கமலின் இந்த விசாரணை நாளில் பெரிதாக எந்தவொரு சூடும் சுவையும் இல்லை. ‘அப்புறம்.. என்னப்பா விஷயம்?’ என்று ஊரில் இருந்து வந்த பெரியப்பா மாதிரி நிதானமாக விசாரித்துக் கொண்டிருந்தார்.

தனலஷ்மி கடுமையான மனஉளைச்சலில் இருக்கிறார் என்று தெரிகிறது.. “என்னை விடுங்க.. நான் போறேன்..” என்று முதலில் உணர்ச்சிவசப்பட்டு விட்டு ‘அய்யய்யோ.. உண்மையாவே அனுப்பிடுச்சுடுவாங்களோ..’ என்று மைண்ட் வாய்ஸ் அலற, ‘மன்னிச்சுடுங்கய்யா. இப்படிச் செய்ய மாட்டேன்’ என்று பிறகு தாள் பணிந்து விடுகிறார்.
அதிகமாக கோபம் வருகிறவர்களுக்கு உள்ளே பயம் அதிகமாக இருக்கும் என்பார்கள். அதை மறைத்துக் கொள்ளத்தான் கோபம் என்கிற முகமூடி. ‘வீரம்ன்னா என்ன தெரியுமா.. பயமில்லாத மாதிரி நடிக்கறது’ என்பது குருதிப்புனல் திரைப்படத்தின் வசனம். தனலஷ்மியும் இந்த கேட்டகிரி போல் தோன்றுகிறது. அவர் அனுதாபத்திற்கும் அரவணைப்பிற்கும் உரியவர். சிரிப்புக்கு அல்ல.
நாள் 34-ல் நடந்தது என்ன?
நோ்த்தியான கலர் காம்பினேஷன் உடையில் அட்டகாசமாக வந்தார் கமல். கர்ச்சீப்பை விளையாட்டாக கழுத்தில் சுற்றிக் கொண்டிருந்ததை அரங்கின் உள்ளே வரும் போது எடுக்க மறந்து விட்டார் போலிருக்கிறது. “இறுதி இலக்கு வெறும் லாபமாக இருக்கக்கூடாது. வணிகத்தில் ‘அறம்’ இருந்தால் தரம் தானாக வந்து விடும்” என்று ‘ஸ்வீட் ஃபேக்டரி’ டாஸ்க்கையொட்டி பொழிப்புரை நிகழ்த்தினார். (என்ன பிக் பாஸ்.. உங்க காதுல விழுந்துச்சா?! அறம்!).
வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. உண்மையைச் சொல்லும் விளையாட்டில் ‘இந்த விளையாட்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத நபர் யார்?’ என்கிற கேள்வி தனலஷ்மிக்கு வந்தது. “ஜனனியைச் சொல்றேன். ‘ஸ்போர்ட்ஸ்ல நிறைய சாதனை செஞ்சிருக்கேன்னு சொல்றாங்க.. ஆனா அது இங்க தெரியல. அவ இன்னமும் நல்லா வெளிய வரணும்னு அவளைச் சொல்றேன்” என்று காரணம் சொன்னாலும் மக்களின் தேர்வு கலவையாக இருந்ததால் தனலஷ்மிக்கு தோல்வி கிடைத்தது.

இந்த விளையாட்டில் தோற்ற ரச்சிதாவிற்கு ‘தாடி மீசை’ ஒட்டிக் கொள்ளும் தண்டனை கிடைத்தது. அவரை அந்தக் கோலத்தில் பார்த்த ராபர்ட் “இன்னொரு ராபர்ட்டை’ கண்ணாடியில் பார்த்த அதிர்ச்சியில் ஓடி விலகினார். ‘இன்விஸிபிள் ஆக இருக்கணும்’ என்பது தனலஷ்மிக்கான தண்டனை.
காமிரா முன்னால் மாற்றி மாற்றி பேசிய தனலஷ்மி
“தனம் இல்லாதது நிம்மதியா இருக்கு.. எப்பப்பாரு நொய் நொய்-ன்னு ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கும்.. இப்ப மாத்திரம் என் கைல கிடைச்சா.. அவ்வளவுதான்”.. என்று தனலஷ்மி பக்கத்தில் இருக்கும் போதே விளையாட்டாக புறணி பேசினார் அமுதவாணன். ஜனனியும் விளையாட்டாக காற்றில் கைவீச அது தனலஷ்மியின் மீது பட்டது. இதனால் சில நிமிடங்களில் தனலஷ்மி சூடானார். “என்னைப் பத்தி புறணி பேசாதீங்க” என்று ஜனனியை நோக்கி அவர் கோபமாக சொல்ல, இருவருக்கும் சிறிய வாக்குவாதம் நடந்தது.
பிறகு தனிமையில் காமிராவை நோக்கி “எனக்கு மட்டும் இன்விஸிபிள் தண்டனை கொடுத்திருக்கீங்க.. ஒரு மாதிரி இருக்கு.. நான் வீட்டுக்குப் போகணும்.. அனுப்பிடுங்க.. அதுவரை சாப்பிட மாட்டேன்.. தண்ணி கூட குடிக்க மாட்டேன்..” என்று கண்ணீருடன் சொல்லிய தனலஷ்மி, மைக்கைக் கழற்றி போட்டு விட்டு படுக்கையில் போர்த்திக் கொண்டு சாய்ந்தார். மற்றவர்கள் சொன்ன சமாதானத்தை கேட்கவில்லை.

சில மணி நேரங்களுக்குப் பிறகு ஸ்டோர் ரூமின் தனிமையில் “ஐயா. என்னை மன்னிச்சிடுங்க.. இனி போறேன்னு சொல்ல மாட்டேன். கஷ்டப்பட்டு இங்க வந்திருக்கேன். இனிமே ரூல்ஸ் சரியா ஃபாலோ பண்றேன்.. கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கறேன்” என்று வணங்கி கும்பிட்ட தனலஷ்மியைப் பார்க்க பாவமாக இருந்தது. அவருக்கு உடனடியாகத் தேவை கவுன்சலிங்..
அகம் தொலைக்காட்சி வழியாக வீட்டிற்கு உள்ளே வந்த கமல் “நீங்கள் செய்த இனிப்புகளுக்கு நன்றி. அவற்றின் தரம் மீண்டும் பரிசோதிக்கப்பட்ட பின்பு ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்திற்கு அனுப்பப்பட்டது. என்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே அது நற்பணிகள்தான். வீட்டில் இருந்தும் நற்பணி செய்யலாம். நீங்கள் செய்திருப்பது அதற்கான உதாரணம்” என்கிற பாராட்டுடன் தன் உரையாடலைத் துவக்கினார்.
‘செந்தமிழ்ச் செல்வி குயின்சிக்கு பாராட்டு’
“நீங்கள் பேசிய செந்தமிழ் கேட்டு யாம் அதிர்ந்தோம்; விதிர்ந்தோம்; மகிழ்ந்தோம்” என்று கமல் பாராட்ட, வெட்கச் சிரிப்பில் “நன்றி ஐயா” என்றார் குயின்சி. “ஆனா மெடிக்கல் ரூம்ல கூட தமிழ் பேசினீங்க. ரகசியம் பேசும் போது கூட உங்க கடமையை மீறலை” என்று சிரித்தபடி கமல் பாராட்டியதில் மனம் குளிர்ந்தார் குயின்சி. “என்ன.. ஜனனி சித்தப்பா.. எப்படியிருக்கீங்க..?” என்று ஒட்டு மீசை வைத்திருந்த ஜனனியின் பக்கம் அடுத்ததாக வண்டியைத் திருப்பினார் கமல். ‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவாம்’… “என்ன ராம்.. பக்கத்துல வீட்டுல இருக்கற பாத்திரங்களைக் கூட எடுத்து விளக்கறீங்களாமே? என்று விசாரிக்க “கனவுல கூட பாத்திரம் விளக்கற மாதிரியும் உங்க முகமும்தான் வருது” என்று ராம் சொல்ல ரசித்து சிரித்தார் கமல்.
“உங்க ஹெல்த் எப்படியிருக்கு?” என்று கேட்டதும்தான் தாமதம், சட்டென்று கண்கலங்கிய ஆயிஷா “ரெண்டு வாரமா எமோஷனல் பிரேக்டவுன் ஆயிட்டேன்.. நீங்களும் மக்களும் என்னை மன்னிக்கணும்” என்று கைகூப்ப, “விளிம்பு வரைக்கும் போயிட்டு திரும்பி வந்து விளையாடறீங்க இல்லையா.. அதைப் பாராட்டணும்.. அங்க நிக்கறீங்க..” என்பது போல் கமல் பாராட்டியவுடன் மேலும் நெகிழ்ந்தார் ஆயிஷா. (நல்ல போர்ட்ரேயல்!).

‘அப்புறம்.. இந்த வாரம் எப்படி போச்சு?” என்று கமல் பொதுவாக விசாரிக்க “ஸ்பீடா போச்சு.. பயங்கரமா போச்சு.. போனதே தெரியல” என்று விதம்விதமான எதிர்வினைகள் வந்தாலும் குழந்தைகளுக்கு இனிப்பு சென்று சேர்ந்ததில் அனைவருமே நெகிழ்ச்சியை அடைந்திருந்தார்கள். “இன்னொரு முகங்களைப் பார்க்கவே அத்தனை சந்தோஷமா இருந்தது” என்றார் விக்ரமன்.
“ஓகே.. ஸ்டோர் ரூம்ல பொருள் இருக்கும். எடுத்துட்டு வாங்க” என்று அடுத்த சடங்கிற்கு நகர்ந்தார் கமல். வந்தது சர்க்கரைப் பாகு. “இது சாப்பிட்டா திகட்டும். அத்தனை இனிப்பு. அந்த மாதிரி “இவரோட இந்தக் குணாதிசயம் ரொம்ப ஓவர்... குறைச்சுக்கிட்டா நல்லாயிருக்கும்’ன்னு எதைச் சொல்லுவீங்க.. ஆரம்பியுங்க” என்று டாஸ்க்கைத் தந்தார் கமல்.
சர்க்கரைப் பாகில் நனைந்து திக்குமுக்காடிய அசிம்
முதலில் வந்த ஆயிஷா.. கட்டுப்படுத்த முடியாத சிரிப்புடன் அசிமை சுட்டிக் காட்டி விட்டு “எல்லா விஷயத்துலயும் உள்ளே வந்து தனி டிராக் ஓட்டுவாரு. அதைக் குறைக்கணும்” என்று சொல்ல தன்னுடைய பிரகாஷ்ராஜ் டிரேட்மார்க் சிரிப்புடன் வந்த அசிம், சர்க்கரைப் பாகை குடித்து விட்டு ‘நல்லாத்தான் சார் இருக்கு” என்று கெத்தாக சொன்னது அவருக்கே பிறகு வினையாகப் போயிற்று. ஆம், ரச்சிதா சொன்னது போல அடுத்த வந்த பெரும்பாலோனோர்.. அசிமை குறிப்பிட்டுச் சொன்னதில் வரிசையாக சர்க்கரைப் பாகை குடிக்க நேர்ந்த அசிம் ‘ஐயா.. சாமி. விட்டுருங்க” என்று அலறினார்.
தனலஷ்மியின் கோபம், விக்ரமனின் ஓவர் பேச்சு, மணிகண்டனின் ஆவேசம், கதிரவனின் நிதானம் போன்றவையும் சுட்டிக் காட்டப்பட்டன. `என்ன.. அசிம் இன்னொரு ரவுண்டு போலாமா?’ என்று கமல் குறும்பாகக் கேட்டவுடன் கையெடுத்து கும்பிட்டார் அசிம். “உங்களுக்கு இன்னொரு இனிப்பு காத்திருக்கு. நீங்க SAVED” என்று கமல் சொன்னதின் மகிழ்ச்சியைக் கூட அசிமால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. உள்ளே அத்தனை தித்திப்பு திரவம் நிரம்பியிருந்தது.

மீண்டும் காமிரா முன் சென்றார் தனலஷ்மி. (மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா?!). தன்னுடைய கோபம் சுட்டிக்காட்டப்படுவதும் அதற்கு பார்வையாளர்களின் கைத்தட்டல் கிடைப்பதும் தனலஷ்மிக்கு வருத்தத்தை அளித்திருக்கலாம். “நான் யோசிக்கறபடிதான் விளையாட முடியும். வெளில தப்பா தெரியுது போல.. நான் வெளில போகணும்.. அம்மா கிட்ட பேசணும்” என்று மீண்டும் கண்கலங்கினார். (இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்.. நீயா ஒப்புக்கற வரைக்கும்.. நெவர்.. எவர்.. கிவ்.. அப்..!)
தனலஷ்மியிடம் இருக்கிற ஒரு விஷயத்தைப் பாராட்ட வேண்டும். “விளையாடும் போது எப்படி தோணுதோ.. அப்படிதான் ஆட முடியும். பொதுமக்கள் என்ன நினைப்பாங்க.. கமல் சார் என்ன சொல்லுவாருன்னுல்லாம் மைண்ட்ல வெச்சிக்கிட்டு ஆட முடியாது” என்பதை முன்பே சொல்லியிருக்கிறார். தனக்கே ஒருவர் உண்மையாக இருப்பது ஒருவகையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.
புளியோதரையில் லெக்பீஸ் மறைத்த மணிகண்டன்
ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘Truth or Dare’ விளையாட்டில் சொல்லப்பட்ட தலைப்புகள், அதற்கு சுட்டிக் காட்டப்பட்ட நபர், மற்றவர்களின் தேர்வு, அதற்கான காரணங்கள் போன்றவற்றை ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். ‘நல்லவர் போல் நடிப்பவர்’ என்பதை மணிகண்டனிடம் கேட்ட போது ‘அப்படி யாரும் தெரியலையே சார்” என்று புளியோதரையில் லெக்பீஸை மறைக்க மணி முயல “நீங்களும் விக்ரமன் பெயரைத்தான் எழுதினீங்க” என்று கமல் சொன்னவுடன் அசடு வழிந்தார் மணி.
‘ஜனனியின் மழலைத்தனம் போலியா?’ என்கிற விசாரணை வந்தது. ஜனனியின் பெயரை அப்போது சுட்டிக்காட்டிய ஏடிகே இப்போது அதை மறந்து விட்டிருக்க (?!) இந்த முரணை கமல் சுட்டிக் காட்டினார். “அப்ப ஒரு கோவத்துல எழுதிட்டேன். உண்மையில் ஜனனி வெகுளிதான்” என்று சான்றிதழ் தந்தார் ஏடிகே. “என் இயல்புப்படிதான் இருக்கிறேன். நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை” என்று ஜனனி சொன்ன விளக்கத்தை கேட்டுக் கொண்டார் கமல்.
ஆயிஷாவின் செய்கைகளை முன்னிட்டு “நான் வெளில போகணும்ன்னு சிலர் சொல்றாங்க. அது எனக்குப் புரியல. எவ்ள கஷ்டப்பட்டு உள்ள வந்திருப்பாங்க. வெளிய போகணுன்னு சொல்றதுக்கு தகுதியான காரணங்களும் இல்ல..” என்று ஆணித்தரமாக ஷிவின் சொல்ல “இந்த உரையாடலை சிறப்பா நிறைவு செஞ்சீங்க” என்று ஷிவினை கமல் பாராட்டினார். ஷிவினின் கருத்து தனலஷ்மிக்கும் அதிகமாகப் பொருந்தும்.

‘தனலட்சுமியை பளார் என்று அறையணுமா?’
ஒரு பிரேக் விட்டுத் திரும்பிய கமல் “ஸ்டோர் ரூம்ல சில பொருட்கள் இருக்கு” என்று ஜாலியாக ஆரம்பிக்க ‘அய்யய்யோ.. இன்னொரு திரவமா?’ என்று மக்கள் அலறினார்கள். சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் உள்ள தம்ஸ் அப் – டவுன் அட்டைகள் வந்தன. “நீங்க பேசினல இருந்து சில உரையாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கோம்... அது யாரைப் பத்தினதுன்னு சொல்ல வேண்டாம். அது உண்மையா, இல்லையான்னு மட்டும் சொன்னா போதும். அதான் இந்த விளையாட்டு’ என்று தெளிவாக முன்னுரை சொன்னார் கமல்.
‘அமுதவாணன் தனிப்பட்ட தாக்குதல் செய்கிறாரா’ என்கிற வாக்கியத்திற்கு ஆயிஷா, விக்ரமன், ஷிவின் ஆகிய மூவரும் ‘ஆம்’ என்று பச்சை காட்டினார்கள். ‘நகைச்சுவை போர்வையில் அதைச் செய்கிறார்’ என்று விக்ரமன் புகார் சொல்ல “அதுதான் கேமே. ஆனா கொஞ்ச நாளா அமுதவாணன் கிட்ட இதை நிறையப் பார்க்கிறேன்” என்றார் ஷிவின்.
அடுத்த வாக்கியம் வில்லங்கமாக இருந்தது. ‘இங்கு நடந்து கொள்வது போல் தனலஷ்மி வெளியில் நடந்து கொண்டால் ‘பளார்’ என்று அறை கிடைக்கும்’ என்று சொல்லப்பட்டவுடன் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் கிடைத்தது. தனலஷ்மி செய்த அட்ராசிட்டி அப்படி. ஆனால் இதை ஆட்சேபித்த கமல் ‘ஒரு பொம்பளையை அடிப்பேன்னு சொல்றது இந்த வீட்ல நடக்கக்கூடாது. வன்முறையைத் தூண்டுவது போன்ற பேச்சு வரக்கூடாது’ என்று அந்த வாக்கியத்தை ரத்து செய்ததது நல்ல விஷயம்.
கமலின் ஆட்சேபம் சரியானதுதான். எனில் இந்த வாக்கியம் பிக் பாஸ் டீமால் தேர்வு செய்யப்படாமலே இருந்திருக்கலாம். எதற்கு இந்த கிம்மிக்ஸ் என்று தோன்றுகிறது. ‘மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதால் இந்த நாடகத்தை யாம் நிகழ்த்தினோம்’ என்று கூட அவர்கள் தரப்பிடமிருந்து விளக்கம் வரலாம். தனக்கு எதிராக கைத்தட்டல் வந்த போது கண்கலங்கிய தனலஷ்மி, கமலின் ஆதரவுப் பேச்சைக் கேட்டதும் நெகிழ்ந்து மலர்ந்தார்.

‘விக்ரமன் தூங்கிக் கொண்டே இருக்கிறார். சின்ன வேலைகளைக் கூட செய்வதில்லை’ என்கிற வாக்கியத்தை அமுதவாணனும் மகேஸ்வரியும் பலமாக ஆமோதித்தார்கள். ‘தான் மட்டுமே இங்கு நோ்மையானவர், மற்றவர்கள் இல்லை என்று விக்ரமன் கருதுகிறார்’ என்கிற வாக்கியத்திற்கு எல்லோருமே சிவப்பைக் காண்பித்தார்கள். (எனில் அதைச் சொன்னவர் யார்?’). “மக்களும் அதைத்தான் நினைக்கறாங்க போல... அவர் காப்பாற்றப்பட்டார்” என்கிற தகவலை கமல் சொன்னதும் விக்ரமன் கைகூப்பி நன்றி சொன்னார்.
அமுதவாணன் - ஜனனி – பகடைக்காய் விளையாட்டு
‘அமுதவாணன் ஜனனியை பகடைக்காயாக பயன்படுத்தி விளையாடுகிறார்’ என்கிற வாக்கியத்தை சிலர் ஆமோதித்தார்கள். “அவங்க குறிப்பிட்ட நாட்ல இருந்து வர்றதால வாக்கு வங்கி இருக்கும். அதனால் இருக்கலாம்” என்பது போல் வில்லங்கமான கருத்தை அசிம் சொல்ல ‘என்னய்யா.. சொல்றான்.. இவன்’ என்பது மாதிரி ரச்சிதாவும் அமுதவாணனும் புரியாமல் திகைத்துப் பார்த்தார்கள். “ஆம். Over Protective-ஆக இருக்காரு” என்று தெள்ளத் தெளிவாக சாட்சியம் சொன்னார் ஷிவின்.
இதற்கு விளக்கம் அளிக்க வந்த அமுதவாணன் ‘ஸ்விம்மிங் ஃபூல் விளையாட்டை’ உதாரணம் சொல்லி உளறிக் கொட்டி கிளறி மூடினார். ‘ஸ்வீட் டாஸ்க்ல ஜனனி போனா பெல்ட் உள்ள மாட்டிப்பா’ன்னு சொன்னீங்க’ என்பதை சுட்டிக் காட்டி இதர ஹவுஸ்மேட்ஸ் அவரை சரியான பாதையில் திருப்பினார்கள். “ராம் நாமினேஷன்ல இருக்கறதால ஜனனி ஒரு நாள் மட்டும் விட்டுக் கொடுத்தார்.. டீம்ல யாராவது ஒருத்தரை மாத்தியாகணும்னு பிக் பாஸ் சொன்னாரு.. அதனால ராமை உள்ளே கொண்டு வந்தோம் ஜனனி சங்கப்படக்கூடாதுன்னு ஆறுதலுக்காக அப்படி சொன்னேன்” என்று அமுதவாணன் விளக்கம் கொடுத்த கோணம் சரியாகவே பட்டாலும் ஜனனியின் ஆதரவாளராக அவர் இருக்கிறார் என்பது வெளிப்படை.
“ஓகே.. இருந்தாலும் பொதுவா சொல்றேன். அன்பைக் காரணம் காட்டி ஒருவர் விளையாடுவதை தடுப்பது, அவருடைய வாய்ப்பை கெடுப்பதாகவே அமையும்’ என்று கமல் தெள்ளத் தெளிவாக சொன்னது அனைவருக்குமான செய்தி. ஜனனியும் இந்தப் ‘பொதுவான’ செய்தியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார். அப்போதே அமுதவாணனின் முகத்தில் சற்று இருள் கூடியது.

‘அசிம் கறுப்பு ஆடாக விளையாடினார்’ என்பது அடுத்த வாக்கியம். ‘சண்டை வரக்கூடாது என்று பேசி வெச்சிக்கிட்டோம்” என்று சிரித்தபடி மணிகண்டனும் அசிமும் சாட்சியம் சொன்னார்கள். ‘என் டீமிற்கு நான் துரோகம் பண்ணலை’ என்றார் அசிம். சமாதானத்திற்காக என்றாலும் முன்பே பேசி வைத்துக் கொள்வது விளையாட்டிற்கும் அணிக்கும் செய்யப்படும் துரோகம்தான். முட்டி மோதி ஜெயிப்பதில்தான் வெற்றியின் உண்மையான ருசி அடங்கியிருக்கிறது.
‘அமுதவாணன் விட்டுக் கொடுத்ததால்தான் தனலஷ்மி டீம் ஓனரானார்’ என்கிற வாக்கியத்தை தனலஷ்மி அழுத்தமாக மறுத்தார். அமுதவாணனும் தனலஷ்மிக்கு சாதகமாக சாட்சியம் சொன்னார். “ஓகே.. உங்களுக்குள்ள சில விஷயங்கள் பேச வேண்டியிருக்கும். இதோ வரேன்” என்று நமட்டுச் சிரிப்புடன் பிரேக் விட்டுச் சென்றார்.
பிரேக் விட்டுத் திரும்பிய கமல் “அமுதவாணன்.. சீட்ல உங்க பேர் நிறைய வந்தது.. யார் யார் கூடல்லாம் உங்களுக்கு வருத்தம். இருக்கு .. சொல்லுங்க” என்று கேட்டார். சில சம்பவங்களை மீண்டும் விரிவாக விவரிக்கத் துவங்கிய அமுதவாணனை இடைமறித்த கமல் “ரீப்ளே.. பண்ணாதீங்க. மக்களுக்கு போரடிச்சடும்.. பெயர்களை மட்டும் சொல்லுங்க.. நான் அவங்களை பேச வைக்கறேன்” என்றார். மணிகண்டன், விக்ரமன், மைனா, தனலஷ்மி ஆகிய நால்வரையும் கமலே அழைத்து விளக்கம் கேட்டார்.
‘கோபம் வராம எப்படி கேம் ஆடறது?’ நொந்து போன அமுதவாணன்
கேப்டன் டாஸ்க்கில் அமுதவாணனை தள்ளி விட்டு தலைவியாகிய மைனா “அவருக்கு வருத்தம் இருக்குன்ற விஷயமே இப்பத்தான் தெரியுது” என்று அதிர்ச்சியானார். ‘மூக்கு தாக்குதல்’ சம்பவத்தைப் பற்றி விவரித்த மணிகண்டன். “அதுவொரு விபத்து.. அடிச்சா சொல்லிடுவேன்.. அவரு எனக்கு அண்ணன் மாதிரி” என்று வார்த்தையை விட்டு விட “அடிக்க வேறல்லாம் பண்ணுவீங்களா.. அண்ணா. உங்களை அடிக்கப் போறேன்னு அனுமதி கேட்பீங்களா?” என்றெல்லாம் கமல் இடைமறித்தது நல்ல குறும்பு.
“எனக்கு உருவக் கேலி மீது நம்பிக்கை கிடையாது. அமுதவாணன் மற்றவர்களை தாழ்த்தி, தன்னை உயர்த்தி கிண்டல் செய்கிறார். ஒரு விஷயத்தை சிரிப்பாகவும் சீரியஸாகவும் கலந்து சொல்கிறார்” என்று தன் தரப்பைச் சொன்னார் விக்ரமன். “நான் ஓனரா அதிகாரம் செய்யவில்லை. அமுதவாணன் எடுத்த சில முடிவுகள் தொடர்பா சின்ன கருத்து வேறுபாடு வந்தது. அவ்வளவுதான்” என்பது தனலஷ்மியின் விளக்கம்.

“ஓகே.. நகைச்சுவை விஷயமா சில விஷயங்கள் தெளிவுப்படுத்தணும். All comedians are serous people. அது..சரியோ.. தவறோ.. தங்கள் கருத்துக்களை நகைச்சுவை வழியாகச் சொல்லுவாங்க. விகேஆர்.. தங்கவேலு மாதிரியான நடிகர்கள் body shaming வழியா காமெடி செய்ய மாட்டாங்க.. நாகேஷ் பண்றது வேற.. அமுதவாணன்.. திடீர்ன்னு வெளிப்படற உங்க சீரியஸ் முகம் யாருக்கும் பிடிக்கலைன்றதை விட புரியலைன்றதுதான் விஷயம்... ஸ்போர்ட்டிவ்வா விளையாடுங்க.. ஆயிஷா சோர்ந்து போனா நமக்கு அதிருப்தியா இருக்குல்ல.. அப்படித்தான் ” என்று உற்சாகப்படுத்தி விட்டு விடைபெற்றார் கமல்.
“கோபம் வராம எப்படி இருக்க முடியும்?.. அப்படின்னா.. கேம் ஆடாமத்தான் இருக்கணும்” என்று புலம்பிக் கொண்டிருந்தார் அமுதவாணன். “அவர் சொல்றதுக்கு தலையாட்டிடு. போன வாரம் நான் பண்ண தப்பை பண்ணாத” என்று உபதேசித்தார் ராம். “விளையாட்டுல அடிபடறதுன்னு சகஜம்ன்னு.. சொல்லாம சொல்றாரு” என்று தன் கோணத்தை வைத்தார் அசிம். “உடைந்து போகாமல் விளையாடுங்கள் என்றுதான் அவர் சொன்னவர்’ என்று ஜனனி சொன்ன சமாதான விளக்கம்தான் அதிகப் பொருத்தமாக இருந்தது.
அமுதவாணனின் அதிருப்திக்கான கமலின் விளக்கம், இந்த வார எவிக்ஷன் போன்றவற்றிக்கு அடுத்த எபிசோடில் விடை கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.