நேராக நின்று தள்ளி விட்டு ‘போடி’ என்று கத்தி விட்டு பொம்மையை உள்ளே கொண்டு போய் வைத்தார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வேறு வகை. ஆனால் ஒருவர் தனியாக நிற்கும் போது அப்படியே கையை வைத்து தள்ளி விடுவது வேறு வகை.
‘இனிமே ஒழுங்கா இருக்கேன்' என்று கடந்த வாரத்தில் கண் கசிந்து அசிம் மன்னிப்பு கேட்டது நடிப்பாக இருக்கலாம் என்று அப்போது சொல்லியிருந்தோம். அது நடிப்புதான் என்பது உண்மையாகி விட்டது. தனலஷ்மியை தள்ளி விட்டதோடு மட்டுமல்லாமல், ‘போடி’ என்று ஏகவசனத்தில் பேசவும் அசிம் தயங்கவில்லை. அவருக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தன்மை, Superiority Complex போன்றவற்றை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘என்னங்க.. நடக்குது.. இங்க. இதெல்லாம் தப்புங்க’ – விக்ரமன் ஆவேசம்
தனலஷ்மி கதறிக் கொண்டே பொதுவில் புகார் தெரிவிக்க “ஏங்க அப்படி தள்ளி விட்டீங்க?’ என்று விக்ரமன் நியாயம் கேட்க முன்வர அவரையும் ‘போய்யா..’ என்று ஏகவசனத்தில் எதிர்கொண்டார் அசிம். ‘ஷெரினா விழுந்த போது இப்படி கேள்வி கேட்டீங்களா?’ என்பது அசிம் கேட்கும் கேள்வி. “அது விபத்துங்க” என்று விக்ரமன் சொல்லும் லாஜிக்கை அசிம் ஏற்கவில்லை. இந்தச் சமயத்தில் ஷெரினா ஆவேசமாக எழுந்து வந்து தனலஷ்மியை நோக்கி பேச, ஷிவின் பதிலுக்கு ஆவேசமாக கத்த ஒரே கூச்சல் குழப்பம்.

‘அசல் வந்த போது தடுத்தாங்களே... அதை ஏன் கேக்கலை. ஆம்பளைங்களுக்கு ஒரு நியாயம். பொம்பளைங்களுக்கு ஒரு நியாயமா?’ என்று விதாண்டாவாதம் செய்தார் அசிம். அசல் வந்த போது கூட்டமாக நின்று தடுக்கத்தான் செய்தார்கள். ஒற்றைக்கு ஒற்றையாக நின்று மூர்க்கமாக தள்ளிவிடவில்லை. அசிம் அணியைச் சேர்ந்தவர்களும் விக்ரமனை நோக்கி சண்டை போட “இது தப்புங்க. இதை எப்படி ஈஸியா கடந்து போறீங்க?” என்று மல்லுக்கட்டினார் விக்ரமன். ஆனால் கும்பலாக இணைந்து அவரை டார்கெட் செய்தார்கள். “நீங்க வீட்டிற்கு வெளிலதான் அரசியல்வாதி” என்றார் அசிம்.

ஒரு தவறை, இன்னொரு தவற்றின் மூலம் நியாயப்படுத்த முடியாது என்கிற எளிய லாஜிக் கூட அசிம் குரூப்பிற்கு தெரியவில்லை. இதைப் போலவே நெரிசலில் ஏற்படும் விபத்திற்கும் தனிநபர் அட்ராசிட்டிக்குமான வித்தியாசமும் அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லது தெரிந்தும் நியாயப்படுத்துகிறார்கள். மகேஸ்வரிக்கும் விக்ரமனுக்கு வார்த்தை மோதல் ஏற்பட்டது. “அசிம் செய்யற தப்பையெல்லாம் சப்பைக் கட்டு கட்டி இப்படியே நார்மலைஸ் பண்ணிடுங்க” என்று விக்ரமன் சொன்ன குறிப்பு மிக முக்கியமானது. ‘ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான்’ என்று சமூகம் கடந்து செல்லும் போக்கிற்கு சரியான எதிர்வினை இது.
‘இதென்ன பிரமாதம். அடுத்து ஒரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’
அசலின் பொம்மை வெளியே தூக்கி போடப்பட்டதால் ஆட்டத்தின் முடிவு தெரியாமல் இருந்தது. எனவே அசலுக்கும் ஷெரினாவிற்கும் இடையில் மட்டும் போட்டியை நடத்தினார் பிக் பாஸ். இது ‘லுலுவாய்க்கு’ நடந்து முடிந்தது. ‘சும்மா வெளையாட்டுக்கு தடுக்கறோம்” என்று சொல்லி அசலை மரியாதையுடன் அனுப்பி வைத்தார்கள். ஷெரினாவின் கையில் ஆயிஷாவின் பொம்மை இருந்தததால், ஆயிஷா போட்டியில் இருந்து வெளியேறினார்.
நடந்த தள்ளுமுள்ளு விவகாரத்தைப் பற்றி வீட்டிற்குள் மறுபடி மறுபடி பேசி புகைந்து கொண்டே இருந்தார்கள். ஒரு பொம்மை டாஸ்க்கிற்காக இத்தனை கொலைவெறியுடனா செயல்படுவார்கள் என்று நமக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது. ‘என்ன வேணா நடக்கட்டும். நான் சந்தோஷமா இருப்பேன்’ என்கிற மோடில் எப்போதும் இருக்கிற பிக் பாஸ், அடுத்த சுற்றுக்கான பஸ்ஸரை கூலாக அடித்தார். ஆனால் இந்த முறை இன்னமும் ‘ரசாபாசமான’ விஷயங்கள் நடந்தன.

பஸ்ஸர் அடித்த போது பொம்மைத் தொட்டியின் அருகில் இருந்ததால் சட்டென்று விக்ரமனின் பொம்மையை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார் ஷெரினா. அமுதவாணனின் பொம்மையையும் காணவில்லை. ‘யாருப்பா வெச்சிருக்கிறது.. அதையாவது சொல்லுங்க’ என்றாலும் பதில் வரவில்லை. ஷெரினாவிடமிருந்து பொம்மையை பறிக்கச் சென்றார் அமுதவாணன். ஆனால் ஷெரினாவை முழுவதுமாக மறைத்துக் கொண்டு அவரின் மீது அப்படியே அமர்ந்து தடுத்தார் அசிம். (இதுக்கே அந்தப் பொண்ணுக்கு மூச்சு முட்டியிருக்கும்!).
‘மக்களே.. நல்லாப் பாருங்க.. இந்தப் பாவத்துக்கு நான் பொறுப்பில்லை’ என்று அசிமின் காரியத்தை பொதுவில் சுட்டிக் காட்டினார் அமுதவாணன். பொம்மையை விட்டுத்தராமல் ஷெரினா போராட, அந்த ஏரியாவில் ஒரே கலவரம். அமுதவாணனிற்கும் அசிமிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ரணகளமான நடந்த வாதத்திற்கு இடையிலும் ‘இந்த நடிப்பை சீரியல்ல காட்டலாமே’ என்பது போல் அமுதவாணன் அடித்த பல காமெடி கவுன்ட்டர்கள் சுவாரசியமாக இருந்தன. அசல் கவனமின்றி இருந்த சமயத்தில் அவரிடமிருந்த பொம்மையை வெடுக்கென்று விக்ரமன் பிடுங்கிச் செல்ல `அப்படிப் போடு சபாசு’ என்று சந்தோஷக் கூச்சல் எழுந்தது.
‘மீண்டும் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்த ஷெரினா’
“நீ அடுத்து ரசத்தை ஊத்து. பூனை இருக்குதா பார்க்கலாம்” என்று ஜாலியாக வேடிக்கை பார்த்த பிக் பாஸ், இரண்டாவது பஸ்ஸரை அடித்தார். அமுதாவணன் குரூப் ஆட்கள் எளிதாக உள்ளே சென்று விட்டார்கள். ஆனால் ஷெரினா வரும் போது மட்டும் மூவர் அணி உக்கிரமானது. அவரை உள்ளே செல்ல விடாமல் அவர்கள் தடுக்க, ஷெரினாவும் பதிலுக்குப் போராடினார். பிறகு மணிகண்டனின் உதவியுடன் வலுவாக தள்ளிச் சென்று ஏறத்தாழ ஷெரினாவை பார்சல் செய்து உள்ளே தள்ளினார்கள். சட்டசபைகளில் நிலவும் கலவரத்தைப் பார்ப்பது போலவே இந்தக் காட்சிகள் இருந்தன.
எப்படியோ உள்ளே சென்று பொம்மையை போட்ட ஷெரினா, நீரில் இருந்து வெளியில் எடுத்து போடப்பட்ட மீன் போல மூச்சு விட முடியாமல் காற்றுக்குத் தவித்தார். அவரை அசிம் மீண்டும் வீட்டிற்குள் தூக்கிச் செல்ல “இது நேத்து பார்த்த அதே சீன் இல்ல?!” என்று நமக்குத்தான் குழப்பமாக இருந்தது.

வீட்டிற்குள் மீண்டும் ஒரே வாக்குவாதம். அசிமும் அமுதவாணனும் சர்காஸ்டிக் வார்த்தைகளோடு சர்க்கஸ் செய்தார்கள். மருத்துவ சிகிச்சை முடிந்து ஷெரினா வந்தார். “உன்னை நான் ரொம்ப அழுத்திட்டனா?” என்று அசிம் கண்கலங்கினார். (உலக நடிப்புடா சாமி!) அவரை ஷெரினா ஆறுதல்படுத்தினார். ஷெரினாவின் உடல்நலக்குறைவு காரணமாக, பொம்மை டாஸ்க்கில் இருந்து அவரை விலக்கி வைத்தார் பிக் பாஸ். (வட போச்சே!)

பிறகு நடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் 1 டஜன் வாழைப்பழங்களை ரச்சிதாவும் 10 அவித்த முட்டைகளை ஜனனியும் தின்று முடித்து வெற்றி பெற்றார்கள். ரச்சிதா அவசரம் அவரசமாகப் பழங்களை விழுங்க, அதை சற்று நேரம் வேடிக்கை பார்த்த பிக் பாஸ், ‘இதுக்கு டைம் கட்டுப்பாடுதான் இல்லையே... மெதுவா சாப்பிடுங்க’ என்று சொன்னது அநியாயக் குறும்பு.
இந்த பொம்மை டாஸ்க், இன்னமும் எத்தனை பேரைக் காவு வாங்கும் என்று தெரியவில்லை