Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 28: லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமல்; மலையாள எவிக்ஷன் கார்டுடன் வெளியேறிய ஷெரினா!

பிக் பாஸ் 6, நாள் 28

"இந்த நிகழ்ச்சியோட முக்கியத்துவம் உங்களுக்கு ஏன் புரியலை? மைக்கை போட மாட்டேன்றீங்க. ரகசியம் பேசிக்கறீங்க. வேறு மொழில பேசறீங்க. டாஸ்க்கிற்கு வரச் சொன்னா டிலே பண்றீங்க. முப்பது நாட்களாகியும் இது தொடருது!"- எச்சரித்த கமல்

Published:Updated:

பிக் பாஸ் 6, நாள் 28: லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கமல்; மலையாள எவிக்ஷன் கார்டுடன் வெளியேறிய ஷெரினா!

"இந்த நிகழ்ச்சியோட முக்கியத்துவம் உங்களுக்கு ஏன் புரியலை? மைக்கை போட மாட்டேன்றீங்க. ரகசியம் பேசிக்கறீங்க. வேறு மொழில பேசறீங்க. டாஸ்க்கிற்கு வரச் சொன்னா டிலே பண்றீங்க. முப்பது நாட்களாகியும் இது தொடருது!"- எச்சரித்த கமல்

பிக் பாஸ் 6, நாள் 28
ஷெரினா வெளியேற்றப்பட்டது மக்கள் அளித்த நல்ல தீர்ப்பு. சக ‘மிக்சர்வாதிகளான’ குயின்சி, நிவா, ராம், கதிரவன், ஆயிஷா போன்றோர்க்கு இதுவொரு சிறந்த எச்சரிக்கை மணி. ‘என்னை விட்டுருங்க... நான் போறேன்’ என்கிற விரக்தியான மனநிலையில் இருக்கிறார் ஆயிஷா. கமல் சொன்ன கமென்ட் அவரை மிகவும் புண்படுத்திவிட்டதோ?!

ஆனால் ஆயிஷா உள்ளே தங்கியிருக்க, “மொழிதான் தடையா இருக்கு. இனி சமாளிச்சுடுவேன்" என்று பாதி நம்பிக்கையுடன் பேசிய ஷெரினா வெளியேறியது ஒரு முரண்நகை. திறமையுள்ளோர்க்கு எந்த இடத்திலும் மொழி பிரச்னையாக இருந்ததில்லை. அதிகம் கல்வியறிவு இல்லாத சாலையோர வணிகர்களைப் பாருங்கள். சூழலுக்கு ஏற்ப தங்களைப் பொருத்திக் கொள்வார்கள். அயல்மொழி பேசும் வாடிக்கையாளர் அதிகம் இருக்கும் பகுதி என்றால் அந்த மொழியில் திறமையாகப் பேச விரைவில் கற்றுக் கொள்வார்கள்.

‘என்னை விட்டா எப்படி விளையாடுவேன் தெரியுமா?’ என்று வெளியிலிருந்து ஒருவர் சொல்வது மிக எளிது. உள்ளே சென்று பார்த்தால் பல சிரமங்கள் இருக்கக்கூடும்தான். ஆனால் ‘பிக் பாஸ் விளையாட்டு இப்படித்தான் இருக்கும்’ என்று நன்கு அறிந்து உள்ளே வருபவர்கள் கூட, ‘முணுக்’ என்றால் உடைந்து விடுகிற அளவிற்கு உளவியல் பலவீனமாக இருப்பதைப் பார்க்க, சங்கடமாக மட்டுமல்ல, எரிச்சலாகக் கூட இருக்கிறது. ஆயிஷா அழுது கொண்டிருந்ததைப் பார்க்க அப்படித்தான் இருந்தது. எத்தனை பெரிய வாய்ப்பு! மிக எளிதாக உதறி விட்டுச் செல்லத் தீர்மானிக்கிறார். சற்றாவது போராட்டக்குணம் வேண்டாமா?!

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

நாள் 28-ல் நடந்தது என்ன?

கலக்கலான கறுப்பு ஆடையில் கம்பீரமாக அரங்கிற்குள் வந்தார் கமல். பார்வையாளர்கள் பிரியத்துடன் ‘பிறந்த நாள் வாழ்த்து’ சொன்னதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார். "நாம் ஒரு சிக்கலான சூழலில் தள்ளப்படும் போது எப்படி எதிர்கொள்கிறோம் என்பது, அந்தப் பாதையைச் செதுக்கும் அல்லது நம்மையே சிற்பமாகச் செதுக்கும்" என்று பிக் பாஸ் ஆட்டத்தின் விளைவுகளில் ஒன்றைச் சொன்ன கமல், அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.

“இன்னிக்கு நான் டிஆர்பி ரேட்டிங் பண்ணப் போறேன். ஒருத்தர் செலிபிரிட்டியா இருக்கணும். இன்னொருத்தர் நிருபரா மாறி கேள்வி கேட்கணும். ‘வழா வழா’ல்லாம் கூடாது. பளிச்சுன்னு கேட்கணும். ஆனா கண்ணியமா இருக்கணும். சுவாரஸ்யமா இல்லைன்னா நான் பெல் அடிச்சு நிறுத்திடுவேன்” என்று ‘இன்டர்வியூ’ டாஸ்க்கிற்கான முன்னெச்சரிக்கைகளை ஆரம்பத்திலேயே துல்லியமாகச் சொல்லி விட்டார் கமல்.

ஷெரினாவை ரவுண்டு கட்டி அடித்த ஏடிகே

‘யாருக்கு யாருடன் வாய்க்கா தகராறு இருக்கிறதோ’ மிகச் சரியாக அவர்களைத் தேர்ந்தெடுத்து ஜோடியாகக் கோத்து விட்டார் பிக் பாஸ். இதில் ஷெரினாவை அமர வைத்து ஏடிகே கேட்டதுதான் சரமாரியான மற்றும் சரியான கேள்விகளாக அமைந்தன. ‘மலையாளத்துல ஏன் பேசறீங்க... ஏன் பெஸ்ட் பிரெண்ட் கூட மட்டும் சுத்தறீங்க... தலைல அடிபட்டது உண்மையா, பொய்யா... இந்த வாரம் நீங்க போவீங்களா?’ என்றெல்லாம் ஏடிகே சரவெடியாக வெடிக்க, மற்றவர்களுக்கு உடனே பெல் அடித்த கமல், இந்தச் சமயத்தில் மட்டும் நிதானமாக அடித்து விட்டு ஏடிகேவைப் பாராட்டினார்.

இந்தச் சந்தர்ப்பத்தையும் விடாமல் “உங்ககிட்ட ராபர்ட் ஏதோ ஒரு செய்தி சொல்ல வர்ற மாதிரி ஏதாச்சும் தெரியுதா?” என்று தீயும் அளவிற்கு ரச்சிதாவிடம் ராபர்ட் கடலையை வறுக்க, ரச்சிதாவின் முகத்தில் சங்கடமும் வெட்கமும் பொங்கி வழிந்தது. சரியாக பெல் அடித்துக் காப்பாற்றினார் கமல். (ரொமான்ஸூல நம்மளயே மிஞ்சிடுவான் போல என்பது கமல் மைண்ட் வாய்ஸாக இருக்கலாம்!). நிவாவிடம் கதிரவன் முதல் கேள்வியை வைக்கும் முன்னரே பஸ்ஸரை அடித்து ‘இல்ல... பஸ்ஸர் வேலை செய்யுதான்னு பார்த்தேன்’ என்றது கமலின் அக்மார்க் குறும்பு.

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

ஆயிஷாவை அமர வைத்து ஷிவின் கேட்ட வரிசையான கேள்விகள், ஒரு தேர்ந்த பத்திரிகையாளரின் தொனியிலிருந்தது. "ஒரு பெரிய கனவோடு இங்க வந்திருப்பீங்க?” என்று ஷிவின் ஆரம்பிக்க “நான் தோத்துட்டேன். மென்ட்டலி, நான் நானா இருக்க முடியல. இங்க என்னை நிரூபிச்சுக்கிட்டே இருக்க வேண்டியிருக்கு. நிறைய விளக்கம் தர வேண்டியிருக்கு. சோர்ந்து போயிட்டேன். இப்படித் தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டேன்” என்றெல்லாம் ஆயிஷா சொன்னது பரிதாபம். “மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க முடிவு செய்வாங்க" என்று ஷிவின் சொன்னதையும் ஏற்காமல் “என்னை விட்டுருங்கய்யா. நான் போறேன்’ என்றே அனத்தினார் ஆயிஷா.

‘நீங்க நிகழ்ச்சிக்கு உபகாரம் செய்யலை’ – ஹவுஸ்மேட்ஸ்களை லெஃப்ட் அண்ட் ரைட் எகிறித் தள்ளிய கமல்

இந்த டாஸ்க் முடிந்ததும், “ஓகே... இப்ப நான் பேசப் போறேன்...” என்று ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடங்களுக்கு கமல் ஆற்றிய அந்த உரை இருக்கிறதே?! ஹவுஸ்மேட்ஸ்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார் என்று சொல்லலாம். அவர் பேச்சில் தீப்பொறி பறந்தது. ஆனால் அதில் சொல்ல வந்ததின் அழுத்தத்தோடு கரிசனமும் கண்ணியமும் கலந்து இருந்ததை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

”இது மக்களிடம் உங்களை நிரூபித்துக் கொள்வதற்காக தரப்பட்ட மேடை. ஒரு பெரிய வாய்ப்பு. ஆனா பலர் அசால்ட்டா இருக்கீங்க. நீங்கள் நிகழ்ச்சிக்கு உபகாரம் செய்யலை. நான் உட்பட, ஒவ்வொருத்தருக்கும் சம்பளம் தராங்க... அவங்க அவங்க வேலையை கரெக்ட்டா செய்ங்க. விதிகள் மீறப்பட்டால் ரெட் கார்ட் கொடுக்கக்கூட எனக்கு உரிமை இருக்கு. நான் இதுவரைக்கும் அப்படிச் செஞ்சதில்லை. கலைஞர்கள் வளரணும்னு நெனக்கறவன் நான். பல சிறந்த கலைஞர்கள் சின்னச் சின்ன காரணங்களால் தொலைந்து போயிருக்காங்க. எனக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு அப்ப கிடைக்கலையேன்னு தோணியிருக்கு. என் தகுதிக்கும் அப்பால் மக்கள் புகழ் தந்திருக்காங்க... எனக்கே அப்படித் தோணுதுன்னா... நீங்கள்லாம் எப்படி இருக்கணும்?...”

“...இந்த நிகழ்ச்சியோட முக்கியத்துவம் உங்களுக்கு ஏன் புரியலை? மைக்கை போட மாட்டேன்றீங்க. ரகசியம் பேசிக்கறீங்க. வேறு மொழில பேசறீங்க. டாஸ்க்கிற்கு வரச் சொன்னா டிலே பண்றீங்க. முப்பது நாட்களாகியும் இது தொடருது. இது கவனக்குறைவு இல்ல, அலட்சியம்! இனியும் இவற்றை நினைவுப்படுத்தும் சூழலை உருவாக்காதீங்க. இது மலையாள பிக் பாஸா மாறிட்டு வருது. நான் டபுள் சம்பளம் கேட்கலாம்ன்னு நெனக்கறேன்... எனக்கு மொழிகள் பிடிக்கும். மலையாளப் படங்கள்ல ஹீரோவா நடிச்சிருக்கேன். என்னையே மலையாளின்னு சிலர் நெனச்சிட்டு இருக்காங்க… ஆனா அந்தந்த சூழலுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்.”

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

“...ஷிவின், தனலட்சுமி... உங்களுக்கு இது புரியுதா? ரொம்ப சிரமப்பட்டு இங்க வந்திருக்கீங்க. இந்த வாய்ப்பை உதாசீனப்படுத்தாதீங்க... புலவருக்குக் கூட செருக்கு இருக்கக்கூடாதுன்னு நெனக்கறவன் நான்... இது சீரியஸ் வார்னிங். எனக்கு கோவிட் வந்தப்ப ஆஸ்பிட்டல்ல இருந்து கூட பேசியிருக்கேன். ஆனா உங்களுக்கு அலங்கார மேடைல இருந்து வருவதற்கு லேட்டாவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ‘என் மொழி... அப்படித்தான் பேசுவேன்'ன்னு சொல்றதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தித் திணிப்பிற்கு எதிரானவன் நான். ஆனா இந்திப் பாடல்களை, நடிகர்களை பிடிக்கும். அது வேற, இது வேற... உரிமைகள் வேற, கடமைகள் வேற... உங்க கடமைல இருந்து மீறாதீங்க. இந்த வாய்ப்பை லைட்டா எடுத்துக்காதீங்க!”

என்றெல்லாம் கமல் நீளமான உபதேசம் செய்து விட்டுப் போக சபையில் மயான அமைதி நிலவியது.

'மிக்சர் பாக்கெட்டுக்கள்... யார் யார்?’

ஒரு பிரேக் விட்டுத் திரும்பிய கமல் “ஓகே... ஸ்டோர் ரூம் பக்கம் போகலாமா?” என்று அங்கிருந்து பொருளை எடுத்து வரச் சொன்னார். ஒரு பெரிய குடுவை நிறைய வந்திருந்த வஸ்துவைப் பார்த்து விட்டு ‘பிரியாணியோ?!’ என்று மக்கள் ஆவலாகக் கூவ, பார்த்தால் அது மிக்சர். “நோகாம நுங்கு சாப்பிட்ட டாஸ்க் மாதிரி, இது ஓரமா உக்காந்து மிக்சர் சாப்பிடற டாஸ்க்... யார் அதைச் செய்யறது... ஆரம்பியுங்க” என்றார் கமல். “எனக்குத்தான் நிறைய வரும்ன்னு நெனக்கறேன்” என்று ஆரம்பத்தில் தானே பலிகடாவாக வந்து நின்றார் ராம். ஆனால் இறுதியில் நிவாவின் தட்டுதான் மிக்சரால் நிறைந்து இருந்தது.

‘மத்தவங்க கூட சரியாப் பேச மாட்டேன்றாங்க. தனியா போய் உக்காந்துக்கறாங்க. தனியா சாப்பிடறாங்க...’ என்பது நிவா மீது ‘மிக்சராக’ சொல்லப்பட்ட புகார்கள். “முதல் வாரத்துல நான் சாப்பிடற விதம் பார்த்து சிலர் கமென்ட் பண்ணாங்க... அது திரும்ப வரக்கூடாதுன்னுதான் தனியா போய் சாப்பிடறேன். அசல் இருந்திருந்தா என் கூட சாப்பிடுவான்" என்று கண் கலங்க விளக்கம் சொன்ன நிவாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. கமலின் கண்களிலும் அந்த அனுதாபத்தைக் காண முடிந்தது. “நிகழ்ச்சிக்குள்ள தைரியமா வந்த நிவா எங்க... இப்ப மிக்சர் தட்டோட கண்கலங்கற நிவா தேவையா? Be Bold” என்று கமல் தைரியமூட்ட சற்று ஆறுதல் அடைந்தார் நிவா.

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

“கதிரவனோட தட்டுதான் நிறையும்ன்னு எதிர்பார்த்தேன்” என்று சிரித்த கமல், பிறகு அவரை அழைத்து ‘எல்லாத்துக்கும் ஒரே மாதிரி ஸ்மைல் பண்ணாதீங்க’ என்று அதே போல் செய்து காட்டியது சுவாரஸ்யமான குறும்பு. "உங்ககிட்ட மாற்றம் ஏற்பட்டிருக்கு... அதனாலதான் மக்கள் காப்பாத்தியிருக்காங்க” என்கிற நல்ல தகவலைச் சொன்னார். கமலின் தலை மறைந்ததும் மக்கள் கொலைவெறியுடன் மிக்சர் மீது பாய்ந்தார்கள். பிக் பாஸ் அப்படிக் காய வைத்திருக்கிறார் போல. நிவா மீது தான் சொன்ன குறிப்பு தொடர்பாக அவரிடம் விளக்கம் தந்து கொண்டிருந்தார் அசிம்.

ഷെറീനയെ കമൽ പുറത്താക്കി

பிரேக் முடிந்து திரும்பிய கமல், ராமை அழைத்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினார். “நீங்க எடுத்துக்கற சில மாத்திரைகள் பற்றி டாக்டரிடம் விசாரித்தேன். அதனால் நிச்சயம் தூக்கம் வராது. அடுத்த வாரம் உங்களைப் பாத்திரம் கழுவும் அணியில் பார்க்க விரும்புகிறேன்” என்று சொல்ல “நான் நைட் டைம்ல பாத்திரம் கழுவறேன்” என்று ராம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். “விளக்கை அணைச்சப்புறம் செய்யறது தெரியாம போயிருக்கலாம். என்னதான் விளக்கம் சொன்னாலும் நீங்க பாத்திரம் விளக்கறதை நான் கண்களால் பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று கமல் வார்த்தை விளையாட்டால் உபதேசம் செய்த பிறகு அதை ஏற்றுக் கொண்டார் ராம்.

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

எவிக்ஷன் பட்டியலில் மீதமிருந்த ஷெரினா மற்றும் ஆயிஷாவைத் தனியாக அமர வைத்து ‘யார் போவாங்க?’ என்கிற வழக்கமான விளையாட்டை ஆரம்பித்தார் கமல். ‘நான் போறேன்... என்னை விட்டுருங்க’ பாட்டை ஆயிஷா மீண்டும் பாட “ஐம்பது சதவிகிதம் வாய்ப்பு இருக்குன்னு நெனக்கறேன். மொழிதான் எனக்குத் தடையா இருந்தது" என்று சற்று நம்பிக்கையாகப் பேசினார் ஷெரினா. ‘யார் போவாங்க?’ என்கிற கேள்விக்கு மற்றவர்களும் கலவையாகப் பதில் சொன்னார்கள்.

பிறகு எவிக்ஷன் கார்டை காட்டினார் கமல். பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே அதுவரை நடந்திராத ஒரு வேடிக்கை அதிசயம் அப்போது நிகழ்ந்தது. ஆம், ஷெரினாவின் பெயர் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கமல் காட்டியது அசாதாரணமான குறும்பு. தன்னுடைய பெயர் வரும் என்று எதிர்பார்த்த ஆயிஷா, இதனால் மனம் தளர்ந்து, உடைந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து கொண்டார். “நாங்க இருக்கறோம்... பார்த்துக்கறோம்” என்று மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.
பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

யாரிடமும் விடைபெறாமல் நேரடியாக மெயின் கேட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார் ஷெரினா. இந்த ஏமாற்றத்தை அவரால் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பது அதன் பொருள். மற்றவர்கள் பின்னால் ஓடிவர "தனியாத்தான் வந்தேன்... தனியாகவே போகிறேன்” என்று தத்துவம் பேசிய ஷெரினா “கதிரவன்... ஆயிஷாவைப் பார்த்துக்கங்க” என்றார். பிறகு சம்பிரதாயமான புன்னகையுடன் விடைபெற்றார். ஷெரினாவின் பிரிவு, தான் இன்னமும் நிகழ்ச்சியில் நீடிப்பது உள்ளிட்ட வருத்தங்களால் இன்னமும் அழுது தீர்த்துக் கொண்டிருந்தார் ஆயிஷா.

‘புத்தகப் பரிந்துரை’ – தேவையில்லாத எல்லைக் கோடுகள்

ஒரு பிரேக் விட்டு திரும்பிய கமல் ‘புத்தகப் பரிந்துரை’ பகுதிக்கு வந்தார். ‘உலகமெங்கும் எல்லைக் கோடுகள் ஒரு பிரச்னையா இருக்கு. அது தொடர்பா போர் நிகழ்ந்துட்டே இருக்கு. இந்த வாரம் நான் பரிந்துரை செய்யற புத்தகம் ‘Tried by Fire’ - பாலஸ்தீன தலைவர் யாசர் அரஃபாத்தின் வலதுகரமாக இருந்த ஒரு தளபதி. நல்ல படிப்பாளி. ‘intifada’ என்கிற குழந்தைகள் போர் செய்யும் திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தியவர். இவருக்கு ஒருநாள் குரானோட ஸ்பெஷல் எடிஷன் வருது. திறந்து பார்த்தா உள்ளே டிக் டிக் பாம். சட்டுன்னு தூக்கிப் போட்டுட்டாலும் கை விரல்கள், ஒரு கண் போயிடுது. அந்த பாமை அனுப்பியவர் மொசாட் (இஸ்ரேல் புலனாய்வு அமைப்பு) உயர் பொறுப்பில் இருந்த யூசி மகைமி... போர் சூடு தணிந்த பிறகு இருவரும் இணைந்து எழுதிய நாவல் இது..."

Tried by Fire
Tried by Fire

“...போர்கள் எத்தனை அநாவசியமானது என்பதை உணர வைக்கும் புத்தகம். வேடந்தாங்கல் பறவைகளுக்கு எல்லைகள் கிடையாது. ஆனால் அவற்றிற்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லை. அரசியல்வாதிகள் நினைத்தால் இந்த எல்லைகளை எளிதாக நீக்கி விட முடியும். தேச எல்லையைக் கடக்கும் வலிமை கலைக்கு உண்டு. இது மிக அரிதான புத்தகம். தமிழாக்கம் செய்யப்பட்டால் நன்றாக இருக்கும் என்பதால் இதைப் பரிந்துரைக்கிறேன்” என்றார் கமல்.

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

பிறகு மேடைக்கு வந்த ஷெரினாவிடம் மலையாளத்திலேயே சம்சரிக்கத் தொடங்கி ஆச்சரியப்படுத்தினார் கமல். மொழிக்கு தான் எதிரியல்ல என்பதை சபைக்கு உணர்த்திய தருணம். மலையாளத்தில் பதிலளிக்கத் தயங்கிய ஷெரினாவிடம் “உள்ளதான் அப்படிப் பேசக்கூடாதுன்னு சொன்னோம். அதோட ரூல் அப்படி” என்று தைரியம் சொன்ன கமல், பிறகு ஷெரினாவின் பயண வீடியோவைக் காட்டி வழியனுப்பி வைத்தார். இந்தச் சமயத்தில் ஒரு ஆச்சரியம். ஷெரினாவை வாசல் வரைக்கும் சென்று அவர் காரில் ஏறும் வரைக்கும் காட்டியது கேமரா. (கார் பிராண்டை காட்டுவதுதான் நோக்கம் போல!).

கமலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

மீண்டும் அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “ஓகே... நல்லா விளையாடுங்க...” என்று விடைபெற்றுக் கொள்வது போன்ற ஒரு பாவனையைச் செய்ய “கமல் சார்... உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! பிறந்த நாள் வாழ்த்துகள். கேக் அனுப்பியிருக்கோம்” என்று பிக் பாஸின் குரல் கேட்க, கார்த்தி – நாகார்ஜூனா நடித்த ‘தோழா’ படத்தில் வருவது போல அனைவருமே ‘சர்ப்ரைஸ்’ அடைந்தார்கள். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து சொன்னது சிறப்பான காட்சி. கமல் நடித்த படங்களிலிருந்து பாடல்களைப் பாடி ஹவுஸ்மேட்ஸ் வாழ்த்து சொல்ல “கேக்கை உள்ளே அனுப்பறேன். பிரியாணியும் உண்டு” என்று கமல் வைத்த பதில் மொய்க்காக வீட்டின் உள்ளே சந்தோஷக் கூச்சல் எழுந்தது.

பிக் பாஸ் 6, நாள் 28
பிக் பாஸ் 6, நாள் 28

எவிக்ஷனில் இருந்து தப்பியவர்களுக்காக டீஷர்ட் பரிசு வர “இதுக்காகவே நான் அடுத்த முறை நாமினேட் ஆகறேன்” என்று வேடிக்கை செய்தார் மைனா. கமல் சொன்னதைப் பின்பற்றி அப்போதே ராம் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. (குட் பாய்!).

வீட்டின் உறுப்பினர் எண்ணிக்கையில் இன்னுமொன்று குறைந்திருக்கிறது. மிக்சர் பாக்கெட்டுக்களாகவே நீடிப்பவர்கள் குறைந்து கொண்டே சென்றால் ஆட்டத்தில் இன்னமும் சூடு பிடிக்கும். நிகழ்ச்சி விறுவிறுப்பாகும். அடுத்த வாரத்தில் என்னென்ன ரணகளச் சம்பவங்கள் நடக்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.