Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 38: `ஏய்ய்ய்ய்!' மீண்டும் உக்கிரமான அசிம்; உப்புக்காக அக்கப்போரான பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ்

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஏடிகேவும் களத்தில் இறங்க “நீ யாருன்னே தெரியாது. போ அப்படி” என்று ஏடிகேவையும் வெறுப்பேற்றினார் அசிம்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 38: `ஏய்ய்ய்ய்!' மீண்டும் உக்கிரமான அசிம்; உப்புக்காக அக்கப்போரான பிக் பாஸ் வீடு!

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஏடிகேவும் களத்தில் இறங்க “நீ யாருன்னே தெரியாது. போ அப்படி” என்று ஏடிகேவையும் வெறுப்பேற்றினார் அசிம்.

பிக் பாஸ்
இந்த வாரயிறுதியின் எபிசோடை பரபரப்பாக்குவதற்கு என்ன செய்யலாம் என்று பிக் பாஸ் டீமோ அல்லது கமலோ அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அதற்கான கன்ட்டென்டை கணிசமாக வாரி வழங்கி விட்டார் அசிம். ஆம், அவருக்குள் சற்று பதுங்கியிருந்த மிருகம், மீண்டும் வழக்கம் போல் விஸ்வரூபம் எடுத்து தலைவிரித்து ஆடத் துவங்கி விட்டது. எனில் அவர் தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். கோபத்தைக் குறைத்தது போல் இதுவரை பாவனைதான் செய்திருக்கிறார்.
அசிம்
அசிம்

இது அசிம் என்கிற தனிநபரின் பிரச்சினையல்ல. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கான பாடம். இவர்களின் அகங்காரம் சற்று உரசப்பட்டால் கூட தீப்பொறி பட்ட வெடிகுண்டு போல வெடித்து பொங்கியெழுவார்கள். இப்படிப்பட்ட கோபக்காரர்கள், அசிமின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்தால் கூட போதும். தான் கோபமடையும் போது முகமும் அந்தச் சூழலும் எத்தனை விகாரமடைகிறது என்பது புரியும்.

நாள் 38-ல் நடந்தது என்ன?

குயின்சியின் இளவரசி தோ்வின் போது வாக்களிக்க உயர்த்திய விக்கிரமனின் கையை தனலஷ்மி அமுக்கினார். புகையாக இருந்த விவகாரம் இப்போது சற்று பெரிதாக வெடித்தது. “நீயே இளவரசியா இருந்திருக்கலாம்” என்று முன்னர் சொல்லி க்வீன்சியை நோண்டிய அதே விக்ரமன்தான், இப்போதும் இந்த விஷயத்தைப் பொதுவில் கொண்டு வந்தார். “ஏன் க்வீன்சி இளரவசி ஆகறதை தடுத்தே?” என்று அவர் தனலஷ்மியிடம் விளையாட்டாக பொதுவில் கேட்டது தவறு. இதனால் தனலஷ்மியின் ஈகோ உசுப்பப்பட்டது. இந்தப் பிரச்சினையில் விக்ரமனுக்கு உண்மையிலேயே ஆர்வமிருந்தால் இருவரையும் தனியாக அமர வைத்து பேசியிருக்கலாம். 

விக்ரமன் - க்வீன்சி
விக்ரமன் - க்வீன்சி

தனலஷ்மியின் அட்ராசிட்டி – ரத்தபூமிக்குப் பழகாத க்வீன்சி

“என் தேர்வை ஏன் ஒருவர் தடுக்கணும்?” என்பது க்வீன்சியின் ஆதங்கம். தனலஷ்மி சற்று நிதானமானவராக இருந்தால் “ஓகே.. ஸாரிம்மா. ஹர்ட் ஆயிட்டியா.. விளையாட்டுக்கு பண்ணிட்டேன்” என்று சொல்லலாம். இல்லையென்றால் ‘இதுதானே கேம் க்வீன்சி.. இந்த மாதிரி நிறையச் சவால்களை ஒவ்வொருத்தரும் எதிர்கொண்டுதானே ஆகணும்?’ என்று ஸ்போர்ட்டிவ்வாக விளக்கியிருக்கலாம். 

ஆனால் தனலஷ்மிதான் எலெக்ட்ரிக் கம்பியாச்சே? எனவே தனது வழக்கமான அடாவடியான பாணியில் ‘அப்படித்தான் பண்ணுவேன்.. சீன் கிரியேட் பண்ணாத.. என் கிட்ட பேச பயமா இருந்தா பேசாத” என்றெல்லாம் எகிறிக் குதித்தார். இதற்கும் ஒரு பின்னணிக் காரணம் இருக்கிறது.  கமலால் கண்டிக்கப்பட்டு தனலஷ்மி நொந்திருந்த சமயத்தில் ‘இந்த மாதிரி நடக்கும்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா உன் கிட்ட சொல்ல பயமா இருந்தது” என்பது போல் க்வீன்சி சொன்ன சமாதானத்தை தனலஷ்மி தவறாகப் புரிந்து கொண்டு விட்டார். இந்தப் பிழையில் தன்னை மட்டும் சிக்க வைத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப் ஆகிறார்கள் என்பது மாதிரியான கோபம். 

ஆனால் க்வீன்சிக்கும் இதில் ஒரு பாடமுள்ளது. இந்த உலகத்தைப் போலவே பிக் பாஸ் வீடும் ஒரு ரத்த பூமி. க்வீன்சியின் வெற்றியை தனலஷ்மி வேண்டுமென்றே தடுக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் அது தனலஷ்மியின் ஸ்ட்ராட்டஜி. இது விளையாட்டின் ஒரு பகுதி. அதை க்வீன்சி எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். வேறுவழியில்லை. ஆனால் பொறுமையாக இருப்பவர்கள்தான் கடைசியில் வெல்வார்கள். மக்களும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளி அள்ளி கொடுப்பான்.. ஆனா கைவிட்டுடுவான்’’.. வசனம் போலத்தான்.

க்வீன்சி
க்வீன்சி

‘ரச்சிதா ஏன்.... தன்னோட நல்ல பக்கத்தையே எப்பவும் காண்பிச்சிட்டு இருக்காங்க. அவங்களோட இன்னொரு பக்கத்தை எப்ப நாம பார்க்கப் போறோம்? வெளில போனப்புறமா.. இது என்ன சீரியலா.. எல்லாத்துக்கும் எக்ஸ்பிரஷன் தராங்க’ என்று ரச்சிதாவைப் பற்றி க்வீன்சியிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் நிவாஷிணி. (பேச வேண்டிய இடத்துல பேசறது கிடையாது!).

அருமையாக இருந்த ராஜகுடும்பத்தின் கெட்டப்பும் செட்டப்பும்

‘சீமராஜா’ படத்தின் பாடலோடு நாள் 38 விடிந்தது. அமுதவாணன் சங்கூத, ராஜ குடும்பத்தினர் அருங்காட்சியகத்தின் உள்ளே கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எக்காளம் முழங்கியது. துதிகள் சொல்லப்பட்டன. ‘பராக் பராக்.’ என்று வாழ்த்தொலிகள் கேட்டன.

ஆனால் இங்கு ஒன்றை நிச்சயம் சொல்லியாக வேண்டும். ராஜ குடும்பத்தின் ஆடைகளும் ஒப்பனைகளும் அத்தனை சிறப்பு. பொருத்தமாகவும் இருந்தது. சமகாலப் பொருட்களை அவுட் ஆஃப் போகஸில் வைத்து விட்டு சம்பந்தப்பட்ட பின்னணியில் மட்டும் பார்க்கும் போது ஏதோவொரு வரலாற்றுத் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போலவே இருந்தது. இதற்குப் பின்னால் உழைத்தவர்களுக்கு பாராட்டு.

ராபர்ட் - ரச்சிதா
ராபர்ட் - ரச்சிதா

சமயங்களில் காமெடியாக தெரிந்தாலும் துல்லியமான தமிழ் உச்சரிப்பு அசிமின் பலம். படைத்தளபதியான அவர் ராஜகுடும்பத்தை வரவேற்று பணியாளர்களையும் சேவகர்களையும் அறிமுகப்படுத்தினார். தூக்கம் வருவது போல ஆயிஷாவும் காது கேட்காதது போல மைனாவும் நடித்து தங்களின் கேரக்ட்டர் ஸ்கெட்ச்சை பின்பற்றினார்கள்.

ராபர்ட்  - ரச்சிதா
ராபர்ட் - ரச்சிதா

போரில் உபயோகித்த ஆயுதங்கள், கஜானாவில் இருந்த ஆபரணங்கள், சொத்துக்கள் போன்றவற்றை பில்டப் தந்து தனலஷ்மி விளக்கினார். இது அவருக்குத் தரப்பட்ட கேரக்ட்டர். வில்லை எடுத்த ராஜா, எப்படி அம்பை எய்ய வேண்டுமென்று சொல்லித் தருகிற சாக்கில், ராணியின் கையைப் பிடித்து திருட்டு ரொமான்ஸ் செய்து அற்ப சந்தோஷம் அடைந்தார். ‘அங்கே பார் பாகுபலி காட்சி. அவர்களைப் பார்த்தால் பிரபாஸ். அனுஷ்கா போலவே இல்லை?!’ என்று சேவகர்கள் தூரத்திலிருந்து இவர்களைக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

ராஜாவை வாழ்த்தி அமுதவாணன் பாட ஆரம்பித்தார். ‘நீ இருக்கையிலேயே எனக்கு பெருஞ்சோதனை’ என்று வாழ்த்துகிறாரா, திட்டுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியாமல் கலந்து கட்டி பாடினார். அடுத்த வந்த மைனா, இம்சை அரசன் புலிகேசியின் கான்செப்ட்டை காப்பிடியத்து ‘இளவரசன் ஒரு பொறுக்கி, ராஜகுரு ஒரு பொறம்போக்கு, தளபதி ஒரு மொள்ளமாறி’ என்று திட்டி விட்டு பிறகு அதற்கான கோக்குமாக்கு விளக்கங்களைத் தந்தார்.

அடுத்ததாக ஷிவின் நடனமாட, இளவரசரான மணிகண்டனும் அவருடன் இணைந்து இறங்கி குத்தி ஆடியது ராஜகுடும்பத்திற்குப் பெருமை தருவதாக இல்லை. ரோமியோ இளவரசன் அனைத்துப் பெண்களிடமும் வழிந்து கொண்டே இருந்தார்.

‘உப்பு போட்டது ஒரு தப்பாய்யா?’ – கலவரத்தில் முடிந்த டாஸ்க்

இதுவரை ஒருமாதிரி ஜாலியாக போய்க் கொண்டிருந்த டாஸ்க், உக்கிரமான ஏழரையை எதிர்கொள்ளப் போகிற தருணம் வந்தது. மகாராணியாரான ரச்சிதாவின் உணவில் மட்டும் அதிக உப்பைக் கொட்டி குறும்பு செய்தார் ஷிவின். இதன் மூலம் டாஸ்க்கில் ஒரு கலகம் ஏற்பட்டு சுவாரசியம் கூடும் என்பது அவரின் கணக்கு. மேலும் ரச்சிதா அவருக்கு இணக்கமானவர் என்பதால் ஷிவின் எடுத்துக் கொண்ட உரிமையும் கூட.

உப்பு அதிகமாக போடப்பட்ட உணவை மகாராணி கோபத்துடன் நிராகரிக்க, ராஜாவிற்கும் கோபம் வந்தது. படைத்தளபதிக்கும் ஆவேசம் வந்து விசாரணையை மேற்கொண்டார். ஆனால் இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் இளவரசி ஜனனி மட்டும் தயிர்சாதத்தை ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்தது, பார்க்கவே கண்கொள்ள காட்சியாக இருந்தது.

ஜனனி - விக்ரமன்
ஜனனி - விக்ரமன்

இந்த உப்பு விவகாரம், உப்புச் சத்தியாகிரகத்தையும் விட பெரிதாக வெடித்தது. ‘அதிக உப்பு போட்டதற்கு நான் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இதைச் சோதித்திருக்க வேண்டிய தளபதிக்கும் தண்டனை கொடுத்தால்தான் என் தண்டனையை ஏற்பேன்’ என்று கறாராக சொன்னார் ஷிவின். ராஜகுருவான விக்ரமனும் இதையே வழிமொழிய படைத்தளபதிக்கு கோபம் வந்து விட்டது. “நான் எச்சி துப்பி கொடுத்தா சாப்பிடுவீங்களா” என்று கேட்க விக்ரமனுக்கும் அசிமிற்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ‘ஏய்.. மரியாதை இல்லாம பேசாதீங்க’ என்று விக்ரமன் சொன்னதும், அந்த ‘ஏய்’ அசிமின் அகங்காரத்தை பயங்கரமாக உசுப்பி விட்டது. அவருக்குள் இருந்த மிருகம் கட்டவிழ்த்துக் கொண்டு ஆவேசமாக வெளியே பாய்ந்தது. விக்ரமனை ஏகவசனத்தில் அசிம் பேச, ‘இதைக் கேட்க மாட்டீங்களா?’ என்று விக்ரமன் முறையிட தனலஷ்மி, ஆயிஷா, ஷிவின் ஆகியோரும் அசிமின் அநாகரிகமான பேச்சை ஆட்சேபித்தார்கள். ஆனால் அவர்களிடமும் ஆத்திரப்பட்டார் அசிம்.

ஷிவின்
ஷிவின்

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஏடிகேவும் களத்தில் இறங்க “நீ யாருன்னே தெரியாது. போ அப்படி” என்று ஏடிகேவையும் வெறுப்பேற்றினார் அசிம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதற்கான உதாரணம் இது. ஆக அசிமிற்கும் ஏடிகேவிற்கும் இடையில் ‘நட்பு’ மாதிரி இருந்த பூச்சு சமாச்சாரம் இன்று உடைபட்டு அம்பலமாகி விட்டது.

‘இதுவே உப்புக்குப் பதிலாக விஷம் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்?’ என்று தனலஷ்மி சொன்னது சரியான பாயிண்ட். “மொத்தமாக உணவை எடுத்து வரட்டும். அதில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு தளபதி சோதிக்கட்டும்’ என்று ஏடிகே சொன்னதுதான் சரியான யோசனை. ஆனால் அசிமால் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “நான் எச்சி பண்ணித் தந்தா சாப்பிடுவீங்களா?” என்பதையே முரட்டுத்தனமாகவும் விதாண்டாவாதமாகவும் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார்.

பிழையை ஒப்புக் கொள்ளாத அசிமின் அகங்காரம்

எதிரிகள் உணவில் விஷத்தைக் கலந்து ராஜகுடும்பத்தினரைக் கொல்வது அல்லது செயலிழக்க வைப்பது என்பது அந்தக் காலத்தில் வழக்கமான விஷயமாக இருந்தது. எனவே ராஜாவின் மெய்க்காப்பாளர்கள் உணவு சோதனை விஷயத்தில் மிகக் கறாராக இருப்பார்கள். இருந்தாக வேண்டும். ராஜகுடும்பத்திற்கென தயார் செய்யப்பட்ட உணவின் ஒரு பகுதியை மெய்க்காப்பாளர் சாப்பிட்டு விட்டு, அவருக்கு எதுவும் ஆகவில்லையெனில் பிறகு ராஜா சாப்பிடுவதென்பது ஒரு வழக்கமாக இருந்தது.

இந்தப் பிழையை அசிம் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக ‘ஒவ்வொரு பிளேட்டா எச்சி பண்ணா ஓகேவா.. குண்டான் சோற்றையும் நானே சாப்பிடவா?’ என்றெல்லாம் விதாண்டாவாதம் செய்து கொண்டிருந்தார். இதன் உச்சமாக “நான் ராஜகுருவின் உணவில் த்தூன்னு எச்சி துப்பி தரவா?’ என்று கேட்டதுதான் விக்ரமனின் கோபத்தைக் கிளப்பி விட்டு விட்டது.

அசிமின் வாக்குவாதம்
அசிமின் வாக்குவாதம்

‘நான் அருந்திய உணவை ராஜகுடும்பத்திற்கு தருவது பிழையாக ஆகி விடாதா?’ என்பது போல் நிதானமான வார்த்தைகளை அசிம் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தன் பிழையை ஒப்புக் கொண்டு ‘இனி கவனமாக இருப்பேன்’ என்று சொல்லியிருந்தால் டாஸ்க் சமூகமாக போயிருக்கும். இதற்கு அசிமின் ஈகோ இடம் தரவில்லை.

ஷவினின் கருத்தை விக்ரமன் வழிமொழிவதால் அசிமிற்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு இது. டாஸ்க்கில் இருந்து வெளியே வந்து யோசிப்பதால் வரும் பிரச்சினை. “உன் பிரெண்டு சொன்னா அதைக் கேட்பியா?’ என்று அசிம் எகிறியது இதனால்தான்.

விக்ரமனின் மீதுள்ள பகையை அமுதவாணனும் இந்தச் சமயத்தில் உபயோகப்படுத்திக் கொண்டார். ‘என்ன நடந்தது’ என்பதை அசிம் அவரிடம் விளக்கும் போது அமுதவாணன் அதை ஆமோதித்தார். மாறாக நியாயவுணர்ச்சி உள்ளவராக இருந்தால் “எச்சி துப்பிட்டு தந்தா சாப்பிடுவியா’ன்னு கேட்டது சரியில்லையே அசிம்?” என்று சொல்லியிருப்பார். ஆக.. ஒவ்வொருவருமே அவரவர்களின் விரோதங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த டாஸ்க்கை ஆடுகிறார்கள்.

அசிம்
அசிம்

‘ஒரே கத்துறாங்கோ’ என்று மழலைத் தமிழில் காமிரா முன்பு நிவாஷிணி முறையிட அசிமின் அட்ராசிட்டியை தாங்க முடியாமல் வெளியே ஓடிவந்து தலையைப் பிடித்துக் கொண்டு வந்து கார்டன் ஏரியாவில் குப்புறப்படுத்துக் கொண்டார் ஆயிஷா. “சண்டை நடந்தா பக்கத்துல இருக்கறவங்க கேட்க மாட்டீங்களான்னு கேக்கறாங்க.. ஆனா அசிம் அநாகரிகமா பேசிட்டே இருக்கான்.. ” என்று ஆயிஷா அலுத்துக் கொண்டது கமல் விசாரணையைப் பற்றித்தான். அவரின் ஆதங்கம் நியாயமும் கூட.

“நல்லாத்தானே போயிட்டு இருந்தது. நீங்க ஏன் டென்ஷன் ஆகி சொதப்பினீங்க?” என்று ராபர்ட்டிடம் கேட்டுக் கொண்டிருந்தார் ஷிவின். ‘அசிமை டிரிக்கர் செய்து விட்டார்கள்’ என்பது ராபர்ட்டின் அபிப்ராயம். சபையைக் கட்டுப்படுத்த தெரியாத ராஜா.. என்ன ராஜாவோ..

வரைபட ரகசியம் – டாஸ்க்கில் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ்

இந்தக் களேபரம் ஓய்ந்து பிறகு சபை மீண்டும் கூடியதில் ராஜாவைப் புகழந்து ஏடிகே பாடிய பாடல் அருமை. ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடலுக்கு க்வீன்சியும் தனலஷ்மியும் இணைந்து நடனம் ஆட ரோமியோ இளவரசர் மணிகண்டனும் களத்தில் இறங்கி குத்தி ஆடினார். அவரின் மீது பணத்தை இறைத்து தனலஷ்மி செய்தது சுவாரசியமான குறும்பு.

அசிமை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ். நடந்த விஷயத்தைப் பற்றி அசிம் ஆவேசமாக முறையிட “அதெல்லாம் இருக்கட்டும்ப்பா. நான் சொல்றது முக்கியமான விஷயம்” என்று ஒரு ராஜரகசியத்தை சொல்ல ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘இவங்க இஷ்டத்திற்கு விட்டா டாஸ்க்கை சொதப்பிடுவாங்க. ஏதாவது வேலை கொடுப்போம்’ என்று பிக்பாஸ் நினைத்திருக்கலாம். அதுதான் சரியான அணுகுமுறையும் கூட.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

‘கஜானா செல்வம் களவாடப்பட்டு விட்டது. மீண்டும் அதைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அதற்கான வரைபடத்தின் பாதியைத் தருகிறேன். இந்த ரகசியம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு மட்டும்தான் தெரியும். ஒரு சேவகனின் உதவியோடு களவு போன செல்வத்தை கண்டுபிடித்து கொண்டு வந்து சேருங்கள்’ என்று டாஸ்க்கின் முக்கியமான சவாலை அசிமிற்கு விளக்கினார் பிக் பாஸ். அசிமிற்கு இருந்த கோபத்தில் பிக் பாஸ் சொன்னது விளங்கவில்லை. ‘இன்னொருமுறை சொல்லுங்க’ என்று அவர் சொன்னதை பிக் பாஸ் கண்டுகொள்ளவில்லை.

அசிமுடன் ஏற்பட்ட விவாதம் காரணமாக கோபமாக இருந்த ராஜகுருவை ‘கூல்’ செய்வதற்காக ‘எதுக்கு பொண்டாட்டி. என்னை சுத்தி வைப்பாட்டி’ பாடலை அமுதவாணன் குழு சுற்றி வந்து பாட, ‘போதும்.. போதும்’ என்று கோபத்துடன் நிறுத்தி விட்டார் விக்ரமன். ‘அது எனக்குப் பாட வேண்டிய பாடல் அல்லவா?’ என்று ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேடினார் ரோமியோ இளவரசன் மணிகண்டன்.

‘அடிச்சுக்காம டாஸ்க்கை சுவாரசியமா பண்ணுங்கப்பா’ என்று சபையைக் கூட்டி அட்வைஸ் செய்தார் பிக் பாஸ். ‘மகிழ்விக்க வந்த கலைஞர்களை தடுத்து அவமரியாதை செய்யலாமா?’ என்று விக்ரமனின் செயல் குறித்து ஜனனி சபையில் ஆட்சேபிக்க “ஹலோ. நான் என்ன வேதனைல இருக்கேன்னு எல்லோருக்கும் தெரியும். அத்தனை அவமரியாதை எனக்கு நடந்தது. மனவேதனைல இருக்கேன். அந்தப் பாடல் எனக்குப் பிடிக்கலை. அதனால தடுத்தேன். இதுவொரு குத்தமா?’ என்று கேட்ட விக்ரமனின் தரப்பில் நியாயம் இருந்தது. அவருடைய கோபம் கிண்டல் பாட்டு பாடிய அமுதவாணனின் மீது. ‘உள்நோக்கத்துடன் எதையும் நான் பாடவில்லை. ஜஸ்ட் டைம்பாஸ்தான். தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று விளக்கம் சொல்லி இதை சுமூகமாக முடித்த அமுதவாணனுக்கு பாராட்டு.

ரச்சிதா
ரச்சிதா

களவு போன செல்வத்தைக் கண்டுபிடிக்கும் வரைபடத்தின் இன்னொரு பகுதி ரச்சிதாவிற்கு அளிக்கப்பட்டது. ‘துருப்புச் சீட்டு ஏதாவது தேவைப்படுகிறதா?’ என்று அசிம் சூசகமாக கேட்க அதைப் புரிந்து கொண்டார் ரச்சிதா. ‘ராஜகுடும்பம்’ என்று க்ளூ தராமல் வீட்டில் உள்ள யாரோ ஒருவரிடம் இருக்கும்’ என்று அசிமிடம் பிக் பாஸ் சொல்லியிருந்தால் ஆட்டத்தில் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கலாம்.

ஒரு சாதாரண விஷயத்தைக் குறிப்பிடும் போது ‘உப்பு பெறாத சமாச்சாரம்’ என்று நடைமுறையில் சொல்வார்கள். ஆனால் அதையே ஊதிப்பெருக்கி பெரிய தப்பு சமாச்சாரமாக மாற்றியிருக்கிறது பிக் பாஸ் வீடு.