Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 41: சிறையில் ராபர்ட் - ரச்சிதா; `என்னை வெளில அனுப்பிடுச்சுங்க’ - அசிமின் அனத்தல்!

பிக் பாஸ் 6 நாள் 41

கடந்த வார எபிசோடில் தனலஷ்மியை கமல் வறுத்தெடுத்தது சற்று ஓவர் டோஸாக ஆகி விட்டது என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்

Published:Updated:

பிக் பாஸ் 6 நாள் 41: சிறையில் ராபர்ட் - ரச்சிதா; `என்னை வெளில அனுப்பிடுச்சுங்க’ - அசிமின் அனத்தல்!

கடந்த வார எபிசோடில் தனலஷ்மியை கமல் வறுத்தெடுத்தது சற்று ஓவர் டோஸாக ஆகி விட்டது என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்

பிக் பாஸ் 6 நாள் 41
குப்பை சுத்தம் செய்கிற பணியை செய்தால் கூட அதில் நீ நம்பர் ஒன்றாக விளங்க வேண்டும்’ – இது கமல்ஹாசனுக்கு அவரது அம்மா சொன்ன உபதேசம் என்று சொல்லப்படுகிறது. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என்பதெல்லாம் இருக்கட்டும். இன்றைய தேதியில் ‘தமிழில் மிகச்சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் யார்?’ என்றால் சந்தேகமின்றி கமல்ஹாசனைச் சொல்லி விடலாம். ஆம், இதிலும் அவர்தான் டாப்.


ஒருவருக்கு கோபத்துடனோ அல்லது சிரிப்புடனோ உபதேசம் செய்தால் அவரிடம்  அந்த உபதேசம் சென்று சேராது. மாறாக வாழைப்பழ ஊசி மாதிரி, தேர்ந்தெடுத்த சரியான வார்த்தைகளுடன், எதிராளியின் மனதில் சென்று தைக்கிற மாதிரி உபதேசம் செய்தால் நிச்சயம் அது வேலை செய்யும். இந்த நோக்கில் கமல் ஒரு மாஸ்டர். இந்த எபிசோடிலும் அவரது திறமை பளிச்சிட்டது. 

அசிமின் அட்ராசிட்டி பற்றி அதிகம் கோபப்படவில்லை ராபர்ட்டின் மெத்தனம் குறித்து அதிகம் கிண்டலடிக்கவில்லை ஏடிகேவின் கோபத்தில் நியாயம் இருந்தாலும் அது மிகையாகிப் போனதை நீட்டி முழக்கவில்லை. சுவையான உணவில் இடப்பட்ட கச்சிதமான உப்பின் அளவு போல, கமலின் ஆலோசனை வார்த்தைகள் அமைந்தன. ஆனால் அவர் இத்தனை இதமாகச் சொல்லியும் தனலஷ்மியும் அசிமும் அதை ஆத்மார்த்தமாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்த வகையில் இருவருமே ஒரு நோ்க்கோட்டில் இருக்கிறார்கள். 

(ஆனால் கடந்த வார எபிசோடில் தனலஷ்மியை கமல் வறுத்தெடுத்தது சற்று ஓவர் டோஸாக ஆகி விட்டது என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்).

கமல்
கமல்

நாள் 41-ல் நடந்தது என்ன?

கறுப்புச் சட்டையில் யாரோ வெள்ளை மையை தெளித்தது போன்ற, காலர் இல்லாத டீஷர்ட்டில் ‘யூத்’ லுக்கில் வந்தார் கமல். ‘தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. தலைமையும் நிர்வாகமும் சரியில்லையெனில் நாடு எப்படியிருக்கும் என்பதற்கு உதாரணமாக இருந்தது வீடு. அவங்களுக்கு பதவி ஆசை இருக்கு. ஆனா அதற்கான பொறுப்பு இல்லை. வெள்ளிக்கிழமையாச்சும் ஏதாச்சும் இருந்ததா..? பார்ப்போம்’ என்கிற முன்னுரையுடன் வீடியோவைக் காட்டினார் கமல்.

‘அருங்காட்சியக’ டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளர்களாக மைனா, கதிரவன், தனலஷ்மி ஆகிய மூவரும் தேர்வானார்கள். இவர்கள் அடுத்த வார தலைவர் போட்டிக்கான தகுதியை அடைந்தார்கள். குறைவான பங்களிப்பில் ராபர்ட் மற்றும் ரச்சிதாவிற்கு சிறை. (ராபர்ட்டிற்கு காதில் தேன் பாய்ந்தது போலிருந்திருக்கும்!). 

ராணிக்கு படுக்கையை விட்டுத் தந்து விட்டு நாற்காலியில் அமர்ந்த ராபர்ட் ‘ஆசைப்படும் போதெல்லாம் ஒண்ணா சேர்க்கலை.. இப்ப ஜெயில்ல வந்து தள்ளிட்டாங்க’ என்கிற சந்தோஷ அலுப்புடன் இருக்க, ரச்சிதாவோ ‘இவனைக் கட்டிக்கிட்டு நான் நாசமாப் போனேனே!’ என்கிற மாதிரி துணியால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தார். (ராபர்ட்டின் அதே ஸ்டைல்). அவரைச் சமாதானப்படுத்துவதற்காக ‘பட்டுக்குட்டி.. செல்லாக்குட்டி.. ஜாங்க்ரி.. பூங்க்ரி..’ என்று ஜிலுஜிலுப்பான வார்த்தைகளை தாராளமாகப் பயன்படுத்தி செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார் மன்னர். 

அற்புதமாக நடந்த அமுதவாணனின் வில்லுப்பாட்டு

அகம் டிவி வழியாக வீட்டிற்குள் நுழைந்த கமல் ‘சிறைக்குச் சென்ற தியாகிகள் எல்லாம் திரும்பி வந்திருக்கீங்க’ என்று ஆரம்பத்திலேயே நையாண்டி ஊசியை நமட்டுச் சிரிப்புடன் பலமாக குத்தினார். சிரிப்புத் திருடன் கதிரவனுக்கும் செந்தமிழ்ச் செல்வி க்வீன்சிக்கும், காது கேட்காத மைனாவிற்கும், ரோமியோ இளவரசர் மணிகண்டனுக்கும், குத்தி ஆடிய ஆயிஷாவிற்கும் பாராட்டுக்களை வரிசையாக தெரிவித்தார். 

அமுதவாணன்
அமுதவாணன்

‘உப்பு போட்டு பிரமாதமா ஆரம்பிச்சிட்டீங்க’ என்று பாராட்ட, பெருமிதம் தாங்காமல் சிரித்தார் ஷிவின். இரண்டாவது முறை தலைவராகிய மணிகண்டனை பாராட்டிய கமல், ‘இந்த முறையும் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டீங்களே’ என்று கேட்க, ஆமோதிப்பது போல் வருத்தத்துடன் தலையசைத்தார் அமுதவாணன். 

‘வில்லுப்பாட்டு’ என்கிற அற்புதமான கலையின் கடைசி கோட்டைச் சுவராக இருந்தவர் சுப்பு ஆறுமுகம். நீங்க செஞ்ச கலைநிகழ்ச்சி நல்லா இருந்தது அமுதவாணன். அதை இங்க பாட முடியுமா?’ என்று கமல் கேட்க, ஆரம்பித்தது அந்த ரகளையான கச்சேரி. பிக் பாஸ் வீட்டின் இந்த வார நிகழ்வுகளை வைத்து கதிரவனின் தாளத் துணையுடன் அமர்க்களமாகப் பாடி முடித்து, நையாண்டி அமுது படைத்தார் அமுதவாணன். “பாட்டின் மூலமாக மத்தவங்களை கிண்டலடிச்சவரு.. தன்னை விட்டுட்டாரு.. பார்த்தீங்களா?’ என்று கிண்டலடித்த கமல், அமுதவாணனை மனம் திறந்து பாராட்டினார். 

தளபதி பதவிக்கு ஏன் வேறு யாரும் போட்டியிடவில்லை?


ஒரு பிரேக் முடிந்து திரும்பிய கமல் “பதவிக்கான ஆசை உங்களுக்கு நிறைய இருந்தது. ஆனா தளபதி பதவிக்கு யாருமே போட்டியிடலையே.. அன்னபோஸ்ட் மாதிரி அசிமிக்கு நேரடியா போயிடுச்சு..” என்று விசாரிக்க, ‘பிக் பாஸே அசிமிற்கு அப்பாயிண்ட்மென்ட் தந்தார்ன்னு நெனச்சுட்டோம்.. அப்படித்தான் கடிதத்தை அவர் வாசித்தார்’ என்று அப்பாவித்தனமாக சொன்னார் ஆயிஷா. ‘நான்தான் தளபதி’ என்று அசிம் முதலிலேயே கர்ச்சீப் போட்டிருந்தாலும் அதற்கான வாக்கெடுப்பும் நடந்திருக்க வேண்டும். அசிம் பல சமயங்களில் பிரெயின் வாஷ் செய்து விடுகிறார் என்பதுதான் உண்மை. 

கமல்
கமல்

“ஓகே.. இந்தப் பாத்திரத்தில் நான் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.. இந்தப் பாத்திரத்திற்கு அவர் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்..ன்னு எதைச் சொல்லுவீங்க. வரிசையா சொல்லுங்க’ என்று அடுத்த டாஸ்க்கிற்கு தாவினார் கமல். ‘திருடன் பாத்திரம் நான் செஞ்சிருந்தா. இன்னமும் காமெடியா பண்ணியிருப்பேன். ராஜகுரு பாத்திரத்தை அசிமும், தளபதி பாத்திரத்தை விக்ரமனும் செஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’ என்றார் அமுதவாணன். இளவரசன் பாத்திரத்திற்கு ஆசைப்பட்ட கதையை மைனா சொல்ல “ஆமாம். விளக்குமாறு பிஞ்சிரும்’ன்னு சொல்லி கூட மிரட்டினீங்களே’ என்று சிரித்தபடி எடுத்துக் கொடுத்தார் கமல். 

இளவரசன் பாத்திரத்தை கதிரவனும், ராஜா பாத்திரத்தை விக்ரமனும் கையாண்டிருக்கலாம் என்று சில வாக்குகள் வந்தன. ‘எனக்கு தமிழ் வராது. டப்பிங் கொடுத்திருந்தா நான் ராணியா இருந்திருப்பேன்’ என்று மழலைத் தமிழில் தன் விருப்பத்தைச் சொன்னார் நிவாஷிணி. இந்தச் சமயத்தில் ரச்சிதா சொன்ன பிழையான வார்த்தை கமலுக்கு நினைவு வந்து விட, அதைப் பற்றி சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார். பொதுவெளிகளில் மிக கட்டுப்பாடான உடல்மொழியை பெரும்பாலும் பின்பற்றுகிற கமல், இப்படி கணிசமாக சிரித்தது, வித்தியாசமான காட்சியாக இருந்தது. கமலின் கிண்டலைக் கேட்டு சங்கடத்துடன் முகத்தைப் பொத்திக் கொண்டார் ரச்சிதா. 

‘விக்ரமன் தளபதியா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.’ என்று நிவா சொல்ல ‘அப்ப அசிம்.. அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்ன்னு சொல்ல வர்றீங்களா?’ என்று போட்டு வாங்கினார் கமல். ‘இல்ல. அது அசிமோட எப்பவும் பார்க்கிற முகம்தான்’ என்று நிவா சொன்னதும் கமல் மட்டுமன்றி பார்வையாளர்கள் தரப்பிலிருந்தும் பலத்த சிரிப்பொலி எழுந்தது. 

அசிம் மீது வரிசையாக சொல்லப்பட்ட புகார்கள்

பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘பதவி என்பது பொறுப்பு. தகுதியே இல்லாமல் நடந்து கொண்டவர் யார்?’ என்று வில்லங்கமான கேள்வியை ஆரம்பிக்க ‘தளபதியாரின்’ அட்ராசிட்டியை மக்கள் வரிசையாக சுட்டிக் காட்டினார்கள். தான் பங்கப்படும் போதெல்லாம் ‘சிரிச்சா மாதிரியே’ முகத்தை வைத்துக் கொண்டு அசிம் சமாளித்த விதம் பார்க்க வேடிக்கையாக இருந்தது. ராஜாவின் மெத்தனம் பற்றியும் புகார்கள் வந்தன. 

அசிம்
அசிம்

‘அசிம் தளபதியாக நடந்து கொள்ளவில்லை. ராஜா – ராணிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியவர் கடமையில் இருந்து மீறியதோடு மட்டுமல்லாமல் ஆபாசமாக பேசினார்” என்று இந்த டாஸ்க்கை ஆரம்பித்து வைத்தார் விக்ரமன். ‘என்னோட எச்சிலை ராஜகுடும்பம் சாப்பிடணுமான்னு அசிம் கேட்டார். ‘உண்டுகாட்டி’ என்றொரு சொல் உண்டு. தன் உயிரைப் பணயம் வைத்து ராஜகுடும்பத்தை காக்கும் மெய்க்காப்பாளரின் தியாகம் அது. வேலுக்கு நெஞ்சைக் காட்டுவது மாதிரி, விஷத்திற்கு வாயைக் காட்டும் வீரம். சமையல் செய்யறவங்க கூட சுவை பார்ப்பாங்க.. அது எச்சில் ஆகாது” என்று அசிமின் விதாண்டாவாதத்தை மிக நுட்பமாக எடுத்துரைத்தார் கமல். 

தனக்கும் அசிமிற்கும் நடந்த கடும் விவாதத்தைப் பற்றி ஏடிகே நீட்டி முழக்க “அத தனியா வெச்சுக்கலாம்.. எபிசோடிற்கான டைம் வேணுமில்ல. பெயரை மட்டும் சொல்லுங்க’ என்பது மாதிரி கமல் தடுத்து நிறுத்த, அசிமின் பெயரைச் சொல்லி அமர்ந்தார் ஏடிகே. “தளபதியார் ராஜாவை டம்மியாக்கிட்டார். அவரோட ஆதிக்கம்தான் நிறைய இருந்துச்சு..” என்று ராம் சொல்ல “இவ்வளவு நாள் இதுக்குத்தான் அமைதியா இருந்தேன்-ற மாதிரி அசிம் நடந்துக்கிட்டாரு. ஒரே டார்ச்சர், டிரிக்கர். சண்டை’ என்று தனலஷ்மியும் அசிமைப் பற்றிய புகார் பட்டியலை வாசிக்க, சபையிடமிருந்து கைத்தட்டலின் மூலம் ஆதரவு கிடைத்தது. 

பிக் பாஸ் வீடு; பிக் பாஸ் 6 நாள் 41
பிக் பாஸ் வீடு; பிக் பாஸ் 6 நாள் 41

சுற்றிலும் உப்பு பிரச்சினை போய்க் கொண்டிருக்க, அமைதியாக அமர்ந்து தயிர் சாதத்தை ரவுண்டு கட்டிய ஜனனியைச் சுட்டிக் காட்டினார் ராபர்ட். அசிமின் முறை வந்த போது அவர் விக்ரமனைத்தான் பதிலுக்கு சுட்டிக் காட்டுவார் என்பது எளிதில் யூகிக்கக்கூடியதுதான். ‘சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை அவர் இங்க சொல்லிட்டு இருக்கார். பிறருக்கு புத்தி சொல்லும் போது தானும் அதைப் பின்பற்றணும். விக்ரமன் அதைச் செய்யலை” என்பதாக அசிமின் புகார் இருந்தது. 

இரவில் காவல் காத்துக் கொண்டிருந்த தங்களுக்கு அசிம் வேண்டுமென்றே இடையூறு செய்தார் என்பதாக குயின்சி மற்றும் ஆயிஷா புகார் சொன்னார்கள். ‘டாஸ்க் என்பதைத் தாண்டி ரொம்ப பர்சனலா நடந்துக்கிட்டார்” என்று ஆயிஷா சொன்ன போதும் பார்வையாளர்களின் கைத்தட்டல் வந்தது. ‘மக்களின் ராஜாவாக ராபர்ட் இல்லை. ராணியின் ராஜாவாக மட்டுமே இருந்தார்’ என்று ராபர்ட்டைப் பற்றி ஷவின் சொன்னது ரத்தினச் சுருக்கமான கமெண்ட். ஆனால் அதையும் ஒரு காம்ப்ளிமெண்ட்டாக ஏற்று பெருமிதப் புன்னகை புரிந்தார் ராபர்ட். 

கதிரவனின் பங்களிப்பை பிரத்யேகமாக பாராட்டிய கமல், ‘இப்பத்தான் கதிரவனின் கதிர்கள் பரவத் துவங்கியிருக்கு’ என்று சொல்லி அவர் காப்பாற்றப்பட்ட செய்தியையும் சொல்லி பிரேக்கில் சென்றார். 

கதிரவன்
கதிரவன்

‘திட்டறது என் வேலை இல்லைங்க. திருத்தறதுதான்’

திரும்பி வந்த கமல், தனலஷ்மியை எழுப்பி “கமல் சார் என்னைத் திட்டுவார் –ன்னு சொன்னீங்க. திட்டறது என் வேலை இல்லைங்க. அதை நான் செய்யறதில்லை. திருத்தறது மட்டும்தான் என் கடமை’ என்று சொல்ல வெட்கத்துடன் தலையைத் தாழ்த்திக் கொண்டார் தனலஷ்மி. 

க்வீன்சிக்கு வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு நகர்ந்த கமல், அதைப் பற்றி விசாரிக்க, புரியாதது போல் குழம்பி நின்றார் தனலஷ்மி. “வோட்டு விஷயம்னாலே.. மக்கள் ஒரு மாதிரியா மந்தமா ஆயிடறாங்க’ என்று கமல் அடித்த டைமிங் கமெண்ட் நன்று. ‘விக்ரமன்.. நீங்களாவது சொல்லுங்க. ஒரு வாக்கு தடுத்து நிறுத்தப்பட்டது முறையானதில்லை. அல்லவா? உனக்கேன் அக்கறைன்னு யாராவது கேட்கலாம். தனிப்பட்ட முறையில் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு’ என்று கமல் சொன்ன போது தேர்தல் கால பிளாஷ்பேக் காட்சிகள் பலருக்கு நினைவு வந்திருக்கும். 

கமல்
கமல்

‘இது Individual game. ஒருத்தர் முடிவில் இன்னொருத்தரின் செல்வாக்கு இருக்கக்கூடாது. மக்கள் குழம்பலாம். அரசியல் தெளிவு இருக்கிற நீங்கள் தெளிவாக வாக்களித்திருக்க வேண்டாமா.. வாக்கும் அளிக்காம..இருந்துட்டு.. ‘நீங்க இளவரசியா ஆகியிருக்கலாம்’ன்னு க்வீன்சி கிட்ட சொல்லிட்டே இருந்தது என்ன மாதிரியான அரசியல்..?” என்று விக்ரமனை போட்டு கமல் தாளித்தவுடன் தன் தவறை ஒப்புக் கொண்டார் விக்ரமன். 

‘மணிகண்டன் விஷயத்துலயும் இது நடந்துச்சு’ என்று கமல் சொல்ல “ஆமாம் சார்.. நான் ஆயிஷாவிற்கு வாக்களிக்கலாம்னு கையைத் தூக்கினேன். தனலஷ்மி கையை அமுக்கினாங்க. இருந்தாலும் என் வாக்கை செலுத்தினேன்’ என்று மணிகண்டன் சாட்சியம் சொல்ல ‘ஒருத்தர் காலைத் தட்டி ஜெயிக்கறதுல பெருமை இல்ல’ என்று கமல் சொன்னது தனலஷ்மிக்கான மறைமுக குட்டு. ஆனால் வேறு கோணத்தில் யோசித்துப் பார்த்தால், இன்னொருவரைத் தடுத்தது தனலஷ்மியின் யுக்தியாக கூட இருக்கலாம். தடுக்கப்படுவர்தான் விழிப்பாக இருக்க வேண்டும். 

க்வீன்சி
க்வீன்சி

‘என் ஓட்டு. என் உரிமை’ என்று போராடிய க்வீன்சி காப்பாற்றப்பட்டார்’ என்று கமல் சொன்னதும் திடீர் திகைப்பில் திக்குமுக்காடி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் க்வீன்சி. தன்னைப் பற்றி கமல் குறிப்பிட்ட கமெண்ட் காரணமாக, “எனக்குத் தெரியும்.. என் மேட்டர் வரும்ன்னு’ என்று  வழக்கம் போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்தார் தனலஷ்மி. ‘ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு நகர்வோமே’ என்கிற முதிர்ச்சி அவரிடம் இல்லை. 


‘டிராமாவை சிறப்பா டெவலப் பண்ணியிருக்கலாம்’ – கமல் ஆதங்கம்

பிரேக் முடிந்து திரும்பிய கமல் “நீங்கள் சொன்ன விமர்சனங்களில் இருந்தே குறிப்புகளை எடுத்துக் கொள்கிறேன்” என்று ஆரம்பித்து ராபர்ட்டின் பெயரைச் சொல்ல அவர் சட்டென்று எழுந்து கொண்டார். “உக்காருங்க.. ராஜான்னா கம்பீரமா உக்காந்து இருக்கணும். தகராறு நடக்கும் போதெல்லாம் உக்காந்து இருந்துட்டு இப்ப எழுந்துட்டீங்க” என்று நையாண்டி ஊசியை பலமாக கமல் குத்தியது அட்டகாசமான டைமிங். 

‘இந்த நாடகத்தை நீங்கள் பல விதங்களிலும் சிறப்பாக மாற்றியிருக்கலாம். உப்பு பிரச்சினையையே காமெடியா மாத்தியிருக்கலாம். ராஜகுரு நினைச்சிருந்தா கூட இதை திசை திருப்பியிருக்கலாம். ஏடிகே சொன்ன யோசனையை அவர் முதலில் சொல்லியிருக்கணும்.. அண்டால உணவு வந்து அதை தளபதி சோதித்து இருக்கணும்’ என்று சொன்ன கமல் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சொன்ன அசிமே.. அதை உணரலை’ என்று சுட்டிக்காட்டியது மிக கச்சிதமான பாயிண்ட். அட்டகாசம். 

கமல் சொன்னதை மறுத்து அசிம் விளக்கம் அளிக்க, “நீங்க கேரக்ட்டர்ல இருந்து வெளியே வந்து அசிமா மாறிட்டீங்க.. இப்பவும் ஷிவினையும் விக்ரமனையும்தான் சொல்றீங்க. இங்க நாடகமே நடக்கலை. படைத்தளபதி படைத் தலைவலியா மாறிட்டீங்க.. இங்க இருந்து வெளியே போய் நடிப்புத் தொழிலைத்தானே பார்க்கப் போறீங்க. சண்டையா போடப் போறீங்க. எனில் நடிப்பை இம்ப்ரூவ் பண்ணியிருக்கணும்.. உங்களின் பாத்திரத்தைப் பார்த்துதான் மக்கள் அடையாளம் காட்டுவாங்க. ஆத்திரத்தைப் பார்த்து அல்ல..” என்றெல்லாம் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் கமல் சொன்ன ஆலோசனை சிறப்பானது மட்டுமல்ல கச்சிதமானதும் கூட.

விக்ரமன்
விக்ரமன்

“எச்சி சோத்தை ராஜா சாப்பிடுவாரான்னு ஆரம்பிச்சு.. உங்க பேச்சுல பாக்டீரியா அதிகமாயிட்டே இருந்தது’ என்று அசிம் குறித்து கமல் அடித்த கமெண்ட் ரகளையானது. ‘காமெடியா நடந்திருக்க வேண்டிய நாடகம், கண்ணீரில் முடிந்தது கூடுதல் காமெடியா இருந்தது’ என்று வரிசையாக கமல் விளாசித் தள்ளிய போதெல்லாம் உற்சாகமாக கைத்தட்டி அதை ஆமோதித்தார் ஷிவின். 

‘ஆயிஷா.. தனலஷ்மில்லாம் இதை பர்சனலா எடுத்துக்கிட்டாங்க” என்று அசிம் மறுபடியும் அபத்தமாக எழுந்து விளக்கம் அளிக்க “சரி.. நீங்க இதுல இருந்து எப்படி மாறுபடறீங்க?’ என்று கமல் அடித்த இன்னொரு சிக்ஸர் அட்டகாசம். பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டலும் சிரிப்பும் எழுந்தது. “நீங்க வாதாடறதை யாரும் பாராட்டப் போறதில்லை. உங்களின் கலைத்திறமையைத்தான் மக்கள் பார்க்க பிரியப்படறாங்க. இது அதற்கான ஆடிஷன்” என்றெல்லாம் கமல் சொல்லியது எதைக் குறித்தது என்றால் ‘இந்த நாடகத்தை நீங்கள் பலவிதங்களில் சுவாரசியமாக டெவலப் செய்திருக்கலாமே’ என்கிற ஆதங்கத்தைத்தான். 

‘சுயமரியாதையை பாதிக்கும் விதமாக அசிம் பேசுகிறார்’ என்று விக்ரமன் சொல்ல “அவர் உங்கள் எல்லோரையும் பேச விடாமல் அடக்கி விடுகிறார்.. அது அவரோட உத்தியாக கூட இருக்கலாம். அது உங்களுக்குப் புரியலையா.. அவர் குரல் மட்டுமே கேட்கணும்னு இருக்கலாம்” என்று கமல் தேங்காய் உடைப்பது போல் சரியாகச் சொல்ல, அசிம் எழுந்து அதை மறுத்தார். “அப்படின்னா. டிரைவிங் கண்ட்ரோல் உங்க கிட்ட இருக்கணும்.. இல்லைன்னா வண்டி குடை சாய்ஞ்சிடும்” என்று கமல் சொன்ன உபதேசம் சிறப்பு. 

ஆயிஷா
ஆயிஷா

இத்தனை சொல்லியும் அசிமிற்கு அது புரிந்தது போல் தெரியவில்லை. “ஆயிஷாவும் தனலஷ்மியும் பழிவாங்கறா மாதிரி நடந்துக்கிட்டாங்க.. ஏடிகே விவகாரமான வார்த்தையைப் பயன்படுத்தினார்.. அப்ப விக்ரமன் எங்க போனார்?’ என்று மற்றவர்கள் மீதே பழியைப் போட்டார். மற்றவர்கள் உணர்ச்சிவசப்படுவதற்கு தான் ஒரு மூலக்காரணமாக இருந்தோம் என்பதை மட்டும் வசதியாக மறந்து விட்டார். 

‘என்னை வெளில அனுப்பிடுச்சுங்க’ – அசிமின் அனத்தல்

“ஏடிகே சொன்ன வார்த்தையை சென்சார் பண்ணிட்டாங்க.. ஏன்னா குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறாங்க.. சுயக்கட்டுப்பாடு நம்ம கிட்டதான் இருக்கணும்.. இது 24x7 காட்டப்படுகிற நிகழ்ச்சி. எனில் நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று கமல் சொல்ல ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டார் ஏடிகே. “நீங்க அசிமோட அண்ணனாவோ.. தம்பியாவோ மாறிட்டு வர்றீங்க?!” என்று ஏடிகேவை கமல் சுட்டிக் காட்டியது சரியான பாயிண்ட். இதே எச்சரிக்கையைத்தான் முன்பு மணிகண்டனுக்கும் சுட்டிக் காட்டினார் கமல். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு துளி விஷமாக’ இருந்து மற்றவர்களை மாற்றிக் கொண்டிருப்பதில் அசிமிற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. 

அசிம்
அசிம்

‘கதாபாத்திரமாகவே மாறி விட்ட ஆயிஷா காப்பாற்றப்பட்டார்’ என்கிற தகவலைச் சொல்லி விடைபெற்றார் கமல். தனலஷ்மியைப் போலவே அசிமும் தன்னை சுயபரிசீலனை செய்து கொள்ளவில்லை. “எச்சில் பற்றி நான் பேசினது தப்புதான். ஆனா நான் டிரிக்கர் செய்யப்பட்டேன். நான் பேசுபொருளா இருக்க விரும்பலை. என்னை டார்கெட் செய்வது பிடிக்கவில்லை. என்னை வெளியே அனுப்பிடுச்சுங்க’ என்றெல்லாம் காமிரா முன்பு அனத்தினார். 

‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுதான் என் கனவு, வாழ்க்கையின் லட்சியம்’ என்றெல்லாம் வெளியில் சொல்லி விட்டு, சிரமப்பட்டு உள்ளே வந்தவுடன் ‘வெளில அனுப்புங்க’ என்று எளிதாக சொல்வது எத்தனை அபத்தம்?!

மேலும் சில பஞ்சாயத்துக்களை ஞாயிறு எபிசோடில் கமல் கிளறலாம். இந்த வாரம் வெளியேறப் போகும் நபர் யார் என்பதைப் பற்றி ‘மழலைத்தமிழில்’ ஒரு வதந்தி உலவுகிறது. அது உறுதியான தகவல்தானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.