Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 26: நீலாம்பரி தெரியும், ஏகாம்பரி தெரியுமா? அடேங்கப்பா ஜனனிக்கும் கோபம் வருமா?!

பிக் பாஸ் 6, நாள் 26

நாடகம் முடிந்ததும், அமுதவாணன் அணிக்கு 10 புள்ளிகள் தந்து அசத்தினார் மகேஸ்வரி. நியாயமான தீர்ப்பு. அவர்களின் நாடகம் அந்த அளவிற்கு ரகளையான நகைச்சுவையுடன் இருந்தது. பதிலுக்கு மகேஸ்வரியின் அணிக்கு 5 புள்ளிகள் தந்தார் ரச்சிதா. அதுவே அதிகம்தான்.

Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 26: நீலாம்பரி தெரியும், ஏகாம்பரி தெரியுமா? அடேங்கப்பா ஜனனிக்கும் கோபம் வருமா?!

நாடகம் முடிந்ததும், அமுதவாணன் அணிக்கு 10 புள்ளிகள் தந்து அசத்தினார் மகேஸ்வரி. நியாயமான தீர்ப்பு. அவர்களின் நாடகம் அந்த அளவிற்கு ரகளையான நகைச்சுவையுடன் இருந்தது. பதிலுக்கு மகேஸ்வரியின் அணிக்கு 5 புள்ளிகள் தந்தார் ரச்சிதா. அதுவே அதிகம்தான்.

பிக் பாஸ் 6, நாள் 26
இந்த எபிசோடின் மூலம் சில நல்ல விஷயங்கள் நடந்தன. ஷெரினா, குயின்சி, நிவா போன்றவர்கள் அந்த வீட்டில்தான் இன்னமும் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தது. ‘வேலையும் செய்யறதில்ல... டாஸ்க்கும் பண்றதில்ல’ என்கிற கேட்டகிரியில் ராம் ஒய்யாரமாகப் படுத்திருப்பதைக் கூட நம்மால் காண முடிகிறது.

ஆனால், இந்த கதிரவன்? ‘நிதானமாக இருப்பார்; யோசித்துப் பேசுவார்...’ என்பதைத் தவிர அவரைப் பற்றிய ஒரு சித்திரமும் நமக்குத் தெரியவில்லை. தலைமறைவு ஆசாமி போலவே உலவுகிறார். பிரச்னையில்லாத ஆசாமி என்பதால் அவரை யாரும் பெரிதாக நாமினேட் செய்வதில்லை போல!

நாள் 26-ல் நடந்தது என்ன?

எங்காவது சர்ச்சை நிகழ்ந்தால் செய்தி சேனல்கள் அதை ஒளிபரப்பும். ஆனால் செய்தி சேனலுக்குள்ளேயே சண்டை வந்தால்? ஆம், அசிமிற்கும் மகேஸ்வரிக்கும் இடையேயான பஞ்சாயத்தின் சூடு இன்னமும் குறையவில்லை. எதிரணிக்கு ஆதரவாக அசிம் சாட்சி சொன்னார் என்பது மகேஸ்வரியின் கோபம். ‘நியூஸ் வாசிக்க வாய்ப்பு தரவில்லை’ என்பதால்தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டாரோ என்றும் மகேஸ்வரிக்குச் சந்தேகம்.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26

‘பூமராங் எஃபெக்ட்டில் சிக்கிய அசிம்’

"இதையெல்லாம் எப்படி நீயா முடிவு பண்ணலாம். உனக்கு ஜட்ஜ்மெண்ட் பண்ணவே தெரியல. அந்த விஷயத்துல நீ ஜீரோ” என்று அசிமும் பதிலுக்குப் பொரிந்து தள்ளினார். இதில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். “டீமிற்காக என்னால பொய் சொல்ல முடியாது. எனக்குத் தோணினதைத்தான் பேச முடியும்” என்று கத்திய தனலக்ஷ்மியிடம் ‘அணி ஒற்றுமை வேண்டும்’ என்று முன்பு கண்டித்தார்கள். இதே அசிம் தொடர்பாகத்தான் இந்தச் சர்ச்சை எழுந்தது.

இப்போது அதே மாதிரியான சர்ச்சையில் அசிம் சிக்கியதை ‘பூமராங் எஃபெக்ட்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அசிம் சாட்சி சொன்னதைத் தவறென்று சொல்ல முடியாது. அதில் உண்மை இருந்தது. ‘ஸ்டூடியோவின் வாசலில் மக்கள் திரளாகக் கூடியிருக்கிறார்கள்’ என்பதை விக்ரமனும் அமுதவாணனும் வெவ்வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கவனிக்கத் தவறியது மகேஸ்வரி மற்றும் மைனாவின் பிழை.

“நாங்க அப்படிச் சொன்னோமே?” என்று பாயின்ட்ஸ் தந்த நேரத்தில் விக்ரமன் விளக்கிய போது ‘அப்படியா?’ என்று மகேஸ்வரி ஒரு நொடி ஜெர்க் ஆனதைக் கவனித்திருக்கலாம். எனில் தன் தவற்றை அவர் உணர்ந்து “ஓகே... பாயின்ட்ஸ் கூட்டித் தரேன்” என்று மாற்றியிருந்தால் பிரச்னை பெரிதாக இருந்திருக்காது. கலை நிகழ்ச்சிகள் தொடர்பாக பாயின்ட்ஸ் தரும் போது இரு அணிகளும் தாராளமாக இருந்ததால் அப்போது பிரச்னை எழவில்லை. ஆனால் ‘செய்தி’ டாஸ்க்கில்தான் முட்டல். தாங்கள் நல்ல மதிப்பெண் தந்தும், எதிரணி வேண்டுமென்றே குறைத்து விட்டார்களே என்று ‘அந்த டிவி’ அணிக்கு வருத்தம்.

மகேஸ்வரியின் தோழி என்பதால் மைனா அவருக்கே நிறைய சப்போர்ட் செய்கிறார் என்று அசிம் குற்றம் சாட்டுவதில் சற்று உண்மை இருப்பது போல் தெரிகிறது. அசிம் தன்னிடம் கடுமையாகப் பேசியதால், வீட்டை விட்டு வெளியில் சென்ற மைனா “பொண்ணுங்கறதாலதான் அவன் இப்படிப் பண்றானா?” என்று அழுகையுடன் கேட்க “இது உங்களுக்கு மட்டும் நடக்கறதில்ல” என்று ஆறுதல் சொன்னார் குயின்சி. அசிமின் ஆணாதிக்கத்தன அட்ராசிட்டிகள், பெண்களிடையே அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26

"நீங்க உள்நோக்கத்துடன்தான் பாயின்ட்ஸ் தந்தீங்க” என்று விக்ரமன் மல்லுக்கட்ட, "அது மக்களுக்குத் தெரியும்” என்று முடித்துக் கொண்டார் மகேஸ்வரி. அசிமிடம் போட்டுக் கொடுத்ததன் மூலம் இந்த விஷயத்தைப் பெரிதாகப் பற்ற வைத்து ‘அரசியல் சாணக்கியத்தனம்’ செய்துவிட்டார் விக்ரமன்.

‘நீச்சல் குள கலவரம்’ – மன்னிப்பு கேட்டு சண்டை போட்ட ஜனனியும் குயின்சியும்

தனது நடனத்தை விடவும் குயின்சியின் நடனம் அதிகம் பாராட்டப்பட்டதைக் கவனித்த ஜனனியின் முகம் தொங்கிப் போயிற்று என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இருவருக்கும் இடையே ஒரு விரோதப் புகை எழ ஆரம்பித்திருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இது சரவெடியாகவும் மாறக்கூடும். அதுதான் இப்போது நடந்தது.

நீச்சல் குளத்தில் சிலர் மிதந்து கொண்டிருக்க, குளித்து விட்டு உள்ளே சென்ற ஜனனி, குளிர் தாங்காமல் அவசரத்திற்கு அங்கிருந்த டவலை எடுத்து உபயோகித்து விட்டார். ‘அது தன்னுடைய டவல்’ என்று தவறாகப் புரிந்து கொண்ட குயின்சி ‘அதை ஏன் எடுத்தே?’ என்று பொதுவில் ஆட்சேபம் தெரிவித்து விட அதனால் ஜனனியின் மனம் புண்பட்டு விட்டது. “என் டவலை யார் தொட்டாலும் எனக்குப் பிடிக்காது” என்பது குயின்சியின் விளக்கம்.

இதை இருவரும் சாதாரணமாகப் பேசியிருந்தால் கூட சுமுகமாக முடிந்திருக்கலாம். ஆனால் ‘நான்தான் சாரி... மன்னிச்சிருங்க’ என்று இருவரும் பரஸ்பரம் சொல்லிச் சொல்லியே முட்டிக் கொண்டது ஒருவகையில் நகைச்சுவையாக இருந்தது. “நான் சாரி சொல்லத்தான் வந்தேன்” என்பதின் மூலம் இந்த விஷயத்தை குயின்சி மறுபடி மறுபடி சுட்டிக் காட்டுகிறார் என்று புரிந்து கொண்ட ஜனனிக்கு மிகையான கோபம் வந்தது. “உன் கால்ல விழறேன்” என்று நாடகத்தனமாக விழுந்தார். பிறகு கோபத்தில் தேநீர்க் கோப்பையைக் கீழே வீசினார். ஜனனி அத்தனை ‘ஓவர்ஆக்ட்’ செய்திருக்க வேண்டியதில்லை. உடைந்த கோப்பையை எடுக்க வந்த நிவாவையும் கோபத்துடன் அப்புறப்படுத்தினார் ஜனனி.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26

“இரண்டு பேருமே இப்ப சூடா இருக்கீங்க... அப்புறம் நிதானமா பேசுங்க..." என்று மகேஸ்வரி செய்து வைத்த சமாதானம் சரியானது. ஆனால் பிறகு உள்ளே வந்த தனலக்ஷ்மி, “பாரு... உன்னால அவ ஹர்ட் ஆயிட்டா” என்று சொல்லி குயின்சியை இன்னமும் டென்ஷன் ஆக்கினார்.

"நான் பல விஷயங்களை காமெடியா சிரிச்சிக்கிட்டே கடந்து போயிடுவேன். ஆனா என்னை ஹர்ட் பண்ணா மறக்கவே மாட்டேன்” என்று பிறகு தனலக்ஷ்மியிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஜனனி. மிக அமைதியாக இருப்பவர்களுக்குக் கோபம் வந்தால் என்னவாகும் என்பதற்கு ஜனனியின் செய்கைகள் ஓர் உதாரணம். ஆக... குயின்சிக்கும் ஜனனிக்கும் இடையே இனி அதிக பஞ்சாயத்துக்கள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

‘ஏகாம்பரி புள்ளைங்க’ – அசத்திய அமுதவாணன் அணி

‘பொம்மாயி... பொம்மாயி’ என்கிற பாடலுடன் நாள் 26 விடிந்தது. குயின்சிக்கும் ஜனனிக்கும் இடையில் நடந்த பிரச்னையைப் பற்றி வீட்டில் ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஆட்டம் சூடு பிடிக்குது பிகிலு’ என்று பன்ச் வசனம் பேசினார் ஆயிஷா. ‘சாப்பிடறது... தூங்கறது' தவிர வேறு எதிலும் ஆர்வம் காட்டாத ராமைப் பற்றி ‘இப்பத்தான் சப்ஜெக்ட்கிட்ட இருந்து லைட்டா அசைவு தெரியுது’ என்பது போல் ஜாலியான கமென்ட்கள் நிறைய வந்தன. ‘எதுனா சொல்லிக்கங்க... எனக்கென்ன’ என்கிற ஜென் மோடில் இருக்கிறார் ராம்.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26
இரண்டு சேனல்களுக்கிடையில் மீண்டும் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. ‘முட்டைக் குடும்பம்’ என்றொரு ‘நகைச்சுவை’ நாடகத்தை ‘இந்த டிவி’ அணி ஆரம்பித்தது. எல்கேஜி மாணவர்கள் கூட இதை விடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். அந்த அளவிற்கு மருந்துக்குக் கூட சுவையில்லாத நிகழ்ச்சியாக இது இருந்தது. இதற்கு நேர்மாறாக அடுத்து வந்த ‘அந்த டிவி’ கலக்கிவிட்டார்கள். ஸ்கிரிப்ட்டில் அமுதவாணனின் பங்களிப்பு நிறைய இருந்திருக்கலாம்.
‘ஏகாம்பரி புள்ளைகள்’ என்கிற நாடகத்திற்கு புரோமோவெல்லாம் போட்டு அசத்தினார்கள். ‘படையப்பா’ நீலாம்பரியின் சாயலில் வந்த ரச்சிதா, முடியும் வரை சீரியஸ் மோடை விடாமல் பின்பற்றினார். சீரியலில் நடித்த பழக்கம் போலிருக்கிறது. ஆனால் விக்ரமனோ, ஆடியன்ஸ் கமென்ட்டைக் கேட்டு சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பை அடக்க முடியாமல் தத்தளித்ததைப் பார்க்கச் சுவாரஸ்யமாக இருந்தது. ‘என்ன டயலாக்கை மறந்துட்டியா?’ என்று அப்போதைக்குத் தோன்றும் கமென்ட்டையும் டைமிங்காக இணைத்து ரகளையாக்கினார்கள்.

தனது இரண்டு மகன்களும் சொல் பேச்சு கேளாமல் காதல் திருமணம் செய்ததைக் கண்டு காண்டான ஏகாம்பரி "நீங்க இப்படிச் செய்வீங்கன்னு தெரியும். எனக்கு இன்னொரு புள்ள ஃபாரின்ல இருக்கான். அவன் என்னோட சொல் மீறமாட்டான்" என்று உரத்த குரலில் முழங்கினார். ‘யார் அந்த ‘ஃபாரின்புள்ள’?’ என்று பார்த்தால் ‘கீரிப்புள்ள’ மாதிரி விநோதமான விக்கை மாட்டிக் கொண்டு வந்து நின்றார் ஆயிஷா. மற்ற பிள்ளைகளாவது அம்மாவை எதிர்த்து திருமணம்தான் செய்து கொண்டார்கள். ஆனால் இவரோ வரும் போது தனது கர்ப்பிணி மனைவியையும் அழைத்து வந்து ஆசி வாங்கினார். இதனால் மனம் வெறுத்துப் போன ஏகாம்பரி, பெண்களின் தந்தையான ‘கண்ணப்பா’வுடன் செட்டில் ஆகி விடுவாரோ என்கிற சஸ்பென்ஸூடன் நாடகம் முடிந்தது. "என்னையாம்மா அடிக்க வரே” என்று சென்டிமென்ட் தந்தையாக ரகளை செய்தார் ராபர்ட். பாட்டியாக ஷிவினை மூலையில் அமர்த்தி வைத்துவிட்டார்கள்.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26
நாடகம் முடிந்ததும், அமுதவாணன் அணிக்கு 10 புள்ளிகள் தந்து அசத்தினார் மகேஸ்வரி. நியாயமான தீர்ப்பு. அவர்களின் நாடகம் அந்த அளவிற்கு ரகளையான நகைச்சுவையுடன் இருந்தது. பதிலுக்கு மகேஸ்வரியின் அணிக்கு 5 புள்ளிகள் தந்தார் ரச்சிதா. அதுவே அதிகம்தான்.

ஒருவழியாக இந்த வாரத்தின் டாஸ்க் முடிந்து ஒட்டுமொத்த புள்ளிகளின் மதிப்பை அறிவித்தார் பிக் பாஸ். ‘இந்த டிவி’ 46 புள்ளிகளும் ‘அந்த டிவி’ 50 புள்ளிகளும் பெற்றன. அமுதவாணனின் அணி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கான தகுதியை அமுதவாணன் பெற்றார்.

‘Best Performer... Worst Performer’ வாரயிறுதி பஞ்சாயத்தை ஆரம்பித்த பிக் பாஸ்

‘விக்ரமன் பாத்திரம் கழுவித் தரவில்லை’ என்கிற புகாரை ஷெரினா வைத்துக் கொண்டிருந்தார். “நீங்கதானே பாத்திரத்துல இருந்து உணவை மாத்திட்டு தரேன்னு சொன்னீங்க?” என்று ஷிவினிடம் விக்ரமன் கேட்க, அதற்கு டென்ஷன் ஆனார் ஷிவின். விக்ரமனுக்கும் ஷிவினுக்கும் இடையிலிருந்த அழகான நட்பில் இப்போது மெல்ல விரிசல் ஏற்பட்டு வருவதைக் கவனிக்க முடிகிறது.

‘டாஸ்க்கில் சிறப்பாகப் பங்கேற்ற இருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்கிற வாக்கெடுப்பில் மைனாவும் ராபர்ட்டும் தேர்வானார்கள். இருவரும் அடுத்த வாரத் தலைவர் போட்டிக்குத் தகுதியாகியிருக்கிறார்கள். அடுத்ததுதான் வில்லங்கமான ஆட்டம்.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26

‘டாஸ்க்கில் சரியாகச் செயல்படாத ஒரு மோசமான பங்கேற்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்கிற வாக்கெடுப்பில் அசிமும் மகேஸ்வரியும் ஒருவரையொருவர் பரஸ்பரம் சுட்டிக் காட்டியது எதிர்பார்த்ததுதான். மற்றபடி அசிம் மற்றும் ராமின் பெயர்கள் நிறைய முறை அடிபட்டன. கண் பிரச்னையைத் தாண்டியும் ராம் சும்மா இருக்கிறாரா என்கிற புகாரைச் சிலர் வைத்தார்கள். இதனால் தனலக்ஷ்மியிடம் கோபித்துக் கொண்டார் ராம். ‘இந்த வாரத்தின் மோசமான பங்கேற்பாளராக’ ராம் இருக்கக்கூடும் என்பதை நம்மாலேயே யூகிக்க முடியும் போது ராமால் அதை யூகிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம்தான்.

ராமிற்கும் அசிமிற்கும் சமமான வாக்குகள் வந்ததால் மறுவாக்கெடுப்பு வந்தது. தன்னுடைய வாக்கை தனலக்ஷ்மி மாற்றிக் கொண்டதால் ராம் இதில் தேர்வானார். அடுத்ததும் பிரச்னைக்குரிய தலைப்புதான். ‘வாரம் முழுவதும் சரியாக வேலை செய்யாத நபரை’ சொல்ல வேண்டும். இதில் விக்ரமனின் பெயர் நிறைய முறை சொல்லப்பட்டது. ‘பாத்திரம் கழுவும் அணி’ மீது இந்த வாரம் முழுக்கத் தொடர்ச்சியாகப் புகார் வந்து கொண்டே இருந்ததைப் பார்த்தோம். அந்த அணியின் தலைவராக இருந்தும் விக்ரமன் சரியாகக் கையாளத் தவறி விட்டார் என்பதைப் பலரும் புகாராகச் சொன்னார்கள்.

தனது முறை வந்த போது மகேஸ்வரியையும் மைனாவையும் குற்றம் சாட்டிய விக்ரமன், மகேஸ்வரியைத் தேர்ந்தெடுத்தார். ‘மகேஸ்வரி என்னிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார், அணியில் நடந்த குளறுபடிகளை மைனாவால் கையாள முடியவில்லை. நன்றாக ஸ்கிரிப்ட் எழுதிய அசிமை விட்டு விட்டு நிவாவிற்குச் செய்தி வாசிக்க வாய்ப்பு தந்தார்கள்’ என்றெல்லாம் விக்ரமன் புகார்களை அடுக்க, அடங்கிப் போயிருந்த ‘பிரேக்கிங் நியூஸ்’ சர்ச்சை மீண்டும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

பிக் பாஸ் 6, நாள் 26
பிக் பாஸ் 6, நாள் 26

ஆக, ராமும் விக்ரமனும் இந்த வாரம் சிறைக்குச் செல்வார்கள் என்பதுதான் இறுதித் தீர்ப்பு. மழை பெய்து கொண்டிருக்க, கார்டன் ஏரியாவின் தரையில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டு மழையை அனுபவித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா. ‘மழை உன் மேல் பெய்கிறது... ஆனால் எனக்கல்லவா குளிர்சுரம் வருகிறது?!’ என்கிற கவிதை மோடில் இருக்கும் ராபர்ட் “உடம்பு சரியில்லாமப் போயிடப் போடுது... எழுந்து வா" என்று பிரியத்துடன் ரச்சிதாவை அதட்டிக் கொண்டிருந்தார்.

இன்று பஞ்சாயத்து நாள். யார் யார் தலைகள் உருளப் போகிறதோ? இந்த வாரம் வெளியேறப் போவது ஷெரினாவா? பொறுத்திருந்து பார்க்கலாம்.