Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 20: அதிரடி காட்டிய கமல்; அதிர்ந்த ஷெரினா,அசிம்; நெகிழ்ந்த தனலஷ்மி; தப்பிப்பாரா அசல்

பிக் பாஸ் நாள் 20

முதல்ல மயங்கி விழுந்தீங்க. பிறகு ஆட வந்தீங்க. அசிம் அத்தனை வெயிட் போட்டு உங்க மேல உக்காந்தது கூட உங்களுக்குப் பிரச்னையில்ல என்று ஷெரினாவையும் போட்டு வறுத்தெடுத்தார் கமல்

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 20: அதிரடி காட்டிய கமல்; அதிர்ந்த ஷெரினா,அசிம்; நெகிழ்ந்த தனலஷ்மி; தப்பிப்பாரா அசல்

முதல்ல மயங்கி விழுந்தீங்க. பிறகு ஆட வந்தீங்க. அசிம் அத்தனை வெயிட் போட்டு உங்க மேல உக்காந்தது கூட உங்களுக்குப் பிரச்னையில்ல என்று ஷெரினாவையும் போட்டு வறுத்தெடுத்தார் கமல்

பிக் பாஸ் நாள் 20
‘ஷெரினாவைத் தள்ளி விட்டது யார்?’ – இந்த விசாரணைக் கமிஷனை கமல் கையாண்ட விதம் இருக்கிறதே?! ஒரு அட்டகாசமான ஹைவோல்டேஜ் கோர்ட் டிராமாவை பார்த்த மாதிரி இருந்தது. சிலந்தி வலையை மெல்ல பின்னி பின்னி, பின்பு இரையை நோக்கி நகரும் விதத்தை கமல் பொதுவாக நன்றாகவே நிகழ்த்துவார். இது தொடர்பான அவரின் பாண்டித்தியம் இந்த எபிசோடிலும் அற்புதமாக வெளிப்பட்டது.
கமல்
கமல்

ஒரு முரட்டுத்தனமான மாணவனை, சகிப்புத்தன்மையுடன் கொஞ்சம் கொஞ்சமாக திருத்தும் பேராசிரியர் பாத்திரத்தை ‘நம்மவர்’ திரைப்படத்தில் கமல் ஏற்றிருப்பார். இந்த எபிசோடில் நடந்த டிராமாவை அந்தப் படத்தின் ‘மினி வெர்ஷன்’ எனலாம். இதை விடவும் நாகரிகமாக அசிமின் தவற்றை அவருக்கு உணர்த்தி விட முடியாது. அசிமின் மகனை முன்னுருத்தி இந்தப் பாடத்தை கமல் சொன்னது சிறப்பு. இதில் நமக்கான ஆதார செய்தியும் உள்ளது. ‘கண்ணால் பார்ப்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்.

கமலின் இந்த விசாரணையில் சில பிசிறுகளும் இருந்ததாகப் பட்டது. என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

நாள் 20-ல் நடந்தது என்ன?

கட்டம் போட்ட சட்டையில் மிக கேஷூவலாக வந்தார் கமல். அந்த முறுக்கு மீசையைக் காணோம். இந்தியன்-2 படத்திற்காக செய்த தியாகம் போல. “கதவு மூடி இருக்குன்னா... திறந்து பார்க்கணும். தள்ளிப் பார்க்கணும்.. இவங்களுக்கு இழு, தள்ளுவிற்கே வித்தியாசம் தெரியல. வாங்க விசாரிப்போம்” என்று வீட்டில் நடந்த களேபரங்களை சூசசமாக சுட்டிக் காட்டிய கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைக் காட்டினார்.

அமுதவாணன் நடத்திய ‘பேய் டிராமா’

சிறையில் இருந்தவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் அசல் ‘கானா' பாடியது நன்று. இந்த பாடும் திறமையை அவர் அடிக்கடி வெளிக்காட்டலாம். சிறைக்கம்பி வழியாக எளிதாக வெளியே வந்து நின்றார் ஷிவின். ஜெயில் பில்டிங் கட்டிய லட்சணம் அப்படி. காண்டிராக்ட்டில் ஊழல் நடந்திருக்கு போல!. ஷிவினின் எஸ்கேப் நாடகத்தைப் பார்த்து “இவங்களை வெச்சிக்கிட்டு முடியல பிக் பாஸ்” என்று அலுத்துக் கொண்டார் வார்டன் குயின்சி.

அமுதவாணன்
அமுதவாணன்

அன்றைய இரவில் அமுதவாணன் நடத்திய 'சைக்கோ பேய்' நாடகம் சிறப்பு. நம்முடைய வீடுகளில் கூட இதைப் பார்க்கலாம். மின்தடை ஏற்பட்ட இரவில், தன்னுடைய பிள்ளைகளை தகப்பன்மார்கள் ஜாலியாக பயமுறுத்தி விட்டு பிறகு சிரிப்பார்கள். இங்கும் அதுதான் நடந்தது. அமுதவாணன் திடீரென விபரீதமாக நடந்து கொண்டதை முதலில் 'விளையாட்டு' என்று நம்பிய சிலர், பிறகு அது தீவிரமானதாக சென்றதும் பட்டாசுக்கு நெருப்பு வைத்ததைப் போல பதறி தள்ளி ஓடினார்கள். இதன் உச்சம் தனலஷ்மியின் பயம். அவர் அழுது கதறி "என்னைக் காப்பாத்துங்க" என்கிற ரேஞ்சிற்கு மெயின் டோர் அருகே ஓடியதை நமட்டுச்சிரிப்புடன் பார்க்க முடிந்தது. மற்ற நேரங்களில் டெரராக இருக்கும் பெண்ணா இவர்?!

அசிமை மட்டும் சிறையில் இருந்து ரிலீஸ் செய்த பிக் பாஸ், கம்பி வழியாக வெளியே வந்து விதியை மீறிய காரணத்திற்காக ஷிவினிற்கு மட்டும் ஜாமீன் தரவில்லை. 'ஜாலியான குறும்புதானே' என்று மன்னித்து விட்டிருக்கலாம்.

குறும்படத்திற்கே டீசர் போட்ட கமல்

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், எவ்வித முகஸ்துதிக்கும் இடம் தராமல் நேரடியாகப் பஞ்சாயத்தை ஆரம்பித்தார். "குயின்சியோட கேப்டன்ஷிப் எப்படி இருந்தது?" என்று அவர் கேட்க 'ஆரம்பத்துல மட்டும் ஹிட்லர் மாதிரி இருந்தாங்க.. அப்புறம் அவங்களே இட்லி சுட்டு தந்ததைப் பார்த்து கண்ணு கலங்கிடுச்சு' என்கிற மாதிரி பலரும் சொல்லி தலைவி குயின்சியைப் பாராட்ட அம்மணிக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது. ஷெரினா ஆங்கிலத்தில் பாராட்டியதை "ஒண்ணுமில்லை. தலைமைக்கான லட்சணங்கள் இருக்குன்னு சொல்றாங்க. பயப்படாதீங்க" என்று கமல் சொன்னது அக்மார்க் குறும்பு. "பரவாயில்லையே. உங்க கிட்ட இருந்து நானும் பிக் பாஸூம் கத்துக்கலாம் போலயே" என்று கமல் பாராட்ட 'அய்யோடா.. நானா' என்கிற மாதிரி வாயைப் பொத்திக் கொண்டார் குயின்சி.

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் “இப்ப குறும்படம் போடப் போறேன்... முன்னாடியே கைத்தட்டி காரியத்தைக் கெடுத்திடாதீங்க” என்று பார்வையாளர்களிடம் சொல்லி குறும்படத்திற்கே டீசர் போட்டு வி்ட்டு உள்ளே சென்றார்.

குயின்சி
குயின்சி

பிறகு ஆரம்பித்தது அந்த அட்டகாசமான டிராமா. சதுரங்க ஆட்டத்தில் திறமையாக காய்களை நகர்த்தி எதிராளியை திகைக்க வைப்பது போல இந்த டிராமாவிற்கான வியூகத்தை சிறப்பாக அமைத்தார் கமல். ‘இப்ப பாருங்க. தனலஷ்மியை என்ன பண்ணப் போறேன்..!” என்கிற மாதிரி கமல் பாவனையாக ஆரம்பிக்க சிலருக்கு உற்சாகம் ஏற்பட்டது. குறிப்பாக அசிம். சில நிமிடங்களில் ரிவர்ஸ் கியர் போட்டு ‘அப்ப தனலஷ்மிதான் தள்ளி விட்டாரா?’ நல்லா யோசிச்சு சொல்லுங்க’ என்று கமல் அழுத்திக் கேட்டவுடன் சிலர் உஷாராகி விட்டார்கள். அசிம் கூட தயங்கி ‘ஆடு திருடு போற மாதிரி கனவு கண்டேங்கய்யா’ என்கிற மோடிற்கு போய் விட்டார்.

பின்பு தனலஷ்மியை நோக்கி “அவ்ளோ தைரியமா... உங்களுக்கு. வெளில போகத் தயாரா..?” என்பது போல் கமல் கேட்டவுடன், முதலில் சற்று ஜெர்க் ஆனாலும் “போடுங்க. சார்.. பார்த்துடலாம். நான் நிச்சயம் தள்ளி விடலை” என்று உறுதி காட்டினார் தனலஷ்மி. குறும்படம் திரையிடப்பட்டவுடன் ஜனனி பக்கம் வண்டி செல்வது போல தோன்றியது. ஆனால் கடைசியில் பிராது தந்த ஷெரினாவின் மீதே வண்டி மோதி நின்றது, எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் டிவிஸ்ட்.

‘ஷெரினா தள்ளப்பட்டாரா?’ – ரகளையாக நடந்த விசாரணைக் கமிஷன்

முதலில் குயின்சியை நோக்கி ‘டாஸ்க்லாம் எப்படி போச்சு?’ என்று தூண்டிலைப் போட்டார் கமல். ‘சிலருக்கு காயம் பட்டதுங்கய்யா.. அதுதான் வருத்தம்’ என்று குயின்சி மையமாகச் சொல்ல, “என்ன ராபர்ட்.. அது மனக்காயமா.. உடல் காயமா?” என்று வண்டியை அந்தப் பக்கம் திருப்பினார் கமல். ராபாட்டும் மையமாக பதில் சொல்ல, “ஷெரினா. பாதிக்கப்பட்ட நீங்க சொல்லுங்க..” என்று அந்தப் பக்கம் சென்று, ஷெரினா பதில் சொல்லி முடிப்பதற்குள்.. ‘நீங்க கொஞ்சம் இருங்க வரேன்.. என்ற கமல், தன் டார்க்கெட்டை ஃபோகஸ் செய்து “அசிம்.. ஒரு ஐ விட்னஸ் வேணும். சாட்சிக்கூண்டு வர்றீங்களா” என்று அவரை ஏற்றி பிறகு ‘நீங்க இருங்க.. ஷெரினா நீங்க சொல்லுங்க’ என்று வீடியோ கேம் மாதிரி கியரை மாற்றி மாற்றி ஆடிய விதம் இருக்கிறதே?!.. அட்டகாசம்.

குறும்படம் - பிக் பாஸ்
குறும்படம் - பிக் பாஸ்
‘தனலட்சுமிதான் தள்ளினார்’ என்று முன்பு தீர்மானமாக ஆத்திரப்பட்டவர்கள் எல்லாம் இப்போது மெல்ல மழுப்ப ஆரம்பித்தார்கள். ‘அதாவது.. டிரையின் மாதிரி நாங்க நின்னுட்டு இருந்தோம்’ என்று அசிம் கதை சொல்ல “நானும் அப்படித்தான் நெனச்சேன். இப்ப எனக்கு உண்மை தெரிஞ்சா போதும்’ என்று ஷெரினாவும் பின்வாங்கினார்.

சாட்சி சொல்ல வந்த ஏடிகேவின் நிலைமைதான் பாவம். ஏறத்தாழ பாபநாசம் திரைப்பட டெக்னிக்தான். தனலஷ்மியை நோக்கி அசிம் கோபமாக கத்திக் கொண்டிருந்ததைப் பார்த்து ‘தனலஷ்மிதான் தள்ளி விட்டார்’ என்று அவர் நினைத்து விட்டார். ஏடிகேவின் தலைக்குள் மட்டுமல்ல, அந்த வீட்டில் உள்ள பலரின் தலைக்குள் அசிம் விதைத்த விதை இது. எனவேதான் அந்த வீட்டில் ஏறத்தாழ தனியாக நின்று தனலஷ்மி போராட வேண்டியிருந்தது. ‘சாட்சி கிடைக்கட்டும். அப்புறம் இருக்கு உங்களுக்கு ’ என்று தன்னுடைய மனக்குமுறலை அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. விக்ரமன் போன்றவர்கள் மட்டுமே தனலஷ்மிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

தலைகீழ் நிலைமையால் அதிர்ஷ்டசாலியான தனலஷ்மி

ஆரம்பத்தில் மனஉளைச்சலைத் தந்தாலும் இந்த டிராமாவினால் அதிக பயனைப் பெற்றவர் தனலஷ்மிதான். ஆரம்பத்தில் முத்துவுடன் அவர் இட்ட அடாவடியான சண்டை காரணமாக கணிசமான பார்வையாளர்களின் அதிருப்தியை அவர் சம்பாதித்துக் கொண்டார். தனலஷ்மி வெளியேறக்கூடும் என்கிற நிலைமை கூட அப்போது இருந்தது. ஆனால் இப்போதோ நிலைமை தலைகீழ். அசிம் அநாகரிகமாக கத்திய போது தனம் காட்டிய பொறுமைதான் அவருக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்தது எனலாம். “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்.. ஆனா கைவிட மாட்டான்” என்கிற வசனம் மாதிரி ஆகி விட்டது.

தனலஷ்மி
தனலஷ்மி

இந்த டிராமா அசிமிற்கும் ஷெரினாவிற்கும் அவரை ஆதரித்தவர்களுக்கும் பூமராங் போல திருப்பி வந்து தாக்கியது. ‘தனலஷ்மிதான் தள்ளி விட்டாங்கன்னு நம்பறவங்க யாரு” என்று அவர்களை ஒன்று திரட்டிய கமல், பின்பு குறும்படத்தின் மூலம் அவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். “நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கலாம். ஆனால் சாட்சி சொல்கிறவர்கள் கண்களைக் கட்டிக் கொள்ளக்கூடாது” என்று கமல் வைத்த குண்டூசி குத்தல் அற்புதம்.

‘ஷெரினாவை யார் தள்ளி விட்டார்கள் என்பதை விடவும் ‘தனலஷ்மியால் இந்த விபத்து நிகழவில்லை’ என்று நிரூபிப்பதுதான் கமலின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஏனெனில் ஷெரினாவை யாரும் திட்டமிட்டு தள்ளவில்லை. கூட்ட நெரிசலில் நிகழ்ந்த தற்செயல் விபத்துதான் அது. விக்ரமனும் ஆரம்பத்தில் இருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

குறும்படத்தின் மூலம் கிடைத்த நீதி

‘தான் நிரபராதி’ என்பது குறும்படத்தின் மூலம் வெளிப்பட்ட ஆரம்பக் கணத்திலேயே சந்தோஷக் கூச்சலுடன் விக்ரமனைச் சென்று அணைத்துக் கொண்டார் தனலஷ்மி. அதுவரை அவர் சிரமப்பட்டு தேக்கி வைத்த உளைச்சல் எல்லாம் விடுபட்ட தருணம் அது. “பிக் பாஸ்.. ஏன் எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க.. பதில் சொல்லாட்டி நான் சாப்பிட மாட்டேன்” என்றெல்லாம் காமிராவை நோக்கி அவர் தனிமையில் அழுததற்கான விடை இன்று தெரிந்து விட்டது. ‘பொறுத்தார்.. பூமியாள்வார்’ என்பதே இதன் நீதி. சைடு கேப்பில் தப்பிய ஜனனி ‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு விட்டிருப்பார்.

‘விளையாட்டிற்கான ஸ்பிரிட் இல்லாமல் ‘டீம் பாலிட்டிக்ஸ்’ ஏற்பட்டதுதான் இந்த டிராமாவிற்கான மூல காரணம். ‘தனலட்சுமிதான் தள்ளினார்’ என்கிற விதையை அழுத்தம் திருத்தமாக அசிம் விதைத்தற்கு காரணம் ‘அணி மனப்பான்மை’தான். அவரின் பேச்சை கண்மூடித்தனமாக மற்றவர்கள் நம்பினார்கள். ஷெரினாவும் அதை நம்பினார்.

‘அசிமிற்குத் தொடர்ந்து கிடைத்த எச்சரிக்கை அம்புகள்’

பிரேக் முடிந்து திரும்பிய கமல், குறும்படம் போடுவதற்கு முன்னால், ‘அவசரமாக அகம் டிவி வழியே’ என்று சொன்னது நல்ல குறும்பு. “விழுந்துட்டு இருக்கறவங்க எப்படி தள்ளமுடியும்?’ என்கிற ஆதாரமான கேள்வியின் வழியாக தனலஷ்மி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டவுடன் அடுத்த பிராதை தானே முன் வந்து எடுத்தார் கமல். அது ஷிவினின் உடல்மொழியை அசிம் கிண்டலடித்த விதம். “ஷிவினுக்கும் அடிபட்டிருக்கலாம்.. ஆனா அவங்க கம்ப்ளெயிண்ட் பண்ணல. அதுதான் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்.. ஆனா அவங்களை சுட்டிக் காட்டிய விதம் தவறு. அதை அவங்க சரியா எதிர்த்து நின்னாங்க. ஷிவினின் மூலம் இந்தச் செய்தியை மற்றவர்களுக்கும் நான் சொல்றேன். அந்தச் சகோதரிகளுக்கு ஒரு அண்ணன் இருக்கான்” என்று சொல்லி பலத்த கைத்தட்டலைப் பெற்றார் கமல். தனக்கான ஆதரவைக் கேட்டவுடன் நெகிழ்ச்சியால் கண்கலங்கினார் ஷிவின்.

“சார். நான் அந்த மாதிரி நோக்கத்துல கிண்டல் பண்ணலை..” என்று அசிம் விளக்கம் அளித்தாலும், ஒருவரின் உடல்மொழியை தானும் செய்து காட்டி கிண்டலடிப்பது அசிமின் தொடரும் பழக்கமாக இருக்கிறது. எனில் தன்னிச்சையாக அவரின் ஆழ்மனதில் அத்தகைய பிற்போக்கு எண்ணங்கள் உறைந்திருக்கலாம். “உங்க சுவிட்சு எங்க இருக்குன்னு உங்களுக்குத் தெரியுது.. கவனமா இருங்க. ஷார்ட் சர்க்யூட் ஆகிடப் போகுது.. மழைக்காலம் வேற” என்று நையாண்டி ஊசிகளை கமல் அடுக்கிக் கொண்டே போன பாணி ரகளை. “தீபாவளியை நான் லேட்டா கொண்டாடிட்டேன் போல’ என்று இறுதியில் கிண்டலான பின்குறிப்பு வேறு.

அசிம்
அசிம்

அசிமை மிக திறமையாக கார்னர் செய்து விட்ட பிறகு “நீங்க எந்த விளக்கமும் தர வேணாம். என்ன சொல்லப் போறீங்கன்றதை போன வாரமே பார்த்துட்டோம்... இதுதான் உங்க ஸ்ட்ராட்டஜியா-ன்றதை தெளிவா சொல்லிடுங்க. பிறகு மக்கள் பார்த்துப்பாங்க.. ஆனா உங்க மகன் இதை பார்த்துட்டு இருக்கான். அவனுக்கு நீங்கதான் ஹீரோ. “நான் உங்களை விமர்சிக்கலை. கேலி செய்யலை. கண்டிக்கறேன்” என்று வாழைப்பழத்தில் ஊசியை அல்ல, கடப்பாறையையே இறக்கி அசிமிற்கு கமல் உபதேசம் செய்த பாணி நன்று. அப்போதும் கூட அசிமும் மற்றவர்களும் தானாக மன்னிப்பு சொல்ல முன்வரவில்லை. ‘சாரி சொல்லுங்க’ என்று அதையும் கமலே சொல்ல வேண்டியிருந்தது. ‘ஓகே. ஸாரிம்மா..’ என்று மேம்போக்காக சொன்னார் அசிம்.

ஷெரினா
ஷெரினா

“முதல்ல மயங்கி விழுந்தீங்க. பிறகு ஆட வந்தீங்க. அசிம் அத்தனை வெயிட் போட்டு உங்க மேல உக்காந்தது கூட உங்களுக்குப் பிரச்சினையில்ல’ என்று ஷெரினாவையும் போட்டு வறுத்தெடுத்தார் கமல். ஒருவேளை ஷெரினா டிராமா ஆடியிருந்தால், இந்த வறுத்தெடுத்தல் அவருக்குப் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே ஷெரினாவின் உடல்நிலை மோசமாக இருந்திருந்தால்?.. இந்தச் சந்தேகத்தின் பலனை கமல் தந்திருக்க வேண்டும். மாறாக “உடம்பு கொஞ்சம் சரியானவுடன் ஆட வந்தேன்” என்று ஷெரினா தந்த விளக்கத்தை பாதியிலேயே கமல் நிறுத்தியது நெருடல். ‘ஷெரினா ஆடிய டிராமா’ என்று சமூகவலைத்தளங்களில் பல கிண்டல்கள் வந்தன. அதையே கமலும் செய்யக்கூடாது. எனில் சோஷியல் மீடியாக்களின் பிரஷர் தாங்காமல் கமலும் செய்தார் என்றாகி விடும். பொதுவாக கமல் அப்படிச் செய்பவர் அல்ல.

நார்மல் ஸ்பீடு, ஹைஸ்பீட், ஸ்லோ மோஷன் என்று பல்வேறு விதங்களில் வீடியோ பார்த்தும் “புரியல. எனக்குப் புரியல.. குழப்பமா இருந்தது. நான் ஏதாவது தப்பு செஞ்சிட்டேன்னான்னு என்னை மட்டும்தான் பார்த்திட்டு இருந்தேன்’ என்று ஆயிஷா சொன்னது நெருடலாக இருந்தது. ஆரம்பத்தில் வேண்டுமானாலும் தன்னை அவர் ஃபோகஸ் செய்து பார்த்திருக்கலாம். அதற்குப் பிறகு? ஏனெனில் ‘தனலஷ்மி இதில் மெயின் குற்றவாளியாக கருதப்படும் போது அதையும் சோ்த்தல்லவா பார்த்திருக்க வேண்டும். “ஆமாம். சார் தனலஷ்மி மீது தப்பில்லை’ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்?!

மீண்டும் ஒரு பொம்மை டாஸ்க்

ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘ரச்சிதா காப்பாற்றப்பட்ட’ இனிப்பான செய்தியைச் சொல்லி அவரை குதூகலப்படுத்தினார். மற்றவர்களை விடவும் ‘மூக்குத்தி ரசிகரான’ ராபர்ட்டிற்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம். ‘இத்தனை பேரு இருக்கும் போது அது ஏண்டா. அவன் என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்டான்?” என்கிற கரகாட்டக்காரன் காமெடி மாதிரி “ஏன்.. கமல் சார்.. என்னை மட்டும் கேட்டாரு.. எனக்குப் புரியலை” என்று புலம்பிக் கொண்டிருந்தார் ஆயிஷா. தேவையில்லாத டென்ஷனை மண்டையில் ஏற்றிக் கொள்வது அவருடைய கெட்ட வழக்கங்களில் ஒன்று.

கமல்
கமல்

ஹவுஸ்மேட்ஸ்களின் உருவம் தாங்கிய பொம்மைகளை ‘ஸ்டோர் ரூமில்’ இருந்து எடுத்து வரச் செய்த கமல் “ஒருவரைத் தேர்ந்தெடுத்து நீங்கள் சொல்லத் தயங்கிய, சொல்ல விரும்பும் செய்தியைச் சொல்லலாம்’ என்று வாய்ப்பளித்தார். இதில் அசிம் பொம்மையை மட்டும் தானே வைத்துக் கொண்டது நல்ல விஷயம். இல்லையென்றால் அசிமை நோக்கியே நிறைய அம்புகள் பறந்திருக்கும் என்று அவர் யூகித்தது சிறப்பு. ஒருவரைக் கண்டிக்கும் அதே வேளையில் அவர் மீது கரிசனமும் வேண்டும் என்பதற்கான உதாரணம் இது. “நீங்க கண்ணாடியைப் பார்த்து பேசிக்கங்க” என்று அசிமிற்கு கமல் செய்த உபதேசம் சிறப்பு.

இந்த டாஸ்க்கிற்கு இடையில் ‘ஆயிஷா’ காப்பாற்றப்பட்ட செய்தியை கமல் சொல்ல, டென்ஷன் நீங்கி அவர் சற்று முகம் மலர்ந்தார். “சில விஷயங்களை திரும்பப் பேச வேண்டியிருக்கு. நாளைக்கு வரேன்” என்று மெலிதான எச்சரிக்கையுடன் கமல் விடைபெற்றார். ஆயிஷாவின் பொம்மையை நோக்கி ராபர்ட் சொன்ன ஒரு செய்தி காரணமாக, மீண்டும் டென்ஷன் ஆன ஆயிஷா, அவரிடம் சென்று சங்கடத்துடன் விளக்கம் தந்தார்.

ரச்சிதா
ரச்சிதா

‘தலைவர் விளையாடிட்டாரு. என்னை வெச்ச செஞ்சுட்டாரு’ என்று அசிமே பாராட்டும்படியாக இன்றைய டிராமா நடந்து முடிந்தது. ‘இந்த வாரம் யார் வெளியேறியது?’ என்பது அடுத்த எபிசோடில் தெரியும். வழக்கம் போல அது பொதுவில் கசிந்து விட்டது. ‘அசலான’ காரணத்தை நிகழ்ச்சி பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வோம்.