Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 39: தினம் தினம் சண்டை; `ஏன்டா, என்னைப் பார்த்து பயப்படற!'அசிம் - ஏடிகே மோதல்!

பிக் பாஸ்

“இவருதான் மெயின் கேரக்ட்டர் மாதிரியும் நாம என்னவோ சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் மாதிரியும் அசிம் பண்றது எரிச்சலா இருக்கு” என்றார் ராம்.

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 39: தினம் தினம் சண்டை; `ஏன்டா, என்னைப் பார்த்து பயப்படற!'அசிம் - ஏடிகே மோதல்!

“இவருதான் மெயின் கேரக்ட்டர் மாதிரியும் நாம என்னவோ சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் மாதிரியும் அசிம் பண்றது எரிச்சலா இருக்கு” என்றார் ராம்.

பிக் பாஸ்
அசிமிற்கும் ஏடிகேவிற்கும் இடையில் இருந்த ‘நட்பு’ மாதிரியான சமாச்சாரம், இன்று சூறைத்தேங்காய் போல் உடைந்து கடைத் தெருவிற்கு வந்து விட்டது. ஏடிகே அசிமின் உண்மையான நண்பராக இருந்தார். அசிமின் நற்குணங்களைப் பரப்பும் கொள்கைப் பரப்புச் செயலாளராகவே மாறினார். ஆனால் தன்னிடமே அசிம் குத்தலாகப் பேசிக் கொண்டிருந்ததால் அது குறித்த மனப்புழுக்கத்தில் இருந்தார் ஏடிகே. நட்பில் ஏற்பட்ட விரிசல் இன்று பெரிதாகப் பிளவுண்டது.  

‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்பார்கள். ஆத்திரம் கண்ணை மறைத்தால் நண்பர், எதிரி என்று யாருமே அசிமின் கண்ணுக்குத் தெரிவதில்லை. முட்டல்தான். மோதல்தான். ‘சீரியல் படப்பிடிப்புகளிலும் அவர் இவ்வாறுதான் மூர்க்கமாக நடந்து கொள்வார்’ என்று கூட இருந்த நடிகர்கள் சாட்சியம் சொல்கிறார்கள். தான் ஒரு கறாரான Individual Player என்பதை நிரூபிக்க அசிம் அரும்பாடு படுகிறார் என்று தெரிகிறது.

நாள் 39-ல் நடந்தது என்ன?

அசிமுடன் சண்டை, அமுதவாணனின் கிண்டல் போன்றவற்றால் டென்ஷன் ஆகியிருந்த விக்ரமன், இப்போதோ க்வீன்சி மற்றும் நிவாவுடன் கூலாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார். ‘ராஜகுரு.. நடனமாடி முடித்தாயிற்று என்றால் கன்பெஃஷன் ரூமிற்கு வாருங்கள்’ என்று கிண்டலாக அழைத்தார் பிக் பாஸ். வரைபடம் தொடர்பாக ஏதாவது குழப்புவதற்காக இருக்கும். 

ராஜகுடும்பத்திற்கு வந்த உணவை, ஏதோ சுரம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்ப்பது போல் ஸ்பூனால் ஸ்கேன் செய்து விட்டு ‘ஓகே’ என்றார் அசிம். ‘என்னது?! எனக்குத் தெரியாமல் தக்காளி சாதமா. கொண்டு வாருங்கள்’ என்று அதிர்ச்சியுடன் உத்தரவிட்டார் ராஜா. 

கச்சிதமாகச் செயல்பட்ட திருடன் கதிரவன்

ஏடிகேவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், ‘களவு நடக்கப் போகிறது.. கவனமாக இருக்கவும். பொருள் குகைக்குள் போய் விட்டால் பிறகு எடுக்க முடியாது’ என்று திரியை அந்தப் பக்கமும் பற்ற வைத்தார். அசிமும் ரச்சிதாவும் பரஸ்பரம் ரகசியம் பேசி வரைபடத்தை இணைத்துப் பார்த்துக் கொண்டார்கள். (என்னமோ பிக் பாஸ் வீடு நூறு ஏக்கர்ல இருக்கற மாதிரி.. இதுக்கு ஒரு மேப்பு வேற!). பெண்கள் பொருட்களை ஜாக்கெட்டிற்குள் வைக்கும் பழக்கம் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது போல.

ராபர்ட் ரச்சிதா
ராபர்ட் ரச்சிதா

‘யாராவது ஒரு விசுவாசமான சேவகனை தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் மாட்டிக் கொண்டால் கூட நம்மை காட்டிக் கொடுக்கக்கூடாது’ என்று இருவரும் ஆலோசிக்க, அமுதவாணனைப் பரிந்துரைத்தார் ரச்சிதா. இது சுமாரான யோசனை. ஆனால் அசிமின் புத்திசாலித்தனம் இங்கு வெளிப்பட்டது. ‘கதிரவனைத் தேர்ந்தெடுக்கலாம். அவனுக்கு நியூட்ரல் முகம் உள்ளது’ என்கிற அசிமின் யோசனை நல்ல சாய்ஸ். மேலும் கதிரவன் அசிமிற்கு இணக்கமானவரும் கூட.

ராணியிடம் உத்தரவு பெற்ற பிறகு கதிரவனை தனியாக அழைத்துச் சென்ற அசிம், விஷயத்தை விளக்கி ‘தீயா வேலை செய்யணும் குமாரு.. தியாகம்தான் உன்னை உயர்த்தும்.. வரலாற்றில் உன் பெயர் இடம் பெறும்’ என்றெல்லாம் உசுப்பேற்றி ரத்தத் திலகம் வைத்து வாழ்த்தியனுப்பினார். (எதுக்கு.. திருடப் போறதுக்கு!).

ராஜாவின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தி கும்மியடித்த ஆயிஷா

தன்னுடைய டீமை அழைத்து ‘இன்றிரவு திருட்டு நடக்கப் போகிறதாம். தகவல் வந்துள்ளது. நாம் விழிப்பாக இருந்து கண்காணிக்க வேண்டும்’ என்று தலைமைப் பாதுகாவலர் ஏடிகே சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, ஜாலியாக சாய்ந்து கொண்டு அசால்ட்டாக கேட்டுக் கொண்டிருந்தார் ராம். அப்போதே தெரிந்து விட்டது, இவர் உறங்கி விடப் போகிறார் என்று. ஏடிகே கானா பாட, விக்கை கழற்றி வைத்து ஆவேசமாக பிரேக் டான்ஸ் ஆடினார் ரோமியோ இளவரசர் மணிகண்டன். கூடவே ஆயிஷாவும் க்வீன்சியும் இணைந்து இறங்கி குத்தி ஆடினார்கள். அதிலும் ஆயிஷா ஆடிய ஆவேசத்தில் வீடே அரண்டு விட்டிருக்கும். அப்படியொரு ஆட்டம்.

க்வீன்சி
க்வீன்சி

‘இளவரசர் என் தங்கையை சைட் அடிக்கிறார் ராஜா... நீங்கள்தான் இதை விசாரிக்க வேண்டும்’ என்று அமுதவாணன் கோரிக்கை வைத்து விட்டு ‘பாருங்கள்.. அரண்மணைக்கு அரைடவுசர் போட்டு வந்திருக்கிறார்’ என்று பின்குறிப்பாக கிண்டல் அடித்தது நன்று. இந்த புகார் பட்டியலில் தனலஷ்மியும் இணைந்து கொண்டு ‘தளபதி என்னைப் பார்த்து ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று கூறினார்’ என்று சொல்ல ‘நீ அழகாக இருக்கிறாய் என்று அவர் சொன்னதே முதல் தவறு’ என்று அமுதவாணன் டைமிங்காக கலாய்த்தது காமெடியாக இருந்தாலும், இதிலிருந்த உருவக்கேலி காரணமாக தனலஷ்மியின் முகம் சுருங்கியது. ஆனால் நல்லவேளையாக இதை தனலஷ்மி பஞ்சாயத்தாக்கவில்லை.

ராஜாவிற்கு கால் மிதித்துக் கொண்டிருந்த ஆயிஷா “விஷயம் தெரியுமா ராஜா.. இன்றிரவு திருட்டு நடக்கப் போகிறதாம். இது ராணிக்கும் தெரியும்’ என்று உளறி விட்டார். “என்ன ராணியாரே. எனக்குத் தெரியாமல் என்னென்னமோ..நடக்கிறது..’ என்று ராஜா கடுமையான ஆட்சேபத்தைத் தெரிவிக்க “உறங்கும் சமயத்தில் நானே சொல்லுவேன்” என்று ரச்சிதா கோபப்பட்டார். இப்படியாக ராஜாவின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி கும்மி அடித்து விட்டார் ஆயிஷா.

புறணி பேசி மாட்டிக் கொண்ட ஏடிகே

நள்ளிரவு. குறட்டை சத்தம் பிக் பாஸ் வீட்டையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, ஏடிகே மட்டும் உறங்காமல் விழிப்பாக இருந்தார். ‘பப்பரப்பே’ என்று குப்புறப்படுத்து உறங்கிக் கொண்டிருந்த அசிமைப் பார்த்து “பார்த்தீர்களா.. மக்களே.. இவர்தான் தளபதியாம்.. வாய் கிழிய பேசத்தான் தெரியும்.. இப்படி உறங்குகிறார்..” என்றெல்லாம் புறணி பேசி தன் மனக்குமைச்சலை தணித்துக் கொண்டார் ஏடிகே. ஆனால் அவருக்குத் தெரியாத விஷயம், அசிம் தூங்காமல் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது. (என்னா டிவிஸ்ட்டு?!).

ராம், ஏடிகே, விக்ரமன்
ராம், ஏடிகே, விக்ரமன்

சந்தடி ஓய்ந்ததும் கதிரவனுக்கு சிக்னல் கொடுத்த அசிம், எழுந்து சென்று நோட்டமிட்ட சமயத்தில் ஏடிகே உஷாராகி அங்கு வர, அப்படியே தரையில் படுத்துக் கொண்டு உறங்குவது போல் அசிம் கிடந்தது பயங்கரமான காமெடி. (தளபதியாருக்கு உடம்பெல்லாம் மூளை!). ஆனால் என்னதான் ஒருவர் விழிப்பாக காவல் இருந்தாலும் ஒரு கணம் கண் அசந்தே தீருவார்கள் என்பது திருடர்களுக்கு நன்கு தெரிந்த நடைமுறை சமாச்சாரம்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் காலை ஆறு மணியளவில் ஏடிகே கண் அசந்து விட, இந்தச் சந்தர்ப்பத்தை கச்சிதமாக உபயோகித்துக் கொண்ட கதிரவன், ஆபரணப்பெட்டியை நைசாகத் தூக்கிக் கொண்டு போய் குகையில் வைத்து விட்டார். ஆனால் அதை கடைசி நொடியில் பார்த்த ஏடிகே, என்னதான் கத்தினாலும்.. என்ன பயன்? திருட்டு வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது.

‘நட்புன்னா.. என்ன தெரியுமா. சூர்யா.ன்னா என்ன தெரியுமா?’

தளபதியின் தலைமையில் விசாரணை நடக்க, குற்றவாளி கதிரவன் எவ்வித மறுப்பும் இல்லாமல் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் யாரையும் காட்டித் தரவில்லை. இரவு முழுவதும் விழித்திருந்தும் இப்படியாகி விட்டதே என்கிற சுயபச்சாதாபத்தில் ஏடிகேவிற்கு கண்ணீரே வந்து விட்டது. அது மட்டுமல்லாது குற்றத்தில் அவருக்கும் பங்கு இருக்குமோ என்று ராணியார் சந்தேகப்பட, விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டார் ஏடிகே. எரியும் நெருப்பில் விமான பெட்ரோலை ஊற்றியது போல, இந்த விசாரணை களேபரத்தை எட்டிப் பார்த்து விட்டு எந்தக் கவலையும் இல்லாமல் போர்வையை போர்த்திக் கொண்டு மீண்டும் தன் உறக்கத்தைத் தொடர்ந்தார் ராம்.

அசிம் - ஏடிகே
அசிம் - ஏடிகே

அவரிடம் கோபமாக சென்ற ஏடிகே. ‘நட்புன்னா.. என்ன தெரியுமா.. சூர்யா. ன்னா என்ன தெரியுமா.. ஏண்டா.. அங்க என்னைப் போட்டு அடி வெளுக்கறாங்க. ஒரு வார்த்தை கூட ஆதரவு தராமல் இங்க வந்து தூங்கறே?” என்று கோபமாக அனத்த, தூக்கக் கலக்கத்தில் ராமிற்கு எதுவும் புரியாமல் ஏதோ சம்பிரதாயத்திற்கு மல்லுக் கட்டினார். மற்றவர்களை உறங்க விட்டு விட்டு தான் மட்டும் காவல் இருந்தது ஏடிகேவின் தவறு. ‘தனக்கு மட்டும் கிரெடிட் வரட்டும்’ என்று பிளான் செய்தாரோ, என்னமோ.

திருடனின் மீதான விசாரணை துவங்கியது. ‘திருடனுக்கு தண்டனை தருவதைப் போலவே இதைத் தடுக்கத் தவறிய பாதுகாவலர்களுக்கும் தண்டனை தர வேண்டும்’ என்று ஆலோசனை சொன்னார் அசிம். இதே ‘ஈரவெங்காய’ யோசனையைத்தான் ஷிவினும் நேற்று சொன்னார். ‘உப்பு கலந்தது என் குற்றம் என்றால், அதை சோதிக்கத் தவறிய தளபதிக்கும் சேர்த்து தண்டனை தர வேண்டும்’ என்று. நன்றாகத் தூங்கி லேட்டாக வந்த ராஜகுரு விக்ரமன் ‘குற்றம் நடந்தது என்ன?’ என்று சாவகாசமாக விசாரிக்க ஆரம்பித்தார்.

ராணியை டைவர்ஸ் செய்ய முடிவெடுத்த ராஜா

‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ என்கிற ரீமிக்ஸ் பாடலுடன் நாள் 40 விடிந்தது. விசாரணைக்காக ராஜசபை மீண்டும் கூடியது ‘குற்றவாளியுடன் என்னையும் சேர்த்து விலங்கு போடுவது முறையல்ல’ என்று ஏடிகே கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். ராணி குறுக்கே குறுக்கே பேசியதால் எரிச்சல் அடைந்த ராஜா “என் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதை மனைவியே வைத்துக் கொள்ளட்டும். அவளையும் டைவர்ஸ் செய்கிறேன்’ என்று காண்டானார்.

‘மூக்குத்தி முத்தழகு.. மூணாம் பிறை பொட்டழகு’.. என்று ரச்சிதாவைப் பார்த்து தொலைவில் இருந்து ஏக்கத்துடன் பாடிக் கொண்டிருந்த ராபர்ட்டை பக்கத்தில் அமர்த்தியவுடன் இரண்டே நாட்களில் ‘டைவர்ஸ்’ வரைக்கும் வந்து விட்டார். இதுதான் திருமணத்தின் பவர்.

இவர்களின் சண்டையில் குற்றவாளி தப்பித்து ஓட, அவரைத் துரத்தி பிடித்து விலங்கிட்டு அமர வைத்தார்கள். தளபதி வேண்டுமென்றே சரியாகப் பூட்டவில்லை என்பது இன்னொரு தப்பித்தல் சம்பவத்தில் இருந்து தெரிந்தது.

பொருளை ஒளித்து வைத்தல்
பொருளை ஒளித்து வைத்தல்

அருங்காட்சியகத்தில் இருந்த காலணிகளில் ஒன்றைக் காணவில்லை என்று டென்ஷன் ஆன ராஜா, தானே சென்று தேடி அதை ஷிவினின் பெட்டியில் கண்டுபிடித்தார். ராம் இன்னமும் கூட தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, ஷிவினும் மைனாவும் கூட்டுக்களவாணிகளாக நகைகளைத் திருடி சமையல் அறையில் ஒளித்து வைத்துக் கொண்டிருந்தார்கள்.

‘காலணி’ திருடியதை முதலில் ஒப்புக் கொள்ளாத ஷிவின், கையும் களவுமாக மாட்டிக் கொண்டவுடன் விழித்தார். ‘பொய் சத்தியம் போடாதே. குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் செய்வார்கள்’ என்று கமல் சொன்ன நீதியை காப்பியடித்தார் ராபர்ட். ஷிவின் குற்றவாளி என்று நிரூபணம் ஆனவுடன் ‘அவருடைய ஒப்பனையைக் கலையுங்கள்’ என்று உத்தரவிட்டார் ராஜா. ‘மேக்கப்பை கலைத்தால் போதும்.. கிழவி வேடம் போட வேண்டிய அவசியமில்லை’ என்று டைமிங்காக சொன்ன அமுதவாணனின் கமெண்ட் அப்போதைக்கு சிரிப்பை வரவழைத்தாலும் ‘பாடி ஷேமிங்கா இருக்கேப்பா’ என்று யோசிக்கவும் வைத்தது.

திறமையாக உளவறிந்த தனலஷ்மி

விக்ரமனுக்கும் ஜனனிக்கும் இடையில் ஏதோ லடாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ‘விக்ரமன் என்னை அதட்டுவது போல் பேசுவது பிடிக்கவில்லை’ என்று இளவரசி ஜனனி, தன் பெற்றோர்களிடம் புகார் சொல்ல “அவர் உன் ஆசிரியர். ராஜகுரு. அவரிடம் பணிவாகத்தான் பேச வேண்டும்’ என்று ரச்சிதா சொன்ன உபதேசம் நன்று. இந்த டாஸ்க்கில் கூடுமானவரை தன் கேரக்ட்டரைச் சரியாக பின்பற்றிய நபராக ரச்சிதாவைச் சொல்லலாம். (குடிக்க ‘நீர்’ கேட்ட அந்த அபத்த தருணம் மட்டும் விதிவிலக்கு!).

ஷிவின், தனலஷ்மி
ஷிவின், தனலஷ்மி

தனலஷ்மியிடம் கோபம், அராஜகம் போன்ற பலவீனங்கள் இருந்தாலும் டாஸ்க் என்று வந்து விட்டால் இறங்கி விளையாடும் அந்த ஆர்வம் ரசிக்கத்தக்கது. ஷவின் மற்றும் மைனாவின் கூட்டுக் களவாணித்தனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் கிச்சனுக்கு அருகேயிருந்த ஷெல்பில் ஒளிந்து கொண்டார். நகைகளைத் திருடி அரிசி டப்பாவிற்குள் ஷிவின் ஒளித்து வைக்க (என்னவொரு பழைய டெக்னிக்?!) மறைவிடத்திலிருந்து உற்சாகமாக வெளிப்பட்ட தனலஷ்மி, குற்றத்தைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் ‘கூட்டுங்கடா பஞ்சாயத்தை’ என்று கூக்குரலிட்டார்.

அதன் பிறகு ஷிவினை நோக்கி ‘நீ ஒளித்து வைத்ததை நீயே எடுக்கும்’ என்று தனலஷ்மி பேசியது எந்த மாதிரியான தமிழ் என்று தெரியவில்லை. ‘எனக்கு காது கேக்காதுப்பா’ என்று மைனா எஸ்கேப் ஆக முயல, ஷிவினும் மைனாவும் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள். அரிசிப்பானை நகைகளை ஏடிகே கண்டுபிடித்து விட தனலஷ்மியின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. முதலில் மறுப்பு தெரிவித்த ஷிவினால் இப்போது எதுவும் பேச முடியவில்லை.

அசிம் – ஏடிகே – தூள் தூளாகிய நட்பு

ஏடிகேவிற்கும் அசிமிற்கும் இடையில் மறைவாக இருந்த விரோதப்புகை, கொழுந்து விட்டு எரியத் துவங்கிய தருணம் இது. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏடிகேவிடம் ‘நேரா மோதிப் பழகு.. பின்னாடி பேசாத.. நேத்து நீ பேசினதையெல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்” என்று அசிம் சொன்னவுடன் உணவுத்தட்டை அப்படியே கொண்டு போய் சிங்க்கில் வைத்த ஏடிகே “சரி. வா பேசலாம்.. ஆனா ஒருத்தன் சாப்பிடும் போது நோண்டறது அசிங்கம்..” என்று சொன்னது சரியான விஷயம்.

ஒருவரை டிரிக்கர் செய்வதில் அசிம் வல்லவராக இருக்கிறார். “ஏண்டா.. என்னைப் பார்த்து பயப்படற.. ஏன் உதறுது. பதறுது..” என்று ஏடிகேவின் அகங்காரத்தின் நுனியைத் தொட “உன்னைப் பார்த்து நான் ஏன் பயப்படணும்.. போடா.. உன் கிட்ட பேசவே எனக்குப் பிடிக்காது. இதை கதிர் கிட்ட கூட ஏற்கெனவே சொல்லிட்டு இருந்தேன்” என்று சொல்லி கோபத்துடன் விலக முயன்றார் ஏடிகே.

அசிம்
அசிம்

“உன் கூட ஒப்பிடும் போது அமுதவாணனே பரவாயில்லை.. நேருக்கு நேரா சொல்லிடுவாப்பல’ என்று ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ டெக்னிக்கை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார் அசிம். இதனால் ஏடிகேவின் கோபம் இன்னமும் அதிகமாயிற்று. ‘என்னைத் தவிர உனக்கு எல்லோரும் நல்லவங்கதான். கிளம்பு. காத்து வரட்டும்’ என்று அசிமின் டெக்னிக்கையே பயன்படுத்தி அங்கிருந்து கோபத்துடன் கிளம்பினார். வெளியே சென்று அனத்திக் கொண்டிருந்த ஏடிகேவிடம் “இவருதான் மெயின் கேரக்ட்டர் மாதிரியும் நாம என்னவோ சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ் மாதிரியும் அசிம் பண்றது எரிச்சலா இருக்கு” என்றார் ராம்.

‘தில்லானா தில்லானா’ பாடலுக்கு ராஜாவும் ராணியும் நடனம் ஆட, சபை உற்சாகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப்புரத்தில் செய்ய வேண்டியதையெல்லாம் கார்டன் ஏரியாவில் செய்து கொண்டிருந்தார் ராஜா. கலைஞர்கள் நடனம் ஆட, ராஜா – ராணி பார்த்து மகிழ்வதுதான் மரபு. ஆனால் இது கோக்குமாக்கான ராஜகுடும்பமாக இருக்கிறது. ராஜாக்கள் என்றாலே பெரும்பாலும் கோமாளிகள்தான் போலிருக்கிறது.