அது எந்த சீசனாக இருந்தாலும், பிக் பாஸ் வீட்டின் வாஸ்துப்படி கிச்சன் ஏரியாவில்தான் முதல் பஞ்சாயத்து ஆரம்பிக்கும். பிறகு நூறு நாள்களுக்கும் தொடர்ந்து அந்த ஏரியா சூடாகவே இருக்கும். சீசன் 6-ம் இதற்கு விதிவிலக்கில்லை. முதல் பஞ்சாயத்து அங்குதான் மங்களகரமாக ஆரம்பித்தது.
‘முத்து வெள்ளந்தியா, நடிக்கிறாரா’ என்கிற சந்தேகம் எழுந்ததல்லவா? அவர் அப்படி ஒன்றும் வெள்ளந்தியானவர் இல்லை என்பதற்கான முதல் சாட்சியம் இன்றைய எபிசோடில் கிடைத்தது. என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.
நாள் 2-ல் நடந்தது என்ன?
‘வாங்கப் பழகலாம்’ என்றொரு புதிய டாஸ்க்கைத் தொடங்கிவைத்தார் பிக் பாஸ். ‘யாருடன் பிரெண்ட்ஷிப்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறோமோ, அவரிடம் பேசலாம்’ என்பதுதான் இந்த டாஸ்க். முதலில் வந்த ADK, “நீங்க என்னை விடவும் சிறந்த கலைஞன். உங்க கிட்ட இருந்து கத்துக்க விரும்பறேன்” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் அசல் கோளாறுவிடம் சொன்னது சிறப்பு. "அய்யோ. அப்படியெல்லாம் இல்ல ப்ரோ" என்று வெட்கப்பட்ட அசல், நட்பை வளர்க்க ஒப்புக் கொண்டார்.

“எவ்ளோ அடிச்சாலும் தாங்கறீங்க... எவ்ளோ கலாய்ச்சாலும் ஜாலியா எடுத்துக்கறீங்க... ரெண்டு பேரும் காமெடியன்ஸ். பிரெண்டா இருக்கலாம்” என்று முத்துவிடம் பாசமாக அப்ளை செய்த அமுதவாணன், “அப்ப நீங்க என் பிரெண்டுதானே... என்னை நீங்க நாமினேட் செய்யவே கூடாது. சத்தியம் பண்ணுங்க” என்று பின்குறிப்பாகச் சொல்லி சபையைக் கலகலக்க வைத்தார். “உங்களைப் பார்த்தா சகோதர உணர்வு வருது” என்று அதே முத்துவிடம் சொல்லி சென்ட்டியைப் பிழிந்தார் சாந்தி. ஆக... முத்துவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள். அவருக்கு இருக்கும் மக்கள் சப்போர்ட் அப்படி.
“உங்களை நம்பி எதையும் சொல்லலாம்னு தோணுது. என்னைப் பத்திரமா பார்த்துப்பீங்கன்ற மாதிரி ஃபீல் பண்றேன்” என்று அசல் கோளாறுவிடம் சொல்லிப் பிரியத்தை வளர்த்தார் ஜனனி. (இது என்னடா புது கோளாறு?!) இதை விடவும் ரச்சிதாவிடம் ராபர்ட் போட்ட டீல்தான் ரியல் கடலை. “நான் பொதுவா சீரியல் பார்க்க மாட்டேன். ஆனா உங்களுக்காக மட்டும் பார்ப்பேன். நீங்க சேலைல நடந்து வர்ற போது... அடடா!” என்று ராபர்ட் வசனம் பேசிய போது, ‘சீரியல்ல கூட இப்படியொரு சீன் வந்ததில்லையே’ என்பது போல் கன்னம் சிவந்த ரச்சிதா மையமாகச் சிரித்து வைத்தார். “வெளில போனாலும் நம்ம பிரெண்ட்ஷிப் தொடரணும்” என்று ராபர்ட் சாமர்த்திய கர்ச்சீப் போட்டு வைக்க முயல “அது நீ எப்படி நடந்துக்கறேன்றதைப் பொறுத்து இருக்கு” என்று கூட்டத்திலிருந்து யாரோ குரல் தந்தது ‘நச்’ கமென்ட்.

அசல் கோளாறு ஆரம்பித்து வைத்த புதிய கோளாறு
‘முஸ்தபா... முஸ்தபா...’ பாட வேண்டிய இந்த டாஸ்க்கில் ஒரு மினி கோளாறை ஆரம்பித்தார் அசல். “நாம பிரெண்டா இருக்கலாம். ஆனா என்னை வாடா... போடான்னு கூப்பிடாதீங்க” என்று இவர் ஆயிஷாவிடம் சொல்லக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஆளாளுக்கு கருத்துச் சொல்ல ஆரம்பித்தனர். ‘முத்து வெள்ளந்தியல்ல என்பதற்கான தடயம் கிடைத்தது’ என்று முன்னர் சொல்லியிருந்தேன் அல்லவா? அது இதுதான்... “நட்புல 'வாடா... போடா’ன்னு சொல்லாம எப்படியிருக்க முடியும்? அப்படிப் பார்த்தா அது நட்பு இல்ல” என்று கட் அண்ட் ரைட்டாக கையை ஆட்டி தீர்ப்புக் கூறிய முத்துவைப் பார்த்து ‘அடேங்கப்பா’ என்றிருந்தது. ஆக... முத்துவின் பல்வேறு முகங்கள் இனி வெளியாகக்கூடும்.
‘வாடா போடா' என்று கூப்பிடுவதில் அசலுக்கு பிரச்னையில்லையாம். ஆனால் ஆயிஷா ஏதோவொரு முறை வில்லங்கமாகக் கூப்பிட்டதால் வருத்தமாம். "இனிமே உங்களை வாங்க போங்கன்னே கூப்பிடறேன்" என்று சொன்ன ஆயிஷா, பிறகு தனிமையில் அமர்ந்து கண்ணைக் கசக்கினார். இந்த சீசனின் முதல் சென்ட்டியான காட்சி இப்படியாக ஆரம்பித்தது.

‘அய்யோ... பிக் பாஸ் வீட்டில் பொண்ணுங்க அழ ஆரம்பிச்சா சப்போர்ட் அவங்களுக்குத்தானே போகும்...’ என்று வரலாற்றை நினைத்துப் பயந்தாரோ, என்னமோ, “அம்மா, தாயே... வாடா போடா மட்டுமில்ல. நீ என்னை எப்படி வேணுமின்னாலும் கழுவி ஊத்து” என்கிற தொனியில் சமாதானப்படுத்தினார் அசல். “இதை நான் உங்ககிட்ட தனியா கூட சொல்லியிருப்பேன்” என்று அசல் ஆரம்பிக்க “எங்க சொன்னா என்ன... அதான் உலகமே பார்த்துக்கிட்டு இருக்கே” என்று மூக்கைச் சிந்திய நேரத்திலும் லாஜிக் பேசினார் ஆயிஷா. ஆக... கேமரா கான்சியஸ் என்பது சீசனுக்கு சீசன் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மாமியார் சாந்தி, நாத்தனார் மகேஸ்வரி, முதல் பஞ்சாயத்து
நாள் 2 விடிந்தது. ‘மவனே பாட்டு போட்டா எழுந்திருக்காம தூங்கவா செய்யறே, உனக்கு ஒரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்று பிக் பாஸ் அஸிமை மனதில் நினைத்துக் கொண்டாரோ, என்னமோ. ‘தகதகவென ஆடவா...’ பாடலை ஹைடெசிபலில் அலறவிட்டார். இந்தப் பாடலை குறைந்த வால்யூமில் கேட்டாலே சாமி வந்துவிடும். வேறு வழி? எழுந்து ஆடித்தான் ஆக வேண்டும்.

பஸ்ஸர் vs குப்பை டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. திடீரென்று பஸ்ஸர் அடிக்க மக்கள் வீடெங்கும் சிதறி ஓடினார்கள். ஜனனிக்கு அடித்தது அதிர்ஷ்டம். மணிகண்டன் இதை மைக்ரோ இழையில் தவற விட்டு ‘வட போச்சே’ என்று நாக்கைக் கடித்துக் கொண்டார். “வாழ்த்துகள் ஜனனி... உங்களுக்கு 200 பாயிண்ட்ஸ்” என்கிற பிக் பாஸ் குரலைக் கேட்டதும் ஜொ்க் ஆகி... “நன்றி அண்ணா...” என்று வாய் குழறிய ஜனனி, பின்பு சுதாரித்துக் கொண்டார். (இதுக்குத்தான் எல்லோரையும் ‘அண்ணா.. அண்ணா’ன்னு சொல்லிப் பழகக்கூடாது!).
கிச்சனில் முதல் பஞ்சாயத்து என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அதைப் பற்றிப் பார்ப்போம். கிச்சன் கிளப் ஓனராக ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டதில் சாந்திக்கு அதிருப்தி என்பது நேற்றே தெரிந்தது. அவரின் முகமே மாறிவிட்டது. எனவே இன்று அதைப் பற்றி அனத்த ஆரம்பித்து விட்டார். “உப்புமாவிற்கு நான் சொன்ன மெனுவைப் பார்த்து உலகமே வியந்திருக்கும். என்னமோ இவ சொன்ன ரசத்துக்கு வோட்டு போட்டு ஜெயிக்க வைச்சாங்களே. அது ரசம் இல்ல. வெஷம்" என்பது போல் மகேஸ்வரியிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார்.

சமையல் ஆரம்பித்து நீண்ட நேரம் ஆகியும் கிச்சன் கிளப் ஓனர் வரவில்லை. குளித்து விட்டு சாவகாசமாக வந்த ஷிவினிடம் “நீங்கதானே முதலாளி... நாங்கள்லாம் தொழிலாளிங்க. நீங்கதானே உத்தரவு போடணும்... நீங்களே இப்படி லேட்டா வர்றீங்க” என்று சர்காஸ்டிக் பணிவுடன் சாந்தி டயலாக் பேச, ஷிவினின் முகம் ‘ஷிவந்து’ போனது. புது மருமகளை மாமியார் ஹேண்டில் செய்யும் தோரணையில் சாந்தி இருக்க, நாத்தனார் போல அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டார் மகேஸ்வரி. (ஆஹா... சீரியல் வாசனை வருதே?!). இவர்களின் ராவடியினால் எரிச்சலான ஷிவின் “ஓகே... இங்கேயே இருக்கேன்” என்று சொல்ல “இல்ல... நீங்க போயி கிச்சன் டிரஸ்ஸூக்கு மாறிட்டு வாங்க” என்று அவரை அனுப்ப முயன்றார்கள். “இல்ல... நான் இங்கயே இருக்கேன். எதுக்கு வம்பு?” என்கிற மோடில் அழிச்சாட்டியமாக நின்றார் ஷிவின்.
ஷிவின் என்னதான் கிச்சன் கிளப் ஓனர் என்றாலும் அந்த ஏரியா சாந்தி மற்றும் மகேஸ்வரியின் கன்ட்ரோலில்தான் இருந்தது. தனக்குத் தரப்பட்ட அதிகாரத்தைத் தயக்கத்துடன் கையாண்டால் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான உதாரணம் ஷிவின்.

ரணகளமாக இருந்த கிளப்பின் விதிகள்
வீட்டை ஐந்து அணிகளாகப் பிரித்துவிட்டாலும் ‘ஏதோ சமைத்தோமா... பெருக்கினோமா’ என்றில்லாமல் ஒவ்வொன்றிலும் பஞ்சாயத்து நிகழ்வதற்கான கண்ணி வெடிகளை கச்சிதமாகப் பொருத்தினார் பிக் பாஸ். அணியாக இருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட பங்களிப்பும் மிக முக்கியமாம். புகார் பெட்டி வைக்கப்படுமாம். அதில் வரும் புகார்களுக்கு ஒவ்வொரு டீமும் பதில் சொல்ல வேண்டுமாம். ஆண்டிராய்டு ஆப் மாதிரி இதற்கு ஸ்டார் ரேட்டிங்கெல்லாம் உண்டாம்.
தண்டனை பெற்று கார்டனில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. குறிப்பிட்ட கிளப்பில் யாராவது சரியாக வேலை செய்யவில்லை என்று கிளப் ஓனர் கருதினால், அவரை ‘பனிஷ்மென்ட் ஏரியாவிற்கு’ அனுப்ப முடியும். அவருக்கு நேரடி நாமினேஷன் ஆபத்தும் உண்டு. தண்டனையிலிருந்தவர் அதிலிருந்து தப்பித்து வீட்டிற்குள் பத்திரமாகத் திரும்ப முடியும். அதேதான். ‘ஒருவர் தலையிலிருந்து கையை மாற்றி வைக்கும் வடிவேலு காமெடிதான்!'

ஒவ்வொரு கிளப்பிற்கும் ரணகளமான ரூல்ஸ்களை பிக் பாஸ் ஏற்படுத்தினார். கிச்சன் டீம் என்றால் சாப்பிட வருகிறவர்களுக்கு முதலில் வெல்கம் டிரிங்க் தர வேண்டும். ஒருவர் விரும்பினால் அவருக்கு உணவை ஊட்டி விட வேண்டுமாம். க்ளீனிங் கிளப்பின் விதிதான் கொடூரமாக இருந்தது. ஹவுஸ்மேட்ஸ் பற்களைச் சரியாக பிரஷ் செய்திருக்கிறார்களா என்பதை இவர்கள் சோதிக்க வேண்டுமாம். பாத்ரூம் கிளப்பிற்கான ரூல் இதை விடவும் டெரராக இருந்தது. யாராவது பாத்ரூம் போக விரும்பினால் அவர் பெல் அடிப்பார். அவரை ரெட் கார்ப்பெட் போட்டு ‘சுச்சா’ ஏரியாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமாம். (ரெட் கார்ப்பெட்டுக்கு உண்டான மரியாதையே போச்சு!). முத்துவை கார்ப்பெட்டில் சுருட்டி எடுத்துக் கொண்டு போய் பாத்ரூம் வாசலில் நிறுத்தினார்கள்.
படுக்கை விரிப்புகளை க்ளீனிங் டீம் பக்காவாக சரிசெய்து கொண்டிருக்க அதை வரிசையாகக் கலைத்துப் போட்டு விளையாடினார் ராபர்ட். “என்னை இடுப்பில் தூக்கிட்டுப் போய் சாப்பாடு ஊட்டுங்க” என்று சாந்தியிடம் அழிச்சாட்டியம் செய்தார் ரச்சிதா. சாந்தி அவ்வாறு செய்திருந்தால் உடைந்து போய் பூந்தியாகி இருப்பார். “இவங்கதான் என் அம்மா” என்று சாந்தியிடம் ‘பூவா’ ஊட்டிக் கொண்டார் அமுதவாணன். இவரும் ராபர்ட்டும் இணைந்து அடித்த லூட்டிகள் சுவாரஸ்யமாக இருந்தன. சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார் சாந்தி.

கிச்சன் ஏரியாவில் இன்னொரு பஞ்சாயத்து ஆரம்பித்தது. நேரம் கெட்ட நேரத்தில் ‘எனக்கு பால் டீ வேணும்’ என்று அஸிம் கேட்டார். (பால் வேணுமா... இல்ல டீ வேணுமா... கரெக்டா சொல்லுப்பா!). “ரெண்டு வேளைக்குத்தான் டீ... கேக்கறப்பல்லாம் தர முடியாது” என்று மகேஸ்வரி டென்ஷன் ஆக, டிகாக்ஷனுக்குப் பதிலாகத் தான் கொதிக்க ஆரம்பித்தார் அஸிம். "தப்பு... தப்பு... தப்பு... அதை நீ சொல்லக்கூடாது” என்று அவர் ஆட்சேபம் தெரிவிக்க, சமையல் ஏரியாவில் வெப்பம் அதிகமானது. கிளப் ஓனரான ஷிவின் இடையில் புகுந்து சமாதானம் செய்து வைக்க முயல, அவரை சட்டையே செய்யாமல் அஸிமும் மகேஸ்வரியும் உக்கிரமான வாதத்தில் ஈடுபட்டார்கள்.
சற்று நேரத்தில் சமாதானக் கொடியும் பறக்க விடப்பட்டது. “இத பாருங்க... எப்படியும் நாம வெளிய போயி ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கணும். சீரியல்ல வசனம் பேசணும். ஒரு டீக்கு ஏன் சண்டை?” என்று அஸிம் கேட்டதை ஒப்புக் கொண்ட மகேஸ்வரி, நட்புக்கரம் நீட்டினார். (என்னய்யா சண்டை இது? டீ கொதிக்கறதுக்குள்ள அடங்கிடுச்சு!).
‘கத்துங்க... கத்துங்க... கத்திக்கிட்டே இருங்க...'
‘என்ன சத்தம் இந்த நேரம்?’ என்று புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஐந்து அணிகளாக உள்ள ஹவுஸ்மேட்ஸ், தனித்தனியாக வந்து தரப்பட்டிருக்கும் மைக்கில் ‘ஓ’வென்று கத்த வேண்டும். யார் அதிக டெசிபலில் கத்துகிறார்களோ, அந்த அணிக்கு ஒரு ஸ்டாராம். (என்னதான் போட்டினாலும் ஒரு நியாயம் வேணாமாடா... இதெல்லாம் ஒரு போட்டியா?!)

முதலில் வந்தது அஸிம், உயிரைக் கொடுத்து ‘ஓ’வென்று அவர் கத்தியது வீணாகப் போயிற்று. டெக்னிக்கல் பிரச்னையினால் அது பதிவாகவில்லை. அதற்குப் பிறகு வந்தவர்களில் ஜி.பி.முத்து மட்டும் 1.5 லெவலில் கத்தி ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தினார். “எங்களுக்கும் ரெண்டாவது சான்ஸ் வேணும்” என்று எதிரணி ஆரம்பிக்க, வாக்குவாதம் ஏற்பட்டது. “எங்களுக்கு ஸ்டாரே வேணாம். போங்கய்யா...” என்று சூடானார் முத்து. (வெறும் மலைன்னு நெனச்சிட்டு இருந்தா ஜி.பி.முத்து எரிமலையாவுல்ல இருக்காரு!).
யார் அதிகமாகக் கத்தித் தொலைத்தது என்பதற்கான விடை நாளை தெரியும்.